Archive for நவம்பர், 2008

மும்பையில் துப்பாக்கி ஏந்தியவர்கள்

நவம்பர் 27, 2008

என் வயதை ஒத்த உன்னை
நண்பன் என்று அழைக்கவா?
புரட்சி செய்கிறாய் என்று உன்னை
தோழர் என்று அழைக்கவா?
அருட் தந்தை எனும் பட்சத்தில் உன்னை
மகனே என்று விளிக்கவா?

ஆயுதம் வைத்திருக்கும் நீ
யாரைக்கண்டு பயப்படுகிறாய்?
உன்  உடன்பிறவா சகோதரர்களின் உயிர்
உனது கோட்பட்டை உயிர்ப்பிக்குமா?
உனது ஒரு நாள் தீபாவளியில்
நீ தான் நரகாசுரன் என்பதை அறிவாயா?
எளிய மனிதரின் அன்றாட வாழ்வின்
வியர்வையை சுவைக்கத் தெரியாத நீ
அவர்களின்
புனித இரத்தத்தையோ
கண்ணீரையோ
தாங்கும் சக்தி உண்டா?

ஒருபோதும் கிடையாது!
நீ தோற்று விட்டாய்!
நாளை
மும்பை உன்னை
ஏளனத்தோடு பார்த்து
நகைக்கப்போகிறது

அப்போது உன் நண்பனிடம் சொல்
நமது ஆயுதம் மழுங்கிவிட்டது
உன் தோழனிடம் கூறு
நாம் வழி தவறிவிட்டோம்
உனது முற்பிதாக்களிடம் மன்றாடு
ஆயுதமே என் வீழ்ச்சிக்கு காரணம் என்று

மறவாதே!
ஒன்றுமறியா மக்கள் திரளிடம்
நீ கூறுவதற்கு ஏதுமே இல்லை!

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

பனையேறியின் வேண்டுதல்

நவம்பர் 19, 2008

கடவுளே
நெடிய பனைமரத்திற்கு மேலே தங்கியிருப்பவரே
உமது திருப்பெயர் புகழப்படுவதாக
பனங்காடுகள் உமது வருகையினால் செழிப்பதாக
தேவை நிறைந்தோர்,
உம்மிடத்தில் நிறைவடைவதுபோல்
பனைமரத்தினின்று பெறுபவைகளினால்
திருப்தி அடைவார்களாக

அன்றன்று உள்ள ஆகாரமாம் பதனீரையும், கிழங்குகளையும்
பனம்பழத்தையும் தருவீராக
எங்களுக்கு விரோதமாய் குற்றம் செய்யும்
அரசு, சந்தை, சாதீய மேட்டிமை போன்றவற்றை
நாங்கள் மன்னிப்பது போல
தினமும் பனைமரத்தை வெட்டிச்சாய்ப்பதை கண்டும்
வாளாவிருக்கும் எங்களை மன்னியும்

பனைமரத்தில் ஏறி நாங்கள் தொழில் செய்யும்போது
மரணத்துக்கேதுவான எல்லாவித அபாயங்களினின்றும்
எங்களைக் காத்துக்கொள்ளும்
குடும்பமாக உமது பனங்காட்டில் வேலை செய்யும் எங்களை
தீயவரிடமிருந்தும் காப்பாற்றும்

பனையைப்போன்ற உமது உயர்ந்த அரசும்
அதன் வைரத்தை ஒத்த உமது வல்லமையும்
தன்னையே வாரி வழங்கும் வள்ளண்மையும்
என்றென்றும் உமக்கே உரியது
ஆமேன்

தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com

குழந்தை உள்ளம்

நவம்பர் 13, 2008

பாவம் நிறை உலகு
பரமனின் கனிவு
ஏக மைந்தன் இயேசுவை
நமக்காக தந்தாரே

யூதேயாவில் சிறிதும்
எளிமையும் சிற்றூரும்
இயேசு பிறப்பெடுக்க
ஏற்ற இடமானதே

காட்டு நரிக் குழியில்
காகம் கூடக் கிளையில்
பாலன் தலை சாய்க்கவெ
இடம் ஏதும் இல்லையே

மட்டுக் கொட்டில் ஒன்றுதான்
ராஜ அரண்மனையாம்
ஏற்றுக்கொண்டார் தாழ்மையாய்
அன்பின் திருவுருவாய்

தச்சு வேலை தந்தையும்
தாயுமான மரியும்
மேய்ப்பர் ஞானியர் தூதர்
கூடிப் பணிந்தனரே

எளிமையை போற்றிடும்
எளியோரை நேசிக்கும்
கர்த்தர் துயில் கொள்கிறார்
மானிட அவதாரமாய்
எளிய உன் நெஞ்சத்தை
வாஞ்சையோடே அருள்வாய்
சமதானம் தருவார்
குழந்தை உள்ளம் பெறுவாய்

காட்சன் சாமுவேல்

தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com

யூதாஸ்

நவம்பர் 10, 2008

இயேசுக்கிறிஸ்துவின் பாடுமரணங்களை தியானிக்கும் கஸ்தி வாரங்களில் யூதாஸை மறுபடியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவது நம் மனசாட்சிக்கு உறுத்தாத விஷயமாகிவிட்டது. வாய்ப்பு கிடைத்திருந்தால் நாமே அவனுக்கெதிராய் வழக்காடி அவனுக்கு தூக்குத்தண்டனை வழங்கியிருப்போம். கோவலனைப்போல் அவனுக்கு ஒரு மனைவி இருந்திருந்தால் நம்மிடம் வந்து வெள்ளிக்காசுகளை விசிறி அவனுக்கக வாதாடியிருப்பாள். யாருமேயற்ற அவனது தனிமை மற்றும் மவுனம் நம் மனசாட்சியை அறைந்து எழுப்பவில்லையா? இயேசுவின் சினேகிதன் நமக்கு எப்படி எதிரியானான்? சற்று பதட்டப்படாமல் யூதாஸை நண்பனாக பாவித்து சிறிது மனம் விட்டு பேசினோமானால்……

யூதா என்கிற எபிரேய பெயரின் கிரேக்க வடிவம் தான் யூதாஸ். நன்றி கூறத்தக்க என்கிற அர்த்தம் பெறும் பெயராக இருப்பினும், நன்றி இழந்து செயல்பட்டு விட்டானோ என்கிற ஐயத்தின் அடிப்படையிலே நாம் யூதாஸை கல்நெஞ்சனாக காண முற்படுகிறோம். எந்த ஒரு தீர்ப்பும் தீரவிசாரிக்காமல் அளிக்கப்பட்டால் அது தவறாக மாறிவிட வாய்ப்புள்ளது. ஆகவே யூதாஸ் என்கிற சீஷனின் பின்புலத்தை ஆராய்ந்து குற்றத்தின் பின்னணியத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது நமது கடமையாகிறது.

யார் அவன்? எந்த ஊரான்? எப்படி சீஷனானான்? அவன் பொறுப்பு என்ன? அவன் சிந்தனை எத்தகையது? எங்கே தவறு நிகழ்ந்தது? ஏன் தவறு நிகழ்ந்தது? மேலும் அவன் செய்தது மன்னிக்க கூடிய குற்றமா?மேற்கண்ட கேள்விகளுக்கு நம்மால் பதில் பெற முடியுமானால் அதுவே நமக்குத் தேவையான செய்திகளை சொல்லி விட வாய்ப்புண்டு.

யூதாஸ் யூதா கோத்திரத்தைச் சார்ந்தவன். எப்படி நம்மூரில் குமரி, நாஞ்சில் என பெயரின் முன் சிலர் அடையாளம் பெற்று காணப்படுகிறார்களோ அது போலவே யூதா ‘ஸ்காரியோத்’தைச் சார்ந்தவன் என்பது யூதாஸ்காரியோத்து என்பதன் அர்த்தம். எப்படி சீஷனானான் என்பதற்கு ஏற்ற தெளிவான விளக்கங்கள் நேரடியாக திருவிவிலியத்தில் காணக்கிடைக்கவில்லை எனினும் நாம் நிதானித்து அறியதக்க ஏராளமான விஷயங்கள் திருமறையில் சிதறிக்கிடக்கின்றன.

“என் பின்னே வாருங்கள்” என இயேசு யூதாசையும் ஒரு காரணத்தோடேயே அழைத்திருக்க வேண்டும். அந்த அழைப்புக்கு மனுஷனை பிடிக்கிற நோக்கமும் இருந்திருக்க வேண்டுமல்லவா? எனில் யூதாஸ் அழைக்கப்பட்டவனேயன்றி அழையா விருந்தாளியான எதிராளி அல்ல என்கிற தெளிவு பிறக்கின்றது.

 
‘அவன் திருடனானபடியால்’ என்கிற பதம், அவன் வாழ்வின் ஆரம்பப்பகுதியாக இருந்திருக்கலாமேயன்றி அவன் இயேசுவை பின் தொடரும் போது நிகழும் ஒன்றாக பார்ப்பது ஏற்புடையதாகாது. மட்டுமல்ல, இயேசுவின் சீடர்கள் அவரை சார்ந்திருக்கும் போது தவறான செயல்களில் ஈடுபட்டதுமில்லை அவ்வாறு அவர்களை அவர் பயிற்றுவிக்கவுமில்லை (இயேசுவை பிடிக்க வந்த போது காதற வெட்டிய நிகழ்வு திட்டமிடப்படாதது) ஒரு ஒழுக்கமுள்ள சீஷத்துவத்தை இயேசு அவர்களுக்கு கற்பித்திருக்க மாட்டாரா என்ன! மேலும் சகேயுவை இயேசு அழைத்த போது,ஒரே நாளில் அவன் பெற்ற மாற்றம் நாம் எல்லோரும் அறிந்தது. எனவே யூதாஸ் பெற்ற மாற்றம் உண்மையானது எனவும், அவன் தன் பழைய திருட்டு வாழ்வை விட்டொழிந்த பின்பே அவரை பின் தொடர்ந்தான் என்பதும் நாம் கண்டறியும் உன்மைகள்.

எனினும் சீஷர்களுக்குள்ளே ஒற்றுமையுணர்வு சீர்குலைந்ததை வைத்து பார்க்கும் போது,ஒரு உண்மை வெளிப்படுகின்றது. பணப்பெட்டியை வைத்திருக்கும் பொறுப்பை ஏற்க நினைத்தவர்களுக்கு அது கைகூடாமற்போனதும், யூதாஸின் பழைய வாழ்க்கையை கிளறி, அவனை சிறுமைப்படுத்த அவர்கள் கையாண்ட ஒரு பிரயோகமாகவே நாம் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் புதிய ஏற்பாடு எழுதப்பட்ட காலகட்டம், சுவிசேஷகர்கள் யூதாசை வில்லனாக அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ற இடைவளி கொண்டது என்பதை நாம் கண்டுகொள்ளலாம்.

இயேசு அவனை நம்பி பணப்பையைக் கொடுத்ததற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும். “திருடனின் கையில் சாவியைக் கொடுப்பது” என்று நம்மூரில் ஒரு வழக்கச் சொல் கூட இருக்கிறதே! இயேசுவோ யூதாசுக்கு தன்னம்பிக்கை வரவும் அவன் திருந்திய வாழ்வை மற்ற சீடர்களும் காணும்படியாக இவ்வாறு செய்திருக்க வாய்ப்புக்கள் வளமாக  இருக்கின்றது.

மேலும் நாம் உற்று நோக்கதக்க, அவன் பொறுப்பை சார்ந்த பல அரிய குணங்கள் திருமறையில் காணக்கிடைக்கின்றன. பணத்தைச் சிக்கனமாக செலவு செய்திருக்கிறான் (யோவான்:12:5) எனும் போதே அவன் நம்பிக்கைக்குரியவனாக பரிமளிக்கின்றான், கூடவே குறித்த நேரத்தில் தேவையானதை வாங்கிவர செல்பவனாயிருக்கிறான், எல்லாவற்றிற்கும் மேல் தரித்திரர் மீது அக்கறையுள்ளவனாய்க் காணப்படுகிறான் (யோவான்:18:29). ஆகவே வேத ஆதாரங்கள் அவன் பணத்தை கையாடல் செய்ததை உறுதிப்படுத்தாதவரை நாம் அவனை சந்தேகிப்பது முறையாகாது.

யோவான் 12ம் அதிகாரத்தில் நடக்கும் சம்பவம் சற்று விசித்திரமாகவும் ஆழ்ந்த கேள்விகளை தொக்கியும் நிற்கிறது. சம்பவம் இது தான். இயேசுவை அபிஷேகம் பண்ண மரியாள் எனும் பெண் விலையேறப்பெற்ற நளதம் எனும் தைலத்தை கொண்டு வந்து அவரது பாதத்தை அபிஷேகம் பண்ணுகிறாள். மற்ற சீஷர்கள் அருகிலிருந்தும், யூதாசின் பார்வை பொருளாதாரம் சார்ந்த சமூகவியலாக உருவெடுக்கின்றது.

இத்துணை விலையுயர்ந்த பொருள் காலடியில் ஒன்றுக்கும் உதவாமல் வீணாய்ப்போவது, பணத்தை நியாயமாக செலவழிப்பவர்களுக்கு கவலையளிப்பதாகவே இருக்கும்.இதை விற்று ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என அவன் வினவுவதை யாரும் தவறாக எடுத்து கொள்ள இயலாது ஏனென்றால் அதை அவனுக்குக் கற்பித்ததே இயேசு தான்! ஆகவே தான் அவர் அவனுக்குத் தன் நிலைப்பாட்டைப் புரியவைக்க முயற்சிக்கிறார். தன் மரணத்துக்கு ஏதுவாக அவள் இதைச் செய்கிறாள் என அவர் கூறியும் அவனால் அதை புரிந்து கொள்ள இயலவில்லை. 
இந்த புரிதல் வேறுப்பாட்டைக் கொண்டு நாம் எந்த தவறான முடிவுக்கும் வந்துவிட முடியாது, ஏனென்றால் இயேசுவின் பிற சீஷர்கள் கூட அவரை புரிந்து கொள்ளாத சந்தர்ப்பங்கள் அனேகம் உண்டே! இவ்வாறாகவே யூதாசும், இயேசுவின் பதிலில் திருப்தியடையாமல் தன்னை அவர் இகழ்ந்ததாக கருத வாய்ப்புள்ளது. இந்த இடமே நாம் யூதாசின் சுயரூபம் வெளிப்படும் இடமாக நாம் கருத வேண்டும்.சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் தான்  அறிந்துகொண்ட ஒரு நல்ல கொள்கையில் அரிச்சந்திரன் போன்று யூதாசும் பிடிவாதமாக நிற்கிறான்.  சந்தர்ப்பத்தைக் கணக்கிடாமல், கொள்கையைக் கற்றுக்கொடுத்தவரே அதை மீறுவதைப்பார்த்து அவன் உணர்ச்சி மயமாகி நிற்கிறான்.
மேற்கூறியவற்றை மையமாக வைத்துப்பார்க்கும் போது, யூதாஸ் இயேசுவை காட்டிக்கொடும்கும் நிலைப்பாட்டை நாம் புரிந்துகொள்ள வழி வகுக்கின்றது. அவனது முத்தமிடும் தன்மை கலச்சாரம் சார்ந்த ஒன்றாக இருப்பினும், அவன் போல் இயேசுவை முத்தமிடுவோர் உணர்ச்சி மேலீட்டாலே அவ்வாறு செய்வதை நாம் கண்டுகொள்ள முடியும். யூதாஸ் உணர்ச்சி மிக்க ஒருவனாக தன்னை இங்கே அடையாளப்படுத்துகிறான். 

உணர்ச்சிவசப்பட்டு செய்கின்ற காரியங்களின் விளைவு நல்ல முடிவைத் தரவல்லதல்ல என அவன் புரிந்துகொள்ளுகிறான். எனவே, தான் செய்த தவறை எண்ணி மனஸ்தாபப் படுகிறான். தான் பெற்றுக்கொண்ட காசை திரும்பக்கொடுத்தாவது இயேசுவை மீட்டுவிடலாம் என்று மனப்பால் குடித்து தேவாலையம் நோக்கி விரைகின்றான். “குற்றமில்லதவரைக் காட்டிக்கொடுத்தேன்” என தேவாலயத்தில் வைத்து தைரியமாக அறிக்கையிடுகிறான்.

இந்த சூழ்நிலையில், ப்ரதான ஆசாரியன் அவன் கூறியதை ஏற்றுக்கொண்டிருந்தால் கதையே வேறு விதமாய் மாறியிருக்கும் (அவர்களைப் பொறுத்தவரை யூதாஸ் ஒரு டிஸ்போஸிபிள் ப்ளேட்). அந்தோ பரிதாபம், யூதாஸின் யூகம் அங்கே தவறாகிவிடுகின்றது. அவர்களோ அவனைப்பார்த்து “அது உன் பாடு” என்றதும் நொறுங்கிவிடுகிறான்.  தான் ஒரு கறிவேப்பிலை போல் பயன்படுத்தப்பட்டதை எண்ணி துடி துடிக்கிறான்! காலம் கைமீறிப் போய்விட்டதை எண்ணி பதைபதைக்கிறான்.

கையிலுள்ள காசால் எங்காவது சென்று, காணி நிலம் வாங்கியாவது வாழ்ந்திருக்க முடியும் அவனால். ஆனால் தனக்கு அது தகாது என உணர்ந்து, அதை தேவாலயத்தில் விசிறியடிக்கிறான். அதை கவனமாக பொறுக்கியெடுத்த பிரதான ஆசாரியர், அதைக்கொண்டு குயவனின் நிலத்தை வாங்கும் நிதானத்தில் இருக்கும்போது, தனது தவற்றை உணர்ந்த யூதாஸ் குற்றத்தின் ஆழத்தை உணர்ந்தவனாகிறான். மன்னிக்கும் கருணையுள்ளம் கொண்டவரிடம் கூட சொல்லிக்கொள்ள தைரியம் அற்று, கூனி குறுகி தனது துயர முடிவை தெரிந்துகொள்ளுகிறான்.

இந்த முடிவை நாம் நியாயப்படுத்துவது தவறாகிவிடலாம் எனினும், இதை யூதாசின் முடிவாக அல்லாமல் இன்றைய சூழ்நிலையில் தற்கொலை செய்துகொள்ளும் பலவீன இதயம் கொண்டோர் மற்றும் ஒதுக்கப்பட்ட நபர்களின் மனநிலையோடு பொருத்திப்பார்க்கும் கடமை நமக்கு உண்டு. எவரொருவர் தற்கொலை செய்துகொண்டாலும் அதற்கு முக்கிய காரணம் சமூக நிராகரிப்பே. தான் தவறு செய்துவிட்டோம் எனவும் சமூகம் தன்னை  எற்றுக்கொள்ளாது என்ற நிலையிலும் யூதாஸ் இந்த துயர முடிவை மேற்கொள்ளுகிறான். சொல்லப்போனால் அவனது பலவீனமான இதயமும், உணர்ச்சிமயமான அணுகுமுறையும், சமூக நிராகரிப்புமே அவனை இந்த முடிவுக்கு நேராய் உந்தித் தள்ளியது.

வாழ்க்கையில் உணர்ச்சிவசப்பட்டு தவறிழைத்தவர்களை நாம் அரவணக்கத் தவறினோமானால், அன்பை எதிர்நோக்குபவர்களை உதாசீனம் செய்தோமென்றால், அவர்கள் செய்யத்துணியும் தற்கொலைகளுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

காட்சன் சாமுவேல்

தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com

ஆயன்

நவம்பர் 6, 2008

நான் ஒரு  ஆயனைக் கண்டேன்
அவன் வாசல் வழியாக நுழைகிறான்
கையில் ஒரு தடி, அதைக் கொண்டே ஆடுகளைக் காக்கிறான்
அவன் முன் செல்ல, பின்னே அனேகம் ஆடுகள்
புல்லுள்ள இடங்களில் ஆட்டை மேய்க்கிறான்
நல்ல தண்ணீரை அளிக்கிறான்
காணமற் போன ஆட்டை சிரத்தையோடு தேடுகிறான்
ஆடு அவன் சத்தத்தை அறிந்திருக்கிறது
கண்டுபிடித்தபோது மகிழ்வடைகிறான்
நான் ஒரு நல் ஆயனைக் கண்டேன்

நானே நல் ஆயன்  என்றான் ஒருவன்
பின்வாசல் வழியாக நுளைந்தபடியே
அவனோடு ஒருசில கைத்தடிகள், அதைக்கண்டே ஆடுகள் நடுங்குகின்றன
அவன் முன்னேறியபடி இருக்க, ஆடுகள் பின்தங்குகின்றன
உணவற்ற இடங்களில் அவை ‘பலியாக்கப்படுகின்றன’
‘தண்ணியே’ அவைகளுக்கு ‘காட்டப்படுகின்றன’
குழப்பமான அறிக்கைகள் வடிவில் மெய்ப்பனின் குரல்.
திக்கற்றுத் திரியும் ஆடுகள்,
வழிதெரியாமல் தொலைந்து போகின்றன,
கண்டும் காணாமலும் மகிழுகிறான்,
கிடைத்ததைச் சுருட்டும் திருடனாக!

காட்சன் சாமுவேல்

நிர்வாணம்

நவம்பர் 4, 2008

சமூக வாழ்க்கையில் நாம் பொருள்தேடும் விஷயங்களுள் நிர்வாணம் என்பது மிகவும் முக்கியமான மற்றும் மர்மமான ஒன்று! நிர்வாணத்தை நானாக இருந்த, இருக்கும் மற்றும் அடையும் நிலைகளை குறிப்பதாக புரிந்து கொள்ளலாம். மேலும் நிர்வாணம் நிரந்தரமானது, விரும்பத்தக்க ஒன்று, தன்னலமற்ற தன்மையுடையது, பிறர் நலன் பேணிக்காப்பது, உலக சுழற்ச்சியின் ஆதாரம் என இன்னும் பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். இறைவன் உலகத்தை நிர்வாணமாக படைத்து, ரசித்து, வாழ்த்தி நிர்வாணமே நீடிய வாழ்விற்கு ஏற்றதென உணர்த்தியது நம் கண்களுக்கு மறைவாக போயிற்று. நிர்வாணத்தைக் குறித்த எண்ணம் நம்மை நேராக பாலியல் சிந்தனைக்குத் தூண்டுவதாக அமைவதன் காரணம் என்ன? என்ற கேள்வி எழும் போது, நாம் அவ்வாறாக புரிந்து கொள்ள பழக்கப்பட்டுள்ளோம் என்பதே சிறந்த பதிலாக அமையமுடியும். நிர்வாணத்தைக் குறித்த இத்தகைய மேலோட்டமான சிந்தனையை மாற்றிவிட்டு சற்று ஆழமான உண்மைகளை தேட முற்படுவது நிர்வாணமாக நம்மைப் படைத்த கடவுளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய மரியதையாகும்.இறைவனின் படைப்பே நிர்வாணத்தின் மேன்மையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. தமது சாயலில் மனுக்குலத்தைப் படைக்கும் போது கடவுள் தன்னையே வெளிப்படுத்துகிறார்! குறிப்பாக தன்னை மூடிமறைக்காத, வெளிப்படையான ஒருவரே நம் எல்லோருடைய கடவுளாக இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. கடவுளின் நிர்வாணம் உடல் சம்பந்தப்பட்டதாகவோ சிந்தனை சம்பந்தப்பட்டதாகவோ இருக்கலாம், இரண்டுமாகவும் இருக்கலாம் அல்லது வேறெந்த நிலையிலாவது இருக்கலாம். எப்படியிருந்தாலும் இறைவன் நிர்வாணியாக இருப்பது உறுதி.

ஆடை என்பது தவிர்க்க முடியாத ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.ஏன் அணிகிறோம் என்ற கேள்விக்கு ‘எல்லோரும் அணிகிறார்கள்’ என்ற ஒரே வாதத்தைத் தவிர நம்மிடம் எந்த தடயமும் இல்லை. சொல்லப்போனால் உடை நம்மில் ஒரு பாதியாகிவிட்டதாகக் கருதுகிறோம். உண்மை அதுவல்ல “நாம் சுயம் சார்ந்தவர்களாக இருக்கிறோம்”என்பதே அதன் பொருள். நம்மைச் சுற்றி எல்லோரும் நான் எனக்கு என பிறர் நலன் நோக்காது எடுத்துக்கொள்ளும் போது, நாமும் நமக்கானவற்றைப் பொறுக்கிக்கொள்ள வேண்டும் என களமிறங்குகிறோம். எடுத்தவற்றையும் நம்மையும் மறைக்க நம்மாலான பிரயத்தனங்கள் எடுக்கிறோம். ஆனால் நிர்வாணியான இறைவனை தரிசிக்க முடியாமல் தவிக்கிறோம். எதிர் பாலினம் இறைவனை சந்திக்கத் தடையாயிருக்குமென தனித்து நின்று பிரார்த்தனை செய்கின்றோம். முடிந்தவரை அவர்களை தலை முதல் கால்வரை மூடி நடமாடும் பொருட்களாக ஆக்கிவிட்டோம். இந்த ஆடை சிறைக்குள் இருப்பவர்கள் எழுதும் நியாயங்கள் இறைவனின் சட்டபுத்தகத்தில் செல்லாது என்பதை புரிந்துக்கொள்ளுவதில்லை.

அழகியலை விரும்புபவர்கள் அனைவரும் நிர்வாணத்தை ஏற்றுக் கொள்ளுகிறார்கள். நிர்வாணம் வளைவுகளையும், உயரங்களையும் ஆழ அகலங்களையும் உடையது. ஆனாலும் அவைகளில் துளியேனும் பாகுபாடு காணப்படுவதில்லை ‘தலை சிறந்தது’ என்றும் ‘கால் தூசி’ என்றும் சொல்லுவது நம் அறியாமையின் வெளிப்பாடு மட்டுமே! ஏனென்றால் நிர்வாணம் என்பது மனிதக்குலத்துக்கு மட்டுமே உரித்தான ஒன்றல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கும் உரித்தானது. வானம், பூமி, கடல், செடி, கொடி, மரம், பறவை, மிருகம், ஊர்வன என எல்லாம் நிர்வாணமாக இருக்கின்றன. இதற்கு ஈடான அழகை நாம் எதையும் அணிந்து மெருகூட்டிட இயலாது என்று தெரிந்தும் நாம் அதை தொடருகிறோம். இந்த அழகிய நிர்வாணத்தை நாம் அனுபவிக்க பழகியிருக்கிறோமா அல்லது அழிப்பதற்கு துவங்கியிருக்கிறோமா? என்ற கேள்வி எழுகிறது. உலகின் மிகப்பெரிய சந்தோஷமாக நான் கருதுவது நிர்வாணமாக இருப்பது தான்! நிர்வாணமே உறவுகளை பெலப்படுத்துகிறது. ஜாதி, மதம், நிறம், மொழி எல்லவற்றையும் தாண்டிய ஒரு மகோன்னத நிலையை அது பெற்றிருக்கிறது. இருபாலினரும் நிர்வாணம் தரிக்கும் போது தானே ஒன்றாகின்றனர்? தாய் தான் பெற்றெடுத்த குழந்தையின் நிர்வாணத்தை ரசிப்பதற்கு, என்னாலும் படைக்க முடியும் என்ற இறைவனை அடுத்த நிலையை அடைந்த மகிழ்விற்கு  ஈடான சந்தோஷம் உலகில் உண்டா? இல்லறத்தில் மட்டுமல்லாது துறவறத்திலும் நிர்வாணம் உன்னதமான நிலையைக் குறிப்பதாக அமைகிறது. இல்லறத்தில் நானும் நீயும் ஒன்று என்ற கோட்பாடே துறவறத்தில் நானும் இறைவனும் ஒன்று என்பதாக இருக்க முடியும்? வாழ்க்கை என்பது நிர்வாணத்தில் துவங்கி அவ்வறே முடிகிறது. இடைப்பட்ட நேரத்தில் நாம் நிர்வாணத்தைக் காயப்படுத்திக்கொண்டிருக்கிறோம். 

 நிர்வாணம் ஏற்றத்தாழ்வுகளை துடைத்தெறிய இறைவன் தந்த வரம். மனிதன் இந்த வரத்தைக் கூறுபோட்ட விதம் மிகவும் கொடூரமானது. இறைவன் கொடுத்த நிர்வாண வரத்தை கெடுத்தது, நாம் மேற்கொள்ளும் தவறான காரியங்கள் தாம்.  தவறான செயல்களை மட்டுமே நாம் மூடி மறைக்க எத்தனிக்கின்றோம். இறைப்படைப்பில் தவறான காரியங்கள் இருக்கக்கூடுமோ? அல்லவே? நிர்வாணம் என்பது எப்போது தவறான ஒன்று என்ற எண்ணம் வந்ததோ அப்போதே நாம் அதை மூடி மறைக்க எத்தனங்கள் எடுக்க ஆரம்பித்துவிட்டோம். விளைவு? இன்று நாம் நம் உடலை மட்டும் மறைக்காமல் இறைவன் நமக்கு அருளிய விசாலமான மனதையும் மறைக்கத் துவங்கிவிட்டோம்.

மனுக்குலத்தின் வீழ்ச்சி  எப்போதும் தன்னை மறைத்துக்கொள்ளுவதினாலே ஏற்படுகின்றது என்பது என்  கணிப்பு. மறைத்துக்கொள்ளுதல் பகைமையை வெளிப்படுத்துகின்றது, தோல்வியை ஒப்புக்கொள்ளுகிறது, பயத்தைக் காட்சிப்படுத்துகின்றது, ஒப்புறவை புறந்தள்ளுகிறது. மறைத்துக்கொள்ளுதல் தனிமைப்படுத்திக்கொள்ளும் அவலம். அது கலாச்சார அபாயம். சாதி, சமயம், நிறம், நாடு, கல்வி, கலாச்சாரம், தொழில், மொழி, கட்சி முதலானவற்றைக் கொண்டு நம்மை மறைக்க முயலுகின்றோம். இத்தகைய மறைவு வாழ்க்கை நம்மை எத்துணை இடர்களுக்குள் இட்டுச்சென்றுள்ளது என்பதைப் புரிந்துகொண்டால், வாழ்க்கை ரம்மியாமானதாக மாறிவிடும்.

நிர்வாணம் கற்போடு இருக்கின்றது. நாம் தான் அதைக் கட்டுப்பாடுகளால் கற்பழிக்கின்றோம். நீயும் நானும் நிர்வாணமாயிருபோம் என்பது உயரிய சமதர்மவாதம். உலகம் முழுமைக்கும் இறைவன் கொடுத்தருளிய இந்த சித்தாந்தத்திற்கு எதிராய் நாம் மாறிவிட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்துகொள்ளத் தவறிவிடுகின்றோம். நான் மறைத்துக்கொள்ளுவேன், நீ நிர்வாணமாய் இருக்கவேண்டும் என்பது நிர்வாணத்தை அவமானப்படுத்தும் செயலாக அல்லாமல் வேறென்னச் சொல்ல? இன்று நிர்வாணப்படுத்துவதே நம் வேலையாகிப்போனது. பிறரின் நிர்வாணம் பாலியல் கிளர்ச்சியையும், கிளுகிளுப்பையும் அள்ளித்தரும் விஷயமாகிப்போனது. பிறரது நிர்வாணம், கண்டுகொள்ளப்படாததும், பரிகசிப்புக்குரியதாகவும் அமைந்து விட்டது. நம்மை மறத்துக்கொண்டு பிறரை நிர்வாணப்படுத்துவது இன்றைய நாகரீகத்தின் உச்சவளர்ச்சியாக இருக்கின்றது. ஓவியம், புத்தகம், நிழற்படம், திரைப்படம், தொலைக்காட்ச்சி, இணையதளம், ஏன் செல்பேசி கூட உபயோகித்து காலமாற்றத்திற்கு ஏற்ப நிர்வாணத்தை வியாபாரப்படுத்தும் நாம் – உடையெனும் சமூகப்போர்வைக்குள் நம்மை ஒளித்துக்கோண்டு இவைகளைச்செய்வது குற்றத்தின் உச்சமல்லவா? நிர்வாணத்தை உணரவோ அனுபவிக்கவோ கொண்டாடவோ தெரியாதவர்கள் பிறரை நிர்வாணப்படுத்துவது பெருங்குற்றமல்லவா? நம்மால் புரிந்துகொள்ள இயலாத நம்மைச்சார்ந்த பல விஷயங்கள் இருக்க, பிறரை நிர்வாணப்படுத்தி  புரிந்துகொள்ள முற்படுவது பிற்போக்கான எண்ணமல்லவா? நிர்வாணம் ஆவோம் என்பது ஒருமித்தக்குரலாக ஒலிக்கச்செய்வதை விட்டுவிட்டு, நிர்வாணப்படுத்த முற்படுவதால் என்ன லாபம்? நம்மேல் உள்ள பாரங்களை பகிர்ந்துகொள்ள ஒரு தோள் தேவைபடலாமே அன்றி இன்னொருவர் தலையில் ஏற்றுவது தவறல்லவா? நிர்வாணாம் பிறரை ஏற்றுக்கொள்ளும் விசாலமன ஒன்றாய் இருந்தும், நாம் குப்பை இடும் பகுதியாக அதை மாற்றுவது நிர்வாணத்தின் தலையில் பாரத்தை ஏற்றுவதாகாதா? நிர்வாணம் பிறரை ஏற்றுக்கொள்ள இடம் தர வேண்டுமே அன்றி திணிக்கப்படக்கூடாதல்லவா? 

நிர்வாணம் ஏற்படுவதர்க்கான காரணங்கள் என நான் கருதுவது – போர், வறுமை, வன்முறை என பட்டியலிடலாம். சமயம் கூட தன் பங்கிற்கு பல பெண்களை நிர்வாணப்படுத்தியிருப்பது மிகவும் வேதனையான விஷயம். கூடவே, இன்று நாம் நமது பங்களிப்பாக நமக்கடுத்தவர்களை நிர்வாணிகளாக வைத்திருக்கிறோம். நிர்வாணியாக நம் அயலார் மரிக்கையில், துணிகளைக்குவித்து வைத்திருக்கும் நாம் யார்? போர்முனையில் கையில் அகப்பட்ட எளியவர்களை நிர்வாணப்படுத்துவதுதான் நமது வெற்றிக்களிப்பா? வெறும் களிப்பை அள்ளித்தரும் சாதனமாக நிர்வாணம் காணப்படுவதும், பேணப்படாது சுரண்டப்படுவதும் எவருடையத் தவறு? நிர்வாணமே கலச்சாரமாக வாழும் பழங்குடியினரை காட்டுமிராண்டிகள் என்பதும் முதிர்ச்சியின்மை அல்லவா? கடவுளின் திருப்பெயரைச்சொல்லியே பணம் சம்பாதிக்கும் இக்காலத்திலே, இறைச்சாயலான மனித குல நிர்வாணத்தைக் காட்டி தொழில் செய்வது ஒன்றும் ஆச்சரியமில்லைதான். நமது பணம் மற்றும் பலம் கொண்டு நாம் நிர்வாணத்தை அணுகும்போது அது தன் தெய்வீக நிலையை இழக்கின்றது. 

‘அவரது வஸ்திரத்தின் மேல் சீட்டுப்போட்டு அதை பங்கிட்டுக் கொண்டார்கள்’ எனும் வசனமே இயேசுவை சிலுவையில் நிர்வாணமாக அறைந்தார்கள் என்பதற்குச் சான்று.  மேலும், நிர்வாணமே சிலுவையில் தொங்குபவர்களுக்கு உடை அமைப்பாக இருந்ததை யாரும் மறுக்கவியலாது. இயேசுவின் நிர்வாணம் நமக்கு அதிர்ச்சியூட்டுவதாக இல்லையா? அவரின் நிர்வாணம் நம்மை எந்தவித சிந்தனைக்கு நேராக வழிநடத்துகிறது? 

இயேசு சிலுவையில் தொங்கும்போது அவரது தாய், சீடர்கள், வழிப்போக்கர்கள், அரசுக் காவலர்கள், மதத்தலைவர்கள் என ஒரு கலவையான மக்கள் திரள் அந்தக் காட்சியப் பார்த்துக்கொண்டிருந்தனர். அவரது நிர்வாணத்தைக் குறித்த சிந்தனை அனைவருக்கும் ஒர்ன்றுபோல் இராது என்பது தெளிவு. சிறுமைப்படுத்துவோர் அனேகராயும், சிறுமையுற்றோர் வெகு சிலராயும், வேதனையுற்றோர் சொற்பமாயும் இருந்திருப்பர். இவ்விரண்டு மனநிலையிலும் மக்கள் சார்ந்திருப்பதனால் இறைவனின் நிர்வாணத்தை நாம் புரிந்துகொள்ளப்படவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. “இறைச்சாயலில் உள்ளவர்கள் நிர்வாணம் ஆகும்போதும் ஆக்கப்படும்போதும் நாம் யாரைக் காண முற்படுகிறோம்! மானுடத்தையா? இறைவனையா?”

காட்சன் சாமுவேல்

தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com


%d bloggers like this: