காகம்


மும்பை பட்டிணத்தின் மழை மிகுந்த நாளில் தவிர்க்க முடியாத பிரயாணம் ஒன்று ஏற்ப்பட்டது. ‘தானே’ இரயில் நிலையம் முன்பு ஷூ மூழ்குமளவு தண்ணீரில் பொதுமக்கள் எதுவுமே நடவாதது போல் நடமாடிக்கொண்டிருந்தார்கள். மும்பை வாழ்க்கை இன்னமும் அதிசயிக்கதக்கதாகவே இருக்கும் என் கிராமத்து மனது பரக்கு பார்த்தபடியே நிதானமாக நீரை துழாவியபடியே நடந்தது. எனக்கு மிகச் சமீபமாக ஒரு கீச்சுக்குரலை நான் கேட்டபொழுது அப்படியே நின்றுவிட்டேன். என் கால்களின் அருகிலேயே ஒரு எலிக்குஞ்சு (பெருச்சாளியின் இளவல்?) பரப்பரப்புடன் நீந்திக்கொண்டிருந்தது. எங்கே சென்று கரையேறுகிறது என நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு காகம் என்னை வட்டமிட்டபடி வந்து ஒரு சாய்ந்துபோன தூணில் அமர்ந்தது. சூழ்நிலையை புரிந்துகொண்ட நான், இன்னும் நிதானமாக கூர்ந்து கவனிக்க நேரமில்லாமல் என்ன செய்வது என நிதானிப்பதற்குள் காகம் மிக லாவகமாக தனது உணவை கொத்திச் சென்றது. கீச்சுக் குரல்களும் காகமும் மறைந்தன. காகம் தன்னுடைய உணவை எங்கே எடுத்துச் சென்றிருக்கும்? என்ற யோசனையுடன் வீட்டிற்கு வந்தேன்.

சமீபநாட்களாக நான் சிறுகுழந்தைகளை அழைத்து கதைகளைச் சொல்லவும், கேட்கவும் ஆரம்பித்திருந்தேன். அவர்கள் கூறிய கதைகளில் காகங்களும் இடம் பெற்றிருந்தன. குழந்தைகள் வாழ்வில் காகம் பெற்றிருக்கும் முக்கிய இடம் என்னை காகத்தின் பால் ஈர்த்தது. நகர வாழ்வில் நம்மைவிட்டு அநேக பறவைகள் அகன்றபோதிலும், தியாகம் மற்றும் நல்லுறவை வெளிப்படுத்தும் காகம் நம்மோடு தங்கியிருப்பது கவனிக்கத்தக்கது. காகங்கள் குறித்த உயர்வான எண்ணங்கள் ஏதும் தற்பொழுது நம்மிடம் இல்லை. நாம் விரும்பத்தகாத கரிய நிறம், குரல்வளமற்ற அதன் கரைச்சல், நடைப்பழகத் தெரியாமல் தத்துவது, சனி பிடித்துவிடுமோ என்ற அச்சம், இவை எல்லாவற்றிற்கும் மேலாக அசுத்தமாக கருதப்படும் பொருட்களோடுமுள்ள அதன்  தொடர்பு. எனினும் குழந்தைகள் தம் வாழ்வில் காகம் நீக்கமற நிறைந்திருப்பது, காகத்தை நாம் குறைத்து மதிப்பிடலாகாது எனச்சுட்டுகின்றது.

குழந்தைகளுக்கு சோறூட்டவேண்டி, காகங்களை நாம் காண்பிக்கும் பொழுது காகம் ஒன்றும் குழந்தைகளை பயமுறுத்துவது இல்லை. நாம் தான் சிறிது சிறிதாக குழந்தைகள் மனதில் நஞ்சை விதைக்கிறோம். காகம் தலைக்குமேல் பறப்பது நல்லதல்ல என துவங்கி சனி பகவானை அழைத்து வந்து பயமுறுத்தும் வரை நமது கதைகள் யாவும் குழந்தைகளை காகத்தை விட்டு தூரமாக்கும் சதிவலைகளாகவே காணப்படுகின்றது. பிஞ்சு இதயங்களை நஞ்சாக்கி காகத்தின் தியாகத்தை அறிந்துகொள்ள முடியாமற் செய்கிறோம். காகங்களை கைச்சாடையால் துரத்துவதோடே மெல்ல மெல்ல நாம் காகங்களை குழந்தைகளிடமிருந்து தூரமாக்கும் கதைகளை பகிர்ந்து கொள்ளத் துவங்குகிறோம். ‘பாட்டி வடை சுட்டக்கதை’ தான் நம் கைவசமிருக்கும் முதற்கதை. திருட்டு என்றால் என்ன?, பிறரை நயமாக வஞ்சிப்பது மற்றும் ஏமாற்றுவது எப்ப்படி போன்ற நல்லொழுக்கங்களை குழந்தைகளுக்கு புரியாத வயதிலேயே புரியும்படி விளக்குகின்றோம். தன் தள்ளாமையில் உழைக்கும் பாட்டிக்கு நிகழும் அவலம் தான் உழைப்போருக்கு அனுதினமும் நடைபெற்றுவரும் அவலம் என்பதையும், நம்மைசுற்றி சுரண்டி வாழும் ஒரு பெருங்கூட்டம் இருப்பதையும் எடுத்துக்கூறாமல் விட்டுவிடுகிறோம். உயிர் வாழ உணாவின் இன்றியமையாமை என்ன என்பதை மட்டுமே அறிந்திருக்கும் காகத்திற்கு திருட்டு பட்டம் அணிவித்து, ‘தவறு செய்தவன் ஏமாற்றப்படுவான்’ என்கிற நீதியோடு நரி செய்த ஏமாற்று வேலைச் சரி என்பதாகவே கதையை முடிக்கிறோம். காகம் புத்திசாலியானது என நிரூபிக்கும் வகையில், வடையை தன் கால்களில் கவ்விவிட்டு, பாடல் பாடி நரியை ஏமாற்றிய காகம் என இக்கதையின் நீட்சியும் உண்டு.

புத்திசாலி காகங்கள் குறித்த கதைகள், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. நீர் தேடி அலையும் காகம் ஒன்று ஆர்கிமிடீஸின் இயற்பியல் தத்துவத்தை உணர்ந்து, நீர் குறைவுள்ள ஜாடியிலே கற்களை நிறப்பி, நீர் நிறைந்த பொழுது அதைக்குடித்து தாகம் தணிந்து சென்ற கதையை குழந்தைகள் ஆர்வத்தோடும் வியப்போடும் கேட்பதைக் காண கண் கோடி வேண்டுமல்லவா? தனது குஞ்சுகளைக் கொன்ற பாம்பிற்கு பாடம் புகட்ட, மகாராணியின் முத்துமாலையை சாதுர்யமாக எடுத்து வந்து, காவலர்கள் மூலமாக பாம்பை தண்டித்த காகத்தின் வீர தீரச் செயல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ‘டிங்கிள்’ என்கிற குழந்தைகளுக்கான வரைபடங்களுடன் கூடிய இந்திய கதை புத்தகத்தில் வரும் ‘காளி காகம்’ குழந்தைகள் மனதில் அழியா சித்திரம் பெற்ற ஒரு அமர பாத்திரப்படைப்பு. நரியும் முதலையும் சேர்ந்து செய்யும் சதி வேலைகளை ஒரு தேர்ந்த துப்பறிவாளினி போல் கண்டுபிடித்து, சதித்திட்டங்களை நிர்மூலமாக்கி, எளிய காட்டு விலங்குகளை பாதுகாக்கும் தன்மை, சிறுவர்களின் நல்லுள்ளம் மற்றும் ஆளுமையை விருத்திசெய்ய ஏற்றது. வலையில் சிக்கிய மானை காப்பாற்ற வேண்டி காகம் கண்களை கொத்துவது போல் அபிநயிக்கும் கதை காகத்தின் இயல்புகளிலிருந்து பெறப்பட்ட கதையாகும்.

நோவா, மழை நின்ற பின்பு பேசாமல் வாத்துக்களையும் அன்னப்பறவைகளையும் வெளியே விட்டிருக்கலாம். அனேக நாட்களுக்கு பிறகு தண்ணீரில் சுதந்திரமாக விளையாடிய இன்பமாவது கிடைத்திருக்கும் அவைகளுக்கு. ஆனாலும், நோவா என்ன நினைத்தாரோ தெரியவில்லை காகத்தை முதலாவதாக அனுப்பினார். ஒருவேளை காகம் புத்திக்கூர்மையுடையது என்பதாலும், எந்த சூழலையும் சமாளிக்கும் திறன் பெற்றதாலும் எனக் கொள்ளலாமா? மேலும் பரிசுத்தமான புறாவைக் காவு கொடுப்பதைவிட, இரண்டு ஜோடி காகத்தில் ஒன்று போனால் நஷ்டமில்லை என நினைத்திருப்பாரோ? இந்தக் கதையில் புறாவே கதாநாயக அந்தஸ்து பெறுகின்றது. பரிசுத்தமான புறா போவதும் வருவதுமான காகத்தைப்போலல்லாமல், தன் கடமையை செவ்வனே செய்யும்பொருட்டு பறந்து சென்று, இடங்களை மேற்பார்வைஇட்டு, நீர் வடியவில்லை என உறுதி செய்தபின் நோவாவின் கைகளுக்கே திரும்பி வந்தது.  மறுபடியும் ஏழு நாட்களுக்குப் பின்னே, புறாவை அனுப்பியபோது, அது தன் அலகிலே ஒலிவ இலையை கொத்திக்கொண்டு வந்து வெள்ளம் வடிவதற்கான அறிகுறியை அறிவித்தது. இன்னும் ஒரு ஏழு நாட்கள் காத்திருந்த நோவா,  புறாவை அனுப்பிய போது, அது திரும்ப வரவில்லை. எங்கே சென்றிருக்கும்? நன்றியிழந்து காணப்பட்டாலும், புறாவை விட்டுக்கொடுக்க மனமின்றி, நோவாவும் நாமும், இது வெள்ளம் வற்றியதற்கான அறிகுறி என நம்மையே தேற்றிக்கொள்வோம். காகத்தையோ ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை.

பறவைகளில் மிகவும் அழகானது எது? மிகவும் இனிய குரல்வளமுடைய பறவை ஏது? பேசும் பறவைத் தெரியுமா? கபடற்ற பறவையின் பெயர் என்ன? பெரிய மற்றும் சிறிய பறவைகளின் பெயர்களைக்கூறு போன்ற கேள்விகளே பெரும்பாலும் பறவைகளைப்பற்றிய நமது அகராதியிலிருந்து எழுகின்றன. பறவைகளை கடவுள் ஒரு காரணத்தோடே படைத்திருக்கிறார் என்பதும், அவைகள் தத்தமது பணிகளை செவ்வனே செய்கின்றன என்பதையும் நாம் கவனிக்கத் தவறிவிடுகின்றோம். ஆக இறைவன் படைத்த காகத்திற்கு சிறுவர் அளிக்கும் முக்கியத்துவம் கூட நாம் கொடுக்காமல் இருப்பது, இறைவன் அளித்த படைப்பின் ஒரு பங்கினை உதாசீனப்படுத்துவதல்லவா?

காகத்தை துப்புரவு பறவை என அழப்பதுண்டு. துப்புரவு செய்யும் நம் சக மனிதர்களை சற்றேனும் மதிக்காத நாம், பாவம் இந்த காகத்தை எவ்வகையில்தான் முக்கியத்துவப்படுத்துவோம். இந்தக் கட்டுரை வாயிலாக காகம் நம் மனதிலிருக்கும் கசடுகளை எடுத்துப்போடுமானால் அது நமக்கு நலமாயிருக்கும்.

இயேசு காகத்தை இவ்வாறு முன்னிலைப்படுத்துகிறார். ‘காகங்களை கவனியுங்கள்; அவை விதைப்பதுமில்லை, அறுப்பதுமில்லை; அவற்றுக்கு சேமிப்பறையுமில்லை, களஞ்சியமுமில்லை. கடவுள் அவற்றிற்கும் உணவளிக்கிறார். நீங்கள் பறவைகளைவிட மேலானவர்கள் அல்லவா?’ ஆம், இயேசு தனது சிந்தனையை மிகத் தெளிவாக அறிவுறுத்துகின்றார். பழமை கொண்ட சிந்தனையோடு இயைந்து, காகம் அசுத்தமானப் பறவை எனக் கொள்ளாமல், இறைவன் அவற்றுக்கும் உணவளிக்கிறார் என்பது என்னே ஒரு உயர்ந்த எண்ணம். இறைவனே அளிக்கும் உணவு அசுத்தமானதாக இருக்க வாய்ப்பு இல்லையே! சரியாகப் புரிந்துகொண்டோமென்றால், பறவைகள் இறைவனின் படைப்பை மாட்சியுறச் செய்வன என இயேசு உறுதிப்படுத்துகின்றார். இயேசுவின் இந்த நுண்ணிய அறிவுரையோடு நாம் எலியாவின் வாழ்க்கையைப் பார்த்தோமானால் காகத்தின் பங்களிப்பு நமக்கு தெரியவரும்.

எலியா எனும் தீர்க்கன், ஆகாபுக்கு பயந்து கேரீத் எனும் நீரூற்றண்டையிலே இறை வாக்கின்படி தங்கியிருக்கிறான். போதுமான நீர் இருக்கின்றது, உணவருந்துவதற்குத்தான் ஏற்ற வழியில்லை. என்ன செய்வது? எல்லாம் இறைவன் விட்ட வழி என எலியா தன்னையே அர்ப்பணித்து இருக்கும்போது, கடவுள் எலியாவை நோக்கி, பயப்படாதே, ‘உனக்கு உணவளிக்குமாறு காகங்களுக்கு கட்டளையிட்டிருக்கிறேன்’ என் உறுதி கூறுகிறார். காகங்கள் நமக்குத்தெரிந்து உணவு தயாரிப்பதில்லை. அவ்விதமாகவே உணவை மனிதர்களுக்கு பறிமாறுவதும் பழக்கமில்லை. பாட்டி வடைசுட்ட கதையில் கூட, பாட்டி அதனைத் துரத்தியோ பாடச்சொல்லியோ வடையை வாங்கவில்லை. ஏனென்றால் காகத்தின் எச்சிலையா மனிதர்கள் தின்பது? சீய், சீய், இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக்கு வேண்டுமானால் எச்சில் வடை சுவைக்கத்தகுந்ததாய் இருக்கலாம். காகத்தைப் பொறுத்தமட்டில் குப்பைத்தொட்டியில் கிடைக்கும் அனத்துமே உயர்தர உணவக பண்டங்களே. ஒருவேளை செத்த எலிக்கறி அசைவ விருந்தாகவே அவை பாவிக்கும். எனில், எலியாவின் வாழ்வில் காகம் ஆற்றிய பணியினை கடவுள் எவ்வாறு முன்னிறுத்துகிறார்?

காகம் பகிர்ந்துண்ணும் பறவை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. பகிர்தல் மற்றும் யாரோடு பகிர்தல் போன்ற அளவுகோல்களை இறைவன் இங்கு மறு ஆக்கம் செய்கிறார். ‘இவர் பாவிகளோடும், ஆயக்காரரோடும் உணவருந்துகிறார் என்பதும், போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமாயிருக்கிறான் என்பதும் எத்துணை பக்குவமற்ற வார்த்தைகள். இறைவன் எலியாவையும் காகத்தையும் ஒரேத்தட்டில் நிறுத்துகிறார். இறையடியவரான எலியா இந்த எளிய வாழ்வை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளுகிறார். தனக்காக விதைக்காமலும் அறுக்காமலும், சேமிப்பறையும், களஞ்சியமும் அற்று, அசுத்தமான உணவாக கருதப்பட்ட (ஒருவேளை எலிக்கறி என்ற) உணவைக் காகத்தோடு பகிரத் துவங்கியது, காகங்களின் மேன்மையை பறைசாற்றாவிடிலும் பரவாயில்லை; நிறுவனங்கள், விமானங்கள், மாளிகைகள் மற்றும் உயர்தர உணவுகள் மட்டுமே தயாரிக்கின்ற சமையலறைகள் போன்ற களஞ்சிய சேமிப்பறைக் கொண்டுள்ள, கிறிஸ்து இயேசுவை வியாபாரப் பொருளாக மட்டுமேக் கொண்டு, பல்லாயிரம் மக்களைத் தவறானப் பாதையில் வழிநடத்தும் இன்றைய சில மத வியாபாரிகளின் மத்தியில், இறையடியார்களின் தியாக வாழ்வை பறைசாற்ற வல்லவை.

காட்சன் சாமுவேல்

Advertisements

குறிச்சொற்கள்:

4 பதில்கள் to “காகம்”

 1. butterflysurya Says:

  திரு ஜெ.. அறிமுகத்தால் இங்கு வந்தேன்..

  நல்லாயிருக்கு..

  காக்காவிற்கே “காக்கா” பிடிக்கிறீர்களே..??

  வாழ்த்துககள்..

  சூர்யா
  சென்னை

 2. pastorgodson Says:

  நன்றி சூர்யா!
  ஜெயமோகன் தவிர்த்து முதலில் பதில் அனுப்பிய நபர் நீங்களே.
  நகைச்சுவையோடு கூடிய உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
  காட்சன்

 3. butterflysurya Says:

  நன்றி நண்பரே..

  வாழ்த்துக்கள் ..

  சினிமா உலகம் எனது வலைப்பூ: http://butterflysurya.blogspot.com

  நேரம் கிடைத்தால் உலவுங்கள். எல்லாவிதமான நிறை / குறை சுட்டுங்கள்..

 4. Gowthaman Ramasamy Says:

  மிக அழகிய பதிவு. எனக்கும் பாட்டி வடை சுட்ட கதை ஒப்பாமல் அதை என் இஷ்டம் போல மாற்றி மாற்றி குழந்தைகளுக்கு சொல்வதுண்டு. ஆனாலும் இத்தனை நுணுக்கமான பிரச்சினைகளை யோசித்த்ததில்லை.

  நான் சிறுவனாக இருந்தபொழுது இரண்டுவகை காகங்கள் பார்ப்பதுண்டு. காகம் மற்றும் பெருந்தலை காகம். “வெறும்” காகத்திற்கு கழுத்தில் சாம்பல் நிறமாய் இருக்கும். அதிக இறகுகள் இருக்காது. பெருந்தலை காகம் கழுத்து முழுதும் கரும் இறகுகளோடு இருக்கும்….இன்று நாம் காணும் காகம் போலவே.

  இதில் மூதாதையருக்கு சாதம் வைக்கும் எல்லாரும் “நல்ல” காகம்தான் எடுக்க வேண்டும் எனவும், பெருந்தலை காகம் எடுக்க கூடாது எனவும் விரட்டுவார்கள். ஆனால் அப்பொழுதே பெருந்தலை காகம் சற்று தீவிரம் மிகுந்ததாக இருக்கும். நல்ல காகத்தை எளிதில் மிரட்டி விரட்டி உணவை உண்டுவிடும். இன்று 20 வருடத்திற்கு பிறகு என்னால் அதிகம் நல்ல காகத்தை பார்க்க முடிவதில்லை. எல்லாமே “கெட்ட” பெருந்தலை காகங்கள் தான்.

  என் தாத்தாவிடம் இதை பற்றி கேட்ட்டால் அதை சரியாக அவர் புரிந்துகொள்ளவில்லை. கண்ணுக்கு முன் டார்வினின் வல்லவன் வாழ்வான் கதை…….

  அழகிய எழுத்துக்கு நன்றி. உங்களை அறிமுக படுத்திய ஜெயமோகனுக்கும்.

  கௌதமன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: