Archive for பிப்ரவரி, 2009

இந்திய இடையன் இயேசு

பிப்ரவரி 28, 2009

சிறு வயது முதலே எனக்கு ஓவியங்கள் மீது ஆர்வம் என்று சொல்லுவதில் என்ன புதுமை இருக்க முடியும்? ஆனால் என் ஆர்வத்திற்கு இணையான பயிற்சி இல்லாமையினால் நான் அதிகமாக அந்த துறைக்குள் காலூன்ற  இயலவில்லை. படிப்பிலே சுமாரான ஒரு மாணவன் செய்ய வேண்டியது எல்லாம் தனது வீட்டுப்பாடங்களை சரிவரச் செய்வது தானே அன்றி கிறுக்கிக்கொண்டிருப்பது அல்ல.

சுமார் 12 வருடங்களுக்கு முன்பு நான் கல்லூரி படிப்பை முடித்தபோது எனக்கு கிடைத்த நேரங்களை நான் பனை ஓலையோடு செலவிட்டேன். என் வாழ்வில் என்னை நான் கண்டுகொண்ட தருணங்கள் அவை.

பனை ஓலையின் வடிவம், குருத்தோலையின் வாசம், பட்டை மடிக்கும் அழகு, என அவை என்னை கிறங்கடித்துக்கொண்டிருந்தன. நானும் ஒரு நாள் ஏதேனும் செய்யவெண்டும், அதுவும் பனை தொடர்புள்ள  காரியமாக அது இருக்க வேண்டும் என்பது என் உள்ள கலசத்திலே சொட்டும் பதனீராய் நிறைந்தது.

உந்துதலின் மிகுதியால் நான் கண்டுகொண்ட ஒரு படைப்பு வடிவமே “பனை ஓலை ஒவியங்கள்”. இதிலே எனக்குப் பெருமை உண்டு. அந்தப் பெருமை பனை மரத்தினை முழுமையாக உபயோகித்த என் முன்னோர்களுக்கும், பிற கலாச்சாரங்களுக்கும் நான் சமர்பிக்கிறேன்.

இந்திய இடையன் இயேசு

நான் உருவாக்கிய இந்தப் படைப்பு, இந்திய கிறிஸ்தவ ஓவியரான எ. டி. தாமஸ் அவர்களது பாதிப்பில் உருவானது. கிறிஸ்துவை இந்திய வடிவில் காணும்தோறும் ஏற்படும் அளவிலா மகிழ்வு என் இருதயத்தை நிறைப்பது மட்டுமல்ல, உங்களையும் அவை மகிழ்விக்கட்டும்.

காட்சன் சாமுவேல்
தொடர்புக்கு
palmyra_project@yahoo.com 

09870765181

 

 

பன்றியிறைச்சி

பிப்ரவரி 18, 2009

கிறிஸ்தவர்கள் சதவிகிதத்தில் அதிகம் வாழும் மாவட்டமான குமரியிலே கிறிஸ்மஸ், ஈஸ்டர், புத்தாண்டு ஆகிய விஷேச நாட்களிலே பன்றி இறைச்சி கிறிஸ்தவர்களுக்காகவே தாராளமாக வெட்டப்படுகின்றது. திருமறையாம் விவிலியத்தை பின்பற்ற விரும்பும் நாம், பன்றி இறைச்சியை உண்பது கிறிஸ்தவக் கோட்பாட்டுக்கு புறம்பானது என்று உறுதிபட நம்பினாலும், யகோவா அந்த காரியத்தை முன்னிறுத்துவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுவது அதிக பயனளிக்கும். 

ஆராய்ந்து பார்த்தால் நாம் உணவை அல்ல நம்பிக்கைகளையே முன்னிறுத்தப்படுவதைக் காண்கிறோம். நமக்கு கொடுக்கப்பட்ட புனித நூலை விட்டு நாம் பிறழ்ந்து விடலாகாது என்கிற அதிக கவனம் நமக்கு உண்டு. “ஒரு எழுத்தாகிலும், எழுத்தின் உறுப்பாகிலும் அழிந்துபோவது இல்லை” என உறுதி படக் கூறும் நாம், அன்றன்று உள்ள “ஆகாரத்தை” தாரும் என்பதை “அப்பத்தை” தாரும் என்பதாக சொல்லுகிறோம். சரி, தினமும் அப்பத்தை சாப்பிடுகிறோமா என்ற கேள்வி எழுப்பினால், சோறு தான் அப்பம் என்ற பதில் வருமே அன்றி, அப்பத்தை சாப்பிட பழகவோ, அப்பம் என்ற வார்த்தைக்குப் பதில் ஆகாரம் என்ற திருமறை வார்த்தையைக்கூட சொல்லத் துணியமாட்டோம். ஏனென்றால் நாம் பழகிய ஒன்றை நம்மால் மாற்றுவது கடினம். அது தவறாக இருந்தாலும், நாம் அதை குறித்து உணார்த்தப்பட்டாலும் அது நம்மை தனிப்பட்ட முறையில் உரசிவிடுகின்ற  ஒன்றாக  மாறிப்போய்விடுகிறதேயன்றி நம் மாற்றத்திற்கான காரணியாவதென்பதோ ஐயத்துக்குரிய ஒன்றுதான்.

மார்வின் ஹாரிஸ் என்ற மானுடவியலாளர் தனது “பசுக்கள் பன்றிகள் போர்கள் அற்றும் ஸூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்” என்ற புத்தகத்தில் இந்தக் கருத்தை பிந்தொடர்ந்து சென்று அதன் வேராழத்தை கண்டுகொள்கிறார். நான் பிறந்த வருடத்தில் எழுதப்பட்ட இந்த புஸ்தகத்தின் ஆழமான கருத்துகளை இத்தனை வருட காலத்தில் எந்த கிறிஸ்தவ போதகரும் திருச்சபையில் என்னறிவின்படி முன்வைக்காததால் நான் அந்தக் கருத்துக்களை முன்வைப்பதிலே  உள்ள அவசர கடமையை உணருகிறேன்.

எனது இறையியல் கல்லூரியில் “தலித் இறையியல்” கற்றுக்கொடுக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் கடவுள் எவ்விதம் துணை நிற்கிறார் என்பதையும், போதகர்களாகிய எங்களுக்கு திருச்சபையில் புரையோடியிருக்கும் சாதீய காழ்ப்புகளை வேறறுக்கும் ஒரு மகத்துவமான பயிற்சியாக அது அமைந்தது.

சத்தி கிளார்க், எங்கள் ஆசிரியர், மிகவும் திறம்பட அந்த வகுப்பை நடத்தினார்கள். எங்களுக்கென்று ஒரு சிறப்பு பயண வகுப்பையும் ஆயத்தப்படுத்தியிருந்தார்கள். ஒரு தலித் கிராமத்தைக் கண்டு, அங்கு தங்கி, அந்த மக்களோடு வாழ்ந்த அனுபவம், புதிய புரிதலுக்கான வடிவம். என் வார்த்தைகள் எள் அளவேனும் அதை விவரிக்காது, எவரையும் திருப்திப்படுத்தாது என்பதையும் அறிவேன்.

லேவியராகமம் பதினொன்றாம் அதிகாரத்திலே கர்த்தர் மோசெயையும் ஆரோனையும் நோக்கி, எந்த விதமான மிருகஜீவன்களை புசிக்கலாம் எவைகளை புசிக்கலாகாது எனக்கூறுகிறார். கர்த்தர் இந்த வேறுபாடுகளை காண சில குறிப்புகளை கொடுத்தாலும், ஏன் புசிக்கலாகாது என்ற காரணத்தைக் கூறாமல், அது உங்களுக்கு “அசுத்தமாக இருக்கும்” என்பதாக மட்டுமே கூறுகிறார்.

இந்த பயிற்சியின் இறுதி வடிவமாக எங்கள் ஆசிரியர், என்களுக்கு உணவு படைத்தார். அதன் முக்கியத்துவமே மட்டிறைச்சி சாப்பிடுவது தான். எனது ஆசிரியர் என்னிடம் கேட்டார், காட்சன் வில் யூ ஈற் பீப்? அப்பொழுது தான், அதன் உட்கருத்தை நான் புரிந்து கொண்டேன் தலித், இஸ்லாமியர் அல்லாதவர் மாட்டிறச்சியை புசிப்பதல்ல என்ற பிம்பத்தை எனது ஆசிரியர் கொண்டிருக்கிறார் என்று. அதற்கான காரணங்கள் அவருக்கு இருக்கும், ஆனால், என் அனுபவமே வேறு.

சிறு வயது முதலே, நான் வேட்டைக்கறிகளை விரும்பி சாப்பிட்டிருக்கிறேன் (இப்பொழுது அல்ல) குமரி மாவட்டத்தின் தன்மை சற்று கேரள சாயல் கொண்டதால் எங்கள் உணவில் மாட்டிறைச்சியை சேர்த்துக்கொள்ளுவதிலே எவருக்கும் எந்த அசூசையும் இல்லை. நாகர்கோவிலில் முக்கிய மாட்டிறைச்சி வியாபாரி சேவியர் ஒரு கிறிஸ்தவர்தான். எனினும் நான்கு கிலோமீட்டர் தல்ல்ளியிருக்கும் பெருவிளையில் (என்னுடைய ஊர்) கிறிஸ்தவர்கள் வந்து ஒரு இஸ்லாமியரிடம் இறைச்சி வாங்கி செல்வார்கள். தரம் அவ்வளவு நன்றாக இருக்கும்.

எனக்கு சுமார் ஐந்து வயது இருக்கும்போது எங்கள் வீட்டினருகே ஒரு நபர் கூவிக்கொண்டெ சென்றார். பொதுவாக அந்த நாட்களிலே தின்பண்டங்களை அவ்விதமாக விற்பதால், நான் எனது அம்மாவிடம் அது என்ன என்று கேட்டேன். எனக்கு பன்றி என்றால் என்ன என்று தெரியாத மிஷன் காம்பவுண்டில் வளர்ந்த காலகட்டம் அது. அம்மா அது பன்றி இறைச்சி என்றும் நாம் சாப்பிடக்கூடாது என்றும் கூறினார்கள். இறைச்சி என்றவுடனே அதன் மீதான கவர்ச்சி கூடி, எனக்கு அது வேண்டும் என்று அடம்பிடிக்க ஆரம்பித்தேன். எனது தொல்லை பொறுக்க முடியாமல் அம்மா அவனை அழைத்தார்கள். பனையோலையிலான பொதிகளை பார்க்கவே அழகாக இருந்தது, பிடித்துப்பார்த்தால் அந்தப் பொதிகள் மெத்து மெத்தென்று காற்றடத்த பலூன் போலவே இருந்தது. வாங்கி, சமத்து சாப்பிட்டுமாகிற்று, அம்மா அப்பா அதை தொடவில்லை.

இதன் பிற்பாடு நான் பன்றி இறச்சி சாப்பிட்டது எல்லாம், நண்பர்களுடைய வீட்டிலே தான். பலமுறை என்னை கேட்ட பின்பே எனக்கு அதை பறிமாறுவார்கள். ஏன் என்பது எனக்கு புரியவில்லை.

எனது அறிவின்படி, பன்றி அசுத்தமான மிருகம், அதன் உணவு பழக்கம் மற்றும் அதனால் ஏற்படும் வியாதியையும் குறிப்பிட்டு அதை நாம் உண்ணலாகாது என திருச்சபையிலே பிரச்ங்கித்தவர்கள் மற்றும் கிறிஸ்தவ விசுவாசிகள் கூறும் காரணங்களை கேட்டிருப்போம். இவை மூன்றையுமே மார்வின் ஹாரிஸ் ஆழமான புரிதலுடன் மறுக்கிறார்.

1. பன்றி சுத்தமற்றது
பன்றியின் சுத்தத்தை நாம் நன்கு அறிவோம். தெருவோரங்களிலும், சாக்கடைகளிலும், மலம் குவிந்து கிடக்கும் இடங்களிலும் அது தன் ஆகாரத்தை தேடுகிறது. அசுத்தமானதை தின்று வ்ளர்வதும் அசுத்தமாகத்தானே இருக்கும் என்பது நம் கணிப்பு. இந்த விதமான தருக்கத்தில் எழும் கேள்விகள் என்னவென்றால். ஒருவேளை சுத்தமானதை பன்றி தின்று வளர்ந்தால் நாம் அதை சுத்தமாக எண்ணி புசிக்கலாமா? அதைக் குறித்து கர்த்தர் ஏதும் கூறவில்லை.

காட்சியை சற்று மாற்றி பசுவையோ, ஒரு ஆட்டையோ நாம் எண்ணிப்பார்போமானால் என்ன நடக்கிறது. இவைகளை நாம் ஒரு தொழுவத்தில் வைத்து பராமரிக்கிறோம். தினமும் தொழுவத்தை சுத்தப்படுத்துகிறோம், தினமும் குளிப்பாட்டுகிறோம். இந்தக்காரியங்களை நாம் செய்யத்தவறினால், இவைகளும் பன்றிகள் போலவே அசுத்தமாக அலையும் என்பதை பட்டணங்களில் நாம் அன்றாடம் காண்கின்றோம்.

2.பன்றியின் உணவு
பன்றியின் உணவு என்பதே மலம் என்பதாக நாம் புரிந்துகொண்டுள்ளோம். ஆரம்பத்தில் அப்படியான மிருகமல்ல அது. பன்றியின் வாழ்விடம் காடும் அதைசார்ந்த பகுதிகளும். அதன் முக்கிய உணவுகள் கிழங்குகளேயாகும். தானியங்களும், பழங்களையும் அது விரும்பி உண்ணும். பதனீர் என்றால் அதற்கு உயிர். ஆனால் இவைகளை கொடுத்தால் முதலுக்கே மோசம் என்பதால் நாம் இவைகளை கொடுக்காமல் அதை துப்புறவு பிறாணியாகவே காண்பித்து நமது தரப்பை உறுதி செய்கின்றோம்.

பசு மற்றும் ஆடுகளைப் பொறுத்தவரையில், இன்றைக்கு நாமே உணவுகளை அதனிடத்திற்கு எடுத்துச்செல்லுகிறோம். எந்த குறையும் இல்லாமல் அவைகளை பாதுகாத்துக் கொள்ளுகிறோம். மேலும் அவைகளுக்கான உணவின் விலையும், தேவையும் பன்றியோடு ஒப்பிட்டால் மிக மிக குறைவே.

3. வியாதி பரப்பும்
நன்றாக வேகாத பன்றி இறைச்சி, வியாதியை அளிக்கும் என்பது உண்மையே. குறிப்பாக டிரிச்சினொஸிஸ் எனும் வியாதி வருவதற்கான காரணங்கள் உண்டு. அப்படியெனில்  பன்றி இறைச்சி  சாப்பிடுவது தவறானது தான் என்று நாம் நினைகக்கூடும். 
நன்றாக வேகாத மாட்டு இறைச்சி மூலமாக நடப்புழுக்கள் வயிற்றில் தங்கி அபாய்மான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.  ஆட்டின் இறைச்சி கூட  புருசெல்லோஸிஸ் என்ற நோய் ஏற்படுத்தக்கூடியது தான். கூடவே பயங்கர ஆந்த்ராக்ஸ் என்ற நோய் இந்த மிருகங்களால் மட்டுமே ஏற்படும் பன்றியால் ஏற்படாது.
இந்தமுரண்பாடு தெரிந்ததும் நாம் இவைகளை சப்பிடாமல் இருக்கப்போகிறோமா என்ன?

மார்வின் ஹாரிஸ் இறுதியாக,. கர்த்தர்  எபிரேயர்கள் பன்றியை தொடக்கூடாது என்று சொல்லுவதற்கு காரணம் அவர்கள் வாழ்ந்த சுற்றுசூழலே காரணம் என்கிறார். பாலைவனதில் வாழும் மனித்ர்களுக்கு, பன்றி அவர்களது உணவுக்கு நேரிடையான எதிரி ஆகின்றது. கொட்டைகளையும், பழங்களையும் மற்றும் தானிய்ங்கலையும் அவை தின்றுவிட்டு, மாமிசம் மட்டுமெ பதிலாக கொடுக்கின்றன. மாடும் ஆட்டுமந்தைகளும், கம்பளி, தோல், பால் சார்ந்த பொருட்கள், எரு மற்றும் உழவுக்கும் பயன்படுகின்றன. சுவை மிகுந்த பன்றி இறைச்சியின் மீது அவர்களுக்கு ஆசை பிறந்துவிட்டால் அதன் மூலம் ஏற்படும் அபாயகரமான விலைவுகளை கடவுள் உணர்ந்திருந்தார்.  ஒருவகையில் காந்தியின் சிந்தனைப்படி, “எல்லாருடைய தேவைக்கும் போடுமானது பலஸ்தீனாவிலே உண்டு. ஆனால் பேராசைகளுக்கு கர்த்தர் இடமளிக்கவில்லை.

இறையியல் சாராத மார்வின் –காரிசின் கூற்றை நாம் எப்படி ஒரு அளவுகோலாக கருத்முடியும்? உண்மைதான், அவர் இறையியலாளர் அல்ல, எனினும், பிற வேத பகுதிகள் அவ்ர்கூறுவதை மெய்ப்பிக்கின்றன.

முதல்லவதாக, இயேசு சொன்ன இளைய குமாரன் உவமை. பஞ்சகாலத்திலே இளையமகன் ஒரு குடியானவனிடம் ஒட்டிக்கொள்ளுகிறான். அங்கே பன்றிக்கு கொடுக்கும் தவிட்டினால் தன் பசியை ஆற்றிக்கொள்ள விரும்பினான் என்பதாக காண்கிறோம். மனிதனுக்கு உணவற்ற நிலையிலும் பண்றியை போஷிக்கும் அளவுக்கு, மனிதர் சாபிடும் உணவை கொடுக்க சித்தமாய் இருந்த சூழலை காண்கிறோம்.

இரண்டாவதாக தெக்கொப்போலி பகுதியிலே இயேசு அசுத்த ஆவி பிடித்த ஒரு மனிதனை குணமாக்குகின்றார். அவனில் இருந்து புறப்பட்ட ஆவிகள் பன்றி கூட்டத்திற்குள் சேல்ல அனுமதி கேட்கின்றன. இயேசு அனுமதித்தவுடனே அவை யாவும் பன்றி கூட்டத்தோடு சேர்ந்து அவைகளை செங்குத்தான மலையிலிருந்து கடலிலே விழப்பண்ணுகின்றன.

ஏவ்வளவு பெருத்த நஷ்டம்? மக்கள் அவரை அன்கிருந்து போகச் சொல்கின்றனர். ஆனால் இயேசு செய்த காரியங்களை கூர்ந்து கவனித்தொமானால் அவர் அந்த மனிதனை மாதிரமல்ல, அந்த ஊரையே குணமாக்கியிருக்கிறார். இரண்டாயிரம் பன்றி எந்தனை பேருடைய உணவிற்கு உலை வத்தன? அவ்வித ஆடம்பரத்தை விடுத்து அனைவருக்கும் உணவு கிடைப்பதையே இயேசு விரும்பினார். சுவைக்கு பழகிப்பொன நாக்குகளால் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்த மேசியாவை சுவக்கமுடியாமற் போயிறு.

குமரி மாவட்டத்தில் பன்ரியை சாப்பிடுவது சரியென்று கூறலாம? கூரலாம், இறைவன் நமக்கு கொடுத்த சுற்று சூழல் அப்படி. கிழங்கு பயிரிடும் விவசாயிகளுக்கு மேற்குத்தொடர்ச்சி மலையிலிருந்து இறங்கி வரும் பன்றி எதிரியாக இருக்கும்போது, அவர்கள் அதை வேட்டையாடி இழந்த உணவை சமன் செய்திருப்பர். மாத்திரமல்ல  பன்றியை வளர்க்க தெவையான தண்ணீர் மற்றும் உணவுபதார்தங்கள் இங்கே மலிவாகவும் தாராளமாகவும் கிடைக்கின்றன. அதன் சுவை தொன்றுதொட்டு சுற்றுசூழல் உணவுபழக்கத்தில் ஊரிக்கிடக்கின்றது. ஈறைவன் அதை தவறாக எண்ணிக்கொள்ளமட்டார், அது சுற்று சூழல் சுழர்ச்சியை சமன் செய்யும் ஒன்றே.

 

காட்சன் சாமுவேல்
தொடர்புக்கு
palmyra_project @yahoo.com

ஆநிரை கவர்தல்

பிப்ரவரி 16, 2009

அம்மா ஸ்தோத்திரம்

ஹி… தோத்திரம்

என்ன பண்ணுரீங்க

நான் சும்மாத்தான் இருக்கியன்

சந்தோசம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

சாரு சாய குடுச்சிதியளா இல்ல சருவத்து எடுக்கட்டா

கர்த்தருக்கு ஸ்தோத்திரம், குடுங்கம்மா, கர்த்தர் உங்களை ரொம்ப ஆசீர்வதித்திருக்கிறார். பிள்ளைகள் இருக்காங்கல்லியா?

ஓஞ்சாரே, பய பாலிடெக்கு படிச்சுதான், மவ பன்னெண்டு படிச்சுட்டு நிக்குதா. அவரு வெளிநாட்டுல கொத்தவேல செய்யுதாரு.

ஸ்தொத்திரம் ஸ்தொத்திரம். கர்த்தாவே இவர்களை ஆசீர்வதியும்.

சாரு செபிக்கணும். அவரு வரும்ப எனக்க மவளுக்கு ஒரு நல்ல மாப்பிளையா பாத்து நான் கெட்டிகுடுத்தா போரும். ஆண்டவருக்கு நான் செய்யவேண்டியத பாக்கியில்லாத செய்யுதேன்.

கர்த்தர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்.

நாம் முழங்கால்படியிட்டு கர்த்தருடய பாதத்தில் நம்முடைய வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் அவருடைய பெரிதான கிருபையையும் இரக்கத்தையும் வேண்டி ஏரெடுப்போம்.

ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஹல்லேலூயா…
ஸ்தோத்திரம்….குளோரி, குளோரி, குளோரி, குளோரி, ஹல்லேலூயா… தேங்க்யு ஜீஸஸ், ஓ… தேங்க்யு ஜீஸஸ், தேங்க்யு ஜீஸஸ், ஆமேன் இயேசுவே, வாரும் கர்த்தாவே…..

ஆவியானவரே வாருமப்பா….. ஓ பலபலபலபல ரிஷலபலபல …. கர்த்தர் இந்த குடும்பத்தைக் காக்கிரீர், ரீலாபல ரிச்சலபல பல…… சேனைகளின் தேவன் வல்லமையுள்ளவர்…….ரிகலா பலஷத் இச்சத பல பல…… ஆனாதி தேவனே எங்கள் அடைக்கலமானோரே…… ஸ்தோத்திரமப்பா….
குளோரி, குளோரி, குளோரி, ஹல்லேலூயா……கர்த்தாருடைய கரம் இறங்குவதை நான் காண்கின்றேன்! ஆவியானவருடைய பிரஸன்னாத்தை நான் காண்கிறேன், இந்த வீட்டைச்சுற்றி சுடரொளி பட்டையத்துடன் கூடிய தூதர்களைக் காண்கிறேன் ஹல்லேலூயா…ஹல்லேலூயா…
ஹல்லேலூயா…ஹல்லேலூயா… ஆமேன்…

அன்பின் தேவனே, பரலோக ராஜாவே, பூரண சர்குணரே பரிசுத்தரே உம்மை துதிக்கிரோம். பரிசுத்தரே பரம பிதாவே உம்மை மகிமைப்படுத்துகிரோம். அருமைய்யான இந்த குடும்பத்தை கர்த்தர் கண்ணோக்கிப்பார்த்து, ரிச்சல பல ஓஷால பல ரீஷா பலபல…… அருமையான ஒரு மணாமகனை தருகிறீர்….. ஆமேன்……ஹல்லேலூயா… தேங்க்யு ஜீஸஸ், தேங்க்யு ஜீஸஸ், தேங்க்யு ஜீஸஸ்…..

அருமைய்யன இந்த குடும்பத்தலைவியை உமது கரத்தில் கொடுக்கிறோம், கணவனைப் பிரிந்து வாழும் நேரத்தில் தூரத்துக்கும் சமீபத்துக்கும் ஆண்டவரான நீர் சகோதரியோடு இடைபடவேண்டுமாக கெஞ்சுகிரோம்…….ஆட்கொள்ளும் வழி நடத்தும்… பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலைத்தாரும்……. காத்துக்கொள்ளும் ஆமேன்….ஆமேன்….ஆமேன்….

ஸிஸ்டர்…. கர்த்தர் எல்லாம் பார்த்துக் கொள்ளுவார்

சாரு ஜெபிச்சப்போ உள்ளதாட்டு நல்ல இருந்துது

சந்தோஷம்மா, ஆனாலும், உங்களுடைய ஆவிக்குரிய ஜீவியத்திலே கர்த்தர் ஒரு மாறுதலை விரும்புகிறார்.

சாரு செல்லியது வெளங்கேல

அம்மா! நீங்க ‘ஆவிக்குரிய’ திருச்சபைக்கு தொடர்ந்து வரணும். கர்தருடைய அனுக்கிரகத்தை அப்போது பெற்றுக்கொள்வீர்கள்.

நாங்கொ கொவிலுக்கு எல்லா நாயிராச்சயும் பொவோமே. மவ அஞ்சதான் சண்டே ஸூல் பிள்ளியளுக்கு படுப்பிச்சு குடுக்குதா.

சங்கீதம் 1:2 என்ன சொல்லுகிறது என்றால், “இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்”ப் அதாவது ஆவிக்குரிய சபையில கிடைக்கிற மன்னா பிற திருச்சபைகளில கிடைக்காது.

ரோணிக்கம் மாமியும் செல்லிச்சி, அவியளும் மாமனும் இப்போ அஞ்சோட்டில்லா வரினும். இஞ்ச கோயில் எலசன்ல மாமன் தோத்தது சாருக்கு அறியிலாமா?

“ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியதைக் காணமாட்டான்” என்று யோவான் எழுதின சுவிசேஷம் மூன்றாம் அதிகாரம் மூன்றாம் வசனம் மிகவும் தெளிவாக சொல்லுகிறது….ஆகையினால தொடர்ந்து நம்ம உபவாச ஜெபத்துக்கு வாங்க கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.

நம்ம வீட்டுல அவிய வந்த பின்ன கேட்டு செல்லுதேன்.

“கலப்பையில் கை வைத்தபின் பின்னிட்டு பாராதே” என்று கர்த்தர் சொல்லுகிறார், “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுக்கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்று அப்போஸ்தலருடைய நடபடிகள் 2: 38 சொல்வதை வாசித்துப்பாருங்கள்.

இன்ச வீட்டில எல்லாரும் ஞாலஸ்னானம் எடுத்திருக்கியோம்.

“பிஸாசானவன் எவனை விழுங்கலாமென்று கெர்சிக்கிற சிங்கம் போல் அலைந்து திரிகிறான்” கிறிஸ்தவர்கள் மீதுதான் அவனது பார்வை இருக்கிறது. மாற்கு 1: 10 “அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே” என்று சொல்லுவது எதைக் காட்டுகின்றது?

முழுக்கி ஞானஸ்னானம் எடுக்கப்பிடாதுண்ண்னாக்கு நாட்டேரு செல்லுதாரு.

ஆண்டவரது சித்தத்துக்கு விரோதமாக நாம் செயல் படக்கூடாது. பார்வோன் தனது இருதயத்தை கடினப்படுத்தினதின் நிமித்தமாக தன்னுடைய தலைப்பிள்ளையை இழந்துபோனான்….. வாதை அவன் கூடாரத்தில் இருந்தது…. கர்த்தரின் இரக்கத்தை அவன் இழந்துபோனான்.

பேடியாயிருக்கு…. பெண்ணுக்கு மாப்பிள்ள பாக்கணும்…

பயப்படாதீங்க! ஜெபத்துல வைப்போம். நீங்க தசமபாகம் மட்டும் குடுங்க, நகை கேட்காத ஒரு நல்ல பையனா கர்த்தர் நமக்கு காண்பிப்பார். இன்றைக்கு முழுஇரவு ஜெபம் இருக்கு உங்க மகள கூட்டீட்டு வாங்க விசேஷித்த ஜெபத்தை ஏரெடுப்போம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் அம்மா…ஆட்டுக்குட்டியானவருடைய ரத்தத்தை நான் இந்த வீட்டின் நிலைக்கால்களில் பூசுகிறேன்….

ஓ நானும் மோளுமாட்டு அஞ்சோட்டு வல்லாம்…

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

சபரிமலை பயணம் – ஒரு முழுமையான ஆராதனை

பிப்ரவரி 13, 2009

நானும் என் மனைவியுமாக ஜனவரி இரண்டாம் தியதி மும்பையிலிருந்து கன்னியாகுமரி திரும்பிக்கொண்டிருந்தோம். ஆறாவது மாத கருவை அவள் சுமந்து கொண்டிருப்பதால் என்னுள்ளே ஒரு பதட்டம். மருத்துவர் ஆம்ருதா அவர்கள் எங்களை அழைத்து வழியிலே சாப்பிடவேண்டிய மாத்திரைகளை கொடுத்திருந்தார்கள். பயணம் இனிதே இருந்தது. வீட்டிற்கும் செல்லும் மகிழ்சி மாதிரமல்ல, முதல் கிறிஸ்மஸ் கொண்டாட தவறியதால் பெற இருக்கும் வெகுமதிகளை குறித்து பேசியபடியே சென்றோம்.

ஜாஸ்மினை பத்திரமாக கொண்டு விடுவது எனக்கு பெரிய கவலையாக இருந்தது. தவறுதலாக ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதே என் பிரார்த்தனையாக இருந்தது. அவள் தூங்குமட்டும் அவளொடு இருப்பதும் தூங்கிய பின்பு அவளருகில் இருந்து வாசிப்பதும், வாசலில் இருந்து வேடிக்கை பார்ப்பதுமாக நேரம் சென்றது.

இரவு சுமர் 7 மணிக்கு மெல்லிய பாடல் சப்தம் கேட்டதால் பக்கத்து பெட்டிக்குள் நுழைந்து பார்த்தேன். வெள்ளைத் தலை முடிகளுடன் கருப்பு உடையணிந்த பெண்களும் ஆண்களும் பாடிக்கொண்டிருந்தனர். வாழ்வில் நாம் பெறும் அதிசய தருணங்களில் அது ஒன்று என்றே பட்டது. என் மனதை மயக்குவதாக இருந்த அந்த பஜனில் நான் மூழ்கியபடியே உட்கார்ந்து விட்டேன்.

பாடல்கள் எப்போதுமே இறைவன் வசம் நம்மை இட்டுச்செல்வன. கிறிஸ்தவம் பாடல்கள் மீதுதான் தன்னை நிறுவியுள்ளது. பாடல்களில் காணப்படும் இறைத்தன்மையே கிறிஸ்தவ பற்றாளர்களாலும் புரிந்துகொள்ளத்தகுந்ததாக காணப்படுகிறது. சி எஸ் ஐ, மெதடிஸ்ட் திருச்சபையில் பாமாலை கீர்த்தனைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாது ஆராதனை நடை பெறுவது இல்லை.

எனது இறையியல் கல்லூரியின் நாட்களில் தான் நான் முதன் முதலாக பஜன் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. கிறிஸ்தவ பஜன்களை மாணவர்களே இயற்றி அவைகளை இசை கோர்ப்பு செய்து ஒலிநாடவாக வெளியிடுவார்கள். தினமும் காலை ஆராதனை பஜனுடனே ஆரம்பிக்கும். ஆர்மோனியம் மற்றும் தபேலா போன்ற இந்திய இசைக்கருவிகளை தரையில் அமர்ந்தபடி இசைக்க, ஒருவர் பாடுவதை நாங்கள்  வரிக்கு வரி தொடர்ந்து பாடுவோம்.

பல வருடங்களாக நான் இழந்த அந்த இனிமையான கீதங்களை எனக்கு மீட்டுக்கொடுக்கும் ஒரு நிகழ்வாக அந்த இரயில் பயணம் இருந்தது. திருச்சபையின் தாய்மார் கூட்டதில் காணப்படும் ஒரு சாந்தம், இறைவன் அருகில் வரும் உருக்கம் எல்லாம் நிறைந்த ஒன்றாக அது இருந்தது.குறிப்பாக பக்தி பெருக்கு என்பது கட்டறுந்து செல்லாத சமநிலையில் அது காணப்பட்டது.

நான் அமைதியாக ஒரு பாட்டியின் அருகில் சென்று அமர்ந்தேன். என்னைப்பார்த்து  புன்னகைத்தபடியே அவர்கள் பாட்டை தொடர்ந்து பாடினார்கள். பெரும்பாலான வார்த்தைகள் நான் கீர்த்தனை வழியாக அறிந்துகொண்டவை. திருச்சபையின் ஆதிக்காலத்தில் எவ்விதமாக இந்திய இறையியலின் கோட்பாடுகளை எளிமையாக உள்வாங்கியிருக்கிறார்கள் என்பது பிரமிப்பாக இருந்தது. இன்றைக்கு திருச்சபையில் பஜன் பாடுவது அத்தனை எளிய காரியம் கிடையாது. பொதகரை மாற்றிவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள்.

மிக நேர்த்தியாக கருப்பு சாரி அணிந்த ஒரு பாட்டி தனது நொட்டு புத்தகத்திலிருந்து பாடல்களை படிக்க தொடர்ந்து ஆண்களும் பெண்களுமாக பாடிக்கொண்டு வந்தனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் அவர் தொடர்ந்து பாடிக்கொண்டிருக்க எனது ஐம்புலன்களும் நான் திருச்சபையின் ஆராதனையில் கலந்துகோண்டிருப்பதாகவே எனக்கு உணர்த்தியது.

பாடல்கள் முடிந்தவுடன் ‘குருசாமி’ அனைவருக்கும் வாழைப்பழத்தை ப்ரசாதமாக வழங்கினார். நான் நழுவத்துவங்கினேன். என்னைப்பார்த்து புன்னகைத்த பாட்டி என்னை இருக்கும்படி வர்ப்புறுத்தி, தனது பழத்தில் சரிபாதியை எனக்கு கொடுத்தார்கள். வாங்கிக்கொள்ளலாமா என்கிற தயக்கம் ஒருபுறம் இருந்தாலும், அன்பின் நிமித்தமாக மறுக்காமல் வாங்கிக்கொண்டேன்.

என்னைக் கவனித்த மற்ற பாட்டிகள் என்னோடு பேசினார்கள். நான் என்னை ஒரு போதகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன், அவர்களது பாடல்கள் இனிமையாக இருந்தன என்றேன். உற்சாகமடைந்த அவர்கள் என்னை ஒரு பாடல் பாட சொன்னார்கள். நான் எந்த கிறித்துவ பாடல்களைப்பாடினாலும் அந்த தருணத்திற்கு ஒவ்வாது என்பதால் எனது இறையியல் கல்லூரியில் பயின்ற ஒரு பஜனைப் பாடினேன். என்னைத்தொடர்ந்து அவர்கள் பாடினது இன்னும் அருமையாக இருந்தது.

என்னைபற்றி இன்னும் அதிக விபரங்களை கேட்டவர்கள் எனது மனைவி குழந்தை உண்டாகியிருக்கிறாள் என்றதும் என்னை சந்தோஷத்துடன் வாழ்த்தினது ஆராதனையின் நிறைவுப்பகுதிபோல் காணப்பட்டது. மதரீதியாக அவர்கள் தங்கள் குழுவை விட்டு நீங்கி இருப்பது சரியில்லை ஆதலால் அவர்கள் என் மனைவியைப் பார்க்க வரவில்லை அவ்வளவுதான்.

இறையியல் கல்லூரியில் பயிலும் பலவற்றை திருச்சபை ஏற்றுக்கொள்ளத் தயங்கலாம், புறக்கணிக்கலாம், ஆனால் நம்மை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனம் படைத்த மக்கள் வாழும் தேசத்தில் நாம் வாழ்வது இறைவன் கொடுத்த வரமல்லவா?

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com


%d bloggers like this: