பனைமுறைக் காலம் 10

மார்ச் 2, 2021

பனைமுறைக் காலம் 10

பனைவேற்காடு

வாட்ட சாட்டமாக அட்டகாசமான சிரிப்போடு  பைக்கில் சுமன் வந்து நின்றார். வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்துக்கொண்டு போனார்.  அவரது வீட்டில் தான் அன்று மதியம் உணவு. வீட்டில் ஏதோ ஒரு சிறப்பு நிகழ்வு. எங்களுக்கு அடுப்பிலிருந்து கொதித்துக்கொண்டிருந்த மீனை எடுத்து கொடுத்தார்கள். செம்ம ருசியாக இருந்தது. “ஒரு மணி நேரத்திற்கு முன்னாடி  கடல்ல நீந்திட்டிருந்த மீன் சார் இது” என வாய் கொள்ளா சிரிப்புடன் சொன்னார். இத்தனைக்கும் மசாலா மீனுக்குள் பற்றியிருக்கவில்லை. முதல் கொதியிலேயே அள்ளி எடுத்து வைக்கப்பட்ட மீன்.  சாப்பிட்ட பின் அவருக்கு சில வேலைகள் இருந்ததால் நானும் கல்யாண் குமாரும் அந்த வீட்டின் அருகில் இருந்த விழா பந்தலில் அமர்ந்திருந்தோம். நான் சற்று காலாற நடக்கலாம் என அடுத்த தெருவிற்குள் நுழைந்தேன் சில பெண்கள் வட்டமாக அமர்ந்திருந்து  விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

அந்த விளையாட்டு சற்று வித்தியாசமானது. அனைத்து பெண்களின் கரத்திலும் ஒரு குச்சி இருந்தது. நின்று கொண்டிருந்த பெண்மணி தனது சாரியினை கங்காரு பைபோல் அமைத்து அதற்குள் சில நூல் பூக்களை பல வண்ணங்களில் வைத்திருந்தார். அவர் ஒவ்வொன்றாக போட, அமர்ந்திருந்த பெண்கள் தங்கள் கரங்களிலிருந்த குச்சிகளை வைத்து அதனை எடுத்துக்கொண்டிருந்தார்கள், யார் முதலில் குறிப்பிட்ட வர்ணத்தை சேகரிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். முதன் முறையாக இப்படி ஒரு விளையாட்டைப் பார்க்கிறேன்.

சுமன் எங்களை  அழைத்துக்கொண்டு எனக்கு ஒருக்கியிருக்கும் அறைக்குக் கூட்டிச் சென்றார். அது ஒரு ஷட்டர் கொண்ட சிறிய அறை. ஒரே ஒரு மேஜை வீச்றி இருந்தது. அதுவும் சரியாக ஓடவில்லை. எனக்கான குளியலறை மற்றும் காலைக்கடன்களுக்கு இன்னும் ஒரு மாடி ஏறி செல்ல வேண்டும். சேவியர் என்னிடம் முதலிலேயே கூறியிருந்தார். இங்கு தங்கும் இடங்கள் கிடையாது என்று. பழவேற்காட்டைப் பொறுத்தவரையில் உல்லாச விடுதி மற்றும் தங்கும் விடுதிகளுக்கு அனுமதி கிடையாது. அது தான் இப்பகுதியினை இன்னும் அதன் தனித்தன்மைகளுடன் வைத்திருக்கிறது.

தங்குமிடத்திலிருந்து  சிறிது தொலைவில் எனக்கான உணவு ஓரிடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அனைத்தும் முடிந்த பின்பு கல்யாண் குமார் புறப்படும் வேளை வந்தது. அவரது பைக்கில் 600 ரூபாய்க்கு பெட்ரோல் இட்டேன். மேலும் 400 ரூபாய் அவரது கரத்தில் கொடுத்தேன். பொதுவாக எனது செலவுகளை எப்போதும் கல்யாண் தான் பார்த்துக்கொள்ளுவார். இம்முறை எனக்கான ஒரு வாய்ப்பு. பிரியா விடை பெற்றுக்கொண்டோம்.

அன்று இரவு அந்த ஊரில் தனியனாக பல முறை அந்த பாலத்தை கடந்து நடந்தேன். கலங்கரை விளக்கத்திலிருந்து  உமிழும் ஒளி அங்கிருந்த பனை மரத்தினை தாண்டிச் செல்லுவது தனித்துவமான ஒரு காட்சியாக தென்பட்டது. ஆசீர்வதிக்கப்பட்ட பனை போல. அதனை எப்படியாவது படம்பிடிக்கவேண்டும் என முயன்று தோற்றுப்போனேன். புகைப்படக்கலை குறித்த நெளிவு சுளிவுகள் தெரிந்திருந்தால் அன்று அக்காட்சியினை அழகுற படமாக்கியிருக்கலாம்.   காற்று அதிகம் இருந்தாலும், நான் தங்கியிருந்த இடத்தில் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தது. மேஜை விசிறியால் பெரிய பயன் இல்லை. இரவு படுத்திருக்கும்போது அந்த அறையினை பயன்படுத்தும் வாலிபன் அங்கே வந்தான். ஒரு கை அவனுக்கு ஊனம், ஆனாலும் இரு சக்கர வாகனம் ஒன்றை ஓட்டி வந்தான். என்னோடு அன்பாக பேசியபடியே தனது வேலையையும் கவனித்துக்கொண்டான். ஊனம் என்றால் என்ன விலை என்று கேட்கும் அளவிற்கு அழகோடும் தன்னம்பிக்கையோடும் இருந்தான்.  

காலை எழுந்தவுடன் பாலத்தை  கடந்து ஒரு நடை நடந்தேன். பனை மரத்தடிகளை கொண்டு சிறிய கூடாரத்திற்கான தூண்களை அமைத்திருந்தார்கள். பாலத்தின் அருகில் இருக்கும் மக்களிடம் பேச்சு கொடுத்தபோது புகைப்படங்கள் எடுக்காதீர்கள் எனக் கூறினார்கள். எங்கிருந்தோ வந்த ஒரு நபர் என்னிடம் கோபமாக இங்கு புகைப்படம் எடுக்கக் கூடாது என்றார். அவர் தான் ஊர் தலைவர் என பின்னர் அறிந்து கொண்டேன். ஆனால் அப்படி புகைப்படம் எடுக்காமல் என்னால் இருக்க முடியாது என்றே அங்குள்ள சூழல் இருந்தது. ஏனாதி பெண்களும் ஆண்களும் அந்த காயலுக்குள் இருந்த திட்டு ஒன்றை நோக்கி முட்டளவு தண்ணீரில் கையில் பறி மற்றும் உணவுகூடைகளுடன் சென்றார்கள். அங்கே சென்றவுடன் அமர்ந்து மெதுவாக வெற்றிலை போட்டுக்கொண்டார்கள். அதே நேரத்தில் கரைக்கு வெகு அருகில் நேற்று பார்த்த ஒரு நபர் பறியை வாயில் கவ்வியபடி கழுத்தளவு மூழ்கி இரண்டு கைகளாலும் துழாவி இறால் பிடித்துக்கொண்டிருந்தார். எனக்கே இறங்கி இறால் பிடித்துபார்க்கலாமா என்ற எண்ணம் தோன்றிவிட்டது. 

பர்மாவில் எருமை வண்டியும் பனங்காடும்

காலை வேளையில் தானே நான் அங்கே ஒரு எருமை மாட்டு வண்டியினைப் பார்த்தேன். எருமை மாட்டு வண்டியினை நான் பார்ப்பது அதுவே முதன் முறை. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எனக்கு ஒரு நாட்டுப்புற கதை சொன்னார்கள். முன்பொரு காலத்தில் மிகப்பெரும் பஞ்சம் ஏற்பட்டது. ஒரு ஏழை விதவைப் பெண்ணொருத்தி தனது ஏழு குழந்தைகளுடன் வாழ இயலாத சூழலில் ஒரு கிணற்றுக்குள் தனது குழந்தைகளை போட்டுவிட்டு தானும் அதற்குள் குதிக்கிறாள். அவளுக்கு தான் குதிப்பது பாதாள உலகத்தின் வாசல் என அப்போது தெரியாது. அனைவரும் வாசுகி என்ற பெரிய பாம்பின் மேல் விழுகிறார்கள். வாசுகி அவர்களைப் பார்த்து நீங்கள் ஏன் இங்கே வந்தீர்கள் எனக் கேட்க, எங்களுக்கு வாழ வழியில்லை அதனால் தான் சாக வந்தோம் என இப்பெண்மணி கூறியிருக்கிறார்கள். சூழ்நிலையை உணர்ந்த வாசுகி, உனக்கு பொன்னும் பொருளும் தருகிறேன், நீ வீட்டிற்கு போ என்று கூற, இப்பிரச்சனை தனக்கு மட்டும் உரியதல்ல, ஊரிலுள்ள அனைத்து குழந்தைகளுமே பட்டினியால் வாடுகின்றன எனக் கூறி அனைவருக்கும் தீர்வு சொல்ல முடிந்தால் மட்டுமே தான் இங்கிருந்து புறப்படுவேன் என்று கூறி நிலையாய் நின்றுவிட்டாள். அப்போது வாசுகி அவளுடன் இரண்டு பாம்புகளை அனுப்பியது. ஒன்று பனை மரமாகவும் மற்றொன்று எருமையாகவும் மாறி அவர்களுக்கு வறட்சியான காலத்திலும், பசிப்பிணி இன்றி வாழ வகை செய்தது.

ஆப்பிரிக்காவில் எருமையும் பனங்காடும்

இந்த கதை நமது பண்பாட்டில் ஊறி எழுந்த ஒரு கதையாகவே பார்க்கிறேன். பசுக்கள் உயர்குடியினருக்கான அடையாளமாக இருக்கையில் எருமைகள் ஏழைகளின் வாழ்வியலோடு இணைந்து வருவதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. எப்பேர்ப்பட்ட பஞ்ச காலத்திலும் பனையும் எருமையும் தாக்குப்பிடிக்கும் வல்லமை கொண்டிருக்கின்றன. ஆகவே அவைகளே ஏழைகளின் சார்பில் நிற்கும் உயிரினங்கள் என நாம் கொள்ள முடியும்.

பனையும் எருமையும் இரட்டை உயிரினங்களாக இருக்குமா? அதனைக் குறித்து நான் 2018 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் தேட ஆரம்பித்தேன். அதற்கு ஜெயமோகன் அண்ணனுடைய கதை முழுமுதற்  காரணம். இரண்டாவதாக நான் மும்பையிலிருக்கும் ஆரே காலனிக்கு வந்தது மற்றொரு திருப்புமுனையாகும். ஆரே முழுக்க எருமை பண்ணைகள் தான் இருக்கின்றன. எருமைகள் ஒரு அடைக்கப்பட்ட பண்ணை சூழலில் வளருவதால் என்னால் அவைகளை பெரிதாக எடுத்துக்கொள்ள இயலவில்லை. ஆனால் சாய் பாங்குடா என்ற அப்குதியில் இருக்கும் பனைகளை நான் பார்த்தபோது அங்கு அனேக எருமைகள் தொடர்ந்து மேய்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். வருடத்தில் ஆறு மாதங்கள் இப்பகுதி சதுப்பு நிலமாகவே இருக்கும்.

வியட்னாம் எருமை வண்டி

ஆம் எருமை என்பது நீர் தேவையுள்ள ஒரு மிருகம் தான். ஆரே பகுதியில் கவிதை எழுதிய ஒரு பழங்குடி இங்குள்ள மாடுகளுக்கு குளிக்க தண்ணீர் இருக்கிறது ஆனால் ஆதிவாசிகளுக்கு குடிக்கக் கூட தண்ணீர் இல்லை எனவும், மாடுகளுக்கான குடிநீரே எங்களுக்கான குடிநீர் எனவும் வேதனையுடன் எழுதியிருப்பது குறித்து இங்கு சூழியல் பங்களிப்பாட்டும் சஞ்சிவ் வல்சன் ஒரு முறைக் கூறினார். ஆம், ஆங்கிலத்தில் கூட எருமையினை Water buffalo  என்று தான் குறிப்பிடுவார்கள்.

வியட்னாம் வயல் பகுதிகளில் எருமை

தென் தமிழகத்தில் என்னால் அதிக எருமைகளைக் காண முடியவில்லை என்பது உண்மை தான், ஆனால் இந்தியாவெங்கும் பனையும் எருமையும் ஒன்று போல் நிற்பதைக் காண முடிகிறது. எருமைப்பாலின் அடர்த்தி அதிகமாகவும், அதில் இருக்கும் கொழுப்புச்சத்து பசுமாட்டினை விட அதிகமாகவும் இருக்கும். ஆனால் இன்று பண்ணையாக எருமைகளை வைத்துக்கொள்ளுகிறவர்களை கூட நாம் பார்த்துவிடலாம், ஆனால் தனியாக எருமைகளை வளர்ப்பவர்கள் தென் தமிழகத்தில் அருகிவிட்டார்கள். பசு வளர்ப்பதே நவீனமானது என்ற எண்ணம் குமரி போன்ற நிலங்களில் வேரூன்றியிருக்கிறது.  

எருமையைப் பொறுத்த வரையில், அது பனை மரத்தைப்போலவே, அதிக எதிர்பார்ப்புகள் அற்ற ஒரு உயிரினம். இருப்பதைச் சாப்பிட்டு, எல்லா கால சூழல்களுக்கும் தன்னை தகவமைத்துக்கொண்டு, மழை மற்றும் வறட்சியினைத் தாங்கும் சக்தி கொண்ட ஒரு கால்நடை. நோய் எதிர்ப்பாற்றல் மாடுகளைவிட அதிகமானது. கி மு 4000ஆம் ஆண்டில் தான் எருமைகளை மனிதர்கள் வீட்டு விலங்காக பழக்கப்படுத்தியிருக்கிறார்கள் எனக் கூறுவதை வைத்து பார்க்கும்போது இதே காலகட்டத்தில் தான் பனையுடனான உறவுகள் மனிதர்களுக்கு ஏற்பட்டிருக்கும் என எண்ணத்தோன்றுகிறது.

எருமை சவாரி செய்யும் சிறுவன், வியட்னாம்

உலகில் காணப்படும் மொத்த எருமைகளில் 90 சதவிகிதத்திற்கு மேல் ஆசியாவில் தான் இருக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பர்மா, பாகிஸ்தான், வியட்னாம், போன்ற நாடுகளிலும் எருமைகள் பெருமளவில் இருக்கின்றன. ஆப்பிரிக்காவிலும் பனை இருக்கும் இடங்களில் இவைகள் இணைந்தே வாழ்கின்றன.  இது குறித்து மேலதிகமாக ஆய்வு செய்ய விரும்பும் அன்பர்களுக்கு இவ்விணைவு குறித்து மேலதிக தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன என்பதாக உணர்கிறேன். மட்டுமல்ல, இதுவரை எவரும் பார்த்திராத புது கோணங்களும் இவ்வாய்வுகளின் வழி வெளிப்படும் என்றே நம்புகின்றேன்.

நாடோடிகளுக்கும், பழங்குடியினருக்கும் எருமை மாடுகளுடன் அதிக தொடர்பு உண்டு. இன்றும் இந்தியாவில் பல பகுதிகளில் பனையும் எருமையும் தொல் குடிகளுடன் தொடர்புடையவைகாளாக இருக்கின்றன. மாத்திரம் அல்ல இன்று எருமைகள் மிக முக்கிய அளவில் எண்ணிக்கைகளில் பசுவை விட அதிகரித்தபடி உள்ளன. காரணம் மாட்டரசியல் தான். பசுவைப்போல எருமை புனிதப்படுத்தப்பட்ட உயிரினம் அல்ல. பசு மீதான புனிதப்படுத்துதல்  விவசாயிகளுக்கு மாடுகளை வளர்ப்பதில் உள்ள சிக்கல்களை அதிகப்படுத்துகிறது. குறிப்பிட்ட வயதில் ஒரு மாட்டினை கறிக்காக விற்பனை செய்யும் வாய்ப்பு இருந்தாலொழிய ஒரு விவசாயியால் மாடுகளை வைத்து இறுதிவரை பேணமுடியாது. மேலும், எருமையிலிருந்து கிடைக்கும் பால் அதிக கெட்டிதன்மைக்கொண்டதும் பசும்பாலில் கிடைப்பதை விட இரு மடங்கிற்கு மேல் கொழுப்புச்சத்தும் உள்ளது. ஆகவே இன்று பல பண்ணைகள் எருமைகளையே வளர்க்க விரும்புகின்றனர். மாடுகளை விட அதிக பாரத்தை எருமைகளால் எளிதில் சுமக்க முடியும். நம்மூர் ஆசிரியர்கள் மாணவர்களை எருமை என்று அழைப்பது இவ்வித புரிதல் இல்லாமையால் தான். நவீன காலத்தில் எருமைக்கு கிடைத்திருக்கும் இத்தகைய முகியத்துவம் பனைக்கும் கிடைக்கும் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். 

எமதர்மராஜா

எருமை குறித்து பேசும்போது எமதர்மராஜாவைக் குறித்து பேசாமல் இருக்க முடியாது. பாசக்கயிற்றை வீசும் தெற்கின் தலைவன் அவன். இறந்தவர்களை வழிகாட்டும் எமனின் வாகனம் அல்லவா எருமை. எமன் குறித்து சீன ஜப்பானிய மற்றும் ஈரானிய தொன்மங்களும் இருக்கின்றன. எமனும் காளியும் தொல் குடிகளிடமிருந்து நம்மிடம் வந்து சேர்ந்திருக்கும் உருவகங்கள் என்பதை பார்க்கும்போது, பனங்காடுகளை எமன் எட்டிப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது என்பது விளங்கும். 

அன்று காலை உணவினை முடித்த பின்பு, ஊரை சுற்றிபார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் உணவகம் இருந்த இடத்க்டின் எதிரில் காணப்பட்ட  தெருவில்  நடக்க ஆரம்பித்தேன். சுத்தமாக நீர் தெளித்து பேணப்பட்ட தெருக்கள். ஒரு புராதனமான இந்து கோயில் அங்கே இருந்தது. பாழடைந்திருந்ததை புதிப்பிக்கும்படியான புனரமைப்பு வேலைகள் நடைபெறுவதற்கான அடையாளம் தெரிந்தன. சுவர்கள் எல்லாம் சுறண்டி எடுக்கப்பட்டு அடுத்த கட்ட வேலைகளுக்காக அக்கோயில் காத்திருந்தது. கோவிலை சுற்றிலும் இருந்த புதர்கள் சமீபத்தில் தான் வெட்டி சீர் செய்யப்பட்டிருந்தன. கோவிலில் எவருமே இல்லை.

எதிரே இருந்த தெருவில் நடந்த போது பனை ஓலைகள் சாயமிடப்பட்டு காயப்போடப்பட்டிருந்தன. ஆகவே இங்கு பனை ஓலையில் பொருட்களைச் செய்பவர்கள் இருக்கலாம் என்று உணர்ந்து அருலில் இருக்கும் சிறுவர்களிடம் கேட்டேன். அவர்கள் காட்டிய வீட்டில் சென்று கேட்டபோது இங்கே ஒரு பெண்கள் அமைப்பு செயல் பட்டுக்கொண்டிருக்கிறது என்றார்கள். உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்கலையும் அவர்களே சொல்லுவார்கள் என்றனர். அவர்கள் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றபோது அங்கிருந்த பெண்மணி என்னை துரத்துவதிலேயே குறியாக இருந்தார்கள். பேச்சுக்கொடுக்கவே விரும்பவில்லை. பொதுவாக இவ்வித சூழல் பிற இடங்களிலும் சந்தித்திருக்கிறேன். சர்வதேச சந்தையினை மையமாக கொண்டு ஓலைப் பொருட்களைச் செய்பவர்கள், தங்கள் அலுவலகங்களை மர்ம தேசங்களாக வைத்திருப்பது வாடிக்கை. போட்டி நிறைந்த உலகில், இவ்விதமான மக்களை ஆசை வார்த்தை காட்டி வேறு இடங்களுக்கு இழுத்துக்கொள்ளும் சிலரும் இருக்கிறார்கள். ஆனால், முதன்மையான காரியம் என்னவென்றால், இவர்கள் செய்யும் பொருட்கள் குறித்த இரகசியம் பேணவே விரும்புகிறார்கள். 

பழவேற்காட்டில் என்னால் எதனையும் பார்க்க இயலாதோ என எண்ணியபடி வெளியேறினேன். நான் வெளியேறும் சமயத்தில் அங்கு ஒரு மனிதர் தனது மனைவியினை டி வி எஸ் எக்செல் வண்டியில் வைத்து ஓட்டியபடி எதிரில் வந்தார். கருமையான திடமான அழகிய தேகம். முகமும் ஒளிகொண்டிருந்தது.  வண்டியின் முன்புறம் தொங்கவிடப்பட்டிருந்த ஒயர் கூடையில் பனை ஒலைக் குருத்து. பாய்ந்து வண்டியை நிறுத்தினேன். ஓலையை எதற்காக கொண்டு செல்லுகிறீர்கள்,  எங்கே தங்கியிருக்கிறீர்கள் என மூச்சுவிடாமல் கேள்விகளை அடுக்கினேன். அருகில் தான் வசிப்பதாகக் கூறினார்கள். அவர்களும் பறி செய்வதற்காகவே இதனை எடுத்துச் செல்லுகிறார்கள் என புரிந்துகொண்டேன்.

காலை வேளையில் பொடிநடையாக நடக்கையில் அங்கிருந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரி கடல் ஆய்வு மையம் தென்பட்டது. சுற்றி நடந்து வருகையில், அங்கிருந்த ஒரு நூலகம் கண்ணில் பட்டது. உள்ளே செல்ல முயன்றபோது கொரோனா தடுப்பு முறைமைகள் கடைபிடிக்கப்பட்டது. பின்னரே உள்ளே அனுமதித்தார்கள். அங்கிருந்த நூல்களை தேடிப்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில்  சேவியர் என்னை அழைத்தார்கள். நான் இங்கு எனது அலுவலகம்  வந்துவிட்டேன் நீங்களும் வாருங்கள் என்றார்.

ஆர் டி எம் அங்குள்ள ஒரு கத்தோலிக்க திருச்சபையின் வளாகத்திலிருந்தது. அங்கு சென்றபோது தான் கலை நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் கிடைத்தன.  நான் சென்ற வீடுகள் அனைத்தும் இஸ்லாமியர்கள் வீடுகள். அங்குள்ள பெண்கள் பார்ப்பதற்கு பிற பெண்கள் போலவே இருந்தார்கள். அவர்கள் மரக்காயர்கள் என சேவியர் சொன்னார். சேவிரைப் பொறுத்தவரையில் மிக அழகிய பனையோலைப் பொருட்களைச் செய்வதற்கு காரணம் மரக்காயர் சமூகம் தான். இஸ்லாமிய தொடர்புகளினால் அவர்கள் அழகிய பனையோலைப் பொருட்கள் செய்ய கற்றிருந்தனர். அவர்களிடமிருந்து பரதவர்கள் பனையோலைப் பொருட்கள் செய்ய கற்றிருக்கின்றனர். தமிழகத்தில் இவ்விரண்டு சமூகங்களே அழகிய பனையோலைப் பொருட்கள் செய்பவர்கள் என்றார். எனக்கு அது புது தகவல். ஏனென்றால், இவ்விரு சமூகங்களும் பனையுடன் தொடர்புடையது என சேவியரை சந்தித்த பின்பு தான் நான் அறிந்துகொள்ளுகிறேன். அவரது அலுவலகத்தில் இருந்தது ஒரு மரக்காயர் பெண் தான். வெகு சாதாரண தமிழக பெண்மணியினைப் போன்ற உடையமைப்பிலேயே இருந்தார். ஓலைகளை மிக சன்னமாக கிழித்து பொருட்களை செய்துகொண்டிருந்தார். 

பழவேற்காடு ஓலைப் பெட்டிகள்

பனையோலை அழகு பொருட்கள் மீது எனக்கு மிகப்பெரிய ஆர்வம் கிடையாது. வர்ணங்கள் மீதும் எனக்குப் பெரிய வாஞ்சை கிடையாது. அழகிய வர்ணங்கள் தீட்டும் SHARE என்ற வேலூரைச் சார்ந்த  அமைப்பு, தலித் பெண்களைக் கொண்டு மிகச் சிறப்பான பொருட்களைச் செய்வதைப் பார்த்திருக்கிறேன். இங்கிலாந்து, உட்பட பல ஐரோப்பிய நகரங்களுக்கு அவர்கள் பொருட்களை அனுப்புகிறார்கள்.

மற்றொரு அமைப்பு மஞ்சள் எனப்படுவது. செட்டியார்கள் நடத்தும் ஒரு அமைப்பு. தமிழகத்தில் இன்று முதலிடத்தில் இருக்கும் அழகிய வடிவமைப்புகள் கொண்ட அமைப்பு இது. ரோடா அலெக்ஸ் தான் மஞ்சள் என்ற அமைப்பினை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். மஞ்சள் எப்படி இயங்குகிறது என நான் தேடி சென்றபோது, நாடார் பெண்களை வைத்தே வேலை செய்கிறார்கள் என்பதை கண்டுகொண்டேன். அங்கு அவர்களது பணியிடத்திற்குள் செல்ல நான் அனுமதிக்கப்படவில்லை.

செட்டிநாடு பனை ஓலைப் பொருட்களை அறிமுகம் செய்யும் கொட்டான் என்ற புத்தகம்

செட்டியார் சமூகத்தினருக்கும் நாடார் சமூகத்தினருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு என காலம்சென்ற பேராசிரியர் வேதசகாயகுமார் அவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். பனை மரச்சாலை புத்தகத்தினை அவர் தான் முழுவதும் வாசித்து பதிப்பகத்திற்கு கொடுக்கலாம் என பச்சைக் கொடி காட்டியவர். திருமண சீர்களில் நாடார்கள் எப்படி நார் பெட்டிகளை கொண்டு செல்வார்களோ அது போலவே செட்டியார்களும் செய்வார்கள் என்றார். முதன் முறையாக  செட்டியார்களுக்கும் பனைக்கும் இருக்கும் உறவு என் பார்வையில் அப்படித்தான் தெரிய வந்தது. 

ஆகவே இதனை மையப்படுத்தியே நான் செட்டியார்களுக்கும் நாடார்களுக்கும் உள்ள தொடர்பினைத் தேட ஆரம்பித்தேன்.  திண்டுக்கல் பகுதிகளில் நான் பயணித்துக்கொண்டிருக்கும்போது கோவிலூர் என்ற பகுதியில் ஒரு பெண்மணி நாங்கள் செட்டியாருக்குத் தான் கருப்பட்டியை கொடுப்போம் என்றது எனக்குள் கேள்வியை எழுப்பியது? ஏன் செட்டியார்கள்? பணம் இருப்பதிலேயா? வெறும் பணம் ஒரு காரணியாக இருக்க முடியாது ஏன் என்றால் சிவகாசி நாடார்களும், இன்னும் பல நாடார்களும் கருப்பட்டி வணிகத்தை தங்கள் குல உரிமைச் சொத்தாக வைத்திருந்தார்கள். என்னுடைய அம்மா வழி தாத்தாவின் சகோதரியின் கணவர் கூட ஒரு வெற்றிகரமான கருப்பட்டி யாவாரியாக கொல்லத்தில் கொடிகட்டிப்பறந்தவர் தான். அப்படியானால் ஏன் செட்டியார்கள் பனையேறிகளுடன் தொடர்பிலிருக்கிறார்கள்?

விடை சொல்லுவதற்காகவே திருச்சியில் செல்லம்மாள் மண் பானை சமையல் என்ற பாரம்பரிய உணவகத்தை நடத்தும் திரு மோகன் அவர்கள் என்னை அவர்களது உணவகத்திற்கு அழைத்திருந்தார்கள். உணவு உண்பதற்கு முன், அவரது உணவகத்தை எனக்கு சுற்றிக்காண்பித்தார்கள். சமையலுக்கான மண் பாண்டங்களைத் தேர்வு செய்த விதம், விறகுகள் முதற்கொண்டு காய்கறிகள் எப்படி வாங்குவது உட்பட பல கோட்பாடுகளை அவர் வைத்திருக்கிறார். அவர் வாங்கி வைத்திருக்கும் கருப்பட்டிகள் தருமபுரியிலிருந்து வரவழைத்தவை என காண்பித்தார். அவைகளின் வடிவமே சற்று வித்தியாசமாக இருந்தது. தேங்காய் சிரட்டையில் ஊற்றியது போல அல்ல, சற்று ஆழமான குழிக்குள் ஊற்றியது போல நீண்டு காணப்பட்டது. அவர் தான் சொன்னார், செட்டியார்கள் எண்ணை ஆட்டும்போது கருப்பட்டியினைக் கலந்தே ஆட்டுவார்கள் என்று. குறிப்பாக எள் எண்ணை ஆட்டும்போது கருப்பட்டி கண்டிப்பாக இட்டே ஆகவேண்டும். ஒரு முறை காயல் பட்டிணம் சென்றிருக்கும்போது ஒரு இஸ்லாமியர் செக்கு ஆட்டும் இயந்திரத்தில் கருப்பட்டிகளை போட்டுக்கொண்டிருந்ததை அப்போது நினைவு கூர்ந்தேன்.  கருப்பட்டிகளை இட்டு அரைத்தால் தான் எள்ளிலிருந்து எடுக்கும் எண்ணையில் உள்ள காரல் நீங்கும்.

செட்டியார்கள் மத்தியில் எண்ணெய் செட்டியார்கள் உண்டு என்பது எனக்கு புது தகவல். பெருவிளையில் எங்கள் வீட்டிற்கு  பின்புறம் இருக்கும் அரிசி அரவை ஆலைக்கருகில் ஒரு செக்காட்டும் கல் கிடப்பதையும் எனது சிறு வயது முதல் பார்த்து வருகிறேன். சமீபத்தில் மீண்டும் செக்கெண்ணெய்கள் தமிழகத்தில் மீட்சி பெறுவதைப் பார்க்கும்போது  கருப்பட்டியின் தேவை இன்றும் அதிகமாக இருப்பதாகவே உணருகிறேன். 

கேள்வி இன்னும் எஞ்சியிருக்கிறது. செட்டியார்கள் வாழ்வில் பனையோலைப் பெட்டி எப்படி நுழைந்தது? அவர்களுக்கான ஓலை பின்னும் ஒரு மரபு தமிழகத்தில் எப்படி தனித்துவத்துடன் இயங்கலாயிற்று என்பது மிகப்பெரிய கேள்வி. மஞ்சள் வெளியிட்ட கொட்டான் என்ற ஒரு புத்தகத்தை பெரும் விலை கொடுத்து வாங்கினேன். அந்த புத்தகம் அவர்களின் பொருட்களின் அறிமுகம் என்ற அளவிலான ஒரு புத்தகமே ஒழிய அதிலிருந்து பெருமளவில் விடை கிடைப்பதாக இல்லை. ஏனென்றால் அப்புத்தகத்தில் எங்குமே அவர்களுக்கு ஓலைகள் எங்கிருந்து கிடைக்கிறது என்கின்ற தகவல் சொல்லப்படவில்லை. ஓலைகள் கிடைக்கும் பனை மரம் குறித்து போற்கிற போக்கில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் ஓலைகளை யார் வெட்டி கொடுப்பார்கள், போன்றவைகள் பேசப்படவில்லை. ஒருவேளை, அப்பகுதிகளில் வாழும் பழங்குடியினர் ஓலைகளை சேகரித்து கொடுத்திருக்கலாம், இல்லை தலித் சமூகத்தினர் அப்பகுதிகளில் பனையேறியிருக்கலாம். பொருந்தும்படியாக நாம் எண்ணத்தக்க விடை, செட்டிநாடு பகுதிகளில் வாழ்ந்த நாடார்கள் தான் ஓலைகளை எடுத்து செட்டி ஆய்ச்சிகளுக்கு கொடுத்திருப்பார்கள் என்பது தான்.

அழகிய செட்டிநாடு கொட்டான்கள்

அப்படியானால், ஓலைகளில் பொருட்கள் செய்யும் நுட்பம் செட்டியார் சமூகத்தினருக்கு எவர் கற்றுக்கொடுத்திருப்பார்கள் என்பது அதனை தொக்கி நிற்கும் கேள்வி. கண்டிப்பாக நாடார் பெண்களே செட்டி ஆய்ச்சிகளுக்குப் பின்னல் முறைகளை கற்றுக்கொடுத்திருப்பார்கள். அப்புத்தகத்தில் அதற்கான தெளிவுகள் ஏதும் இல்லை. பெரும்பாலும் செட்டியார்கள் பர்மா சென்று பொருளீட்டுகையில், செட்டி ஆய்ச்சிகள் வீட்டில் பொழுதுபோக கற்ற ஒரு கலை வடிவமாகவே  இதனைப் கொட்டான் முன்வைக்கிறது. இன்றும் செட்டி நாட்டு சுற்றுவட்டாரங்களில் காணப்படும் நார் பெட்டிகள் தனித்துவமிக்கவைகளாக  காணப்படுவதைப் பார்க்கலாம். இவ்வித நார் பெட்டிகளே செட்டியார்களுடைய திருமணங்களில் பயன்படுத்தப்பட்டன. அப்படியானால், அவர்களிடம் காணப்படும் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த பெட்டிகளுக்கான பின்புலம் என்ன? தென் தமிழகத்தில் காணப்படும் முறைமைகளைத் தாண்டி செட்டியார்களுடைய வர்ணங்களும், மடிப்புகளும் வித்தியாசப்படும் இடங்கள்  உண்டு. அது எப்படி என்கிற கேள்வி என்னை குடைந்துகொண்டிருந்தது.  

அதற்கான விடை கண்டுபிடிக்க நான் வேறு ஒரு பயணம் செய்யவேண்டியிருக்கும் என நான் நினைத்திருக்கவில்லை. தற்செயலாக அவ்விதமான ஒரு பயணம் நிகழ்ந்தது.  எனது இறையியல் கல்லூரித் தோழன்,   ஹெம்கொமாங் ஹோக்கிப் (Hemkhomang Hoakip)  மணிப்பூரில் நிகழ்ந்த ஒரு கிறிஸ்துவ சமய நிகழ்ச்சிக்காக என்னை பேச அழைத்தார். நிகழ்ச்சி முடிவில் என்னோடு படித்த குக்கி இனக்குழுவைச் சார்ந்த மாங்சா ஹோக்கிப் (Mangcha Hoakip) , என்னை அவனுடன் தங்கும்படியாக அழைத்துச் சென்றான். மோரே என்று சொல்லப்படும் ஒரு பகுதி இருக்கிறது அங்கு தமிழர்கள் வாழ்கிறார்கள், அதன் அருகில் தான் பர்மா இருக்கிறது அங்கு செல்வோம் என்றான். மறுநாள் அதிகாலமே, ஒருநாள் பயணமாக  பர்மா நோக்கி மாங்சா குடும்பத்தினருடன்  இணைந்து பயணித்தோம். 

தூரத்தில் தெரிகிறது தான் பர்மா என காண்பித்தான். பர்மா எனப்படுவது சமதளத்தில் இருக்குமிடம் என்றும், இந்தியா  மலையில் இருப்பதும் தான் எளிமையாக புரிந்துகொள்ளக்கூடிய வேறுபாடு. நாங்கள் மோரே சென்று  காலை உணவருந்திவிட்டு, ஒரு நாள் பெர்மிட் எடுத்துவிட்டு பர்மாவிற்குள் நுழைந்தோம். அங்கே அருகிலிருந்த ஒரு நகரத்திற்குள்  நான் காலடி எடுத்து வைத்தபோதே உணர்ந்துகொண்டேன் இது பனைகளுக்கான தேசம் என்று, என்னை வரவேற்க நான்கு பனை மரங்கள் சாலை ஓரத்தில் நின்றன. கலயம் கட்டப்பட்டிருந்தது. இல்லை இல்லை அவிழ்க்கப்படாமலிருந்தது. அன்று நாங்கள் சென்ற சந்தையில், கருப்பட்டி விற்கப்படுவதைப் பார்த்தேன். பனை ஓலைப்பொருட்களை நான் அன்று அங்கு எங்குமே பார்க்கவில்லை. எப்படி அதை தவற விட்டேன் என இப்போதும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். 

எனது செட்டி நாட்டு பயணத்தில் அங்குள்ள புராதன பொருட்களை விற்கும் கடைகளுக்குச் சென்றபோது, பர்மாவிலிருந்து கொண்டுவந்த ஓலைப்பெட்டிகள் தாராளம் இருப்பதைப் பார்த்தேன். செட்டியார்களுடைய தனித்துவம் என்பது நாடார்களிடம் இருந்து கற்ற பின்னல் முறைகளுடன் பர்மிய கலைப்படைப்புகளையும் சேர்த்து  முயங்கி ஏற்பட்ட கலவையான கலைவடிவங்கள் என்பதை அப்படித்தான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், பர்மியக் கலைப்படைப்புகள் என்பவை அனைத்து இந்திய கலைப்படைப்புகளுக்கும் அப்பாற்பட்ட அழகு கொண்டது என்பதை இங்கு பதிவு செய்துதான் ஆகவேண்டும்.

என்னைப்பொறுத்தவரையில், ஒவ்வொரு சமூகமும், தமிழகத்தில் பனை சார்ந்த பொருட்களை தங்களுக்கு என வடிவமைத்திருக்கிறார்கள். அது அவரவர்களின், சடங்கு அல்லது, பயன்பாட்டு காரணங்களை ஒட்டி இருக்கலாம் என்பது எனது அவதானிப்பு. ஆகவே அழகினை விட, ஒரு பொருள் எவ்விதம் பயன்படுத்திடப்பட்டிருக்கிறது எனவும், அவைகள் அச்சமூகத்தை எப்படி பிரதிபலிக்கிறது என்பதும் தான் எனது முக்கிய தேடுதலாக இருக்கிறது.  செட்டியார்களுடைய பங்களிப்பு என்பவைகள் அவ்வகையில் அழகியல் சார்ந்து அவர்கல் தமிழ் சமூகத்திற்கு அளித்த கொடைகள் என்றே கொள்ளுவேன். இன்று மஞ்சள் சென்று பனை ஓலைப் பொருட்கள் வாங்குபவர்கள் தமிழகத்தில் உள்ள மேல் தட்டு மக்கள் மட்டும் தான். அந்த அளவு சர்வதேச கலை ஒருமையினை அவர்கள் பேணி வருகிறார்கள் என்பதையும் மறுக்க இயலாது. 

பறி குறித்த விடை எனக்கு ஓரளவு கிடைத்துவிட்டாலும்,  பறி குறித்து நான் மேலும் அறிய விரும்பியே பழவேற்காடு வந்தேன். கூடவே எலிக்கிட்டி என்று ஒன்றினையும் தேடி வந்தேன். எனக்கு சேவியர் அறிமுகமான பிற்பாடு, ஒருநாள் முகநூலில் ஒரு படத்தினை பகிர்ந்திருந்ததைப் பார்க்தேன். ஒரு மனிதர் டி வி எஸ் எக்செல் வண்டி நிறைய பனயோலையிலான பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்வது போன்ற ஒரு படம். என்ன இது என்று வினவ, எலிக் கிட்டி என்றார். இப்படியான ஒரு பெயர் எனக்கு புதிதாக இருப்பதனால், அது குறித்த தேடலையும் இணைத்தே இப்பயணத்தினை அமைத்திருந்தேன்.  

சேவியருடன் பேசும்போதெல்லாம், இதைச் செய்பவர்களைப் பார்க்க முடியுமா அதைச் செய்பவர்களைப் பார்க்க முடியுமா என்று நச்சரித்தபடியே இருப்பேன். சேவியர் எப்போதும் மெல்லிய சிரிப்புடன், கிண்டலாக சொல்லுவார். “நீங்க பாம்பே ஆள் மாதிரியே பேசுறீங்க”. அதற்கு அர்த்தம், ஒரு தகவலை நினைத்த மாத்திரத்திலேயே  திரட்டிவிட முடியாது. பொறுமை அவசியம். பல நாள் தேடவேண்டியிருக்கும் என்பதுதான். எனக்கு எலி கிட்டியினை பார்த்தே ஆகவேண்டிய வேகத்தில் தான் இந்த பயணமே என நெஞ்சு அடித்துக்கொண்டீருந்தது. அவர் என்னிடம், உங்களுக்காக ஒரு நண்பரை ஒழுங்கு செய்திருக்கிறேன், அவர் வந்தால் உங்களுக்கான உதவிகளைச் செய்வார். மீதி உங்கள் அதிருஷ்டத்தைப் பொறுத்தது என்றார். மேலும் அவர், நாளைய தினம், காயலில் நீங்கள் பயணம் செய்ய ஒரு படகினை அமர்த்தியிருக்கிறேன் , பயணம் சென்று வாருங்கள். ஒருவேளை நீங்கள் தேடுகின்றவைகளில் ஏதேனும் உங்களுக்கு இப்பயணத்தில் வெளிப்படலாம் என்றார். 

சேவியர் என்னை அழைத்துகொண்டு அங்கிருந்த டச்சு கல்லறையினை காண்பித்தார். அதற்குள் நாங்கள் செல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. அப்படியே, என்னை ஒரு தொன்மையான இஸ்லாமிய பள்ளிவாசலுக்கும் அழைத்துச் சென்றார். புராதனமான அந்த பள்ளிவாசலிலும் நாங்கள் உள்ளே சென்று புகைப்படம் எடுக்க இயலவில்லை. வெளியே படங்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார் அங்கிருந்தவர். அழகிய கற்தூண்களால் ஆன அந்த பள்ளிவாசல், இந்திய கட்டிடக்கலையும் இஸ்லாமிய கட்ட்டக்கலையும் இணைந்த சங்கமம். வெளியே இருந்த ஒரு சூரிய கடிகாரத்தையும், பாங்கு  அழைக்கும் மேடையினையும் பார்த்துவிட்டு திரும்பினோம். மதிய உணவினை இருவரும் இணைந்து  சென்று சாப்பிட்டோம். நான் இறால் பிரியாணி  சாப்பிட, அவர் சைவ சாப்பாடு சாப்பிட்டார். அவர் எனக்கு உதவி செய்யும்படி அழைத்திருந்த பீட்டர் வரும்வரையில் என்னோடு நேரம் செலவைட்டு பழவேற்காடு குறித்து பல்வேறு அரிய தகவல்களை பகிந்துகொண்டார். 

https://lbb.in/chennai/manjal-home-decor-chettinad-crafts-store/

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 9

பிப்ரவரி 26, 2021

பறிபோகா உறவுகள்

எங்களது பயணம் நீண்டுகொண்டே சென்றது மதியம் 12.30 வாக்கிலே தான் சென்று சேர்ந்தோம். நாங்கள் சென்று சேர்ந்த இடம் ஒரு நீண்ட பாலத்தின் ஆரம்பம். அந்த பாலத்திற்கு அப்பால் தொலை தூரத்தில் ஒரு கலங்கரை விளக்கம் நின்றுகொண்டிருந்தது. அதனைச் சுற்றிலும் பனை மரக்கூட்டம். எனக்கு அந்த காட்சி மிகவும் பிடித்திருந்தது. அக்காட்சி என் மனதிற்கு நெருக்கமானது மட்டுமல்ல, கலங்கரை விளக்கத்தின் ஊற்றுக்கண்ணே பனை மரம் தான் என நான் எண்ணிக்கொள்வதுண்டு. கிட்டத்தட்ட இதற்கு இணையாக கன்னியாகுமரியிலும் பனை மரங்கள் கலங்கரை விளக்கத்தின் அருகில் நின்றுகொண்டிருக்கும். பல பனை மரங்கள் அழிந்துபோனாலும், இன்றும், ஒரு சில பனை மரங்கள், முட்டம் கடற்கரையினை ஒட்டி இருப்பதை நான் பதிவு செய்திருக்கிறேன். இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கூட ஒரு சில பனை மரங்கள் கலங்கரை விளக்கத்தின் அருகில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். நான் எனக்கான இடத்தை தேடி வந்திருக்கிறேன் என்ற நிறைவை அந்த பனைமரங்களும் கலங்கரை விளக்கமும் கொடுத்தது.

அங்கே சுமன் என்ற மீனவர் நண்பர் ஒருவரின் தொடர்பு எண்ணை சேவியர் கொடுத்திருந்தார்கள். அவரை தொடர்புகொள்ள முயற்சித்தோம், அவர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார். ஆகவே, எங்களுக்கு இடதுபுறமாக காணப்பட்ட மீன் சந்தைக்குச் சென்றோம். மீன்பிடி படகுகள், தோணிகள் அதிகமாக அப்பகுதிகளில் நின்றுகொண்டிருந்தன.  கடலை ஒட்டி அனைத்து மீன்களும் உடனுக்குடன் பிடிக்கப்பட்டு விற்பனையாகிக்கொண்டிருந்தது. இறால் அதிகமாக தென்பட்டது. எதுவும் மலிவாக இருப்பது போல தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அனைத்தும் பிடிக்கப்பட்டு உயிருடனோ அல்லது சற்று நேரத்திற்கு முன் உயிரை விட்டோ வந்திருக்கிறது.

சுமன் வருவதற்கு நேரமானபடியால், அக்கரையிலிருந்த கலங்கரை விளக்கம் நோக்கிச் சென்றோம். பழவேற்காடு பகுதிகளில் இரண்டு கலங்கரை விளக்கம் இருப்பதாக சேவியர் கூறினார். மற்றுமொரு கலங்கரை விளக்கம் பல மைல்கள் தள்ளி ஆந்திரா எல்லையில் இருக்கிறது. கலங்கரை விளக்கத்தினைத் தாண்டி நாங்கள் சென்றபோது  அங்கே ஆர்ப்பரிக்கும்  கடல் இருந்தது. எனக்கு குழப்பமாகிவிட்டது. அப்படியானால் இங்கே பாலத்தின் அடியில் நான் கண்டது என்ன? ஆம், அது தான் பழவேற்காடு காயல் என பின்னர் அறிந்துகொண்டேன். இங்கு கடலுக்கும் காயலுக்கும் நடுவில் மிக நீண்ட மணல் திட்டுக்கள் காணப்படுகின்றன. இங்குள்ள காயலே மீன் பெருமளவில் பெருகுவதற்கும், இறால் பெருகி வளருவதற்கும் வெளிநாட்டு பறவைகள் வருவதற்கும் காரணமாகின்றன. இன்று ஐஸ் வைக்கபடாத மீன்கள் வேண்டுவோர் பழவேற்காடு நோக்கி படையெடுப்பது வாடிக்கையாகிவிட்டது. ஆகவே இங்கே விலை பிற இடங்களை விட சற்று அதிகமாகவே இருக்கும்.

பிரசாந்த் சுவாமினாதன் அவர்கள் எடுத்த அழகிய புகைப்படம்

எனது பயணம் ஏன் பழவேற்காடு நோக்கி அமைத்தது? அதற்கு ஒரு நீண்ட பின்கதை உண்டு. பனைமரச்சாலை பயணத்தில் நான் ஸ்ரீ ஹரிக்கோட்டாவை தாண்டி வரும்போது பழவேற்காடு பகுதியை பார்க்கவேண்டும் என விரும்பினேன். ஆனால் சென்னை செல்லுவது தாமதம் ஆகும் என கருதியதால் அன்று அந்த எண்ணத்தை கைவிட்டு ஏலூருவிலிருந்து சென்னை வரை 500 கிலோமீட்டர் ஒரே மூச்சாய் ஓட்டி வந்து சேர்ந்தேன். அந்த பயணத்தில் நான் பழவேற்காடு பகுதியை பார்க்கத்தவறியது மாபெரும் தவறு என பல நாள் எண்ணி வருந்தியிருக்கிறேன்.

ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஒருவர் முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். பனை ஓலையில் செய்யப்பட்ட பறி போன்ற அமைப்பைக்கொண்ட ஒரு அழகிய பனையோலை பெட்டியினை ஒரு கரிய மனிதர் வெண்மையான முள் தாடியுடனும், தனது தோளில் உள்ள குச்சியின் ஓரத்தில் கட்டி தொங்கவிட்டபடி புகைப்படக் கருவியை  தீர்க்கமாக பார்த்தபடி நின்றார். அப்புகைப்படம், ஒரு நூறாண்டு பழைமையான புகைப்படம் போலவே காணப்பட்டது. காலத்தால் நாம் பின்நோக்கிச் சென்றால் எப்படி அன்றைய கருப்பு வெள்ளை படங்களில் நமது ஆதி குடிகளை ஆங்கிலேயர்கள் படமெடுத்து வைத்திருந்தார்களோ  அப்படியான தோரணைக் கொண்டது  அப்படம். ஆனால் ஆச்சரியப்பட வைக்கும் அளவில் அப்படம் வர்ணக்கலவையால் நிறைந்திருந்தது. இது எப்படி சாத்தியம் என எண்ணிக்கொண்டு நண்பர்களிடம் அப்புகைப்படம் எடுத்த நபர் குறித்து விவரங்கள் கேட்டேன். ஒருவகையாக அப்புகைப்படம் எடுத்த நபரையும் தேடிக்கண்டுபிடித்தேன். பிரசாந்த் சுவாமினாதன் என்ற அந்த புகைப்படக்காரருக்கு, அவரது பயணத்தின் போது, தற்செயலாக கிடைத்த படம் அது என்பதைத் தாண்டி மேலதிகமாக எதுவும் சொல்லத் தெரியவில்லை என்றாலும், எண்ணூர் பகுதியில் இப்படியான புகைப்படத்தைத் தாம் எடுத்தாக ஒப்புக்கொண்டார்.

இதனை நான் தேடுகையில், தான் சேவியர் அவர்களை ரோடா அலெக்ஸ் எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். சேவியர் அவர்கள் என்னை நேரடியாக பழவேற்காடு வரச்சொல்லிவிட்டார். என்னால் அங்கு செல்லும் சூழல் அப்போது அமையவில்லை. எனது மனதோ பழவேற்காடு செல்லவேண்டும் என துடித்துக்கொண்டிருந்தது. பழவேற்காடு பகுதிகளில் காணப்படும் இவ்வித ஓலை வடிவத்தைக் குறித்து நான் தேடத் துவங்கியது 2017 ஆம் ஆண்டு தான். அதுவரை பறி என்கிற வார்த்தையை நான் கேள்விப்பட்டிருக்கவில்லை.

பாண்டியன் மற்றும் பிரபஞ்சன் ஆகியோருடன் பாண்டிச்சேரியில் வைத்து…

பறி என்ற சொல்லினை நான் முதன் முறையாக பாண்டிச்சேரியில் வைத்து தான் கேள்விப்பட்டேன். பேராசிரியர் லோகமாதேவி அவர்கள் “அகவிழி” என்ற குறும்படத்தை எடுத்த  இயக்குநர் பாண்டியனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள்.  பாண்டியனோடு பேசிக்கொண்டிருக்கும்போது தான் பாண்டிச்சேரி பகுதியில் காணப்படும் பறி குறித்த விவரங்களை எனக்குச் சொன்னார். பாண்டிச்சேரி மக்கள் மீன் வாங்குவதற்கு என ஒரு பனை ஓலை பையினை வைத்திருப்பார்கள் எனவும், அதனை எடுத்துக்கொண்டு தான் மீன் வாங்கச் செல்வார்கள் எனவும் குறிப்பிட்டார். ஒவ்வொரு நாளும் மீன் வங்கி வந்த பின்பு அந்த பெட்டியினை அவர்கள் கழுவி மீண்டும் பயன்படுத்த வேண்டி பத்திரமாக எடுத்து வைப்பார்கள் எனவும் கூறினார். நமது சூழியல் அறிவு எப்படி சமீப காலங்களில் மழுங்கிப்போய்விட்டது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. வெகு சமீப காலம் வரைக்கும் புழக்கத்திலிருந்த இவ்வழக்கம் மறைந்து போய்விட்டது என அவர் சொன்ன போதே இதனைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என உறுதி பூண்டேன்.

பாண்டிச்சேரி பறி

ஆனால், நான் எங்கு தேடியும் அது எனது கைகளில் சிக்கவில்லை. அப்படி ஒரு பொருள் இருந்திருக்கிறது என்றவர்களால் கூட அது எங்கிருந்து உருவாகி அவர்கள் கைகளை வந்தடைந்தது என சொல்லத் தெரியவில்லை. இது போன்ற சூழல்களில் தான் நமக்கு உள்ளூர் வாசிகளின் உதவி தேவைப்படும். பாண்டிச்சேரியில் இரண்டு நாட்கள் செலவழித்தால் ஒருவேளை இதனை கண்டுபிடித்து மீட்டெடுக்க இயலும். மக்கள் வெகு சாதாரணமாக புழங்கிய ஒரு பொருள் இருந்ததற்கான அடையாளம் ஏதும் இன்றி மறைந்து போவது என்பது மாபெரும் பண்பாட்டு இழப்பாகும்.

குமரி மாவட்டத்தில் கூட மீன் வாங்கச் செல்லுபவர்கள், ஒரு சிறு பெட்டியினை சந்தைக்கு எடுத்துச் செல்லும் வழக்கம் முப்பதாண்டுகளுக்கு முன்பு இருந்தது. சாதாரண மிட்டாய் பெட்டியின் அடிப்பாகம் போல காணப்படும் ஒரு எளிய பெட்டி தான் அது. ஆனால் அதனை  எடுத்துச் செல்லும் விதம் தான் அதனை சற்று வித்தியாசமான ஒன்றாக காட்சிப்படுத்தும். வட்ட வடிவில் காணப்படும் கையடக்க பெட்டிக்குள் மீனை போட்டு, முயலின் காதை பிடித்து வருவதுபோல் அதன் மேற்பகுதியினை மடித்து தூக்கி வருவார்கள். இப்பெட்டியும் வழக்கொழிந்து போனதுதான். 

குமரி மாவட்ட மீன் பெட்டி

குமரி மாவட்டத்தில் உள்ள மிடாலக்காடு பகுதியில் ஒரு நாள் பனை விதைகளை சேகரித்துக்கொண்டிருந்தபோது, உங்களுக்கு நான் உதவுகிறேன் என்று ஒரு பெண்மணி சொன்னார்கள். அவர்கள் பெயர் ரெஜினா. கணவனை இழந்தவர்கள், இரண்டு ஆண் மகன்கள் அவர்களுக்கு உண்டு.  கிட்டத்தட்ட 5000 விதைகளை அவர்கள் அந்த வருடம் தன்னார்வலராக சேகரித்து கொடுத்தார்கள். அவர்கள் தனக்கு அந்த மீன் பட்டி செய்யத் தெரியும் என்றும், ஓலைகள் கொடுத்தால் நான் செய்து கொடுப்பேன் என்றும் கூறினார்கள். அப்படித்தான் இழந்த மீன் பெட்டியினை மீட்டெடுத்தோம்.

ரெஜினா மீன் பெட்டி செய்கிறார்கள்

பறி குறித்து எனது தேடுதல் வேகமடைந்தது. 2017 – 2018ஆம் ஆண்டிற்கான சூழியல் விருதினை பாண்டிச்சேரியிலுள்ள ஆரண்யா காடு என்ற அமைப்பினை நடத்தும் திரு சரவணன் மற்றும் குழுவினர் என்னையும் ஒருவராக தெரிந்தெடுத்திருந்தார்கள். அங்கே பனைமரம் என்ற புத்தகத்தை எழுதிய திரு. பண்ருட்டி இரா பஞ்சவர்ணம் அவர்களை மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. எனது தேடுதலைச் சொன்ன போது, அவரது நட்புகளை தொடர்புகொண்டு, எப்படியும் உதவி செய்தே ஆகவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். கடலூர், பாண்டிச்சேரி மற்றும்  சென்னை பகுதிகளில் அவருக்கு ஏராளம் நண்பர்கள் உண்டு.  விதைகளை சேகரித்து அதனை பரவலாக்கும் ராமநாதன் என்னும் ஓய்வுபெற்ற ஆசிரியர்  எங்களுக்கு உதவுவதாக வாக்களித்தார்கள்.  எப்படியோ ஓரிடத்தை கண்டுபிடித்துவிட்டோம்.  அங்கே சென்று சேர்ந்த போது, அது வீராம்பட்டிணம் என்ற ஒரு மீனவ கிராமம். பாண்டிச்சேரியிலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.

பறியை இடுப்பில் கட்டியபடி வலை வீசும் மீனவர், பாண்டிச்சேரி

அங்கு சென்றபோது ஒருசேர ஏமாற்றமும் அதிர்ச்சியும் எனக்கு காத்திருந்தது. நாங்கள் தேடி வந்த மக்கள் பயன்பாட்டிற்கான பறி கிடைக்கவில்லை. அது குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை. அதனை சற்று நேரத்திற்குப் பின் தான் என்னால் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. மீனவர் கிராமத்தில் வந்து சாதாரண மக்கள் பயன்படுத்தும் பறியினை தேடுவது சரியில்லையே?

எங்கள் தேடுதலில் ஆச்சரியமளிக்கும் விதமாக இங்கு பறி செய்யும் ஒருவரைப் பார்த்தோம். திரு ராஜேந்திரன் என்பவர் அதனை செய்துகொண்டிருந்தார். இன்றும் விராம்பட்டிணம் ஊரிலுள்ள மறை மலையடிகள் தெருவை சார்ந்த நான்கு குடும்பங்கள் பறி செய்வதாக தெரிவித்தார். அந்த பறியின் பயன்பாடு தெரிய அந்த மீனவரை அழைத்துக்கொண்டு சென்றோம். உள்நாட்டு மீனவர்கள் தான் இவர்கள் என அப்போதுதான் புரிந்துகொண்டேன். அவர் தனது இடுப்பில் இந்த பறியைக் கட்டிக்கொண்டு கரத்தில் ஒரு வலையை எடுத்துக்கொண்டார். கடலை ஒட்டி இருக்கும் பகுதிகளில் தான் இவர்கள் மீன் பிடிப்பது வழக்கமாக இருக்கிறது. அன்று அதிகமாக எதுவும் கிடைக்கவில்லை, ஒரு நண்டும் ஒரு சில சிறிய மீன்களும் அவருக்கு கிடைத்தன.

பறியின் வடிவம் குறித்து நான் சொல்லியே ஆகவேண்டும். பறி குமரி மாவட்டத்தில் காணப்படும் எந்த வித பொருட்களுடனும் தொடர்புடையது அல்ல. அப்படி நான் சொல்லுவதற்கு காரணம், குமரி மாவட்டத்தில் வழக்கமாக கிடைக்கும் பொருட்கள் எதனுடனும் நாம் ஒப்பிடமுடியாத வடிவமாக அது காணப்பட்டது.  மேலும் அப்போது நான் குமரி கடற்கரைகளில்  புழங்கும் பனை ஓலை பொருட்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. ஆனால் அதனைப் பார்த்த போது இனம்புரியாத ஒரு குதூகலம், என்னை ஆட்கொண்டது. ஏதோ கண்டுபிடித்துவிட்டேன், சாதித்துவிட்டேன் என்பது போல உற்சாகமாகிவிட்டேன். எனது உற்சாகம், ஐயா பஞ்சவர்ணம் அவர்களையும், மற்றும் உடன் வந்த ராமநாதன் ஆசிரியரையும்  ஒருங்கே  கூட தொற்றிக்கொண்டது. எனக்கான பறிக்கு ஐயா பஞ்சவர்ணம் அவர்கள் முன்பணம்  கூட கொடுத்துவிட்டார்கள்.

அப்படி அந்த பறியில் நான் என்னத்தை சிறப்பாக கண்டேன்? எனக்குத் தெரியவில்லை. பொதுவாக நான்கு முக்கு பெட்டிகளோ இரண்டு முக்கு பெட்டிகளோ தான் குமரி மாவட்டத்தில் இருக்கும். இது ஒரு சீரான வடிவற்ற பொருள். பார்க்க மனிதர்களின் பிருட்டம் போல காணப்பட்டது. அதன் வாய் ஒடுங்கி மனித கழுத்தினளவு தான் இருந்தது. பறியின் அடிப்பகுதி  நேர்கோடாக செல்லும் பகுதியையும், வாய் பகுதி சீரான வட்ட வடிவத்தையும் கொண்டிருப்பது ஆச்சரியமாக இருந்தது. பறி என்ற அமைப்பில் தான் வயிற்றுப்பகுதி ஊதி பெரிதாகவும், மிச்சப்பகுதிகள் சீராக இருப்பதாகவும் எனக்கு தோன்றிற்று. அவைகள் எப்படி இந்த “வடிவற்ற” வடிவை அடைந்தன என என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. என்னைப்பொறுத்த அளவில் செய்நேர்த்தி இல்லாத ஒரு ஆச்சரிய வடிவம் என்பதாகத்தான் அதனை அப்போது உள்வாங்க முடிந்தது.

ஏன் பிருட்டம் போன்ற வடிவம்? ஏன் பனை ஓலையில் போன்ற கேள்விகளுக்கு  அன்றே எனக்கு விடை கிடைத்தன. தண்ணீரில் இடுப்பளவு இறங்கி நின்று மீன் பிடிக்கும் ஒருவர், பறியினை இடுப்பில் கட்டியிருப்பார். பிடித்த மீனை பறிக்குள் உயிருடன் போடுவார். அது அவர் வீடு வருவது வரை உயிருடன் இருக்கும். அப்படி தண்ணீரிலேயே மீன்கள் இருப்பதனால் எவ்வகையிலும், அவைகள் மீண்டும் தண்ணீரில் குதித்துவிடக்கூடாதே என்பதற்காக தான்  இவ்விதம் அதனை மடித்து கழுத்தை சிறிதாக்கி விடுகிறார்கள் என அறிந்துகொண்டேன். பனை மரங்கள் நெய்தல் நிலத்தில் பெருமளவு காணப்படுவதால் பனை ஓலைகளை மீன்பிடி உபகரணங்கள் செய்ய பயன் படுத்துகிறார்கள் என அறிந்து கொண்டேன்.

தமிழக கடற்கரை பகுதிகளுக்கும் பனை மரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். பாண்டிச்சேரியில் மட்டுமல்ல, இராமநாதபுரம் பகுதிகளிலும் பனை ஓலையில் பறி செய்யும் வழக்கம் இருப்பதாக பனையேற்றம் குழுவினரைச் சார்ந்த இளவேனில் குறிப்பிட்டார்கள். அக்குழுவினரைச் சார்ந்த சாமிநாதன் என்பவர், ராமநாதபுரம் சென்று பறி எப்படி செய்கிறார்கள் எனக் கற்று வந்தார். ஆகவே இளவேனிலிடம் அப்பெரியவரின் எண் வாங்கிகொண்டு அந்த மனிதரைக் கண்டு திரும்பலாம் என நினைத்தேன்.

பல தேடுதல்களுக்கு பின்பு ராமநாதபுரத்தில் பறி செய்யும் அந்த நபரை கண்டுபிடித்தேன். அவரிடம் நான் பர்த்த பறி இன்னும் வித்தியாசமாக காணப்பட்டது. ஏற்கெனவே நான் கூறியிருப்பது போல பின்னல்களில் கூட்டல் வடிவமும் பெருக்கல் வடிவமும் உண்டு. ராமநாதபுரத்தைப் பொறுத்த அளவில் கூட்டல் முறை போன்ற ஒன்றே அவர்களிடம் காணப்படுகிறது. மேலும், கூட்டல் முறை என்று சொல்லும்போது இரண்டு பக்கமும் ஓலைகளையோ அல்லது பனை நாரையோ கொண்டு பின்னல் இடுவது வழக்கம். ஆனால் இங்கு செய்யப்படும் பறியின் அமைப்பு, சற்று வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக ஊடாக செல்லும் ஓலைக்குப் பதிலாக பனை ஈர்க்கில் பயன்படுத்தப்பட்டிருந்தது.  

குமரி மாவட்டத்தில் செய்யப்படும் வட்ட ஒமல் – மீள் உருவாக்கம் செய்யப்பட்டது

இதே பின்னல் முறையினை ஒத்த ஒரு நேர்த்தியான வடிவத்தினை கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் பார்க்கும் வாய்ப்பு எனக்கு மீண்டும் அமைந்தது பெரும் பாக்கியம் என்றே சொல்லுவேன். 2017 – 18 ஆகிய வருடங்களில் ஜாஸ்மின் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். அவருடன் பணியாற்றும் ஒரு ஆசிரியர் உடல் நலம் குன்றியபோது நாங்கள் அவர்களைப் பார்க்கச் சென்றோம்.  அவர்களின் கணவர், பனை ஓலையில் ஒமல் என்கிற பனை ஓலைப் பொருளை தமது சிறு வயதில் மீன்களை அள்ள பயன்படுத்திருக்கிறாதாக  கூறினார்கள். குமரி மாவட்டத்தில் பனை சார்ந்த தேடுதலை 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னெடுத்துவந்த எனக்கு  அது ஒரு ஆச்சரியத் தகவல். நமக்கடுத்திருப்பவர்களிடம் இருக்கும் ஓலைப்பொருளைக்கூட  தெரியாமல் இருந்திருக்கிறேனே என்கிற ஆற்றாமை என்னை புரட்டிப்போட்டது. ஆகவே குமரி கடற்கரையை பகுதிகளை பன்னாடையிட்டு தேடத் துவங்கினேன். முட்டம் என்னும் ஒரு பகுதில் ஒருவர், ஒமல் செய்வதாக கேள்விப்பட்டு அவ்வீட்டை கண்டடைந்தேன். ஆனால் அவர்கள், பிளாஸ்டிக் நார் கொண்டே அந்த ஒமலினைச் செய்து வந்தார்கள். பனை ஓலையில் செய்யும் ஒரே ஒருவர் அப்பகுதியில் இன்னும் இருப்பதாகவும், அவர் தனது மகளுடைய வீட்டிற்கு போயிருப்பதாகவும் கூறினார்கள். அவரைக் கண்டுபிடிக்க சிறிது காலம் தேவைப்பட்டது.

திருமதி பாக்கியம் வட்ட ஒமல் – மீள் உருவாக்கம் செய்யும்போது

2018 – 19 ஆகிய வருடங்களில்,  மிடாலக்காடு என்ற பகுதியில் உள்ள ஒரு  வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். எங்கள் வீட்டிற்கு எதிரில் இரண்டு மீனவ குடும்பத்தினர் வாடைகைக்கு இருந்தார்கள்.  மீனவ குடும்பத்தினருக்கே உரிய அன்பை எங்கள் மீது பொழிந்தவர்கள் அவர்கள்.  பனை சார்ந்த  எனது தேடுதலை அறிந்த பாக்கியம் என்ற அம்மையார், தனது தந்தையார் பனை ஓலைகளில் ஒமல் என்கிற மீன் அள்ளும் பொருளினைச் செய்வதை தான் பார்த்திருப்பதாகவும், ஓலைகள் கொடுத்தால், தான் அதனை மீட்டிருவாக்கம் செய்ய இயலும் என்றும் கூறினார்கள். கிட்டத்தட்ட 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கே ஒமல் குறித்த அறிவு இருக்கும்.

வட்ட ஒமலுக்காக அடிவைக்கும் முறை

நான் ஓலைகளை எடுத்து வந்தபோது அவர்கள் அதனை செய்யத் துவங்கினார்கள். என் கண்களின் முன்னால் உருப்பெற்ற அந்த ஒமல் வட்ட வடிவாக விரிந்து செல்லுவதும், ஈர்க்கில்களே அவைகளை  இணைத்து கட்டுவதும் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. குமரி மாவட்டம் என்று அல்ல, தமிழகத்தின் எப்பகுதியிலும் இவ்விதமான பின்னும் முறைகள் காணப்பட்டதில்லை என்பது தான் உண்மை. எனக்கு ஒமல் என்ற அந்த வடிவத்தைப் பார்க்க  ஆச்சரியமாயிருந்தது. மீனவர்களின் இந்த தனித்திறனோ அல்லது பனையுடனான உறவோ ஆவணப்படுத்தப்படவில்லை என்பதும், மீனவ சமூகத்தாலேயே மறக்கப்பட்டு வருவதும் வேதனையான உண்மைகள். குறிப்பாக குமரி மாவட்ட கடற்கரைகள் அனைத்துமே மெல்ல மெல்ல தென்னைமயமாகிக்கொண்டு வருவதும், பனைகள் குமரி கடற்கரையோரங்களிலிருந்து மறைந்துபோவதும் தொடர்நிகழ்வாகிவிட்டன.

முட்டத்தைச் சார்ந்த அந்த மனிதரைப் வெகு நாட்களுக்குப் பின்பு கண்டுபிடித்தேன். அவர் பெயர் இன்னாசி மகன் ஜோசப் (79). கடற்கரைக்கே உரித்தான வட்டார வழக்கினை தவிர்த்து அவர் பேசினது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சுமார் எண்பது வயதை எட்டுகின்ற அவர், எனக்கு ஒமல் செய்து தருகிறேன் என வாக்குறுதி கொடுத்தார்.  அவரது உடல், மற்றும் வயோதிபம் போன்ற பல காரணங்களால் அந்த பழைமையான பொருளை மீட்டெடுப்பது அவ்வளவு எளிதாக கைக்கூடவில்லை.  நான் அவரை மீண்டும் மீண்டும் சென்று பார்க்கவும் உற்சாகப்படுத்தவும் வேண்டியிருந்தது. அவர் அதனைத் துவங்கும்போது அவருடனிருந்தேன். இரண்டு ஈர்க்கில்களின் மத்தியில் ஒரு ஓலை செல்லும். ஈர்க்கில் அந்த ஓலையினை பின்னிச்செல்வதினூடாக வலிமையான ஒரு பொருளாக அதனை மாற்றும்.  அவர் அதனை முடிக்கும் வேளையில் நான் மும்பை வந்துவிட்டேன். எனது நண்பர்களே அதனை வாங்கி சென்னை எடுத்துச் சென்றனர்.  எப்படியிருந்தாலும், அதன் வடிவம் சற்றே ராமநாதபுரத்தை ஒட்டிய ஒருவடிவமாகவே காணப்பட்டது ஆனால் ராமநாதபுரத்தை விட மிகப் பெரிதாக இருந்தது.

முட்டம் இன்னாசி மகன் ஜோசப் அவர்கள் செய்த அழகிய ஒமல்

வேம்பார் பகுதிகளிலும் கூட பறி பயன்பாட்டில் இருப்பதாக ஆசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன் அவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் அதனை செய்பவர்களையோ அல்லது அதன் ஒரு மாதிரியோ ஏன் ஒரு புகைப்படமோக்கூட எங்களுக்கு கிடைக்கவேயில்லை. என்னைப்பொறுத்தவரையில் தென் தமிழக கடற்கரை பகுதிக்கும், வட தமிழக கடற்கரைப் பகுதிக்கும் ஒரு பெருத்த வித்தியாசம் இருக்கிறது. பின்னல்களில் அந்த வேறுபாடு சிறப்பாகவே தென்படுகின்றன. ஒருவேளை கன்னியாகுமரியிலிருந்து கிழக்கு கடற்கரை வழியாக நேராக பழவேற்காடு வரைக்கும் பயணித்தால், கண்டிப்பாக விதம் விதமான மீன்பிடி பொருட்களை நம்மால் சேகரிக்க இயலும். இப்பயணத்தினை கொல்கத்தா வரை விரித்தால், கேட்கவே வேண்டாம். இவ்விதமான பண்பாட்டு கண்ணிகளைப் பிடித்து பயணிப்பது ஆச்சரியங்கள் பலவற்றை நமக்கு வெளிப்படுத்தும். இன்று அந்த அறிவு பெருமளவில் மங்கிப்போய்விட்டது என்பது தான் உண்மை.

கடற்கரைப் பகுதிகளில் தனித்துவமான பனை ஓலைப் பொருட்கள் புழக்கத்தில் இருப்பது எனது பயணத்தின் மூலமாக உறுதிப்பட்டன.   பனை சார்ந்து வாழும் கரையோர மக்களின் பயன்பாட்டு பொருட்களுக்கும் கடற்கரை மக்களின் பொருட்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை இவைகள் உணர்த்துவதுமாகவே இருக்கின்றன. நெய்தல் நிலத்தில் பனை மரங்கள் இருப்பது மட்டுமல்ல நெய்தல் நில வாழ்வில் பனை சார்ந்த பொருட்கள் செய்யும் தனித்துவ அறிவு ஊடுருவியிருப்பதை இவை தெளிவுபடுத்துகின்றன.  ஆகவே பனை மரங்கள் சார்ந்த வாழ்வியல் என்பது கரைப்பகுதியில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல கடற்கரை மக்களுக்கும் நெருங்கிய தொடர்புடையதாகவே இருக்கிறது. அவைகளின் வித்தியாசம், இருவேறு பண்பாட்டை சுட்டிக்காட்டும் பின்னல்களைக் கொண்டிருக்கின்றன.

எங்கள் அழைப்பை எடுத்த சுமன், உடனே வருவதாக கூறினார். அவருக்காக  நாங்கள் பாலத்திற்கு அருகில் காத்து நிற்கையில்,  ஒயர் கூடையில் மிகச்சிறிய பனை ஓலைக்குருத்தினை எடுத்துச்செல்லும் ஒரு மனிதரைப் பார்த்தேன். அருகில் அவரது மனைவி என்று சொல்லத்தக்க ஒரு பெண்மணி. சிறிய ஒயர்கூடையில் அவர்களது உணவு மற்றும் பொருட்களை வைத்திருப்பார்கள் போலும். பொருட்களால் நிரம்பியிருந்த அந்த கூடைக்கு மேல், அப்போதுதான் பறித்த சிறிய வடலி குருத்து தீட்டிய குறுவாளென பளபளப்புடன் காணப்பட்டது. அதிலும் அவர்கள் அந்த குருத்தினை கத்தி வைத்து வெட்டி எடுத்தது போல தோன்றவில்லை. ஏதோ கூர்மையான கல்லைக்கொண்டு வெட்டி எடுத்தது போல அதன் மட்டை சதைந்து இருந்தது.  மிஞ்சிப்போனால் ஒரு முளம் நீளம் மட்டுமே வரும் அந்த குருத்தினை அவர்கள் ஒரு பொக்கிஷமென எடுத்துச் செல்லுவது என்னை பலவாறாக சிந்திக்க வைத்தது. அந்த மனிதரின் கரத்தில் பனை ஓலையாலான பறி இருந்தது. சேவியர்  என்னிடம் கூறியது அப்போது தான் என நினைவிற்கு வந்தது. பழவேற்காடு பகுதிகளில் ஏனாதிகள் என்னும் பழங்குடியினர் தான் இறால் பிடிப்பார்கள். தங்கள் கரங்களை பயன்படுத்தியே இறால்  பிடிக்கும்  அவர்கள் தாங்கள் பிடித்த இறால் மீன்களை பனை ஓலை பறியில் தான் எடுத்துச் செல்லுவார்கள் எனவும் கூறியிருந்தது நினைவிற்கு வந்தது. எனக்கு ஒவ்வொன்றாக விளங்கத் துவங்கியது.எனது பழவேற்காடு பயணத்தையே இதற்காகத்தான் ஒருக்கியிருந்தேன். ஆகவே அவர்களை நிறுத்தி  பேச்சுக்கொடுக்கத் துவங்கினேன். அவர்கள் இறால் பிடித்துக்கொண்டு செல்லுவதாகவும் நேரம் ஆகிவிட்டது எனவும் கூறி அகன்றுவிட்டார்கள்.

பழங்குடியினரின் வடிவங்கள் என்பவை தொல் பழங்காலத்தைச் சார்ந்தவை.  அதுவும் குறிப்பாக ஏனாதிகளின் கரத்தில் இருக்கும் இந்த பறி  பல முக்கிய அறிதல்களை உள்ளடக்கியிருக்கிறது என கண்டுகொண்டேன். பொதுவாக பழங்குடியினரைப் பார்த்தவுடன் எப்படி வில்லும் அம்பும் அவர்களது தொன்மையை பறை சாற்றுமோ,  அது போன்ற ஒரு காட்சிதான் ஏனாதிகள் கரத்தில் இருக்கும் இந்த பறி. இதனை சிறப்பான ஒன்றாக நான் கருதியதற்கு காரணம் என்னவென்றால், அந்த வடிவமைப்பில் உள்ள பழைமை தான். நவீன காலத்தில் பனை ஓலைப் பொருட்களைச் செய்பவர்கள்,  அனைவருமே, ஓலையின் அடிப்பாகத்தையும்  அதன்  நுனி பகுதியையும் வெட்டிவிட்டே பொருட்களைச் செய்ய ஆரம்பிப்பார்கள். இவர்களைப் பொறுத்த அளவில், ஓலைகள் அதன் அடி முதல் நுனி வரை அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, ஈர்க்கில் மட்டுமே ஓலையிலிருந்து கைகளாலேயே பிய்த்து நீக்கப்பட்டிருக்கிறது. பிற இடங்களில் ஓலைகளை வகிர்ந்து எடுப்பது போல் ஓலைகளை வகிரவில்லை. இத்தனை  ஏன் இவ்வோலைகளின் வயிற்றுப்பகுதி கூட சீர்செய்யப்படவில்லை. ஆகவே தான் பறியின் வயிறு பெரிதாகவும் அதன் கழுத்துப்பகுதி மிக சிறிதாகவும் இருக்கிறது. இந்த அறிதல் என்னை துள்ளிக்குதிக்க வைத்துவிட்டது. பழங்குடியினரான இவர்களது வாழ்வில் இருக்கும் பொருட்கள் தமிழக அளவில் மட்டுமல்ல உலக அளவிலேயே மிக முக்கியமான தொல்லியல் சான்று என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

பழவேற்காடு வரும் வரையிலும், என்னால் இவ்வடிவத்தின் பின்னால் இருக்கும் ஒரு பிரம்மாண்டத்தை உணர்ந்துகொள்ள முடியவில்லை என்பது தான் உண்மை. கற்கால வாழ்வில் எப்படி கல் ஆயுதங்களையும் கைகளையும் மட்டுமே கருவிகள் செய்யவும் வேட்டையாடவும் பயன்படுத்தினார்களோ அதே முறைமையினை இன்றும் ஏனாதிகள் கைகொள்ளுவது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் மீன்களையும் இறாலையும்  கைகளைக் கொண்டே பிடிப்பார்கள் என சொல்ல கேட்டிருக்கிறேன். இப்போது அவர்கள் செய்யும் பறியும் கூட எவ்வித கருவிகளும் இன்றி கைகளைக் கொண்டு மாத்திரம் செய்யப்படும் ஒன்று என்பதை அறியும்போது பழவேற்காடு வந்ததன் பயனை அடைந்துவிட்டேன் என என் மனம் கூவியது. பழவேற்காடு என்பது ஏனாதிகள் எனும் தொல்குடிகளின் வாழும்  நிலப்பரப்பு. பல்வேறு மாற்றங்களை கண்டிருந்தாலும், அவர்கள் தங்கள் தனித்துவத்துடன் நமக்கு முன் முழு வீச்சுடன் எழுந்து நிற்கிறார்கள்.

அவர்களின் கைகள் அவர்கள் ஆன்மாவுடன் இணைந்திருக்கின்றன. அவர்கள் ஆன்மா அந்த நிலப்பரப்பை ஒரு புனித தலமாகவே கருதுகிறது என் நினைத்துக்கொண்டேன். இவ்வித ஒரு நிலப்பகுதியில் எனது பயணம் அமைந்தது ஒரு புண்ணிய யாத்திரைக்கு ஒப்பானது. அவ்வகையில் இது எனது புனித பயணம். நான் நிற்பது புண்ணிய பூமி. பறி என்னை உயிருடன் உள்ளிழுத்துக்கொண்டது.

பனைமுறைக் காலம் 8

பிப்ரவரி 19, 2021

பறவைகள் பனைவிதம்

2017 ஆம் ஆண்டு, பனையேற்றம் என்ற குழுவினை இளவேனில்  மற்றும் சாமிநாதன் எனும் இளைஞர்கள் துவங்கியிருந்தனர். பனையேற்றம் என்ற பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பனையேற்றம் என்பது ஒரு முழுமையை சுட்டி நிற்கும் சொல். பனை பெரும்பாலும் தனித்து நிற்கும் ஒன்றைக் குறிப்பதாகவே நான் காண்கிறேன்.  பனை சார்ந்து தமிழகத்தில் ஒரு விழிப்புணர்வு அரும்பியிருந்த காலம் அது.  பனையேற்றம் குழுவினரைச் சார்ந்த இளவேனில், செம்மை நிகழ்த்தும் பனை கூடல் என்ற  நிகழ்ச்சிக்கு என்னை அழைத்திருந்தார். செம்மை அமைப்பும், செம்மையினை வழி நடத்தும் செந்தமிழன் அவர்களும் எனக்கு அப்போது தான் அறிமுகம். நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் உள்ள ஒரு பனங்காட்டில்  வைத்து நடைபெற்றது. அனைவருக்குமான உணவினை அங்கு வந்தவர்களே இணைந்து பொங்கினார்கள். அனைத்து செலவுகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. அன்று மதியம் செந்தமிழன் பேசினார். பனை குறித்து அதிகம் பேசவில்லை என்றாலும் இயற்கையான ஒரு மரத்தினை சார்ந்து வாழ்வது எவ்வகையில் நமக்கு உகந்தது என அவருக்கே உரிய பாணியில் பேசினார். தமிழர்களது வாழ்வில் இனிப்பு என்பது கருமையோடு தொடர்புடையது என்பதை, தேன், வெல்லம், கரும்பு, கருப்பட்டி என அவர் வரிசைப்படுத்தி கூறியது, வெள்ளைச் சர்க்கரைக்கு எதிரான மண் சார்ந்த குரல் என்றே பார்க்கிறேன்.

பாண்டிச்சேரி கோபினாத் முனிசாமி எடுத்த புகைப்படம்

இரவு ஒரு அமர்வு எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. பனை குறித்து விரிவாக நான் அறிந்தவற்றைக் குறித்து பேசினேன். திருச்சபைக்குள் இருந்து நான் எழுப்புகின்ற கேள்விகளுள், தனியனாக நான் எழுப்பும் கூக்குரலையும், எனது எளிய பங்களிப்புகளையும் குறித்து விவரித்தேன். “ஈராயிரம் ஆண்டுகளாக குருத்தோலைப் பண்டிகையினை கொண்டாடும் திருச்சபை ஏன் ஒரு பனை மரத்தைக்  கூட நடவில்லை”? என திருச்சபை நோக்கி நான் எழுப்பிய கேள்வியினை பகிர்ந்தபோது அனைவரும் நிமிர்ந்து என்னைப் பார்த்தனர். அக்கூடுகையில் கிறிஸ்தவரல்லாதோர் பெருவாரியாக இருந்தாலும், நான் என்ன கூற வருகிறேன் என மக்கள் புரிந்துகொண்டார்கள். ஆனால் எவருமே என்னிடம் கேள்வி எழுப்பவில்லை. அதற்கு காரணம் பனை குறித்த எந்த அறிமுகமும் அவர்களுக்கு இல்லை. இந்த நிகழ்ச்சியின் மூலமாக தான் பனை குறித்து அறிந்துகொள்ள வந்தோம் என அனைவரும் ஒத்துக்கொண்டனர். இது ஒரு முக்கியமான புரிதலை எனக்கு ஏற்படுத்க்டியது. பனை சார்ந்து வாழும் தென் மாவட்டட்தைச் சார்ந்டவர்களுக்கு பனை குறித்து ஒரு விலக்கமும், பனை குறித்த புரிதலற்ற சமூகம் பனை நோக்கி ஆர்வத்துடன் வருகின்ற காட்சி வெளிப்பட்டது. அன்று வந்திருந்தவர்களில் அனேகர் எனது தொடர்பு எண்ணை எடுத்துக்கொண்டார்கள். அன்று இரவு அங்கே  தங்குவதற்கு பள்ளிகூடம் ஒன்று இருந்தாலும், பெண்கள் உட்பட அனைவருமே வெளியே கிடந்த கடல் மணலில் தான் உறங்கினோம். எனது பயணங்களில் மிகவும் வித்தியாசமான அனுபவமாக இது அமைந்தது. இப்படி கட்டற்று தேடல் ததும்பி வழியும்  ஒரு குழுவினரை என் வாழ்வில் நான் சந்தித்ததே இல்லை. 

பனம்பழம் சாப்பிடும் குரங்கு

இங்கு வைத்து தான் கல்யாண் குமார் அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் சென்னையை அடுத்த திருவள்ளூரில் பனை சார்ந்த பயிற்சி ஒன்றை ஒழுங்குசெய்தார்.சுமார் 10 நபர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சிக்கு இரு திருநங்கைகள் வந்திருந்தார்கள். நான் மிகவும் மதிக்கும் ஐயா கலையரசன் அவர்களை அந்த நிகழ்விலே தான் சந்தித்தேன்.  கல்யாண் குமார், சென்னை வந்தால் என்னை பார்க்காமல் செல்லக்கூடாது என அன்புகட்டளை இட்டிருந்தார், ஆகவே, பெரும்பாலும் சென்னை செல்லும்போதெல்லாம் அவரைப் பார்த்துவிடுவேன். நான் சென்றால் தனது வங்கி வேலையைக் கூட கல்யாண் ஒதுக்கிவைத்துவிட்டு என்னுடன் பயணிப்பார். அவர் என்மீது கொண்ட அன்பு ஆழமானது. திருமாவளவன் அவர்கள் தனது பிறந்தநாளை ஒட்டி, பனை விதைகளை சேகரிக்க துவங்குகையில், எனக்கு பதிலாக கல்யாண் அவர்களை தான் நான் உதவிக்கு அனுப்பினேன். இப்போதும் சென்னை செல்ல ஆயத்தமாகும்போது கல்யாண் தான் நினைவுக்கு வந்தார்.

பனம்பழம் சாப்பிடும் ஆடுகள்

கல்யாண் தனது வேலைகளுக்கு மத்தியில், எனக்காக நேரத்தை ஒதுக்கினார். விடுப்பு எடுத்து எனக்காக காத்திருந்தார். தாம்பரத்தில் இறங்கி, அவரது வீடு இருக்கும் நிமிலிச்சேரி பகுதிக்கு பேருந்தில் சென்று இறங்கினேன். அவர் பேருந்து நிலையத்திற்கு வந்து என்னை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அவரது அப்பாவும் அம்மாவும் வீட்டிலிருந்தார்கள். மனைவி அருகிலிருக்கும் அவரது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார்.  அவரது வீட்டில் குளித்து சுட சுட தோசை சாப்பிட்டுவிட்டு பழவேற்காடு நோக்கி கிளம்பினோம். பொது முடக்கம், அனைவரையும் சற்று அதிகமாகவே சீண்டிப்பார்த்திருக்கிறது. கல்யாண் தனது வீட்டை சமீபத்தில் தான் கட்டியிருந்தார். ஆகவே வருமானம் கிடைக்கும்படியாக ஏதேனும் ஒரு தொழிலினை மேற்கொண்டால் மட்டுமே சமாளிக்க முடியும் என்ற நிலை.  மீன் கடை வைக்கும் எண்ணம் தனக்கிருப்பதாகவும், பழவேற்காடு சென்றால், மீன்களை வாங்கும் வாய்ப்புகள் குறித்து அறிந்துகொள்ளலாம் என்று கூறியபடி வந்தார்.

பனை ஓலையில் தும்பி

அவரது வீட்டின் அருகில் உள்ள ஒரு  ஈச்சமரத்தில் சில தூக்கணாங் குருவி கூடுகள்  இருப்பதைப் பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டேன். சற்று தூரத்தில் வேறொரு பனை மரத்தில்  தூக்கணாங் குருவிக்கூடுகளைப் பார்த்தேன். நாங்கள் செல்லும் வழியில் கூட பனை மரங்களில் பல இடங்களில் தூக்கணாங் குருவிக்கூடுகளைப் பெரும்பாலும் பார்க்க முடிந்தது. வெகு ஆச்சரியமாக அன்று  ஒரு தென்னை மரத்திலும் தூக்கணாங் குருவிக் கூடுகளைப் பார்த்தேன். எனது நண்பனும் பறவைகளை மிக அதிகமாக நேசிக்கும் பாண்டிச்சேரி ராம், என்னிடம் அடிக்கடி சொல்லுவான் “தூக்கணாங் குருவி வேறே எங்கண்ணே இருக்கும்? பனை மரத்திலே தானே அண்ணே கூடு கட்டும்”. அவனது கூற்று முற்றிலும் உண்மையானது. பனை மரங்களே அவைகளின் விருப்பத்திற்குரிய வாழிடம். அப்படி பனை மரங்கள் இல்லாதிருந்தால் அவைகள் வேறு மரங்களையோ புதர் செடிகளையோ வேறு இடங்களையோ தெரிவு செய்துகொள்ளும். வயல் வெளிகள், மற்றும் சதுப்பு நிலங்களிலோ அல்லது நீர் இருக்கும் கிணறுகள் அருகிலோ,  ஒற்றையாக நிற்கும் மரங்களை தெரிவு செய்து தங்கள் கூடுகளை தூக்கணாங் குருவிகள் அமைப்பதை பார்த்திருக்கிறேன்.

வடலி பனையில் கரிச்சான் குருவி

2017 ஆம் ஆண்டு மும்பை மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் எடுக்கப்பட்ட துக்கணாங் குருவி கணக்கெடுப்புகளில், இந்திய அளவில் தூக்கணாங் குருவிகள் குறைந்து வருகின்றன என பாம்பே இயற்கை வரலாற்று சங்கம் (BNHS) பதிவு செய்கிறார்கள். இப்பதிவில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நாம் எந்த முடிவிற்கும் வரவியலாது ஏனென்றால், இது ஒரு முழுமையான ஆய்வு அல்ல, ஆய்வின் துவக்கம் மட்டுமே. ஆனால், அவர்கள் வெளிப்படுத்தும் சந்தேகம் உண்மையானது. அந்க்ட சந்தேகம் எனக்குளூம் அப்படியே இருக்கிறது. இன்று BNHS பறவை ஆர்வலர்களையும், பறவையியலாளர்களையும், சூழியல் செயல்பாட்டாளர்களையும், காட்டிலாகாவினரையும் துக்கணாங் குருவி கணக்கெடுப்பு செய்ய ஊக்கப்படுத்துகிறார்கள். அப்படியானால், பறவைகளின் எண்ணிக்கையில் ஒரு மாபெரும் வீழ்ச்சி புலப்பட்டிருக்கிறது என்பது தான் உண்மை. ஒருவேளை பனை மரங்களின் அழிவு தான் இப்பறவைகளின் அழிவிற்கும் காரணமாக இருக்கிறதா? இயற்கை சங்கிலியில், பனை மரங்களை நாம் பெரும்பாலும் பொருட்டாக கருதுவதில்லை, ஆனால் அவைகளின் இருப்பு முக முக்கியமானது என எனது உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஒருவேளை வேறு பல காரணிகளும் தூக்கணாங்குரிவியின் அழிவிற்கு காரனமாக இருக்கலாம். அவைகள் என்ன என்பது தேடிக்கண்டடயவேண்டியவைகள். இப்பேரழிவிற்கு காரணங்கள் என்ன என்பதை விகிதாச்சார அடிப்படையில் நாம் ஆராயவேண்டும்.

பனை மரத்தில் தூக்கணாங் குருவிக்கூடுகள்

குமரி மாவட்டத்திலும் நான் பெருமளவு இவைகளை நான் கண்டது இல்லை. ஒரு முறை வெள்ளிமலை பகுதியிலிருந்து கூட்டுமங்கலம் செல்லும் வயல்வெளி குறுக்குப்பாதையில், காணப்பட்ட ஒரு பனை மரக்த்தில் சில தூக்கணாங்க் குருவிக்கூடுகளைப் பார்த்தேன். குமரி மாவட்டத்தில் வேறு  எங்குமே பனை மரத்தில் தூக்கணாங் குருவிக்கூடுகளை நான் காண இயலவில்லை. ஒருவேளை நாகர்கோவிலுக்கு கிழக்குப் பகுதிகளில் அவைகள் காணப்படலாம். நான் தற்போது வாழும் ஆரே பகுதிகளில் வந்த துவக்கத்தில் ஒரு பனை மரத்தில் தூக்கணாங் குருவிகளின் கூடுகள் இருந்ததைப் பார்த்தேன். பின்னர் அவைகளை என்னால் காண முடியவில்லை. பனை மரங்கள் இங்கு வெகுவாக குறைந்துவிட்டது ஒருபுறம், மற்றொருபுரம், இங்கு இருக்கும் ஆதிவாசிகளின் வாழ்வு நகரமயமாக்கலில் பெருமளவில் மாறிவருகிறது. குறிப்பாக, வயல்வெளிகள் இங்கு அருகிவருவதும் ஒரு காரணம். ஒருவேளை, ஆதிவாசிகள் கூட பயிர்களைக் காக்கும்படியாக சில பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது இப்பறவைகளுக்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம்.  ஆனால் ஆரே காலனி அலகு எண் 7ல் இருக்கும் எங்கள் ஆலயத்திற்கு எதிர்புறம் உள்ள புல்வெளி நடுவில் இருக்கும் ஒரு அரச மரத்தில், ஒரு சில கூடுகளைப் கடந்த மாரி காலத்தில் பார்த்தேன். இப்போது அவைகள் இல்லை. அந்த அரச மரத்தை பருந்துகள் ஆக்கிரமித்துவிட்டன. தூக்கணாங் குருவிகள் எங்கே சென்றுவிட்டன என தேடிக்கொண்டே இருக்கிறேன். மகராஷ்டிராவின் பால்கர் பகுதிகளில் இன்னும் பனை மரங்களில் தூக்கணாங் குருவிக்கூடுகள் ஆங்காங்கே இருக்கின்றன. 

அரிவாள் மூக்கன்

2018 ஆம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தில் துக்கணாங் குருவிகள் கூடு குறித்த ஆய்வுகள் நடைபெற்றன. சுமார் 42 வகையான தாவரங்களில் தூக்கணாங் குருவிகள் தங்கள் கூடுகளை அமைப்பது இதன் மூலம் கண்டடையப்பட்டது. இவைகளில் 92 சதவிகித கூடுகள், பனை, தென்னை மற்றும் ஈச்சை மரங்களில் இருப்பதாக பதிவு செய்கிறார்கள். இந்த ஆய்வில் துணை நின்ற ஆய்வுக்கட்டுரையில் T A டேவிஸ் அவர்கள் மிக முக்கியமாக அடிக்கோடிடப்பட்டிருப்பது எனக்கு புதிய திறப்புகளைக் கொடுக்கிறதாக அமைந்தது. 1974 வாக்கிலேயே அவர் எழுதிய தூக்கணாங்குருவி குறித்த கட்டுரைகள், அவரது பனை சார்ந்த தேடுதலின் அங்கமாக இது இருந்திருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. T A டேவிஸ் அவர்கள் பனை சார்ந்து சர்வதேச கட்டுரைகள் எழுதிய மிகப்பெரிய ஆளுமை.

மானில மரத்தில் தேசிய பறவை

ஆரே காலனி வந்த பின்பு இங்குள்ள வார்லி பழங்குடியினருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டேன். அப்படியே பழங்குடியினருக்காக களப்பணியாற்றும் சில நண்பர்களின் அறிமுகமும் கிடைத்தது. ஒரு சிலருடன் நெருங்கி பழகும் வாய்ப்புகள் வாய்த்தன. இந்த நெருக்கம் வார்லி பழங்குடியினரின் வாழ்வில் பனை எப்படி இரண்டரக் கலந்திருக்கிறது என்பதற்கான தரவுகளை சேர்க்க உதவியது. வார்லி பழங்குடியினரின் ஓவியங்களில் பனை மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால், தூக்கணாங் குருவிகளைக் குறிப்பிடுமிடத்தில் அவைகள் பனையிலோ  ஈச்சமரத்திலோ அல்லது தென்னை மரத்திலோ  இருப்பதாகவே பதிவு செய்யப்படும். இது வெறுமனே போகிறபோக்கில் வரையப்படும் சாதாரண படங்களல்ல. பத்தாயிர வருட வார்லி பழங்குடி வாழ்வின் தொடர்ச்சி. அவர்கள் தொடர்ந்து இயற்கையை அணுகி அறிந்த உண்மையினை சொற்களாக்கும் முன்பு வரைந்து காட்டிய வாழ்கைச் சித்திரம்.

மரத் தவளை/ தேரை

தூக்கணாங் குருவிகளின் கூடுகள் புற்களாலும், நெற்பயிரின் இளம் தாள்களாலும் கட்டப்படுபவைகள். அவைகளின் வாழிடம் குறித்தும் ஆய்வுகள் வந்தவண்ணம் இருக்கின்றன. அவைகளின் உணவு பழக்கம் குறித்த தேடுதல் நமக்கு பலவிதமான உண்மைகளை வெளிப்படுத்த வல்லவை. சிறிய விதைகளை தூக்கணாங் குருவிகள் விரும்பி உண்ணும். அரிசி, கோதுமை, பார்லி போன்றவை அவைகளின் விருப்ப உணவு என்பதாக அறிகிறோம். வெட்டுக்கிளிகள், சிறு பூச்சிகள், வண்டுகள், கரையான் வண்ணத்துப்பூச்சிகள், கம்பளிப்பூச்சி போன்றவற்றையும் தூக்கணாங் குருவிகள் விரும்பி உண்ணுகின்றது. சில நேரங்களில் மலர்களில் உள்ள தேனையோ, பதனீரையோ, சிலந்தி, சிறு நத்தைகள் மற்றும் நெல் தவளை போன்றவற்றையும் உண்ணுகிறது. நெற்பயிரும் பனையும் இணைந்து நிற்கும் இடங்களில் இவைகள் கூடமைப்பது சதுப்பு நிலப்பகுதிகளை இவைகள் தேர்ந்தெடுக்கின்றன என்பதை உறுதிப்படுத்தும். ஆகவே, பனை மரங்கள் சதுப்பு நிலத்திலும் வளரும் தன்மைகொண்ட மரம் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகின்றது.

வார்லி பழங்குடியினரின் ஓவியம்: பனையில் தூக்கணாங் குருவிக்கூடு

பனைமரச் சாலை பயணம் தான் என்னை முதன் முறையாக பனை மரங்களுக்கும் பறவைகளுக்குமான தொடர்பை கண்டுணரும் வாய்ப்பை நல்கியது. அது மிகவும் எதேச்சையாக நிகழ்ந்த ஒன்று. ஆனால், அந்த திறப்பு எனக்கு பல்வேறு வகைகளில் பனை மீதான எனது முடிவுகளையே உறுதிப்படுத்திக்கொண்டு இருந்தன. குறிப்பாக நம் நாட்டு பறவைகளில் பெரும்பாலானவைகள் பனை மரத்தை கூடாகவோ, வேட்டைக்களமாகவோ அல்லது இளைப்பாறுமிடமாகவோ வைத்திருக்கின்றன. ஆனால் பனை மரத்திற்கும் நமது சூழியலுக்கும் உள்ள  தொடர்பு குறித்து இதுவரை குறிப்பிடத்தகுத்த ஒரு கட்டுரை கூட வெளிவந்தது இல்லை. இத்தனைக்கும் நம்மிடம், இயற்கை சார்ந்து பணியாற்றுகிறவர்கள் ஏராளம் உண்டு.

வார்லி பழங்குடியினரின் ஓவியம்: ஈச்சமரத்தில் தூக்கணாங் குருவிகளும் கூடும்

2017 ஆம் ஆண்டு  ஹைதிரபாத் பகுதியில் இருக்கும் ஹென்றி மார்டின் இன்ஸ்டிடியூட் (HMI) என்னை பனை சார்ந்த ஆவண படம் எடுக்க பணித்திருந்தார்கள். பறவைகளுக்கும் பனைக்கும் உள்ள தொடர்பினை அறிய வேண்டி நான் டாக்டர். ராபர்ட் கிரப் (Robert Grubb) அவர்களை சந்திக்கச் சென்றிருந்தேன்.

தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த பறவையியலாளரான அவரது மகன் எனது நெருங்கிய நண்பன். நாங்கள் கல்லூரியில் ஒன்றாக படித்தோம், கல்லூரி பாடகர் குழுவில் இணைந்து பாடினோம், ஒன்றாக சைக்கிள் ஓட்டினோம், தேசிய மாணவர் படையில் இணைந்திருந்தோம், மேலதிகமாக நாகர்கோவிலை அடுத்த கீழப்பெருவிளை என்ற ஒரே ஊரின் இரு வேறு பகுதிகளில் தங்கியிருந்தோம். கல்லூரி காலத்தில் அடிக்கடி சந்திப்போம். ஆகவே அவரிடம், சற்றே உரிமையுடன், பனை மரங்களில் இருக்கும் பறவைகள் குறித்து எனக்கு சில குறிப்புகளைக் கூற முடியுமா என்று நான் கேட்டபோது, அவர் யோசிக்காமலேயே, “அப்படி பனை மரத்தில் பெரிதாக ஒன்றும் இருக்கிறது மாதிரி தெரியவில்லையே” என்றார். எனக்கு அது மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. இன்றைக்கு இருக்கும் மூத்த சூழியலாளர்களுல் ஒருவர் அவர்.

கள் குடிக்க வந்திருக்கும் பச்சைக் கிளி

அவரிடம் இருந்து பெறும் ஒவ்வொரு வார்த்தைகளும் வரம் போன்றவைகள். அவர் திடுமென அப்படி சொல்வார் என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால் நானே பல பறவைகளை பனை மரத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் அதை அவரிடம் நான் நேரடியாக சொல்ல முடியாது. ஆகவே, அவர் தலைமுறையிலுள்ள  ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முதல்வரும் தாவரவியலாளருமான டாக்டர் ஷோபனராஜ் அவர்கள் பெயரைக் குறிப்பிட்டு, பனங்காடை என்று ஒன்று பனை மரத்தில் இருப்பதாக அவர் கூறினார் என்றேன். மேலும், பொன்னி குருவி என்கிற பாம் சுவிஃப்ட் (Palm Swift) என்ற பறவையின் பெயரையும் அவர் குறிப்பிட்டார் எனக் கூறினேன். அவர், என்னைக் கூர்ந்து பார்த்தார். நீ ஒரு முடிவோட தான் வந்திருக்கே என்பது அதன் அர்த்தம். ஒரு ஆழ்ந்த அமைதிக்குப் பின் என்னிடம், “நீ ஒரு நாலு நாளைக்கு அப்புறம் வாடே” என்றார். எனக்கு அது முதல் வெற்றி.

Painted Stork

நான்கு நாட்களுக்குப் பின்பு, நான் அவரை சந்தித்தபோது அவர் என்னை வெகு உற்சாகமாக என்னை வரவேற்றார். முப்பதிற்கும் மேற்பட்ட பறவைகளைக் குறித்த ஒரு நீண்ட உரையாடலை நான் காணொளியாக பதிவு செய்ய அவர் உதவினார். அவரது விளக்கங்கள் அவ்வளவு தெளிவாகவும், எவரும் புரிந்து கொள்ளும் வகையிலும் விளக்கியபடி வந்க்டார். அன்று மட்டும் முப்பது பறவைகளின் பெயர்களைக் குறீப்பிட்டு அவைகளுக்கும் பனைக்கும் உள்ள தொடர்புகளை விளக்கிகூறினார். இன்று தமிழகத்தில்  இருக்கும் பறவைகளில் சரிபாதி ஏதொ ஒரு வகையில் பனையோடு தொடர்புடையதாக இருக்கவேண்டும் என நான் எண்ணுகிறேன். பறவைகளின் வாழிடம், உணவு மற்றும் அவைகளின் வேட்டைக்களம் போன்றவைகள் பறவையியலாளர்களால் மிக அதிகளவில் பேசப்பட்ட பேசுபொருள் தான். ஆனால் பனை மரங்கள் ஏன் தவிர்க்கப்பட்டன? ஏனென்றால், பனை மரத்தின் உயரம், எங்கும் காணப்படும் அந்த மரங்கள் மீதான சலிப்பு, காடுகளுக்குள் இருக்கும் பறவைகள் மீதான மோகம் என, நாம் அன்றாடும் காணும் பறவைகளுக்கும், பனைக்கும் உள்ள உறவுகளை இணைத்துப் பார்க்க இயலாதபடி நமது கண்களை முடிவிட்டன.

பனை மரத்தில் வாழும் சிறிய வகை பாலூட்டி

அழகிய நீல நிற சிறகுகள் கொண்ட பறவையினை புளூ ஜே (Blue jay) என்றும் இன்டியன் ரோலர் (Indian Roller) என்றும் அழைப்பார்கள். பெரும்பாலும் பனங்காடுகள் நிறைந்த பகுதிகளில் தான் இவைகள் வாழும். அப்படியே, பனை சார்ந்த பகுதிகளில் இவைகள் பெருமளவில் காணப்படும் என்றார். பொதுவாக நாம் காணும் காடைகளுக்கும் இவைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், பனங் காடை என்ற பெயர், உள்ளூர் மக்களால் வழங்கப்பட்டிருக்கும். அதன் பின்னணியம் பனை சார்ந்து வாழும் இப்பறவைகளினை அறிந்துணர்ந்த நமது முன்னோரால் வழங்கப்பட்டிருக்கும் என்பது உறுதி. இதே பறவையினை நான் மும்பை ஆரே காலணியிலும், பால்கர் பகுதிகளிலும், ஒரிசா சென்றிருந்தபோதும் பார்க்க முடிந்தது. பனை மர பொந்துகளில் இவைகள் இருப்பதை நான் பலமுறைப் பார்த்திருக்கிறேன்.  இப்பறவைகளை நான் எங்கேனும் பார்த்தால் அனிச்சையாக என் கண்கள் பனை மரங்களைத் தேடும். கண்டிப்பாக அப்பகுதிகளில் பனை மரங்களை நான் பார்த்துவிடுவேன். பனையின்றி பனங்காடைகள் கிடையாது எனும் அளவிற்கு அவைகள் பனையோடு இணைந்தே வாழுகின்றன.

பனைஓலையில் தேன்கூடு

பாம் ஸ்விஃப்ட் என்ற பறவைக் குறித்து டாக்டர் கிரப் அவர்கள் விவரித்தது, பனை சார்ந்த புரிதல் கொண்ட ஒருவருக்கே உரித்தானது. மேலும் அவரின் விவரணைகள் பறவையியலாளர்களின் தனித்துவ பார்வைகளையும் கொண்டது. “பாம் ஸ்விஃப்ட் என்பதை பொன்னி குருவி என்று தமிழில் அழைப்பார்கள்” என்றார். மேலும் “குமரி மாவட்டத்தில் மூக்கோலைக் குருவி என்றும் அழைப்பார்கள்”. மூக்கோலை என்றால் என்ன? பனை ஓலைகள் பார்ப்பதற்கு விரிந்திருப்பது போல தெரிந்தாலும், அவைகளில் மூன்று மேடு பள்ளங்கள் இருக்கும். அதிலும் மட்டை வந்து சேருமிடம் மூக்கைப்போல் மேலெழும்பி இருக்கும். இதன் நடுவில் தாம் இக்குருவி வாழும் ஆகவே இதனை மூக்கோலைக் குருவி என்றும் அழைப்பார்கள். பொன்னி என்கிற வார்த்தை கூட மூக்கோலையின் பகுதியை சுட்டுவதாகவே அமைகிறது. அப்படியானால் பொன்னி என்கிற பெண்பாற் பெயர், பனையிலிருந்து கிடைத்தது மாத்திரம் அல்ல, தன்னை நாடி வருவோருக்கும் அடைக்கலம் அளிக்கும் ஆழ்ந்த பொருள் உள்ள ஒன்றாக வெளிப்படுத்துகிறது. பொன்னி குருவிகளை, நான் பனை இருக்கும் பகுதிகளில் எல்லாம் பார்த்து வருகிறேன். அவைகள் பறந்துகொண்டே உணவை தேடிக்கொள்ளும் எனவும், அவைகள் பெரும்பாலும் காற்றினை பயன்படுத்தி பட்டம் போல் பறக்கும் எனவும் அவர் குற்ப்பிட்டார். மேலும், அவைகள் தமது கூடுகளில் தங்குவதை விட, வெளியே பறந்துகொண்டிருப்பதையே விரும்பும் என்றார்.

புல்புல் தனது கூட்டினை பனை ஓலையில் அமைத்திருக்கிறது

தூக்கணாங் குருவி தமது கூடுகளை பனையில் அமைப்பது, எதிரிகளிடமிருந்தும் இயற்கை சீற்றங்களிலிருந்தும்  தனது குஞ்சுகளையும் முட்டையினையும் காப்பதற்காக என்று அவர் சொன்னது மிகவும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. ஆண் தூக்கணாங் குருவி கட்டும் இக்கூடுகலை பெண் குருவ் வந்க்டு பார்த்து  ஆராய்ந்து ஒப்புதல் அளித்தாலே அவைகள் தங்கள் புது வாழ்க்கையை துவங்க முடியும். ஆகவே சில வேளைகளில் முற்றுப்பெறாத கூடுகளும் மரங்களில் தென்படும்.  தூக்கணாங் குருவிக் கூடுகள் இருக்குமிடத்தினை பாம்புகள் எட்டுவது என்பது வெகு சவாலான விஷயம் என்றே அவர் கூறுகிறார். ஏனென்றால், பனை ஓலைகளின் நுனியிலேயே அவைகள் தமது கூடுகளைக் கட்டும். அதையும் மீறி பாம்புகள் இக்கூடுகளுக்குள் நுழைந்து முட்டைகளை எடுப்பதும், குஞ்சுகளைச் சாப்பிடுவது கூட நிகழ்த்திருப்பதை பாண்டிச்சேரி ராம் கூறினான். உணவிற்கான தேடுதலில், உயிரை பணயம் வைப்பது  இயற்கை நியதி தானே? ராபர்ட் கிரப் அவர்கள், வயல் வெளிகளில் இவைகள் கூடு கட்டும்போது  பயிர்களுக்குத் தீமை செய்யும் பூச்சிகளை சாப்பிடுவதால் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கிறது எனக் கூறினார்.  இப்பறவைகள் தங்கள்,  இனப்பெருக்க காலத்தில் இன்னும் அதிகமாக பூச்சிகளை வேட்டையாடும். ஆகவே தூக்கணாங் குருவிகள் விவசாயிகளின் நண்பன் தான் என்றார்.

பனையிலிருந்து இறங்கிவரும் பாம்பு

அனைத்தையும் விவரித்து முடியும் தருவாயில், டாக்டர். கிரப் அவர்களுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்ததை நான் நேரிலேயே பார்த்தேன். அவர் அதுவரை தனது கவனத்தைச் செலுத்தாத ஒரு மரத்தின் மீது அவருக்கு ஏற்படும் பிடிப்பு தான் அது. அன்று இறுதியாக அவர் இப்படி சொன்னார், “பனை மரம் சார்ந்து வாழும் பறவைகளை வைத்து பார்க்கையில், பனை மரமே ஒரு சரணாலயம் தான்”. நான் அதைக்கேட்டபொழுது அப்படியே நெஞ்சுருகிப்போனேன். எதற்கென அவரைத் தேடி வந்தேனோ அது கச்சிதமாக நிகழ்ந்த பொற்தருணம் என்றே அதைக் கருதுவேன். ஒரு பறவையியலாளராக அவர் பல சரணலயங்களைப் பார்த்திருப்பார், பல்வேறு சர்வதேச கருத்தரங்குகளில் அவ்வித சரணாலயங்களை குறித்து பதிவு செய்துமிருப்பார். ஆனால், அவரது வாழ்க்கையில் முதன் முறையாக பனை மரத்தை ஒரு சரணாலையம் என்று சொல்லுகின்ற தருணத்திற்கு அவர் வந்தது அவருக்கே வியப்பளித்திருக்கும். அந்த வார்த்தை அவர் இதயத்திலிருந்து எழுந்த ஒன்று என்பது மறுக்கவியலா உண்மை. அவரும் ஒரு பரவச நிலையிலேயே இருந்தார்.

2017 – 19 வரையிலும் இரண்டு வருடங்கள், நான் தமிழகம் முழுவதும் பனை மரத்தினை குறிவைத்து அலைந்து திரிந்தேன். நேரடியாக பல்வேறு பறவைகளும், விலங்குகளும், உயிரிகளும் பனையுடன் இணைந்திருப்பதைப் பதிவு செய்திருக்கிறேன். நினைக்கவியலா ஒரு பெரும் தொகுப்பு அது. இம்மண்ணில், பனைச் சூழியல் குறித்து தேடும் ஒரு தலைமுறை எழும்புமென்றால் , பனை மரம் எத்துணை முக்கியமானது என்பது நமக்கு தெரியவரும்.

பனையோலைக்குள் குளவிக்கூடுகள்

பொதுவாகவே பனையுடன் இணைந்து வாழ்பவர்களுக்கு பனையுடன் இருக்கும் பல்வேறு உயிரினங்கள் குறித்த புரிதல் தானாகவே இருக்கும். எளிமையாக சொல்லவேண்டுமென்றால், பனைமரத்தடியில் சென்று பதனீர் வாங்குபவர்களோ அல்லது கள் அருந்த செல்லுபவர்களோ அந்த பானங்களில் விழுந்து கிடக்கும் எண்ணிறந்த பூச்சிகள் குறித்த புரிதல் கொண்டவர்களாகவே இருப்பார்கள். தேனீக்கள், பல்வேறு ஈக்கள், வண்டுகள், கொசுக்கள், வண்ணத்து பூச்சிகள், அந்துப்பூச்சிகள், தும்பி, எட்டுக்கால் பூச்சிகள், எறும்புகள், குளவிகள் கடந்தைகள், தேள் என பூச்சியியலாளர்கள் ஆய்வு செய்ய வேண்டிய திறந்தவெளி பல்கலைக்கழகம் பனை. பல்லிகள், ஓணான், பச்சோந்தி, அரணை, உடும்பு, பல்வேறுவகை பாம்புகள் என ஊர்வன பட்டியல் தனியாக இருக்கும். மிகச்சிறிய பாலூட்டியான எலி முதல், பழவுண்ணி எனப்படும் மரநாய், குரங்கு, தேவாங்கு, கரடி மற்றும் பனம் பழங்களை விரும்பி உண்ணும் மான்கள், நரி, காட்டு மாடுகள், பன்றிகள் மற்றும்  வீட்டு விலங்குகளான நாய், ஆடு, மாடு போன்றவைகளுடன் மிகப்பெரிய உயிரியான யானையையும் குறிப்பிட வேண்டும். பறவைகளில், தேன் குடிக்கும் மிகச்சிறிய பறவைகளிலிருந்து பூச்சிகளைப் பிடிக்கும் பறவைகளும், காகம், கிளி, மைனா, ஆந்தை, என உருவங்கள் பெரிதாகி, வைரி, ராஜாளி, அரிவாள் மூக்கன், பருந்து மற்றும் மிகப்பெரிய மயில் மற்றும் கழுகுகள் வரை பனை மரங்களில் வந்தமரும். பலவேறு நிலப்பரப்புகளில் பனை மரத்தில் வாழும் நத்தைகளையும், ஒருசிலவிடங்களில் மரத்தவளைகளையும் நேரடியாக பார்த்திருக்கிறேன். ஏன், பனயேறிக்கெண்டை என்ற மீனே பனை ஏறுகிற ஒன்றாக இருக்கிறது. இந்த பிரம்மாண்ட சங்கிலியைத் தான் நாம் எவ்வித அடிப்படை புரிதலுமின்றி தகர்த்தெறிந்துகொண்டிருக்கிறோம் என்பதை ஏனோ நாம் உணர்வதில்லை. பனையேறுகின்ற மனிதன் தான் இவைகள் அனைத்தையும் காப்பாற்றிவரும் சூழியலாலன்.  தெய்வத்திற்கு இணையாக வைக்கப்படவேண்டியவன்.

பனையேறி எனும் தன்னிகரற்ற சூழியலாளன்

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 7

பிப்ரவரி 12, 2021

புனித கால்கள்

மறுநாள் (09.10.2020) ஜெனோபின் ஷானுடைய பிறந்த நாள். கடந்த வருடம் குழந்தை பிறந்து ஒரு சில நாட்களே ஆன நிலையில் நான் குமரி மாவட்டம் வரும் வாய்ப்பு கிட்டியது.  என்னோடு ஐக்கிய இறையியல் கல்லூரியில் பயின்ற ஆந்திராவைச் சேர்ந்த அருட்திரு ஜேம்ஸ் விக்டர் எனது பணியால் ஈர்க்கப்பட்டு என்னை தென்னிந்திய திருச்சபையின் போதகர் கூடுகைக்காக அழைத்திருந்தார். தென்னிந்திய திருச்சபையினைச் சார்ந்த அனைத்து பேராயங்களிலுமிருந்து சுமார் 600 போதகர்கள் கன்னையாகுமரியில் குழுமியிருந்த இந்த பிரம்மாண்ட நிகழ்வில் நான் அழைக்கப்பட்டிருந்தது பெரும் பேறு. அவர்களோடு திருச்சபையில் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் பேராயர்கள் என பெரும் நிகழ்வாக அது அமைந்திருந்தது. அடித்தள பணியில் ஈடுபட்டிருக்கும் ஒரு போதகர் தனது அனுபவங்களைப் பகிர வேண்டிய நிலையில் பனை சார்ந்து நான் எடுக்கும் முயற்சிகளைக் குறித்து விளக்க எனக்கு ஒரு அமர்வு கொடுக்கப்பட்டிருந்தது.  இந்த நிகழ்ச்சிக்கு நான் வருகிறேன் என்பதை உறுதி செய்தபின்பு, வந்திருக்கும் போதகர்கள் அனைவருக்கும் பனை விதைகளை அளிக்கலாம் என முடிவு செய்தேன். மும்பையிலிருந்து விமானத்தில் பனை விதைகளை எடுத்துவர இயலாது, ஆகவே, பால்மா மக்கள் இயக்கத்திடம் விதைகளைக் கொடுக்க முடியுமா என்று கேட்டேன். அவர்கள் பனை விதைகளைத் தருகிறோம் என்றார்கள். ஆனால் எனக்கு மற்றொரு யோசனை தொன்றியது.

பனை மரத்தைப் பற்றியேறும் பனையேறி

தூத்துக்குடி பேராயத்தைச் போதகர் ஜான் சாமுவேல் எனக்கடுத்த நிலையில்  பனை சார்ந்து பல முன்னெடுப்புகள் செய்யும் ஒரு தனித்துவமான  போதகர். பனையேறிகளை கனம் பண்ணும் நிகழ்வு என்று அவர்களுக்கு சால்வை அணியும் நிகழ்வை அவர் நடத்தினார். பனை ஓலையில் பொருட்களைச் செய்யும் பெண்களை ஒருங்கிணைத்தபடியிருந்தார். பனை விதைகளை பனை ஓலையில் பொதிந்து கொடுக்க இயலுமா என அவரிடம் கேட்டேன். கண்டிப்பாக செய்கிறேன் அய்யா என்றார்கள். அதற்கான பொருட் செலவையும் அவர்களே ஏற்றுக்கொண்டார்கள்.

மும்பையில் நான் பனை விதைகளை வழங்குகையில் கடைபிடிக்கும் வழிமுறை என்பது வித்தியாசமானது. ஒரு அட்டைபெட்டியின் வெளிப்புறம்  முழுக்க, பனை சார்ந்த தகவல்களை நிரப்பி அச்சிட்டு, அதனுள் பனை குறித்த தகவல்கள் அடங்கிய ஒரு சிறு பிரதி ஒன்றையும் இணைத்தே மக்களுக்கு கொடுப்போம். அது மும்பை போன்ற பெருநகரங்களில் பனை குறித்த புரிதலற்றவர்களுக்கு ஒரு அறிமுகத்தை அளிப்பதாக இருக்கும். ஆனால், நமது பணம், பெருமளவில் பனை சாராத மக்களிடம் சென்று சேரும். இவ்வித அட்டைப்பெட்டிகள் செய்வதனால் எவ்வகையிலும் பனை சார்ந்த மக்கள் பயன் பெறப்போவதில்லை. ஆகவே தமிழக சூழலில், பனை விதைகளை பனை ஓலைக்குள் பொதிந்து கொடுத்தால், அதன் மூலமாக அனேக ஓலைக் கலைஞர் பயன் பெறுவார்கள் என எண்ணினேன். சில்லு கருப்பட்டிக்கு எப்படி பனை ஓலைகளைப் பொதிவார்களோ அதுபோல பனை விதைகளை பொதிந்துதர அவரிடம் கேட்டுக்கொண்டேன். 

நிகழ்ச்சிக்கு கிறிஸ்தவ மாமன்ற பொதுசெயலாளர் அறிவர். ஆசீர் அவர்கள் நிகழ்ச்சியின் இறுதி நாளில் வந்திருந்தார். பனை விதைகள் சில்லுகருப்பட்டிபோல் பொதிந்து விதை பரவலுக்காக எடுத்துவரப்பட்டதை கண்டு மகிழ்ந்துபோனார். அன்றைய நிகழ்ச்சியில் அவர் அதனைக் காட்டி பேசினார். இந்திய திருச்சபை வரலாற்றில் பனை எங்குமே முதன்மைப்படுத்தப்பட்டது இல்லை.  ஆசீர் அவர்கள் பனை சார்ந்த எனது பயணத்தினையும் போதகர்கள் ஏன் பனை சார்ந்த முன்னெடுப்புகளையும் தங்கள் ஊழியத்தினூடாக செய்வது அவசியம் என்பதனையும் அன்று குறிப்பிட்டார். நெய்யூர் மருத்துவமனையைச் சுற்றிலும் இருந்த  பனை மரங்கள் இன்று மாயமாகிப்போனதும் அதனைச் சார்ந்து வாழ்ந்த பல்லுயிர்களின் நிலை என்ன எனவும் கேள்வி எழுப்பினார். வேலூரில் உள்ள கிறிஸ்தவ நிலங்களைச் சுற்றி பனை வேலியாக அமைக்கப்பட்டிருப்பதை பார்த்து தான் பரவசமடைந்தது என அவர் பனை சார்ந்த முக்கியத்துவத்தை விவரித்துக்கொண்டிருந்தார். இறுதியில், அனைவரிடமும் ஆளுக்கொரு பனை விதைகளை எடுத்துச் செல்ல கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சி நடந்த கன்னியாகுமரி சி எஸ் ஐ (C S I) தேவாலயத்தின் வாசல்களின் அருகில் பனை விதைகள் வைக்கப்பட்டிருந்தன.

மறுநாள் எனது நண்பனும் புகைப்பட கலைஞருமான ரங்கிஷ் அவர்களைச் சந்தித்தேன். “ஓய், காலைல டியோசிசன் ஆஃபீஸ் பக்கம் போயிருந்தேன்” என ஒரு சம்பவத்தை விளக்கினார். பனை ஓலை பெட்டியை வைத்திருந்த ஒரு பெண்மணி, இன்னொருவரிடம்  மிகவும்  வருத்தப்பட்டு பேசிகோண்டிருந்திருக்கிறார்கள். “ஆனாலும் இப்படி ஏமாத்தப்பிடாது, நாலு பெட்டி எடுத்துட்டு வந்தேன், வீட்டுல வந்து பார்த்தா சில்லு கருப்பட்டிய காணேல, பனங்கொட்டைய உள்ள வெச்சி ஏமாத்தியிருக்கினும்”. என்றவர், “அப்பவே நினைத்தேன், காட்சன் ஊருக்குள் தான் நடமாடுகிறான்” என்றபடி என்னைப் பார்த்தார். எனக்கு சிரிப்பு தாளவில்லை…, பனை விதைகள் தான் கொடுக்கிறோம் என்ற அறிவிப்பை கேட்காத எவரோ ஒருவர், சில்லு கருப்பட்டி இலவசமாக கிடைக்கிறது என அள்ளி எடுத்து சென்று ஏமாந்திருக்கிறார்.   

குமரிப் பேராயர் A R செல்லையா அவர்களுக்கு பனை விதை வழங்குகிறேன்.

ஜெனோஃபின் பிறந்த போது மாமனாராக நான் அவனுக்கு ஏதாவது பரிசளிக்கவேண்டும் என நினைத்திருந்தேன். கிலுகிலுப்பைகள் வழங்கலாம் ஆனால் அது எவ்வகையிலும் எனது பனை பயணத்தில் பயலை உள்ளிழுப்பதாகாது. அனேக குழந்தைகளுக்கு நான் பனை ஓலையில் தடுக்குகள் செய்து கொடுத்திருக்கிறேன். ஆகவே, தனித்துவமான ஒரு பனையோலை பொருளை அவனுக்கு பரிசளிக்க விரும்பினேன். எனது இரு சக்கர வாகனத்தில் இருக்கைகளை அமைத்துத் தந்த மொட்டைவிளையைச் சார்ந்த திரு செல்லையா அவர்களைத் தொடர்புகொண்டு பனை ஓலையில் ஒரு அழகிய தொட்டில் ஒன்றைச் செய்து கொடுப்பீர்களா எனக் கேட்டேன். மகிழ்ச்சியோடு சரியென்றார்கள். ஆகவே, அதனையும் எடுத்துச் சென்று பிள்ளை காணும் நிகழ்ச்சிக்குச் சென்றேன். அங்கே இருந்து நான் குழந்தையுடனும் உறவினர்களுடனும் இணைந்து ஒரு புகைப்படம் எடுத்தோம். அந்த புகைப்படம் “உலகிலேயே முதன் முறையாக ஓலை தொட்டிலை அறிமுகப்படுத்திய குடும்பம்” என பதிவாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. நான்காயிரத்திற்கும் அதிகமானோர் முகநூலில் அதனை பகிர்ந்திருந்தார்கள்.

முதல் பனையோலைத் தொட்டில்

இந்த ஓலைத்தொட்டிலை நான் பதிவுசெய்தபோது ஒரு நண்பர் எரிச்சல் மேலிடும் தொனியில் “நாங்களும் சிறு வயதில் இதனைப் பயன்படுத்தியிருக்கிறோம்” என்றார். அதற்கு காரணம், “நீ தான் அனைத்தையும் கண்டடைந்திருக்கிறாய் என இறுமாப்பு கொள்ளாதே, நாங்கள் பயன்படுத்தி தூக்கி வீசியதை தான் இன்று நீ  உனக்கானதாக முன்வைக்கிறாய் என்ற எள்ளல் நிறைந்த பதிவு அது”. உண்மை என்னவென்றால், பனையோலைத் தொட்டில் என நான் அறிமுகப்படுத்தியிருப்பது ஓலைக்கடவத்தின் சற்றே மாறுபட்ட வடிவம் தான். அதற்கு மிகப்பெரிய அறிவோ, திறமையோ தேவையிலை.  கடவத்திற்கு நான்கு புறமும் சரி சமமாக ஓலைகளை அடி வைத்து பின்ன வேண்டும். பனை ஓலைத் தொட்டிலுக்கு, ஒருபுறம் நீளமாகவும் மற்றொருபுறம் குறுகலாகவும் இருக்க வேண்டும். திருநெல்வேலி பகுதிகளில் ஆட்டுபெட்டி செய்பவர்கள், அல்லது தக்காளி கூடை செய்பவர்களுக்கு இவ்வித செவ்வக அமைப்பு அறிமுகமானதுதான், ஆனால் குமரி மாவட்டத்தில், இவ்வித பின்னல் முறைகள் கிடையாது. மாத்திரம் அல்ல, எங்குமே குழந்தைகளை இப்படி ஓலைப்பெட்டிக்குள் படுக்க வைக்கப்பட்ட வரலாறு கிடையாது.  எங்கள் ஊரில் குழந்தைகள்  அங்காங்கே ஊர்ந்து சென்றுவிடாதிருக்க, கடவத்திற்குள்  கடல் மணலை நிரப்பி, உள்ளே விட்டுவிடுவார்கள். கடல் மண் இருப்பதால் கடவம் எச்சூழலிலும் மறிந்துவிழாது. குழந்தைகளும் அந்த மென் மணலில் அமர்ந்துகொண்டு வெளியே நடப்பவைகளை பார்த்தபடி விளையாடும்.

ஆபிரகாமிய வம்சத்தாராகிய எபிரேயார்கள் அடிமைகளாக வாழ்ந்த எகிப்தில், பிறக்கும் ஒவ்வொரு எபிரேய குழந்தையையும்  நைல் நதியில் வீசிவிடவேண்டும் என்கிற சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அங்கு பணிபுரிந்துவந்த மருத்துவச்சிகளுக்கு கூட குழந்தைகளைக் கொல்லும் உரிமைக் கொடுக்கப்பட்டிருந்தது. அச்சூழலில் தான், லேவி குடும்பத்தில், யோகெபேத் கருவுற்று ஒரு குழந்தையினை பெற்றபோது அந்த குழந்தையினை மூன்று மாதம் ஒளித்து வைத்தாள். அதற்கு அப்புறம் அவள் அந்த குழந்தையை தனது வீட்டில் ஒழித்து வைக்க கூடாமல், அழகான நாணற்பெட்டி ஒன்றைச் செய்து, அதற்கு பிசின் கீல் போன்றவைகளை பூசி, நைல் நதியில் விட்டுவிடுவார்கள். குழந்தைக்கு என்ன சம்பவிக்கபோகிறது என்பதை கண்காணிக்கும்படியாக குழந்தையின் சகோதரி அதற்கு காவல் இருந்தாள். அப்போது பார்வோனின் மகள் அப்பகுதியில் குளிக்க வந்து  அழகான அந்த குழந்தையினை தானே வளர்க்க முடிவு செய்தாள். எபிரேய மக்களுடைய மிகப்பெரிய தலைவனான மோசேயுடைய வாழ்வின் துவக்கம் அப்படி ஒரு எளிய நாணற்பெட்டியில் துவங்கியது ஆச்சரியமானது.  நாணற்பெட்டிக்கு இணையாக பனையோலைப் பெட்டி எழுந்துவரும் காலம் ஒன்று வெகு விரைவில் வரும் என நாம் எதிர்பார்க்கலாம்.

பார்வோனின் மகள் மோசேயை தண்ணீரிலிருந்து காப்பாற்றும்போது

திருமறையில் நாணற்பெட்டி செய்து அதில் கிடத்திய குழந்தை மிகப்பெரியவனாகியது வரலாறென்றாலும், இதுவரை பனை ஓலையில் எவருமே தொட்டில்கள் செய்ததாக நான் கேள்விப்படவில்லை. ஏன் அப்படி? குழந்தைகளை தூளியில் போட்டு தூங்கவைக்கும் வழக்கம் தமிழகத்தில் இருந்திருக்கிறது. இது கிராமபுற மக்களுக்கு மிக எளிமையான வழி. வசதியுள்ளவர்கள் மர தொட்டிலை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஏன் பனை நார் இட்ட தொட்டில் கூட நான் பார்த்திருக்கிறேன். ஆனால், ஓலை பெட்டியில் குழந்தைகளைக் கிடத்துவது என்பது எவரும் கைக்கொண்டதாக நான் கேள்விப்படவில்லை.

பனை ஓலைத் தடுக்குகளில் குழந்தைகளைக் கிடத்துவதே வாடிக்கையானபடியால், மிகப்பெரிய அளவில்  செலவாகும் ஓலைகள் குறித்த கரிசனை இருந்திருக்கலாம். குறிப்பாக, வறுமை சூழ்ந்த அக்காலங்களில், தங்களை ஒடுக்கி தான் பனை சார்ந்த தொழிலாளர்களால் இயங்க முடிந்தது. வீட்டில் செய்யப்படும் கடவங்களை பிறருக்கு கொடுத்துவிடுவதே பொருளீட்டுவதற்கான ஒரே வழியாக இருக்கும்போது, இவ்வகை முயற்சிகள் தேவையற்றது என அவர்கள் எண்ணியிருக்கலாம். அக்காலங்களில் ஓலை கடவத்திற்குள், குழந்தையினை படுக்க வைப்பது என்பது நினைத்துப்பார்க்கவியலா ஒன்று என்பது தான் உண்மை. கோழியை பிடித்து கடவத்திற்குள் கமத்திப் போடுவது தான் அன்றைய வழக்கம். நான் ஓலைப்பெட்டியினை அறிமுகப்படுத்தும்போதே, குடும்பத்தினருக்குள் ஒருவித விலக்கம் தென்பட்டது.  குழந்தையை யாராவது கடவத்திற்குள் போடுவார்களா என்ன? என்று தான் சிலர் கேட்டார்கள். வேறு சிலர், ஒரு தொட்டில் செய்ய பணமில்லையா என்று ஏளனமாக சிரித்தனர்.  இத்தனைக்கும் அனைவரும் பனங்காட்டிற்குள் புரண்டு வளர்ந்தவர்கள் தான்.  பனையோலை தொட்டிலை நான் வழங்கிய பின்னும், குழந்தைக்கான வேறு தொட்டில்  குடும்பத்தினரால் வாங்கப்பட்டது. பொடியன் பனை ஓலை தொட்டிலில் படுக்க விரும்பவில்லை என வியக்கியானமும் பின்னர் சொல்லப்பட்டது. ஆக, பிடிவாதத்துடன் பயலை பிடித்து கடவத்திற்குள் கிடத்தி இது தான் உலகத்திலேயே முதல் பனை ஓலைத் தொட்டில் என பிடிவாதமாக ஒரு புது பொருளை அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

சமையலும் கற்று மற

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கான உணவு தயாரிப்பு,  சர்வதேச சமையல் கற்ற எனது ஜெகன் மச்சான் முன்னின்று நடத்த, கரண்டியை பிடித்து நான் உதவி செய்தேன். போதகர்கள் வந்து ஜெபிக்க அன்று மதிய விருந்து வெகு விமரிசையாக நடைபெற்றது. குமரி மாவட்ட கிறிஸ்தவ சடங்குகள் சற்று வித்தியாசமானவை. ஒரு வயது நிரம்பிய குழந்தைக்கு முன்னால் ஒரு வாழை இலையை பரப்பி, அதில், உணவு, பணம், பழங்கள், மற்றும் திருமறை, பாட்டு புத்தகம், பிற புத்தகங்கள், தங்க சங்கிலி, தங்க  வளையல் என சில பொருட்களை போட்டுவிடுவார்கள். குழந்தை அவைகளில் எதனை முதலில் எடுக்கிறதோ அவ்விதமாகவே குழந்தை வளரும் என்பது பெரியவர்களின் முடிவு. எல்லா குழந்தைகளும் இவ்வித முடிவுகளை பொய்யாக்கிக்கொண்டே இருக்கின்றன.

முதல் பிறந்தநாள் சடங்கு

அன்று மாலையில் தானே நான் சென்னை செல்வதற்கான பேருந்து பயணச்சீட்டினை எடுப்பதற்காக மார்த்தாண்டம் சென்றேன். கருங்கல் பகுதியிலிருந்து மார்த்தாண்டம் செல்லும் வழியில் நட்டாலம் என்றொரு சிறிய ஊர் இருக்கிறது. நட்டாலம் என்பது, குமரி மாவட்டத்திலுள்ள மிகவும் வளமான ஒரு பகுதி. வற்றாத குளம் ஒன்று உண்டு. வயல் நிறைந்த பகுதிகளில் இன்று வாழை மற்றும் கிழங்குகளை பயிரிடுகிறார்கள். இவ்வூரின் மேடான பகுதிகளில்  இன்றும் ஆங்காங்கே பனை மரங்கள் நின்றுகொண்டிருப்பது பனை இம்மண்ணின் மக்களுடன் உறவாடிய மரம் என்பதனை கோடிட்டு காட்டுகிறது. நட்டாலத்தில் தான் குமரி மாவட்டத்தின் முதல் மறை சாட்சியான தேவசகாயம் பிள்ளை அவர்கள் பிறந்தார்கள். இன்று மறைசாட்சி தேவசகாயம் அவர்கள் நினைவாக ஒரு இல்லத்தினை அவர் வாழ்ந்த இடத்தில் கத்தோலிக்கத் திருச்சபை கட்டியெழுப்பியிருக்கிறது. அதன் அருகில் ஒரு பனை மரம் நிற்பதைப் பார்த்து அதனை படம் பிடித்தேன்.

புதிதாக கட்டப்பட்ட தேவசகாயம் பிள்ளை நினைவு இல்லம்

நீலகண்டன் பிள்ளை என்பவர் நாயர் குடும்பத்தில் பிறந்தவர். கேப்டன் யுஸ்டேசியஸ்  டி லெனாய் (Eustachius De Lannoy) மூலமாக கிறிஸ்துவின் அன்பை உணர்ந்து, கிறிஸ்தவத்தினை தழுவியபோது லாசரஸ் என பெயர் மாற்றிக்கொண்டவர். திருவிதாங்கூர் பகுதி மக்களால் தேவசகாயம் பிள்ளை என்று இன்று நினைவுகூறப்படுபவர்.  திருவாங்கூர் சமஸ்தான அரசர்களால் துன்புறுத்தப்பட்டு ஆரல்வாய் மொழி என்ற பகுதியிலுள்ள பனை சூழ்ந்த காற்றாடி மலைப் பகுதியில் வைத்து கொலை செய்யப்பட்டார். அவரது 400 ஆம் அகவை தினம் வெகு விமரிசையாக கோட்டாறு மறை மாவட்டத்தால் கொண்டாடப்பட்டது.  அன்று அவர் போப் பெனடிக்ட் அவர்களால் “ஆசீர்வதிக்கப்பட்டவர்” (Beatified) என சிறப்பு நிலை பெற்றார். 2020ஆம் ஆண்டு போப் பிரான்சிஸ் அவர்கள் தேவசகாயம்பிள்ளை அவர்கள் மரித்த பின்பு அவர் மூலமாக நிகழ்ந்த ஒரு அற்புதத்தினை ஏற்றுக்கொண்டார். இவையனைத்தும் தேவசகாயம் பிள்ளை அவர்கள் புனிதர் பட்டம் பெறும் தகுதியுடையவராக அவரை மாற்றுகிறது.

தேவசகாயம் பிள்ளை

கத்தோலிக்க திருச்சபையின் சில வழக்கங்கள் மிகவும் தொன்மையானவைகள். அவைகளில் கால்களைக் கழுவுதல் என்து இயேசுவிடம் சென்று சேரும் அளவிற்கு அது நீண்ட மரபைக் கொண்டது ஆகும். முற்காலங்களில் போப் அவர்கள் தனக்கு கீழ் இருக்கும் உயர் மட்ட தலைமை  குருக்களில் 12 நபர்களை தெரிந்துகொண்டு அவர்களது கால்களை கழுவுவது வழக்கம். இவ்வித வழக்கம் வெறும் சடங்குகளின் தொகையாக மாறிவிட்டது என கருதியபடியால் போப் பிரான்சிஸ் அவர்கள் புதுமையான முறையில் இச்சடங்கினை முன்னெடுக்கத் துவங்கினார்கள். சிறைச்சாலையில் உள்ளவர்களின் கால்களை கழுவும்படியாக தெரிவு செய்தல், அகதிகள், மாற்று சமயத்தினர், பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் என அவரது தெரிவுகள் கத்தோலிக்க திருச்சபை பார்த்திராத அளவிற்கு புதுமையானதும் புனிதமானதும் கூட.   

கால்களைக் கழுவுதல் என்ற சடங்கின் மீது எனக்குள்ள தனி ஈடுபாடு நிமித்தமாக  நானும் இச்சடங்கினை கடைபிடிக்க விரும்பினேன். திருச்சபைக்குள் இதனை கடைபிடிக்க இயலாது ஆகையால், திருச்சபைக்கு வெளியே இதனை நிகழ்த்த ஆசைப்பட்டேன். எனது எண்ணங்கள் எல்லாம் பனை ஏறுகிறவர்களைக் கண்டு அவர்கள் கால்களைக் கழுவி, அவர்களுக்கு பணிவிடை செய்யும் இயேசுவின் போதனையின் சிறப்பியல்புகளை காண்பிக்கவும், கூடவே எனது அன்பின் வெளிப்பாடாக, புத்தாடைகள் எடுத்து கொடுக்கவும், நான் விரும்பினேன். என்னால் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இதனை வெற்றிகரமாக செய்ய முடிந்தது. பிற இடங்களில் மக்கள் தங்கள் கால்களை என்னிடம் காண்பிக்க மறுத்துவிட்டனர். அவர்கள் கால்களை காண்பிக்க மெறுப்பதற்கான காரணங்கள் பல உண்டு. சில வேளைகளில், கால்களைக் கழுவுபவர்கள் மீது அவர்களுக்கு இருக்கும் மரியாதை, சில நேரங்களில் இவ்வித சடங்குகளின் பொருளின்மை என வரிசைபடுத்திக்கொண்டே செல்லலாம். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களது கால்களில் இருக்கும் காயங்களை அவர்கள் வெளியே காட்ட விழைவதில்லை என்பதே உண்மை. தங்கள் வாழ்வு இவ்விதமொரு சிதைவுற்ற ஒன்றுடன் இணைக்கப்படுவதை அவர்கள் விரும்புவதில்லை.  எப்போதும் அவர்கள், மக்களது வாழ்வை சுவைகூட்டுபவர்கள் என்ற பெருமிதம் கொண்டிருப்பதினாலேயே தங்கள் கால்களை மறைக்கிறார்கள் என நான் பொருள் கொள்ளுவேன். அவர்கள் நிலையில் இவ்விதமான நிலைப்பாடு சரியென்றாலும், அவர்களின் குரலாக ஒலிக்கின்ற நமக்கு அவர்களது காயங்கள் தாம் முக்கிய குறியீடாக, அவர்களின் தியாக சின்னமாக வெளிப்படுத்தப்படவேண்டும் என்கிற உறுதி வேண்டும்.

பனையேறியின் கால்கள்

பனையேறிகளுடைய கால்கள், காயங்களால் நிறைந்தவை. அவைகளை அவன் ஒரு வீரனுக்குரிய பெருமையென கருதியிருந்தாலும், இன்னொருவரிடம் காண்பிக்க அவன் விழைய மாட்டான். தழும்புகளைக் காட்டி தனது தியாகத்தை நிலைநிறுத்தும் செயலை ஒரு பனையேறி எப்போதும் செய்ய துணிவதில்லை. அது அவனது வீரத்திற்கும் அவனது உழைப்பிற்கும் இழைக்கப்படும் அநீதி என்பதாகவே அவன் எடுத்துக்கொள்ளுவான். அவனது மவுனத்தை இயலாமை என சிலர் புரிந்து கொண்டு, பனையேறிகளுக்கான குரலை வெளியில் கேட்கக்கூடாதபடி செய்துவிட்டனர்.

காய்த்துப்போயிருக்கும் பனையேறியின் கைகள்

பனையேறியின் கால்களில் இருக்கும் காயங்களுக்கு சற்றும் குறையாமல் அவர் கைகளிலும் உடலிலும் காயங்களும் தழும்புகளும் இருக்கும். காயங்கள் அவர்கள் வாழ்வில் அனுதின அனுபவம் தான். அந்த காயங்களை அவர்கள் பெரிதுபடுத்தியிருந்தால், அவர்களின் துயரம் இன்று உலக அளவில் சரியான அளவில் முன்வைக்கப்பட்டிருக்கும். பனையேறிகளின் வியர்வை பேசுபொருளாயிருக்கும் அளவிற்கு அவர்கள் கால்கள் பேசுபொருளாயிருந்தது இல்லை. அவர்கள் கால்களும் அவர்தம் உடலில் இருக்கும் காயங்களுமே அவர்கள் சூழியலின் பங்காளர்கள் என உரத்துக் கூறும் அடையாளங்களாகும்.

கால்களைக் கழுவி முத்தமிடும் போப்

என்னைப்பொறுத்த வரையில் போப் அவர்கள் பனையேறிகளின் கால்களை கழுவவேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசையினை நான் போப் அவர்கள் மீது திணிக்க இயாலாது என்பதால் தான் முதன் முறையாக அவ்வித முன்னெடுப்பை நான் மேற்கொண்டேன்.

திருமறையில் இயேசு கால்களைக் கழுவும் நிகழ்ச்சி மிக உக்கிரமானது. இயேசு வாழ்ந்த காலத்தில் கால்களைக் கழுவும் பணி அடிமைகளுக்குரியது. குரு என்றும், ரபி என்றும், கடவுளின் மகன், இஸ்ரவேலை மீட்கும் மேசியா என்றும் உயர் பட்டங்களை தாங்கி நின்ற இயேசு தமது சீடர்களின் கால்களைக் கழுவுதல் சீடர்களுக்குள்ளேயே துணுக்குறலை ஏற்படுத்தியது. பேதுரு என்ற சீடன் அவரைப் பார்த்து நீர் எனது கால்களைக் கழுவக்கூடாது என விலகி நிற்க இயேசு அவனிடம் உனது கால்களை நான் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்கு பங்குமில்லை பாகமுமில்லை என்கிறார்.

எனது நீண்ட நாள் கனவு என்பது பனையேறிகள் கால்கள் கழுவப்படவேண்டும் என்பது தான். கத்தோலிக்கத் திருச்சபை, இன்று இந்தியாவில், இருக்கும் பனையேறிகளின் கால்களைக் கழுவ முற்படுவார்கள் என்று சொன்னால், அதுவே நாளை வாத்திகன் பனையேறிகளின் கால்களைக் உற்று நோக்க வழிவகை செய்யும். உடைந்து உருக்குலைந்திருக்கும் பனையேறிகளின் கால்கள் மிகப்பெரும் ஆன்மீக பிண்ணணி கொண்டவை. அழகிய கால்கள் எப்படி கடுமையான உழைப்பின் பயனாய் வளைந்துவிடுகின்றன எனவும், காய்ப்பு பிடிக்கிறது எனவும், பாளம் பாளமாக கீறிப்போய் கிடக்கிறது எனவும் எந்த இலக்கியமும் பதிவுசெய்யாத நமக்கடுத்த வாழ்வனுபவம். பனையேறிகளின் உருக்குலைந்த கால்களுக்காக எந்த திருச்சபையிலும் மன்றாட்டுகள் ஏறெடுக்கப்படவில்லை என்பதுவே கசப்பான உண்மை.

சிறிய கால்களே அழகுமிக்கவைகள் என்னும் சீன பாரம்பரியத்தினை விரிவாக பலர் பதிவு செய்திருக்கிறார்கள். பத்தாம் நூற்றாண்டு முதல் சமூகத்தில் மிக உயரிய இடத்திலிருந்த சீமாட்டிகளுடைய கால்களை ஆறு வயது முதல் கட்டி, காலின் பயனே அற்றுப்போகப்பண்ணும் ஒரு முறைமையினைக் குறித்து இருபதாம் நூற்றாண்டில் டங்கன் என்கிற கிறிஸ்தவ மிஷனெறி குறிப்பிடுகிறார். பெண்களை எப்படி அழகு என்ற போர்வையில் சமூகம் அடக்கி ஆள்கிறது எனவும், பெண்கள் இதன் மூலம் சந்திக்கும் பிரச்சனைகள் விரிவாகவும் ஆராயப்பட்டிருக்கின்றன. ஆனால் பனையேறிகள், பனை மரத்தினை பற்றி பிடித்து ஏறும்பொது அதிலிருக்கும் சிலாம்புகள், பனையின் புறப்பகுதியில் இருக்கும் சில சொரசொரப்பான பகுதிகள், கால்களில் ஏற்படுத்தும் காயங்களையும், பற்றிபிடிக்கும் விதமாக கால்கள் வளைந்து உருக்குலைவதும், நமது சமூகத்தில் காணப்படும் பிரச்சனையாக பார்க்கப்படவில்லை. அசிங்கமான இத்தொழிலை விட்டு வெளியே வருவதுவே தீர்வு என முடிவெடுத்து விட்டாலும், இன்றும் தங்கள் கால்கள் பனையை பற்றியிருக்க, தங்கள் கைகள் பனை மரத்தை அணைத்திருக்க, நமது வாழ்வில் பனையேறிகள் இன்றும் சுவைகூட்டியபடியே இருக்கின்றார்கள்.

கால்களைக் கட்டிவிடுவதால் ஏற்படும் பாதிப்பு

எவரொருவர், பனையேறியின் கால்களையும் கைகளையும் அணுகி பார்த்தாலும், அத்தாய்மையின் கரத்தை பார்த்து அவரது உள்ளம் விம்முவது உறுதி. பனையேறி தனது உடலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து பெருமளவில் அலட்டிக்கொள்ளுவதில்லை, ஆனால் ஒரு பண்பட்ட சமூகம், அவன் கடந்து வந்த பாதைகளில் இருக்கும் இடர்களை நீக்கி, அவன் வழிகளை செவ்வை செய்வது சிறந்த சேவையாக இருக்க முடியும்.

அவ்வகையில், போப் அவர்கள், பனையேறிகளின் கால்களைக் கழுவும் ஒரு தினம் அமையுமா என நான் எண்ணிப்பார்க்கிறேன். போப் அவர்கள் இதுவரை பார்த்த கால்கள், காலணிகள் இட்டு நடமாடிய மென் கால்கள் மட்டுமே. வெறுங்காலுடன், பனையேறும் பனையேறிகளின் கால்களும் கரங்களும் அவருக்கு இயேசுவின் சிலுவைக் காட்சிகளை மீட்டெழுப்பும். இவ்விதம்  எற்படுத்தும் ஓர் நிகழ்வு கூட, உலகமெங்கும் அதிர்வலைகளை எழுப்ப வல்லவை.

பனையேரிகள் என்றவுடனேயே, நாம் குமரி மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சார்ந்தவர்களை மட்டுமே அவ்விதம் எண்ணிக்கொள்ளுகிறோம், ஆனால், இந்தியா முழுக்க பனை ஏறிக்கொண்டிருக்கும் சமூகங்கள் பல இருக்கின்றன. பழங்குடியினர், நாடோடிகள் உட்பட இந்திய சமூகத்தில் பலரும் பனையேரிக்கொண்டிருக்கின்றனர். இந்தியா, இலங்கை, பர்மா, பங்களாதேஷ், பாகிஸ்தான், தாய்லாந்து, இந்தோனேஷியா, கம்போடியா, மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து 12 பனையேறிகளை அழைத்து , கால்களைக் கழுவும் சடங்கு ஒன்றினை நிகழ்த்தினால், அது எப்படியிருக்கும்? ஆம், அது தான், 21ஆம் நூற்றாண்டில் திருச்சபையின் ஆன்மாவைத் தட்டியெழுப்பும் ஒரு திருப்புமுனை கணமாக இருக்கும். திருச்சபை ஏன் பனை சார்ந்த மக்களுக்காக தங்களை அர்பணிக்கவேண்டும் என்பதனை போப் அவர்களின் இச்செயல் உறுதிப்படுத்தும். 

பனையேறிகளின் காயங்கள் நமக்கு திருமறையின் ஆழ்ந்த படிமங்களை வெளிப்படுத்துவதாக நான் உணருகிறேன். இயேசுவின் சிலுவைக் காயங்களுக்கு ஒத்தவைகள் அவைகள். நமது வாழ்வு சுவைப்பட அவர்கள் தங்கள் உடலை வருத்த ஒப்புக்கொடுக்கின்றனர். அவர்கள் காயங்கள் பின்னே இருக்கும் சோக கதைகள் இதுவரை தொகுக்கப்படாத காப்பிய தருணங்களைக் கொண்டது. பனையேறிகளின் காயங்கள் வெறுமனே காயங்கள் அல்ல, அவைகள் நமது வாழ்வை செறிவூட்ட பனையேறிகள் ஏற்றுக்கொண்ட விழுப்புண்கள். போர்க்களத்தில் ஏற்படும் புண்களை விட இவ்வித வடுக்கள் தான் இன்று நமது வாழ்வை உயர்த்திப்பிடிக்கும் அழகிய தழும்புகள். இத்தழும்புகள் குறித்த பெருமையோ சிறுமையோ எதுவும் திருச்சபையிலோ பொதுவெளிகளிலோ பேசப்படவில்லை. அந்த மவுனம் கலைக்கப்படவேண்டும்.

பனையேறிகள் வாழ்வில் இன்னும் பல சோகங்கள் அரங்கேறி வருவது பொதுவெளிகளில் பேசப்படுவது இல்லை. கல்வி அறிவு பனையேறிகளுக்கு இல்லாததாலும், அவர்களின் உடை அமைப்புகள் அவர்களை எளியவர்கள் என வெளிப்படுத்துவதாலும்,  காவல்துறையின் அராஜகம் பனையேறிகள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டதும் வரலாறு. கள் இறக்கினால் கண்டிப்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் நிலையினை ஆட்சியாளர்கள் உருவாக்கிவிட்டனர். காவல்துறை, போலி மது விற்கிறார்கள் என போலியாக வழக்கு பதிவு செய்து, பனையேறிகளை கைது செய்வதும், அவர்கள் பயன்படுத்தும் மண் கலயங்களை உடைத்துப்போடுவது, பனை மரங்களில் பிற பனையேறிகளை ஏறவைத்து பதனீர் சொட்டிக்கொண்டிருக்கும் பாளைகளை தறித்துப்போடுவது, சில வேளைகளில் பனையேறிகளை அடித்து துன்புறுத்துவது ஏன் கை கால்கள் முடமாகும் அளவிற்கு அவர்களை குற்றுயிராக்குவது என ஈனச் செயல்கள் செய்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலிய பூர்வகுடிகளிடம் மன்னிப்பு கோரும் தருணத்தில்

இன்று உலகில் எங்கு ஒரு நிகழ்வு ஏற்பட்டாலும் பொதுவெளியில் நாம் கொதித்தெழுகிறோம். ஆனால் காலம் காலமாக அடக்குமுறைக்குள் வாழ்ந்து தான் கற்ற தொழிலினை இவைகளினூடே எடுத்துச் செல்லும் பனையேறி எவ்வித சலனமுமின்றி தனது பணியை தொடர்ந்துகொண்டிருப்பது நம்மை பதை பதைக்க வைப்பது. இவ்வித சூழலில் பனையேறிகளிடம் வாங்கிய லஞ்சப் பணத்தினை காவல்துறை நாலத்தனையாக திருப்பிக் கொடுக்கவேண்டும். பனையேறிகள் வாழ்வில் காவல்துறை செய்த அனைத்து பிழையீடுகளுக்காக பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டும். ஆளும் அரசு, பனையேறிகளுக்கு  இதுமட்டும் செய்யத்தவறியவைகளுக்கும், அவர்கள் மீதான அடக்குமுறைக்கும் பொதுவெளியில் மன்னிப்பு கோரவேண்டும். ஆஸ்திரேலிய பூர்வகுடிகளுக்கு நிகழ்ந்த துயரத்தை விஞ்சும் கதைகள் இங்கே உண்டு, ஆனால் அவைகளைப் பேசும் உள்ளங்கள் இங்கு இல்லாமல் போய்விட்டது தான் சோகம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 6

ஜனவரி 19, 2021

பனை நிலவு

அக்டோபர் எட்டாம் தேதி காலை ஜாஸ்மினும்  ஆரோனுமாக காலை நடைக்கு மிடாலம் கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் சென்ற சற்று நேரத்தில்  நானும் கடற்கரை நோக்கி சென்றேன். கையில் பணமும் எடுத்து வைத்துக்கொண்டேன். மிடாலம் கடற்கரையில் காலை எட்டு மணிக்கு முன்பு சென்றால்  கரமடி மீன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.  செல்லும் வழியில் ஒரு வடலி பனை மரத்தை முறித்துப் போட்டிருந்ததைப் பார்த்தேன். இப்பாதகத்தை மின்சார வாரியம் செய்ததா அல்லது தோப்பின் உரிமையாளர் செய்ததா என என்னால் பிரித்தறிய இயலவில்லை. அந்த மரத்தின் மட்டைகளை வெட்டி விட்டிருந்தால் அது எவ்வித பிரச்சனையுமின்றி மின்சார கம்பத்தை தாண்டி வளர்ந்திருக்கும். காலை நேரம் இப்படி மன சஞ்சலத்தை ஏற்படுத்தும் காட்சியுடன் விடியும் என நான் எண்ணியிருக்கவில்லை.

முறித்துப் போட்ட வடலி பனை

நான் கடற்கரைக்கு சென்றபோது ஆரோன் ஒடியாடி மீன்களை  பொறுக்கிக்கொண்டிருந்தான். கைகள் நிறைய நிறைய சில  சாளை மீன்களை எடுத்து வந்து எனக்கு காட்டினான். பொதுவாக மீனவர்கள் வலைகளில் சிக்கியிருக்கும் ஜெல்லி மீன்களையும் தேவையற்ற மீன்களையும் எடுத்து வெளியே வீசுவது வழக்கம். ஜெல்லி மீன்களுள்  சிக்கியிருக்கும் சிறிய மீன்களை கடற்கரையில் வாழும் சிறுவர்கள் எடுத்துச் செல்லுவது வழக்கம். கடற்கரையில் வேறு சில சிறுவர்கள் ஒரு வீட்டிற்கு தேவையான மீன்களை குவித்து வைத்திருந்ததைப் பார்த்தேன். அன்று அதிகமாக சாளை மீன் பிடிபட்டிருந்தது. ஜாஸ்மின் நூறு ரூபாய்க்கு மீன்களை வாங்கினாகள். கிட்டத்தட்ட 3 கிலோ அளவிற்கு மீன்கள் எடுத்து கொடுத்தார்கள். நாங்கள் 500 ரூபாய் கொடுத்தபோது, சில்லரை இல்லை எனச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். அவ்வளவு மீன்களை முன் பின் தெரியாதவர்களுக்கு கொடுக்கும் நல்லுள்ளம் எந்த வியாபாரிக்கும் வராது. பனையேறிகளே இவ்விதம் வழிப்போக்கர்களுக்கு பதனீரை இலவசமாக கொடுத்த கதைகளை கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வகையில் மீனவர்கள் மாபெரும் வள்ளல் பரம்பரைதான்.

ஆரோன் சேகரித்த மீன்களுடன்

2018 ஆம் ஆண்டு நான் தமிழகத்தில் இருந்தபோது, இதே கடற்கரையில் 100 பனை விதைகளை நட்டோம். நானூறு பனை விதைகளை இங்குள்ள மீனவர்களுக்கு கொடுத்தோம். அவைகளில் சில முளைத்திருந்ததை நான் ஏற்கனவே வந்து பதிவுசெய்திருக்கிறேன். ஆனால் தற்போது கடற்கரையில் காங்கிரீட் தடுப்புச் சுவர் எழுப்பவேண்டி நாங்கள் பனை விதைத்திருந்த   ஆக்கிரமித்திருந்தார்கள். பல பனைகள் சமாதியாகிவிட்டிருந்தன.  நாம் நடுகின்ற பனைவிதைகளில் 10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் மட்டுமே அதன் முழு ஆயுளைக் காணும் என நினைக்கிறேன். ஆர்வத்தால் விதைப்பவைகள் அனைத்தும் அதன் பலனைக் கொடுக்கும் வரை இருக்குமோ இல்லையோ தெரியாது எனும் அளவில் தான் தற்போதைய சூழல் இருக்கின்றது. எங்கும் நிகழும் சாலை விரிவாக்கப்பணிகள், பொதுப்பணித்துறை பணிகள், கட்டுமானப்பணிகள், என பல்வேறு காரணிகள் விதைக்கப்படும் பனை விதைகளை முளையிலேயே கிள்ளி எறியும் சூழல் மேலோங்கி இருக்கிறது. ஆகவேதான், நிற்கும் மரங்களை பாதுகாப்பது, எதிர்காலத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய புண்ணிய  காரியம் என்பதாக உணருகிறேன்.

மிடாலம் கடற்கரை இன்று

காலை நான் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்திற்கு சென்றேன். அங்கே அதன் இயக்குனராக இருக்கு  சந்திரபாபு அவர்களை சந்திப்பது தான்எனது எண்ணமாக இருந்தது. நான் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றும் போது, இவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் இருவருமாக பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தைச் சார்ந்த சில பெண்கள் எப்படி அரசியல் தளங்களில் வெற்றி பெற்றனர் என்பதை மையமாக கொண்டு ஒரு புத்தகத்தினை தொகுத்தோம். எனது பங்களிப்பு அதில் மிகச் சிறிய அளவில் தான் இருந்தது. ஆகவே தனிப்பட்ட முறையில் சில விஷயங்களைப் பேசி வரலாம் என்று தான் கிளம்பினேன்.  “வரும் தேர்தலில்  கள் தான் கதாநாயகன்” என்ற சூளுரையோடு எனது தமிழகம் தழுவிய பயணத்தை  முன்னெடுக்கிறேன் என்றேன்.   உங்கள் அனுபவம் சார்ந்து சில தகவல்களை தந்துதவ முடியுமா எனக் கேட்டேன். என்ன வேண்டும் எனக் கேட்டார்கள். “பனையேறிகள் செய்த போராட்டங்களில் கள் சார்ந்து ஏதேனும் போராட்டங்கள் முன்னெடுத்தார்களா எனக் கேட்டேன்” அவர் பல்வேறு போராட்டங்கள் நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம். கள் என்பது கள்ளுக்கடைகளுக்கு தான் இலாபம் ஈட்டும் ஒன்றாக இருந்ததால், பனையேறிகள் தங்கள் வீட்டு தேவைகளுக்கு மட்டுமே கள் இறக்கிக்கொண்டிருந்தனர் என்றார்.   மேலும் அவர், 1985 ஆம் ஆண்டு பனைதொழிலாளர்கள் நிகழ்த்திய மாநாட்டின் மூலம் ஒரு பத்தம்ச கோரிக்கைகளை முன்வைத்தனர் என்றும் அதனை சமீபத்தில் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் மீண்டும் பதிப்பித்திருக்கிறது என சொல்லி ஒரு புத்தகத்தை எனக்கு காண்பித்தார். 

சந்திரபாபு அவர்களுக்கு பனை விதையினை கொடுத்தபோது

பனைத்தொழிலாளர்களின் பத்தம்சக் கோரிக்கைகள் – 1985

1. பனைத் தொழிலாளர்களுக்கும் பனைப் பொருட்களின் உற்பத்திக்கும் ஊக்கமளிக்க பனைவாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

2. அரசு நிலங்களிலிருந்து குத்தகைக்கு விடப்படும் பனை மரங்கள் பனைத்

தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படல் வேண்டும்.

3. பனைத் தொழிலாளர்களின் காப்பீட்டுக்கான பிரீமியத் தொகை முழுவதும் அரசே செலுத்த வேண்டும்.

4. பனைத் தொழிலாளர்களுக்கு பணி செய்ய இயலாத காலத்தில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

5. பனைத் தொழிலை அறிவியல் முறையில் செய்வதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும்

6. கருப்புகட்டிக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்

7. பனைத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு , கல்வி மருத்துவம், வீட்டு வசதி,

வேலைவாய்ப்புத் துறைகளில் சிறப்பு சலுகை வழங்க வேண்டும்.

8. பனைத் தொழில் செய்யும்போது விபத்துக்குள்ளாகி இறக்க நேரிட்டால் பிரேத

பரிசோதனையின்றி உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்

9. விபத்தில் மரணமடையும் பனை தொழிலாளிகளுக்கு 15000 ரூபாய் காப்பீடாகவும், தொழில் செய்ய இயலாமல் நிரந்தர ஊனமுற்றால் 7500 ரூபாயும் நிவாரணமாக வழங்க வேண்டும்.

10. அரசின் மூலம் வழங்கப்படும் சலுகைகள், உதவிகள், கடன்கள் அனைத்தும், பனைத் தொழிலாளர் அமைப்புகள் மூலம் வழங்க வேண்டும்

பனை தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் என்று அல்ல, பனை சார்ந்து எங்கும் இதுவரை வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலனைக்குட்படுத்தப்படவில்லை. பதினைந்தாயிரம் பனைதொழிலாளர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்த   மாபெரும் போராட்டகளத்தில் ஒரு  கோரிக்கை கூட செவிசாய்க்கப்படவில்லை என்பதுதான் உண்மை. பெரும்பாலானகோரிக்கைகள் அன்றைய சூழலை பிரதிபலிப்பதாக இருந்தாலும் இன்றும் இவைகள் கோரிக்கை என்னும் வடிவிலேயே இருக்கின்றன. பெரும்பாலான கோரிக்கைகள் இன்றும் பனைதொழிலாளர் வாழ்வு மாறவில்லை என்பதன் மவுன சாட்சியாக நிற்கின்றன.

குமரி மாவட்டத்திலுள்ள தேவிகோடு பகுதியை அடுத்த பட்டன்விளாகத்தைச் சார்ந்த பனைத் தொழிலாளி திரு செல்வராஜ் அவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அவர் “அனைத்து கோரிக்கைகளையும் விட, பனை மரத்திலிருந்து விழும் பனையேறிகளுக்கு உடற்கூறு ஆய்வு மட்டும் செய்யவேண்டாம் என்ற கோரிக்கையினை இறுதியாக மாவட்ட ஆட்சிதலைவர் முன் வைத்தோம்” என்றது மிக  நெகிழ்ச்சியாக இருந்தது. அப்போது அன்றைய ஆட்சியாளராக இருந்தவர், இவ்விதமாக பதிலளித்திருக்கிறார்: “விபத்தில் நான் உயிரிழந்தால் கூட  எனக்கும் உடற்கூறாய்வு செய்தே ஆகவேண்டும் என்பது தான் நியதி” அதனைத் தாண்டி எங்களால் எந்த கோரிக்கைகளையும் முன்வைக்க இயலவில்லை என்றார். சோகம் என்னவென்றால், அன்று பனையேறிகள் தங்களுக்காக முன்னெடுத்த போராட்டத்தில் கல்வியறிவு பெற்றவர்களின்  உதவி சிறிதும் இல்லாமல் இருந்தது. பனையேறிகள் தானே என்னும் இளக்காரமே மேலோங்கியிருந்தது. தங்கள் உடன்பிறந்தவர் என்றாலும் தந்தையே என்றாலும் பனையேறியென்றால் சமூகத்தில் அதனை பெருமிதத்துடன் முன்வைக்க இயலாத சூழல் காணப்பட்டது. ஆகவே பனை சார்ந்து இயங்குகிறவர்கள் மெதுவாக பனை மரத்தை விட்டு விலகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.            

அங்கிருந்து நான் சவுத் இந்தியா பிறஸ் என்ற அச்சகத்தை வைத்திருக்கும் கருணா அவர்களை சந்திக்கச் சென்றேன். அன்றிலிருந்து இன்றுவரை வேஷ்டி சட்டையில் மார்த்தாண்டத்தின் கதாநாயகனாக வலம் வரும் முக்கிய ஆளுமை அவர். கேரளா முதல் உலகின் அத்தனை பாகங்களிலும் நட்புக்களை வைத்திருப்பவர். பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்கள், பனை  தொழிலாளர்களுக்கான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என நினைத்தபோது கூட்டிய மிகச்சிறிய நண்பர் குழாமில் இவரும் ஒருவர். பனையேறிகளுக்கு நாம் செய்யகூடிய நன்மை என்னவாக இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டபோது அன்றைய இளைஞரான கருணா, தனக்கே உரிய  தனித்துவத்துடன் “எல்லா பனையையும் முறிக்கணும்” என்றது செவி வழி செய்தி. 1975ல் அப்படி சொல்லும் ஒரு கருத்து மிகவும் புரட்சிகரமானது. அவரது ஒற்றைச் சொல் மிகவும் வீரியமாக பின்னாளில் பலித்திருக்கிறது. எண்பதுகளின் ஆரம்பத்தில்,  காதி வெளியிட்ட ஆய்வறிக்கையில் குமரி மாவட்டத்தில் இருந்த  பனை மரங்களின் எண்ணிகை 25 லட்சம் என்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்று குமரி மாவட்டம் முழுக்க பனைகளை நான் தேடி ஆவணப்படுத்துகையில் ஒரு லட்சம் பனை மரங்கள் எஞ்சுமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இவைகள் எப்படி முறிக்கப்பட்டன? ஒரு சமூகமே இணைந்து பனை மரங்களை உதறிவிட்டது போலவே இந்த இழப்பை நான் புரிந்துகொள்ளுகிறேன்.

கருணா அவர்களுக்கு பனை விதையினை கொடுத்தபோது

கருணா அவர்களின் அந்த கூற்றிற்கு காரணம் என்ன? ஆழ்ந்து நோக்குகையில், பனையேறிக்கும் பனைக்கும் உள்ள உறவு என்பது ஆத்மார்த்தமானது. பனை ஏறிக்கொண்டிருக்கும் ஒருவரால், பனை மரத்தினை அவ்வளவு எளிதில் உதறிவிட இயலாது.  பனை மரம் ஏறுவதைத் தவிற உலகில் வேறு சிறந்த துறை இருக்கிறது என ஒருபோதும் அவர்களால் ஏற்றுக்கொள்ள இயலாது. பனை மீதான  காதலால் கண்மூடித்தனமான வழிபாட்டு நோக்குடனே பனையை அவர்கள் பூஜித்தார்கள். ஆகவே, பனையேறிகளின் வாழ்வு பனையைச் சுற்றியே இருக்கும். அன்றைய சூழலின்படி பனை சார்ந்து வாழ்பவர்கள் வறுமையிலேயே உழல நேரிடும். மேலும், பனை ஏறுகின்றவர், சமூகத்தில் கீழாகவே பார்க்கப்பட்டு வந்தார், ஆகவே, பனை மரங்களை முறித்துவிட்டால், வேறு ஏதேனும் வேலைக்குச் சென்று தனது வாழ்வை ஒருவர்  காப்பாற்றிகொள்ள முடியும் என கருணா அவர்கள் உறுதியாக நம்பினார். அவரது சொல் தான் பின்னர் பலித்தது என நான் எண்ணிக்கொள்ளுவேன்.

கருணா அவர்கள் எனது பணிகளை ஆழ்ந்து கவனிப்பவர், எனது தனித்துவ பணிகளுக்காக என்னை அதிகமாக ஊக்கப்படுத்துபவர். அவரிடம் பனை விதைகளை கொடுத்தேன். வாங்கிவிட்டு, இதனை எனது வீட்டின் அருகில் நடுவேன் என உறுதியாக கூறினார். மேலும் அவரது வீட்டின் அருகில் ஒரு வடலி பனை நிற்பதாகவும்,  எச்சூழலிலும் எவரும் அதனை முறிக்ககூடாது என பேணி பாதுகாப்பதாகவும் சொன்னார். சுமார் நாற்பத்தி ஐந்து ஆண்டுகளில் ஒரு மனிதருக்குள் ஏற்பட்ட தலைகீழான மாற்றம் தான் என்ன? இன்று பனை ஒரு பண்பாட்டு அடையாளமாக மாறிவிட்டது தான் உண்மை. தமது மூதாதையரின் பெருமித அடையாளமாக இன்று பனை அவருக்கு காட்சியளிக்கிறது. கள்ளிற்கு ஆதரவு தெரிவித்த அவர்,  ஆயிரம் ரூபாய் இல்லாவிட்டால் இன்று கேரள கள்ளுக்கடைக்குள் சென்று வர இயலாது எனக் கூறினார்(அங்கு கிடைக்கும் சுவையான மீன் தலை மற்றும் கிழங்கு இன்னபிற உணவுகளுடன் சேர்த்து). குமரி மாவட்டத்தில் கள் கிடைக்கவில்லை எனவும், கருப்பட்டி வேண்டுமென்றால் திருநெல்வேலி மாவட்டத்தில் நண்பர்களிடம் சொல்லி வைத்து வாங்கவேண்டும் எனவும் ஆதங்கப்பட்டார். மாற்றம் அனைவரது வாழ்விலும் நிகழும் என்பதற்கு கருணா அவர்களின் புரிதல் ஒரு பதம்.

அங்கிருந்து மீண்டும் பால்மா நோக்கி பயணித்தேன். ஜேக்கப் அவர்களிடம் உரையாடும்போது “என்னை உங்கள் பயணங்களில் இணைத்துக்கொள்ள மாட்டீர்களா” எனக் கேட்டார். நான் இந்த கேள்வியினை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஜேக்கப் நான் முன்னெடுக்கும் பனை பயணத்தில் இணைத்துகொள்ளுவார் என்பது நான் எண்ணிப்பார்த்திராதது.  நான் எனது பயணத்தில் உள்ள சிரமங்களைச் சொன்னேன்.  எனது பயணம் நீண்டது என்றும், கிடைக்கும் இடத்தில் படுத்து உறங்க முடியும் என்றும், உங்கள் அலுவலகத்தை விட்டு உங்களால் அப்படி ஒரு தொடர் பயணத்தை முன்னெடுப்பது சாத்தியமா எனக் கேட்டேன். “தமிழகமே உங்களோடு பயணிக்க விரும்புகிறது எங்களுக்கு விருப்பம் இருக்காதா” என்றார். நான் மலைத்துப்போனேன். சரி உங்களுக்கு பொருத்தமான நாட்களைச் சொல்லுங்கள் என்றேன். ஒரு மூன்று நாட்கள் தென்தமிழக பயணத்தை ஒருங்கிணைக்கலாம் எனச் சொன்னார். அது குறித்து நாம் விரிவாக திட்டமிடுவோம் எனக் கூறி விடைபெற்றேன்.

எனது பயணத்தை தமிழக அளவில் ஒரு முக்கிய அடையாளமாக நான் நிலைநிறுத்தியிருக்கிறேன். எனது சிறு வயதில் கூட, பல பயணங்கள் பனை மரங்களைப் பார்ப்பதற்காகவே அமைந்திருந்தது. பனைமரச்சாலை அவ்வகையில் ஒரு முக்கிய திருப்பம். எனது பயணம் திட்டமிட்டவைகளை விட, தற்செயல்களால் நிறைந்தவை. அதில் இருக்கும் சாகசத் தன்மை என்னை உந்தும் விசை. அதே வேளையில் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கும் அது  மிகப்பெரிய மன எழுச்சியைக் கொடுப்பவை.  நான் எங்கு சென்றாலும், அங்கே எல்லாம் புதிய தகவல்களைத்  தேடி பதிவு செய்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். தமிழகத்தில் பனை சார்ந்து பயணங்கள் நிகழ்த்தப்படுமென்றால் மறைந்திருக்கும் பல்வேறு உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரும்.

பனை மரங்களை தேடி மனிதர்கள் சென்றாலே பனை சார்ந்து வாழும் மனிதர்களின் மற்றும் பனை மரங்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பது எனது தீர்க்கமான முடிவு. பனை சார்ந்த கலைஞர்கள் அனைவரும், உழைப்பை முன்னிறுத்துகிறவர்கள். உழைப்பினைத் தொடர்ந்து செல்லும் அவர்களுக்கு ஓய்வு மிக முக்கிய தேவை. அவர்களின் ஓய்வு நேரம் அவர்களைக் கண்டு உரையாடுவது அவர்களின் அல்லது அவர்களின் பணி நேரத்தில் அவர்களின் பணிக்கு இடையூறின்றி சந்திப்பது யாவும் அவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும்.  பனை சார்ந்த கலைஞர்கள் நமது சமூகத்தில் அடையாளம் இழந்து வாழ்கிறார்கள், அவர்களை நாம் நேரடியாக சென்று சந்தித்து வரும்போது அவர்கள் வாழ்க்கை முறைக் குறித்த ஒரு புரிதல் உண்டாகும். அவ்வித புரிதல் இல்லையென்றால் நம்மால் ஒருபோதும், பனை சார்ந்த ஒரு மாற்றத்தை இச்சமூகத்தில் நிகழ்த்திவிட இயலாது. இன்று பனை சார்ந்து இயங்குகிறவர்களுக்கு கூட பனையேறிகள் குறித்த புரிதல் சரியாக இல்லை. ஏனெனில் அவர்கள் பனை சார்ந்த மனிதர்களுடன் பயணிப்பது இல்லை.

இக்கருத்துக்களை எப்படி ஒன்றாக திரட்டி மக்களுக்கு அளிப்பது என நான் எண்ணுகையில் தான் பனை நிலவு என்ற ஒரு திட்டம் எனக்குள் உதித்தது. பனை நிலவு என்பது பனை சார்ந்த ஒரு சுற்றூலா தான். பனையோடு செலவிடும் நாட்கள். பனை குறித்த புரிதலற்ற ஒரு குழுவினரை ஒன்றாக திரட்டி, அவர்களுக்கு, ஒரு திட்டமிட்ட பயண அனுபவத்தைக் கொடுப்பதுவே எனது எண்ணமாக இருத்தது. அவ்வகையில் இதனை ஒழுங்கமைக்க அதிக சிரமத்தை எடுத்துக்கொண்டேன். ஆனால் நான் எண்ணியதை விட நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது. தேனிலவிற்கு இணையான போதையுடன் இருக்கும் என்றாதாலேயே “பனை நிலவு” என பெயரிட்டேன். இரண்டு நாள் பயணம். கன்னியாகுமரி மாவட்டம் துவங்கி திருநெல்வேலி வழியாக தூத்துக்குடி மாவட்டத்தில் நிறைவு செய்யும் ஒரு அற்புத பயண திட்டம்.

மார்த்தாண்டம் பால்மா மக்கள் இயக்கத்தில் அனைவரும் கூடவும், அங்கிருந்து பயணத்திற்கான திட்டத்தை  முன்னுரை வழங்கவும் திட்டமிட்டோம். தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து எங்கள் பயணத்தில் சுமார் 15 நபர்கள் கலந்துகொண்டார்கள். முன்னுரையில் பனை மரத்தை எப்படி பனையேறியும் பனைக் கலைஞர்களும் தாங்கிப்பிடிக்கின்றனர் என்றும், பனை சார்ந்த கலாச்சாரமே பனை மரங்களின் வாழ்வை நீட்டிக்கும் எனவும் கூறினேன். பனை சார்ந்த சுற்றுலா பனையேறுகின்ற மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும், உள்ளூர் சுற்றுலாவையும், உள்ளூர் பனை உணவு மற்றும் பனை பொருட்கள் சார்ந்த விற்பனையும் மேம்படும் என்றும் கூறினேன். பனை பொருட்களை நகரத்திலிருந்து வாங்கிவிடத் துடிக்கும் மனநிலை எப்படி பனையை நம்பி வாழும் மக்களின் வாழ்வில் எவ்வித பயனையும் விதைக்காமல் போய்விடுகிறது எனவும் விளக்கிக்கூறினேன். வந்த அனைவருக்கும் பனம்பழ ஸ்குவாஷ் மற்றும் பனம்பழ ஜாம் வழங்கினோம்.

சுதா அவர்கள் செய்யும் அரிவட்டி

பனை ஓலைக் கலைஞரான சுதா அவர்களைக்  காணவேண்டி அவர்களின் ஒப்புதலுடன், கழுவந்திட்டை பகுதிக்கு  சென்றோம். முதலில் இது எப்படியிருக்கும் என அவர்கள் தயங்கினாலும், பின்னர் எங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்றார்கள். சுதா அவர்கள் பனை ஓலையில் இருக்கும் ஈர்க்கில் கொண்டு ஈர்க்காம்பெட்டி என்ற அரிவட்டியினை செய்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். குமரிமாவட்டத்தைப் பொறுத்த அளவில், ஈர்க்கில் கொண்டு பொருட்களைச் செய்பவர்கள்  தலித் சமூகத்தினராகவே இருப்பார்கள். ஈர்க்கிலில் பொருட்களைச் செய்ய தெரிந்தவர்களுக்கு கண்டிப்பாக பனை ஓலைப் பாய் செய்யவும் தெரிந்திருக்கும். மேலதிகமாக பனை ஓலைப் பெட்டியும் செய்யத் தெரிந்திருக்கும்.  எஞ்சியிருக்கும் ஈர்க்கில் கொண்டே அழகிய வடிவம்பெறும் வகையில் ஒரு பொருளைச் செய்யும் சமூகம் எத்துணை திறமையானதும்  பனையுடன் உறவாடியதுமாக இருந்திருக்க வேண்டும்? அரிவட்டியின் பின்னல் முறைகள் சற்றே வித்தியாசமானது, பெருக்கல் குறியீடோ அல்லது கூட்டல் குறியீடோ சார்ந்தபின்னல்கள் அல்ல இது. ஒருவகையில் நடுவிலிருந்து அலையலையாக விரிந்து செல்லும் ஒரு  வடிவம். இரட்டை ஓலைகளாக தாவிச் செல்லும் பாய்ச்சல் கொண்டது. மூங்கில்களைக் கோண்டு  செய்ய்யப்படும் இவ்வகை பின்னல்கள் பெருமளவில் பழங்குடியினரிடம் மட்டுமே இன்று  எஞ்சியிருக்கிறது என்பதை நான் கவனித்திருக்கிறேன். சுதா அவர்களிடம் உரையாடிய அனைவரும் தங்களுக்கு வேண்டிய பதிவுசெய்துகொண்டனர். அவர்கள் கூறிய பணத்தை விட அதிகமாகவே கொடுக்க அனைவரும் சித்தமாயினர். இந்த புரிதல் வேண்டிதான் அனைவரையும் இவ்வித பனை பயணம் செல்ல நான் அறைகூவல் விடுக்கிறேன். உண்மையான கலைஞர்களின் பெறுமதி என்ன என்பதை அருகிலிருந்து பார்த்தால் தான் புரிந்துகொள்ள இயலும். அவ்வகையில் இது எனது முதல் வெற்றி.

சுதா அவர்கள் செய்த கூட்டுப்பெட்டி – முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வழக்கொழிந்து போனது

சுதா அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, குமரி மாவட்டத்தில் வழக்கொழிந்துபோன கூட்டுபெட்டி என்ற ஒன்றை குறித்து பேசினேன். அவர்கள் எனக்கு அதனை மீட்டெடுத்து கொடுத்தார்கள். ஓலைகளை ஒடுக்கமான பெட்டியாக பின்னி, அதன் வாயை பரணியின் வாய் போல குறுக்கி, அதனுள் ஒரு கயிறு கட்டிய தேங்காய் சிரட்டையினை இட்டு, மூடிவிடுவார்கள். இவ்வித  கூட்டுபெட்டியினுள், மனிதர்கள் விரும்பி சாப்பிடும் அரிய பொருட்களை வைத்து தொங்கவிட்டுவிடுவார்கள். எலிகளால் அவைகளை எவ்வகையிலும் சேதப்படுத்திவிட இயலாது. 

பனை ஓலைக் கடவத்தில் குவித்து வைத்திருக்கும் காய்கறிகள்

பின்னர் குழுவினரை அழைத்துக்கொண்டு மார்த்தாண்டம் சந்தைக்குச் சென்றேன். மார்த்தாண்டம் சந்தையில் புளியினை பனை ஓலைப்பாயினில் விரித்து விற்பனை செய்துகொண்டிருந்தார்கள். ஓலைப்பெட்டியில் புளிகள் விற்பனைக்கு சிப்பம் சிப்பமாக வைக்கப்பட்டிருந்தன. காய்கறிகளை உட்புறமாக மடக்கிய கடவத்தில் குவித்து வைத்திருந்தனர். இது குழுவினருக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பனை ஓலை பொருட்களை விற்கும் கடைகளுக்குச் சென்று அவர்கள் விற்பனைச் செய்யும் பொருட்களை காண்பித்தேன். இன்றும் பனை ஓலைப் பொருட்கள் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் இவ்வித கடைகள் தான் காரணம். விசிறி, மற்றும் பல்வேறு பொருட்கள் அங்கே இருந்தன. மார்த்தாண்டம் சந்தையில் மட்டும் பனை ஓலைப் பொருட்களை விற்கும் கடைகள் 2 இருக்கின்றன. 

குறும்பனை வெகு அருகில் தான்

இதனைத் தொடர்ந்து நாங்கள் சென்ற இடம் மிக முக்கியமானது. தென் இந்திய திருச்சபையின் அங்கமான கூடவிளை திருச்சபைக்கு சென்றோம். நாங்கள் புனிதவெள்ளி அன்று எங்கள் பயணத்தை அமைத்திருந்தபடியால், குமரி மாவட்டத்தில் காணப்படும் தனித்துவமான ஒரு வாய்ப்பினை நண்பர்கள் அனுபவிக்கும் ஒரு அரிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க முடிந்தது.  புனித வெள்ளி அன்று அனைத்து திருச்சபைகளிலும் இயேசுவின் சிலுவை மொழிகளை மூன்று மணி நேர தியான நேரமாக கொள்ளுவது வழக்கம். மும்மணி நேர ஆராதனை முடிந்த பின்பு களைப்புற்றிருக்கும் அனைவருக்கும், பனை ஓலையில் பயிறு மற்றும் தேங்காய் துருவிபோட்ட கஞ்சி வழங்கப்படும். சமீப நாட்களில், இவ்வகை சடங்குகள் உருமாறிக்கொண்டு வந்தாலும், கூடவிளை போன்ற சபைகளில் இவ்வித பாரம்பரியத்தினை கைக்கொண்டு வருகிறார்கள். கஞ்சியின் சுவை ஒருபுறம், திருச்சபை பனை சார்ந்து கொண்டுள்ள தனித்திவமான பாரம்பரிய வழக்கம் மற்றொருபுறம் என நண்பர்கள் திக்குமுக்காடிப்போனார்கள்.

நண்பர்கள் அனைவரையும் குறும்பனை என்ற கடற்கரை கிராமத்திற்கு அழைத்துச் சென்றேன். பனை இருக்கும் இடத்தை தென்னை எப்படி ஆக்கிரமித்திருக்கிறது என நேரடியான ஒரு அனுபவ புரிதலுக்கு இப்பயணம் உதவியாக இருந்தது. மேலும் குறும்பனையில் காணப்பட்ட பனைகள் அனைத்தும் குறுகியே காணப்பட்டன.  ஒருவகையில் இங்கு காணப்படும் பனைகள் தனித்துவமானவைகளா? அதனை உணர்ந்து தான் குறும்பனை என நமது முன்னோர்கள் பெயரிட்டிருக்கிறார்களா? என்கிற கேள்விஎனக்குள் எதிரொலித்துக்கொண்டிருந்தது. மீனவர்கள் வாழ்வில் பனை மரம் எவ்விதம் ஊடுபாவியிருந்தது எனவும் நண்பர்களுக்கு விளக்கினேன்.

அங்கிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் குமரி மாவட்டத்தின்  சிறந்த பானமான நுங்கு சர்பத்தினை ருசிக்க முடிந்தது. அங்கே தானே, நூங்கு சார்ந்த எனது புரிதலை விளக்கிக் கூறினேன். நுங்கு என்பது முதிர்ச்சி அடையாத ஒரு பனைக் கனி. அதனை உண்டுவிட்டால், நமக்கு அடுத்த தலைமுறை பனை மரங்கள் கிடைக்காது. குமரி மாவட்டத்தில் பனை மரங்கள் வேகமாக அழிவதற்கு நுங்கினை உட்கொள்ளும் மரபு ஒரு முக்கிய காரணம் என்றேன். என்னைப்பொறுத்த அளவில் நுங்கு உண்பது  பனைக்கு நாம் செய்யும் கருச்சிதைவு. ஆனால், சாமானிய மக்களைப் பொறுத்த அளவில், பனை மரங்களை மக்களிடம் கொண்டு செல்ல நுங்கு தான் எளிய வழி. அனைவரும் பனை மரத்தினை நுங்கு மரம் என்றே அறிந்திருக்கிறார்கள்.

திருநெல்வேலி அருகில் இருக்கும் ஆதிச்சநல்லூர் என்ற கிராமத்தை அந்தி சாயும் நேரத்தில் வந்தடைந்தோம். அங்கே இருக்கும் பனை மரங்களையும் நெல் வயல்களையும் நண்பர்களுக்கு காண்பித்து, ஆதி மனிதர்கள் நமக்கு எச்சமாக விட்டு வைத்த ஊர் இது. இந்த ஊரில் காணப்படும் பனை மரங்கள் என்பவை நமது மூதா,தையர்களுடன் நம்மை இன்றும் இணைப்பவைகளாக உள்ளன என கூறினேன். ஒரு முறை எனது நண்பர் ஒருவர் பழைய பானை ஓடுகளை எனக்கு காண்பித்தபோது அதன் அடிப்பகுதியில் பனை ஓலைப்பாயின் அடையாளம் அச்சாக பதிந்திருந்ததைப் பார்த்து பிரமித்துப் போனேன்.

அன்று இரவு நாங்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நட்டாத்தி என்ற கிராமத்தின் அருகில் இருக்கும் திரு தானியேல் நாடார் என்பவரின் தோட்டத்தில் இரவு தங்கினோம்.  அங்கே சென்றபோது பனம்பழமும்  பனங்கிழங்கும்  உணவாக வைக்கப்பட்டிருந்தன. எடுத்துச் சென்ற மீன்களை சமைத்து இரவு உணவு உண்டுவிட்டு, இரவு உலாவிற்கு பனங் காட்டிற்குள் சென்றோம். பனை சார்ந்து வாழும் மிருகங்கள் பறவைகள் அவைகளின் சத்தங்கள் போன்றவற்றை குறித்து பாண்டிச்சேரி ராம் விளக்கி கூறினார்கள். சூழியல் சார்ந்த அவரது புரிதல் பனை சார்ந்து எண்ணற்ற உயிரினக்கள் இருக்கின்றன என்பதை நண்பர்களுக்கு எடுத்துக்கூறியது. இரவு படுத்துறங்குவதற்கு என பச்சைப் பனை ஓலைகளை வெட்டி போட்டிருந்தார்கள்.  பனை ஓலைகள் மேல் படுத்துறங்குவது என்பது தனித்துவமான ஓர் அனுபவமாக அனைவருக்கும் இருந்தது. நட்ட நடு ராத்திரியில் தலைக்குமேல் எந்த கூரையும் இல்லாமல் பனங்காட்டில் ஓலைகளின் மேல் புரண்டு உறங்கும் ஒரு வாழ்க்கைமுறை எவரும் கேள்விப்பட்டிராதது. அன்று அதன் இன்பத்தை  முழுவதுமாக அனுபவித்தோம்.

பனை நிலவில் கலந்துகொண்டவர்கள் – புகைப்படம் ஆரோன்

மறுநாள் அதிகாலை சுற்றிலுமிருக்கும் கிராமங்களுக்குச் சென்று பனை நார் கட்டில் பின்னுபவர்களுடனும், பனை ஓலை முறம் செய்பவர்களுடனும் உரையாடினோம். எனது நண்பனும், நியூசிலாந்து நாட்டில் ஓட்டல் துறையில் இருக்கும் வின்ஸ்டன் மதியம் கருப்பட்டி பிரியாணி என ஒன்றைச் செய்தார். அனைவரும் நிகழ்ச்சி குறித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொள்ள மகிழ்வுடன்  கலைந்தோம்.  இதன் சிறப்பம்சம் என்பது பனை சார்ந்த அத்தனை உணவுகளும், அந்த இரு நாட்களுக்குள் எங்களால் சுவைக்க முடிந்தது. ஒரு வருடமாக கிடைக்கும் விதவிதமான பனை உணவுகளை இரண்டே நாளில் சுவைத்தது எங்கள் நண்பர் குழுவினராக மட்டுமே இருக்கமுடியும். ஒரு பனைத் தொழிலாளியின் குடும்பமே கூட ஒரே நாளில் இத்தனை சுவைகளை அறிந்திருக்காது.

ஜேக்கப் அவர்களிடமிருந்து விடை பெற்று, நடைக்காவு என்ற பகுதிக்குச் சென்றேன். செல்லும் வழியை நான் தவறவிட்டதால், வழிதப்பி நான் சென்ற பாதையில் ஒரு புதுப்பிக்கப்பட்ட இந்து ஆலயமும் அதன் அருகில் நிற்கும் அழகிய பனை மரமும் என் கண்ணிற்குப் பட்டது. ஒற்றை மரமாக அது இருந்தபோதிலும்,  அவ்வாலயத்திற்கு அது அழகு சேர்த்தது. கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவ்விடத்தில் நான் செலவிட்டேன். எனது வழி  எப்போதும் பனை வழி தான். ஆகவேதான் வழிதப்பினாலும் பனை மரங்கள் என் கண்களுக்கு விருந்தாக எங்கும் நின்றுகொண்டிருக்கின்றன.

நடைக்காவு என்ற ஊரில் திரு. பாலையன் அவர்கள் இருக்கிறார்கள்.பாலையன் அவர்கள் என்னை மிகவும் நேசித்தவர்.  நான் மும்பையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றும்போது அவரை சந்தித்தது. அவரது மகள் புஷ்பா மூலமாக எனது எண்ணை வாங்கி என்னிடம் பேசி என்னை பார்க்க வாருங்கள் என்றார். பொதுவாக திருச்சபை அங்கத்தினர்கள் என்போன்ற பணிகளை செய்பவர்களை விரும்புவதில்லை. ஆனால் பாலையன் அவர்கள் என்மீது மிகப்பெரும் மதிப்பை கொண்டிருந்தார். “பனையேறி பாஸ்டரே” என அன்புடனே அழைப்பார். அவரது மகள் புஷ்பா, மருமகன் கிறிஸ்துராஜ், பேரபிள்ளை ஸ்னேகா, மற்றும் மகன் ஃபெலிக்ஸ் அனைவருமே என்னை மிகவும் நேசிப்பவர்கள். ஆகவே அவரைக் கண்டு பனை விதையினைக் கொடுத்து வந்தேன். என்னைப் பார்த்ததும் அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி. தனது  வீட்டில் நின்ற பனை மரத்தை மகன் முறித்துவிட்டான் என்ற வருத்தம் இருந்தாலும்,  அங்கே வளர்ந்து வரும் ஒரு சிறு வடலியைக் காட்டி சந்தோஷப்பட்டார்.  என்னைப் பார்க்கும் மக்கள் அனைவருமே பனை மரத்தினை கண்டிப்பாக நாம் பாதுகாக்கவேண்டும் எனும் நிலைப்பாட்டிற்கு வந்துவிடுகிறார்கள் என்பதுவே  நான் அடைந்த ஆகப்பெரிய வெற்றியாக கருதுகிறேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 5

ஜனவரி 16, 2021

பனை கலைஞர் மாவட்டம்

சேவியர் அவர்களை நான் பால்மா மக்கள் அமைப்புகளுக்கு அழைத்துச் சென்றேன். பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின் ஒரு அங்கமாக இருந்த பனைத் தொழிலாளர் பேரவையானது அதன் நிறுவனர் பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் இலட்சியக் கனவான ” பனைத்தொழிலாளர்களின் ஒன்றிணைவு, தற்சார்பு சமூகம், இவற்றால் விளையும் சுதந்திரம் மற்றும் வாழ்க்கைத்தரம்  உயர்தல்” என்ற கோட்பாட்டின் வழி தனித்து, பால்மா மக்கள் இயக்கமாக தற்பொழுது செயல்படுகிறது. எந்த அரசும் செய்யாத வகையில் 165 முதிய  பனைத்தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமும், பனைத் தொழிலாளர்களின் மனைவியாக இருந்து விதவையானவர்களுக்கும் உதவிசெய்துவருகிறார்கள். இங்கு உருவாக்கியிருக்கும் ஒரு புதிய சந்தை பொருளினை காண்பிக்கவே நான் சேவியர் அவர்களை அழைத்து வந்தேன். 

பால்மா மக்கள் அமைப்பின் தலைவராக திரு அன்பையன் என்னும் முன்னாள் பனை தொழிலாளி இருக்கிறார்கள். இதன் செயல் இயக்குனராக நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் பணியாற்றியபோது அங்கு நிதி ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட திரு ஜேக்கப் அவர்களும் இருக்கிறர்கள். என்னை பால்மாவின்  பிரதிநிதியாக 2017 ஆம் ஆண்டுமுதல் முன்னிறுத்திவருகிறார்கள். பால்மா குமரி மாவட்டத்தில் மட்டும்  454 பெண்கள் சுய உதவிக்குழுக்களைக் கொண்டது 186 தொழிலாளர் மன்றங்களும் கொண்டது. குமரியில் மிக பிரம்மாண்டமான வலைப்பின்னல் கொண்டது. தங்கள் அமைப்பிலுள்ள அனைவரையும் இலாப பங்காளர்களாக மாற்றும் உன்னத நோக்குடன் பால்மா செயல்படுகிறது.  

2018 ஆம் ஆண்டு பனம்பழங்கள் எனும் உணவுப்பொருள் மிகப்பெருமளவில் வீணாகின்றன என்பதனை குறித்து நான் ஒரு கட்டுரை எழுதினேன். அதனை வாசித்த செயல் இயக்குனர் ஜேக்கப் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள். அப்போது நான் பனை ஓலைக் குடுவைகள் செய்யும் ஒரு பயிற்சியின் நிமித்தமாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பண்ணைவிளை கிராமத்தை அடுத்த இலங்கையாளவார் தோட்டத்தில் இருந்தேன். மிக பிரம்மாண்டமான பனை தோட்டம் அது. வருடத்திற்கு ஒருமுறை அங்கே பனையேறிகள் வந்து தங்கி பதனீர் இறக்கி அதனை காய்த்து, கருப்பட்டியாக விற்பனை செய்வார்கள். ஆகவே தங்குமிடம் சமையலறை, கிணறு மற்றும் பம்புசெற்று ஆகியவை இருந்தன.

தங்கப்பனைக் கொண்டு வழங்கிய குடுவை பயிற்சி

“உங்க கட்டுரையைப் பார்த்தேன் ஒரு சில பனம்பழங்கள் வேண்டும்” என்று கேட்டார்கள். குமரி மாவட்டத்தில் தேடினால் கிடைக்கும் என்றேன். ஆனால் அவர்கள் இப்போது இங்கே சீசன் இல்லை நீங்கள் எடுத்து வர முடியுமென்றால் ஒருசில பழங்களை எடுத்துவரவேண்டும் என்றார்கள். நான் அங்கிருந்து புறப்பட்டு, நான்கு பனம்பழங்களுடன்  இரவிபுதூர்க்கடை என்ற பகுதிக்கு வந்தபோது இரவு 8 மணி ஆகிவிட்டது.  அந்த இரவு பொழுதிலும் அங்கே வந்து பனம்பழங்களை எடுத்துச் சென்றார்கள். எதற்கு என கேட்டதற்கு விடை ஒரு வாரத்திற்குப் பின்பு எனக்கு கிடைத்தது. என்னை அவர்கள் அலுவலகத்திற்கு அழைத்து, பனம் பழத்தில் ஸ்குவாஷ் செய்திருக்கிறோம் என்றார்கள். எனக்கு ஒரு பாட்டில் கொடுத்து எடுத்துச் செல்லுங்கள் சுவைத்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.  பனம்பழத்தில் உள்ள காரல் தன்மையோடு சிறப்பாகவே அந்த பானம் இருந்தது. பின்னர் அதுவே பால்மாவின் அடையாளமாகிப்போனது.

பனம்பழங்கள் உணவிற்காக சுடப்படுகின்றன

பால்மாவுடன் இணைந்து பனம் பழச் சாறு தயாரிக்கும் ஒரு பயிற்சி பட்டறையினை தமிழக அளவில் நடத்தினோம்.  இந்த பனம்பழச் சாறு குறித்து அறிந்துகொள்ள தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 15 நபர்கள் கலந்துகொண்டார்கள். குறிப்பாக காளிமார்க் குளிர்பானங்களின் அதிபரும் அதில் கலந்துகொண்டார். எங்களது திட்டம் பனம்பழங்கள் பனை மரத்திலிருந்து விழுந்த சில மணி நேரங்களில் வண்டு ஏறி உண்ணத்தகாததாக மாறிவிடும். ஆகவே இவைகளை சேகரித்து எப்படி அதிக நாட்கள் உணவுபொருளாக பயன்படுத்தலாம் என்பதாக இருந்தது. அவ்வகையில் பனம்பழச் சாறு என்பது ஒரு வருட அலமாரி ஆயுள் கொண்டது. தமிழகத்தில் வீணாகும் பனம்பழங்கள் அந்தந்த இடங்களில் சேகரிக்கப்பட்டு அவைகள் பயன்படுத்தப்பட்டால்,  உணவும் வீணாகபோகாது உபரியாக வருமானமும் கிடைக்கும் என்பது தான் எண்ணமாக இருந்தது.

பனம்பழம் உண்பதற்காக வேகவைக்கும் முறை

எங்களுக்கு பயிற்சியளிக்க திரு பால்ராஜ் அவர்கள் வந்திருந்தார்கள். மத்திய அரசு வழங்கிய பயிற்சியினைப் பெற்றவர் இவர். மிக எளியவராக பார்வைக்கு தோற்றமளிப்பவர் என்றாலும், மிக மிக திறன் வாய்ந்தவர். ஜெர்மனியிலுள்ள ஆய்வாளர்களுடன் இணைந்து பனை சார்ந்த ஆய்வுகளை குமரி மாவட்டத்தில் மேற்கொண்டவர். குமரி மாவட்டத்தில் கற்கண்டு விளையாது என்ற கூற்றை உடைத்து முதன் முதலாக கற்கண்டு அறுவடை செய்தவர் இவர். பால்மாவுடன் இணைந்து மேலும் ஒரு சில பயிற்சிகளை முன்னெடுக்க இது ஒரு நல் துவக்கமாக அமைந்தது.

முதல் பனம்பழம் ஸ்குவாஷுடன் ஜேக்கப்

பால்மா பனம் பழங்களில் செய்யும் ஸ்குவாஷ் விற்பனையில் இப்படித்தான் களமிறங்கியது. தனது எல்லைகளை குமரியை விட்டு விலக்கி தமிழகத்தின் பிற பகுதிகளில் காலடி எடுத்து வைக்க முற்பட்டது. மாத்திரம் அல்ல பனம்பழ ஜாம் போன்றவற்றையும் இன்று விற்பனை செய்துகொண்டிருக்கிறது. வரும் நாட்களில் பனம் பழங்களிலிருந்து அழகுசாதனபொருட்களையும் விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள்.

பனம்பழம் ஸ்குவாஷ் பயிற்சி வழங்கு பால்ராஜ்

திரு அன்பையன் அவர்களுட னும் ஜேக்கப் அவர்களுடனும் சேவியர் அவர்கள் சந்தித்து உரையாடினார்கள். திரு அன்பையன் அவர்கள் தற்பொழுது பனை மரம் குறித்த பனையேறியின் பார்வையில் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார். தமிழக அளவில் ஒரு பனையேறி எழுதும் முதல் புத்தகம் என்ற அளவில் இது ஒரு தகவல் களஞ்சியமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.  புறப்படும் முன்பு, தேவையான ஸ்குவாஷ் மற்றும் கருப்பட்டிகளை வாங்கிக்கொண்டார்கள்.

அங்கிருந்து திரு தங்கப்பன் அவர்கள் வீட்டிற்கு சென்றோம். இரவிபுதூர்கடையிலிருந்து பள்ளியாடி செல்லும் சாலையில் இடப்புறமாக இரயில் தண்டவாளத்தின் அருகில் செல்லும் சாலையினைப் பிடித்தால் வாழ்வச்சகோஷ்டம் என்ற பகுதியில் வாழும் தங்கப்பன் அவர்கள் வீட்டை அடையலாம். தங்கப்பன் என்பவர் என்னைப்பொறுத்தவரையில் பனையோலைக் கலைஞர்களுள் மிக முக்கியமான ஆளுமை. முறையான கல்வி கற்காதவர், ஆனால் வறுமையின் நிமித்தமாக தனது சிறு வயது முதலே உழைப்பில் ஊறிப்போய்விட்டவர். அவரது 12 வயது முதல் குடுவை செய்ய குடும்பத்தினருடன் அமர்ந்து உழைத்தவர்.

குடுவை என்பது பனையேறிகளின் அடையாளம்.  குடுவை என்பது சுமார் 40 வருடங்களுக்கு முன்பு வழக்கொழிந்துபோனஒரு கலைப்படைப்பாகும். அன்றைய காலத்தில் பனை ஏறுகிறவர்கள், பனை மரத்தில் மண் கலயத்தினை கட்டியிருப்பார்கள். பனை மரத்திலிருந்து பதனீரை இறக்கி கொண்டு வர பனை ஓலையால் செய்யப்பட்ட பனையோலைக் குடுவையினை பயன்படுத்துவார்கள். திண்டுக்கல் மற்றும் பிற மாவட்டங்களில் சுரை குடுகையினை இதற்கென பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். 

வழக்கொழிந்துபோன பனையோலை குடுவை பயிற்சி வழங்கிய தங்கப்பன் பயிற்சியாளர்களுடன்

பனையோலைக் குடுவை என்பது ஒரு செவ்வியல் படைப்பு. பனை ஓலைகளில் காணப்படும், குருத்தோலை சாரோலை, பனை நார், கருக்கு நார், பனை மட்டை, ஈர்க்கில் என அனைத்து பொருட்களையும் இணைந்து செய்யப்படுவதுவே குடுவையாகும். பனையோலைக் குடுவைக்கு இணையான ஒரு நீர் ஏந்தும் தாவர பாத்திரம் உலகில் வேறு எந்த கலாச்சாரத்திலும் இருந்திருக்காது என நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு இனத்தின் நாடி நரம்பு அனைத்தும் பனை சார்ந்து துடித்தாலொழிய இவ்வித கண்டுபிடிப்பு ஒன்று நிகழ்ந்திருக்க இயலாது. உலகில் வேறு எந்த பகுதியிலும் இதற்கு இணையான பொருள் இருக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.

சுமார் தொண்ணூறுகள் வரைக்கும் மிக எளிமையாக கிடைத்துக்கொண்டிருந்த பனைஓலைக் குடுவைகள் பிற்பாடு அழிவை சந்தித்தன. எனது பனை மர தேடுதலும் விருப்பமும் குடுவையின் அழகில் மயங்கி தான் நிகழ்த்தன என நான் பனைமரச்சாலையிலேயே பதிவு செய்திருப்பேன். இப்படி பனை ஓலைக் குடுவை செய்யும் ஒரு நபரையாவது கண்டடையமுடியுமா என்று குமரி மாவட்டத்தை சல்லடையாக சலித்து தேடிக்கொண்டிருக்கும்போதுதான் தங்கப்பன் அவர்களை சந்தித்தேன். எனக்கு ஒரு குடுவை செய்ய்வெண்டும் என்று சொன்னபோது 1000 ரூபாய் வேண்டும், ஆறு மட்டை சாரோலைகள், மூன்று மட்டை குருத்தோலை மற்றும் ஆறு நீண்ட மட்டைகள் வேண்டும் எனக் கேட்டார். எனது அண்ணன் உதவியுடன் இவைகளை எடுத்துச் சென்று நான் கொடுத்தேன். 2017 ஆம் ஆண்டு அவர் எனக்கு இதனைச் செய்து கொடுத்தார். என்னைப்பொறுத்த அளவில், குமரிமாவட்டத்தில் இருக்கும் எஞ்சிய ஒரே குடுவை தயாரிப்பவர் இவர் தான். தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சிலர் இருக்கக்கூடும். தஞ்சையிலும், பண்ணைவிளையிலும் குடுவை செய்கிறவர்களை சந்தித்திருக்கிறேன்.

தங்கப்பன் அவர்களைக் கொண்டு தான் குடுவை பயிற்சி இலங்கை ஆளவார் தோட்டத்தில் வைத்து நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 7 நபர்கள் வந்திருந்தார்கள். இருவர் ஆண்கள் மற்றும் ஐவர் பெண்கள். பயிற்சி காலம் ஒரு வாரம். எப்படியோ கஷ்டப்பட்டு பெண்கள் ஐவரும் ஆளுக்கொரு குடுவையினை செய்து முடித்தார்கள். தங்கப்பன் அவ்வகையில் ஒரு தலைசிறந்த ஆசிரியர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி ராஜஸ்தானில் நிகழ்ந்த ஒரு சர்வதேச மலர்கண்காட்சிக்கு நான் திரு தங்கப்பன் அவர்களைத் தான் அழைத்தேன். பனை சார்ந்த ஒரு கலைஞரை விமானத்தின் மூலம் பயணிக்கச் செய்தது எனக்கு மனநிறைவளித்ததுடன் முதன் முறையாக பயணித்த அவருக்கு மிகப்பெரும் சந்தோஷத்தை கொடுத்தது. பனை ஏறுகின்ற சங்கர் கணேஷ் அவர்களுக்கு உதவியாகவும் தனது கலைப்படைப்புகளுடனும் அங்கே வந்திருந்தார்கள்.

நாங்கள் அங்கே சென்றபோது தங்கப்பன் அவர்கள் மண் கிளைக்கும் பணிக்கு சென்றிருந்தார். வீட்டில் அவருடைய மனைவியும் இரண்டு பேரபிள்ளைகளும் மட்டுமே இருந்தனர். தங்கப்பன் செய்யும் பொருட்களின் செய்நேர்த்தி என்பது இரண்டு கூறுகளால் ஆனது. ஒன்று அவரது கைகளில் ஒளிந்திருக்கும் கலை நேர்த்தி. இரண்டாவதாக அப்பொருளின் உறுதி அதன் மூலமாக அப்பொருள் நீடித்து உழைக்கும் தன்மை. திரு தங்கப்பன் அவர்கள் வீட்டிற்கு நான் முதன் முறையாக சென்றபோது, அவரது திருமணத்திற்கு அவரே செய்த பனையோலை பாயினைக் காண்பித்தார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட அந்த பாய், கருநாகத்தோல் போல் வழவழப்புடன் காணப்பட்டது. பனை பொருட்களை எடுத்து பயன்படுத்துவது என்பது அதன் மீதான ஆழ்ந்த பற்றுடன் செய்யப்படக்கூடியது என்ற படிப்பினையை தங்கப்பன் தான் எனக்கு கற்றுக்கொடுத்தார். அதற்கென அவர் வாய் திறந்து ஒரு வார்த்தையும் கூறவில்லை. மாறாக தனது கைத்திறனால் உருவாக்கிய பொருட்களின் மூலம் அவர் பேசினார்.

அவர்கள் வீட்டில் செய்யப்பட்டிருந்த இரண்டு பெட்டிகள் மற்றும் ஒற்றைமுக்கு தொப்பி போன்றவற்றை சேவியர், அவர்கள் கூறிய விலைக்கே வாங்கிக்கொன்டார். நாங்கள் தேடி வந்த பனையோலைக் குடுவை கிடைக்கவில்லை. ஆனால் எப்படியும் குடுவையினை உங்களுக்கு அனுப்பிவிடுவேன் என்று உறுதிகூறினேன். அங்கிருந்து நேராக மதிய உணவிற்கு ஜாஸ்மின் வீட்டிற்கு சென்றோம்.

மதியத்திற்குப் பின்பு கிராமிய வளர்ச்சி இயக்கம் (RDM) என்ற ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சென்றோம். பாரக்கன் விளை என்ற பகுதியில் இருக்கும் இந்த நிறுவனத்தை உருவாக்கியவர், பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் நெருங்கிய நண்பரான அறிவர் அருட்திரு. இஸ்ரயேல் செல்வநாயகம். கிராமிய வளர்ச்சி இயக்கம், அப்பகுதியிலுள்ள பெண்களின் தொழில் வாய்ப்புகளுக்காக உருவாக்கப்பட்டது. தையல் மற்றும் வேறு பல வேலைவாய்ப்புகளும் இங்கு உண்டு. பெண்கள் வீட்டிலிருந்தபடியே வேலைகள் செய்யலாம். குமரி மாவட்டத்தில், பனை ஓலைகள் சார்ந்து அழகு பொருட்களைச் செய்யும் கடைசி தலைமுறையினரில் இவர்கள் குழுவும் ஒன்று. மிகவும் திறன் வாய்ந்த  இக்கலைஞர்களுக்குப் பின்பு அடுத்த தலைமுறையினர் இக்கலைகளை கற்றுக்கொள்ளாதது வேதனையானது.அங்கிருந்த பொருட்களைப் பார்த்த பின்பு, அங்குள்ளவர்களோடு சற்றுநேரம் சேவியர் உரையாடினார். பின்னர் அங்கிருந்து பனை ஓலையில் கடவம் செய்யும் பாலம்மாளைக் காண ஓலைவிளைக்கு செல்லலாம் என்று கூறினேன். சேவியர் சரி என்றார்.

சற்றேறக்குறைய மாலை 5 மணி ஆகிவிட்டது. என்னைப்பொறுத்தவரை பாலம்மாள் அவர்கள் கடவம் செய்வதில் நிபுணத்துவம் கொண்டவர். ஓலைகள் அவர்கள் பேச்சை கேட்கும். எவ்விதமான கடவம் வேண்டும் என்று கேட்டாலும் ஒரு மணி நேரத்தில் அவைகளைச் செய்து நமது கரத்தில் தூக்கிப் போட்டுவிடுவார்கள். அன்று நாங்கள் சென்றபோது சற்று வேலையாக இருந்தார்கள். ஆகவே நாங்கள் அருகிலுள்ள கடைக்கு தேனீர் குடிக்கப் போனோம். செல்லும் வழியில் “கூவக் கிழங்குகள்” விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதைக் சேவியர் கண்டு ஆச்சரியத்துடன் சிறிது வாங்கிக்கொண்டார். குமரி மாவட்டத்தில் கிடைக்கும் இந்த கிழங்கு மிகவும் சுவையானது. வெண்மை நிறத்திலிருக்கும் இதனைக் கடித்து சுவைக்கையில் பால் ஊறி வரும். தனித்துவமான சுவைக்கொண்டிருக்கும். கொஞ்சமே கொஞ்சமாக கோதல் எஞ்சும். குமரியின் மேற்கு பகுதியிலுள்ளவர்களை “கிழங்கன்” என்று அழைப்பதற்கு அவர்கள் உணவில் பெருமளவில் சேரும் கிழங்குவகைகள் தான் காரணம். 

கடவம் முடையும் பாலம்மாள்

ஓலைவிளை ஜங்ஷனின் அருகிலேயே  பாறைகளை உடைத்துக்கொண்டிருந்தார்கள். அந்த இடத்தில் நாங்கள் சென்று நின்றோம். எவ்விதம் வளர்ச்சி என்ற பெயரில் நமது வளங்கள் சுரண்டப்படுகின்றன என சேவியர் கூறினார். நமது வளார்ச்சி திட்டங்கள் எப்படி அழிவை நோக்கியதாகவே இருக்கின்றன என்பதை ஒரு பொறியாளராக அவர் விளக்கிக் கூறும்போது, சூழியல் சார்ந்த பொறுப்புணர்வு ஒரு சமூகத்திற்கு மிக முக்கிய தேவையாக இருக்கின்றன என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.

பனையோலைக் கலைஞர்களைப் பார்க்கையில் எல்லாம் எனக்குள் ஒரு பிரமிப்பு ஏற்படும். அவர்களிடம் சில குறிப்பிட்ட பண்புகள் காணப்படுகின்றன. அவர்கள் ஓலைகளை எடுத்து வைக்கும் அழகு, நேர்த்தி போன்றவை பிரமிக்க வைப்பது. அவர்கள் ஓலைகளை தெரிவு செய்வது கூட ஒன்றுபோலவே இருக்கும். எவ்வித சூழலிலும் இறுதி வடிவம் மிக அழகாக காட்சியளிக்கும் வண்ணம் செய்துவிடுவார்கள். பொருட்களைச் செய்வதில் உள்ள வேகம், கூடவே வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ளும் திறன் என பல்முனை திறன் பெற்ற ஆளுமைகளாக இருப்பார்கள். பார்வைக்கு மிக அதிக ஓலைகளை விரயம் செய்வதுபோல காணப்பட்டாலும், மிக சிக்கனமாக ஓலைகளைக் கையாள்வது உடனிருந்து பார்ப்பவருக்குத்தான் தெரியும். பாலம்மாளுக்கு ஒருவேளை கல்வி பயிலும் வாய்ப்பு கிட்டியிருந்தால் குமரி மாவட்டத்தில் உள்ள மிக முக்கிய கல்லூரியில் விரிவுரையாளராக மாறியிருப்பார். அப்படி பேச்சு கொடுப்பார்.

ஆரம்பத்தில் கடவம் குறித்து எனக்கு சரியான புரிதல் இருந்ததில்லை. ஆகவே கடவம் செய்பவர்கள் மேலும் எனக்கு முதலில் பெரிய மதிப்பு இருந்ததில்லை. ஆனால் பாலம்மாள் தனித்திறன் வாய்ந்தவர் என்பதனை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மூன்றடி சுற்றளவு கொண்ட ஒரு கடவத்தை செய்யும் திறன் எவருக்கும் எளிதில் வாய்த்து விடாது. அன்னையைப்போன்ற ஒருவராலேயே ஓலைகளை தன் மடியில் குழந்தைகளைப்போல விளையாட விட்டு அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலும்பி நிற்கும் ஓலைகளாய் வழிக்கு கொண்டுவரும் திறமை உண்டு. அவர்களின் கைகளுக்கு மட்டுமல்ல,  தனது பல்லாண்டு அனுபவத்தாலும் கரிசனையாலும் ஓலைகளை ஒன்றிணைப்பவர் என்பதனைக் கண்டுகொண்டேன்.

கடவம் செய்யும்போது, ஓலைகளில் ஈர்க்கில் கிழிக்கப்படாது. ஆனால் அதன் வயிற்றுப்பகுதி மட்டும் சற்று சீர் செய்யப்பட்டு இணைக்கப்படும். இதில் இணைத்திருக்கும் ஈர்க்கிலால் ஒரு புறம் இப்பெட்டிகள் உறுதி பெற்றாலும், மற்றொரு வகையில் பார்க்கும்போது ஈர்க்கில் இருப்பதால் இரட்டை ஓலைகள் இயல்பாக இப்பின்னல்களில் அமைந்துவிடுகிறது. இதற்கு மேல் பொத்தல் என்று சொல்லகூடிய அதிகப்படியான பின்னல் கடவத்தின் உறுதியினை மேம்படுத்தி நீடித்து உழைக்கச் செய்கிறது.

சிறிய கடவத்தினை நேர்த்தியாக உருவாக்கிக்கொண்டிருக்கும் பாலம்மாள்

கடவம் என்பது குமரி மாவட்டத்தில் செய்யப்படும் பெட்டிகளிலேயே மிகப்பெரிய வகையாகும். குமரி மாவட்டத்தில் பல்வேறு தேவைகளுக்காக இவைகள் செய்யப்படுகின்றன. திருமண வீட்டில் அப்பளம் பொரித்து வைக்கவும், பழங்கள் எடுத்துச் செல்லவும், சோறு எடுத்துச் செல்லவும் இவைகள் பயன்பட்டன. சந்தைகளில் காய்கறிகள் வைக்கவும், சுமடு எடுத்து செல்லுகிறவர்கள், கடவங்களிலேயே பொருட்களை எடுத்துச் செல்லுவதும் குமரி மாவட்டத்தில் காணப்படும் அன்றாட காட்சி. மீன் விற்பவர்கள் பனை ஓலைக் கடவத்தில் தான் பல மைல்கள் கடந்து மீனை எடுத்துச் சென்று விற்பார்கள். அக்காலங்கள் ஐஸ் இல்லாத மீன்கள் விற்கப்பட்ட காலம். மேலும் எண்னை பிழியும் செக்கு இயக்கப்படுமிடங்களில் கூட பனை ஓலைக் கடவமே பயன்பாட்டில் இருக்கும். காயவைத்த தேங்காய்களை எடுத்துச் செல்ல இவைகள் பயன் பட்டன. வீடுகளில் உரம் சுமக்க, மண் சுமக்க மற்றும் சருகுகள் வார என பல்வேறு பயன்பாடுகள் இங்கே இருந்தன.

“கடவத்துல வாரியெடுக்கவேண்டும்” என்கிற சொல்லாடல் தெறிக்கெட்டு இருசக்கர வாகனத்தில் செல்லும் இளைஞர்களைப் பார்த்து பெரியவர்கள் சொல்லுவது. “பெருசா கடவத்துல கொண்டுவந்துட்டா” என மருமகளைப் பார்த்து மாமியார் கேட்பதும் உண்டு.

கடவங்களில் அதன் நான்கு முக்குகள் தான் முதலில் பாதிக்கப்படும். அப்போது ஓலைகளை கொண்டு பெரியவர்கள் பொத்தி பயன்படுத்துவார்கள். பொத்தி எனும் வார்த்தை ஓட்டையை அடைப்பது என்பதுடன், அதனைப் பலப்படுத்துவது, மேலும் ஒரு வரிசை ஓலைகளை இணைத்துக்கொள்ளுவது என்ற பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. என் குழந்தையை பொத்தி பொத்தி வளார்த்தேன் என்பது கூட மிக கவனமாக ஒன்றன் பின் ஒன்றாக கவனித்து வளர்த்தேன் என்கிற பொருள்பெறுவது இப்படித்தான். அதிகமாக சாப்பிடுகிறவர்களை “கடவங்கணக்குல அள்ளி தின்னுகான்” என்பார்கள்.

ஓலைவிளையில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பும் கூட நூற்றிற்கு மேற்பட்ட மக்கள் கடவம் பின்னுவதனையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது பனை ஓலைகள் இங்கே கிடைப்பதில்லை. இராமநாதபுரத்திலிருந்து வருகின்ற ஓலைகளை நம்பியே இங்கே தற்போது தொழில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஓலைகள் பெரிய லாரியில் கொண்டுவரப்பட்டு, பின்னர் அவைகள் சிறிய டெம்போவில் எடுத்துச் செல்லப்பட்டு மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். ஓலைகள் குறித்த காலத்திற்கு வராமை, ஓலைகளுக்கான விலையேற்றம், தரமற்ற ஓலைகள் என பல காரணங்களால் இன்று பெரும்பாலானோர் இதனை விட்டு வெளியே வந்துவிட்டனர்.

ஓலைகளை செய்து முடித்த பின்பு, சேவியர் ஒரு வேண்டுகோளை அவர்கள் முன்பு வைத்தார். இதே பெட்டி ஒடுங்கி சற்றே உயரமாக வரும்படி செய்ய முடியுமா? பாலம்மாள் முடியும் என்றார்கள். ஆனால் அதுகுறித்து அவர்கள் யோசித்திருக்கவில்லை. உடனடியாக ஒன்றைச் செய்ய சொல்ல, அவர்கள் அதனை செய்து பார்த்தார்கள். இருட்டிவிட்டது. ஆனால் அவர்களது கைகளோ தட்டச்சு வேகத்தில் பின்னிக்கொண்டு சென்றது. இருளில் அதனையும் பொத்திக் கொடுத்தார்கள். ஆனால் கடவத்தின் நேர்த்தி கைகூடவில்லை. அது அப்படித்தான், ஒரே வடிவம், சீரான அமைப்பு என ஒருவர் பின்னிக்கொண்டு வருகையில், அதிலிருந்து மாறுதலான வடிவம் ஒன்றைச் செய்யச் சொன்னால் அது அத்துணை எளிதில் நடைபெறுவது இல்லை. சேவியர் அவர்கள் அதனைப் புரிந்துகொண்டார். அவர்கள் பாலம்மாளிடம் எனக்கு இதுபோல 5 பெட்டிகள் வேண்டும், பொறுமையாக செய்து அனுப்புங்கள் என அட்வான்ஸ் கொடுத்துவிட்டு நன்றி கூறி விடைபெற்றார்.

இரவாகிவிட்டதால் சேவியர் திரும்பவேண்டிய நேரம் வந்தது. ஆனால் அவர் சங்கர் கணேஷ் என்ற எனது நண்பனும், பனையேறியும், பனை ஓலைக் கலைஞனை காண விரும்பினார்கள். சங்கருக்கு அப்போது திருமணம் நிச்சயமாகியிருந்தது. ஆகவே பல்வேறு வேலைகளில் அவன் சிக்கிகொண்டதால், எங்களை சந்திக்க வரவில்லை. ஆகவே நான் கூறினேன், நாங்கள் உனது வீட்டைத்தான் நோக்கி வருகிறோம் என்று. அவன் வேலைகளை முடித்துவிட்டு எங்களை திக்கணங்கோட்டில் வைத்து சந்தித்தார். இரவு சற்றேறக்குறைய 9 மணி இருக்கும்.

சங்கர், தான் செய்த பொருட்களைக் அவருக்கு விளக்கி காட்டினான். விலைகளைக் குறித்து விசாரித்தபின், மெல்லிய சிரிப்போடு, இதனைவிட விலைகுறைவாக நேர்த்தியாக பழவேற்காட்டில் செய்வார்கள் என்றார். சேவியர் அவர்கள், என்னோடு பேசும்போது எப்படி அவர்களால் ஒரு சிறந்த தரத்தை கைக்கொள்ள முடிகிறது என்பதைக் குறித்து விவரித்தார்கள். ஓலைகள் பழவேற்காட்டைச் சார்த்தவை. ஒவ்வொரு பொருளும், ஆர்டரை முன்வைத்தே செய்யப்படுகிறது. பெரும்பாலான இடங்கள் இவ்வித முறைமையினையே கைக்கொள்ளுகிறார்கள், ஆனால் பழவேற்காட்டைப் பொறுத்த அளவில், ஓலைகள், வாங்கப்பட்ட பின்பே பொருட்கள் செய்யப்படும். ஓலைகளை ஏற்கனவே வாங்கி பரணில் போட்டு பழைய ஓலைகளில் பொருட்கள் செய்யும் வழக்கம் அங்கே இல்லை. அவ்வகையில் பார்க்கும்பொது, பழவேற்காட்டில் உள்ள கூலி குமரி மாவட்டத்தை விட குறைவு. தயாரிப்பு செலவு இன்னும் குறைவாக இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல் அவர்களது கலைத் திறன் மேல் ஒரு மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார் சேவியர்.  

அழகு பொருட்கள் மீது எனக்கு மிகப்பெரிய ஈடுபாடு தற்போது இல்லை. பாரம்பரிய பொருட்களைச் செய்வோர் மீது எனக்கு மிகப்பெரிய காதலுண்டு. எப்படி இஸ்லாமியர் வாயிலாக நமக்கு அழகிய கலைப்பொருட்கள் வந்திருக்கும் எனவும், எப்படி பரதவர் பெண்கள் பனை ஓலைக் கலையில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள் என்றும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நான் பார்த்தவரையில் மணப்பாடு மிகச்சிறந்த பனைக் கலைஞர்களைக் கொண்ட இடம். அவ்விடத்தில் பரதவர்கள் தான் அதிகம் இருக்கின்றார்கள்.

பேச்சினூடே பரதவர்களுக்கும் பனைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்றும், அவர்கள் தயாரிக்கும் ஒரு உணவு பொருளை நீங்கள் சுவைத்துப்பாருங்கள் என்று கொடுத்தார்கள். வாழைப்பழத்தை பதனீரில் இட்டு இடித்து செய்யும் ஒரு தின்பண்டம். அல்வா போல இருந்தது. இன்னும் அனேக உணவுபொருட்கள் உண்டு என்றார். மிக அழகிய வேலைப்பாடுகள் மட்டுமல்ல, பல்வேறுவகைகளில் மீன்களைப் பிடிக்கவும், கள் உட்பட பல்வேறு உணவு பொருட்களை பனை சார்ந்து அவர்களே அமைத்துக்கொண்டுள்ளனர் என்றார். நாங்கள் மெய்மறந்து நின்றோம்.

உண்மையில், நமது உரையாடல் என்பது மேலோட்டமானது, நமக்கடுத்திருக்கும் நபர்களின் வாழ்வியல் சார்ந்து நாம் அறிந்தவைகள் மிகக்குறைவு. நான் 2017 – 2019 வரை குமரி மாவட்டத்தில்  தங்கியிருந்தபோது தான் நெய்தல் நிலத்திற்கும் பனைக்குமான தொடர்பைக் குறித்து ஆராய துவங்கினேன். நாங்கள் தங்கியிருந்த மிடாலக்காடு பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் குறும்பனை என்ற கடற்கரை கிராமம் இருக்கின்றது. குமரி மாவட்ட கடற்கரைகள் அனைத்துமே, தென்னை மரங்களால் நிறைந்தவை. தென்னைகள் என்பவை பனைகளுக்கு மாறாகவும், புன்னை மரங்களை அழித்தும் வேரூன்றியவை. அப்படியானால் குறும்பனை? நாங்கள் தேடி சென்றபோது இன்னும் சிதைவுறாமல் ஒரு பனங்காடு அங்கே இருப்பதைப் பார்த்தேன். கன்னியாகுமரி, சொத்தைவிளை மற்றும் முட்டம் போன்ற கடற்கரைகளில் இன்றும் பனைமரங்கள் உயர்ந்து நிற்கின்றன. கடற்கரையில் வாழும் மக்களுக்கு பனை மரம் மிகவும் நெருக்கமானது தான் சந்தேகம் இல்லை.

நான் பழவேற்காடு பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தை அவரிடம் கூறினேன். அவர் தங்கும் வசதி எதுவும் கிடையாது என்றார். எப்படியாவது ஓரிடத்தை ஒழுங்கு செய்யுங்கள் என்றேன். பார்க்கிறேன் என்றார். நீங்கள் எதிர்பார்க்கும் வசதிகள் ஏதும் இருக்காது, ஆனால் வாருங்கள் என்றார். கண்டிப்பாக பழவேற்காட்டில் சந்திப்போம் என்று கூறி பிரிந்தோம். அவர் காரில் நாகர்கோவில் செல்ல சங்கர் தனது பைக்கில் என்னை தேவிகோடு அழைத்துச் சென்றார். வீட்டில் இருவருமாக இரவு உணவைச் சாப்பிட்டோம்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 4

ஜனவரி 12, 2021

ஓலைகளினூடாக

கேரள தமிழ்நாடு எல்கையான களியக்காவிளை வந்தபோது தடுத்து  நிறுத்தப்பட்டோம். எட்டு வயது மித்திரனைத் தவிர அனைவரும் கண்டிப்பாக கொரோனா தொற்று பரிசோதனைக்கு உட்படவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். பரிசோதனை முடிந்து புறப்படும்போது நள்ளிரவு ஒரு மணி. மூன்று நாளைக்கு பிறகு தான் முடிவு வரும் என குறுஞ்செய்தி வந்தது.

காலை என்னைத் தேடி பொறியாளர். சேவியர் பெனடிக்ட் அவர்கள் வருவதாக சொல்லியிருந்தார். சேவியர் அவர்கள் பனை மீது தீரா விருப்பு கொண்டவர்கள். பல சர்வதேச பயணங்களை மேற்கொண்டவர். உலகிலுள்ள பல்வேறு வகையான பனைகளை மட்டுமே தேடி தேடி சேகரித்து தனது  தோட்டத்தில்  நட்டு பராமரித்தவர்.. தற்போது பழவேற்காடு பகுதிகளில் உள்ள பரதவர் பெண்களுக்கு பனை ஓலை பொருட்கள் செய்யும் பயிற்சிகளை கொடுத்து வருகிறார். அதன் மூலமாக அங்குள்ள பெண்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவருகிறார். நான் பனை சார்ந்து இயங்குகிறேன் என்றால் அவர் அதனை விட பலமடங்கு வீரியமாக பழவேற்காடு குறித்து இயங்குகிறவர்.  நான் தமிழகம் வருகிறேன் என்றவுடன் அவரது தென் மாவட்ட பயணங்களோடு கன்னியாகுமரி பயணத்தையும் இணைத்துக்கொண்டார்.  அன்று காலை கார் முழுக்க தனது பயணத்தில் சேகரித்த பனை பொருட்களை எடுத்து வந்திருந்தார் சேவியர். கன்னிப்பெட்டி என்ற ஒரு அழகிய பெட்டியை எனக்கு பரிசாக கொடுத்தார்.

சேவியர் தென் தமிழகத்தில் தாம் சேகரித்த பனை ஓலை/ நார் பொருட்களுடன்

கன்னிப்பெட்டி குறித்து நான் 20 வருடங்களுக்கு முன்பே அறிந்திருக்கிறேன். மார்த்தாண்டம் சந்தையில் பனை ஓலைகள் சேகரிக்கச் சென்றபோது அங்கே இவ்வித பெட்டிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. திருமண வாழ்வினை எட்டுமுன் ஒரு பெண் இறந்துபோனால், இவ்விதமான கன்னிப்பெட்டியில் துணிகள் மற்றும் சில பூஜைக்குரிய பொருட்களை வைத்து அதனை உறவினர்களுக்கோ அல்லது ஏழைகளுக்கோ கொடுக்கும் வழக்கம் இன்றும் தென் மாவட்டங்களில் இருக்கிறது.

சேவியர் எடுத்துவந்த கன்னிப்பெட்டிகள் ராமனாதபுரம் பகுதிகளில் மட்டுமே செய்யப்படுகின்ற ரகம் என்பதை நான் பார்த்தவுடனேயே புரிந்துகொண்டேன். மிகவும் நேர்த்தியாக பின்னப்படுகின்ற இவ்வகை பெட்டிகள் விலை மலிவானவை. 250 ரூபாய்க்குள் இப்படியான ஒரு பெட்டியினை நாம் கன்னியாகுமரி மாவட்டத்திலேயே வாங்க முடியும். அப்படியானால் தயாரிப்பவர்களுக்கு 100 ரூபாய் கிடைப்பதே அபூர்வம்.

கன்னிப்பெட்டியின் பின்னல் இரட்டை அடுக்கானது. சற்றே அகலமான சாரோலைகளைக்கொண்டு உட்புற பின்னலும் மெல்லிய குருத்தோலைகளும் வண்ணமேற்றிய ஓலைகளையும் கொண்டு வெளிப்புறமும் பின்னப்பட்டிருக்கும். உட்புற பின்னல் கூட்டல் வடிவிலும் வெளிப்புற பின்னல் பெருக்கல் வடிவிலும் இருப்பது இவ்வித கலைஞர்களுக்குள் உறைந்திருக்கும் பின்னல் திறமைகளுக்கு சான்று. மிக நேர்த்தியாக, சர்வதேச தரத்தில் விளிம்பு கட்டப்பட்டிருக்கும். கைப்பிடியானது பெட்டியின் அடிப்பகுதி வழியாக வந்து பெட்டிக்கு மேற்புறம் எழுந்து நிற்கும். இந்த பெட்டிக்கு கீழ்புறம் இருப்பதைப் போன்ற வடிவில் மேற்பகுதியில் சிறிய அளவில் பின்னி மூடி இட்டிருப்பார்கள்

கன்னிப்பெட்டிகள் என்பது பல்வேறு வகைகளில் இருக்கும் என்றே நினைக்கிறேன். குமரி மாவட்டத்தில் ஒரே ஒரு இஸ்லாமிய பெண்மணி ராஜாவூர் பகுதிகளில் இவ்வித கன்னிப்பெட்டிகள் செய்வதாக கேள்விப்பட்டு ஓரிருமுறை அவர்களை சந்திக்கச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறேன். நமது நாட்டார் மரபுகளில் இஸ்லாமியரின் பங்களிப்பு இணைந்திருக்கிறது என்பது நமது பண்பாட்டின் விரிவை விளம்பும் சான்று. சமயங்களுக்கிடையில் இருந்த நல்லுறவுகளை எடுத்தியம்பும் பனை அனைத்து சமயங்களுக்கிடையிலும் ஒரு சமாதான தூதுவராக நிலைநிற்கிறது. குமரி மாவட்டத்தில் பின்னப்படுகின்ற இந்த கன்னிப்பெட்டி பார்வைக்கு சாதாரண மூடிபோட்ட பெட்டியைப்போலிருக்கும். இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் தஞ்சாவூர்  சென்றிருந்தபோது அங்கும் ஒரு கலைஞர் கன்னிப்பெட்டி செய்திருந்தார். வடிவநேர்த்தியில்  குமரிமாவட்டத்திற்கும் இதற்கும் பெருத்த ஒற்றுமைகள்  இருந்தன. ஒரு சில சிறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. இவ்வித வித்தியாசம் என்பது மாவட்டத்திற்கான வித்தியாசம் என நாம் புரிந்துகொண்டாலும், பனை ஓலைகள் பரந்துபட்ட தமிழக  காலாச்சார சடங்குகளில் முக்கிய இடம் பிடித்திருக்கின்றன என்பதை ஆணித்தரமாக நிறுவுகின்றன.

சேவியர் கொண்டுவந்த  பனை ஓலைப் பொருட்களின் வகைகளைப் பார்க்கும்போதே அவர் தமிழகத்தின் எப்பகுதிகளையெல்லாம் கடந்து வந்திருப்பார் என என்னால் யூகிக்க முடிந்தது. அவர் வைத்திருந்த ஒரு அழகிய கோழி குஞ்சுகளை இட்டுவைக்கும் பெட்டி என் கவனத்தை வெகுவாக கவர்ந்தது. ஏனென்றால் அதை குறித்து நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதே வடிவிலான படத்தை நான் பார்க்கவும் செய்திருக்கிறேன், ஆனால், அதனை யார் தயாரிக்கிறார்கள் என என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. எனது உற்சாகத்தைப் பார்த்து சேவியர் இதனை எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். ஆம்,  அவர்களின் தாராள குணத்திற்கு அளவே கிடையாது.  நான்  தான் வேண்டாம் என்றேன். இதனை தயாரிப்பவரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்பதே எனது தாகமாக இருந்தது. குருத்தோலை ஈர்க்குகளால் கட்டில் பின்னல்கள் போல் அறுகோண வடிவில் பின்னப்பட்ட அந்த கூடு ஒரு, அழகிய கலைப் படைப்பு. குமரி மாவட்டத்திலோ தமிழகத்தின் பிற பகுதிகளிலோ காணக்கிடைக்காதது. இவ்வித கோழி குஞ்சுகளை விடும் கூடுகள் செய்யும் ஒரே ஒரு பாட்டி திசையன் விளையில் இருகிறார்கள் என்ற குறிப்பையும் சேவியர் எனக்குக் கொடுத்தார். இவ்வித கலைஞர்களே நமது  தேசிய சொத்து என்ற எண்ணமே என்னுள் எழுந்தது.   இவ்வித தனித்துவ திறன் மிக்க கலைஞர்களை  எவ்வகையிலும் எவரும்  பொருட்படுத்துவதில்லை.

கோழிக்குஞ்சுகளை அடைக்கும் பனை ஈர்க்கில் கூடு

நான் அவருக்கு ஆரே தூய பவுல் மெதடிஸ்ட் தமிழ் திருச்சபையிலிருந்து எடுத்து வந்த அட்டைபெட்டியில் குமரி மாவட்ட பனை விதையைக் கொடுத்தேன். ஜாஸ்மின் வீட்டின் அருகிலிருக்கும் ஒரு மரத்திலிருந்து எடுத்த விதை அது. கருப்பு காய்ச்சி ரகம். ஒவ்வொரு பழமும் பிரம்மாண்டமாக கிட்டத்தட்ட 2.5 கிலோ எடையுள்ளதாக இருக்கும். தமிழகத்தில் சிலர் இதனை யாழ் விதை எனக் கூறுவார்கள். பெயர்கள் எப்படியிருந்தாலும், இது யாழ் விதை அல்ல என்பதே எனது எண்ணம். குமரி மாவட்டம் மட்டுமல்ல, மும்பை பகுதியில் கூட இவ்வித பெரிய பழங்களை நான் கண்டிருக்கிறேன். திருநெல்வேலி அம்பாசமுத்திரம், தென்காசி, தூத்துக்குடி, பகுதிகளிலெல்லாம் மூன்று கிலோவைத் தாண்டிய பனம்பழங்கள் இருக்கும் என கேள்விப்பட்டிருக்கிறேன். மிகப்பெரிய தேங்காயைப் பார்க்கும்போது, அது யாழ்பாண தேங்காய் என கூறப்படுவதால், பனம்பழங்களிலும் ஒரு யாழ் பனம்பழத்தை யாரோ கிளப்பி விட்டிருக்கிறார்கள் என்றே நான் எண்ணுகிறேன்.

பனை விதை பெட்டியினை சேவியர் அவர்களுக்கு நான் கொடுக்கிறேன்.

2013 ஆம் ஆண்டு, நான் கம்போடியா சென்றபோது அங்கோர்வாட் அருகில் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு இளநீர் ஒரு டாலர் மட்டுமே. அந்த தேங்காய் மிக மிக பிரம்மாண்டமானது. இந்தியாவில் அதற்கு இணையான தேங்காய்களை நான் பார்த்ததே இல்லை.  அது போலவே, பர்மா சென்றிருந்த போதும் நானும் எனது குக்கி பழங்குடியின நண்பன் மாங்சா ஹோப்கிப்பும்  (Mangcha Haopkip)  இணைந்து  ஒரே இளநீரை பகிர்ந்து குடித்தோம். இந்தியாவில் காணப்படும் இரண்டு மிகப்பெரும் தேங்காய்களிற்கு இணையானது அங்கு விற்கப்படும் ஒரே தேங்காய். அப்படியானால் இலங்கைக்கும் நமக்கும் உள்ள உறவின் வெளிப்பாடாகவே இப்பெயர் சூட்டல் இருக்கிறது என நான் கருதுகிறேன். மேலும் பனை மரத்திற்கு யாழ்பாணம் என்பது ஒரு மைய்யம் கூட.

கருப்பு காய்ச்சி பனம்பழம்

சேவியர் அவர்களுக்கு மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் செல்ல வேண்டும் என்னும் ஆசை இருந்தது. பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தைக் குறித்து அவர் கேள்விபட்டிருக்கிறார்.  2004 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டுவரை இங்கே நான் பணியாற்றியிருக்கிறேன். ஆகையினால், அந்த அலுவலகத்திற்குள் உரிமையோடு செல்லுவேன். ஆகவே அந்த அலுவலகத்திற்கு முதலில் செல்ல தீர்மானித்தோம்.

பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்கள் 1975ஆம் ஆண்டு பனைத் தொழிலாளர்களுக்காக ஒரு இயக்கத்தை மார்த்தாண்டம் பகுதிகளில் ஆரம்பித்தார். பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் என்ற மாபெரும் இயக்கம்,  பனை தொழிலாளர்களது வாழ்வில் மரணம் மற்றும் நிரந்தர ஊனம் போன்ற சவால்களை எதிர்கொள்ளும்படியாக துவங்கப்பட்டது. மிக நுண்மையாக பனை தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கண்டறிந்து அவைகளை தீர்த்துக்கொண்டிருந்தார்கள். அக்காலங்களில் பனை தொழிலாளர்களுக்கு பதனீர் காய்ச்சுவதற்கு விறகு என்பது மிக முக்கிய தேவையாக இருந்தது. ஆனால் குமரி மாவட்டத்தில் போதுமான விறகுகள் கிடையாது. அச்சூழலில், பிற மாவட்டங்களிலிருந்து லாரிகளில் விறகுகளை வர வைத்து தேவையானவர்களுக்கு மிகக்குறைந்த விலையில் விற்கப்பட்டது.

பேராயர் உலக கிறிஸ்தவ மன்றத்தின் தலைவராக இருந்தவர். ஆகவே அவரால் சர்வதேச உதவிகளைப் பெற முடிந்தது. உலகில் எங்குமே நிகழாத பனை தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் முயற்சி, அவர்களுக்கான உதவிகள், மற்றும் புது தொழில்நுட்பங்களை கண்டடைந்து அவர்கள் பொருட்களை சர்வதேச சந்தைக்கு எடுத்துச் செல்ல பேராயர் ஆர்வம் காட்டினார்கள். ஆனால், பனைத் தொழிலாளர்களது மரணம், அவர்களின் வாழ்வில் ஏற்படும் நிரந்தர ஊனம் மற்றும் சமூகத்தின் பார்வையில் இழிவாக காணப்பட்ட அன்றைய சூழல்  பேராயரது சிந்தனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கூடவே பனைத் தொழிலாளர்களுக்கு சமூகத்தில் இருந்த அங்கீகாரமற்ற சூழ்நிலை இவர்கள் வாழ்வை மாற்றினால் ஒழிய இவர்களை மீட்கவியலாது என்ற எண்ணத்தை பேராயர் அவர்களுக்கு கொடுத்தது.

பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் தொண்ணூறுகளின் மையப்பகுதிகளில் “வளர்ச்சி” என்ற நோக்கில் செயல்பட ஆரம்பித்தன. அன்றைய சூழலில் பனை அது சார்ந்து வாழும் மக்களுக்கு ஒரு கால்விலங்கு என கணிக்கப்பட்டதும் அவ்விலங்கினின்று உதறி மேலெழுவதுமே அன்றைய சவாலாக இருந்தன. ஆகவே பனையேறிகள் பனைத் தொழிலை விட்டு வெளிவருவதற்குண்டான கடனுதவி போன்றவைகளை மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளார்ச்சி இயக்கம் முன்னெடுத்தது. பனை மர தொழிலாளர்களை சிறு பெட்டிகடைகள் வைக்கவும், பழைய குடிசை மற்றும் சிதிலமடைந்த வீடுகளை மாற்றி நவீன வீடுகளை கட்டிக்கொள்ளவும், கல்வியில் உயர பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை என பல்வேறு உதவிகள் செய்து அவர்கள் பொருளியல் மற்றும் சமூக வாழ்வில் ஏற்றம் பெறச் செய்தார் பேராயர்.

பனையோலையில் செய்யப்பட்ட பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களின் படம்

இந்த பணியில் அவர்கள் நிர்தாட்சண்யம் இல்லாமல் பனை மரங்களை கைவிட்டனர். அதற்கு காரணம் பனையா மனிதனா என்கிற கேள்வி முன் பேராயர் தன் தேர்வை வைக்கவேண்டிய சூழலில் இருந்தார். அதாவது, பனை சார்ந்த வாழ்வு சமூக அங்கீகாரத்தையோ பொருளியல் நன்மையையோ கொடாது என அறிந்தபோது, பனையையும் பனைத்தொழிலாளர்களையும் பேராயர் அவர்கள் பிரித்தார். பனை மரங்கள் பனையேறியின்றி வீணாக நிற்பதைக் கண்டவர்கள் அதனை வெட்டிவிட்டு வீடுகளை வைக்கவோ, ரப்பர் தோட்டம் வைக்கவோ அல்லது தென்னை மரங்களை வைக்கவோ முன்வந்தனர். அன்றையகுறைந்த வருமானம் மற்றும் சமூகத்தில் தாழ்வாக பார்க்கப்பட்ட பனையேறிகளுக்கு பேராயர் வழங்கிய திசை சரியானதே. ஆனால் எதிர்காலத்தில் பனைகள் கைவிடப்பட்டு அழியும் என்பது அவர் எண்ணிப்பார்த்திராதது.

பேராயர் அவர்களை நான் 1999 ஆம் ஆண்டு ஐக்கிய இறையியல் கல்லூரியில் முதன் முறையாக சந்தித்தேன். எங்கள் கல்லூரியின் முதல்வராக இருந்த டாக்டர் அருட்திரு ஞானா ராபின்சன் அவர்கள் என்னிடம், பேராயர் சாமுவேல் அமிர்தம் வந்திருக்கிறார்கள் நீ  அவரை சந்திப்பது நல்லது என்றார். கல்லூரி முன்பு இருக்கும் புல்தரையை சுற்றி செல்லும் சாலையில் தனது ஊன்றுகோலோடு பேராயர் நடந்துகொண்டிருந்தார், நான் அவருடன் இணைந்துகொண்டேன்.  என்னை அறிமுகப்படுத்திவிட்டு, பனை ஓலையில் நான் செய்த விசிடிங் கார்டு, வாழ்த்து அட்டைகள், புத்தக குறிப்பான், மற்றும் அழகிய பனை ஓலையாலான ஃபைல் ஒன்றையும் காண்பித்தேன்.  அனைத்தும் நன்றாக இருக்கிறது எனச் சொன்னவர், இவைகள் நமக்கு சோறு போடாது என்றார். எனக்கு “பக்”கென்றது. ஆனால் அவர் என்னிடம், நீ இப்போது படி, பிற்பாடு இவைகளைக் குறித்து நாம் பேசலாம் என்றார்.

பேராயர் அவர்கள் பதநீரை பாட்டிலில் அடைப்பது எப்படி என  ஜெர்மனி தேசத்திலிருந்து  அறிஞர்களை இங்கே அழைத்து வந்து,  பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர். மேலும் இரண்டு முறை பனை ஏறுவதற்கு பதிலாக ஒருமுறை ஏறிவிட்டு பதனீரை மேலிருந்து ஒரு குழாயில் பனைமரத்தின் அடிப்பகுதி வரை கொண்டுவந்து அதனை சேகரிக்கும் வழிமுறைகள் என பலவற்றை பரிசோதித்து பார்த்தவர். குமரி கேரளா எல்லையில் இருக்கும் கோட்டவிளை என்ற தோட்டத்தில் புகையில்லா பதனீர் காய்ச்சும் அடுப்பு ஒன்றை மாதிரியாக இன்றும் வைத்திருக்கிறார்கள். குமரி மாவட்டத்தில் முதன் முறையாக விஞ்ஞான முறையில் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் தான் அறிமுகப்படுத்தியது.  உலகமயமாக்கலில், பனை தொழில் பின்தங்கியே இருக்கிறது என புரிந்ததால் தான் அவர், பனை தொழிலை விட்டு வேறு வகையில் மக்கள் பொருளியல் மற்றும் சமூக உயர்வை அடைய உதவினார்.

எண்பதுகளில் பனை சார்ந்து சர்வதேச தளங்களில் பெரும் வீச்சுடன் இயங்கிய அறிஞரான Dr. T. A. டேவிஸ் அவர்களும், “பனையும் வறுமையும் இணைந்தே இருக்கும்” (Palmyra and poverty goes together) என்றார். இவைகள் இரண்டையும் நான் ஒன்றாக இணைத்தே நான்  புரிந்துகொள்ள  முயற்சிக்கிறேன். அதாவது பனை சார்ந்த எந்த நிறுவனமும் அமைப்பும் பனை தொழிலாளர்களை கைத்தூக்கிவிட இயலாது என்பது தான் உண்மை. பனை தொழிலாளர்கள் வைத்த எந்த கோரிக்கையும் இதுவரை  எந்த அரசாலும் செவிகூரப்பட்டதும் இல்லை. ஏனென்றால், சந்தை பொருளாதார காலகட்டமான இன்றும்  கூட பனையேறிகள் தங்கள் தொழில் அடிப்படையில் ஒரு பழங்குடியின சமூகமாகவே நீடிக்கின்றனர். ஆனால் அவர்களை சமூக அடையாளப்படுத்துதலில்  பிற்படுத்தப்பட்ட மக்களாக இச்சமூகம் ஏற்றுகொண்டுள்ளது. ஆகவேதான் பனையேறுகிறவர்களுக்கு எது தேவை என இங்கிருக்கும் மக்களால் எடுத்துச் சொல்ல முடியாத நிலை இருக்கின்றது. பழங்குடியினர் வாழ்வில் நிலம் மற்றும் அவர்களது உரிமைகளை எப்படி கண்ணும் கருத்துமாக பார்க்கவேண்டுமோ அப்படி பார்ப்பது மட்டுமே இவ்வித மக்களின் விடுதலைக்கான துவக்கமாக அமையும்.

பனை மரங்கள் மீதான உரிமை பனையேறிகளுக்கு வேண்டும். அவர்கள் அதிலிருந்து பெறும் எவ்வித பொருட்களுக்கும் எவ்வித கட்டுப்பாடுகளும் இருக்கலாகாது. பனைத்தொழில் சார்த்த விற்பனை உரிமையும் அவர்களிடம் இருக்கவேண்டும். அல்லது அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் இவைகளை முன்னெடுக்கவேண்டும். இப்படி இருந்தாலே எதிர்காலத்தில் பனை சார்ந்து வாழும் மக்கள் ஏதேனும் நற்பயன் பெறுவார்கள். இன்று கூட தமிழகத்தில் பனையேறிகளைச் சுரண்டிப் பிழைக்கும் பெரு முதலாளிகள் உண்டு. தங்கள் கோட்டைக்குள் பனையேறிகளை சிறை வைத்து மிககுறைந்த கூலி கொடுத்து மனசாட்சியே இல்லாமல் பனையேறிகளின் வாழ்வோடு விளையாடிக்கொண்டிருக்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து பனையேறிகளை காக்கும் வழிமுறை என்பது விரிவாக ஆராய்ந்து முன்னெடுக்கப்படவேண்டியது.   சேகரிக்கும் பொருளாதாரத்தை வாழ்வியலாக கொண்ட ஒருவனை சந்தை பொருளாதார வாழ்வு நோக்கி நகர்த்துவது என்பது கவனமாக செய்யப்படவேண்டிய ஒன்று. மிகுந்த கரிசனையுடன், இதன் நுண்மைகளை விளங்கிக்கொண்டாலொழிய பனையேறிகள் வாழ்வில் எவ்வித நன்மைகளும் விளையாது என்பது தான் உண்மை.

பனை சார்ந்த பொருளாதாரம் என்பன போன்ற பேச்சுக்கள் இன்று அனாயாசமாக பேசப்படுகின்றன. இவைகள் யாவும் ஒரு இடைத்தரகரின் நோக்கில் பேசப்படுகின்றதே ஒழிய, உண்மையான பனை பொருளியல் என்பது என்ன? அது கிராம சூழலில் எப்படி இயங்கும் என்பது போன்றவைகளை ஆராய்வது இல்லை. பெரும்பாலும் பனை சார்ந்த பொருட்கள் நகரத்திலும்  வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படும் வாய்ப்புகளுக்காகவே  காத்திருக்கிறது. இதற்கு நேரெதிராக கள், உள்ளூர் சந்தையின் பலத்தையும் பனையேறிகளின் விடுதலையையும் ஒருசேர வெளிப்படுத்தும் சக்தியாக இருக்கிறது. கள் என்கிற ஒற்றை பொருளிற்கான விடுதலை பனை சார்ந்த பிற பொருட்களை தடையின்றி தாராளமாக பெற்றுக்கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அப்படியானால் தோல்வி என ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தொழிலை இன்று நாம் எப்படி வெற்றிகரமான ஒன்றாக மாற்றுவது? இரண்டு வழிகள் எனக்கு தென்படுகின்றன. ஒன்று நமது இளைஞர்களுக்கு போதிய வேலை வாய்ப்புகள் இன்று இல்லை. பனை மரம் இன்று லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு எவ்வித பொருள் முதலீடுமின்றி உடனடி வேலை வாய்ப்பை வழங்க வல்லது. இரண்டாவதாக, பனை சார்ந்த வாழ்க்கை முறை நமது பிற தேவையற்ற நவீன சார்புகளை தவிர்க்கும். அவ்வகையில் மிகப்பெரிய அளவில் நமது செலவினங்களை மிச்சப்படுத்தலாம். மேலும், இன்று பனை சார்ந்த  உணவுகளின் தேவை மிக அதிகமாக இருக்கிறது ஆகவே இத்தொழிலில் இறங்கும் இளைஞர்களுக்கு போதிய வருமானம் கிடைக்கும் என்கிற உத்தரவாதம் இருக்கிறது. கலப்படமில்லா இவ்வித உணவுகள் நமது சமூகத்தின்  ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.   நமது இளைஞர்கள் பனை ஏறுவதை முழுநேர தொழிலாக கூட எடுத்துக்கொள்ளவேண்டாம். வீட்டின் அருகில் நிற்கும் ஓரிரு மரங்களில் ஏறி வீட்டு தேவைக்கென பதநீரோ கள்ளோ இறக்கினால் போதும். தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் நிகழும்.

நாங்கள் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்க வளாகத்திற்குள் சென்றோம். அலுவலகம் அமைதியுடனிருந்தது. திரு சந்திரபாபு அவர்களை சந்தித்தோம். நான் சேவியர் அவர்களை அறிமுகப்படுத்தினேன்.  சேவியர் அவர்களுக்கு பனை சார்ந்த பொருட்கள் மீதான விருப்பமிருந்ததால் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தின்  கைவினை பிரிவு நோக்கி சென்றோம். அங்கே தற்பொழுது பனை ஓலையில் தொப்பி செய்யும் ஒரு சிறு அலகு மட்டும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அங்கிருப்பவர்கள் அனுமதியுடன் சேவியர் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். இதன் பொறுப்பாளராக இருக்கும் திருமதி ராணி அவர்களை எனது சிறு பிராயம் முதல் நான் அறிவேன். அவர்கள் தேவையான தொப்பிகளை எடுத்து காண்பித்தார்கள். 

இங்கு செய்யப்படும் தொப்பி வெளிநாட்டு கெளபாய் தொப்பிகளைப் போன்றது. அதற்கான பெரும் சந்தை இருக்கின்றது. கொரோனாவினால் அனைத்தும் முடங்கிவிட்டன என ராணி அக்கா சொன்னார்கள். சிறுவர்கள்  முதல் பெரியவர்கள் வர வைக்கும்படியாக மூன்று அளவுகளிலும், மெக்சிகன் வடிவில் மிக பிரம்மாண்டமான தொப்பிகளும் இங்கே செய்கிறார்கள். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத ஒரு முறைமை இங்கே கைக்கொள்ளப்படுவதை நாம் பார்க்கலாம். ஓலைகளை சன்னமாக வகிர்ந்து சடையாக பின்னிக்கொள்ளுவார்கள். அவைகளை மீட்டர் கணக்கில் வாங்கி சேகரித்து வைத்துக்கொண்டு பின்னர் தையல் எந்திரத்தில் வைத்து தைத்து அழகிய தொப்பியாக மாற்றிவிடுவார்கள். இவ்வித செயல்பாடு என்பது கலை நுணுக்கம் வாய்த்தது அல்ல, ஆனால் சந்தையின் தேவைகளை விரைந்து சந்திக்க இயலும்.

குமரி மாவட்ட மீனவர்களில் பலர் இதனை அணிந்திருப்பதை பார்த்திருக்கிறேன். கடலுக்குள் செல்லும்பொது இவ்வித தொப்பிகள் வெயிலிலிருந்து மீனவர்களை காக்கும் ஒன்றாக இருக்கிறது. கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றூலா பயணிகள் இதனை அதிகமாக வாங்கிச் செல்லுகிறார்கள். தயாரிக்கும் இடத்தில்  சுமார் 50 ரூபாய்க்கு கிடைக்கும் இவ்வகைத் தொப்பிகள் மிகவும் மலிவானவைகள்.

பனை சார்ந்த பொருட்களின் தேவை இந்த நாட்களில் அதிகரித்திருக்கிறதைக் காண்கிறோம். ஆனால் அவைகள் மிகவும் ஆபத்தானவை என நான் கண்டுகொண்டேன். இன்றைய சந்தை தேவை என்னவாக இருக்கிறது என்றால் வண்ணம் மிக்க பனையோலை பொருட்கள் தான். வெகு சமீபத்தில் தான் உணர்ந்துகொண்டேன். பெரும்பாலான பனைஓலை நுகர்பொருட்கள் என்பவை ஒற்றைமுறை பயன்பாட்டிற்கானது. அழகென காணப்படவேண்டும் ஆகையால் குருத்தோலைகள் கோருவது. ராமநாதபுரம் முதல் தமிழகத்தின்  பிற பகுதிகளில் வெட்டப்படும் பனை மரங்களில் இருந்து தான் இன்று பெரும்பாலான ஓலைகளின் தேவை சந்திக்கப்படுகிறது. இவைகள் எப்படி ஒரு நீடித்த வாழ்வியலை ஏற்படுத்தும்?  நெகிழிக்கு மாற்றாக இங்கே பனை ஓலைகள் முன்வைக்கப்படுவது மிகவும் அதிர்ச்சிகரமானது. ஏனென்றால், பனைஓலையில் வாங்குகின்ற பொருட்களை விசிறிவிடலாம் என்ற எண்ணம் மக்கள் மனதில் எழுந்திருக்கிறது, நெகிழியைப்போல நம்மால் எப்போதும் பனை ஓலைப் பொருட்களை விசிறிக்கொண்டிருக்க இயலாது. அதன் பயன்பாடு எப்போதும் அப்படி இருந்ததில்லை.

பனை சார்ந்த பொருட்களை பனையேறிகள் பயன்படுத்தும் விதத்தைக் குறித்து அறிந்துகொண்டால், நாமெல்லாம் பனை சார்ந்த பொருட்களை புனிதம் மிக்கதாக கருதி அவைகளை பாதுகாப்போம். அவைகளை எவ்விதம் கையாளவேண்டும் எனவும் தேவையின்றி அவைகளை  வீணடிக்கமாட்டோம். நான் அறிந்த பனை ஓலைப்பாய் கலைஞரான தங்கப்பன் அவர்கள் ஒரே பனையோலைப் பாயினை கடந்த 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். கருங்கல் பகுதியை அடுத்த காட்டுவிளையைச் சார்ந்த பனையேறும் செல்லையா அவர்கள் தான் தயாரித்த வெற்றிலைப் பெட்டியினை ஏழு ஆண்டுகளாக பயன்படுத்திவருகிறார். பதனீர் எடுத்துவரும் குடுவைகளை இரண்டு ஆண்டுகளாவது நீட்டிப்பது பனையேரிகளுக்கு வாடிக்கை. ஆழ்ந்து நோக்குகையில், நமது பாரம்பரிய பொருட்கள் யாவும் நமது அன்றாட பயன்பாட்டில் இணைந்திருப்பதாகவும் சூழியலை மாசு படுத்தாததாகவும் நீடித்து உழைக்கும் தன்மைகொண்டதாகவும் இருந்திருக்கிறது. இப்படி, ஒரு பொருளை பயன்பாட்டு பொருளாக ஆண்டுக்கணக்கில் பயன்படுத்தும் வழக்கம் நம்மிடம் குறைந்து வருகிறது. தமிழகம் இன்று ஆண்டுக்கணக்கில் வைத்து பராமரிக்கும் ஒரே பொருள் முறம் தான். இன்று பிளாஸ்டிக் முறத்தின் வரவால் பனையோலை முறம்  தயாரிப்பவர்களது வாழ்வு மிகப்பெரும் அடியை சந்தித்திருக்கிறது. புதிய தலைமுறையினருக்கு முறத்தினை எப்படி பயன்படுத்தவேண்டும் என தெரியவில்லை. முறம் இல்லா சமையலறை என்கிற அளவிற்கு நவீன வாழ்க்கை மாறிவிட்டது. இவைகள் யாவையும் ஒட்டுமொத்தமாக சீர்தூக்கிப் பார்க்கையில், பனை சார்ந்த கலைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருப்பது தெரியும்.

அப்படியானால் இன்று தயாரிக்கப்படும் ஓலைபொருட்களை நிறுத்திவிடவேண்டுமா என்ற கேள்வி எழும்பலாம்? எடுத்தோம் கவிழ்த்தோம் என்று உடனேயே இன்று அப்படி செய்ய இயலாது. அப்படி செய்வது சரியுமாகாது. சற்றே நிதானித்து எதிர்காலத்திற்கான பொருள் என்ன என எண்ணி மக்களின் வாழ்வில் என்றும் இணைத்திருக்கும் பொருட்களை அறிமுகப்படுத்தி பனை பொருட்கள் அன்றாட வாழ்வில் நிலைபெறச் செய்வதே நமது கடமையாகிறது. எனது தொப்பி, திருமறை பை போன்றவைகள் அவற்றையே வலியுறுத்துகின்றன. பனை ஓலையுடன் பனை நார் இணைந்துகொள்ளும்போது அப்பொருள் அமரத்துவம் பெறுகிறது.

சேவியர், தான் எதிர்பார்த்தது போல மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் பிரம்மாண்டமாக இல்லை என்று குறிப்பிட்டார். அது உண்மை தான். செயல்பாட்டளவில் அது குமரி மாவட்டம் மட்டுமல்ல தென் தமிழகத்திலேயே மிகப்பெரிய வீச்சை ஏற்படுத்திய ஒரு நிறுவனம், இன்று அதன் சுவடுகள் மறைந்துபோய்விட்டன.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 3

ஜனவரி 5, 2021

பிள்ளையார் சுழி

எங்களது பயணத்தில் நாங்கள் இருந்த  பெட்டியிலேயே என்னோடு பணியாற்றும் ஜாண் ராஜாமணி என்ற போதகரும் பயணிக்கிறார் என்பதை வழியில் கண்டுகொண்டோம். போதகர் ராஜாமணி அவர்கள் வசாய் மெதடிஸ்ட் தமிழ் திருச்சபையில் போதகராக பணியாற்றுகிறார்கள். போதகர் ராஜாமணி அவர்களுக்கு பனை மீதான விருப்பம் அதிகம்,  மாத்திரம் அல்ல பனைமரச் சாலை தொடராக எனது வலைப்பூவில் வெளிவந்தபோது அதனை தொடர்ந்து வாசித்து வந்தவர் அவர்.  பயணம் முழுக்க பனை குறித்து உரையாடியபடி வந்தோம்.

போதகர் ராஜாமணியுடன் மித்திரனும் நானும்

மும்பையில் உள்ள வசாய் பகுதியில் ஒரு பழங்கால கோட்டை இருக்கிறது. வசாய் பகுதியினை ப்ரிட்டிஷார் பேசின் (Bessin) என்றுதான் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆகவே இன்றும் கூட வசாய் செல்லும் மும்பை நகர்புற இரயில்கள் V என்ற எழுத்திற்கு பதிலாக  BS என்றே தாங்கி வரும். வசாய் கோட்டை 1509 ஆம் ஆண்டு போர்துகீசியர்கள் மும்பையில் கால் ஊன்றியதை நினைவுறுத்தும் முகமாக உருவாக்கப்பட்ட ஒரு கோட்டை.  பிற்பாடு மாராத்தியர்கள் இதனை 18ஆம் நூற்றாண்டில் கைப்பற்றினார்கள். அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷார் இதைனை கையகப்படுத்தினார்கள். கடலை முத்தமிட்டிருக்கும் இந்த கோட்டை இன்று சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்தகோட்டை தற்போது இந்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. வசாய் பகுதியில் பனை மரங்கள் செழித்திருக்கும் என நான் கேவிப்பட்டிருப்பதினாலேயே, அங்கே செல்லவேண்டும் என போதகரிடம் கேட்டுக்கொண்டேன். அவர் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என அழைப்பு விடுத்தார்.\

வசாய் கோட்டையில் பனை

கேரளத்தினூடாக பயணிக்கிறோம் என்பதை இருபுறத்திலும் எங்களைக் கடந்து ஓடிக்கொண்டிருந்த தென்னைகளின் திரட்சி பறைசாற்றின. பனை மரங்கள் தென்னையினூடாக தலைதூக்கி எட்டிப்பார்க்கும் காட்சிகள் ஆங்காங்கே தென்பட்டவண்ணம் இருந்தன. கேரளம், தென்னை மரத்தை தனது பண்பாட்டு அடையாளமாக கொண்டிருப்பதாக கூறுவார்கள். கேர எனும் வார்த்தையே தென்னையைக் குறிப்பிடுவதாக அமைகிறது.  கேரளா என்பது சமீபகாலமாக தென்னை நோக்கி நகர்ந்து வந்த ஒரு நிலபரப்பு என்றே நான் கொள்ளுவேன். போர்துக்கீசியர் வந்தபின்பே தென்னை இங்கு நிலைபெற்றிருக்கும். சுமார் ஒரு நூற்றாண்டிற்கும் முன்பதாக பனை மரம் கேரளாவின் தேவையினை பூர்த்தி செய்த ஒரு மரமாகவே இருந்திருக்கிறது. தென்னை மரம் ஒரு பணப்பயிர் என கண்ணுற்றபோது, அதிக உழைப்பைக்கோரும் பனை மரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டனர் என்பதுதான் உண்மை. ஆனால், பனை சுயம்புவாக இங்கே முழைத்தெழும்பி நிலைபெற்றிருப்பதைக் காணும்போது, நமது பார்வைகள் சற்றே மாறவேண்டும் என்றே நினைக்கின்றேன்.

கேரளாவில் தென்னை ஓலைகள் வீடுகள் கட்டவும், பனை ஓலைகள் பயன்பாட்டு பொருட்கள் செய்யவும் என துறைசார்ந்து பிரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்விதமான பிரிவுகள் தாவரங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அவைகளை சமூகங்கள் தேவையான விகிதங்களில் பேணிவந்திருக்கிறார்கள் என்பதை குறிப்புணர்த்தும்.  பொதுவாகவே பனையும் தென்னையும் மனிதர்கள் வாழும் பகுதிகளில் மட்டுமே காணப்படும் தாவரங்கள் ஆகும். கடந்த நூற்றாண்டின் பெரும்பகுதி, பனை மரங்களை விட தென்னைகளை பேணும் காலங்களாகவே இருந்திருக்கின்றன. இப்படியான சூழலில், பனை மரங்களை தென்னந்தோப்புகளின் நடுவில் நாம் காணும்போது, அவைகள் தப்பிப்பிழைத்த மரபான தாவரங்கள் என்றே நாம் உணர்ந்துகொள்ளுகிறோம்.

ஒருமுறை கொச்சியில் பணிபுரியும் என் சகோதரி மெர்சியா அவர்கள் அங்குள்ள ஒரு  மேலாண்மை நிறுவனத்தில், பனை சார்ந்து ஒரு கட்டுரை வாசிக்கச்சொல்லி என்னை அழைத்திருந்தார்கள். சர்வதேச அளவிலான அந்த  நிகழ்வின் இறுதி நாளில் ஆலப்புழாவிலுள்ள படகு வீடு ஒன்றில் நாங்கள் கும்பலாக ஏறி பயணித்தோம். தென்னைகள் மட்டுமே சூழ்ந்திருக்கும் அந்த நீர்பரப்பு, விந்தையானது. எப்படி  ஒரு சமூகம் தென்னையை மையப்படுத்துகிறது என்பதோடு பிற தாவரங்கள் எப்படி அவ்விடத்திலிருந்து அழிந்துபோகின்றது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. இவ்விதமான ஒற்றைத் தாவர பயிரிடுதல் நிகழும்போது அங்கே இருக்கும் வேறு சில மரபான தாவரங்கள் அழிவதை தவிர்க்க இயலாது. எனது பயணத்தில் தென்னைகளுக்கு மத்தியில்  நெடுந்துயர்ந்து வளர்ந்த ஒரு ஒற்றைப் பனையும் அதன் அருகில் ஒரு கோவிலையும் கண்டேன். பார்க்க வண்ணக்கலவைகளுடன் சற்றே தமிழ் சாயலைக் கொண்ட கோவிலாக இருந்தது.

தென்னைகள் பயிரிடப்பட்டிருக்கும் ஒரு பகுதியில் ஒற்றைப்பனைமரம் எப்படி வந்தது? பனை மரத்திற்கான தேவை தான் என்ன? விடை இதுதான், பனை மற்றும் இன்னபிற  தாவரங்கள் இருந்த இடங்களில் இருந்து அவைகள் சிறுக சிறுக அகற்றப்பட்டு மெதுவாக தென்னை குடியேறியிருக்கிறது என்பது தான் உண்மை.

இதனைக் குறித்து என்னோடு பயணித்த ஒரு பேராசிரியரிடம் நான் கேட்டபோது, அவர் பனை மரங்கள் இங்கு வாழ ஏற்றவை அல்ல என்றார். மேலும் அவர், இங்கு மழைப்பொழிவு அதிகமாக இருப்பதால் பதனீர் காய்ச்ச உகந்த இடம் இதுவல்ல என்றார். அவர் கூறுவது உண்மைதான், ஆனால், இவ்வித எண்ணங்கள் பொருளியல் சார்ந்த ஒரு பார்வையை முன்வைக்கிறதேயன்றி, நிலவியல் சார்ந்த உண்மையை வெளிப்படுத்துவது அல்ல. தென்னைகள் கூட, சிறுக சிறுக மக்கள் பெருக்கத்தினூடாக ஏற்பட்டிருக்கவேண்டுமே ஒழிய, உண்மையிலேயே இப்படியான பிரம்மாண்ட தென்னை நிலப்பரப்பு இருந்திருக்க இயலாது.

பனை சார்ந்த நிலப்பரப்பு என்பவை எப்படி இருக்கும் என்ற கேள்விகள் எழும்புவது இயல்பு. நான் மும்பையில் பனை விதைகளை விதைக்கையில், மும்பை என்னும் காட்டினை பாலைவனமாக்கிவிடாதீர்கள் என்ற எச்சரிப்பை ஒருவர் வழங்கினார். இப்படியான எச்சரிப்புகள் எனக்கு புதிதல்ல. தமிழகம் முழுக்கவே பனை விதைப்புகள் முன்னெடுக்கப்பட்டபோதும் ஒரு சில சூழியல் ஆர்வலர்கள் தமிழ்நாட்டை பாலைவனமாக்கிவிடாதீர்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்கள். குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் எப்படி நீர் நிலைகள் இம்மாவட்டங்களின் சூழியலை மாற்றியமைத்தன என நாம் உணர்ந்துகொள்ள முடியும். மும்பையில் கூட இன்றும் பனை செழித்து வளரும் ஒரு நிலப்பரப்பு மழை பொழியும் ஆறு மாதங்கள் சதுப்புநிலமாகவே காட்சியளிப்பதைப் பார்த்து வியந்துபோனேன். பறைகளுக்கிடையில், கடற்கரை ஓரங்களில் என பனை மரங்கள் தனக்கான இடத்தை  தகவமைத்துக்கொள்ளுவது ஆச்சரியமானது.

தென்னை மரங்கள் மனிதர்களால் பயிரிடப்படவில்லையென்றால், கண்டிப்பாக நீர் நிலைகளால் பரவும் வாய்ப்பு கொண்டவை. ஆனால், பனை மரங்களுக்கு வெறு பல வாய்ப்புகள் கூடவே இருக்கின்றன. மாடுகள், பன்றிகள், எருதுகள், மான்கள், குரங்குகள், நாய்கள், நரிகள், யானைகள் என எண்ணற்ற உயிரினங்கள் பனை விதை பரப்புதலில் இணைந்துகொள்ளுகின்றன. மேலும், வறட்சி காலங்களில் பனை மரம் தப்பி பிழைக்கும் தன்மையுடையது ஆனபடியால் தென்னையை விடவும் தன்னிச்சையாக பலவிடங்களில் பரவியிருக்க வாய்ப்புள்ளது.

“Kerala  – The Land of Palms” என்ற புத்தகம் 1912 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் அட்டைப்படம்   பனை மரத்தாலேயே அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஆசிரியர் ஹாக்கர் (I H Hacker) கேரளவிலுள்ள கொல்லம் (Quilon) பகுதிக்கு வரும்போது அங்கே காணப்படும் தென்னைமரங்களை சுட்டிக்காட்டி, இதுவே கேரள தனது பெயரை பெற்றுக்கொள்ள காரணமான மரம் என ஒப்புக்கொள்ளுகிறார். தென்னை மரங்கள் கொல்லம் பகுதிகளில் காணப்படுவதாக வரைந்திருக்கும் படத்தில் கூட, பல்வேறு தாவரங்களின் மத்தியில் தான் தென்னைகள் நெடுந்துயர்ந்து வளர்ந்திருக்கின்றன. தனது புத்தகத்தில் தாவரங்களின் இளவரசன் பனை என்றே குறிப்பிடுகிறார்.

Kerala – the Land of Palms

தென்னை நிறைந்த பகுதியாக மட்டுமே இருந்திருந்தால் எப்படி பனை மரங்கள் அன்று முகப்பில் இடம்பெற்றிருக்கும்? விடை இதுதான், பனை சார்ந்த ஒரு வாழ்வு திருவிதாங்கூர் பகுதிகளில் செழித்திருந்தது. லண்டன் மிஷன் சொசைட்டி (London Mission Society) வெளியிட்ட இந்த புத்தகம், அக்காலத்தில் கிறிஸ்தவத்தை தழுவிய பெரும்பாலான நாடார் சமூகத்தை முன்னிறுத்தும்பொருட்டும் இருந்திருக்கலாம்.  ஆனால் தென்னைகள் கூடி இருப்பதை விட பனங்கூடலை காண்பிக்கும் கோட்டோவியங்கள்  அசாத்தியமானவை. தென்னை சார்ந்த வாழ்வியலை விட பனை சார்ந்த வாழ்வியல் இப்புத்தகத்தில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தென்னைகளின் திரட்சியின் முன்பாக பனைகள் காணாமல் போவதற்கு காரணம் என்ன? திருவிதாங்கூரில் ஏற்பட்ட சாதிய கொடுமைகளும், பனை மரம் சார்ந்த இழி அடையாளங்களும், பனை மரத்தை நினைவிலிருந்து மட்டுமல்ல, நிலப்பரப்பிலிருந்தே நீங்கச்செய்திருக்கும் என்பது தான் உண்மை. மரத்தோடு தொடர்புடையவர்கள் இழிவானவர்களாக கீழானவர்களாக சமூகம் கட்டமத்தபின்பு, அந்த மரமே இழிவானது என்ற கருத்துருவாக்கத்தை நிலைநிறுத்துவது  ஒன்றும் கடினம் அல்ல. ஆகவே நாடார் சமூகமே பனை மரங்களைக் கைவிடத் துவங்கினர். அதற்கு அன்று அவர்கள் மிஷனெறி பணிகள் மூலமாக பெற்ற கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகள் முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன என்பதை புத்தகம் குறிப்புணர்த்துகிறது.

திருவிதாங்கூர் பகுதி சாலையோரங்களில் பனைமரங்கள்: Kerala The land of Palms

சுமார் 35 வருடங்களுக்கு முன்பு  மார்த்தாண்டம் பகுதிகளில் பயணிக்கையில் കള്ള് என மலையாளத்தில் எழுதப்பட்டிருக்கும் பெயர்பலகையை  ஆங்காங்கே ஒதுக்குபுறமாக பார்த்திருக்கிறேன்.  தமிழில் கள்ளு என எழுதியிருப்பதால் மலையாளத்திலும் அதையே எழுதியிருக்கிறார்கள் என்றும், என்னால் மலையாளம் வாசிக்க முடியும் என்றும் குதூகலித்திருக்கிறேன். இவைகளுடன் Toddy என ஆங்கில எழுத்துரு இடம் பெற்றிருக்கும். அனைத்து எழுத்துக்களும் கரும்பலகையில் அழகிய வெண்ணிற எழுத்துக்களால் வரையப்பட்டிருக்கும். நான் பார்த்தவரையில் மிக கவர்ச்சிகரமான ஒரு விளம்பரம் அது. இருளில் மின்னும் வெண்மை. நுரைக்கும் கள்ளை காட்சிப்படுத்தும் கரும் பலகை. சீரான எழுத்துக்கள் என அதற்கு ஓர் அழகு இருந்தது. மும்பை வந்த பின்பு தான் Toddy என்ற வார்த்தை இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு, (அல்லது சமஸ்கிருதத்திலிருந்து) சென்றிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டேன். “தாட்” என்றால் பனை மரம், பனை மரத்திலிருந்து  கிடைப்பது “தாடி” (Toddy) என்றே இன்றும் வட இந்திய நிலப்பரப்பில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விளம்பரப்பலகையின் அருகில் ஒரு தென்னையோலை கீற்று கொட்டகை அமைக்கப்பட்டிருக்கும். அங்கே தான் கள் விற்பனை நடக்கும். உள்ளே எப்படி இருக்கும் என தெரியாது. எனது 11 வயது வரை இவ்வித காட்சிகளை நான் கண்டிருக்கிறேன். பின்னர், மார்த்தாண்டம் காவல் நிலையம் கள்ளினை கைப்பற்றி வடக்குத்தெருவிலுள்ள ஓடைகளில் கவிழ்த்துவிடுவது வாடிக்கையாக இருந்தது. இப்போது யோசித்துப் பார்க்கையில் மதுவிலக்கு போலீசார் எவ்விதம் தங்கள் கடமையை ஆற்றி இருக்கிறார்கள் என இறும்பூதெய்தாமால் இருக்கவியலவில்லை.

கேரளம் என்பது கள்ளிற்கான பூமி.  இன்றும் கள்ளை கொண்டாடும் சமூகம், அங்கே உயிர்ப்புடன் இருக்கின்றனர். பனங்கள் கிடைக்குமோ இல்லையோ தென்னங்கள் கண்டிப்பாக கிடைக்கும். நான் இதுவரை கேரளத்திலோ அல்லது  குமரி மாவட்டத்திலோ தென்னங்கள் பருகியது இல்லை. ஆனால் பெங்களூருவிலும் பாண்டிச்சேரியிலும் தென்னங்கள் பருகியிருக்கிறேன்.  முதன் முதலாக 1997 ஆம் ஆண்டு வாக்கில் குமரி மாவட்டதிலுள்ள தெரிசனங்கோப்பு என்ற பகுதியில் கள் கிடைக்கும் என்று சொன்னதால் தனியாக சென்றேன். அங்கிருந்த ஒரு குளத்தைத் தாண்டி  நடந்து சென்றபோது ஒரு பழைமையான கோவில் வந்தது. அதையும் கடந்து குளக்கரையில் இருந்த ஒரு தோப்பிற்குள் சென்று கள் பருகியது மறக்கவியலா அனுபவம். சற்றே புளிப்புடன் இருந்தாலும், கள்ளை சுவைத்துவிட்டேன் என்பதே ஆகப்பெரும் வெற்றியாக இருந்தது. போலீசார் தொந்தரவு குறித்து அப்போது அவர் கூறியிருந்தாலும் மீண்டும் 2000ஆம் ஆண்டு அங்கே சென்றேன். 

2004 ஆம் ஆண்டு நான் மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கத்தில் நான் பணியாற்றிய போது அவர்களின் பழைய போராட்ட வரலாறுகளைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது, “கள்ளு கடைகளுக்கு பதனீர் கொடா போராட்டம்” நடத்திய குறிப்பு கிடைத்தது. அங்கு பணியாற்றியவர்களிடம் விசாரித்தபோது, கள்ளுக்கடைகள் எப்படி பனையேரிகளை சுரண்டி தழைத்தன என்கிற உண்மை வெளியானது. பனையேரிகளிடமிருந்து பதனீராகவே கள்ளுக்கடையினர் வாங்குவார்கள். பின்னர் எப்படி காய்ச்சிய பாலை ஆறவைத்து அதில் தயிர் ஊற்றி உறை வைப்பார்களோ அது போலவே, பதனீரிலுள்ள சுண்ணாம்பை அகற்றிவிட்டு, தனி பதனீரை தெளித்தெடுத்து அதில் கள்ளை ஊற்றி வைப்பார்கள். சரியான பருவத்தில் இதனை கள்ளாக விற்பனை செய்வார்கள். மேலும் போதை ஏறுவதற்காக சில இயற்கை மற்றும் செயற்கை சேர்மானங்களையும் இடுவார்கள்.  எழுத்தாளர் பொன்னீலன் அவர்களை நான் சந்தித்தபோது, “கள்ளுக்கு எப்போ போதை வருகிறது?…. அது கடைக்கு வரும்போது தான்” என்று சொன்ன கூற்றின் உண்மை பின்னணியம் இதுதான். இவ்விதமான கள்ளுக்கடைகள் தனி முதலாளிகளையே ஊக்குவிக்கின்றது. ஆகவே தங்கள் முழு முதல் உரிமையினை மீட்டெடுக்கும் பனையேறிகளின் ஒரு உணர்ச்சிகர போராட்ட வடிவமாகவே “கள்ளு கடைகளுக்கு பதனீர் கொடா போராட்டம்” இருத்ததாக நான் புரிந்துகொள்ளுகிறேன். இப்போதும் கூட கள்ளு என்பது கடைக்கு வரவேண்டாம் பனையேறிகளே கள்ளினை விற்பனை செய்யட்டும் என்னும் நிலைப்பாடே சரியாக இருக்கும்.

மார்த்தாண்டம் பனைத் தொழிலாளர் வளர்ச்சி இயக்கம் 1985 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் மிகப்பெரிய மாநாடு ஒன்றை நடத்தினார்கள். சுமார் 15 ஆயிரம் பனையேறிகள் கலந்துகொண்ட அந்த மாநாடு, தமிழகத்தையே அசைத்தது. இதனைத் தொடர்ந்து தான் 01.01.1987 ஆம் ஆண்டு கள் தடைக்கான அறிவிப்பு தமிழக அரசால் வெளியிடப்படுகிறது கவனத்திற்குரியது. பனைத் தொழிலாளிகள் ஒன்றுபட்டால் அவர்களது கோரிக்கைகள் வலுப்பெறும் எனவே கள்ளுக்கடைக்கு தடை போட்டால் ஒரேயடியாக பனை தொழிலுக்கு மூடுவிழா நடத்திவிடலாம் என்ற எண்ணமாக இருந்திருக்கும்.  அது உண்மைதான் என சமீபகாலத்தில் உணர்ந்துகொண்டேன். தமிழகம் முழுவதும் 12 லெட்சம் பனை தொழிலாளர்கள் இருந்து வந்த சூழல் கள் தடைக்குப் பின் மாறியது. கள் தடை அறிவித்தவுடனேயே  10 லெட்சம் பனையேறிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர் என சுதேசி இயக்கத்தைச் சார்ந்த திரு. குமரி நம்பி அவர்கள் பகிர்ந்துகொண்டார்கள்.

இச்சூழலில் தான் தமிழகத்தில் கள் சார்ந்த ஒரு சலனத்தை ஏற்படுத்தவேண்டும் என்று எண்ணி இப்பயணத்தை நிகழ்த்த உறுதிபூண்டேன். ஆனால் ஒருபோதும் இவைகளை எழுத்துருவாக்கவேண்டும் என நான் நினைக்கவில்லை. அதற்கு காரணம் கள்ளை முதன்மைப்படுத்தி ஒரு போதகர் எழுதுவதை திருச்சபை ஏற்றுக்கொள்ளாது.  நான் அறிந்த பல கிறிஸ்தவர்களும் கள் சார்ந்து ஒரு புரிதலற்ற நிலையினையேக் கொண்டுள்ளார்கள். கிறிஸ்தவ மிஷனெறிகள் பலரும் கள்ளிற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்திருந்தனர். கிறிஸ்தவ கிராமங்களிலிருந்து கள் இறக்குகிறவர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக குமரி மாவட்ட நெய்யூர் பகுதியைச் சார்ந்த குறிப்பு காணப்படுகிறது. அதற்கு காரணம் உண்டு.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் கள்ளில் போதை இல்லையா? எப்படி ஒரு போதகர் கள்ளைக் குறித்து எவ்வித அருவருப்புமின்றி பேசமுடியும்? திருமறை குடிபோதையை எதிர்க்கிறதே என பலவிதமான எண்ணங்களுடன் நண்பர்கள் இருக்கலாம். ஆனால் கள் எனும் பானத்தை குடிக்கு நிகரென பேசுவது தற்கால சூழலில் நகைப்புக்குரியதாகவே இருக்கும்.  ஆகவே ஒரு முழுமையான பின்னணியத்தில் இவைகளை வைத்துப் பார்ப்பது மிகவும் தேவை.

1999 ஆம் ஆண்டு நான் பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, அங்கு மாதத்திற்கு ஒருமுறை நற்கருணை வழிபாடு நிகழும். குமரி மாவட்டத்தில் வழங்கும் நற்கருணை திராட்சை ரசத்திற்கும், ஐக்கிய இறையியல் கல்லூரியில் வழங்கிய திராட்சை ரசத்திற்கும் பெரிய வேறுபாடு இருந்ததைக் அப்போது தான் கண்டுகொண்டேன். குமரி மாவட்ட சி எஸ் ஐ திருச்சபைகளில் வழங்கப்படும் திராட்சை ரசம் என்பது உண்மையிலேயே திராட்சை ரசம் கிடையாது. அது சில மணமூட்டிகளும் சர்க்கரையும் சேர்த்து செய்யப்பட்ட ஒரு செயற்கை பானம் மட்டுமே. அதனுடன் தண்ணீர் சேர்த்தே நற்கருணை ஆராதனையில் பருக கொடுப்பார்கள். ஆனால் பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் வழங்கப்படும் திராட்சை ரசமானது வீட்டில் தயாரிக்கப்பட்ட வைன் (Home made wine) ஆகும். திராட்சைப் பழங்களும் இன்ன பிற சேர்மானங்களும் இணைத்து செய்யப்படும் பானத்தையே எங்களுக்கு கொடுப்பார்கள். இந்தபானத்தில் இருக்கும் ஆல்கஹால் தான் இதனைக் கெட்டுபோகாமல் வைத்திருக்க உதவுகிறது. பெங்களூரில் இருக்கையில் நான் சென்ற தூய மாற்கு (St Mark’s Cathedral) ஆலயத்திலும் இவ்விதமான திராட்சை பழங்களை பிழிந்தெடுத்த சாறு தான் நற்கருணையில் வழங்குவார்கள்.

குமரி மாவட்டத்தில் செயற்கை மணமூட்டிகள் நிறமூட்டிகளைக் கொண்டு வழங்கப்படும் பானமும், பெங்களூரில் வழங்கிய திராட்சை ரசம் என்றாலும், வழங்கப்படும் நோக்கம் ஒன்றுதான். இரண்டு பானங்களும் இயேசுவின் அருட்கொடையாம் சிலுவைப்பாடுகளை நினைவுறுத்தும் ஒன்றே. அது கிறிஸ்துவின் இரத்தத்தில் நாம் பங்குகொள்ளுகிறோம் என்னும் பேருண்மையின் அடையாளம் மட்டுமே. ரசத்தின் உள்ளடக்கம் என்பது இங்கு அப்பகுதி மக்களின் பாரம்பரியத்தை மட்டுமே தாங்கி நிற்பதாக அமைகிறது என்றே கொள்ளவேண்டும்.  அவ்வகையில் சுண்ணாம்பு தடவிய பதனீரோ அல்லது கள்ளோ பனையேறியின் உழைப்பின் அடையாளமாகத்தான் பார்க்கப்படவேண்டும். வேறு வகைகளில் பார்க்கப்படுவது பார்பவரின் பார்வைக் குறைபாட்டையே எடுத்தியம்பும்.

திருமறையில் இயேசு அருந்திய திராட்சை ரசம் எப்படிப்பட்டது என்று விவாதங்கள் வரலாற்றில் அப்போதே எழுந்திருக்கின்றன.   “எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள். மனுஷகுமாரன் போஜனம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்”.  (மத்தேயு 11: 18 – 19) இந்த வசனம் “நீதி” என ஒப்புக்கொள்ளப்படும் என்ற இடத்தில் நிறைவடைகிறது கவனத்திற்குட்படுத்தவேண்டியது ஆகும்.  அதுவே ஞானம்.

நன்றி: இணையதளம்

இன்று கள் என்பது கண்டிப்பாக போதை வஸ்து அல்ல. அது போதைக்கு எதிரான ஒன்றாகவே எழுந்து நிற்கின்றது. இன்றைய தமிழக அரசு வழங்கும் வெளிநாட்டு மதுபானங்கள் என்பவை உடலையும், உள்ளத்தையும், குடும்பங்களையும் அழிப்பவை. ஆனால் பனங்கள் என்பது குடும்பங்களை வாழ வைப்பவை. அது ஒரு விடுதலையின் அடையாளம். காலம் காலமாக தங்கள் முன்னோர்  புழங்கிய தளங்களில் பனையேறிகள் தங்கு தடையின்றி பயணிக்கும் அனுமதி சீட்டு.

கள் இறக்க அனுமதி இருந்தாலே பனை சார்ந்த பிற தொழில்கள் செழிக்க இயலும். பலர் என்னிடம் கள் என்பது ஒரு போதைப்பொருள் தான். அவைகள் தமிழகத்தில் விற்பனை செய்யக்கூடாது எனவும், ஏன் கள் விற்பனையை நீங்கள் ஊக்குவிக்கின்றீர்கள் பதனீர் எடுப்பதை ஊக்கப்படுத்தினால் அவர்களுக்கு எந்த வகையிலும் வருமானம் குறைவுபடாதே? இவ்விதமான தீய காரியங்களுக்கு ஏன் உடன்படுகிறீர்கள் என கேள்விகளை முன் வைப்பார்கள். நான் மறு உத்தரவாக அவர்களைக் கேட்பதெல்லாம், நீங்கள் பனை ஏறுவீர்களா? என்பதைத்தான். பனை ஏறாதவர்கள் பனையேறிகளுக்கு எது தேவை என நிர்ணயிக்க இயலாது. பனை ஏறுகிற எவருமே கள்ளிற்கு எதிரான நிலைப்பாடு எடுத்து நான் பார்த்ததில்லை. கள் குடிக்காமல் பனையேறிகள் இருந்திருக்கலாம் ஆனால், ஒருபோதும், பனை சார்ந்து இயங்கும் மக்கள் கள் தடை வேண்டும் என சொல்லமாட்டார்கள். கள்ளில் இருக்கும் மருத்துவ குணங்கள் அப்படிப்பட்டவைகள். குறிப்பாக கோடை கால வெம்மையிலிருந்து மக்களைக் காக்கும் அருமருந்து கள். ஆகவே கள்ளிற்கு எதிரான நிலைப்பாடு என்பது, பனையேறிகளைப் புரிந்து கொள்ளாமை தான்.

முந்தைய பயணம்போல் நான் எனது இருசக்கரவாகனத்தை இப்பயணத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. எனது இருசக்கர வாகனம் இல்லாத கலவையான ஒரு பயணம் இது. இவ்விதமான கலவையான ஒரு பயணத்தை எப்படி ஒருங்கிணைத்து எழுதுவது என்ற எண்ணம் என் மனதின் அடியாளத்தில் இருந்துகொண்டிருந்தது.

இச்சூழலில் தான் நண்பர் ஷாகுல் திருவனந்தபுரத்திலுள்ள நண்பர் சுப்பிரமணியின் தொடர்பு எண்னைக் கொடுத்தார். நண்பர் சுப்பிரமணி உளவுத்துறையில் பணியாற்றியவர். அதற்கான கல்வியினை கற்கும்படியாக பல நாடுகளுக்கு பயணித்தவர். இலக்கிய வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அண்ணன் ஜெயமோகன் அவர்கள் மூலமாக எனது பயணக்கட்டுரையினைக் குறித்து கேள்விப்பட்டு, பின்னர் சாகுல் அவர்களின் கடையிலிருந்து எனது புத்தகத்தை  வாங்கி வாசித்திருக்கிறார்.  எனது பனைமரச்சாலையினை வாசித்துவிட்டு என்மீது தனிப்பிரியம் கொண்டு என்னைப் பார்க்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எப்படியும் திருவனத்தபுரத்தைக் கடந்து செல்வதினாலேயே நான் அவருக்கு  படங்களை எடுத்துச் செல்லவும் அவரை சந்திக்கவும் உறுதி கூறினேன். எனது பயணத்தின் துவக்கம் முதல் என்னோடு தொடர்பில் இருந்தார். திருவனத்தபுரத்திலிருந்து தேவிகோடு செல்வதற்கு உதவி வேண்டுமென்றால் தாம் உதவி செய்வதாகவும் கூறியிருந்தார். என்ன உதவி தேவையென்றாலும் தயங்காமல் கேளுங்கள் என்றார்.

நான் திருவனந்தபுரம் வருகிறேன் என அறிந்தபோது எனது மூத்த சகோதரி மெர்சியா அவர்கள் என்னை வந்து பார்த்துவிட்டு செல் என்றார்கள். அக்கா சர்வதேச பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர்கள் திருவனந்தபுரத்தில் தான் இருக்கிறார்கள் என எண்ணினோம் ஆனால் அவர்கள் நெடுமங்காடு செல்லும் வழியில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாக விலாசத்தைப் பார்த்து சுப்பிரமணி கூறினார்.

திருவனந்தபுரம் வந்து இறங்கியதும் அனைவரும் வரிசையாக நிற்கவைக்கப்பட்டோம். சுமார் ஒரு மணி நேரம் நின்றுகொண்டிருந்தோம். இரயிலில் இருந்து இறங்கிய பயணிகளைத் தவிர வேறு எவரும் அங்கு இல்லை. எங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கும் நபர்கள் மட்டுமே அங்கிருந்தார்கள். தொற்று நோய்க்கான எவ்வித ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை. பயண சீட்டைச் சரிபார்த்து எங்கே செல்லவேண்டும் என்றும், ஆவணங்களை சரிபார்த்து விலாசத்தை வாங்கிகொண்டு விட்டுவிட்டார்கள். ஒருவழியாக அனைத்து முறைமைகளும் முடிந்து வெளியே வருவதற்கு கிட்டதட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது. பிள்ளைகள் துவண்டுபோனார்கள்.

இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது  ஜாஸ்மினுடைய தம்பி ஜஸ்டின் வந்து காத்திருந்தார். போதகர் ஜாண் ராஜாமணி அவர்களும் எங்களுடன் வீட்டிற்கே வருவதாக கூறியிருந்தார். நாங்கள் பெட்டிகளை வண்டியில் அடுக்கிக்கொண்டிருக்கும்போது நண்பர் சுப்பிரமணி அவரது காரிலேயே வந்து சேர்த்துவிட்டார். அடையாளம் கண்டதும், காரிலிருந்து மிகவும் உயரமான நல்ல உடல்வாகும்கொண்ட ஒரு நபர் இறங்கி என்னை நோக்கி வந்தார். நான் என்ன என எண்ணுமுன்பே எனது காலில் விழுந்தார். பையன் ஜனா தான் ஆசீர்வாதம் பண்ணுங்க என்று சுப்பிரமணி சொன்னார். ‘கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக” என்று சொன்னேன்.

எனது குடும்பத்தினர் மற்றும் போதகர் ராஜாமணி ஆகியோரை ஜஸ்டின் காரில் ஏறச்சொல்லிவிட்டு, நான் நண்பர் சுப்பிரமணி அவர்கள் காரில் ஏறிக்கொண்டேன். உடனேயே கொண்டு வந்த படங்கள் மறந்துவிடக்கூடாது என எண்ணி, அவரிடம் கொடுத்தேன். பசிக்கிறது எங்காவது நிறுத்துங்கள் என்றேன். எங்கள் கார் முன்னால் வழிகாட்டியபடி செல்ல குடும்பத்தினர் எங்களைத் தொடர்ந்தனர். திருவனத்தபுரம்  கிட்டத்தட்ட அடைபட்டுக்கிடந்தது. உணவு தேடியபடி சென்றோம். ரோட்டோரம் ஒரு கேரவனைக்கண்டு நிறுத்தி, சுட சுட கேரள கல் தோசை, ஆறென பெருக்கெடுத்தோடும் சுவையான தேங்காய்ச் சட்னி மற்றும் பீஃப் சாப்பிட்டோம்.

சுப்பிரமணி, சொல்லியிருந்தால் கண்டிப்பாக வீட்டில் உணவு தயாரித்திருப்பேன் என்றார்கள். அக்கா பணியாற்றும் இடத்திலும் உணவு தயாரிக்க இயலாத சூழ்நிலை. அக்கா இருக்குமிடம் நோக்கி செல்லும் வழியில் எங்கும் பேசிக்கொண்டே சென்றோம். அக்காவை பார்த்தபோது மகிழ்ந்துபோனோம். அக்கா அவர்கள் இருக்கும் இடத்தைக் சுற்றிகாட்டினார்கள். கத்தோலிக்க குருமார் நடத்தும் அந்த கல்லூரி மிகவும் அழகிய சூழலில் அமைக்கப்பட்டிருந்ததை அந்த இரவிலும் கண்டுகொண்டோம்.

இடமிருந்து வலம்: ஜாஸ்மின், அக்கா, ஆரோன், நான், போதகர் ராஜாமணி, மித்திரன், சுப்பிரமணி, ஜனா

எங்கள் சுருக்க பயணத்தில்  நான் கண்டுகொண்டது இதுதான். சுப்பிரமணியிடம் ஒரு வேகம் இருந்தது, அன்பு கூறுவதில் ஆகட்டும், பேச்சில் ஆகட்டும், வாகனம் ஓட்டுவதில் ஆகட்டும், நிறுத்தவியலா ஒரு கரைபுரண்டோடும் தன்மை உண்டு. நான் மிகவு ரசிக்கும் ஒரு வேகம் அது. அவர் ஒரு பிள்ளை சமூகத்தை சார்த்தவர். பிள்ளை சமூகத்தினரிடையே பனை சார்ந்து காணப்படும்  தொடர்புகளை எனக்கு விவரித்தபடி வந்தார். அது எனக்கு மாபெரும் திறப்பு.  பெரும்பாலான சடங்குகள் நமது சாதிக்குள்ளேயோ அல்லது சமயத்திற்குள்ளேயோ இருப்பதால், நம்மால் ஒருபோதும் பிற சாதியினர் எவ்விதம் தங்கள் சடங்குகளைச் செய்கின்றனர் என உணர முடியாது, பார்க்கவும் வழியில்லை. அன்று மட்டும் என்னிடம் பலமுறை கூறியபடி வந்தார், “நீங்கள் இந்த பயணத்தை ஒரு கட்டுரைத் தொகுப்பாக போடவேண்டும் என்று”. என்னால் இயலுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனாலும் முயன்று பார்க்கலாம் என வாக்களித்தேன். இப்புத்தகம் வடிவம்பெறுமென்றால் அதற்கான “பிள்ளை”யார்சுழி சுப்பிரமணி தான்.

நாங்கள் பிரியும் வேளை வந்தபோது, எனது கரத்தில் ரு2500/- கொடுத்தார். நான் இருக்கட்டும் வேண்டாம் எனக் கூறினேன். உங்கள் பயணம் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்றார். அதனை ஒரு வாழ்த்தாக பெற்றுக்கொண்டேன். பயணம் குறித்து எழுதுவது மட்டுமல்ல பயணம் செய்வதே இப்போது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது.

நான் அவர்களிடம் விடைபெற்று காரில் ஏறியவுடன், போதகர் என்னிடம் கூறினார்” திருச்சபையில் கூட இத்துணை அன்பானவர்களை காண்பது அரிது என்றார்” ஆம். நான் மட்டுமல்ல சுப்பிரமணியுடன் பழகியவர்கள் கண்டிப்பாக இதனை உணர்ந்துகொள்ளுவார்கள்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம் 2

திசெம்பர் 21, 2020

பனை இரயில்

இரயில் காலை 9.30 மணிக்கு புறப்பட இருந்தாலும் சீக்கிரமாக வந்துவிட்டோம்.  இரயில் சுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தது. இரயிலுக்குள் ஏறிய பின்பு தான் காலை உணவு. உணவுகளை எடுத்து வந்த பெரிய ஓலை பை ஜாஸ்மின் செய்தது.  இளவரசி கற்றுக்கொடுக்க ஜாஸ்மின் மட்டுமல்ல திருச்சபையின் பல குழந்தைகள் பனையோலைப் பொருட்களை செய்து பழகினர். இவ்விதமான பின்னல்கள் பொறுமையாக செய்யவேண்டியது ஆகும். ஒரே விதமான பின்னல்களை மீண்டும் மீண்டும் செய்வது பெருமளவில் சலிப்பூட்டக்கூடியதாக இருந்தாலும், நுணுக்கங்களை தேடி கண்டடைவோருக்கு, அதில் கூடி வரும் நேர்த்தி அளிக்கும் பரவசம் அளவில்லாதது. இளவரசி அவ்வகையில் திறன்மிக்கவளும் பொறுமைசாலியும் கூட. பனை ஓலையை தொடமாட்டேன் என்ற ஜாஸ்மின், மெல்ல ஓலையின் பால் தனது கவனத்தை திரும்பியதற்கு இளவரசியின் பயிற்றுவிக்கும் திறன் ஒரு முக்கிய காரணம்.

ஜாஸ்மின் செய்த பனையோலைப் பை

இரயிலில் அமர்ந்தவுடன் எனது தலையிலிருந்த தொப்பியைக் கழற்றி அங்கிருந்த கொக்கியில் தொங்க விட்டேன். உணவு கூடைகளை ஓரிடத்தில் வைத்தேன். நான் எங்கும் எடுத்துச் செல்லும் பனை ஓலையால் செய்யப்பட்ட திருமறை பையினையும் தொங்கவிட்டேன். ஒவ்வொன்றும் அதற்கான இடத்தைப் பெற்றபோது அழகாகவே இருந்தன.  இவ்விதமாக அடுக்கியபோது ஏன் இந்திய அளவில் பனை ஓலைகளாலான பொருட்களை சேகரித்து அவைகளை ஒரு இரயில்  கண்காட்சியாக வைக்கக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. எவரோ வைப்பது என்ன நானே எனக்கான இரயில் கண்காட்சியை அமைக்கிறேன் என்று எண்ணியபடி என்னிடமிருந்த ஓலைப் பொருட்களை இரயிலில் ஆங்காங்கே வைத்து நிறைவு கொண்டேன்.

உணவுபொருட்களை எடுத்துச் சென்ற பை

இளவரசி எனக்கு செய்து கொடுத்திருந்த தொப்பி மிக அழகானது. முதன் முறையாக நான் அதனை கண்டபோது வாரி அனைத்துக்கொண்டேன். அது எனது வாழ்வின் அங்கமாகிப்போகும் என அப்போது நான் சற்றும் நினைத்திருக்கவில்லை. முகம்மது என்னை பல கோணங்களில் இந்த தொப்பியுடன் புகைப்படம் எடுத்திருக்கிறான். அதில் ஒன்றை நான் முகநூலில் பகிர்ந்தபோது எனது சித்தப்பா “வேடிக்கையாக இருக்கிறது” என்று பதிவிட்டார்கள். எனக்கு இரத்தம் தேவையில்லாமல் கொதித்தாலும் அவரை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. எனது தொப்பியை குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சாதாரண மனிதர் பார்த்தால் இது என்ன “கடவத்தை கமத்தி வெச்சிருக்கு” என்றே ஏளனமாக சொல்லி கடந்து செல்வார்கள். பார்ப்பதற்கு அகலமான பின்னல்களால் செய்யப்பட்டிருக்கும் இந்த எளிய தொப்பி குறித்த பின்னணியத்தை ஒருவர் அறிந்தால் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும்.

பலர் கலந்துகொண்ட பனை ஓலைப் பயிற்சியில் இளவரசி இரண்டாம் நாள் தான் கலந்துகொண்டாள். ஆறு நாள் நடைபெற்ற அந்த பயிற்சியில், பிறரை விட சிறப்பாக கற்று தேறினாள். ஓலையின் மீது அவளுக்கு ஒரு தனி ஈடுபாடு வந்தமைந்தது. பனை ஓலை அவளை தன்னுள் இழுத்துக்கொண்டதா இல்லை, திறமையே உருவான அவள் பனை ஓலையில் தனது கலை வாழ்வைக் கண்டடைந்தாளோ தெரியவில்லை. சொந்தமாக தனக்கென ஒரு செல்பேசி இல்லாதவள், தனது தந்தை வீட்டிற்கு வரும் வரை காத்திருந்து  அவரது செல்பேசியை வாங்கி, அதில் காணப்படும் பல்வேறு பனையோலை பொருட்களை பிரதியெடுக்க ஆரம்பித்தாள்.

அப்படித்தான் ஒருநாள் அழகிய காலணி ஒன்றைச் செய்து காண்பித்தாள். மிகவும் அழகாக இருந்த அந்த காலணி எனக்கு பிடித்துப்போயிற்று. பனையோலையிலேயும் பனம் பத்தையிலேயும் காலணி போட்டு செல்லவேண்டும் என்பது எனது வெகுநாளைய விருப்பம். முற்காலங்களில் பனை ஓலையிலேயே எளிய மனிதர்கள் காலணிகளை செய்து புழங்கியிருக்கிறார்கள். சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கூட எனது சகோதரி அவ்விதமான காலணிகளை மார்த்தண்டம் சந்தைக்கு பொருட்களை சுமந்துவரும் எளிய மனிதர்கள் போட்டிருப்பதை தான் பார்த்ததாக நினைவுகூர்ந்திருக்கிறார்கள். இவ்வித காலணிகள் நிமிடத்தில் செய்யகூடியது. ஒருநாள் பயணத்திற்கானது. அது போலவே முட்காடுகளில் இருந்து தங்கள் கால்களைப் பாதுகாக்க பனையேறிகள் இவ்விதமான பனை ஓலை செருப்பு செய்வது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். நாங்கள் குமரி மாவட்டத்திலுள்ள மிடாலக்காடு என்ற பகுதியில் தங்கியிருக்கையில், எங்கள் வீட்டின் அருகில் அருணாச்சலம் எனும் பெரியவர் எனக்கு அவ்விதமான ஒரு செருப்பை செய்து கொடுத்தார். அந்த செருப்பை போட்டுக்கொண்டு நாகர்கோவில் வரை போய் வந்தேன். அதைக் குறித்து இந்துவில் நான் எழுதியபோது, தனது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இவ்வித செருப்பு கிடைக்குமா என்று ஒரு சித்த மருத்துவர் என்னை தொடர்புகொண்டு கேட்டார். நமது வாழ்க்கையில் நாம் இழந்தைவகளுள் அனேகம் நமது வறட்டு கவுரவத்தால் தான். பிறர் நம்மைக்குறித்து  என்ன நினைப்பார்களோ என்கிற தாழ்வு மனப்பான்மையால் இழந்தைவைகள் அதிகம். பனை சார்ந்த பொருட்கள், நமக்கு அதிக செலவு வைக்காதவைகள். சூழியலை மாசு படுத்தாதவைகள். ஒருவகையில், பனை சார்ந்த பொருட்களை நாம் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தால், அதன் மூலமாக  தோல் பதனிடும் ஆலைகளின் பெருக்கத்தை வெகுவாக குறைத்திருக்கலாம். நமது நிலம் கெட்டுப்போயிருக்காது. எண்ணற்றோர், வேலைவாய்ப்பு பெற்றிருப்பார்கள்.

பாரம்பரியமாக இங்கே தயாரிக்கப்பட்ட பனையோலை  செருப்பிற்கும் இளவரசி தயாரித்த செருப்பிற்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. தென் தமிழகத்தைப் பொறுத்த அளவில் ஓலைகள் பாய்போல சமதளமாக பின்னப்பட்டு பனை நார் கொண்டு வார் அமைக்கப்பட்டிருக்கும். இளவரசி செய்ததோ படகு போன்ற ஓர் வடிவம். தனியாக வார் தேவைப்படாமல் கால்களை பின்னல்களுக்குள் நுழைக்கும் ஒரு அமைப்பு. நாம் தற்காலங்களில் அணியும் கட் ஷூவை ஒத்திருந்தது. ஆகவே இது ஒரு இந்திய தயாரிப்பு போல் இல்லாதத்தால், எங்கிருந்து இதனைக் கற்றாய் எனக் கேட்டேன். அதற்கு அவள் ஒரு ருஷ்ய இணையதளத்தை காண்பித்தாள். அரண்டுபோனேன். அப்படியே ஓலைகளில் பின்னப்பட்ட அழகிய காலணிகள் செய்யப்பட்டிருப்பதைப் அந்த தளத்தில் பார்த்தேன். நம்பவே முடியவில்லை! ருஷ்யாவில் எப்படி ஓலைகள் கிடைக்கும்? ஆகவே எந்த இயற்கைப் பொருளைக் கொண்டு அதனை தயாரித்திருக்கிறார்கள் என தேட ஆரம்பித்தேன். 

ஐரோப்பாவின் வடக்கு பகுதிகளில் பாஸ்ட் (Bast) வகை காலணிகள் தயாரிக்கப்பட்டுவந்தன. இவைகள் டிலியா (Tilia) வகை மரங்களின் பட்டைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. மரத்தின் வெளிப்புற பட்டையை  நீக்கிவிட்டு, உள்ளிருக்கும் பட்டைகளை உரிந்து இதனைச் செய்கிறார்கள். ருஷ்ய மொழியில் ஒரு ஜோடு என்பதை “லாப்டி” என்றும் ஒற்றைச் செருப்பை லாப்டோ என்றும் அழைக்கிறார்கள்.  இவைகள் ஏழைகளாலும் குடியானவர்களாலும் பயன்படுத்தப்பட்டதாலும், இதன் வாழ்நாள் குறுகியதாலும், பின்னாளில் வசை சொற்களாகவும் பயன்பட்டன. அது அப்படித்தான், உலகெங்கும் திறன் மிக்கவர்களை வசை சொற்களால் அழைப்பது என்பது மேட்டுக்குடித்தனம் என்ற எண்ணம் மேலோங்கியிருந்த காலம் அது.

ருஷ்யாவில் தயாரிக்கப்படும் பாஸ்ட் மரப்பட்டையில் தயாரிக்கபடும் காலணிகள்

ஒவ்வொரு மனிதனும் இவ்வித காலணிகள் செய்ய கற்றிருப்பர். பெரும்பாலும் ஆண்களே இதனைச் செய்வர். பெண்கள் யாரேனும் செய்யக் கற்றிருந்தால் குடும்பத்தில் அவர்களுக்கு பெருத்த மரியாதை இருக்கும் என்பதாக கூறப்படுகின்றது. சிறுவர்கள் இவைகளை செய்ய கற்றுக்கொள்ளும்போது முதல் காலணியை நெருப்பில் சுட்டு அதன் சாம்பலை நீரில் கலக்கி அவர்களுக்கு குடிக்க கொடுப்பார்களாம். இவ்விதமாக செய்வது கற்பவரை மிகவும் தன்னம்பிக்கை கொண்டவர் ஆக்குகிறது. மேலும், பல்வேறு பழமொழிகள் ருஷ்ய வாழ்வில் கலணிகள் பின்னுவது மிகவும் எளிதான ஒன்று என்பதையே சுட்டி நிற்கின்றன.

பழைய காலணிகளை வேலியோரத்தில் தொங்கவிடும் வழக்கம் கூட அங்கே இருக்கிறது. அனைத்து தீய சக்திகளும் அண்டாமல் இருக்க இவ்விதம் செய்யும்வழக்கம் இருக்கிறது என அறிந்துகொண்டேன். இவ்விதம் செய்யும் காலணிகளை குப்பையில் போடமாட்டார்கள் என்பதே அவைகளை செய்வோர் அவைகளுக்கு அளிக்கும் மரியாதை என்பதாக உணர்ந்துகொள்ள முடிந்தது.

வரலாற்றிற்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே இவ்வித செருப்புகள் புழக்கத்தில் இருந்திருக்கின்றன. குறிப்பாக இவ்வித காலணிகள் செய்யக்கூடிய பழைமையான மர அச்சு தொல்லியல் நிபுணர்களால் கண்டடையப்பட்டிருக்கிறது. சுமார் 4900 வருட பழைமையான இவ்வித அச்சு, பழங்காலத்தில் எப்படி இதனை பயன்படுத்தி காலணிகள் செய்திருக்கிறார்கள் என்பதை குறிப்புணர்க்த்டும். உலகம் முழுக்கவே தாவரங்கள் தான் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தவைகளாக இருந்திருக்கின்றன. குறிப்பாக வெறுங்கால்களை கொண்டு நடக்க சிரமமாக இருந்தபோது இவ்வித கண்டுபிடுப்புகள் எழுந்க்டிருக்கலாம். புதிய கற்காலத்தைச் சார்ந்த இவ்வித காலணிகளின் பயன்பாடு, தமிழகத்திலும், இந்திய நிலப்பரப்பிலும் இருந்திருக்கலாம் என்பதை தெளிவுற உணர்த்துகின்றன. பனையோடு கூடிய தொடர்புகள் நமக்கும் பனை ஓலை காலணிகள் பயன்பாட்டில் இருந்திருக்கும் என்பதை விளக்குவதாக அமைகிறது.

இவ்விதம் மரப்பட்டைகளில் செய்யும் செருப்புகளோடு அவர்கள் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் வேறு சில பொருட்களையும் தயாரித்து பயன்படுத்த துவங்கினர். அவைகளில் பொருட்களை முதுகில் சுமந்து செல்லும் பையும், தொப்பியும் மிக முக்கியமானவைகள். இளவரசி, அங்கிருந்து தான் இந்த தொப்பியைக் கண்டடைந்தாள்.

பனையோலை தொப்பியும் பனையோலை திருமறை பையும் இரயிலில் அழகுற காட்சிபடுத்தியபோது

அது மாத்திரம் அல்ல இந்த தொப்பிக்கு வேறு ஒரு முக்கியத்துவம் கூட இருக்கிறது. பார்க்க எளிமையாக இருந்தாலும் நாம் காணும் நான்கு முக்கு கொண்ட பெட்டி அல்ல இது. இதற்கு 12 முக்குகள் இருக்கின்றன. அதுவே இதனை சிறப்புக்குறிய ஒன்றாக முன்னிறுத்துகிறது. பனை ஓலைகளில் செய்யப்படும் அனைத்து பொருட்களும் ஒவ்வொரு சூத்திரம் கொண்டது. பெரும்பாலும் ஒன்றுபோல தென்பட்டாலும், இவைகளுக்குள் ஒரு சில மாறுதல்கள் காணப்படும். அது புதியவர்களுக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிடும்.  அந்த திடீர் திருப்பங்களுக்கு புதியவர்கள் திகைத்து நின்றுவிடுவார்கள். ஆனால் பழகியவர்களுக்கு அது ஊட்டி மலைப்பாதை போல. ரசித்து ஓட்டலாம். இளவரசி எதைச் செய்தாலும் அது திகைப்பூட்டும் அளவிற்கு அழகுடனிருக்கும். எப்படி இதனைச் செய்தீர்கள் எனக் கேட்டால், “அது ஈசிதான் பாஸ்ட்ரைய்யா” என்பாள். ஆனால் முதல் முறையாக எனக்கு அவள் செய்து தந்த தொப்பியைக் காட்டி கேட்டபோது “கொஞ்சம் கஷ்டம்தான்…” என்றாள். இளவரசிக்கே சிரமமாக இருக்கிறதா என்று நினைத்துக்கொண்டேன்.

ஒருமுறை நான் ஒரிசா சென்றபோது அங்கிருந்த துறவிகள் வாழ்வில் பனையோலைகள் மிக முக்கிய இடத்தைப் பிடித்திருந்ததைக் காண முடிந்தது.  ஒரு ஜாண் அளவேயுள்ள ஒரு சிறிய ஓலைப்பெட்டியில் கயிற்றினை நுழைத்து, அவர்களுக்கான பொருட்களை எடுத்துச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.  சிறிய நீள்சதுரமான பெட்டி. அங்கிருந்த துறவிகளிடம் பழைமையான ஒரு பெட்டியை வாங்கி அதைப்போல செய்ய இயலுமா என குமரி மாவட்டத்திலுள்ள சில நண்பர்களைக் கேட்டேன். அனேகருக்கு தெரியவில்லை. இறுதியாக பல்வேறு வகைகளில் முடையும் திறன்கொண்ட பெண்கள் அமைப்பு ஒன்றைக் கண்டு அவர்களிடம் இதைப்போல் செய்துகொடுங்கள் எனக்கோரினேன்.  அவர்கள் பலவாறாக முடைந்து பார்த்துவிட்டு, இயலாது என கைவிரித்துவிட்டார்கள். ஏன் என நான் கேட்கவே “முக்கு எங்கே திருப்பவேண்டும் எனத் தெரியவில்லை” என்று தான் கூறினார்கள்.  அப்போதுதான் மொட்டைவிளை செல்லையா தாத்தாவைப் பார்த்தேன். எனது எம் எஸ் எல் 8537 புல்லட் வாகனத்திற்கு இருக்கையினைச் செய்து கொடுத்தவர் அவர்.   செய்துவிடலாம் என்றார். குமரி மாவட்டத்தில் இவ்விதமான ஒரு வடிவம் இதற்கு முன்பு இருந்ததில்லை. அவர் முயன்று  இவ்விதமான ஒரு அழகிய துறவிப்பெட்டியினைச் செய்து கொடுத்தார். மீண்டும் ஒரு தருணத்தில், இது போல செய்ய சிரமப்பட்ட அதே  பெண்களுக்கு இதனை எப்படி செய்ய வேண்டும் என சிறு கணக்கு ஒன்றைச் சொல்லிக்கொடுத்தார். அவர்கள் இலகுவில் பிடித்துக்கொண்டனர். அது அப்படித்தான், ஒவ்வொரு பொருளைச் செய்யவும் அதற்கான சூட்சுமம் இருக்கின்றது.

நான் பார்த்தவரையில்  பெரும்பாலும் பாரம்பரிய பொருட்கள் செய்யும் எவருமே மூன்று பொருட்களுக்கு மேல் செய்வதில்லை. பல பொருட்கள் செய்யத் தெரிந்திருந்தாலும், ஒன்றிரண்டு பொருட்களுக்குள் அவர்கள் தயாரிப்பவை நின்றுவிடும். ஏனென்றால், வேகம் தாம் இதில் முக்கியம். குறைவான கூலி கிடைக்கையில், வேகமாக செய்து கொடுக்கும் பொருட்களால்தான் ஏதேனும் குறைந்தபட்ச சம்பாத்தியத்தை இவர்களுக்கு உறுதி செய்யும். மேற்கத்திய நாடுகளைப்போல் தனித்த வடிவமைப்புகளுக்கான மதிப்பு இங்கே கிடையாது. பனையோலைக் கலைஞர்களை ஏமாற்ற முடியுமா? அல்லது சுரண்டிக்கொழுக்க முடியுமா? என்று அலைகின்ற மக்களே அதிகம்.

ஆகவே தான் நான் பனை ஓலைப் பொருட்களை விற்பனை செய்வதை முன்னிறுத்தாமல், பனை சார்ந்த பயிற்சிகளை முன்னெடுக்கிறேன். பனையோலைப் பொருட்களைச் செய்கிறவர்கள், அதில் உறைந்திருக்கும் திறன் சார்ந்த “மதிப்பை” உணர்ந்தார்கள் என்றால், பனை ஓலைகளை விலைகொடுத்து வாங்கி காப்பாற்றும் செயலைவிட அதன் ஆழ்ந்த கலைதன்மையை அறிந்து பாதுகாக்கவும் பயன்படுத்தவும் விழைவார்கள்.

என்னிடமிருந்த  ஒவ்வொரு பொருளையும் எடுத்து நான் இரயிலில் வைத்து அழகு பார்த்தேன். பனை இரயில் என்பது எப்படி இருக்கும்? என எனது கற்பனையை ஓட்ட ஆரம்பித்தேன். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் பனை ஓலை கைவினைஞர்களை தெரிவு செய்து அவர்களை இணைத்து எடுத்துச் செல்லும் ஒரு இந்திய பயணமாக அது இருக்கவேண்டும் என எண்ணினேன்.  ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவர்கள் செய்யும் பாரம்பரிய பொருட்களை வைக்கும் வகையில் ஒவ்வொரு பெட்டி ஒதுக்கப்படவேண்டும். அந்த பெட்டிகளில் ஒவ்வொரு பொருளின் அருகிலும் அப்பொருளினைக் குறித்த சிறு குறிப்பும் வைக்கப்பட்டிருக்கவேண்டும். முடிந்தால், பல்மொழிகளில் அந்த பொருள் குறித்த ஒலிக்கோர்ப்பு இணைக்கப்பட்டிருக்கவேண்டும். கண் தெரியாதவர்களுக்கு இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். வாய் பேசாதவர்களுக்காக பனை சார்ந்த கலாச்சாரத்தை விளக்கும் காட்சிகளும் ஓடிக்கொண்டிருக்கலாம். ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு கலைஞர்கள் ஓலையில் பொருட்களை செய்து காட்சிக்கு வைப்பது சிறப்பாக இருக்கும்.   ஒரு உணவு பெட்டி, பனை உணவுகளை விற்கும்படியாகவும், ஒரு பெட்டி பனையோலை சார்ந்த பொருட்களை விற்பதற்காகவும் வைக்கப்பட்டிருக்கவேண்டும். மிகப்பெரிய இலாபம் கிடக்கவில்லை என்றாலும், இவ்வித முயற்சிகள் இரயில்வே துறை தனது சமூக பங்களிப்பாக சூழியலுக்காகவும் சமூக நல்லைணக்கத்திற்காகவும், கிராமிய பொருளியலை மேம்படுத்தும் விதமாகவும், இந்திய துணைக் கண்டத்தின் பல்முனைக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அமையும். அவ்வகையில் இரயில்வே மிகப்பெரும் களப்பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளுவதால்,  துண்டுபட்டுகிடக்கும் சமூகங்களுக்குள் ஓர் இணைப்பை உருவாக்க இயலும். காலாச்சார பரிமாற்றங்கள் நிகழும் வாய்ப்புகள் வளமாக இருக்கின்றன.

ஓலைச் சுவடிகள் முதல் இன்றைய நவீன பயன்பாட்டிற்கான பொருட்கள் வரை வைக்கப்பட்டிருக்கும் ஒரு இரயில் இயக்கப்படுமென்றால், பனை மரங்களைக் காக்கும் ஒரு பணியினை இந்திய இரயில்வே சிறப்பாக முன்னெடுத்திருக்கிறது எனக் கொள்ள இயலும். பரீட்சார்த்த முறையில் ஒரிரு பெட்டிகளை மட்டுமாவது இணைத்து ஏதேனும் ஒரு மாநிலம் இவ்வித முயற்சிகளை முன்னெடுக்கலாம். தமிழகம், ஆந்திரா, பீகார், ஒரிசா போன்ற இடங்கள் வெள்ளோட்டத்திற்கு தகுதியானவைகள். இரயில் பெட்டிகளில் ஒவ்வொரு மாநில பனையேறிகள் குறித்த படங்களும், பெரும்பான்மையாக காணப்படும் பனை சார்ந்த பொருட்களை காண்பிக்கும் படங்களையும் எடுத்துக்காட்டும் வகையில் பெட்டிகளை அமைக்கலாம். சிறப்பு இருக்கைகளையும் படுக்கைகளையும் பனை நார் கொண்டு அமைக்கலாம்.  மூன்று வருடம் மட்டும் முன்னெடுக்கும் இவ்வித முயற்சிகளால் இந்திய நிலம் முழுக்க பனை ஓலைகளின் பயன்பாடு அதிகரிக்கும் அதே வேளையில் நெகிழிக்கு எதிரான ஒரு முன்னெடுப்பாகவும் இந்திய இரயில்வே இவைகளை செய்யலாம். கூடவே பனை விதைகளை வழங்கவும் இரயில்வே நிலங்களுக்குள் பனை விதைகளை நடுவதற்கும் இவ்வித இரயில்கள் பயன்படக்கூடும்.

தற்பொழுது சர்வதேச சுற்றுலா வீழ்சியடைந்து இருக்கும் சூழலில் இவ்விதமான உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிப்பது பயன் தரும் ஒன்றாக இருக்கும். காதி, அந்தந்த மாநில சுற்றுலாதுறை மற்றும் இரயில்வே இணைந்து இந்திய நிலமெங்கும் பரவி விரிந்திருக்கும் கலைஞர்களை முன்னிறுத்திக் கூட இவ்விதமான ஒரு முயற்சியை முன்னெடுக்கலாம். இயற்கை சார்ந்தும் பாரம்பரிய அறிவு சார்ந்தும் இயங்கும் எண்ணம் கொண்டவர்கள் பெருகியிருக்கும் சூழலில் இவ்வித யாத்திரைகள் நவீன புண்ணிய யாத்திரைகளாக கொள்ளப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

பனை சார்ந்த பொருட்களை எனது பயணத்தில் எடுத்துச் செல்லுவதை முக்கியம் என கருதுகிறேன். ஏனென்றால், எனது பயணத்தின் நோக்கத்தை அது வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஆகவே எனக்கு இப்பொருட்கள் புதிய நண்பர்களையும், நான் செல்லும் இடங்களில் இருக்கும் பனை சார்ந்த மக்களுடன் ஒரு நெருக்கத்தையும் கொடுக்கிறது. மேலும் பனை ஓலைகளை என்னுடன் எடுத்துச் செல்லும்போது அது ஒரு அறைகூவலாக மாறிவிடுகிறது. பிறருக்கும் அப்படியான ஒரு வாழ்கைமுறை மீது பிடிப்பு ஏற்பட இது ஒரு விளம்பர யுக்தியாக இருக்கிறது.

நான் மித்திரன் மற்றும் ஆரோன், பனையோலை தொப்பியுடன் இரயில் பயணத்தில்

இன்றைக்கு கிடைக்கும் பல்வேறு பனை ஓலைப் பொருட்கள்  பெரும்பாலும் அழகு பொருட்களாகவே முன்னிறுத்தப்படுகிறது. அவைகளில் காணப்படும்  ஒரே பிரச்சனை என்னவென்றால், இவ்வித அழகு பொருட்கள் நெடுநாள் பயன்பாட்டிற்கு உரியதாக இல்லாமல், மேஜை அலங்காரமாக அமர்ந்துவிடுகிறதைப் பார்க்கிறோம். இவ்விதமான பொருட்களை விட, அன்றாடம் பயன்பாட்டில் நிலவும் பொருட்களே தேவையாக இருக்கின்றன. அதுவே பனை சார்ந்த ஒரு இயக்கம் புத்தெழுச்சியுடன் எழும்புகிறது என்பதை வெளிப்படுத்தும்  குறியீடாக அமையும். 

இரயில் பன்வேல் என்ற இரயில் நிலையத்தைக் கடக்கும்போது ரசாயினி எப்பொழுது வரும் என ஆவலுடன் வெளியே பார்த்தபடி வந்தேன். பன்வேல் மும்பையின் எல்லை. அதனைத் தொடர்ந்து வருவது சிறு நகரங்களும், கிராமங்களும் காடுகளும்தான்.  பசுமையான மலைகள் சூழப்பட்ட இடங்களில் பனை மரங்கள் நெடிந்துயர்ந்து நின்றுகொண்டிருந்தன. ரசாயினி நடை மேடையில் நின்ற பனை மரத்தை நான் கவனிக்கவில்லை. வெட்டிவிட்டார்களோ? இல்லை நான் தான் சரியாக பார்க்கவில்லையோ? ஆனால் அங்கிருந்த பனைமரத்தைச் சுற்றியிருந்த ஆலமரம் அப்படியே விரிந்து பரந்து இருந்தது. ரசாயினி எனது பனை மரச் சாலையின் துவக்கம் என்பதால் அதனைக் கடந்து செல்லும்போது எனக்குள் குதூகலித்து குழந்தையாவதை தடுக்க இயலவில்லை.

ரசாயனி இரயில் நிலையத்தில் பனைமரத்தை சுற்றியிருக்கும் ஆலமரம்

பனை மரத்தில் பற்றிப்பிடிக்கும் மரங்கள் அனேகம் உண்டு. ஆலமரம் அரசமரம் என அனைத்துமே ஃபைகஸ் (Ficus) குடும்பத்தைச் சார்ந்தவை. ஆரே பகுதிகளிலும் இவ்விதமாக மரங்களுக்குள் ஏற்படும் பிணைப்புகளை அதிகம் காண முடிந்தது. ஏனென்றால் பனை மரங்கள் பயன்பாட்டை விட்டு விலகும்போது அவைகளைப் பற்றிப்பிடிக்கும் மரங்கள் நிலைகொள்ளுவதை தவிர்க்க இயலாது. மரங்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் இவ்வித தன்மைகள் இடத்தை பேணிக்கொள்ளவும், நமது உள்ளூர் மரங்களை இணைத்துக்கொள்ளவும் வசதியாக இருக்கும். 

பென் (Pen) என்னும் இடம் வரைக்கும் பனை மரங்கள் எங்களுடன் இணைந்து வந்துகொண்டிருந்தன அதன் பின்பு பனை மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டன.

மறுநாள் காலை இரயில் மங்களூரில் அரை மணி நேரத்திற்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. கீழிறங்கி பார்த்தபோது தொலைவில் ஒரு சில பனை மரங்கள் நின்றுகொண்டிருந்தன. காலை  பொழுது அத்துணை மகிழ்வளிக்கும் ஒன்றாக மாறிவிடும் என நான் கனவிலும் எண்ணிப்பார்த்திருக்கவில்லை. நான் பெங்களூரில்  ஐந்து வருடங்கள் படித்திருந்தாலும்  கர்நாடகாவில் பனை மரங்களை பெருமளவில் காண இயலவில்லை. பெங்களூருவிலிருந்து சென்னை செல்லும் இரயில் வழித்தடத்தில் கோலார் பகுதியைக் கடக்கும்போதுதான்  பனை மரங்கள் காணப்படும். நாகர்கோவிலிலிருந்து பேருந்தில் ஓசூர் வரும் வழியிலும் பனை மரங்ளைப் பார்த்திருக்கிறேன். ஆனாலும் நான் கர்நாடகாவில் பெருமளவு பயணிக்காததால் பனை மரங்கள் எங்கே அதிகமாக இருக்கின்றன என என்னால் உறுதியாக சொல்ல முடியவில்லை. மங்களூரின் அமைப்பு நாகர்கோவிலை ஒத்து இருப்பதாகவே உணர்கிறேன். ஆகவே இக்காலை காட்சி பனை மரங்கள் இங்கே செழித்திருக்கும் எனும் நம்பிக்கையை கொடுத்தது. இப்படி பனை மரங்கள் செழித்திருக்கும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு நிகழ்வாகவும், ஒவ்வொரு பயணியும் ஒரு பனை விதை நடுவதற்கான இடத்தையும் இரயில்வே நிர்வாகம் முன்னெடுப்பது மிகப்பிரம்மாண்ட சூழியல் பங்களிப்பை முன்னிறுத்துவதாக  அமையும். வெறும் இரயில் என்று தான் இல்லை, கப்பலோ, விமானமோ, பேருந்தோ அல்லது சிற்றுந்தோ பனை விழிப்புணர்வுக்காக எதுவும் பயன்படலாம். இவ்விதமான ஒரு விழிப்புணர்வு, வரும் நாட்களில் பனை மரங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.

மங்களூர் இரயில் நிலையத்தில் பனை மரங்கள்

பனை விதைகளை நான் கொடுப்பது குறித்து எனது அமெரிக்க தோழி பேராசிரியர். விட்னி இப்படி எழுதியிருந்தார்கள். உனது தொப்பி எனக்கு ஜானி ஆப்பிள்சீட் (John Appleseed) என்ற மனிதரை நினைவுறுத்துகிறது உனக்கு அவரைத் தெரியுமா என்றார். சத்தியமாக எனக்கு அவரைத் தெரியாது. ஆகவே “யார் அவர் எனக் கேட்டேன்”. எனக்கு ஒரு ஒளிப்பட இணைப்பை அளித்துவிட்டு  அவரைக் குறித்து சுருக்கமாக பகிர்ந்துகொண்டார்கள்.  ஜாண் சாப்மான் (John Copman) என்ற ஜானி ஆப்பிள்சீட், கையில் ஒரு ஆப்பிள் விதைகளாலான பை, மற்றொரு கையில் திருமறை, மேலும் அவரது தலையில் சமைப்பதற்கான பாத்திரத்தை தொப்பி போல கவிழ்த்து வைத்திருக்கும் ஒரு அற்புத மனிதர். அமெரிக்காவில் உணவு பஞ்சத்தை உணர்ந்து ஆப்பிள் விதைகளை மக்கள் குடியேறும் பகுதிகளை கணித்து விதைத்த ஒரு மகான்.  இப்படி ஒரு மனிதர் இருந்தாரா அல்லது கற்பனைக் கதையா என்று சொல்லுமளவு அவரது வாழ்வு நாட்டுபுற கதைகளுடன் இணைந்தே இருக்கிறது.

ஜானி ஆப்பிள்சீட் பாடும் பாடல்

நீ தான் அவர். நீ செல்லுமிடங்களுக்கு பனை விதைகளை எடுத்துச் செல்லுகிறாய் இல்லையா? எனச் சொன்னார்கள். திடீரென அவர்கள் இப்படி சொன்னவுடன் நான் அயர்ந்துபோனேன். இப்படியான ஒரு பொருத்தப்பாட்டினை நான் எப்போதும் எண்ணியிருக்கவில்லை. ஒரு கையில் திருமறையும் மற்றொருகையில் பனை விதையும் இணைகோடுகளாகவே செல்லுவதை உணர்ந்துகொள்ள முடிந்தது. இறைப்பணி என்பது பலவேளைகளில் எவ்வித சூழியல் பிரக்ஞையுமற்ற அற்பணிப்புமற்ற மனிதர்களால் முன்னெடுக்கப்படுகிறது.   அதில் சூழ்ந்திருக்கும் ஆபத்து நாம் உணராதது.

ஒரு காலத்தில் பனையேறிகள் குறித்து ஏளனமாக பேசிய சமூகம் இன்றுதான் கண்திறந்து பார்க்கிறது. பனை சார்ந்து இயங்கியவர்கள் காணாமல் போனதால் நமது உணவு பழக்கங்கள் மாறிப்போய்விட்டது. ஊரே இணைந்து இனிப்பு கருப்பட்டி தயாரித்தபோது இல்லாத சர்க்கரை நோய் நம்மை இன்று அச்சுறுத்துகிறது. ஊருக்குள் பெருகியிருக்கும் நோய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் பெருகியிருக்கிறது.

இப்பயணம் எனக்கு முன்னால் எதனை முன்வைத்திருக்கிறது  என நான் உண்மையிலேயே அறியேன். ஆனால் கண்டிப்பாக பனை சார்ந்து இயங்கும் மக்களைக் கண்டு அவர்களை உற்சாகப்படுத்தவேண்டும் என எண்ணிக்கொண்டேன். ஏனென்றால், இன்று பனை சார்ந்து இயங்குகிறவர்கள் அனைவருமே அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். அரசின் எவ்வித உதவியும் கிடைக்கவில்லை ஆகவே, எப்படியாவது இவர்களை முன்னிறுத்தவேண்டும் என எண்ணிக்கொண்டேன். இன்று நாம் செய்யக்கூடுவது அது மட்டும்தான். 2016ஆம் ஆண்டிற்கு முந்தைய காலகட்டத்தைவிட, தற்பொழுது பனை சார்ந்த விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. பனை விதைப்போர், சேகரிப்போர் எண்ணிக்கை பலமடங்காக கூடியிருக்கிறது. பனை ஓலைப் பொருட்களைச் செய்யும் ஆர்வலர்கள் பெருகியிருக்கிறார்கள். கருப்பட்டிக்கான விலை அதிகரித்திருக்கிறது. இதனை உயிர்ப்புடன் வைக்கவேண்டிய கட்டாயம் நம்மைச் சூழ இருக்கிறது என கண்டுகொண்டேன். 

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பனைமுறைக் காலம்

திசெம்பர் 16, 2020

பனை வழி 

மும்பை மெதடிஸ்ட் திருச்சபையிலிருந்து  விடுப்பு எடுத்து 2017 – 2019 வரை, பனை சார்ந்த பணிகள் செய்ய தமிழகத்தில் தங்கியிருந்தேன். வெறித்தனமாக நான் செய்த பணிகள் எனக்கு நிறைவை அளித்தாலும், அதனை என்னால் தொடர முடியவில்லை. போதக பணியிலிருந்து வெளியே வருவது சாபத்தீடான ஒன்று என பொதுவாக கிறிஸ்தவ சூழலில் நம்பவைக்கப்பட்டிருக்கிறது. “அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.” (லூக்கா 9: 62)  என்கிற திருமறை வசனத்தை மிக தவறாக விளக்கும் அன்பர்கள் எங்களைச் சூழந்திருந்தார்கள். அவர்கள் எனது குடும்பத்திற்குள் ஏற்படுத்திய தாக்கத்தால், மீண்டும் மும்பை வரவேண்டிய சூழல் அமைந்தது. ஆகவே வேறு வழியில்லாமல் வெகு கசப்புடனேயே மும்பை திரும்பினேன்.

புல் ஏற்றும் வாகனம், ஆரே பால் குடியிருப்பு, மும்பை

நிற்க. இயேசுவின் மேற்கூறிய வாசகம் திருச்சபையில் பணியாற்றிய நான் பனை சார்ந்த பணியை முன்னெடுப்பதை  குறைத்து மதிப்பிடுகிறதா என்கிற கேள்வி எழலாம். இல்லை என்பது தான் உண்மை. இயேசுவின் அளப்பரிய பணியைப் பார்த்து அவரை பின்தொடர ஒருவர் விருப்பம் தெரிவித்தபோது அவர், “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்” (லூக்கா 9: 58) ஆக அவரது கருத்து இழப்பினைக் கருதி என்னை தொடர விருப்பமிருந்தால் தொடரலாம் என்பதே. மேலும் எனது இறையியல் பயணத்தின் ஒரு அங்கமாகவே பனை சார்ந்த தேடுதல் இருக்கிறது என்பதையும் எவரும் புரிந்துகொள்ளவில்லை.

மும்பை வந்த என்னை ஆரே பால் குடியிருப்பில் இருக்கும் தூய பவுல் மெதடிஸ்ட் திருச்சபையில் பணியமர்த்தினார்கள். பல வருடங்களுக்கு முன்பே இத்திருச்சபையில் சேவை செய்ய வேன்டும் என நான் ஆசைப்பட்டிருக்கிறேன். ஆனால் அப்போது வாய்க்கவில்லை. ஆரே திருச்சபை மும்பை நகருக்குள் இருக்கும் காட்டுப்பகுதியில் இருக்கிறது. நகரத்தின்   எந்த சந்தடிகளும் இல்லாமல் மரங்கள் அடர்ந்து இருக்கும் பகுதி.

இங்கே தபேலா என்று அழைக்கப்படும் 32 மாட்டு தொழுவங்கள் உண்டு. ஒவ்வொரு மாட்டு தொழுவத்திற்கும் ஒரு அலகு எண் கொடுக்கப்பட்டிருக்கும்.  1949 ஆம் ஆன்டு பணிகள் துவங்கப்பட்டு 1951ஆம் ஆண்டு நமது பாரத பிரதமர் ஜெவகர்லால் நேரு அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்தியாவெங்கும் நகரங்களில் மாடுகள் தன் போக்கில் திரிந்துகொண்டிருந்தபோது மும்பை வாழ் மனிதர்கள், மாடுகளுக்கென ஓரிடத்தை ஒதுக்கினால் நல்லது எனக் கண்டு வனப்பகுதியாக இருந்த ஆரே பகுதியில் மும்பை தெருவெங்கும் சுற்றித்திரிந்த மாடுகளையும் எருமைகளையும் கூட்டிச் சேர்த்தார்கள். இவ்வாறு சேர்ப்பது, சுத்தமான நகரத்தைப் பேணுவதற்கும், நகர் மக்களுக்கு தரமான பால்  கிடைப்பதற்கும், அறிவியல் பூர்வமாக மாடுகளை பேணி அதிக இலாபம் ஈட்டுவதற்கும் வழிவகை செய்யும் என நம்பி இவைகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஒவ்வொரு மாட்டு தொழுவமும் 500 முதல் 550 மாடுகளை பேணும் அளவிற்கு பிரம்மாண்டமானது. ஒவ்வொரு தொழுவத்திலும் மாடுகளுக்கான தீவனங்கள் வைக்கும் அறைகளும், மாடுகள் நீர் அருந்தும் தொட்டிகளும், வைக்கோல் வெட்டும் இடங்கள் மற்றும் உரிமையாளர் மற்றும் வேலையாட்கள் குடியிருப்புகள் அடங்கும். ஆரம்பத்தில் அடிப்படை வேலைகளுக்காக சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி பகுதிகளில் இருந்து வந்த தமிழர்கள் அனைவருக்கும் இங்கே அடிமட்ட வேலைகள் கொடுக்கப்பட்டன. பெரும்பாலானவர்கள் புல் அறுப்பதற்கும் கூட்டி பெருக்கும் வேலைகளுக்கும் இணைந்தார்கள். அவர்கள் தங்குவதற்காக சில இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவர்கள் குடிசை அமைத்துக்கொள்ள, தலா 2 பனை மரங்கள் கண்காணிகளால்  கொடுக்கப்பட்டன. அதன் ஓலைகளைக் கொண்டே  வீடுகள் அமைத்து முதல் தலைமுறை தமிழர்கள் இங்கே தங்கள் வாழ்வைத் துவங்கினர்.

பனங்காட்டை திருத்தி செய்த ஆரே பால் குடியிருப்பு, மும்பை (1952)

ஆரே குடியிருப்புகளில் இன்றும் ஒரு சில இடங்களில் பன்றி வளர்ப்பு உயிர்ப்புடனிருக்கிறது. அதுவும் எங்கள் திருச்சபை இருக்கும் அலகு எண் 7 நுழைவிலேயே பன்றி தான் வரவேற்கும். மட்டுமல்ல, ஆரே பகுதியில் வனவிலங்குகள் அதிகமாக இருக்கின்றன. காட்டு பன்றிகள், குரங்குகள், நரி மற்றும் புள்ளி மான்கள் இங்கே காணப்படுகின்றன. ஆரே பகுதியின் காவலனாக சிறுத்தைகள் வலம் வருகின்றன. இங்குள்ள பழங்குடியினருக்கு “வாகுபா” என்கிற சிறுத்தைப் புலி தான் முக்கிய தெய்வம். பல்வேறு கண்காணிப்பு காமிராக்களில் நாய்களைக் கவ்வும் சிறுத்தைகளின் படங்கள் பதிவாகியிருக்கின்றன. சில வேலைகளில் சிறுவர்களை கவ்வி சென்ற சம்பவங்களும், பெரியவர்கள் சிறுத்தையை எதிர்கொண்ட கதைகளும் ஏராளம். ஆரே என்றாலே ஆட்டோ ஓட்டுனர்கள் வரமாட்டார்கள் என்று சொல்லுமளவிற்கு ஒரு காலத்தில் பேய்க்கதைகள் இங்கு நடமாடியிருக்கின்றன.ஆகவே பெரும்பாலான போதகர்கள் ஆரே வருவதை விரும்புவதில்லை.

எனக்கு ஆரே பால் குடியிருப்பு என அறிவிக்கப்பட்டவுடன், உடன் ஊழியர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஒருவித நமுட்டுச் சிரிப்புடன் “ஆரே பகுதியில் பனை மரங்கள் இருக்கும்” என்று கூறி என்னை “தேற்றி” அனுப்பினார்கள். முதல் நாள் நான் ஆரே பால் குடியிருப்பு வருகிற வழியில் அதிகமாக பனை மரங்களைப் பார்க்க இயலவில்லை. சற்றே மனம் சோர்ந்து இருக்கையில், சென்னையில் இருக்கும் எனது தோழி  ரோடா அலெக்ஸ் அவர்கள் ஆரே குறித்த சில புகைப்படங்களை அனுப்பினார்கள். 1952 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட  கறுப்பு வெள்ளை புகைப்படங்கள். அனைத்து படங்களிலும் பனை நடுநாயகமாக வீற்றிருந்தது. அந்தப் படங்கள் ஆரே என்பதே ஒரு பனங்காடு என்பதாக உரத்துக் கூவின. தற்பொழுது நான் பார்க்கும் ஆரே பகுதிக்கும் படங்களில் காணப்பட்ட ஆரே காலனிக்கும் பெருத்த வித்தியாசம் காணப்பட்டது.

ஆரே பால் குடியிருப்பு (1952)

இப்படங்களை ஆரே திருச்சபையின் பொருளராகிய ஸ்டீபன் அவர்களிடம் காண்பித்தேன். ஸ்டீபன் அவர்கள் ஆரே பகுதியை நன்றாக சுற்றி வலம் வந்தவர். அவர் அவைகளில் ஒரு படத்தைக் காண்பித்து  இது நமது திருச்சபைக்கு அருகில் தான் எடுக்கப்பட்டிருக்கிறது என்றார்கள். நமது திருச்சபைக்கு அருகில் இப்படியான பனை மரங்கள் இல்லையே என்றேன். வெகு சமீப காலம் வரைக்கும் இங்கே பனை மரங்கள் இருந்தன என்றார்.

வேறு சில படங்களைக் காட்டி இது போல செறிவான பனங்காடு ஏதேனும் எஞ்சி இருக்கிறதா எனக் கேட்டேன், அவர் அப்படங்களை உற்றுனோக்கியபடி “இருக்கு” என்றார். என்னுடன் திருச்சபை செயலர் திரு. செல்வராசு அவர்களும், திரு. லாரன்ஸ் அவர்களும் எங்களுடன் இணைந்து கொண்டார்கள். ஸ்டீபன் அவர்கள் எங்களை உடனடியாக உயரமான ஓரிடத்திற்கு அழைத்துக்கொண்டு  சென்றார். அங்கிருந்து பார்க்கையில் தொலைவில் பனங்காடுகள் தெரிந்தன. பின்னர் அவர் அழைத்துச் சென்ற இடம் பனை மரங்களால் நிறைந்திருக்கும் சாய் பாங்குடா என்கிற வார்லி பழங்குடியினர் வாழும் பகுதி. இதற்கு இணையான  பனங்காடு எதையும் நான்  குமரி மாவட்டத்தில் பார்த்ததில்லை. நூற்றுக்கணக்கான பனை மரங்கள் நிற்கும் ஒரு நிலப்பகுதி. மும்பைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் விஹார் ஏரியும், இனிப்பே தனது பெயராக கொண்ட மித்தி ஆறும் இப்பகுதியிலிருந்து தான் புறப்படுகின்றன.  இன்னும் எவ்வித அழித்தொழிப்புமின்றி நிற்பதைக் கண்டபோது நெஞ்சு விம்மியது. அப்போது தான் இது கடவுள் எனக்கருளிய இடம் என  நான் நிறைவு கொண்டேன்.

சாய் பாங்குடா, ஆரே பகுதியில் எஞ்சியிருக்கும் அழகிய பனங்காடு (புகைப்படம் முகம்மது)

உடனடியாக சில திட்டங்களைத் தீட்டி பனை விதைகள் நடவும், பனை விதைகளை மக்களுக்கு கொடுக்கும் வகையில் அட்டைபெட்டிக்குள் அடைத்து இலவசமாக கொடுக்கும் முறைமையையும் உலகிலேயே முதன் முறையாக மும்பையில் துவக்கினேன். அதற்கு மெதடிஸ்ட் திருச்சபையின் அங்கத்தினரான திரு பொன்சிங் அவர்கள் பொருளுதவி செய்தார்கள்.

2019ஆம்  வருட இறுதியில், நவம்பர் மாதம் குமரி மாவட்டதிலுள்ள சங்கர் கணேஷ் என்கிற பனையேறும் தம்பியை மும்பை அழைத்திருந்தேன். சூழியலைக் கெடுக்காமல் ஒரு கிறிஸ்மஸ் அலங்காரத்தினைச் பனை ஓலைகளை மட்டுமேக் கொண்டு செய்வது சாத்தியமா என எண்ணி, முயற்சிகளை முன்னெடுத்தோம். திருச்சபையைச் சார்ந்த பல்வேறு சிறுவர்களும் வாலிபர்களும் கலந்துகொண்டார்கள். அவர்களுள் செல்வி இளவரசி, குருவை மிஞ்சும் சீடரெனப்படும் அளவிற்கு கற்றுத்தேர்ந்தாள். புதிது புதிதாக அவள் மேலும் பல அலங்காரங்களை கற்று அனைவருக்கும் பயிற்சியளிக்க ஆரம்பித்தாள். ஆகவே குறுகிய காலத்திலேயே பனை ஓலைகளைக் கொண்டு பல்வேறு அழகிய நட்சத்திரங்கள் செய்து பசுமை கிறிஸ்மஸ் கொண்டாடினோம். பனை ஓலைகளைக் கொண்டே கிறிஸ்மஸ் மரம் அமைத்தோம்.  இவ்வாறாக நாட்கள் பரபரப்பாக சென்றன.   

மெதடிஸ்ட் திருச்சபையில் ஒரு போதகருக்கு ஆண்டொன்றிற்கு 30 நாட்கள் சேர்த்தார்போல் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என்பது எழுதப்படாத விதி. நோய்க்தொற்று நேரத்தில் திருச்சபை உட்பட அனைத்து இயக்கங்களும் செயலற்றுப் போயின. ஆகவே மே மாதம் ஊர் செல்லவேண்டியிருந்த திட்டங்கள் தவிடுபொடியாயின. அதனைக் குறித்து எவ்வகையிலும் கவலைப்படாமல்,  நானும் எனது திருச்சபை மக்களும் இணைத்து, ஓய்வின்றி பனை விதைகளை மும்பையில் சேகரித்து. அவைகளை விதைக்கவும், அழகிய அட்டைப்பெட்டிகளில் இட்டு பொதுமக்களுக்கு பகிர்ந்து கொண்டிருந்தோம். நாட்கள் செல்லச் செல்ல ஒருவித தேக்க மனநிலை ஏற்பட்டது. எங்காவது ஒரு பனை பயணம் சென்றே ஆகவேண்டும் என உள்ளம் ஏங்கிக்கொண்டிருந்தது. ஆகவே விடுமுறையினை பனைமுறையாக செலவளிக்க உகந்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

நான் பனை பயணங்களால் மட்டுமே நிறைவு கொள்பவன். பனை பயணங்களை மட்டுமே எண்ணி எய்துபவன். எனது வாழ்வு பனையுடனும் பனை சார் மக்களுடனும் பனை பொருட்களுடனுமே இருக்கவேண்டும் என்ற தீராக் காதல் கொண்டவன். பனையின்றி என்னால் ஏதும் செய்துவிட இயலாது. பனை பயணம் என்பது எனது ஆன்மீக நகர்வு. ஆகவே நேரம் கிடைக்கையில் புறவயமாகவும் இல்லாத போது அகவயமாகவும் அதை மாற்றிக்கொள்ளும் நிலையை அடைந்துவிட்டேன். எனது வீட்டிற்குள்ளும், வெளியிலும், எனது ஆன்மீக பயணம் எல்லாம் பனையுடனே நிகழுமாறு பார்த்துக்கொண்டேன். பனையே எனக்கு வழிகாட்டி. பனையே என்னை இழுக்கும் விசை. பனை சார்ந்த சூழியலையே எனது இருப்பிடமாக நான் கொள்ளுவேன். ஆகவே பனை சாராதவைகளை நாசூக்காக தவிர்த்துவிடுவேன்.

இம்முறை குடும்பத்தில் நிகழும் இரண்டு முக்கிய நிகழ்வுகளை கருத்தில் கன்னியாகுமரி செல்ல வேண்டும் என ஜாஸ்மின் கேட்டுக்கொண்டார்கள். தமிழகம் செல்லவேண்டும் என்கிற விருப்பம் இருந்தாலும் இப்படியான ஒரு பயணத்தை  நான் எதிர்னோக்கியிருக்கவில்லை. மகராஷ்டிர எல்லையில் உள்ள கட்சிரோலி செல்லலாம், அல்லது கோயா பழங்குடியினர் வாழும் ஆந்திரா எல்லைக்கு செல்லலாம் என திட்டமிட்டிருந்தாலும், மழை நேரத்தில் இப்பகுதிகளுக்கு செல்வதால் எந்த பயனும் விளையாது என்பதால் அவ்வெண்ணத்தை கைவிட்டுவிட்டேன்.  எனக்கு இந்த பயணத்தை எப்படியாவது தவிர்க்கவேண்டும் என்றிருந்தது. ஆனால் அப்படி எதுவும் என்னால் செய்ய இயலாது என்பது உள்ளூற தெரியும். ஆகவே மாற்று வழிகளை யோசிக்க ஆரம்பித்தேன்.

முதலாவதாக அக்டோபர் 5 ஆம் தேதி இங்கிருந்து பயணித்து மீண்டும் நவம்பர் 6 ஆம் தேதி வருவதாக திட்டம். 9 ஆம் தேதி ஜாஸ்மினுடைய இளைய சகோதரன் ஜெகன், அவர் தம் துணைவி ஷைனி  ஆகியோருக்கு பிறந்த ஷாண் அவர்களின் முதல் பிறந்த நாள். இந்த பயலுக்காக நான் உலகிலேயே முதன் முறையாக ஒரு பனையோலைத் தொட்டிலை செய்துகொடுத்திருந்தேன். ஆகவே மாமனாக அங்கே நிற்கவேண்டிய கட்டாயம். அப்படியே ஜாஸ்மின் அவர்களுடைய  தம்பி ஜஸ்டின் மற்றும் அவரது துணைவி விஜிதா ஆகியோர் தங்கியிருக்கும் வீட்டை புதுப்பித்து அக்டோபர் இருபத்தி நான்காம் தேதி பால் காய்ச்சும் சடங்கினை வைத்திருந்தார்கள். இந்த திட்டத்தின் நடுவில், எனது பாபு மாமாவின் மகளான சாரா மெலடிக்கு அக்டோபர் 15 ஆம் தேதி திருமணம் நிகழ்கிறது என்கிற செய்தியினை அம்மா நினைப்பூட்டினார்கள். இப்படியான ஒரு நிகழ்ச்சி நிரலுக்குள் நான் என்னதான் செய்துவிட முடியும்?   ஆகவே இடைப்பட்ட நாட்களில் நான் என்ன செய்யலாம் என யோசிக்கலானேன்.

பனைமரச் சாலை பயணத்திற்குப் பின் தமிழகத்தில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை நான் அறிவேன். ஆகவே தமிழகம் சார்ந்து மீண்டும் ஒரு பயணத்தை முன்னெடுப்பது மிகவும் முக்கியமானது என நான் கருதினேன். தமிழகத்தின் பனைத்துடிப்பை அறியவும், பனை சார்ந்து இயங்கும் மக்களை காணவும், அனைவரையும் உற்சாகப்படுத்தவும் இந்த பயணத்தை ஒதுக்கலாம் என உறுதிகொண்டேன். ஆகவே குடும்ப நிகழ்வுகளில் தவறாது கலந்துகொள்ளுவேன், ஆனால், எனது பனை பயணங்கள் ஊடாக நிகழும் என்பதையும் எனது சரிபாதியிடம் குறிப்புணர்த்தி புறப்பட ஆயத்தமானேன்.

எனது பயணம் குறித்து ஒருவாறு ஒழுங்குகள் செய்தபின்,  முகநூலில் இப்படியாக எழுதினேன்

“பனைத் தொழிலாளர், ஓலை வினைஞர்கள், நார் கலைஞர்கள், மற்றும் பனை உணவு உற்பத்தியாளர்கள் அனைவரின் நலன் வேண்டி தமிழக சுற்றுப்பயணம் நிகழ்த்த உள்ளேன்.  பனை சார்ந்த நலத்திட்டங்”கள்” செய்வோம் என  தேர்தல் அறிக்கையில்  கூறும் கட்சிகளை மட்டுமே வருகிற தேர்தல் நேரத்தில் பொருட்படுத்துவோம்.  பனைசார்ந்த வாழ்வியலை முன்னெடுக்காத கட்சிகள் நமக்கு தேவையில்லை. மாற்றம் நிகழும்வரை பகிர்வோம். தமிழக பனை அன்பர்களே ஒன்றுபடுவோம்.”

நான் எதிர்பார்த்தது போல என்னை நேசிக்கும் நண்பர்கள் எனது வரவை ஆவலுடன் எதிர்பார்த்ததை என்னால் உணர முடிந்தது. நலத்திட்டங்”கள்” என நான் குறிப்புணர்ந்தியதை எனது பனையேறி நண்பர் கஞ்சனூர் பாண்டியன் புரிந்துகொண்டார். ஆகவே வெகு உற்சாகத்துடன் பயண திட்டங்களை ஒழுங்கு செய்ய ஆரம்பித்தேன்.

இம்முறை எனது பயணத்திற்கான செலவை நானே ஏற்பதென்று முடிவு செய்தேன். அதற்கு காரணம், பயணத்திற்கான செலவினங்களை எனது கைவசமிருக்கும் படங்களைக் கொண்டு என்னால் திரட்ட முடியும் என்கிற சிறு நம்பிக்கையால் மட்டுமே. அதற்கான அறிவிப்பையும் முகனூலிலேயே வெளியிட்டேன். நினைத்தது போல எவரும் படங்களை வாங்க ஆர்வம் காண்பிக்கவில்லை. ஆனால், எனது அன்பு மனைவியின் சகோதரர்கள் எங்கள் ஒட்டுமொத்த மும்பை நாகர்கோவில் பயண செலவையும் தாங்களே ஏற்பதாக கூறிவிட்டார்கள். அது ஒரு மிகப்பெரிய விடுதலையாக எனக்கு அமைந்தது. ஆகவே எனது சேமிப்பை தமிழகத்தில் செய்யவிருக்கும் பனைப் பயணத்தில் கரைக்க துணிவுகொண்டேன்.

தமிழகத்தில் இருந்து நண்பர்களின் அழைப்பு வந்த வண்ணம் இருந்தது. முதலாவதாக எனது நண்பரும் கப்பல்காரன் டைரி எழுதிய ஷாகுல் ஹமீது அழைத்தார். அவர் மும்பை வந்திருந்தபோது ஒரு பனையோலையில் செய்த புத்தரின் படத்தினை நான் அவருக்கு பரிசளித்திருந்தேன். அதனை அவர் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு வாசகர் சார்பில் கொடுக்க இருப்பதாகவும், மீண்டும் அவருக்கு அதே போன்ற ஒரு படத்தினை செய்ய நான் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் எனவும் கூறினார். மேலும், நான் எழுதிய பனை மரச்சாலை புத்தகத்தை வாசித்த அவரது திருவனந்தபுர நண்பரான திரு சுப்பிரமணி அவர்களுக்கும் அவரது நண்பர்களுக்கும் இரண்டு படங்கள் செய்து கொடுக்க வேண்டும் எனவும் என்னிடம் கேட்டுக்கொண்டார். பரபரப்பான சூழலில், என்னால் முடியுமென்றால் கண்டிப்பாக செய்கிறேன் எனக் கூறினேன்.

ஆரே காடு என்று போராடும் குழுவினர் பனை விதைகளைப் பெற்ற போது உருவாக்கிய படம்

இரண்டு படங்களை மட்டுமே என்னால் செய்ய முடிந்தது.  அவைகளையும் நான் நினைத்த வண்ணம் என்னால் முழுமை செய்ய இயலவில்லை. என்றாலும், இவைகள் திரு சுப்பிரமணி அவர்கள் கரத்தை அடைவது தகுதியாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அவைகளை எடுத்து வைத்துக்கொண்டேன். இவைகளுடன், இறுதி கட்டத்தில் ஒரு அழகிய ஜெயலலிதா அம்மையாரையும் பனை ஓலையில் செய்தேன். எனது பயண இறுதியில் தமிழக முதல்வரை சந்தித்து  பனை சார்ந்த கோரிக்கைகளை இப்படத்துடன் சமர்பிக்கலாம் என்ற எண்ணத்துடன் அதையும் எடுத்துக்கொண்டேன்.

புறப்படுவதற்கு முந்தைய நாள் உணவை எப்படி எடுத்துச் செல்லலாம் என ஜாஸ்மின் கேட்டபொழுது, பனை ஓலையிலேயே எடுத்துச் செல்லுவோம் என்றேன். ஓலைகள் எப்படி கிடைக்கும் என கேட்டபொழுது, அதனை நான்  ஒழுங்கு செய்கிறேன் என உறுதியளித்தேன்.

மறுநாள் நாங்கள் புறப்படுகிறபடியால், எங்களுடன் நேரம் செலவு செய்ய முகம்மது என்கிற ஒரு வாலிபன் வீட்டிற்கு வந்திருந்தார். அவரைப் பொறுத்த அளவில், நான் மும்பையில் மாற்றம் நிகழ்த்தும் ஒரு சூழியல் போராளி. பனை மரங்கள் அதிகம் நிற்கும் மும்பையில் இதுவரை பனை சார்ந்த முன்னடுப்புகளை எவருமே செய்யவில்லை என்பது அவருக்கு மிகுத்த ஆச்சரியமாக இருந்திருக்கிறது. பனை குறித்த புரிதல் ஏதும் இன்றி சூழியலாளர்கள் இருக்கிறார்கள் என்பது அவரை துணுக்குற செய்திருக்கிறது. பனை பயன்பாடுகள் குறித்த சுவடே அழிந்திருந்த தருணத்தில் பனை விதைகளை நான் வழங்குவது ஒரு புரட்சியாகவே அவர் கண்களுக்கு தென்பட்டது போலும். ஒரு வகையில் இது உண்மைதான், ஆரே பால் குடியிருப்பில் இருக்கும் எங்கள் திருச்சபை வாயிலாக 2019- 20 ஆகிய ஆண்டுகளில் பனை விதைகளை நடுவதற்கான முன்னெடுப்புகளாளை நாங்கள் நிகழ்த்துமட்டும், மும்பையில் எவருமே பனை விதைகளை நட முற்படவில்லை. 

நாங்கள் மும்பையில் வசிக்கும் ஆரே பகுதியானது காடும் காடு சார்ந்த பகுதியுமாகும். மெல்ல மெல்ல இப்பகுதிகளை ஆதிவாசிகள் கரத்திலிருந்து பிடுங்கி ஒவ்வொருவராக பங்குபோட துவங்கினர்.

முதலில் மும்பையின் பால் தேவையை சந்திக்க இங்கே ஒரு பால் பண்ணை உருவாக்கப்பட்டது, பின்னர் ராயல் பாம் என்கிற ஏழு நட்சத்திர விடுதி இவ்விடத்தை கபளீகரம் செய்தது, மும்பை திரைப்பட நகரம் இங்கே தான் நிர்மானிக்கப்பட்டது. உலகிலேயே ஒரு நகரத்திற்குள் காணப்படும் வனப்பகுதியான ஆரே பலருடைய கண்களை உறுத்திக்கொண்டே இருப்பதில் வியப்பொன்றும் இல்லை. . ஒரு கட்டத்தில், ஆரே பகுதியில் மெட்ரோ கார் ஷெட் அமைக்கவேண்டும் என்கிற நிலை வந்த போது சூழியல் அன்பர்கள் கொதித்தெழுந்து போனார்கள். பல்வேறு வகைகளில் போராட்டங்கள் பல தரப்பு மக்களால் முன்னெடுக்கப்பட்டது. இவைகளில், களப்பணியாற்றும் ஒரு சிறு குழுவின் பெயர் “பேட் லகாவோ”- மரம் நடுவோம். எப்படியோ இவர்களின் வாட்சாப் குழுவில் நான் இணைக்கப்பட்டேன். வாரம் தோறும் மரங்களை நடுவது என இவர்களின் பணிகள் போய்க்கொண்டிருந்தன. என்னால் எதையும் பகிர இயலாது ஆனால் அவர்களின் நிகழ்வுகள் குறித்த அறிவிப்பு வந்துகொண்டே இருக்கும்.

கொரோனா நிமித்தமாக ஆலயங்கள் மூடிவிட்டபடியால்,  ஒரு நாள் நான் அவர்களுடன் களப்பணியாற்ற சென்றிருந்தேன். எவரும் எவரையும் வரவேற்கும் வெற்று முகமன்கள் அங்கு காணப்படவில்லை. சென்ற உடனேயே நாம் குப்பைகளைப் பொறுக்குவதோ அல்லது மரங்களை நடுவதோ என ஏதாவது எடுத்து செய்யவேண்டியது தான். நான் கையோடு 15 பனை விதைகளையும்,  இரண்டு நாவல் மரங்களையும் எடுத்துச் சென்றிருந்தேன். அவைகளை ஒப்படைத்துவிட்டு, குப்பைகளை உறைகள் ஏதும் அணியாமல் வெறுங்கையால் பொறுக்க ஆரம்பித்தேன். அப்போது குப்பைகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த இரண்டு பெண்களில் ஒருவர் என்னருகில் வந்து தனது கரத்தில் உள்ள கோணியில் அவைகளை அமைதியாக சேகரித்து சென்றார்கள். அன்று நிகழ்வின் முடிவில் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் சஞ்சீவ் வல்சன் என்கிற நபரைக் கண்டேன். அவரிடம், பனை விதைகள் என்னிடம் இருக்கின்றன, எடுத்து வரவா என்றேன். அடுத்த வாரம் இதே இடத்திற்கு வாருங்கள் என்றார்.

மீண்டும் அடுத்த வாரம் 25 பனை விதை பெட்டிகளை ஆயத்தம் செய்தபடி திருச்சபையில் உள்ள இருவரை அழைத்துக்கொண்டு அங்கே சென்றேன். அனைவரும் பரபரப்பாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். பனை விதைகளை கொண்டு வந்திருக்கிறேன், அவைகளை ஒவ்வொருவருக்கும் கொடுக்கவேண்டும் எனக் கேட்டபொழுது, நீங்கள் எப்படி விதைக்கவேண்டும் என ஒரு அறிமுகம் சொல்லிவிடுங்கள் என்றார் சஞ்சை. பனை குறித்து என்னைப் பேசச் சொன்னால் நான் விரைவு இரயிலைவிட அதி வேகத்தில் பேச ஆரம்பித்துவிடுவேன். அன்றைய எனது உரை அனைவரையும் கற்சிலையாக்கியது. நான் கொடுத்த அட்டைபெட்டிகளை வாங்கிப் பார்த்தார்கள். எவருமே பொருட்படுத்தாத பனை மரத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மையின் ஒரு பகுதியை அறிந்த உடனேயே ஒவ்வொருவரும் தங்கள் செல் பேசியில் என்னை காணொளி எடுக்கவும் புகைப்படம் எடுக்கவும் முயன்றனர்.

அன்று இரவே முகம்மது என்னை அழைத்து,  உங்கள் பேச்சு அருமையாக இருந்தது, நீங்கள் கடந்தவாரம் வந்தபோது எனது சகோதிரியுடன் தான் நின்று வேலை செய்துகொண்டிருந்தீர்கள். அப்போது எனக்கு நீங்கள் செய்யும் வேலைக் குறித்து தெரியாது. இன்று நீங்கள் எங்கள் சிந்தனையை முழுவதுமாக மாற்றிவிட்டீர்கள். உங்களைக் குறித்து நான் ஒரு ஆவணப்படம் எடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. எதற்காக இவர் என்னிடம் இப்படி ஒரு வேண்டுகோளை வைக்கிறார். வெகு இயல்பாகத்தானே நாம் செயல்படுகிறோம், அப்படியிருக்க என்னத்தைக் கண்டுகொண்டார் என நான் எண்ணினேன்.

ஆவணப்படம் எடுப்பதில் எந்த எனக்கு எவ்வித தடையும் இல்லை, ஆனால், திருச்சபை பனை விதை நடுகையை  முன்னெடுக்கிறது என்கின்ற உண்மையினை மறைத்துவிடலாகாது என்கிற உறுதியை மட்டும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன். பிற்பாடு அவர் எனது வாழ்வில் மிக முக்கிய அங்கமாகிப்போய்விடுவார் என அன்று நான் கருதியிருக்கவில்லை. முகம்மது அதன் பின்பு என்னோடே ஒட்டிக்கொண்டார். எங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே அவர் மாறிவிட்டார்.

அப்படித்தான் அன்று பனை ஓலை எடுக்க புறப்பட்டோம். எங்களோடு எனது இளைய மகன் மித்திரனும் வந்திருந்தான். திருச்சபை அங்கத்தினரான திரு ஸ்டீபன் அவர்களையும் நான் அழைத்திருந்தேன். நாங்கள் வாகனத்தில் செல்லும்போது பனை மரம் ஏறவேண்டுமென்றால் உதவிக்கு யாராவது கிடைப்பார்களா என்கிற எண்ணத்துடன் சென்றுகொண்டிருந்தோம். அப்போது, பாம்புகளையும், நகர்புறங்களில் சிக்கித்தவிக்கும்  காட்டு விலங்குகளையும் காப்பாற்றும் ராஜ் என்கிற வாலிபனின் எண்ணம் வந்தது. என்ன ஆச்சரியம் அவனை நாங்கள் அழைக்கவும் அவனே எதிரில் தென்படவும், வண்டியை நிறுத்தி அவனை ஸ்டீபன் அவர்கள் வண்டியில் ஏற்றிக்கொண்டோம்.

அந்தி சாயும் வேளை, புதர் மண்டிக்கிடக்கும் பகுதியில், ஓலைகளை வெட்டும்படியாக சென்று நிறுத்தினோம். சற்றே பெரிய வடலி ஒன்று கைகளை விரித்தபடி அடங்கா திமிரோடு நின்றிருந்தது. மற்றவைகள் அனைத்துமே சிறிய வடலிகள் தான். ஓலைகள் பெரிதாக இல்லை. ராஜ் அந்த வடலியில் ஏற முற்பட்டு, கருக்குகள் இருந்ததால்  தன்னால் ஏற இயலாது என்பதை ஒத்துக்கொண்டான். நேரம் இருட்டத் துவங்கியிருந்தது. ஆகவே அங்கிருந்த சற்றே சிறிய வடலி ஒன்றில் செருப்போடு ஏறி ஓலைகளை வெட்டி போட்டேன். மித்திரன் ஓலைகளை சேகரித்து அடுக்க உதவினான். ராஜ் இருந்ததால் பாம்புகள் குறித்த பயம் இல்லாமல் போனது.

அனைத்து ஓலைகளையும் எடுத்துக்கொண்டு செல்வி. இளவரசி அவர்கள் வீட்டிற்கு நேரடியாக சென்றோம். இந்த ஓலைகளில் மூன்று பெட்டிகள் செய்து தர இயலுமா என்று கேட்டேன். அது ஒரு அன்பு கட்டளை. இளவரசி ஒரு சிறந்த பனையோலைக் கலைஞர். நான் தட்டிக்கொடுத்து வளர்ந்த பிள்ளை. சரிங்க பாஸ்டர் ஐயா என்றாள். அவள் முயற்சிக்கிறேன் என்று சொன்னாலே அது நடந்துவிடும் என்னும் சூழலில், இந்த வார்த்தை எனக்கு உற்சாகமளித்தது.

நான் வீட்டிற்கு வந்த போது, மதிய வேளைக்கும் இரவிற்கும் எலுமிச்சை சோறும், மறுநாள் சாப்பிட புளிசோறும் ஆயத்தம் செய்யலாம் என பேசிக்கொண்டோம். ஜாஸ்மின் கைபட செய்த பனை ஓலை பையினை எடுத்து வந்து இது தான் உணவு எடுத்துச் செல்லும் பை எனக் கூறிவிட்டார்கள். 

இரவு வெகுநேரம் எங்களுடன் இருந்துவிட்டு மறுநாள் காலை வேளையில் எங்களை வழியனுப்ப வருவதாக கூறி முகம்மது சென்றுவிட்டார். முககவசங்களைக் எப்போதும் அணிந்திருக்கவேண்டும் என்றும், கைகளில் உறைகள் போட்டிருக்க வெண்டும் எனவும் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தினோம்.  

மறுநாள் காலையில் எழுந்தவுடன் ஓலைபெட்டியினை சேகரிக்க இளவரசி வீட்டிற்குச் சென்றேன். மூன்று பெட்டிகள் மூடியுடன் ஆயத்தமாக இருந்தன. இவ்வளவு தூரம் அவளை சிரமப்படுத்தியிருக்கக்கூடாது என எண்ணிக்கொண்டேன். இளவரசியின் அப்பா திரு முத்துராஜ் அவர்கள் மித்திரன் கரத்தில் ரூ500/- திணித்தார்கள். இரவு முழுவதும் தகப்பனும் மகளுமாக இணைந்து விழித்திருந்து தான் பெட்டி செய்திருக்கிறார்கள். அவர்களின் அன்பை எண்ணி வியந்தபடி வீட்டிற்கு வந்து ஆயத்தமானோம்.  

ஸ்டீபன், மாணிக்கம், மலர் என திருச்சபையின் மக்கள் வழியனுப்ப முகம்மது மட்டும் எங்களோடு இணைந்து இரயில் நிலையம் வரை வந்தார். இரயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் விமான நிலையத்தை ஒத்திருந்தன. முகம்மது தூரத்திலேயே நிற்கவேண்டியது ஆயிற்று. வரலாற்றில் மீண்டுமொரு பனை பயணம் இப்படித்தான் எளிமையாக துவங்கியது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களாக)

ஆரே பால் குடியிருப்பு, மும்பை

malargodson@gmail.com / 9080250653

பின்னல்கள் – 11

ஜூலை 12, 2020

சம்பு 

நான் 2003 ஆம் ஆண்டு இறையியல் கல்வி நிறைவுசெய்தபோது திருச்சபையில் இணைந்து பணியாற்ற வேண்டாம் என முடிவெடுத்தேன். அப்போது எனது சகோதரி மாலத்தீவில் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். நானும் ஏதேனும் ஒரு  வேலையில் இணைந்துகொள்ளலாம் என நினைத்து அங்கே சென்றேன். மிக அழகிய சுத்தமான இடம் தான் மாலத்தீவு. அங்கே,  நான் சுவைக்க விரும்பும் மீன்கள் அனைத்தும் எனது கைக்கெட்டும் தூரத்தில் கிடைத்தாலும், திரும்பிய பக்கமெல்லாம் நீலம், பசுமை குறைவு, நிலமின்மை, பனையின்மை என எனக்கு பல ஒவ்வாமைகள். அங்கிருந்து திரும்பவேண்டும் என்கிற ஒரு உந்துதல் எனக்குள் இருந்துகொண்டிருந்தது. அந்த வெறுப்பு என் பார்வையில் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. அங்கே தென்னை ஓலைகளை ஒன்றுடன் ஒன்றாக அடுக்கி அதனைக் கோர்த்து ஒற்றை தடுக்காக மாற்றி கடைகளுக்கு சாய்வாகவும், தட்டியாகவும் அமைத்திருந்தார்கள். “க்கும்… பின்னத்தெரியாத்த பயலுவ…” என மனதிற்குள் எண்ணிக்கொண்டேன். ஆனால் அவர்களுக்கும் பின்னல்கள் உண்டு என்பதனை அந்த இரண்டு மாத காலத்திற்குள்ளேயே அறிந்துகொண்டேன்.

தென்னை ஓலைகளில் செய்யப்பட்ட வீடு – மாலத்தீவு

2017 முதல் 2019 வரை நான் எனது இறைப்பணியில் இருந்து விடுபட்டு பனைபணியே இறைப்பணி என்ற நோக்கோடு தமிழகம் முழுவதும் வெறிகொண்டு பயணித்தேன். தமிழகத்தில் வழக்கொழிந்துபோன பல்வேறு பொருட்களை மீட்டெடுக்கவேண்டும் என்கிற ஆவல் எனக்குள் கனன்றுகொண்டிருந்ததால், பார்க்கும் பனை சார்ந்த ஒவ்வொருவரிடமும், அவர்கள் கண் முன்னால் மறைந்துபோன பொருட்கள் குறித்த தகவல்களை கேட்டுப்பெற  முயற்சிப்பேன். அப்படிக் கிடைக்கும் தகவல்களைத் தொடர்ந்து, அந்த பகுதிகளில் அலைந்து திரிந்து காணாமற்போன பொருளை எப்படியும் மீட்டுவிடுவேன். ஒரு பொருள் குறித்த நினைவு மட்டுமேக்கூட அந்த மக்களுக்கு இருக்குமென்றால் அதனை மீட்பதில் பெரிய சிரமமில்லை என்பதே நான் அறிந்த உண்மை.

பின்னல்கள் குறித்த தேடுதலில் பின்னலே இன்றி செய்யப்படும் பொருட்கள் பலவற்றை இதுகாறும் பார்த்திருக்கிறோம். பட்டை, பீப்பீ, தோண்டி, விசிறி என அவைகள் யாவும் பனை ஓலையின் வடிவத்தை சாதகமாக மாற்றி ஓலையின் தன்மை பெரிதளவில் மாற்றத்திற்குள்ளாகாமல் செய்யப்படும் பொருட்களாகும்.

பனை ஓலையில் பின்னலே இன்றி இன்று நம்மை வந்து அடைந்திருக்கும் மற்றொரு பொருள் தான் சம்பு என்ற மழை அணி. விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த நரசிங்கனூர் என்ற ஊரில் வாழும் திரு. பாண்டியன் எனும் நண்பர்  இதுகுறித்து எனக்கு தகவல்களைக் கொடுத்து சம்புவை மீட்டுருவாக்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திகொண்டார். திரு கல்யாண சுந்தரம் (63) என்ற பெரியவர், சம்பு செய்வதில் வல்லவர். பண்டியனின் மாமா தான் இவர்.  நரசிங்கனூரைச் சார்ந்த பல்வேறு மக்களுக்கு சம்பு செய்யும் அறிவு இருந்தாலும், அனைவரும் அதனை கைவிட்டுவிட்டனர். இந்த அறிவினை தன் நெஞ்சில் ஒரு கனலாக எடுத்துச் சுமந்தவர் கலியாண சுந்தரம் மட்டுமே.

திரு கலியாண சுந்தரம் சம்பு செய்கிறார்

பின்னல்கள் சார்ந்து சம்புவில் ஏதும் காணப்படவில்லை என்றாலும் பின்னல்களுக்கான ஒரு அடிப்படை இங்கிருந்து தான் துவங்குகிறது என்பதை நாம் மறுக்க இயலாது. ஓலைகளின் பயன்பாட்டு வரலாற்றில் மிக தொன்மையானதும், மழைக் காலங்களுக்கு உகந்த  ஒரு பயனுள்ள பொருளான சம்புவினை சற்றே நெருங்கி உணர்வது நல்லது.

உலகம் முழுக்க மழையணிகள் கற்காலத்திலிருந்து வழக்கத்தில் இருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு மழையணிகள் செய்வது வழக்கம். வைக்கோல், மூங்கில், மரப்பட்டைகள், தோல் என அவைகள் விரிவடைந்துகொண்டே இருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் சூழலில் கிடைக்கும் பொருட்களின் அத்தனை சாத்தியக்கூறுகளையும் முயன்றுபார்த்திருக்கிறார்கள். 

மழையணி நேபாளம்

தென்னை ஓலைகளுக்கும் பனை ஓலைகளுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. பார்த்தவுடனேயே இவைகளில் தெரியும் வித்தியாசமான வடிவ அமைப்புகள் நாம் கூர்ந்து அவதானிக்கவேண்டியவைகள். தென்னை மட்டையில்  ஓலைகள் தனித்தனியாக நடுநரம்பிற்கு இருபுறமும் ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்கும். (Pinnately Compound) பனை ஓலையோ நடுநரம்பின் இருபுறமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து விசிறியைபோல இருக்கும். (Palmately Compound). உலகம் முழுவதும் பின்னல்களுக்கான ஆரம்ப பணி என்பது  இலக்குகளை தனித்தனியாக  பிரித்தெடுப்பது தான். ஓலைகளைப் பிரித்து எடுப்பதை இணிந்து எடுப்பது என்றே குமரி மாவட்டத்தில் குறிப்பிடுவார்கள். தென்னை மட்டையில்  பிரிந்திருக்கும் ஓலைகளை தனித்தனியாக இணிந்து எடுப்பது ஒன்றும் பெரிய காரியம் இல்லை ஆனால் ஒன்றாக இணைந்திருக்கும்  பனை ஓலைகளைப் பிரிப்பது குறித்த புரிதல் ஆதி குடிகளுக்கு சற்றே வேறுவகையான ஒரு அனுபவமாகத்தான் இருந்திருக்கும்.

ஓலையில் வடிவங்கள் செய்வது மனித வாழ்வில் ஒரு தொடர் செயல்பாடாக இருந்து வந்துள்ளது. அவ்விதமாகவே அவைகள் பல்வேறு படிநிலைகளைக் கடந்து இன்றைய பொருட்களாக நம்மை வந்து எட்டியிருக்கின்றன. இவைகளின் தொன்மம் சார்ந்த கதைகள் கூட இப்படிநிலைகளை விளக்கும்படியாக சுவைபட அமைந்திருக்கின்றன.

மழை அணியுடன் மேகாலய பழங்குடியினர்

ஆதியில் பனை ஓலைகள் இப்போது காணப்படுவது போன்று இணைந்து இருந்ததில்லை. காளி தனது பிள்ளைகளுக்கு பனையேறக் கற்றுக்கொடுக்கிறாள். அவர்கள் பனை ஏறும்போது முதல் பதனீர் தனக்கு கொண்டுவரும்படி கூறி ஒரு ஓலையை வெட்டி போடச் சொல்கிறாள். பதனீர் பருக, பிரிந்து இருந்த ஓலைகளை ஒன்றிணைக்கும் வேளையில், அங்கே ஒருவர் வந்து உனது பிள்ளைகள் உனக்கு கொடுக்குமுன்பே பதனீர் அருந்துகிறார்கள் என கூற, கீழிருந்து காளி பார்க்கையில் சொட்டுகின்ற பதனீர் தெறித்து அங்கே இருந்த காளியின் பிள்ளையின் வாயில் பட, காளி கோபத்துடன் பனை ஓலைகளை அப்படியே போட்டுவிட்டு சென்றதாக ஒரு கதைப் பாடல் உண்டு. ஆகவே பிரிந்திருக்கும் ஓலைகளை இணைக்கும் வழிமுறைகளை காளியின் பிள்ளைகளும் முன்னெடுத்திருப்பார்கள் என நாம் உணரலாம்.

சிறுவன் அணீந்திருக்கும் மழையணை, கூர்க், கர்னாடகா

மனிதனின் கண்டுபிடிப்புகள் அனைத்தும்  தேவைகளின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கும்போது அது பல்வேறு முயற்சிகள் மற்றும் தோல்விகள் வழியாக நிகர்செய்யப்படுகிறது. பனை ஓலைகளை பின்னும் தொழில் நுட்பத்தினை மானிடர் அறிவதற்கு முன்பு, அவைகள் ஒன்றோடு ஒன்று சீராக அடுக்கப்பட்டு கோர்க்கப்பட்ட ஒரு நிலை இருந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மணிகளை கோர்க்கும் முறைமை கி மு 40000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்திருக்கிறது  போன்ற தகவல்கள் அகழ்வாய்வுகளில் வெளிப்படுகின்றன  . அப்படியான ஒரு அலங்காரத்திற்கு முன்பே பயன்பாட்டு முக்கியத்துவம் கிளைத்திருக்க வேண்டும் என்றே நம்புகிறேன். 

தீக்கோழியின் முட்டையில் செய்யப்பட்ட ஆபரணம், 40000 ஆண்டுகளுக்கு முந்தையது

பனை ஓலைகளின் அமைப்பினைப் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் புரியும். பனை ஓலைகள் என்பவை இலக்குகளின் தொகை. அவ்விதம் இணைத்திருக்கும் ஓலைகளை தனிதனி இணுக்குகளாக பிரித்து எடுத்துப் பார்த்தால் அனைத்து இலக்குகளுக்கும் நடுவில் ஒரு நரம்பு ஓடிக்கொண்டிருக்கும். அதனை ஈர்க்கில் என்பார்கள். குமரி மாவட்ட வழக்கச் சொல்லின்படி அதனை ஈக்கல் அல்லது ஈக்கு என்று தான் அழைப்பார்கள். ஈர்க்கிலோடு ஒரு அரை செ மீ அகல ஓலையை சேர்த்து கிழித்தால் அதனை மூரி என்று விழுப்புரம் மாவட்டத்தில் குறிப்பிடுகிறார்கள்.

ஈர்க்கில் ஓலைகளை விட பல மடங்கு உறுதியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு நீள ஊசியினை நினைவுறுத்தும் அமைப்பு கொண்டது. நீரில் நனைத்து பயன்படுத்தினால் சற்றே கயிறு போன்ற நெகிழ்வுதன்மையுடன் உறுதியும் கூடியிருப்பது. ஈக்கலின் பயன்பாடு குறித்து தேடத் துவங்கினால் அது நம்மை தொல்பழங்காலத்தில் கொண்டு சென்றுவிடும்.

மழை நேரத்திலும் தடைபடாத வேலை

பனை சார்ந்த பொருட்கள் எப்படி ஒரு சூழலில் உருபெற்று வந்ததோ அதுபோலவே பல்வேறு சூழல்களினால் ஒருசில பனை சார்ந்த பொருட்கள் மறைந்தும் போயின.  அவைகளை நாம் வழக்கொழிந்து போன பொருட்கள் என்கிறோம்.  ஒரு பொருள் வழக்கொழிவதற்கு பல்வேறு புறக்காரணங்கள் உண்டு. அவைகளில் மிக முக்கியமானது நவீன வாழ்க்கை முறை. 

அதுபோல பனை சார்ந்து பொருட்கள் செய்கிறவர்கள் குறித்து எந்த குறிப்புகளும் புத்தகங்களில் இருக்காது. எங்கோ ஏதாவது ஒரு பத்திரிகையில் பனை சார்ந்த பொருட்களைக் குறித்து வருகின்ற செய்திகளை தொகுப்பதும் எளிதல்ல. அப்படியே சேகரித்தாலும் அவைகள்  தமிழகத்தில் இருந்த பொருட்களில் பத்திலொன்றைக்கூட அவைகள் குறிப்பிட்டிருக்காது. பெரும்பாலும் ஊர்களைக் குறிப்பதுடன் அவைகளும் தங்கள் பங்களிப்பை நிறுத்திவிடும்.

கொங்கானி எனும் மழை அணி

ஓலைகளை அப்படியே வைத்து தயாரிக்கும் பட்டை மற்றும் தோண்டி இவைகளை நாம் கடந்த வாரங்களில் பார்த்தோம். சம்பு செய்யும் முறை இவைகளை விட வித்தியாசமானது. ஓலைகளை தனித்தனி இலக்குகளாக பிய்த்து அதன் பின் அவைகளை இணைத்து செய்யும் தொழில் நுட்பம் சார்ந்தது. மிக அடிப்படையான ஒரு வடிவமைப்பு. ஓலைகளை வரிசையாக ஒன்றோடொன்று நெருங்கி இருக்கும்படி அடுக்கி, இணைக்கும்படியாக பனை ஈர்க்கில்களையே பயன்படுத்துவார்கள். இவைகள் அடிப்படையில் ஒரு தடுக்காக பயன்படும். இதனோடு ஈச்ச மட்டைகளை இணைத்து பலப்படுத்தி, அவைகளை குவித்து இணைத்துவிட்டால் சம்பு தயார்.

இடையர் சிற்பம்

சம்பு ஒரு சிறந்த மழையணி. புயல் மழைக்கும் அசைந்து கொடுக்காதது என்றே குறிப்பிடுவார்கள். தொல்பழங்காலத்தின் மழை கோட் என்றே சொல்லுமளவு, இது தலை முதல் கால் வரை உடலை பாதுகாக்கும் ஒரு அமைப்பு. சம்பு என்ற வடிவம் காலத்தால் மிக தொன்மையானது என்பதை அதன் வடிவத்திலிருந்தும் பயன்பாட்டு தன்மையிலிருந்தும் நாம் புரிந்துகொள்ளலாம்.  உலகின் பல்வேறு நாடுகளில் மழையணியாக சம்புவை ஒத்த வடிவங்களில் பலர் மழையணியினைச் செய்வது பழங்குடியினரிடையே இருக்கும் வழக்கம். வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டங்களில் பரவலாக பயன்பட்ட ஒரு வடிவம் இது என்று பனை மரம் என்ற புத்தகத்தை எழுதிய திரு. இரா. பஞ்சவர்ணம் அவர்கள் குறிப்பிடுவார்கள். இன்று சம்புவினை தொழில் முறையாக செய்தால் ரூ150திலிருந்து ரூ200 வரைக்கும் விற்க இயலும். கிராம மக்களுக்கு குடையினை விட சிறந்த வடிவமைப்பு இதுதான்.

இடையர் சிற்பம் – மழையணியுடன்

நவீன வாழ்வு தான் இவ்வித அறிதல்களையும் வாழ்க்கைமுறைகளையும் சிதறடித்தது. ஒரு சம்பு செய்ய 60 ரூபாய் ஆகும் சூழலில் வெறும் 50 ரூபாய்க்கு குடை கிடைத்தது ஆகவே சம்புவினை விட நவீனமாக காணப்பட்ட குடைக்கே  மதிப்பு கிராம மக்களிடம் பெருகியது ஆகவே உடல் உழைப்பால் செய்யும் சம்புவினை அப்படியே மறந்துவிட்டனர்.

முதலில் பெரிய பனை ஓலைகளாக தெரிவு செய்து பனை மரத்திலிருந்து மட்டையைத் தவிர்த்து ஓலையாகவே கழித்து எடுப்பார்கள்.  காலையிலேயே வெட்டிய ஓலையினை மாலை வரை வாட விடுவார்கள். மாலை வேளையானதும் ஓலையினைச் சுருக்கு பிடித்து வைத்துவிடுவார்கள்.  பின்னர் தடுக்கு செய்ய ஆரம்பிக்கும்போது ஒவ்வொரு இலக்காக கிழித்து நீர் தெளித்து கட்டி வைத்துவிடுவார்கள். மறுநாள் காலை 3 மணிக்கு பெண்கள் எந்து தடுக்கு தைப்பார்கள். ஒரு சம்பு செய்ய 7 தடுக்குகள் ஆகும். அப்படி, ஒரு நாளைக்கு சுமார் 20 தடுக்குகள் வரை பெண்கள் செய்வார்கள். தடுக்குகளை மூரி வைத்து தைப்பார்கள். ஈர்க்கிலோடு இணைந்திருக்கும் பகுதியினை ஆண் மூரி என்றும் ஈர்க்கில் இல்லாத எதிர்பகுதியை பெண் மூரி எனவும் குறிப்பிடுவார்கள்.

பனை ஓலை பொருட்களைச் செய்யும்போது பிற தாவரங்களின் பொருட்கள் உள்நுழைவது ஒரு முக்கியமான இணைவாக இருக்கிறது. அது எவ்விதமான தாவரங்கள் அப்பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றன என்பதன் அடையாளம் ஆகும். சம்பு செய்கையில் ஈச்சங் கசங்கினை பயன்படுத்துவதைப் பார்த்தேன். கசஙு  என்ற வார்த்தை ஓலைகளை நீக்கிய ஈச்ச மட்டையினை குறிப்பிடும் வார்க்ட்தையாக இருக்கிறது.  இவ்விதமாக சேகரிக்கப்பட்ட ஈச்சங் கசங்குகளை இரண்டாக கிழித்து பக்குவமாக காயவைத்து சேமித்து வைத்துக்கொள்ளுவார்கள். இவைகளை தேவையான நேரத்தில் எடுத்து நீரில் ஊறபோட்டு மீண்டும் இரண்டாக கிழித்து விடுவார்கள். இவைகளில் நீளமாக வருகிற கசங்கினை  மடிச்சி போடுற கசங்கு என்றும், குட்டையாக வருகிற கசங்கை ஒடிச்சி போடுற கசங்கு என்றும் குறிப்பிடுகிறார்கள்.

அகணி (பனை மட்டையின் உட்புறமிருக்கும் நார்) நாரை கிழித்து கோணி ஊசியில் நுழையும் அளவிற்கு மெல்லியதாக எடுத்து அதனைத் தைப்பார்கள். அகணியில் பிரித்தெடுக்கும் நாரினை சரடு என்றே குறிப்பிடுகிறார்கள். தடுக்கையும் கசங்கையும் இணைத்து கட்டுவதற்காக அகணி சரடு பயன்படும். கோணி ஊசியில் சரடை கோர்த்து தைப்பார்கள். அந்த தையலுக்கு ஒரு முடிப்பு இருக்கும். ஒரு கசங்கிற்கு நாலு தையல் என்ற வீதம் உறுதியாக சம்புவினை கட்டி முடிப்பார்கள்.

 கொண்டைப்பகுதி செய்கையில் ஒருவரால் கட்ட இயலாது. பொதுவாக ஆணும் பெண்ணும்  இணைந்தே கட்டுவார்கள்.  இவ்விதமாக குடும்பமாக இணைந்து செய்யும் பனை பொருட்கள் தமிழகத்தில் இன்றுவரை இருக்கிறது. யோசித்துப் பார்த்தால், சங்க இலக்கியங்களில் காணப்பட்ட முறம் கூட இன்று குடும்பமாக ஆணும் பெண்ணுமாக இணைந்து செய்யும் ஒரு வடிவம் தான்.

சம்புவினை வீட்டில் தட்டியாகவும், கூரை வேய்கையில் அடித்தளமாகவும், இரவு காவலிருப்பவர்களுக்கான கூடாரமாகவும், பனி, மழை போன்றவைகளிருந்து காத்துக்கொள்ள பயன்படுத்திவந்திருக்கிறார்கள். கிணற்றில் நீர் இறைக்கும் மோட்டார் மீது கவிழ்த்து வைக்கவும் கூட இது பயன்பட்டிருக்கிறது. நவீன காலத்தில் இப்பொருளுக்கு ஏற்பட்ட  அழிவு, நமது வாழ்விலிருந்த்து சில கலைஞர்களை அப்புறப்படுத்தியிருக்கிறது என்பது உறுதி.

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சம்புவிற்கு ஒத்த ஒரு பொருள் குமரி மாவட்டத்தில் உண்டு என தனிப்பட்ட முறையில் என்னிடம்  கூறியிருக்கிறார்கள். அதன் பெயர் காமணம். காமணம் குறித்து நான் அனேகரிடம் கேட்டும் என்னால் அது குறித்து மேலதிக தகவல்களை சேகரிக்க இயலவில்லை. இப்படியிருக்கையில் ஜெயமோகன் அவர்கள் சமீபத்தில் “ஆமை” என்று ஒரு கதை எழுதினார்கள். அதில் புலையர் பெண் ஒருத்தி கொரம்பை என்கிற என்கிற பனை ஓலை மழையணிக்குள் ஆமைபோல வாழ்ந்து மறைந்த கதை அவர்கள் வழிமரபினரால் நினைவுகூறப்படும் வகையில் எழுதியிருந்தார். இக்கதையில் காணப்படும் விவரணையின்படி “தலையிலே மாட்டிக்கிட்டா தோளும் முதுகும் உள்ள மறைக்கிற மாதிரி இருக்கும். குனிஞ்சுகிட்ட கூரை மாதிரி நம்ம உடம்புமேலே நிக்கும். ஆமையோடு மாதிரின்னு வைங்க.” மேலும் “நல்ல கொரம்பை ஒரு பெரிய சொத்து… அதுக்க இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தா அடியிலே புதிய ஓலையை கோத்து செரியாக்கிடுவாங்க. அப்படி சரிபண்ணிட்டே இருக்கணும். மேலே உள்ள ஓலை காலப்போக்கிலே கருகி மட்கிபோகும். அப்ப அடியிலே உள்ள ஓலை மேலே வரும். வெயிலுள்ள காலத்திலே தேன்மெழுகு எடுத்து அரக்கும்சேத்து உருக்கி மேலே பூசிவைச்சா பல ஆண்டுகள் அப்படியே இருக்கும்”.

இவ்விதமான பொருட்களின் படமோ அல்லது நினைவுகளோ என்னால் இன்றுவரை சேகரிக்க இயலவிலை. எப்படியும் இவைகள் குறைந்தபட்சம் 50 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கொழிந்திருக்கும். கடந்த 100 ஆண்டுகளுக்குள்  சமூகத்தட்டில் மிகவும் கீழ்நிலையில் இருந்ததாலோ என்னவோ, வயல் வேலைச் செய்யும் புலையர்கள் வாழ்வில் காணப்பட்ட இந்த பொருளினை எவரும் நினைவில் வைத்துக்கொள்ளவில்லைப் போலும். பனைக்கென இப்போதும் ஓரியக்கம் முன்னெடுக்கப்பட்டிருக்காவிட்டால், பனையின் நிலையும் இவ்விதம் மறக்கடிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்திருக்கும்.

குமரி மாவட்டத்தில் உள்ள பெரியவர்கள் பலரைக் கேட்டும் இது குறித்து என்னால் எந்த முடிவுக்கும் வர இயலவில்லை. எனக்கு மிகவும் அறிமுகமான பனை ஓலைக் கலைஞரான குமரி மாவட்டத்தின்  மொட்டவிளையைச் சார்ந்த திரு செல்லையா அவர்களிடம் விசாரிக்கையில்  அவர் சற்று நேரம் யோசித்துவிட்டு அதன் பெயர் கொங்காணி என்றார். நான் அயர்ந்துவிட்டேன். எத்தனைப் பெயர்கள்தான் இந்த மழையணிக்கு?

சம்பு என்ற தாவரத்திலும் இது போல் மழையணி செய்திருப்பார்களோ? அல்லது கோரை புல்லில் இதற்கு இணையான மழையணி செய்திருப்பதால் கொரம்பை என பெயரிடப்பட்டதா தெரியவில்லை.

இணையத்திலிருந்து ஒருசில படங்கள் கிடைத்தன. சம்புவைப்போன்ற எதோ ஒரு மழையணி அணிந்திருக்கும் படங்களை இடையர் சிலைகள் என்றே குறிப்பிட்டிருந்தார்கள். அப்படியானால் வயல் வேலைகளில் ஈடுபடும் மனிதர்களுக்கு மாத்திரம் அல்ல, இடையர்களது வாழ்விலும் சம்புவின் இடம் முக்கியத்துவம் பெறலாகின்றது. அதனை நாம் உண்மையிலேயே ஏற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால், பனை சார்ந்து கொடாப்பு எனும் பிரம்மாண்ட அமைப்பை ஆட்டு குட்டிகளில் பாதுகாப்பிற்காக செய்கிறவர்கள் இடையர்கள். சமீப காலமாக பனை மரக்கள் குறித்து சங்க இலக்கியம் கூறுவது என்ன என்று தேடுகிற ஒரு கூட்டம் எழும்பியிருக்கிறது. உண்மையிலேயே பனை சார்ந்த பொருட்களின் புழக்கத்தை தேடி கண்டுபிடித்தால் அது சங்க இலக்கிய வாழ்வில் நமது பனை சார்ந்த அறிதல்கள் குறித்து மேலதிக தகவல்களைக் கொண்டிருக்கும் என நம்புகிறேன்.

மழையணிக்குள் பான்டியன்

மழையணி என்ற இந்த பொருள் எனது வாழ்வில் நான் மீட்டெடுக்கவேண்டிய தமிழர்களின் முக்கிய அடையாளமாக இருப்பதாகவே நான் உணருகிறேன் ஆகவே இதன் தேடுதலை எனது கைக்கு எட்டிய சம்பு மூலமாக துவங்குகிறேன்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள் – 10

ஜூலை 4, 2020

தோண்டி

தமிழகத்தில் புழங்கிய பனை ஓலை பொருட்களின் எண்ணிக்கை உலக அளவில் அதிகம் என்றே கருதுகிறேன். ஆகவே தான் அது தமிழகத்தை தன்னிகரற்ற ஒரு நிலப்பரப்பாக பனையோடு இணைத்திருக்கிறது. வேறு எங்கும் காணமுடியாத பொருட்கள் இங்கு இருப்பதோடல்லாமல், பல்வேறு நாடுகளுக்கு பொதுமையான பனை ஓலைப் பொருட்களும் இங்கு இருப்பது அதிசயம் அல்ல, ஏனெனில் இது பனை கலைகளின் தாய்வீடு. 

நீர் நிறைந்த பனை ஓலைத் தோண்டி

மிக சிறிய வயதில் பனை ஓலையில் செய்யப்பட்ட எண்ணற்ற பொருட்குவியலுக்குள் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் அவைகளின் பெயர்கள் அவ்வயதில் எனக்குத் தெரியாது. அவைகள் எப்படி இருக்கும் என விவரித்தே அதனை நான் அடையாளப்படுத்திக்கொள்ள  வேண்டும். அவ்வகையில்  எனது சிறு பிராயத்தில் நான் ஆச்சரியமாக பார்த்த ஒரு பொருள் இன்றும் என் மனதில் நீங்கா நினைவுகளோடு இருக்கிறது. அதற்கு காரணம் என்ன? பல்வேறு  காரணங்கள் இருந்தாலும்,  திருமறைக்கும் எனக்கும் உள்ள உறவுதான் பனைமரத்துடன் இணைந்த தோண்டியை நான் நினைவுகூறச் செய்யும் ஒன்றாக இருந்திருக்கின்றது.

திருவிதாங்கூர் பகுதியில் கிணற்றில் நீர் இறைக்க தோண்டியை எடுத்துச் செல்லும் பெண்மணி. சுமார் 150 வருடங்கள் முன்பு

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு மார்த்தாண்டம் போதகர் இல்லத்தின் பின்புறம் இருந்த கிணற்றில் தண்ணீர் எடுக்க வரும் பெண்கள் பனை ஓலையில் செய்த அழகிய தோண்டியை வைத்திருப்பார்கள். அப்படியில்லாதிருந்தால் கமுகுப் பாளையில் செய்த நீர் இறைக்கும் வாளியை வைத்திருப்பார்கள். இந்த தோண்டி ஒருசில வார காலமோ ஒரு மாத காலமோ பயன்பாட்டில் இருக்கும். பயன்படுத்துகிறவர்களின் கைப்பக்குவம் சார்ந்து அதன் வாழ்நாள் நீடிக்கும்.

ஒரு முறை  அந்த கிணற்றில் உள்ள தண்ணீர் கெட்டுப்போனது. கொசுக்கள் முட்டையிட்டு அதில் கூத்தாடிப்புழுக்கள் நிரம்பவே அந்த கிணற்றை இறைத்து சுத்தம்பண்ணினர். அந்த நிகழ்வின் இறுதியிலே ஒரு சடங்கு நடந்தது. புதிய நீர் ஊறி வருகின்ற தருணத்தில் எங்கள் கோவில்பிள்ளை அவர்கள் ஓர் பனை ஓலைத் தோண்டியில் உப்பும் புளியும் வைத்து அதை கிணற்றுக்குள் இறக்கினர். நான் இது எதற்கு என்றபோது கிணற்று நீரை சுத்தம் செய்ய என்று அப்பா சொன்னார்கள். அந்த வேளையில் எனது அக்காக்களில் யாரோ ஒருவர் “எலிசா” தீர்க்கதரிசி செய்தது போல என சொல்லக்கேட்டேன்.

திருமறையில் எலிசா எனும் ஒரு இறைவாக்குரைப்பவர் குறித்து (தீர்க்கதரிசி) விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர் எலியா தீர்க்கதரிசியின் உடன் இருந்தவர். எலியா தீர்க்கதரிசியிடம் இருந்து இரட்டிப்பான வரம் பெற்றவர். அதாவது எலியா செய்த வல்லசெயல்கள் போல இரட்டிப்பான அதிசயங்கள் செய்யும் வரம் பெற்றவர் இவர். தோண்டியைக் குறித்து திருமறையில் சொல்லப்பட்டிருக்கும் பகுதி எனது சிறு வயதின் அனுபவத்திற்கு மிகவும் நெருக்கமானது என்றுணர்ந்தேன்.

“பின்பு அந்த பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது. நிலமும் பாழ்நிலம் என்றார்கள். அப்பொழுது அவன்: ஒரு புதுத் தோண்டியை எடுத்து, அதிலே உப்புப் போட்டுக் கொண்டு வாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது,  அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்த தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்”. (2 ராஜாக்கள் 2: 19 – 21)

சாமித்தோப்பு கிணற்றடியில்

திருமறையில் காணப்படுகின்ற தோண்டி என்ற வார்த்தை இவ்விதமாகத்தான் என் மனதில் நிலைபெற்றது. தமிழ் திருமறையில் ஒரு வார்த்தை காணப்படும்போது அது யூத கலாச்சாரத்தில் இருந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை, ஏனென்றால் நமது புரிதலுக்காகத்தான் மொழிப்பெயர்ப்பே செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே தோண்டி என்கிற அந்த வார்த்தை நமது கலாச்சாரத்தில் வெகுவாக புழங்கியிருக்கவேண்டும், இல்லையென்றால் இவ்வார்த்தை புழங்கிய இடங்களிலிருந்து மொழிபெயர்பாளர்கள் இதனை எடுத்தாண்டிருக்கும்  வாய்ப்புமிருக்கிறது. பனை மரங்கள் நிறைந்த இடையன்குடி  பகுதிகளில் ஊழியம் செய்த பேராயர் கால்டுவெல் அவர்களும் திருமறை மொழிபெயர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் எனப்தை நாம் அறிவோம்.

தோண்டி என்பது “தோண்டு”தல் என்ற வேர் சொல்லிலிருந்து பிறந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அகழ்தல் என்ற வார்த்தைக்கு நிகராக தோண்டுதல் என்ற வார்த்தை பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. தோண்டி துருவி, தோண்டி துழாவி போன்ற சொற்றொடர்கள் வழக்கத்தில் இன்றும் இருக்கின்றன. நீரை அகழ்ந்து எடுக்க பயன்பட்டிருக்கும் பொருளாயிருப்பதால் தோண்டி என பெயர் பெற்றதா?  அல்லது மண்ணை அகழ்ந்து எடுத்த கிணற்றிலிருந்து நீர் எடுக்க பயன்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டதா?

இதற்கு எதிரான ஒரு நிலைப்பாடும் நமது மரபில் இருந்திருக்கிறது…

நந்தவனத்தில் ஒரு ஆண்டி -அவன்

நாலாறு மாதமாய் குயவனை வேண்டி

கொண்டு வந்தா னொரு தோண்டி – அதை

கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி

“நல்ல வழிதனை நாடு- எந்த

நாளும் பரமனை நத்தியே தேடு

வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த

வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு”

– கடுவெளி சித்தர்

இவ்வகையில் தோண்டி குயவர்கள் செய்யும் மண்பாண்டம் எனவும் நாம் அறிய  முடிகிறது. நீர் மொள்ளும் தேவையினை கருத்தில் கொண்டு அனைத்து உலோக பொருட்களிலும் தோண்டி வடிவெடுத்திருக்கிறது. இங்கே கடுவெளி சித்தர் அதனை உயிர் உருவெடுத்த உடலுடன் இணைத்துச் சொல்லுகிறார்.

பனை ஓலை தோண்டி என்பது ஓலை பட்டையின் செவ்வியல் வடிவம் தான். ஈராயிரம் முதல் மூவாயிரம் ஆண்டு தொன்மையான வடிவாக இது இருக்கலாம் என நான் அனுமானிக்கிறேன். அதற்கு காரணம் சாதாரண பட்டையிலிருந்து வித்தியாசப்பட்டு  வடிவ நேற்த்தி அடைந்திருக்கும்.  தோண்டியினை பார்ப்பதற்கு பரதநாட்டிய உடையைப்போல மடிப்புகளுடன் கவர்ந்திழுக்கும் அழகுடன் கச்சிதமாக இருக்கும். மடிப்பு குலையாதபடி இவ்விதமாக ஒரு தோண்டியினைச் செய்வது எளிதான காரியம் அல்ல. பனைபொருள்  அல்லாத கம்பு, மற்றும் தென்னை ஓலைப் பண்டி ஆகியவற்றை இணைத்தே இதனைச் செய்வதால் மிக முக்கிய கவனத்தைக்கோரும் ஒன்றாக இது இருப்பதில் ஐயமில்லை. பனை எவ்விதம் பிற தாவரங்களுடன் இணைவு கொள்கிறது என்பதற்கு இது அடையாளமாக இருக்கிறது.

நாகர்கோவில் அப்டா சந்தைக்கு தான் செய்த பனை ஓலை தோண்டியினை விற்பனைக்கு கொண்டு வந்த கலைஞர்.

குமரிமாவட்டத்திலுள்ள அய்யாவழி சமயத்தவர்,  பூவண்டர் தோட்டத்திலே வந்து அங்கிருக்கும் நாமக் கிணற்றில் குளிப்பார்கள். அந்த கிணற்றில் குளிப்பவர்கள் பெரும்பாலும் இன்றுவரை பனை ஓலையில் செய்த தோண்டியினைக் கொண்டே நீர் இறைத்து குளிப்பார்கள். பதியில் சென்று வணங்குமுன் இக்குளியல் மிக முக்கியமான ஒன்றாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. வற்றாத அந்த கிணற்றில் குளிப்பதற்கு என்று பனை ஓலை தோண்டியில் செய்யப்பட்ட வாளியைத்தான் பயன்படுத்துவார்கள்.  ஆகவே பனை ஓலைத் தோண்டியினை விற்பனை செய்வதற்கென்றே ஒரு கடை அங்கே இருக்கும். இன்றும் தோண்டி தமிழகத்தில் எஞ்சி இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அய்யாவழி பதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த சடங்கு ஒரு முக்கிய காரணம்.

விற்பனைக்காக தொங்கவிடப்பட்டிருக்கும் பனையோலை தோண்டி

அப்படியே, திருமண வீடுகளுக்கு வாங்கும் பனை ஓலைபொருட்களிலும் கண்டிப்பாக தோண்டி இருக்கும். அனைத்து சமையல்காரர்களும் தோண்டியினை குறிப்பிட தவறுவதில்லை. குறிப்பாக சாம்பார் கோரி எடுப்பதற்கும், அரிசியில் நிற்கும் தண்ணீரை கோரி மாற்றுவதற்கும் தோண்டியினை  பயன்படுத்துவார்கள். மேலும் அடுப்பில் இருக்கும் வார்ப்பை கீழிறக்காமல் தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்யவும் தோண்டி தான் பயன்படும். சூடு நிறைந்த பாத்திரத்தில் தோண்டி பயன்படுத்தி பதார்த்தங்களை எடுக்கும்போது அது  எடை அற்றதாகவும் சூட்டைக் கடத்தாததாகவும் இருப்பதால் சமையல்காரர்கள் இன்றளவும் இதனை பயன்படுத்திவருகிறார்கள். கூடுதலாக ஓலையின் சுவை உணவில் ஊடுருவி தனித்துவ வாசனையினை உணவிற்கு கொடுக்கும். சமையல்காரர்கள் மட்டும் இதனைப் பயன்படுத்தவில்லையென்று சொன்னால் இதன் உற்பத்தி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இல்லாமலே போயிருந்திருக்கும். 

தோண்டி பிடிக்கும் முறை

பனை ஓலையில் தோண்டி செய்வது பெரும்பாலும் தென் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் தாம். பொதுவாக வீட்டிற்கு தேவையான தோண்டி என்றால், அவைகள் குறித்த குறிப்புகள் பனையேறியிடம் சொல்லப்படும். எத்தனை ஈக்குகள் நிறைந்த சிறகு வேண்டும் எனக் குறிப்பிடுவார்கள். இரண்டாம் குருத்து அல்லது மூன்றாம் குருத்து போன்றவைகளையே தோண்டி செய்வதற்கு பெரும்பாலும் தெரிந்துகொள்ளுவார்கள். பனையேறிகள், தேவையான ஓலையினை தெரிவுசெய்து பனையிலிருந்தே கிழித்து, அதனை தங்கள் அரிவாள் பெட்டியில் எடுத்து பத்திரமாக இறக்குவார்கள். ஏனெனில் பனை ஓலை கிழிந்துவிட்டால் தோண்டி செய்ய இயலாது. கொண்டு வந்த ஓலையினை நன்றாக வெயிலில் போட்டு உலர வைப்பார்கள். உலர்ந்த ஓலையினை நீரில் முன்றுமணிநேரம் போட்டு அதன் பின்பே தேவையான வடிவில் எடுத்துக் “கோட்டு”வார்கள். பின்னல்கள் செய்யும் அறிவு ஏதும் இதற்கு தேவை இல்லை எனினும், தோண்டி செய்வோர் எண்ணிக்கையில் மிகவும் குறைவானவர்களே. எனது வாழ்க்கையிலேயே தோண்டி செய்யும் கலைஞர்கள் மூவரைத்தான் பார்த்திருக்கிறேன். சில நேரங்களில் ஓலைக் கிழிந்துபோனால்  ஊசியைக்கொண்டு தென்னை குருத்தோலைப் “பண்டி”யினை எடுத்து ஓலையினை தைக்கும் சூழ்நிலையும் ஏற்படும்.

தோண்டி நேர்த்தியான வடிவம் பெறுகின்றது

பனை ஓலைகளை தெரிந்து எடுப்பது முதல் அனைத்தும் கவனமாக செய்யவேண்டும். தோண்டி செய்து முடித்தபின்பு கூட சந்தைக்கு எடுத்துச் செல்லும் வழியில் அதற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது ஆகவே இவைகளை ஒன்றிணைத்து ஒரே சரடில் கட்டி, ஒற்றை சுமடாக்கி எடுத்துச் செல்லுவார்கள். பூமாலை கட்டுவதுபோல அவைகளைக் கட்டி தோரணமாகவோ அல்லது தொங்லாகவோ விற்பனைக்கு போட்டுவைப்பார்கள்.  இன்று கிடைக்கும் தோண்டிகள் சுமார் 3 முதல் 5 லிட்டர் நீர் கொள்ளளவு கொண்டவைகளாக இருக்கின்றன.

பனை ஓலை தோண்டியினை பெரும்பாலும் சந்தைக்குச் செல்லும் தாய்மார்கள் மீன் வாங்கிவர பயன்படுத்துவார்கள். மீன் காய்கறி போன்ற உணவுபொருட்கள் முதன்மையாக தோண்டியில் இருக்கும். இவ்விதமான பொருட்களின் பயன்பாடுகள் இன்று நம்மை விட்டு காணாமல் போன பின்பு, அவ்விடத்தை பிளாஸ்டிக் எடுத்துக்கொண்டது. வரும் நாட்களில் இவைகளை நாம் மீட்டுக்கொண்டுவர முயற்சிப்பது நெகிழிக்கு எதிரான ஒரு போராட்ட வடிவாக இருக்கும்.  

பனை ஓலைபொருட்களில் தனித்துவமானதும் ஆசிய நாடுகளில் முழு வீச்சுடன்  விரிவடைந்திருப்பதுமான பனை ஓலைத் தோண்டி என்பது  விரிவாக ஆராய்ச்சிக்குட்படுத்தவேண்டிய ஒரு பொருளாகும். ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் பனை ஓலையில் செய்யப்படும் தோண்டியை ஒத்த ஒரு பொருள் இசைக்கருவியாக மாறியிருக்கிறது…ஜலதரங்கம் போல இசைஎழுப்பும் இந்த கருவியினை சசண்டோ என்று அழைக்கிறார்கள். தோண்டி செய்வோர் இன்றுவரை அதற்கான அங்கீகாரம் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள்.

மிக நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட தோண்டி

பனை ஓலையின் பொருட்களில் வழக்கொழிந்து போகும் நிலையில் உள்ள பொருட்கள் ஏராளம் உண்டு. அவைகளில் தோண்டி மிக முக்கியமான ஒன்று. கடைகளில் கிடைக்கும் தோண்டி அதன் ஆகச்சிறந்த அழகுடன் செய்யப்படுவதில்லை என்ற குறைபாட்டினை தோண்டி செய்வோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தமிழகத்திலேயே தென் மாவட்டங்களைத் தவிர்த்து, தோண்டி செய்யும் வழக்கம் இருக்கிறதா என்கிற கேள்வி எஞ்சியிருக்கிறது. என்றாலும், இலங்கையிலும், ஆந்திராவிலும் மராட்டியத்திலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் இது இருப்பதாக அறிகிறேன்.

தாய்லாந்தில் தோண்டி பிடிக்கும் மனிதர்

குமரி மாவட்டத்தில் தோண்டி என குறிப்பிடும் இதனை, திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டத்தில் தோண்டி பாட்டை எனவோ அல்லது வெறுமனே “பட்டை” எனவோ அழைப்பது வழக்கம். இலங்கையிலும் இதனை பட்டை என்றே அழைக்கிறார்கள். மராட்டியத்தில் இதனை துரோண் என்றும், ஆந்திராவில் உள்ள கோயா பழங்குடியினர் இதனை துரோணா என்று குறிப்பிடுவதாக அறிந்தேன். இவைகளை உறுதிப்படுத்தும்போது மேலதிக தகவல்கள் நமக்கு கிடைக்கும். தாய் மொழியில்  திமாபைஜக் (ติหมาใบจาก) எனவும் தெலுங்கில் தாட்டி சேதா எனவும் வழங்கப்படுகின்றது

தாய்லாந்தில் கினாற்றிலிருந்து நீர் இறைக்க தோண்டி பயன்படுத்தப்படுகிறது

கம்போடியா இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய இடங்களில் இவ்விதமான தோண்டிகள் பனையேறிகளுக்கு மிக முக்கிய பயன்பாட்டு பொருளாக இன்றளவும் இருக்கிறது. ஆசியா என்னும் நிலபரப்பில் இவ்விதம் ஒரு பொருள் பரந்து விரிந்து இருக்குமென்றால், அதன் வரலாற்று பின்புலம் ஆராயத்தக்கது. தமிழகத்தின் ஒரு சில பகுதியில் காணப்படாத தோண்டி எப்படி ஆசியா முழுக்க வியாபித்திருக்கிறது என்கிற கேள்வி பல வரலாற்று உண்மைகளை உள்ளடக்கி வைத்திருக்கும் ஒரு வரலாற்று ஆவணம். 

தோண்டியோடு பனை ஏறும் இத்தோனேசிய பனையேறி

பனை ஓலை தோண்டி செய்கிறவர்கள் இன்றும் குமரி மாவட்டத்தில் உண்டு. ஆனால் அவர்களைக் கண்டுபிடிப்பது சுலபம் அல்ல. பனை ஏறுகிறவர்களோ அல்லது பனை சார்ந்த வாழ்வு கொண்டுள்ளவர்களோ தோண்டி செய்வார்கள் என்பது உண்மைதான் என்றாலும், எல்லாரும் தங்களுக்கு தோண்டி செய்யத் தெரியும் என பறையடித்து திரிவதில்லை.  தெரியும் என்றால் கூட அதனை ஒரு தகுதியாக பொதுவெளியில் கூற இயலாதபடி சூழ்நிலை மக்களைப் பிரித்து வைத்திருக்கிறது.

எனது மனைவி ஜாஸ்மின் அவர்கள் வீட்டிலிருந்து நான்கு வீடுகள் தள்ளி தான் திரு சகாயம்  அவர்கள் இருக்கிறார்கள். ஜாஸ்மினுடைய பெரியப்பா தான் அவர். கிட்டத்தட்ட 10 வருட திருமண வாழ்வில் ஒருபோதும் அவரைக் குறித்து நான் கேள்விப்பட்டதே இல்லை. பல திருமண வீடுகளில் நாங்கள் எதிர்பட்டிருப்போம் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்திருப்போம். ஜாஸ்மினிடம் ஒருநாள் தோண்டி செய்கிறவர்கள் நமது ஊரில் உண்டா என கேட்டபோது அவள் விசாரித்து பெரியப்பா செய்வார்கள் என கூறிய தகவல் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

திரு சகாயம் அவர்கள் குமரிமாவட்டம் கருங்கல் என்ற ஊரை அடுத்த தேவிகோடு பகுதியில் வாழ்கிறவர். சற்றே கூச்சத்துடன் தான் தனக்கு தோண்டி செய்யத் தெரியும் என ஒத்துக்கொண்டார்.  அவரது தந்தையார் தோண்டி செய்வதை கண்ணால் பார்த்து இதனைச் செய்ய கற்றுக்கொண்டதாக என்னிடம் தெரிவித்தார். சுமார் 70 வயது மதிக்கத்தக்க இவருக்கு பனை ஏறத் தெரியாது.  இவரது சிறு பிராயத்தில் தான் பனை சார்ந்த தொழில்கள் உச்ச கட்டத்தில் இருந்து சரிவு நோக்கி வந்தது. குமரி மாவட்டத்தில் உள்ளவர்கள் பனை சார்ந்து ஒரு விலகலை கடைப்பிடிக்கும் காலகட்டம் எழுந்தபோது தனது ஐந்து குழந்தைகளையும் பனை சாராத தொழில்களுக்கு மாற்றி விட்டார்.

காய்ந்த பனை ஓலையினை ஊறப்போட வேண்டும் பின்னர் அது பதமான பின்பு அதனை சரியான முறையில் மடித்து தோண்டிப் பட்டையைப் பிடிக்கவேண்டும் என்றார். பல ஆண்டுகளுக்குப் பின்பு அவர் தோண்டியினை செய்வதை நான் பார்த்தாலும் அவர் நேர்த்தியாக என் கண்களின் முன்னால் அதனை உருபெறச் செய்தார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்பு அவர் தோண்டியினைச் செய்தாலும் எவ்வகையிலும் அவர் அக்கலையினை மறந்துவிடவில்லை.

நீர் இறைக்கும் தேவைகள் இன்று குறைந்துவிட்டன. மற்றும் பல்வேறு விதங்களில் நீர் இன்று நம்மை வந்து அடைந்துவிட்டன.  இக்கால சுழலில் இதன் தேவை தான் என்ன என்று பலரும் நினைக்கலாம். பனை ஓலைத் தோண்டி இன்று உணவகங்களில் உணவை கொடுக்க உதவும் ஒன்றாக இருக்கும். அப்படியே பூக்களை அலங்கரிக்க இதனை பயன்படுத்தலாம். தமிழகம் என்று மாத்திரம் அல்ல இந்திய துணைக்கண்டம் முழுவதும் ஒரு சிறப்பான புது முயற்சிக்கு அழிந்துவரும் தோண்டி வேலைவாய்ப்பினை பெருக்க வாய்ப்பளிக்கும் ஒரு அட்சய பாத்திரம் என்றால் அது மிகையாகாது.

பண்டி: தென்னை / பனை ஓலைகளின் ஓரப்பகுதி

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள் – 9

ஜூன் 29, 2020

ஓலைக் குழல்

சிறு பிள்ளைகளது வாழ்வில் விளையாட்டுப் பொருட்கள் இன்றியமையாதது. நான் சிறுவனாக இருக்கும்போதே விதம் விதமாக அனேக விளையாட்டு பொருட்கள்  விற்பனைக்கு வந்துவிட்டன. அதாவது விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் சூழல் நிலைபெற்றுவிட்ட ஒரு காலம்.  எனக்கான  விளையாட்டுப் பொருட்கள் என ஏதும் வீட்டில் வாங்கித்  தந்ததில்லை. அந்நாட்களில்  நமக்கான விளையாட்டுப்பொருட்களை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டியது தான்.  நான் விரும்பி விளையாடிய விளையாட்டு கச்சி (கோலி) தான் விலை கொடுத்து வாங்கிய பொருளைக் கொண்டு விளையாடிய விளையாட்டு.  அஞ்சு பைசாதான் ஒரு கச்சியின் விலை.

கச்சி என்ற களைச்சி

விளையாட்டுப் பொருட்கள் பல்வேறுவிதமானவைகள் மாத்திரம் அல்ல பல்வேறு சூழல்களையும் பின்னணியங்களையும்  வெளிப்படுத்த வல்லவை. இன்றைய சூழலில் குழந்தைகள் சர்வதேச பொம்மை வணிகத்திற்குள் இழுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். ஒரு காலத்தில் கைகளில் தொட்டு உணரும் வகையில் பயன்படுத்திய பொம்மைகள் போய் இன்று தொடு திரையில் விளையாடும் மென் விளையாட்டுக்கள் பிரபலமாகியிருக்கின்றன. ஆகவேதான் இவ்வித இணைய விளையாட்டுக்களிலிருந்து தங்கள் குழந்தைகள் விடுபடவேண்டும் என்ற எண்ணத்துடன்  இன்றைய பெற்றோர்  தங்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிறுவர்கள் கையிலிருக்கும் விளையாட்டுப்பொருட்கள் அவர்கள் எவ்விதமான எதிர்காலத்தை கட்டமைக்கப்போகிறார்கள் என்பதையே குறிப்பிடும் என்ற நம்பிக்கை ஆழ வேரூன்றி இருக்கிறது. இன்றும் பெரும்பாலும்  பெண் குழந்தைகளுக்கு சமையல் பாத்திரம் சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதும் ஆண்களுக்காக கார் பொம்மைகள் மற்றும் துப்பாக்கிகள் என பாலின வேறுபாட்டை காண்பிக்கும் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகின்றன.  பால் சார்ந்த திணிப்பு கூடாது என்று தொடர்ந்து பல்வேறு முயற்சிகள்  சர்வதேச அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய காலத்திற்கு ஏற்ப விளையாட்டின் மூலம் கல்வி என பல்வேறு வகைகளில் விளையாட்டுக்கள் அர்த்தம் பெறுவதைக் காணலாம்.

சிறுவர்களைப் பொறுத்தவரையில் இன்று தான் என்று அல்ல, தொல் பழங்காலம் முதலே விளையாட்டுபொருட்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள் பெரும்பாலும் பெரியவர்களின் வாழ்வில் காணப்படும் பொருட்களை பிரதிபலிப்பதாகவே இருக்கும். பொதுவாக குழந்தைகளுக்கு பெரியவர்கள் பயன்படுத்தும் பொருட்கள் மீது ஒரு தனி ஈர்ப்பு உண்டு.  அந்தந்த கலாச்சாரத்தையும் காலகட்டத்தையும் வெளிப்படுத்தும் குழந்தைகளுக்கான பொம்மைகளின் உலகம் பிரம்மாண்டமானது.

நான் எப்போதும் கூறிவருவதுபோல, பனை மரம் குழந்தைகளுக்கான மரம். பனை மரத்திலிருந்து எடுக்கும் பொருட்களைக் கொண்டு குழந்தைகளுக்கான அனேக விளையாட்டுப்பொருட்கள் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது என்றாலும், அவைகள் பட்டியலிடப்படவோ அவைகளின் பின்னணியம் சார்ந்த தேடுதல்களை முன்னெடுக்கவோ முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டது போல தெரியவில்லை.

ஆதி காலத்தில் குழந்தைகள் தங்கள் பெற்றோரின் வாழ்வில் காணப்பட்ட ஆயுதங்களை போலவே பொருட்கள் செய்ய கற்றுக்கொண்டனர். அல்லது அவ்விதமான பொருட்களை போலி செய்து பயன்படுத்திவந்தனர்.  பெரும்பாலும் குழந்தைகளுக்கான ஆயுத பயிற்சி தொல் பழங்காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது என கூறுவார்கள். மாத்திரம் அல்ல, பல்வேறு பழங்குடியினரிடையே வேட்டையாடும் மிருகங்களையே குழந்தைகளுக்கான விளையாட்டுபொருட்களாக செய்யும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது.

சமையல் பொருட்கள், பயணிக்கும்  வாகனங்கள், ஆயுதங்கள், மனிதர்கள், உயிர்வாழினங்கள் என பல்வேறு பொருட்களை விளையாட்டுபொருட்களாக செய்துவந்திருக்கும் சிறுவர்கள், சில நேரங்களில் பனை சார்ந்து வாழும் வாழ்வை அனுபவித்து வாழ்ந்திருக்கிறார்கள். குழந்தைகள் பனையுடன் விளையாடிய விளையாட்டுக்களின் பட்டியலை மட்டும் நம்மால் ஒருபோதும் வகுத்துவிட இயலாது. பொதுவான விளையாட்டுக்கள் பல இருந்தாலும், ஒவ்வொரு ஊருக்கும் தனித்தன்மை வாய்ந்த விளையாட்டுக்கள் அதற்கே உரிய நுட்பமான வேறுபாடுகள் என பனை குழந்தைகளுடன் உறவுகொள்ளும் விதமே ஒரு விளையாட்டுத்தான்.

கற்கால குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகள்

குழந்தைகள் விளையாட்டு பொருட்களுடன் செலவு செய்யும் நேரம் என்பது இன்று மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. குழந்தைகள் தங்களைச் சூழ நிற்கின்ற புற உலகத்தை பார்க்கும் ஒரு கருவியாக தான் விளையாட்டுக்கள் இருக்கின்றன. விளையாட்டைப் பொறுத்தவரையில் குழந்தைகளின் சிந்தனைத் திறனை கூர்மைப்படுத்தும் மகிழ்வின் தருணங்களாகவே குழந்தைகளுக்கு இருக்கும். அதே வேளையில், குழந்தைகள் ஒருவரோடொருவர் பழகவும், தத்தமது திறன்களை மேம்படுத்தவும் விளையாட்டுப்பொருட்கள் அவசியமாக இருக்கின்றன.

ஒரு குழந்தை தன்னைச் சுற்றி இருக்கும் சூழியலிலிருந்து தனக்கான விளையாட்டு பொருளை உற்பத்தி செய்யும்போது அந்த குழந்தை  தனது பண்பாடையும் வாழ்வையும்  இணைத்துப்பார்க்கின்றது. இந்த ஒத்திசைவினை உணர்ந்துகொள்ளும்போது சூழியல் சார்ந்த விழிப்பூணர்வு விளையாட்டு வாயிலாக அறிமுகமாகிறது. தன்னைச் சூழ இருக்கும் இயற்கையைக் காக்கவேண்டும் என்கிற எண்ணம் போன்றவை மேலெழுகின்றன.

குழந்தைகள் தாமே விளையாட்டுப் பொருட்கள் செய்கையில் மேலும் இருவிதமான செயல்கள் நிகழ்கின்றன. ஒன்று குழந்தை ஒரு பொருளை உருவாக்கும் துடிப்பு மற்றும் உற்சாகத்தை மன ரீதியாக அடைகிறது. அப்படியே அந்த குழந்தையின் உடல் இயக்கங்கள் மிக சிறப்பாக செயல்பட ஆரம்பிக்கின்றன. இவ்விதமான உடல்  மற்றும் மன இயக்கமே குழந்தைக்கு மிக முக்கிய ஆற்றல்களை வழங்க வல்லன என்பதாக சமூகம் புரிந்திருக்கிறது. ஆகவே பெரும்பாலும் குழந்தைகளின் உடல் மற்றும் மன இயக்கம் சீரடைவதற்காக இவ்வித விளையாட்டுக்களை ஊக்குவிப்பார்கள்.

பனை ஓலையினை எடுத்து அதனைச் சுற்றி கட்டும் பொருளாக மாற்றும் நிலையிலிருந்து பட்டை மடிக்கும் ஒரு புது வழிமுறையினை கண்டுகொண்டதுவரைக்கும் ஒரு மிகப்பெரிய தொலைவினைத் தான் நமது முன்னோர்கள் கடந்து வந்திருக்கிறார்கள். அவ்வித நெடும்பயணத்தில் ஓலைகள் பெற்ற வடிவங்கள் அனைத்தும் அர்த்தம் நிறைந்தவைகள். நீடித்து உழைப்பவை மற்றும் சூழியல் மாசு விளைவிக்காத இவ்வித பொருட்கள் யாவும் இன்றைய குழந்தைகளை வந்து அடையாதது தான் சூழியல் சீர்கேடுகளுக்கு காரணம்.

ஓலைகளை பல்வேறு வடிவங்களில் மாற்றி பயன்படுத்த இயலும் என்பதை நாம் கவனித்திருப்போம். “கோட்டு”தல் என்பது ஓலைகள் இருக்கும் விதமாகவே வைத்து அவைகளை ஒரு பாத்திர வடிவிற்கு ஏற்ப கொள்கலனாக மாற்றுவது. “முடை”தல் என்பது ஓலைகளை சீராக கிழித்து பின்னர் அவைகளை பின்னி  பொருட்களை உருவாக்கும்  ஒரு முறைமை. பின்னல்களில் ஒன்றின்மீது ஒன்று பரவி செல்லும் முறைமைகளில் பலவிதம் என்றால், ஏடாக மடக்கி கலயத்தின் வாயில் நுழைக்கும் விதம் மற்றொருபுறம். ஓலைகளை திரித்து கயிறாக்குவது, அப்படியே அவைகளை எழுதும் ஏடாக மாற்றுவது வேறுவகை. இவ்வித பின்னணியத்தில் தான் ஓலைகளைச் சுருட்டி பயன்படுத்தும் பொருட்கள் முக்கிய கவனத்தைக் கோருகின்றன.

இசைக்கருவிகளின் ஆரம்ப நிலை குறித்து பேசும்போது கற்கால துவக்கத்திலேயே இசையின் ஆரம்ப வடிவம் இருந்திருக்கிறது என்றே ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஒருவகையில் கற்களைத் தட்டும் சத்தத்தில் ஏற்படும் தாளம் இசையின் ஆதி நிலை என்கிறார்கள். ஆனால்  இசைக்கருவி என்று வரும்போது 40000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொடை எலும்பில் இடப்பட்ட துளைகளை காண்பித்து இதுவே இசையின் ஆரம்ப வடிவம் என்று ஆய்வாளர்கள் சொல்லுகிறார்கள். பொதுவாக மூங்கில் காடுகளில் வண்டுகள் துளைத்த மூங்கில்களின் வழியாய் காற்று நுழைந்து எழுப்பும் ஒலிகளே ஆதி மனிதனுக்கு இசை குறித்த அறிமுக பாடம் அளித்திருக்கும் என சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எப்படியும் நாம் மீண்டும் மீண்டும் வந்து நிற்கும் ஓரிடம் உண்டு. அது மனிதர்கள் தங்கள் குரலால் எழுப்பிய ஓசை தான் அது. ஒலியின் மீது ஏற்பட்ட ஒரு தேடுதல் மனிதர்களை பண்பாடு நோக்கி அழைத்து வந்தது என்றால் அது மிகை அல்ல.

தமது குழந்தைகளிடம் அன்னையர் உரையாடிய விதத்தினையும் மிக முக்கிய குறிப்பாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கூவல் முறை, சீட்டிகை, கொட்டல், உறுமல், முனகல்  போன்றவை அடிப்படையான சத்தங்களாக இருந்திருக்கும். அன்னையரின் தாலாட்டு தான் இசையின் அடி நாதமாக இருத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இவைகளில் சற்றெனும் குறிப்பிடப்படாத ஒன்று உண்டு அது  சங்கு தான். கடல் சங்கின் உள்ளிருக்கும் ஊன் உண்ணப்பட்டு எஞ்சி இருக்கும் பகுதியில் எழுப்பும் சத்தம் பல மைல் தூரம் கேட்கும் சக்தி வாய்ந்தது. இதற்கு இணையாகவே மிருகங்களின் கொம்புகளும் பயன்பாட்டில் இருந்தன. ஒலியெழுப்பும்படியாக இவைகள் புழக்கத்தில் இருந்தன என தொல்லியலாளர்களும், கற்கால ஆய்வாளர்களும் ஒத்துக்கொள்ளுகிறார்கள்.

அப்படியானால் இதே காலகட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு எளிய ஒலி எழுப்பும் பனை ஓலைக் கருவியினை நாம் விட்டுவிட இயலாது. ஓலையினை சுற்றி அதனை கொம்பு வடிவத்தில் ஒரு பக்கம் குவித்தும் மற்றொறு பக்கம் விரிவாக்கியும் செய்யும் வடிவம், மிக எளிதானது. எலும்பில் துளையிடும்  அறிவிற்கு முந்தைய நிலை தான் ஓலையில் செய்யும் ஒலிஎழுப்பும் கருவி. இன்று சிறுவர்கள் விளையாட்டிற்காக செய்யும் இந்த ஊதுகுழல் மனித நாகரீகத்தின் முதல் குரலாக எழுந்த ஓலையின் ஒலி என்பதாக அறைகூவுகிறது. ஓசை அல்லது ஒலி எழுப்புவதால் தான் அது ஓலையானதா என்பது கூட ஆய்வுக்குரிய வார்த்தையாக  இருக்கிறது.

பெரும்பாலும் இடையர் வாழ்வில் ஒலி எழுப்புவது ஒரு முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. குழலூதும் கண்ணன் போன்ற படிமங்கள் இவ்வித தொல் அடையாளங்களினூடாக எழுந்திருக்க வாய்ப்புள்ளது. அரசு மற்றும் மத  தலைவர்கள் பலரும் சத்தங்களுடனே அறியப்பட்டிருக்கிறார்கள்.  போர் முரசிற்கு இணையாகவே எக்காளங்கள் கெம்பீர சத்தம் எழுப்பியிருக்கின்றன. சத்தங்களே பழங்கால வழிகாட்டி.

பால்யபருவத்தில் பாட்டி வீட்டின் பின்புறம் கிணற்றடியில் ஒரு பூவரச மரம் நின்றது நினைவிற்கு வருகிறது. இலைகளை சுருட்டி ஊதினால் போதும் நாம் கேட்டிராத கமறல் போன்றதொரு ஒலி எழும்பும். ஆனால் அவ்விதமான ஒரு ஒலியினை பனை ஓலையினைக்கொண்டு எழுப்பமுடியும் என்று நான் வெகு சமீபகாலம் வரை எண்ணிப்பார்த்திருக்கவில்லை.  

ஊதுகுழலின் தேவை எதற்கு இருக்கிறதோ இல்லையோ ஒருவிதமான சத்தம் எழுப்ப கண்டிப்பாக பயன்பட்டிருக்கவேண்டும். தூரத்திலிருந்து  எச்சரிக்கை அளிக்கவோ அல்லது சத்தம் எழுப்பி உதவி கோரவோ கூட பயன்பட்டிருக்கும்.

எனது பனைமர வேட்கைப் பயணத்தின்போது சந்தித்த  ஹாரிஸ் பிரேம் 2017 ஆம் ஆண்டு ஒருநாள் எனை அழைத்தார். பொதுவாக அவர் அடிக்கடி அழைப்பவர் இல்லை. பாஸ்டர் இங்கே இரண்டுபேர் வந்திருக்கிறார்கள்  அவர்கள் கையில் இருக்கும் வாத்தியக்கருவி பார்ப்பதற்கு பனை ஓலையில் செய்யப்பட்டதுபோல இருக்கிறது. ஒரு பேஸ் சத்தம் எழுகிறது என்றார்கள். எனக்கு அதன் சத்தத்தையும்  படத்தையும் அனுப்பினார்கள். பனை ஓலையில் தான் செய்யபட்டிருக்கிறது என நான் அப்போது உறுதி கூறினேன். ஏனென்றால், ஏற்கெனவே இந்தோனேசிய தீவுகளில் இது போல ஒரு இசைக்கருவியினைப் பார்த்திருக்கிறேன் என்றேன்.

இதற்கு ஒப்பாயிருக்கும் ஒரு இசைக்கருவியினை மஹாராஷ்டிராவில் பார்த்தேன். ஆரே பகுதியில் ஒரு பழங்குடியின போராட்டத்தின்போது தார்பா என்ற இசைக்கருவியினை ஒருவர் வாசிக்க அதற்கேற்ப பழங்குடி பெண்கள் இணைந்து ஆடினர். ஆகவே இவ்விதமான ஒரு இசைக்கருவி தொல் பழங்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது என்பதை என்னால் உறுதி செய்ய முடிந்தது.

தார்பா – வார்லி பழங்குடியினரின் பனை ஓலையில் செய்யப்பட்ட இசைக்கருவி

2017 ஆம் ஆண்டு நான், செந்தமிழன் அவர்கள் செம்மை சார்பில் ஒருங்கிணைத்த ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள ராமனாதபுரம் சென்றிருந்தேன். சுமார் 60 நபர்கள் கலந்துகொண்ட அந்த நிகழ்வில், திரு. பாண்டியன் அவர்களை சந்தித்தேன். அப்போது அவர்கள் ஒரு விவசாயி, பனை தொழில் சார்ந்த எந்த ஈடுபாடு அவர்களுக்கு இருக்கவில்லை. அந்த நிகழ்ச்சி முடிந்து செல்கையில் தான் பனை சார்ந்து இயங்கவேண்டும் என்கிற எண்ணம் உறுதிப்பட்டிருக்கிறது தோழர், என கூறி, பனை ஏற தேவையான கருவிகளை வாங்கிச் சென்றார்.

எங்கள் சந்திப்பு மிக நெருக்கமாக காரணம், முதல் நாள் இரவு அங்கே தங்கிவிட்டு மறுநாள் காலை அனைவரும் பனைத்தொழில் செய்யும் இடங்களில் சென்று பார்த்தோம். பனக்காட்டிற்குள் சென்ற அந்த நடையில் தான் பாண்டியன் அவர்கள் ஓலையை கையில் வைத்துக்கொண்டு  ஏதோ செய்துகொண்டிருந்ததைப் பார்த்தேன். ஓலையை அதன் வடிவம் ஒரு கூம்பு வடிவத்தை அடைந்தது அதனை ஊதி ஒலி எழுப்பினார்கள். பிரம்மாண்டமான சத்தம் எழுந்தது. பல்வேறு வகைகளில் அதில் ஒலி எழுப்ப முடியும் என்பதை பாண்டியன் அன்று நிகழ்த்திக்காட்டினார்கள். அங்கு வந்திருந்த அனைவருமே குழந்தைகளாக மாறிவிட்ட ஒரு உணர்வு அந்த சத்தத்தால் ஏற்பட்டது.

பாண்டியன் தான் செய்த பீப்பீ வாத்தியத்தை வாசிக்கிறார்

தமிழகம் முழுவதுமே குழந்தைகள் ஓலைகளைக் கொண்டு பீப்பீ சத்தம் எழுப்பி விளையாடியிருக்கின்றனர். அந்த விளையாட்டு குழந்தைகளுக்கு ஓலைகள் குறித்த ஒரு அறிமுகம் என்றால் அது மிகையல்ல. பின்னல்களையோ வேறு விதமான ஓலைப்பயன்பாடுகளையோ அறியும் முன்பதாகவே ஓலைகளை எடுத்துச் செய்யும் இவ்வித பொருள் எளிமையானதும் பெரு மகிழ்வளிப்பதுமாகும்.

பாண்டியன் தான்  சார்ந்திருந்த விவசாயம் பொய்த்துபோனதால் 2017 ஆம் ஆண்டு முதல் பனை மரம் ஏற துவங்கி இன்று வெற்றிகரமான பனை தொழிலாளியாக செயல்பட்டு வருகிறார். செம்மை அவரது பனை சார்ந்த பீப்பீ விற்பனைக்கான ஒரு களத்தினை சென்னையில் மரபு கூடல் என்ற வகையில் செய்து கொடுத்தது ஒரு முக்கிய திருப்புமுனை. குழந்தைகளால் விரும்பி வாங்கப்பட்ட அந்த “விளையாட்டு” இசைக்கருவிதான் அவருக்கு பனை தொழில் சார்ந்து இயங்குவதற்கு ஊக்கமருந்தாக இருந்திருக்கிறது. சிறு வயதில் அவர் விளையாட்டாக செய்து பழகிய ஒன்று பிற்கலத்தில் அவரது வாழ்விற்கே அடிப்படையான ஒன்றாக மாறிப்போன அதிசயம் இது.

பாண்டியன் பனை ஏறுவதை தொழிலாக கொண்டிருந்தாலும் இன்றும் சிறுவர்களுக்கான ஒலியெழுப்பும் பீப்பீ செய்து வருகிறார். சிறு குழந்தைகளுக்கான பனை ஓலை பொம்மைகளை செய்ய கற்றுக்கொடுக்கிறார். அவர் சார்ந்திருக்கும் நரசிங்கனூர் என்ற ஊரினை பனை சார்ந்த ஒரு மாதிரி ஊராக மாற்றிக்கொண்டு வருகிறார். இன்றுவரை பாண்டியனுடன் எனக்கு நல்ல தொடர்பு உள்ளது. அவரது வீட்டில் தங்கியிருக்கிறேன் பாண்டியன் அவர்களின் ஊருக்கு இருமுறை சென்றுள்ளேன்.  பாண்டியன் குறித்து தி இந்து தமிழ் திசையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.

பாண்டியன், புதிதாக பனை ஏற விரும்புகிறவர்களுக்கு ஊக்கமளிப்பவராகவும், பனை மரம் ஏற தனது 12 வயது இளைய மகள் கரிஷ்மாவை ஊக்கப்படுத்தியும் வருகிறார். பெரும்பாலான பனை ஆர்வலர்களுக்கும், பனையேறிகளுக்கும் முன்னுதாரணமாக இருந்துவருகிறார்.

பனை ஓலை கொம்பூதி அறிவிப்போம் பனை மரம் குழந்தைகளுக்கானது என்று.

அருட்பணிகாட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள் – 8

மே 29, 2020


விசிறி


பனையோலை பட்டையினைக் குறித்துப் பார்க்கையில், பல பண்பாடுகளில் எப்படி அவை ஒரே வடிவத்துடன் பல யுகங்களாய் மாற்றமின்றி வந்தடைந்திருக்கிறது என ஆச்சரியத்துடன் பார்த்தோம். இதற்கு நேர் எதிரான ஒரு முறைமை இருந்திருக்கிறதையும் ஆச்சரியத்துடன் பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கான காரணம், அதன் பின்னணியம், விரிவு போன்றவற்றை தேடி கண்டடைவது பேரானந்தம் தான். அவ்வகையில் நாம் அனைவரும் அறிந்த கை விசிறி குறித்த ஒரு பார்வையினை முன்வைக்கிறேன்.


திருமுழுக்கு யோவான் இயேசுவைக் குறித்து கூறும்போது “தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான். (மத்தேயு 3: 12) தூற்றுக்கூடை என்பது fan / winnowing fork என்பதாக ஆங்கிலத்தில் பதிவாகியிருக்கிறது. Fan என்கிற வார்த்தை vannus என்கிற லத்தீன் வார்த்தையிலிருந்து பிறந்தது. அது ரோமர்கள் தானியங்கள் பிரிக்க பயன்படுத்தும் புனிதமான கருவி ஒன்றினைச் சுட்டி நிற்கின்றது.

சாதாரண விசிறியின் ஓரங்களில் காணப்படும் பூவேலைகள்


விசிறி குறித்து ஒரு நகைச்சுவைக் கதையே உண்டு. விசிறி விற்கும் வியாபாரி ஒருவன் அரசரிடம் தான் விற்கும் விசிறி எந்த பாதிப்பிற்கும் உள்ளாகாது என்று கூறி தனது விசிறியை விற்றுவிடுவான். அரசர் அதனை பயன்படுத்துகையில் அது பழுதடைந்துவிடும். கோட்டையைக்கூட தாண்டாத அந்த வியாபாரியை அரசர் தனது வீரர்களைக் கொண்டு அழைத்து வந்து, என்னை எப்படி நீ ஏமாற்றலாம் எனக் கேட்டார். “அய்யா என் மீதோ என் விசிறியின் மீதோ பிழை இருக்காது தாங்கள் அதனை பயன் படுத்திய விதத்தில்தான் பிழை” என வியாபாரி அதற்கு பதிலளித்தான். “அப்படியானால் அந்த விசிறியை எப்படி கையாளவேண்டும் என்பதை நீ எனக்கு காண்பி” என அந்த அரசன் கேட்க, வியாபாரி விசிறியை ஒருகையால் முகத்தின் முன்னால் பிடித்துக்கொண்டு தலையை இடதும் வலதுமாக அசைக்கவேண்டும் என்று வியாபாரி செய்து காண்பிப்பார்.

விசிறின் விசிறியாக


விசிறி என்றவுடன் எனக்கு எனது பாட்டி வீடுதான் ஞாபகம் வரும். எனக்கு ஐந்து வயது இருக்கும்போது வேனிற்கால விடுமுறைக்காக பாட்டி வீட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். பாட்டி வீட்டின் தரை, சாணி மெழுகப்பட்டிருக்கும், பனை ஓலைப் பாயில் தான் படுக்கவேண்டும். மேலும் மின்விசிறிகள் கிடையாது. இவை அனைத்தும் அன்றைய சூழலில் நான் அறிமுகம் செய்திராத வாழ்க்கைமுறை. பகல் வேளைகளில் நண்பர்களுடன் நன்றாக விளையாடலாம். ஆனால் இரவு நேரம் பாட்டி வீட்டில் தங்குவது எனக்கு மிகப்பெரிய அளவில் மன உளைச்சலைக் கொடுத்தது. வேறு வழி கிடையாது. புழுக்கம் நிறைந்த அந்த இரவுபொழுதுகளில் அங்கே தான் தங்கவேண்டும். அங்கே எனக்கிருந்த ஒரே ஆறுதல் பனையோலை விசிறி தான். ஆங்கில எழுத்து P வடிவில் காணப்படும். அது மிக பெரிய தொழில் நுட்பம் கொண்ட ஒன்றும் அல்ல இருந்தாலும் பாட்டி ஒரு முறை விசிறிவிட்டால் போதும் உடலே குளிர்ந்து சிலிர்த்துவிடும். பனைஓலைக்குள் அந்த காற்று எப்படி அமைகிறது என்று தான் எனக்கு புரியவேயில்லை.

விசிறி மொழி


பனை விசிறி: நாக்கில் சுவை இன்மையைப் போக்கும், வாத, பித்த, கப நோய்களைப் போக்கும் என்று ஒரு குறிப்பினைப் படித்தேன். ‘அட்சய திருதியை’ யில் பனை ஓலை விசிறி உள்ளிட்ட சில பொருட்களை வழங்குவது சிறப்பானது எனும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் பனங்காட்டு ஓலைகள் வீசும் காற்று மருத்துவ குணமுடையவைகள் என்று கேள்விபட்டிருக்கிறேன். சமீபத்தில் கூட ஒரு நண்பர் பனங்காட்டில் சென்று படுத்து உறங்கி புத்துணர்ச்சியோடு வந்தார். நான் சந்தித்த ஒரு சித்த மருத்துவரும் பனை ஓலை விசிறியின் முக்கியத்துவம் குறித்து கூறியிருக்கிறார்.
விசிறிகள் உலகில் வெகு அதிகமாக பரவி இருந்த ஒரு பயன்பாட்டுப் பொருள். பல்வேறு நாடுகளில் விசிறி முக்கியமான ஒரு அலங்காரப்பொருளாக இருந்திருக்கிறதைப் பார்க்கலாம். மேலும் வாழ்வின் பல்வேறு தருணங்களிலிலும் பனையோலை விசிறி இணைந்து வந்திருக்கிறதை நாம் அறியலாம். ஒவ்வொன்றும் விரிவான பின்புலம் கொண்டவை. இக்கட்டுரைத் தொடரில் நாம் ஆராய்ந்து முடியாதவை.

கலை நேர்த்தியுடன் செய்யப்பட்ட விசிறி


உலகெங்கும் பார்க்கையில் விசிறி சமயச் சடங்குகளோடு, அரச குலத்தினரோடு உயர்குடியினரோடு தொடர்புகொண்டிருப்பதைக் காணமுடியும். பல்வேறு சூழல்களில் ஆன்மீக குறியீடாக விசிறி பயன்பட்டிருக்கிறது. கடந்த காலத்தில் தந்தத்திலும், தங்கத்திலும், தாமிரத்திலும் செய்யப்பட்டன. இயற்கையில் கிடைப்பவைகளைத் தாண்டி இவைகள் பயன்படுத்தப்பட்டது. விசிறிகள் இன்றைய கால கட்டத்தில், காகிதம், நெகிழி மற்றும் துணியாலான விசிறிகள் பயன்பாட்டில் இருக்கின்றன.

வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட விசிறி – ராஜஸ்தான்


ஜப்பானியர்கள் விசிறிக்கே விசிறியானவர்கள். ஜப்பானைப் பொறுத்த அளவில் அவர்களது ஆன்மீகத்துடன் விசிறிகள் பெறும் முக்கியத்துவம் வேறெங்கும் இல்லாதது அவர்களது போர் விசிறிகள், சாமுராய் விசிறி சண்டைகள், சுமோ போர் விசிறி, திருவிழாக்கள், கலாச்சார சமூக அடையாளம் என்று பலதளங்களை அது எட்டியிருக்கின்றது. உலகம் முழுக்க தங்கள் பொருட்களை எடுத்துச் சென்ற சீனர்களுக்கே ஜப்பானிய துறவி வழங்கிய கை விசிறி முக்கியமானதாக கருதப்பட்டிருக்கிறது. கி பி 988 வாக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பதினோராம் நூற்றாண்டிலிருந்து சீனா சென்ற முக்கியஸ்தர்கள் அனைவரும் ஜப்பானிய பாணி விசிறியினையே எடுத்துச் சென்றிருக்கின்றனர். சீனர்கள் விசிறி நடனம் என்று ஒரு வகைமையையே முன்னெடுத்திருக்கிறார்கள்.

ஜப்பானிய பெண்கள் விசிறி பயன்படுத்துகிறார்கள்


ஓலை விசிறிகள் குறிப்பிட்ட இடங்களில் பெருமளவில் புழங்குவதை கவனித்திருக்கிறேன். ஒன்று திருமண வீடுகளில் வருகை புரிந்தவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுவது. இரண்டு, சர்க்கஸ் போன்ற கேளிக்கை நிகழ்ச்சிகளில் விற்பனைச் செய்யப்படும். மூன்று, சமய நிகழ்வுகளான சொற்பொழிவுகள், பாத யாத்திரைகள் போன்றவற்றை மையப்படுத்தி நிகழும் விற்பனை. குமரி மாவட்டத்தைப் பொறுத்த அளவில் சிவாலய ஓட்டம் மகா சிவராத்திரி அன்று நடைபெறும். விசிறிக்கொண்டே பக்தர்கள் ஓடுவார்கள் அல்லது சைக்கிளில் இதனை வைத்து ஓட்டிச் செல்லுவார்கள். தேவைப்படும் இடங்களில் எடுத்து விசிறிக்கொள்ளுவார்கள். சிவாலய ஓட்டத்தை மட்டுமே தனது வருமானமாக எண்ணி விசிறி செய்யும் ஒரு நபரை நான் குமரி மாவட்டத்தில் உள்ள காப்பிக்காடு என்ற பகுதியில் பார்த்திருக்கிறேன்.

பிரம்மாண்ட அலங்காரம் கொண்ட பழங்கால விசிறி


எனது ஒரிய பயணத்தில் துறவிகள் பனை ஓலைகளை பயன்படுத்துவதைக் கண்டு பிரமித்துப்போனேன். மொகிமா தர்மா என்று சொல்லக்கூடிய ஒரு அமைப்பு. அவர்கள் வைத்திருக்கும் விசிறி தனித்துவமானது இரட்டைச் சுழி கொண்ட ஒர் அழகிய விசிறி அது. துறவினைச் சுட்டும் அந்த விசிறியினை அந்த துறவிகளே தயாரித்துக் கொள்வார்கள். பனை ஓலை பொருட்களை தங்கள் ஆன்மீக வாழ்வின் அடையாளமாக வைத்திருப்பவர்களைக் காணும்போது கண்டிப்பாக பனை ஓர் ஆன்மீக மரம் தான் என்கிற உண்மை வெளிப்படுகிறது. எனது பயணம் முழுக்கவே பனை ஓலைப்பொருட்கள் ஆன்மீக வாழ்வு சார்ந்து பயன்பட்டுக்கொண்டிருப்பதை பதிவுசெய்தபடியே வருகிறேன்.துறவு வாழ்வில் விசிறி இணைந்திருப்பது பவுத்தத்தில் கூடத்தான் எனும்போது ஆசிய வாழ்வில் பனையோலை விசிறியாக பரிமளிப்பதை கூர்ந்து அவதானிக்க வேண்டிய சூழல் இருப்பதை நாம் மறுக்க இயலாது. பனையுடன்கூடிய ஆன்மீகத்தின் அந்த ஒரு துளியினையாவது நாம் காத்துகொள்ளவேண்டும்.

மொகிமா தர்மா துறவியின் கரத்திலிருக்கும் விசிறி


குமரி மாவட்டத்தில் உள்ள காணிமடம் என்ற பகுதிக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன்பு சென்றிருக்கிறேன். அங்கே யோகிராம் சுரத் குமார் என்பவரது ஆசிரமம் இருந்தது. ஆசிரமத்தின் வெளியே அவரது படம் வரையப்பட்டு ஒரு கரத்தில் விசிறியுடன் அவர் காணப்பட்டார். விசிறி அனைத்து கஷ்டங்களையும் நீக்கிவிடும் என்பதுபோல ஒரு தோற்றம் இருந்தது அல்லது அறியாமையை நீக்கி அறிதல் எனும் மென் காற்றினை வழங்கும் ஒரு அழைப்பு. ஆனால் அந்த விசிறி சொல்லும் ஒரு கருத்து அவருக்குள் உள்ளுறைந்திருந்தது. அது தான் எளிமை. பனை ஓலை விசிறி என்பது ஒரு எளிமையின் அடையாளம் தான். தன் வாழ்விடத்தை துறந்தாலும் மென் காற்றினை வழங்க தவறாத மேன்மையின் வடிவம்.

யோகிராம் சுரத்குமார் கரத்தில் இருக்கும் விசிறி


இந்தியாவில் முதன் முதலாக வரலாற்றில் சுட்டிகாட்டப்படும் விசிறியானது அஜந்தா குகையோவியங்களிலிருந்து எடுக்கப்பட்டது என கை விசிறிகள் குறித்து ஆய்வு செய்த George Woolliscroft Rhead என்பவர் தனது History of the Fan என்ற நூலில் வெளிப்படுத்துகிறார்கள்.

எகிப்திய இறகு விசிறி

விசிறிகளைப் பொறுத்தவரையில் முன்று முக்கிய உண்மைகளை கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் அவர் கூறுகிறார். 1. ஒரு நாட்டின் பருவநிலை 2. அங்குள்ள சூழியல் சார்ந்து கிடைக்கும் மூலப்பொருட்கள் 3. அப்பகுதி வாழ் மக்களின் கைத்திறன் மற்றும் பண்பாட்டு செயல்பாடுகள் யாவற்றையும் ஒருங்கே பார்க்கவேண்டும் என்கிறார்.

ஆக்ராவில் செய்யப்படும் விசிறி


பழங்குடியினர் மற்றும் தொன்மையான வாழ்வைத் தொடரும் சமூகங்களில் நான்கு விதமான விசிறிகள் பயன்பாட்டில் இருப்பதை அவர் சுட்டி காண்பிக்கிறார். பனை ஓலை விசிறி, பனை மரங்கள் அதிகமாக இருக்கின்ற நாடுகளில் கிடைக்கின்றது என குறிப்பிடுகின்றார். இரண்டாவதாக, புற்கள் மற்றும் பின்னி செய்யப்படும் மூங்கில் அல்லது பிரம்பு போன்ற பொருட்களைக் குறிப்பிடுகிறார். மூன்றாவதாக தோல் பொருட்களில் செய்யப்படும் விசிறிகள் பெருமளவில் பயன்பாட்டில் இருக்கின்றன என்றும் இறுதியாக இறகுகளில் செய்யப்பட்ட விசிறிகளும் கூட தொல் பழங்கால நாகரீகம் கொண்ட மக்களின் வாழ்வில் இன்றும் பயன்பாட்டில் உள்ளன.

விசிறி செய்யும் கலைஞர்கள்


தமிழகத்தைப் பொறுத்த அளவில் பல்வேறு விசிறிகளை நான் பார்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலைஞனின் கைவண்ணம் என்று தான் சொல்ல வேண்டும். ஓலைகளை பயன்பாட்டு பொருளாக பார்த்த நமது முன்னோர் பல்வேறு வகைகளில் அதனை செய்ய முயற்சித்தனர். ஓலைகளின் தன்மை மாறாமல் செய்யப்படும் விசிறிகள். பாதியாக கிழித்து செய்யப்படும் விசிறிகள், பின்னல்கள் கொண்டு செய்யப்படும் விசிறிகள் மற்றும் அழகிய மடக்கு விசிறிகள் என வகைபாட்டிற்குள் வரும். பல்வேறு ஓலைகள், தேவைகளின் விளைவாகவும் சூழல்களை கருத்தில் கொண்டும் வகை வகையாக செய்யப்பட்டு வந்தன.

மடக்கு விசிறி


இந்த வகைகளைத் தேடுவதும் அடையாளப்படுத்துவதும் மிக முக்கியமான தேவை. சிறுவனாக இருக்கும்போது கன்னியாகுமரிக்கு அப்பா அழைத்துச் செல்லுவார்கள். அப்போது கன்னியாகுமரியில் விற்கப்படும் பொருட்களில் மிக முக்கியமானதாக நான் கருதியது பனை ஓலை விசிறிதான். மடக்கும் விதத்தில் செய்யப்படும் அந்த விசிறி இன்று கன்னியாகுமரியிலேயே இல்லாமலாகிவிட்டது. ஒட்டுமொத்த சீன பொருட்களின் விற்பனைச் சாளரமாகத்தான் கன்னியாகுமரி இன்று காணப்படுகின்றது. என்னைப்பொறுத்த அளவில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பனை ஓலையில் செய்யப்பட்ட பொருட்கள் நினைவு பரிசாக எடுத்துச் செல்ல வழி வகை செய்வதே மாவட்டத்தின் சூழியலுக்கும் பொருளியலுக்கும் கலை வளர்ச்சிக்கும் செய்யும் பொருத்தமுள்ள பணியாகும்.

வித்தியாச வடிவில் விசிறி


எனது வாழ்வில் அனேகர் விசிறி செய்வதை உடனிருந்து பார்த்திருக்கிறேன். குமரி, நெல்லை மற்றும் ராமநாதபுரங்களில் செய்யப்படும் விசிறி ஒவ்வொருவிதமானவைகள். சமீபத்தில் முக நூலில் இருக்கும் நண்பர்களிடம் விசிறியுடன் ஒரு புகைப்படம் எடுத்துப் போடுங்கள் என கேட்டிருந்தேன். அதற்கு எவருமே பதிலளிக்கவில்லை. விசிறி என்பது நமது வாழ்வை விட்டு விலகி சென்றுவிட்டதையே அது காட்டுகின்றது. பெரும்பாலும் வயோதிபர்களுடனும், கிராமப்புறத்தில் உள்ளவர்களுடனும் மட்டுமே தொடர்புடைய ஒன்றாக விசிறி மாறிவிட்டது. இன்றும் நகர்ப்புரங்களில் வசிப்பவர்கள் மின் இணைப்பு போனால் மட்டுமே அதனை பயன்படுத்துகிறார்கள். மும்பையில் நான் தங்கியிருக்கும் குடியிருப்பில் வசிக்கும் வங்காளத்தைச் சார்ந்தவர் வீட்டில் இன்றும் விசிறி இருக்கிறது.

கலைநுணுக்கம் மிகுந்த விசிறி


விசிறி கிழக்கிந்திய வாழ்வில் தனி பரிணாமம் எடுத்தது. ஆங்கிலேயர்கள் இந்தியா வந்தபோது அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளில் முதன்மையானது இங்கே உள்ள கோடைகால வெப்பம் தான். கோடையின் வெப்பத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்தனர். அவைகளில் முதன்மையானது தங்கள் இல்லங்களிலும் அரசு அலுவலகங்களிலும் விசிறிமயமாக்கினர். அந்த விசிறியினை சதா காலத்திலும் அசைத்து காற்று வரும்படி செய்ய குறைந்த கூலி கொடுத்து வேலைக்காரர்களை வைத்திருந்தார்கள். இந்தியில் அவர்களை “பங்கா வாலா” என்று அழைத்தார்கள். சிலர் முழு பனை ஓலையையுமே எடுத்து விசிறி எனச் செய்து பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் விசிறி விட்டனர்.

ஆங்கிலேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பிர்ம்மாண்ட விசிறிகளும் விசிறி வீசுபவர்களும்

பனை ஓலையில் விசிறி செய்வது மிகவும் எளிதானது தான். ஆனால் அதனைச் செய்யவும் தனித் திறமை வேண்டும் என்பதை அருகில் இருந்தபோது அறிந்துகொண்டேன். ஓலைகளை தெரிவு செய்வது குறித்து யோசித்துப் பார்த்தால், எப்படிப்பட்ட விசிறி செய்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஓலைகளின் தேவை இருக்கும். ஓலைகளை பெரும்பாலும் நீரில் நனைத்தே வேலை செய்வார்கள். அது தேவையான வடிவத்திற்கு மாற்றுவது எல்லாம் கலைஞர்களின் திறமையால் மட்டுமே. குருத்தோலைகளையோ வடலியோலைகளையோ அல்லது சாரோலைகளோ எடுத்து பொருள் செய்வது வழக்கம். முழுமையாக ஓலைகளை பெருமளவில் சிதைக்காமல் செய்யப்படுகின்ற விசிறி உண்டு. ஓலையின் வடிவம் மாறி செய்யப்படுகின்ற பின்னல்களாலான விசிறியும் உண்டு. ஓலைகளுடன் இணைந்துகொள்ளும் மூங்கில் போன்ற வேறு பொருட்களும் உண்டு. இந்த வேறுபாடுகள் இன்னும் எவராலும் கூர்ந்து அவதானிக்கப்படாதது நமது ஆழ்ந்த கவனத்தைக் கோருவது.

கால்களால் விசிறும் விசிறி

தபால் தலைகளை சேகரிப்பதுபோல் விசிறிகளை சேகரிக்கும் பழக்கம் கொண்ட சிலர் இருக்கின்றனர். இந்தியா முழுவது அவ்விதத்தில் நாம் ஓலை விசிறிகளை சேகரிக்க இயலும், வர்ணம் பூசியிருப்பதில் காணப்படுவதில் இருக்கும் வேறு பாடுகள், பின்னல்களில் காணப்படும் வேறுபாடுகள், ஓலையைச் சுற்றி வர செய்திருக்கும் பூவேலைப்பாடுகள், ஓலைகளின் ஓரத்தில் இணைக்கப்பட்டிருக்கும் துணியோ இன்ன பிற காரியங்களோ ஒவ்வொன்றும் 50 கிலோமீட்டருக்கு வித்தியாசப்படும் அளவிற்கு தனித்துவமானவைகள். 

பின்னல்களால் செய்யப்பட்ட விசிறி

பனை ஓலையில் செய்யப்படும் விசிறிகள் இன்றும் நமக்கு பல உண்மைகளை சொல்லத்தக்கதாக இருக்கிறது. பொதுவாக பனை மரங்களில் பின்னேட்லி (Pinately) பாமேட்லி (Palmately) என இரு வகையாக பிரிப்பார்கள். ஒற்றை ஒற்றையாக தென்னை இலக்குகள் போல மட்டையிலிருந்து பிரிந்து செல்லுபவை பின்னேட்லி வகையாகவும், உள்ளங்கையும் விரல்களும் போல  இணைந்து இருப்பவைகள் பாமேட்லி என்றும் குறிப்பிடுவார்கள். பாமேட்லி வகைகளில் அனேக “பனை வகை” மரங்கள் உண்டு. நாம் சிறப்பாக எடுத்துக்கூறும் பனை மரம் அவைகளில் ஒன்று.

தனியாரின் விசிறி சேகரிப்பு

என்னைப்பொறுத்த அளவில் இயற்கையாகவே பனை மரத்தின் ஓலைகள் விசிறி போன்று இருப்பது இதன் பயன்பாட்டிற்கான தொன்மையான காலத்தை நமக்கு வெளிப்படுத்துகின்றது. இரண்டாவதாக பனை ஓலையில் இன்றும் விசிறி செய்பவர்கள், அதனை “கற்களை” வைத்து தான் நேராக்கி சீராக்கி பயன்படுத்துகிறார்கள். ஆகவே கற்காலம் துவங்கி இதன் பயன்பாடும் உருவாக்கமும் இருந்திருக்கும்.

மூன்றாவதாக இன்றும் பனையோலை விசிறிகள் கரி நெருப்பு போட்டு உணவை வேகவைக்கும் தந்தூரி உணவு செய்பவர்கள் பயன்படுத்துவதாக இருக்கிறது. அப்படியானால், நெருப்பில் சுட்டு வேகவைக்கும் முறைமைகளை கடைபிடித்த கற்கால மனிதர்களுக்கும் இது உதவிகரமாகத்தானே இருந்திருக்கும்? நெருப்பு கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு பனையோலை விசிறியினை தாராளமாக கொண்டு சேர்க்கலாம் போல இருக்கின்றது.

நான்காவதாக பனை ஓலையிலிருந்து வீசும் காற்று பூச்சிகள் அண்டாமல் நம்மை பாதுகாக்கும். குறிப்பாக காட்டுக்குள் வேட்டைக்குச் செல்லும்போது கொசுக்களின் அல்லது பூச்சிகளின் தொல்லை இருக்கும். அவைகளினின்று தப்பிக்க  விசிறி மிக முக்கிய தேவையாக இருந்திருக்கும். சில வேளைகளில் வேட்டைபொருட்களை எடுக்கையில் ஈக்களின் தொந்தரவிலிருந்து விடுபடவும் விசிறி உகந்ததாகவே இருந்திருக்கின்றன.

இறுதியாக ஆனால் உண்மையாக சொல்லப்படவேண்டிய காரணம் என்னவென்றால், ஓலை விசிறி வெம்மையைத் தணித்து உடலைக் குளிர்விக்க பயன்பட்டிருக்கும். தனது குழந்தையின் உடல், வெம்மையினை சகிக்காது என்ற உணர்வுடைய ஒரு தாயார் குழந்தைக்கு விசிறி விட தானே கண்டுபிடித்த ஒரு இயற்கை  பொருளாகத்தான் இருந்திருக்க வேண்டும்.

மோசிகீரனார்

மோசிகீரனார் என்ற புலவர் அக்கால வழக்கத்தின்படி  சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும் பொறையிடம் பரிசில் பெற வேண்டி சென்றார். நீண்டதூரம் நடந்து வந்த  களைப்பின் மிகுதியாலும் பசியாலும் அரண்மனையில் இருந்த முரசுக்கட்டிலில் படுத்து உறங்கினார். செய்தி மன்னனுக்கு சென்றது. செய்யக்கூடாத ஒன்றை செய்த அந்த பேதையின் தலையினைக் கொய்து வரவேண்டும் என தனது வாளோடு புறப்படுகிறான். அங்கே புலவர், கண்ணயர்ந்து உறங்குவதை கண்டு மனம் பதைத்து தனது வாளை ஒதுக்கிவைத்துவிட்டு கவரி வீசுகிறான் என்பதாக பார்க்கிறோம். கவரி வீசுவது பசியுற்றவனுக்கு மன்னன் செய்யும் கடன் என்பதாக ஒரு விழுமியம் இருந்திருக்கிறது. இன்று பனையோலை விசிறி செய்பவர்களது வாழ்க்கை பசியுடன் போராடிக்கொண்டிருக்கையில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்பது நம்முன் நிற்கும் மிக முக்கிய கேள்வி.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள் – 7

மே 24, 2020


பட்டை
வாழை இலைகள் தான் நமது உணவு உண்ணும் பாரம்பரிய பாத்திரம் என்பதாக இன்று ஒரு கருத்து தமிழகத்தில் நிலைபெற்றிருக்கிறது. அனைத்து திருமண வீடுகளிலும், விருந்து வீடுகளிலும், உணவு விடுதிகளிலும் வாழை இலையில் பரிமாறப்படும் உணவே தமிழக உணவு பாரம்பரியத்தைக் குறிக்கும் சிறப்பம்சமாக எடுத்துக்கூறப்பட்டு வந்திருக்கிறது. வாழை மரங்கள் தண்ணீர் செழித்திருக்கும் இடத்தில் வளர்பவை ஆனபடியால் அவைகள் செழிப்பை முன்னிறுத்தும் ஒரு அடையாளமாகிப்போனது. அப்படியானால் ஐவகை நிலம் கொண்ட தமிழகத்தில் குறிஞ்சி பகுதியினைத் தவிர்த்து அனைத்திடங்களிலும் வளரும் பனை மரத்தின் ஓலைகள் எப்படி இவ்வடையாளத்தை இழந்தது?

மித்திரன் பனை ஓலை பட்டையில் பதனீர் குடிக்க உதவியபோது


வாழை இலைகள் எப்படி தமிழகத்தின் ஒட்டுமொத்த உணவு பாத்திரத்தின் அடையாளமாக மாற முடியும்? யோசித்து பார்த்தால், வளம் மிக்க பகுதியில் வாழ்வோரின் வழக்கமே வறண்ட நிலப் பகுதியில் வாழ்வோர் ஏக்கம் கொள்ளும் வாழ்வு என்பதாக முன்னிறுத்தப்பட்டது. மேலும் வாழை இலையினை மையப்படுத்தியே நமது சமையல்கள் விரிவடைய துவங்கின. ஆகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வாழை இலை இட்டு உணவு பரிமாறுதல் பொருந்தும் என்பதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஆனால் இந்த நிலை எப்போதும் நம்மிடம் இருந்தது இல்லை. உணவுண்ணும் பாத்திரம் அந்தத்த இடத்தில் கிடைக்கும் இயற்கை பொருட்களின் தன்மையைப்பொறுத்தே இருந்திருக்கிறது. தையல் இலை, கமுகு பாளை, வாழை இலை, தேக்கிலை, சேம்பு இலை, தாமரை இலை மற்றும் பனை ஓலை போன்றவை தேவைக்கு ஏற்ப பயன்பாட்டில் இருந்துவந்தன. இவைகளில் கமுகு பாளை தட்டும் பனையோலை தட்டும்தான் கையிலேயே வைத்து உணவு உண்ண வசதியானவைகள். அதிலும் உடனடி பாத்திரம் என்றால் பனை ஓலை தான் மிகச் சரியானது. தேவையான அளவு எப்போதும் எடுத்துக்கொள்ள வாய்பிருந்திருக்கிறது. மொத்தமாக ஓரிலையை வெட்டி விட தேவையில்லை.


பொதுவாக வறண்ட நிலப்பகுதிகள் உள்ள தென் மாவட்டங்களில் பனை ஓலை பட்டை மிக முக்கிய உணவுப்பாத்திரமாக இருந்திருக்கிறது. தவிர்க்க இயலா இந்த பாரம்பரியம் அழிந்து போவதற்கு பனை தொழில் அழிவும் பிற விவசாய தொழில்களின் எழுச்சியும் காரணம். குறிப்பாக அணை கட்டுமானங்கள் போன்ற பெரும் நீர் தேக்கங்களின் வரவிற்கு பின்பு, நிலவியல் மாற்றங்கள் ஏற்பட்டு, உணவுகள் உற்பத்தியிலும் உட்கொள்ளுதலிலும் தமிழகம் மிக அதிக அளவில் மாற்றத்தை அடைந்திருக்கிறது.
பனை ஓலையில் செய்யப்படும் பனையோலைப் பட்டையானது நம்மோடு தங்கியிருக்கும் ஒர் ஆதி உணவு பாத்திரம். இவ்விதமாக எல்லா கலாச்சாரத்திலும் தொல் வடிவங்கள் எளிதில் வந்து நவீன வாழ்வை அடைவதில்லை. ஆதிவடிவங்கள் நம்மை வந்தடைவது ஒரு நல்லூழ். அவ்வடிவங்களே நாம் பனை சார்ந்த வாழ்வை முன்னெடுத்தவர்கள் என்று கூறுவதற்கு ஏற்ற அடையாளம். அகழ்வாய்வு செய்து நாம் எடுக்கும் பொருட்களை விட பயன்பாட்டில் இருக்கும் இவ்வித பொருட்கள் பயன்பாட்டளவில் மிகவும் தொன்மையானது.

கறி பொதிந்த ஓலை


பனை ஓலையின் வடிவம் அதிகளவில் மாறாமல் பனை மரத்தின் ஓலையைக் கொண்டு செய்யப்படும் ஒரு வடிவம்தான் பனையோலைப் பட்டை. இதற்கு இணையான வேறு எளிய பொருள் பரந்துபட்ட பயன்பாட்டில் இல்லை என்று சொல்லலாம். இன்று பெரும்பாலும் ரோட்டோரங்களில் பனையோலைப் பட்டைகளுடன் பதனீர் விற்பவர்கள் நின்று விற்பனை செய்வதைப் பார்க்கிறோம். அந்த பட்டைதான் பதனீரை விற்பனை செய்யும் விற்பனை முகவர் எனும் அளவிற்கு இன்று பனையோலைப் பட்டை முன்னணியில் நிற்கின்றது.


எனது சிறு வயதில் பதனீரை பனையோலைப் பட்டையில் வழங்கும் ஒரு முறைமையை நான் பெரிதும் ரசித்திருக்கவில்லை. மடிப்பு மடிப்பாக இருக்கும் இலைகள், இரண்டு கைகளும் பற்றியிருக்க குனிந்து மாடு நீர் குடிப்பது போல பதனீர் குடிப்பது, ஏதோ இலையையும் சேர்த்து சாப்பிடும் பாவனையைக் கொண்டிருந்தது. எவ்வகையிலும் பொருத்தமில்லா ஒரு கடினமான வடிவத்தை நமது முன்னோர் நம்மீது திணித்துவிட்டார்களோ என்று கூட நினைத்திருக்கிறேன். ஆனால் வளர்ந்த பிற்பாடு, ஐரோப்பியர்கள் பயன்படுத்தும் கத்தியும் கரண்டியும், சீனர்கள் பயன்படுத்தும் இரட்டைக் குச்சிகளும் இதனை விட கடினமான அனுபவங்களைக் உள்ளடக்கியது என்பதைப் புரிந்துகொண்டேன். ஒரு கட்டத்தில் பனை ஓலை பட்டையின் வடிவம் மிக நேர்த்தியான ஒன்றாகவும் காணப்பட்டது. நாட்கள் செல்ல செல்ல பனைஓலையில் சாப்பிடும் உணவின் சுவை என்னை திக்குமுக்காட செய்வதாக இருந்தது. தனித்துவமான அந்த வடிவம், பயன்பாடு மற்றும் பயன்படுத்துவோர் சார்ந்த தகவல்கள் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் அளவிற்கு அதிகமானவை. அட்சயப்பாத்திரம் என்ற ஒரு உன்னத வடிவமாகவே இதனைப் இன்று பார்க்கிறேன்.


ஓலைகளில் பல்வேறு பயன்பாட்டு வடிவங்கள் செய்வது உலகமெங்கும் வழக்கில் காணப்படுகின்ற ஒன்று. ஒவ்வொரு ஊருக்கும் இப்படி ஒரு பொருள் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இவை யாவும் பல நூற்றாண்டுகளாக நமது மரபில் ஊறி எழுந்தவை. இன்று இவற்றை நாம் எளிதில் கடந்து சென்றுவிடுகிறோம். ஆனால், இவை அத்தனை எளிதாக உருவாக்கப்பட்டவை அல்ல என்பதை ஒருமுறை தொட்டுணர்ந்தாலே தெரிந்துவிடும். ஆதி மனிதர்கள் ஓலைகளுடன் கொண்டுள்ள உறவைச் சொல்லும் சான்றுதான் பனை ஓலை பட்டை.


பெண்களும் தாய்மார்களுமே ஆதி பயன்பாட்டு பொருட்களை கண்டுபிடித்தவர்கள் என்பது குறித்த பார்வை, பெண்ணிய ஆய்வாலர்களால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக குழந்தையைப் பெற்றடுத்த தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பின் போது ஏற்படும் தேவைகளுக்கேற்ப அனேக காரியங்களை கண்டுபிடித்திருக்கிறார்கள். ஓலை பட்டையில் கூட குழந்தையை விரித்து பரப்பி வைத்து படுக்க வைத்திருக்கலாம். அது போலவே விழுந்து கிடக்கும் பனை ஓலைகளை எடுத்து குவித்து குழந்தையின் சிறு வாய் வழி குழந்தைகளுக்கு உணவு புகட்டும் தாய்மார்கள் பனை ஓலை பட்டையின் ஆதி வடிவைக் கண்டுபிடித்திருப்பார்கள். உணவை சாறு, கூழாக அருந்தும் ஒரு குழந்தைப் பருவத்து நிலையை இது இன்றும் உணர்த்துவதாக இருக்கிறது.


பனை மரத்துடன் ஈடுபாடு கொண்டவர்கள் பனையோலை பட்டையில் பதனீர் வாங்கிக்குடித்த அனுபவத்தை மறப்பது இல்லை. பட்டையை கிளப்பும் அந்த அனுபவம் தொன்றுதொட்டு வரும் ஒரு அறிவு என்பதோடு தொன்மையான ஓலை பயன்பாட்டின் ஆதாரம் என்றும் நாம் கொள்ளலாம். மேலும், பின்னல்கள் எனும் மொழியினை மனிதர் கற்றுத்தேற நாம் கண்டடைந்த பாதையினைச் சுட்டி நிற்கும் மைல்கற்கள் இவைகளே

பனை ஓலைப் பட்டையில் பனம்பழம் – குற்றாலம்


வேட்டை சமூகங்கள் ஓலைகளையும் இலைகளையும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களையுமே தங்கள் வேட்டைப் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தியிருக்கிறார்கள். எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து வெகு சமீப காலம் வரை கூட பனை ஓலையிலேயே பன்றி இறைச்சியினை பொதிந்து கொடுப்பார்கள். இவ்விதமாக பொதிந்தவைகளிலிருந்து கறியை எடுத்து வீசியெறியும் ஓலைகளின் நடுவில் குழிவு இருப்பதைப் பார்க்கலாம். இவைகளும் ஓலை பட்டையின் ஒரு ஆதி வடிவமாக இருக்க வாய்ப்பிருக்கிறது

பனை ஓலைகளில் பட்டையினை மடிக்கும்போது கவனிக்கவேண்டியவைகள் சில உண்டு. எல்லாரும் எளிதில் பனை ஓலையில் பட்டையைப் பிடித்துவிடமாட்டார்கள். அது எளிதும் அல்ல. ஓலைகளின் பதம் மிகவும் முக்கியம். எத்துணை திறமையானவர் மடித்தாலும் ஒருசில ஓலைகளில் கீறல்கள் விழுந்துவிடுவது இயல்பு. சில வேளைகளில் நெருப்பில் வாட்டி மடிக்கும் வாய்ப்பு இருந்தாலும் அந்த வாய்ப்பு எப்போதும் சாத்தியப்படுவதில்லை.

பதனீர் விற்பவரும் பனம் பழம் விற்கும் சிறுவனும் பனையோலை பட்டையுடன் – குற்றாலம்


ஓலைகளை குறித்து ஒரு சிறு அறிமுகம் இருந்தால் பின்வருவனவற்றை புரிந்துகொள்ள வசதியாக இருக்கும். இரண்டு பெருவிரல்களும் இணைந்திருக்கும்படி கைகளை விரித்து வைத்துக்கொள்ளுங்கள். பனை ஓலையும் சற்றேறக்குறைய இப்படித்தான் இருக்கும். இப்பகுதியில் தான் மட்டை வந்து மையம் கொள்ளும். இதனை மூக்கோலை என்றும் பொன்னி ஓலை என்றும் குறிப்பிடுவார்கள். இப்பகுதிக்கு என்று ஒரு தனித்துவமான மடிப்பு இருக்கும் இதிலே ஒரு குருவி பதிவாக வந்து ஒளிந்து கொள்ளும். ஆகவே தான் ஓலையின் இப்பகுதியில் தங்கியிருக்கும் குருவிக்கு மூக்கோலை குருவி அல்லது பொன்னி குருவி என்று பெயரிட்டார்கள் குமரி மாவட்டத்தினர். தூத்துக்குடி ராமனாதபுரம் போன்ற பகுதிகளில் இவற்றை முன்னி ஓலை என அழைப்பார்கள். ஓலையின் இப்பகுதி பெரும்பாலும் பொருட்கள் செய்ய பயன்படுத்துவதில்லை.
பொன்னி ஓலையை மையப்படுத்தி ஓலையினை வலஞ்சிறகு இடஞ்சிறகு என்றும் பிரிப்பார்கள். அதாவது, ஓலையினை வலதுபுறம் என்று இடதுபுறம் என்று பிரிப்பது. இதில் வலஞ்சிறகிற்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பனை மரத்திலிருந்தே பதமாக வெட்டி அருவாபெட்டியில் எடுத்துவரப்படும் நிகழ்சிகள் உண்டு. தனித்துவமான பொருட்களை அவ்வளவு கவனமாக செய்வார்கள். ஓலையின் இரு ஓரங்களையும் கடஞ்சிலக்கு என்பார்கள். ஓலையை பெருமளவில் பாதிக்காதபடி கடஞ்சிலக்கினை எடுத்துக் கூட பட்டை மடிப்பார்கள். அது பதனீர் இறக்கும் பனை மரத்தை பெருமளவில் பாதிக்காத செயல்.

குருத்தோலைச் சிறகு


மூன்று, நான்கு அல்லது ஐந்து ‘இலக்குகள்’ கொண்ட பனை ஓலைகளை ஒன்றாகப் பிய்த்தெடுத்து, அவற்றை மடக்கிச் செய்வதுதான் பனை ஓலைப் பட்டை. பொதுவாக ஒரு ஐந்து இலக்குகள் கொண்ட ஓலையினை இணிந்து எடுத்துப் பார்த்தால் அது மனிதக் கைகளை ஒத்திருக்கும். ஓலையில் அடிப்பாகம் ஒன்றோடொன்று இணைந்து உள்ளங்கை போலவும், மேற்பகுதி விரல்கள் போன்று பிரிந்தும் இருக்கும். இது மனிதக் கைகளை குவித்து தண்ணீர் மொண்டு குடித்த ஆதி குடிகளின் மனதில் ஒரு வெளிச்சத்தைக் கொடுத்திருக்கும். பிரிந்திருக்கும் விரல்களை எப்படி சேர்த்துவைத்துத் தண்ணீர் மொண்டுகொள்ளுகிறோமோ, அதுபோலவே ஓலைகளையும் குவித்துப் பிடித்துவிட்டால் தண்ணீரைத் தேக்கி குடிக்கும் ஒரு வடிவமாக மாற்ற முடியுமே என எண்ணியிருக்கலாம். ஓலைகளைப் பரத்தி, பிரிந்திருக்கும் நுனிப்பகுதிகளை ஒன்றிணைத்தால் ஒரு குழிவுடன் கூடிய படகின் வடிவம் கிடைக்கும். ஒன்றிணைத்த ஓலைகளின் ஒரு சிறு பகுதியை மட்டும் பிரித்து, நீண்டு நிற்கிற ஓலைகளுக்குக் குறுக்காக சுற்றிக் கட்டிவிட்டால் பயன்பாட்டுக்கு ஏற்ற பனை ஓலை பட்டை தயார்.

மித்திரன் நேரடியாக பனையேறி அளித்த பட்டையில் பதனீர் சுவைக்கும் காட்சி – திருஞானபுரம்


ஒரு வகையில் பனை ஓலைப் பட்டைகளின் எளிமையும் தான் தொன்மையான அவற்றை இன்றுவரை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. பனையேறிகளின் முதல் நாள் பூசையில் பனையோலைப்பட்டை கண்டிப்பாக ஓர் இடம் பெற்றிருக்கும். குமரியிலுள்ள அனைத்து மதத்தினரும் தங்கள் விழாக்களின்போது, சடங்குகளின்போது பனை ஓலைப் பட்டையில் ஏதேனும் வைத்து உண்ணும் வழக்கம் உண்டு.

கூடவிளை – தென்னிந்திய திருச்சபை, துக்க வெள்ளி ஆராதனைக்குப் பின்பு நிகழும் பனையோலைப் பட்டை கஞ்சி வழங்குதல்


குமரி மாவட்டத்தில் தென்னிந்திய திருச்சபைகளில் நடைபெறும் புனித வெள்ளி ஆராதனை ஒரு தொல் சடங்கினை ஏந்தி வருவதை இன்றும் காணலாம். பல திருச்சபைகளில் மும்மணி நேர ஆராதனைக்குப் பின்பு கஞ்சியினைக் கொடுப்பார்கள். ஆனால், இன்றும் ஒரு சில திருச்சபைகளில் பனை ஓலைப் பட்டையிலேயே இதனை வழங்குவார்கள். இதற்காக திருச்சபையினர் எடுத்துக்கொள்ளும் சிறப்பு கவனம் நம்மை பிரமிக்க வைப்பது. ஓலைகளை வெட்டி மலைபோல முந்தையநாள் குவித்துவிடுவார்கள். பிற்பாடு அவைகள் புழுமி மென்மையாகும்போது ஓலைகளை எடுத்து மடிப்பார்கள். ஓலைகளை மடிப்பதற்கு என்று தனி திறமை வாய்ந்தவர்கள் உண்டு.
இதே சூழலை திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பொருத்திப் பார்க்கலாம். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அசனம் வழங்கும்போது பனை ஓலை பட்டையில் தான் கொடுப்பார்கள் நவீன வாழ்வில் வாழை இலைகள் பனையோலைகளின் இடத்தைப் பிடித்துக்கொண்டன.


பனையோலைப் பட்டை சோறு வழங்குதலில் நாட்டார் தெய்வ வணக்கத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு. பல்வேறு விழாக்களில் கொடுக்கப்படும் கிடாய்கறி சோறு பனை ஓலைப் பட்டைகளிலேயே கொடுக்கப்படும். திருவிழாக்களின் உற்சாக களைப்பில் மிக அதிக உணவைக் கோருகின்ற ஒரு வடிவம் பட்டை சோறு என்றால் அது மிகையாகாது. கிடா அல்லது கோழி பலியிட்டு நாட்டார் தெய்வங்களை வணங்கும்போதும் பனை ஓலை பட்டையில் கறிசோறு வழங்கும் நடைமுறை இன்றும் உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன்பு ராமனாதபுரத்தில் கோழிக்கறியினை பனையோலை பட்டையில் உண்ட அனுபவம் கிட்டியது. பதனீரோ, கஞ்சியோ, கறிக்குழம்போ பனை ஓலை வாசத்துடன் நம் நாக்கில் வந்து விழுவது பசியை நன்கு தூண்டும்.


2018 ஆம் ஆண்டு தமிழகத்தினை சுற்றி வருகையில், அனேக தென் மாவட்ட கோவில்களின் அருகில் பனை ஓலை பட்டைகள் திருவிழாக்கள் முடிந்துவிட்டதன் அடையாளமாக கிடந்தன. பழங்காலத்தில் சில பாட்டிமார் இவ்வித ஓலைகளை எடுத்து கடவம் போன்ற பொருட்களை செய்து ஓலைகளை மறு சுழற்சி செய்த கதைகளையும் கேட்டிருக்கிறேன்.

மட்டையுடன் இணைந்திருக்கும் பனையோலையினை தேவைக்கேற்ப கிழித்தெடுக்க தயாராகும் பனையேறி – பண்ணைவிளை


எனது அனுபவத்தில் பனையோலை பட்டையினை பயன்படுத்தும் மக்கள் பலதரப்பட்டவர்கள் என அறிந்திருக்கிறேன். தமிழகம் தாண்டி ஆந்திராவிலும் அவற்றின் பயன்பாடு இருப்பதைப் பார்த்திருக்கிறேன். சாதி சமய மொழி நாடு கடந்து காணப்படும் பனை ஓலை பட்டைதான். அப்படி பார்க்கையில் தமிழகத்தில் இழந்துபோன பட்டையின் பங்களிப்பை மீட்டுருவாக்கும் ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இராமனாதபுரம், தூத்துக்குடி போன்ற பகுதிகளில் எப்படியாவது ஒரு சில கடைகளில் பனை ஓலை பட்டையில் உணவளிக்கும் கடைகள் உருவாகத்துவங்கினால், மண்வாசனை என்ற கூற்று பனைவாசனை என மாறும். பட்டையைக் கிளப்பும் காலத்திற்கு தமிழகம் தயாராகட்டும்.

அசனம் : திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தென்னிந்திய திருச்சபையில் வழங்கப்படும் சிறப்பு விருந்து. ஊரிலுள்ள அனைவரும் இந்த விருந்தில் கலந்துகொள்ளலாம்.

அருட்பணி. காட்சன் சாமுவேல்

(பனை திருப்பணியில் 25 வருடங்களுக்கும் மேலாக)

ஆரே பால் குடியிருப்பு

பகிரி: 9080250653

மின்னஞ்சல்: malargodson@gmail.com

பின்னல்கள்  –  6

மே 18, 2020

சரடுகள்

பனை சார்ந்த தேடுதல்கள் முடிவேயில்லாதது, விரிவானது. அவைகள் எங்கே எப்போது எப்படி விரிவடையும் என்பது நாமே அறிந்துகொள்ள முடியாதது. நமக்கு கிடைக்கும் ஒவ்வொரு தகவல்களும் எப்படி நம்மை வந்தடைகின்றன என்பது கூட மிகப்பெரிய ஆச்சரியம் தான். பல நேரங்களில் நாம் பெறுகின்ற புதிய திறப்புகள் கடவுள் நமக்கு அருளிய வரம் என்றே கொள்ளமுடியும். அந்த அளவிற்கு தர்க்க விதிகளை மீறியே பனை சார்ந்து  புதிய திறப்புகள் கிடைக்கும்.

Jalli

ஜல்லிக்கட்டு காளையுடன்

தமிழகத்தில் பனை குறித்து அறியாதவர் என எவரும் இருக்கவியலாது. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக பனை சார்ந்த உணவு பொருட்களை குறித்தாவது ஒரு சில காரியங்களை அறிந்திருப்பார்கள். பிரச்சனை என்னவென்றால், அ