உப்பு


மீரா ரோடு தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி படிகளில் ஏறும்போது காணும் உப்பளம் ஒரு சிறந்த விவிலிய கொட்பாட்டை நினைவுபடுத்தியபடியே இருக்கும். பாத்திகளில் விளையும் உப்பும், சேர்த்து பனிமலைப்போல் குவித்துவைத்திருக்கும் உப்பும் அங்கு வாழும்/ வேலைசெய்யும் மக்களும் நாம் கவனிக்கத்தக்கவர்கள் எனும் எண்ணம் உமிக்கரியில் சேர்த்த உப்பைபோல என் சிந்தனைகளை துலக்கிக்கோண்டிருந்தது. ஓரு நாளாவது திருச்சபை வாலிபர்களை இந்த இடத்திற்கு அழைத்து வந்து அவர்களது வாழ்வின் அர்த்தத்தை புரிந்துகொள்ளச்செய்வது என்னும் பாரம் என்முதுகில் ஏறிய உப்புமூட்டையாகவே இருந்தது.

கிரேக்க இதிகாசமான இலியட்டை எழுதிய ஹோமர் உப்பு “தெய்வீகமானது” என்றும், தத்துவ ஞானியான பிளேட்டோ “கடவுளுக்கு பிரியமானது” என்றும் கூறுவதை நாம் புறந்தள்ள இயலாது. திருவிவிலியத்தில் கூட, இறைவனுக்கு அளிக்கும் உணவுப்படையலில்(லேவியர் 2:13), எரிபலியில் (எசேக்கியேல் 43:24), நறுமண தூபத்தில் (விடுதலைப் பயணம் 30:35) கோவில் குருக்களுக்கு தேவையான உப்பை மக்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் (எஸ்ரா 6:9) எனவும் அறுதியிட்டுக் கூறவில்லையா? நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள் (மத் 5:13அ, பொ. மொழி) எனும் திருவிவிலிய வாக்கியம், வாழ்வில் அனேகம் தரம் நாம் கடந்து வந்தது. உப்பு தன்னை உணவில் கரைத்து சுவையால் நிறைப்பது போல, நாமும் நம்மை மறைத்து பிறர் வாழ்வை சுவை மிகுந்த ஒன்றாக மாற்றுவது கிறிஸ்தவர்களாகிய நம்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது. திருச்சபையின் தாய்மார்களுக்கு மிகவும் பரிச்சியமான இந்த வாக்கியம் அதன் தொடர்ச்சியான கருத்துக்களோடு புரிந்துகொள்ளப்பட்டுள்ளதா எனும் கேள்வி எழும்பினால் நமது பதில் திருப்தி அளிக்கக்கூடியதாய் அமையுமா என்றால் சந்தேகமே.

உப்பின் தன்மை அது தன்னை பிரம்மாண்டமான கடலிலிருந்து பிரித்துக்கொள்வதில் இருந்து வருகிறது. ஒரு நீண்ட பயணத்தை அது கடலிலிருந்து பூமினோக்கி பின்னோக்கி வருவதே ஒரு ஆன்மீக வாழ்வின் முதற்படியாக இருப்பதைக் காண்கிறோம். பூமியிலுள்ள உப்புதான் நீரால் இழுத்துசெல்லப்பட்டு கடலிலே உப்புதன்மையை நிறைப்பதை அறிந்த நமக்கு, ஆன்மீக வாழ்விலும் இறைவனிடைருந்து வந்த நாம் பாவ உலகில் இருந்து மீண்டு, மீண்டுமாக நமது தூய உருவை பெற்றுக்கொள்ளும் நிகழ்வே நமது ஆன்மீக வாழ்வு. இதற்கு உதவி புரிபவர்களே உப்பள பணியாளர்கள் எனும் போதகர்கள்.

அலைபாய்ந்துகொண்டிருந்த நம்மை முறைப்படுத்தி, வழிநடத்தி முழுமைபடுத்தும் வரைக்கும் நாம் நம்மை முழுவதுமாக இந்த தவத்திற்கு ஒப்புக்கொடுக்காவிட்டால், நமது முழுமை என்பது கேள்விக்குறியாகிவிடும். அலை அடித்து எழும்பும் நம்மை சாந்தப்படுத்தும் பாத்திகளுக்குள் கட்டுப்படுத்துவது, அமைதியும் கட்டுப்பாடுகளும் கடும் அக்கினியென காயும் வெயில் போன்றவற்றை உள்ளடக்கிய மாபெரும் தவம் இது. இந்த தவம் நம்மை முழுவதுமாக மாற்றுவது. அதற்காக நமது பொறுமையை வேண்டுவது.

உப்பின் தவத்திற்கு கிடைத்த பெருமை தான் என்ன? உப்பு எப்போது முழுமை அடைகின்றதோ அப்போதே அது தன்னை இழக்க தயாராகின்றது. அது பிறர் வாழ்வை சுவைபடுத்திவிட்டு தனக்கான வாழ்வை இழந்துவிடுகிறது. தன்னை அழித்துக்கொள்வதில் அது பெறும் நிறைவே அதன் பிறவிப்பயன் என்பதில் எந்த ஐயமும் இல்லை.”அவர் உப்பைத் தின்று வளர்ந்தவன்” என்ற சொல்லாடல் ஒருவர் தான் பெற்ற நன்மையை நினைவுகூறும் வார்த்தைகளன்றி வேறென்ன?

 திருவிவிலிய வாக்கியம் இன்னும் முழுமை பெற்றுவிடவில்லை. “உப்பு உவர்ப்பற்று போனால் எதைக்கொண்டு அதை உவர்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது” (மத் 5:13 ஆ, பொ. மொழி)

 உலகம் முழுவதும் பலநிறங்களில் உப்பு காணக்கிடைப்பது மனிதனை ஒத்த அதன் தன்மையை வெளிப்படுத்துகிறது மாத்திரம் அல்ல இயேசுவின் கூரிய அவதானிப்பும் தான். சிவந்த நிறமுள்ள உப்பாகட்டும், கரிய நிற உப்பாகட்டும் இல்லை நாம் உபயோகிக்கும் வெண்மையான உப்பகட்டும், தனது சுவை கொடுக்கும் தன்மையை இழந்துபோனால் அதன் முடிவு எவ்வாறு இருக்கும் என்று இயேசு தனது தெளிந்த அறிவுரையை மானிடர்களுக்கு இந்த வாக்கியத்தின் மூலமாகக் வழங்குகிறார்.

மனித உடல் உப்பின்றி வாழ இயலாது; அவ்வாறே மிருகங்களும். யானை மண்ணைத்தோண்டி உப்பை உண்பதும், நாம் வீடுகளில் வளர்க்கும் ஆடு மாடுகளுக்கு தண்ணீர் வைக்கும்போது உப்பிட்டுகொடுப்பதும் நாமறிந்தது. மூணாரில் உள்ள ராஜமலையில் காணப்படும் வரையடுகள் மனிதர்களோடு பழகும் விதத்தை நான் கண்டு அதிசயித்த போது, எனது நண்பரும் இயற்கை ஆர்வலருமான முனைவர் கிறிஸ்டோபர் கூறினது ” அது உப்பு கொடுத்து பழக்கப்படுத்தப்பட்ட தலைமுறை, மனிதர்கள் அருகில் வராத வரையாடுகளும் உண்டு”.

உப்பின் குணமின்றி வாழ்தல் என்பது ஒரு செத்துப்போன வாழ்வாகவே இயேசு கருதுகிறார். நாம் நம்மை பிறருக்கென்று அற்பணிக்க தவறினோமென்றால், அந்த வாழ்வு நம்மை நாமே இறைவனுக்கு அற்பணிக்காத சுவையற்ற வாழ்வாகும்.

உப்பை சம்பளமாக ரோம போர் வீரர்களுக்கு கொடுக்கப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது; வரலாற்றில் உப்பு பொன்னுக்கு சமமாக விற்பனையாகி இருக்கும்போது: எதிராளிமீது போர்தொடுக்கும் காலம், உப்பு வரத்தை தடை செய்வது போன்ற நிகழ்வுகள் உப்பை இயேசு நாதர் மனிதனுடன் ஒப்பிடுவதில் உள்ள உயரிய நோக்கத்தை அறியலாம்.

என் சிறுவயதில் கடைகளுக்கு முன்பதாக ஆதரவற்று இருக்கு ஒரே பொருள் உப்பு சாக்குதான். உப்பை ஒருவரும் திருட முடியாத அளவு அதன் விலை மிகவும் மலிவாக இருந்தது. உப்பாக இருப்பதன் அர்த்தம் மிகவும் எளிமையாக இருப்பதுதான் இல்லையா?

 சரிதான், மனிதன் விலையேறப்பெற்றவன்; எனினும் எளிமையானவன், அவன் அன்பை கண்ணீராலும், கடமையை வியர்வையாலும், தியாகத்தை இரத்தத்தாலும் – உப்பின் சுவையுடன் அளிப்பதால் மனிதன் மண்ணுலகிற்கு உப்பயிருக்கிறான்.

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyrah_project@yahoo.com

09870765181 (மும்பை)

Advertisements

குறிச்சொற்கள்: ,

2 பதில்கள் to “உப்பு”

 1. micyell Says:

  ஹலோ பாஸ்ட்டர்,

  வாழ்த்துக்கள்.

  உங்களை மாதிரி பத்து பாஸ்ட்டர்கள் உருவாகி, கடைசி வரையும் இப்படியே இருந்தால் நம்ம திருச்சபை உருப்படும்.

  உங்களைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்க.

  தெற்கே வந்தால் சொல்லுங்க, நான் உங்களை சந்திக்க வேண்டும்.

  நான் திருநெல்வேலியில் இருக்கிறேன்.

 2. pastorgodson Says:

  அன்புள்ள சகோதரருக்கு!
  உங்கள் ஆதங்கமே எனக்கும்! உங்களைப்போன்ற பத்து திருச்சபையார் இருந்தால் கருப்பாடுகளே உள்ளே நுழைய இயலாதில்லையா? என்ன செய்வது. இருவருமாக சந்திப்போம் நல்ல போதகர்களை நான் அடையாளம் காட்டுகிறேன், உங்களைப்போன்ற நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்யுங்கள் அனைவருமாக சேர்ந்து திருச்சபையை சுத்தப்படுத்துவோம்.
  கடவுள் இன்று ஈவாக எனக்கு ஒரு ஆண்மகனைத் தந்தார், என்னோடு கூட நீங்களும் மகிழுவீர்கள் என நம்புகிறேன்.
  அருட் திரு காட்சன் சாமுவேல்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: