கச்சி வெளையாட்டு


சிறு வயதில் நான் கற்றுத்தேர்ந்த விளையாட்டுகளில் முதன்மையானது “கச்சி” தான். “கோலி” எனும் சிறு கண்ணாடி குண்டுகளையே எங்கள் ஊரில் “களச்சி”  என்றும், “கச்சி” என்றும் அழைப்பர். காலம் கடந்து போய், நாடும் நகரமும் மறந்துவிடுவதற்குள் என் பணி “கச்சியை” உச்சி முகர்வதே என உணர்ந்து இதை எழுதுகிறேன்.

மார்த்தாண்டத்தில் எனது தந்தை போதகராக இருக்கும்பொழுது, எங்களுக்கு என சில கட்டுப்பாடுகள் உண்டு. போதகருடைய பிள்ளைகள் பிற பிள்ளைகளுடன் சேரக்கூடாது என்பதே அதில் தலையாய ஒன்று. கோயில், வீடு என்பதாக மட்டுமே எங்கள் வாழ்க்கை இருந்தது. நம்ப மாட்டீர்கள் எனது அண்ணன் ஆலயத்துக்கு வரும் தனது வயதைஒத்த பதின்வயதினருடன் கிரிக்கெட் விளையாடியதற்காக அம்மாவிடம் அடி வாங்கியிருக்கிறார்கள். விலையுயர்ந்த  கிரிக்கெட் பாட், ஸ்டெம்ப் எல்லாம் அடுப்புக்குள் போவதை நான் கண்ணாரக் கண்டிருக்கிறேன். நண்பர்களுடன் அண்ணன் விளையாடிக்கொண்டிருக்கும்போது அம்மா சிறு குச்சியுடன் கிரவுண்டுக்குள் வந்தால் போதும், அனைவரும் ஏழு திசைகளில் ஓடி மறைவார்கள்.

இந்த சூழ்நிலையில் நான் “கச்சி” விளையாட கற்றுக்கொண்டேன். கிரிக்கெட் அளவிற்கு எந்த முன் ஏற்பாடும் தேவையற்ற ஒரு விளையாட்டு ஆகையால், யாராலும் வெகு எளிதாக கற்றுக்கொள்ளவும் விளையாடவும் முடியும்.  சர்ச்சுக்கு வரும் சிறுவர்கள் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருக்கும்போது,  முட்டுக்கு கீழே சுரீர் என ஒரு அடி விழும். திரும்பிப் பார்க்காமலேயே சொல்லி விடலாம் அது அம்மா தான் என்று. நொண்டி நொண்டி, ஓட ஓட கால்களைத் தடவியபடியே வீடு நோக்கி அம்மா வருவதற்குள் அடைந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அப்பா வருவதுவரை வெளியே தான் நிற்கவேண்டும். ஊர் சுற்றிவிட்டு வந்திருக்கிறேன் என்பதற்கு அடையாளம்.

அப்பா வந்தவுடனே நான் பசியோடிருக்கிறேனா என்ன என்பதை பார்க்க மாட்டர்கள், வெளியே நிற்பதற்கான காரணத்தை புரிந்துகொன்டு என்னிடம் பேசாமல் வீட்டிற்குள்ளே சென்று விடுவார்கள். வெளியே அவர்கள் வரும்போது மரச்சீனி அல்லது கீறிப்போட்ட தென்னைமட்டை இருக்கும்.  அப்பா என்று கூப்பிட திராணி இல்லாதவரைக்கும் அடிவாங்கி, கால்கள் வீங்கி, கண்ணீருடன் நிற்கும்போது பாசத்துடன் அம்மா வந்து தடுத்து வீட்டிற்குள் கூட்டிச்செல்வார்கள்.

மூன்று அண்ணன்மார் இருந்ததால் அவர்களைப்பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக “கச்சி வெளையாட” கற்றுக்கொண்டேன்.  அப்பா அம்மா இல்லாத நேரம் பார்த்துதான் விளையாடுவோம். மண்ணில் விளையாடக்கூடாது, அதற்கும் அடி உண்டு. எனக்கு கச்சிமீது அதீத காதல் பிறந்துவிட்டது. வீட்டு முற்றத்திலேயே விளையாடலாம், அம்மா அப்பா வருவதைப்பார்த்தால் நல்ல பிள்ளை போல் நேராக வீட்டிற்குள் போய் விடலாம்.

அப்போது ஐந்து பைசாவிற்கு ஒரு “கச்சி” கிடைக்கும், எப்படியாவது பத்து பைசா தேற்றினால் இரண்டு கச்சி வாங்கி விளையாட துவங்கலாம். மார்த்தாண்டம் மெயின் ரோட்டிலே உள்ள பழக்கடையிலே வித விதமாக கச்சி கிடைத்தாலும், அந்த சாலையைக் கடப்பது இல்லை. வடக்குத்தெருவிலே ஒரு தாத்தா பைபிள் கடை வைத்திருந்தார். அவரிடம் வண்ணங்கள் அதிகம் உள்ள கச்சி இருக்காது ஆனால் அதுதான் எனக்கு வசதியும் அடுத்ததும். ஒரு கச்சி வாங்கினால் போதும். ஒன்பது கச்சிகளை விளையாடி சம்பாதித்துக்கொள்ளலாம்.

விளையாட தயாராகும் முன்பு மூன்று குழிகள் எடுக்கவேண்டும். ஒவ்வொரு குழிக்குமிடையே சுமார் ஐந்து ஜாண் இடைவெளி இருப்பது நல்லது. கால்களை ஒன்றன்முன் ஒன்றாக  வைத்து அளப்பதுவே ஸ்டாண்டேர்ட் மெஷர்மென்றாக இருந்தது. மழைக்காலங்களாக  இருந்தால், கால் உப்புகுத்தியை தரையிலே அழுத்தினால் ஏற்படும் குழிகள் போதுமானது. வெயில் காலத்தில், கற்கால உபகரணங்களை உபயோகித்து “குழிபறிக்கலாம்”.

முதலாவது யார் விளையாட ஆரம்பிக்கிறார்கள் என்பதே பொதுவாக போட்டி முடிவை நிர்ணயம் செய்யும். ஆகையால் நடு குழியிலிருந்து கச்சியை முதற் குழி நோக்கி உருட்டிவிட வேண்டும். இரண்டு பேருடைய கச்சியும் குழிக்குள் விழாவிட்டால்  எவருடையது குழிக்கு அருகாமையில் இருக்கிறதோ அவரே விளையாட துவங்குவார். டாஸ் ஜெயிப்பதும் தோற்பதும் போலவே.

தோற்றவர் கச்சியை முதற் குழியினோரத்தில்  நடு குழியை நோக்கி வைக்க வேண்டும். விளையாடத்துவங்குபவர் நடு குழியினோரத்திலிருந்து தனது கச்சியைவைத்து எதிரிலிருப்பதை குறிபார்த்து அடிக்கவேண்டும். ரூல்ஸ் இதற்கும் உண்டு. பெருவிரல் தரையில் அழுத்தியிருக்கவேண்டும், கச்சி ரிலீஸ் ஆகும் வரை கை எம்பக்கூடாது. அப்படி எம்பி அடிப்பவர்கள் தொலைவை குறுக்கும் பொருட்டு கையை சற்று முன் நகர்த்துவார்கள். இவர்களை “ஈத்தடி மன்னன்” என்று குற்றம் சாட்டுவோம்.

தூக்கிநிற்கும் நான்கு விரல்களில் சுட்டுவிரல் அல்லது நடுவிரல் ஏதாவது ஒன்றில் கச்சியை ஒட்டவைத்து மற்றொரு கையால் அந்தக் குறிப்பிட்டவிரலை கச்சியோடு சேர்த்து வளைத்து விடுவிக்க வேண்டும். எதிராளியின் கச்சியில் நமது கச்சி உரசிவிட்டால், நமக்கு இன்னுமொரு வாய்ப்பு கிடைக்கும். எல்லா குழிகளையும் வெற்றிகரமாக விசிட் செய்துவிட்டு வந்தால் போதும். முதல் வருபவர் வெற்றி பெறுபவர் ஆகிறார்.

என்னைப்பொறுத்தவரை நான் வகை வகையாக அடிப்பேன். எனது தனித்துவமே “நெறுப்பால்” தான். எதிராளியின் கச்சி நின்ற இடத்திலேயே என்னுடைய கச்சியையும் நிற்கச்செய்வது. ஆனால் அடிபட்ட எதிராளியின் கச்சி மிகவும் தொலைவில் சென்றுவிடும்.

தேவைக்கேற்ப “கெறங்கி” அடிப்பதும் உண்டு. கெறங்கி அடிப்பது ஸ்பின் அல்லது பூமராங் போன்ற ஒரு வகை. நமது கச்சி எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ  அதை மனதிற் கொண்டு எதிராளியை துரத்தி, நாம் வேண்டிய இடத்திற்குச் செல்லுவது.

“கொட்டல்” என்பது முட்டமிட்டது போல் தொட்டு எதிராளியை இருக்கும் இடத்தை விட்டு அதிகமாக அசையவிடாமல் கடந்து செல்லும் ஒரு நுட்பம்.

“உருட்டல்’ இன்னும் தந்திரமானது, பக்கத்து குழிக்கு எதிராளியை உரசியபடியே கொண்டு சென்று, அந்த குழியில் இறங்கிவிட்டு, அருகில் கொண்டுவந்த எதிராளியின் கச்சியை கண்மூடித்தனமாக அடித்து துரத்துவதற்கு ஏற்றது.

குறைந்த பட்சம் இருவர் தேவையான விளையாட்டிற்கு எனக்கு “கூட்டு” கிடைக்காததால் நான் தனியாகவே விளையாட நேரிடும். ஸ்பிலிட் பெர்சனாலிட்டி போல நானே இருவராக மாறி விளையாடி பழகியதில் ஒருவழியாக நன்றாக தேறிவிட்டேன். லெப்ட் ஹாண்ட் பாட்ஸ்மான் போல நான் “பீக்கை” உபயோகித்தே விளையாடினேன்.

இனி அரங்கேற்றம் வேண்டும் என்ற நிலையில் நான் வீட்டிற்குத் தெரியாமல் விளையாட ஆரம்பித்தேன். ஸ்கூலுக்கு  சீக்கிரமாக போய், அழகான யூனிபார்மை அழுக்காக்கி ஆசிரியர்களிடமிருந்தும் அடிவாங்கத்துவங்கினேன்.

போட்டி என்று வந்தால் இரண்டே வகைகள் தான் உண்டு. ஒன்று முட்டு. தோற்றவர் தனது கை முஷ்டியை மடக்கி முதற் குழியில் கச்சிக்கு பதிலாக வைக்கவேண்டும். அல்லது முதலிலேயே பேசியபடி இருக்கும் கச்சிகளை கொடுத்துவிடவேண்டும்.

எனக்கு இரண்டுமே உவப்பானது தான். நான் தன்னிகரற்ற விளையட்டு வீரனானேன். கச்சிகள் இல்லாத போது எதிராளிகளின் முட்டுகளை பதம் பார்த்தேன். ஆகவே என்னை கவனித்தவர்கள் கச்சியையே பெட் கட்ட முன் வருவர். இது ஒரு புதிய பிரச்சனைக்கு வழி வகுத்தது. விளையாடிவிட்டு வீட்டிற்குள் வரும்போது கால்சட்டை பையிலே கச்சிகள் வெற்றிக்களிப்பின் ஒலியெழுப்பும்போது மாட்டிக்கொள்வேன். அனைத்தையும் எடுத்து ஒளித்து வைத்துவிடுவார்கள். அடி தவறாமல் கிடைக்கும்.

எளிமையான இந்த விளையாட்டில், எனது குறி பார்க்கும் திறமைகள் நன்றாக வளர்ந்தது. என்னைப் பொறுத்தவரையில் ஒரு கல்லில் எப்போதுமே ஒரு குலை மாங்காய் தான்.

ஆறாம் வகுப்புவரை இருந்த எனது கச்சி விருப்பம்,  பிற்பாடு தானாக  என்னைவிட்டு அகன்று போனது. மும்பையில்  நான் தெருவோரச் சிறுவர்களுக்கான பணியில் கடந்த வருடம் ஈடுபட்டிருந்த பொழுது, சிறுவர்களுக்கு என வெளிநாடுகளிலிருந்து வந்த விளையட்டு பொருட்களில் கச்சியும் இருப்பதை நான் பார்த்தேன். நான் இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன் உபயோகித்ததைவிட அழகான நிறங்கள், கவர்ச்சியாக உறுதியுடன் இருந்தன. சற்று நேரம் அவைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

பல நினைவுகளுக்கிடையில் சம்பந்தமில்லாமல் ஒருசில கேள்விகள் வந்துபோனது. என் வாழ்நாளில் நான் பெண்களோடு இதை விளையாடியதில்லை. சிறுமிகள் இதை விளையாடி நான் பார்த்ததும் இல்லை. சிறுமிகளை இந்த விளையாட்டைவிட்டு தூரமாக்கியது யார்? அதன் காரணம் என்னவாக இருக்கும்? அந்த சிறு வயதில் எல்லா ஆண் சிறுவர்களும் இதை உபயோகிப்பதன் காரணம் என்ன? ஒருவேளை இதன் வடிவத்திற்கும் ஆண்பாலுக்கும் சம்பந்தம் உண்டா? தெரிந்து செய்வதுபோல் தெரியாவிட்டாலும், “ஆணாதிக்கம் நுட்பமாக சிறுமிகள் கையிலிருந்து கச்சியை பிடுங்கிவிட்டிருக்கின்றது”.

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

Advertisements

குறிச்சொற்கள்:

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: