சபரிமலை பயணம் – ஒரு முழுமையான ஆராதனை


நானும் என் மனைவியுமாக ஜனவரி இரண்டாம் தியதி மும்பையிலிருந்து கன்னியாகுமரி திரும்பிக்கொண்டிருந்தோம். ஆறாவது மாத கருவை அவள் சுமந்து கொண்டிருப்பதால் என்னுள்ளே ஒரு பதட்டம். மருத்துவர் ஆம்ருதா அவர்கள் எங்களை அழைத்து வழியிலே சாப்பிடவேண்டிய மாத்திரைகளை கொடுத்திருந்தார்கள். பயணம் இனிதே இருந்தது. வீட்டிற்கும் செல்லும் மகிழ்சி மாதிரமல்ல, முதல் கிறிஸ்மஸ் கொண்டாட தவறியதால் பெற இருக்கும் வெகுமதிகளை குறித்து பேசியபடியே சென்றோம்.

ஜாஸ்மினை பத்திரமாக கொண்டு விடுவது எனக்கு பெரிய கவலையாக இருந்தது. தவறுதலாக ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதே என் பிரார்த்தனையாக இருந்தது. அவள் தூங்குமட்டும் அவளொடு இருப்பதும் தூங்கிய பின்பு அவளருகில் இருந்து வாசிப்பதும், வாசலில் இருந்து வேடிக்கை பார்ப்பதுமாக நேரம் சென்றது.

இரவு சுமர் 7 மணிக்கு மெல்லிய பாடல் சப்தம் கேட்டதால் பக்கத்து பெட்டிக்குள் நுழைந்து பார்த்தேன். வெள்ளைத் தலை முடிகளுடன் கருப்பு உடையணிந்த பெண்களும் ஆண்களும் பாடிக்கொண்டிருந்தனர். வாழ்வில் நாம் பெறும் அதிசய தருணங்களில் அது ஒன்று என்றே பட்டது. என் மனதை மயக்குவதாக இருந்த அந்த பஜனில் நான் மூழ்கியபடியே உட்கார்ந்து விட்டேன்.

பாடல்கள் எப்போதுமே இறைவன் வசம் நம்மை இட்டுச்செல்வன. கிறிஸ்தவம் பாடல்கள் மீதுதான் தன்னை நிறுவியுள்ளது. பாடல்களில் காணப்படும் இறைத்தன்மையே கிறிஸ்தவ பற்றாளர்களாலும் புரிந்துகொள்ளத்தகுந்ததாக காணப்படுகிறது. சி எஸ் ஐ, மெதடிஸ்ட் திருச்சபையில் பாமாலை கீர்த்தனைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை இல்லாது ஆராதனை நடை பெறுவது இல்லை.

எனது இறையியல் கல்லூரியின் நாட்களில் தான் நான் முதன் முதலாக பஜன் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது. கிறிஸ்தவ பஜன்களை மாணவர்களே இயற்றி அவைகளை இசை கோர்ப்பு செய்து ஒலிநாடவாக வெளியிடுவார்கள். தினமும் காலை ஆராதனை பஜனுடனே ஆரம்பிக்கும். ஆர்மோனியம் மற்றும் தபேலா போன்ற இந்திய இசைக்கருவிகளை தரையில் அமர்ந்தபடி இசைக்க, ஒருவர் பாடுவதை நாங்கள்  வரிக்கு வரி தொடர்ந்து பாடுவோம்.

பல வருடங்களாக நான் இழந்த அந்த இனிமையான கீதங்களை எனக்கு மீட்டுக்கொடுக்கும் ஒரு நிகழ்வாக அந்த இரயில் பயணம் இருந்தது. திருச்சபையின் தாய்மார் கூட்டதில் காணப்படும் ஒரு சாந்தம், இறைவன் அருகில் வரும் உருக்கம் எல்லாம் நிறைந்த ஒன்றாக அது இருந்தது.குறிப்பாக பக்தி பெருக்கு என்பது கட்டறுந்து செல்லாத சமநிலையில் அது காணப்பட்டது.

நான் அமைதியாக ஒரு பாட்டியின் அருகில் சென்று அமர்ந்தேன். என்னைப்பார்த்து  புன்னகைத்தபடியே அவர்கள் பாட்டை தொடர்ந்து பாடினார்கள். பெரும்பாலான வார்த்தைகள் நான் கீர்த்தனை வழியாக அறிந்துகொண்டவை. திருச்சபையின் ஆதிக்காலத்தில் எவ்விதமாக இந்திய இறையியலின் கோட்பாடுகளை எளிமையாக உள்வாங்கியிருக்கிறார்கள் என்பது பிரமிப்பாக இருந்தது. இன்றைக்கு திருச்சபையில் பஜன் பாடுவது அத்தனை எளிய காரியம் கிடையாது. பொதகரை மாற்றிவிட்டுதான் மறுவேலை பார்ப்பார்கள்.

மிக நேர்த்தியாக கருப்பு சாரி அணிந்த ஒரு பாட்டி தனது நொட்டு புத்தகத்திலிருந்து பாடல்களை படிக்க தொடர்ந்து ஆண்களும் பெண்களுமாக பாடிக்கொண்டு வந்தனர். தமிழ் மற்றும் மலையாளத்தில் அவர் தொடர்ந்து பாடிக்கொண்டிருக்க எனது ஐம்புலன்களும் நான் திருச்சபையின் ஆராதனையில் கலந்துகோண்டிருப்பதாகவே எனக்கு உணர்த்தியது.

பாடல்கள் முடிந்தவுடன் ‘குருசாமி’ அனைவருக்கும் வாழைப்பழத்தை ப்ரசாதமாக வழங்கினார். நான் நழுவத்துவங்கினேன். என்னைப்பார்த்து புன்னகைத்த பாட்டி என்னை இருக்கும்படி வர்ப்புறுத்தி, தனது பழத்தில் சரிபாதியை எனக்கு கொடுத்தார்கள். வாங்கிக்கொள்ளலாமா என்கிற தயக்கம் ஒருபுறம் இருந்தாலும், அன்பின் நிமித்தமாக மறுக்காமல் வாங்கிக்கொண்டேன்.

என்னைக் கவனித்த மற்ற பாட்டிகள் என்னோடு பேசினார்கள். நான் என்னை ஒரு போதகர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன், அவர்களது பாடல்கள் இனிமையாக இருந்தன என்றேன். உற்சாகமடைந்த அவர்கள் என்னை ஒரு பாடல் பாட சொன்னார்கள். நான் எந்த கிறித்துவ பாடல்களைப்பாடினாலும் அந்த தருணத்திற்கு ஒவ்வாது என்பதால் எனது இறையியல் கல்லூரியில் பயின்ற ஒரு பஜனைப் பாடினேன். என்னைத்தொடர்ந்து அவர்கள் பாடினது இன்னும் அருமையாக இருந்தது.

என்னைபற்றி இன்னும் அதிக விபரங்களை கேட்டவர்கள் எனது மனைவி குழந்தை உண்டாகியிருக்கிறாள் என்றதும் என்னை சந்தோஷத்துடன் வாழ்த்தினது ஆராதனையின் நிறைவுப்பகுதிபோல் காணப்பட்டது. மதரீதியாக அவர்கள் தங்கள் குழுவை விட்டு நீங்கி இருப்பது சரியில்லை ஆதலால் அவர்கள் என் மனைவியைப் பார்க்க வரவில்லை அவ்வளவுதான்.

இறையியல் கல்லூரியில் பயிலும் பலவற்றை திருச்சபை ஏற்றுக்கொள்ளத் தயங்கலாம், புறக்கணிக்கலாம், ஆனால் நம்மை ஏற்றுக்கொள்ளும் திறந்த மனம் படைத்த மக்கள் வாழும் தேசத்தில் நாம் வாழ்வது இறைவன் கொடுத்த வரமல்லவா?

காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

Advertisements

குறிச்சொற்கள்:

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: