இறையியல் கல்லூரி வாழ்வின் இறுதி வருடத்திலே மாணவர்கள் அனைவரும் தனித்தனியாக ஒரு ஆராதனை நடத்த வேண்டும். அந்த ஆராதனை புதுமையாகவும், ஆராதனையின் அடிப்படை விதிகளை மீறாமலும் அமைக்கப்பட வேண்டும். நூறு மதிப்பெண் உண்டு. நான்கு வருட படிப்பின் சாரத்தை வெளியிடும் அந்த நாள் பலருக்கு கலக்கத்தையும் (எக்கப்போ என்னெய்யப் போறேனோ) மற்றும் சிலருக்கு பழிவாங்கும் (ஆசிரியர்களைத்தான் – பேசியே கொன்னுருவோம்ல) நாளாகவும் அமைந்துவிடும்.
நான் கண்ணீரைக் கரத்தில் எடுத்தேன். மொத்த ஆராதனையையுமே ஒரு ஆழ்ந்த சோகம் கவ்வியிருக்கும்படி செய்தேன். அந்த நிகழ்விலே நான் உபயோகித்த ஒரு பாடல்தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
கிழக்கு செவக்கயிலே
நான் பனையில ஏறயிலே
அந்தப் பாளையச் சீவயிலே
மண் கலசம் நெரம்பயிலே
என் கண்ணும் நெரம்பிடுச்சே – அழாத பனையாரி அழாத
ஊரே ஒதுக்கயிலே
எனக்கு யாரிருக்கா
என் வேதன மறிடுமா
என் விதிய எழுதயிலே
அந்தச் சாமி உறங்கிடுச்சே – அழாத பனையாரி அழாத
பதனீர் காய்கயிலே
என் குடும்பம் வேகயிலே
கருப்புக் கட்டிய வீக்கயிலே
என் குடும்பம் ஏங்கயிலே
நெஞ்சுருகி போயிருச்சே – அழாத பனையாரி அழாத
அய்யாக் கலங்காதே
பனைமரம் முறியாதே
அந்த தேவி இருக்கயிலே
ஊர் உலகும் மாறிடுமே
உன் கவலை தீர்ந்திடுமே.
கடைசி பத்தி பாடுபவர் ஆறுதல் படுத்துபவராகவும், முதல் மூன்று பத்திகள் நான் பாடுவதாகவும் அமைத்திருந்தேன். வந்திருப்பவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் பொருட்டு “அழாத பனையாரி அழாத”.
“சீவலப்பேரி பாண்டி” எனும் திரைப்படத்தின் இசையையே நான் இதற்கென்று உபயோகித்தேன், அதை எனது அச்சு நகலிலும் பதிவு செய்திருந்தேன். “மைக்கல் டிரேபர்” உலக தரம் வாய்ந்த “தொடர்புத்துறை பேராசிரியர்”, தனது எதிர்வினையின் போது சினிமா இசையை ஆராதனையில் உபயோகிப்பதில் தவறொன்றும் இல்லை என்றது குறிப்பிடத்தக்கது.
மறுமொழியொன்றை இடுங்கள்