அந்த ஏழு நாட்கள்


நான் கண்களை திறந்தபொழுது எங்கே இருக்கிறேன் என்றே எனக்கு புரியவில்லை. என்னை சுற்றி இருப்பவைகளையும். அனேக நாட்களுக்கு பின்பே என்னால் அந்த இடத்தை புரிந்து கொள்ள முடிந்தது என்றால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்?

என்றாலும் உங்களுக்காகவே நான் இதை கூறியாகவேண்டும். ஒரு சம்பவத்தை பார்த்தவன் எனும் வகையிலும் அனுபவித்தவன் எனும் வ்கையிலும் நான் கூறுவது முற்றிலும் உண்மை. உண்மைத் தவிர வேறொன்றும் இல்லை.

ஒரு பொன் மாலைப் பொழுது. நான் ஆற்றோரமாக கிடக்கிறேன். இதற்கு முன்பு நான் எங்கே இருந்து இங்கே வந்திருக்கிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை. நிழலைவிட நெருக்கமாக என்னோடு மணற் துகள்கள் ஒட்டிக்கிடந்தன. அதை தட்டிவிடும்படியான எந்த எண்ணமும் எனக்கு ஏற்படவில்லை. நான் அதன் கலவையாகவே என்னை ஊணர்ந்தேன்.

ஆறு மந்தமாக ஓடிக்கொண்டிருந்தாலும் வேகமாக கதிரவனின் ஒளியை  பறிமாரிக்கொண்டிருந்தது.  அதன் பளபளப்பு என்னைத் தாண்டியபடியும் ஊடுருவியும் செல்லுவதாக இருந்தது. நான் அந்த ஒளியை நேசிக்கவும் அதன் மீது தூய காதல் கொள்ளவும் துவங்கினேன். அது எனக்கு இன்பமாகவும், என்னை நானே கண்டுகொள்ளும் ஒரு கருவியாகவும் இருந்தது.

மனம் லயித்துப்போனால் நேரம் போவதே தெரியாதல்லவா? ஆனால் எதில் லயிக்க? ஒளி தன்னை சிறிது சிறிதாக மாற்றிக்கொண்டு வந்தது. மாறுதலை நான் கணமும் கண்டுகொண்டிருக்கும் போதே நானும் அத்துடன் மாறிக்கொண்டிருக்கிறேன். எனது மாற்றம், என்னை சுற்றி உள்ளவைகளின் மாற்றத்தோடு மாறிக்கொண்டு வந்தபடியால் உடனடியாக என்னால் அந்த வித்தியாசத்தை உணர முடியவில்லை.

பிற்பாடு அந்த ஒளி என்னைவிட்டு மறையும் தோறும் நான் அத்தோடு என்னை நெருக்க முயற்சித்தேன். அது மாலையில் உதிரும் பூக்களைப் போல உதிர்ந்துகொண்டிருந்தது. ஒருவரும் நிறுத்தமுடியாதபடி சுற்றும் அதன் வேகமும் வீச்சும் என்னை நிலைகுலையச் செய்தன. நான் கண்மூடி நித்திரை செய்தேன்.

காலை கதிரவன் நட்பான புன்னகையுடன் எழுப்பியபோதும் நான் அந்த மணலிலேயேக் கிடந்தேன். எனது கோபத்திற்கு அளவே இல்லை. இங்கு நான் தனியாக இருக்கிறேன், நீ என்னை விட்டு மறைந்து போனாயே என்ற எனது காதல் பாட்டை அவன் ரசித்திருப்பான் போலும். என்னோடு அவன் நெருங்கிவர ஆரம்பித்தான்.

எனக்கு பசித்தது, தாகம் எடுத்தது. நேராக ஆற்றின் ஒரத்தில் சென்று நீர் குடிக்கும்படி விழுந்தேன். எனது  தேகம் யாவும் சேறு அப்பிக்கொண்டது. எனக்கு அது மிகவும் பொருத்தமாகவே தோன்றியது. ஆழம் அதிகமாக இருக்குமா? தெரியாது? எனக்கு நீந்தவும் தெரியாது. ஆனால் என்னால் நடக்க முடிந்தது. இரண்டு கால்களையும் ஊன்றி.

நான் செய்வதற்குரிய காரியங்கள் அனேகம் கிடையாது. பசியை போக்க வேண்டிய காரியங்களை முன்னுரிமை கொடுத்துச் செய்யவேண்டியது தான். எங்கேயும் நான் அலைந்து திரியும்படியான நிர்பந்தம் எனக்கு ஏற்படவில்லை. தாராளம் பழங்கள் மரத்திலே இருந்தன. விதம் விதமாக.

சற்று நேரத்திற்கெல்லாம் சிங்கவால் குரங்குகள் சில தாவியபடியே வந்தன. வில்லிலிருந்து விடுபடும் அம்பைபோல அவைகள் திசைக்கொன்றாய் எம்பியப்படியே மரங்களை கடந்து வந்துகொண்டிருந்தன. என்னைப்பார்த்தவுடன் அவைகள் வெட்கமடைந்து, திசை மாறி சென்றுவிட்டன. அவைகள் சென்றுவிட்டாலும் நான் அவைகளோடு பேசுவேன். யாவும் எனது நண்பர்கள் என்கிற எண்ணம் எனக்கு உண்டு.
 
விழுந்து கிடக்கும் பழங்களை பொறுக்கி உண்ண சில பன்றிகள் வந்தன.  நான் மரத்தின் மேலேயே இருந்துவிட்டேன். சிறிது நேரம் பன்றிகளுக்கு  பழங்களை பறித்து இட்டேன். குனிந்த தலை நிமிராதபடி அவைகள் என்னை பார்த்தன. அந்தக் கண்கள் என்னோடு பேசுவது போலவே இருந்தது. இருக்கட்டும். பழம் கொடுத்தால் கடைக்கண் பார்வை கிடைக்கும் போல என்று நான் உத்தேசித்தேன். இப்போது கீழே இறங்கமுடியாது. அவை வயிறார உண்டு களித்தபின்பே மெல்ல நகரும்.

பன்றியோடும் பேசுவதர்கான காரணங்கள் உண்டு. நான் அவைகளை உங்களுக்கு சொல்லப்போவது இல்லை.

பறவைகள் தான் எத்தனை அதிசயமானவைகள். உயரமான இடத்திலிருந்து கூட தனது உணவை கவலையின்றி இலகுவாகப் பெற்றுக் கொள்ளுகின்றனவே. இந்த காகம் கூட தனது அலகால் கொத்தி உண்ணும் ஒரு நிலை எத்துணை அழகு. காகம் நின்று நிதானமாக பேசாது. ஏதோ ஒரு அவசரம்.

எனது நிலைமை இவ்விதமாகவே போய்கொண்டிருக்கின்றது. தினமும் யாராவது மாட்டுகிறார்கள். பேசுவதற்கும் விளையாடுவதற்கும். பேசுவது என்றால் என்ன? நான் மட்டுமே பேசிக்கொள்ளுவேன். யார் என்னை பொருட்டாக மதித்து பேசுவது? ஆனால் நான் பேசவேண்டும், அப்போதுதான் என்னால் என் இருப்பை உறுதி செய்ய முடியும்.

விளையாட்டு? அது சற்று ஆபத்தானது, நண்பர்கள் விரோதிகள் வித்தியாசம் இன்னும் சரிவரத் தெரியவில்லை. வினையேதும்  வேண்டாம் என்று சும்மா இருந்தாலும் பொழுது போவது இல்லை. நாளொரு ஆபத்தும் பொழுதொரு பிரச்சனையுமாக நேரம் நன்றாகவே சென்றது.

ஆறாவது நாள் அந்த சம்பவம் நடந்தது. நான் மரத்திலிருந்து பழங்களை வீசிக்கொண்டிருந்தபொழுது நான் பற்றியிருந்த கிளையிலிருந்து கை நழுவியது. எங்கே விழுகிறோம் என்ற நினைவு நன்றாகவே இருக்கிறது.

எழும்பியபொழுது எனது விலாப்பகுதியில் ஒரே வலி. நான் என்ன நடந்தது என யூகிக்குமுன், தூரத்திலே அவளைக் கண்டேன்.

என்னைப்போலவே நிர்வாணமாக!

அவளோடு பேசுவதற்கு முன் என் வாய் தவறி வந்த சொற்கள்.

“கடவுளே இவள் தான் ஏவாளா?”

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

Advertisements

குறிச்சொற்கள்: ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: