மும்பை ஒரு எச்சில் நகரம். காலை முதல் பின்னிரவுவரை அது உமிழ்ந்துகொண்டே இருக்கிறது. அதன் உமிழ்நீர் பெருக்கெடுத்து நகர்வலம் வருகின்றன, வண்ண ஃப்ளெக்சி போர்டைவிட தீற்றல்கள் நிறைந்த பூமியிது. தொடர் வண்டி, அதன் நிலையங்கள், அதன் நடைபாதைகளின் ஓரங்கள், அரசு அலுவலகங்கள், அதன் சுவர்கள், அடுக்குமாடிக் குடியிருப்பின் படிகளின் முக்குகள் என அவை வியாபித்திருக்கின்றன.
எச்சில் வரலாறு முக்கியமானதில்லை என நாம் புறந்தள்ளிவிட இயலாது. காலை எழுவது முதல் இரவு படுப்பது வரை மென்று கொண்டிருப்பதே “டைம் பாஸ்” என எண்ணும் மக்கள் திரள், மாண்ணின் மைந்தர்கள், வந்தேரிகள் என அது ஒரு பெரும் ஜாதி. எனினும் ஒருவரும் அவர்களை குறைத்து மதிப்பிடக் கூடாது, நாம் நமது பங்கிற்கு ‘அவல்’ மெல்லுகிறோமில்லையா? அதுபோலத்தான் அவர்களுக்கு ‘அவல்’ மெல்லும் நேரத்தில் “வேறு ஏதாவது” மெல்லமுடியுமானால் அன்றைய நாள் இனிய நாளாக வழிந்துவிடும். மன்னிக்கவும் கழிந்துவிடும். உழைப்பின் பக்கவாத்தியம் தானே மெல்லுதல் என்னும் புரிதலோடே மெல்லுகிறார்கள்.
சமீபத்தில் ஊருக்குச் சென்றிருந்த போது தக்கலையிலுள்ள ஒரு பழைய பொருட்களை வாங்கும் கடையில் பழைய பித்தளை வெற்றிலைத்தட்டை விலைக்கு வாங்கினேன். அதற்கு மூன்று கால்கள் இருந்தன. மிகவும் ரசனையுடன் நமது முன்னோர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என எண்ணியபடியே அந்த கடைக்காரரிடம் “அண்ணே! நா இது போல இதுவரப் பாத்ததே இல்ல! சாப்பாட போட்டு சாப்பிடும்போது சப்போட் வேற அழகாக குடுத்திருக்காங்க” என்றேன். என்னோடு நன்கு பழகியவர் ஆனபடியால், ஸ்னேகமாக என்னைப் பார்த்துவிட்டு, “நீங்க, இதப் பாத்ததில்லியா? பத்திருபது வருஷத்துக்கு மின்னால எல்லா வீட்டுலயும் இத வைச்சிருப்பாங்க, வெத்தில தட்டுண்ணு செல்லியத கேட்டுட்டில்லியா?” என்றார்.
நான் அதை அபூர்வமான ஒரு பொருள் எனக்கருதி அதைப் பார்த்தபடி அதன் அழகில் மயங்கி வாங்கிக் கொண்டேன். வீட்டில் வந்து அம்மவிடம் அதைக் காட்டி இது என்னவென்று கேட்டேன். உடனே சொல்லிவிட்டார்கள் “வெத்தில தட்டு”. எப்படிமா உங்களுக்கு தெரியும்? தாத்தா பெரிய பிரசங்கியாரில்லையா? எப்படி இதை பார்த்திருக்கிறீர்கள்? உங்கள் வீட்டில் இதை வைக்க தாத்தா அனுமதித்திருக்க மாட்டார்களே, எங்கே பார்த்தீர்கள்? என அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டேன். ” சாதாரணமா எல்லார் வீட்லயும் இருக்கும்” அம்மா எந்த வித அதிசய முகபாவமும் காட்டாமல், இது கூட உனக்குத்தெரியாதா என்பதுபோல என்னைப் பர்த்தார்கள்.
நமது மூதாதையர்கள் வெற்றிலை குதப்பியிருக்கிறார்கள் என்பதும், அதையும் வரவேற்கும் விதமாக ஒரு சடங்காக கொண்டாடியிருக்கிறார்கள் என்பதும் எனக்கு ஒரு ஆச்சரியத்தகவலே. வெற்றிலை பாக்கு வைத்து கூப்பிடுவது விசேஷித்த தருணங்களில் தான் என்பதை எண்ணும்போது ஒரு முரண்பாடான கருத்து அதனுள் ஒட்டிகொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது.
முகத்தில் எச்சில் உமிழ்தல் கண்ணியமற்றது என்பதை நம் கலாச்சாரத்தில் மட்டுமல்லாமல் திருவிவிலியத்திலும் நாம் காண இயலும்.
….”அவள் தந்தை அவள் முகத்தில் காறித் துப்பியிருந்தால், ஏழுநாள்கள் அவள் வெட்கப்படவேண்டாமோ? பாளையத்துக்குப் புறம்பே அவள் ஏழு நாள்கள் விலக்கப்பட்டிருக்கட்டும்; அதன் பின் அவள் உள்ளே கொண்டுவரப்படலாம்” என்றார் (எண்ணிக்கை 12 : 14)
அவன் அண்ணி அவனை அணுகி, தலைவர்களின் கண்முன்பாக, அவன் காலிலுள்ள மிதியடிகளைக் கழற்றி, அவன் முகத்தில் துப்பி, ” தன் சகோதரனின் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படும்” என்று கூறுவாள். (இணைச் சட்டம் 25 : 9)
என்னை அவர்கள் அருவருக்கின்றனர்; என்னை விட்டு விலகிப் போகின்றனர்; என் முன் காறித்துப்பவும் அவர்கள் தயங்கவில்லை (யோபு 30 : 10)
பின்பு அவருடைய முகத்திலே துப்பி அவரைக் கையால் குத்தினார்கள்….(மத்தேயு 26 : 67)
அவர்மெல் துப்பி, அக்கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர் (மத்தேயு 27 : 30)
எச்சில் என்பது நாம் வெறுக்கத்தக்க ஒன்று மட்டுமே என நினைபது தான் தவறு. எச்சில் அதற்கேற்ற இடங்களில் தனது நிலைகளை வெகுவாக மாற்றிக்கொண்டுள்ளதை உணர்ந்தப்போது நான் அப்படியே சந்தோஷத்தில் குதித்துவிட்டேன். ஆம்! “இயேசு துப்புகிறார்” என்பது ஒரு ஆழ்ந்த இறையியல் நோக்கி நம்மை அழைக்கும் ஒரு வெற்றிலைத்தட்டுடன் நிற்கிறது.
“அழைக்கப்பட்டவர்கள் அனேகர் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர்” என்பதை உணர்ந்து “முறுக்கான முறுக்கப் போவோம்!”
எனது நண்பன் ஒருவன் பாலியல் தொழிலாளர்களை கண்டுபிடிக்கும் எளிய அடையாளமாக அவர்கள் வெற்றிலை குதப்புவார்கள் என நான் கல்லூரியில் படிக்கும் போது சொல்லியிருந்தான். நான் தொண்டு நிறுவனத்தில் சேர்ந்த போது, எய்ட்ஸ் நோயுற்றோருக்கான நல்வழ்வு திட்டங்களை செய்து கொண்டிருந்த ஒரு சக ஊழியரிடம் எனக்கு ஒரு பலியல் தொழிலாளியைப் பார்க்க வேண்டும் என்றேன். என்னை உடுருவிப் பார்த்த அனுபவமிக்க அவர் கூறியது என்னவென்றால், “நமது சகோதரிகளைப் போன்றும், தாயைபோன்றுமே அவர்கள் இருப்பர்”. துணுக்குற்ற எனக்கு அதன் அத்தத்தை புரிந்து கொள்ள சற்று நேரம் பிடித்தது.
காதலர்களுக்க்கிடையேயான எச்சில் பறிமாற்றம், தாய் குருவி தன் குஞ்சிற்கு அளிக்கும் எச்சில் இரை, மாற்று திறன் பெற்றவர்கள் கட்டுப்படுத்த இயலாத எச்சில் ஒழுக்கு, கர்த்தருடைய பந்தியில் நாம் ஒரே பாத்திரத்தில் பங்கு பெறுவது என அது ஐக்கியத்தின், அன்பின், வாழ்வின், நிதர்சனத்தின், நெருக்கத்தின் அடிப்படையான உணர்வுகளை துல்லியமாக கோடிட்டுக் காட்டுகிறது.
மாற்கு ஏழு மற்றும் எட்டு அத்தியாயங்களில் காணப்படும் இயேசு துப்புகின்ற நிகழ்வுகள் எச்சிலை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது என அறிவுறுத்துகின்றன. இயேசு ஏன் அதைச் செய்தார் எனும் கேள்வி இவ்விடங்களில் எழுப்பப்படுவதை விட, எவ்வித கரிசனையுடன் அவர் செய்தார் என் கண்டு கொள்வதே அதன் இறையியல் அடிப்படை என்பது என் தாழ்மையான கருத்து.
இயேசு துப்பி குணமாகிய இருவரில் ஒருவர் பார்வை அற்றவர் மற்றொருவர் திக்கிப் பேசுபவர். இருவரையுமே இயெசு தனியாக ஊருக்கு வெளியே அழைத்துக்கொண்டு போய் துப்பி அவர்களைக் குணப்படுத்துகிறார். எச்சில் குறித்த மக்களின் மன பிம்பங்க்களை அவர் சரிவரப் புரிந்திருந்ததினால் தான் அவர் இவ்விதமாக பொது இடங்களில் அவர்களை குணப்படுத்தாமல் தனியாக அழைத்துச்சென்றிருக்க வேண்டும்.
குணப்படுதல் என்பது ஒரு தனி நபர் சார்ந்த அனுபவம். அந்த அனுபவத்தைப் பெறாதவர்கள் வாய் பயனற்று அசைந்துகொண்டிருக்கிறது. இயேசுவுக்கு தெரிந்திருக்கும் “ஊர் வாயை மூட முடியுமா என்ன?”
( எச்சரிக்கை: “இயேசு துப்புகிறார்” என்ற பெயரை காப்புரிமை செய்துள்ளோம்! ஆகவே யாரும் “இயேசு துப்புகிறார்” எனும் பெயரிலே ஊழியம் செய்வதோ, தொலைக்காட்சி நிகழ்வுகளை நடத்துவதோ, இதழ்களை அச்சிடுவதோ தடைசெய்யப்பட்டிருக்கிறது. எனினும் பெருந்தொகை கொடுத்து இந்த அரியப் பெயரை வாங்க விரும்புபவர்கள் ஆசிரியரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்)
அருட் திரு காட்சன் சாமுவேல்
தொடர்பிற்கு
You must be logged in to post a comment.