அவளுடைய நான்


மும்பையில் எனது வேலையை முன்னிட்டு தனிக்குடித்தனம்.  பெண்ணை சார்ந்து வாழாத ஒரு “ஆண்மகனின்” மாய தோற்றத்தை நான் மறுபடியும் உறுதி செய்து கொண்டிருந்தேன். நான் வேலை பார்க்கும் இடத்தில் கூட, ஜாஸ்மின் “போதகரம்மா”வே ஒழிய தனி ஒரு பெண்ணல்ல.

திருச்சபை ஆணாதிக்கம் நிறைந்தது. அது தன்னை அவ்விதம் கட்டமைத்துக்கொண்டுள்ளதன் காரணமே தன்னை தக்கவைத்துக்கொள்ளுவதற்கு தானோ என்றே எனக்கு படும். பல வேளைகளில் சக தர்மினியை கூட புரிந்து கொள்ள முடியாதபடிக்கு  கண்கள் மறைக்கப்பட்டுவிடுகின்றன. என்ன போதகரம்மா, இண்ணைக்கு என்ன குளம்பு வச்சீங்க? பாஸ்டர நல்லா கவனிச்சுகிடுங்க போன்ற அனுசரணையான வார்த்தைகள்.

இந்த நாட்களில்தான் ஜாஸ்மின் கர்ப்பமானாள். பாஸ்டருக்கு இனி கொஞ்சம் கஷ்டம் தான், என அன்பாக சலித்துக்கொள்ளுபவர்கள் ஒருபுறம், அவங்க அடுப்படிக்கு போக விரும்பமாட்டாங்க, மணம் பிடிக்காது என விளக்கமளிப்பவர்கள் இன்னொருபுறம். தடாலடியாக சில தொலைபேசி அழைப்புகள் “பாஸ்டர், எதுவும் செய்துடாதீங்க, கொடுத்து அனுப்புகிறோம்”. போட்டி போட்டுக்கொண்டு அனுப்பிய வித விதமான உணவுகள்.

ஜாஸ்மின், காலை தோறும் வாந்தி, பிறகு சுருண்டு படுத்துக்கொள்ளும் நிலைமை. பால் குடிப்பதை சுத்தமாக நிறுத்திவிட்டாள். மிகவும் கொஞ்சமாகவே சாப்பிடுவாள். இதற்குப்போய் ஏன் சமைக்கவேண்டும் என நானும் வகைவகையாக செய்வதை குறைத்துக்கொண்டேன். பழங்கள் மிகவும் முக்கியமானவைகள் என டாக்டர் கூறியிருந்தபடியால், விதம் விதமாக அவைகளையும்  வாங்கி குவித்தேன்.

வேலைப்பழு இன்னும் குறைந்தது. சமைக்க வேண்டியது இல்லை, பாத்திரம் கழுவவேண்டாம், அவள் உறங்குமட்டும் அவளோடு கூட இருந்தால் போதும். அவளாக உற்சாகமாக எழுந்து வரும் நேரங்களிலேயே துணி உலர இடுவது போன்ற சில்லறை பணிகள் நடைபெற்றன.

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது மிகவும் தர்மசங்கடமான விஷயம். பாஸ்டர், நீங்க ஏன் இதெல்லம் செய்யுறீங்க? ஒண்ணுமே தேவையில்லை என நாசூக்காக மறுப்பது அன்றாடம் நிகழ்வாயின.  ஒரு நாள் ஜாஸ்மினைப் பார்ப்பதற்கு வந்த பெண்கள் சங்க குழுவினர், மிகுந்த வெட்கத்தினூடேயே நான் தயாரித்த லெமென் ஜூஸை எடுத்துக்கொண்டனர்.

எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகளும் யாவும் மறந்து விட்டன. நான் சமைப்பதே தவறு என்கிற முடிவுக்கு வந்துவிட்டேன். பாஸ்டர் யாரு? கிங்குல்லா!

ஒரு நாள் தனக்கு தொண்டை வலிப்பதாக ஜாஸ்மின் கூறினாள். . சாப்பிட மாட்டேன் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தாள். ஒன்றுமில்லை சரியாகிவிடும் என்று சொன்னேன். அழத் துவங்கி விட்டாள். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. நாங்கள் சந்திக்கும் டாக்டர் அம்ருதா தாக்குர் இந்த நேரத்தில் பார்வைக்கு கிடைப்பது அரிது. நல்ல வேளையாக அவர்களது தொலைபேசி எண் என்னிடம் இருந்தது.

கூப்பிட்ட உடனே அவர்கள் எனது அழைப்பை இணைத்தார்கள்.

நான் குழரலோடு “டாக்டர் நான் ஜாஸ்மினுடைய கணவன் பேசுகிறேன்” என்றேன்.

பிற்பாடே எனக்கு உறைத்தது. ஆம் நான் யார்?

என்னை தனித்து அடையாளப்படுத்துமளவிற்கு நான் பெரியவனல்ல.

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

Advertisements

குறிச்சொற்கள்:

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: