சினிமா கிறிஸ்தவம்


வேதகோட்டவிளை திரு மோகன்குமார் உன்னத சிறகுகளில் எழுதிய ‘வென்னீர் தவளைகள்’ உண்மையிலேயே என்னை சிந்திக்க வைத்தது. புதிய ஒரு கோணத்தை அவர் உள்வாங்கி தனது கருத்தை வெளியிட்டிருந்தாலும் அவை ஒரு சராசரி கிறிஸ்தவன் கொண்டுள்ள தி(தா)ரைக் கண்ணோட்டம் போன்றே வெளிப்படுகிறது. ஒரு வகையில் பண்பாட்டுக் காவலர்களின் குரலைப்போன்று ஒலிக்கிறதே அல்லாமல், ஆழமாக ஊடுருவி நோக்கத்தக்க, வேத அடிப்படையான காரணிகளைக் காண இயலவில்லை. ஒரு மாற்று கலாச்சாரமாக கிறிஸ்தவம் விளங்கவேண்டும் என்பது கட்டுரையாளர் கருத்தானால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

இதனை முன்னிட்டு கட்டுரையாளர் குறிப்பிட்ட(?) பிரபு சாலமோன் – அறிவர் அருள் திரு மோகன்குமார் கேள்வி பதிலை உன்னத சிறகுகளில் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிறிஸ்தவம் சினிமா துறையில் இறங்கியிருப்பதாக சொல்லுகிறார்களோ என்னவோ தெரியவில்லை கிறிஸ்தவர்கள் விளம்பரத்துரையில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த இரண்டுக்கும் மத்தியில் சமன் செய்யும் கடமை என்போன்ற போதகர்களுக்கு உண்டாகையால் எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

டி வி பார்க்காதே என்று சொன்ன காலம் போய் இன்று கிறிஸ்தவ டி வி சானல்கள் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றன. சினிமாவை விஞ்சும் பாடகர்கள், நடிகர்கள் மற்றும் நடிகைகளெல்லாம் ஏற்கனவே களமிறங்கிவிட்டார்கள். இப்போது டி வி யைப் பார் என்று கிறிஸ்தவ போதகர்களே அறைகூவல் (வெற்று கூச்சல் என்று சொன்னால் போதாதா?) விடுக்கிறார்கள். நாளையே ஒரு விளம்பரம் தோன்றலாம், உங்கள் அபிமான பால் தினகரன் தோன்றும், தினகரன் பிக்சர்ஸ் ஆசீர்வாதமுடன் வழங்கும், “இயேசு அழைக்கிறார்”. பின் குறிப்பாக அனைத்து கிறிஸ்தவர்களும் வந்து ஆசீர்வாதத்தை சென்னை மோட்சம் தியேட்டரில் பெற்றுக்கொள்ளவும். ஞாயிறு 5 காட்சிகள் உண்டு. இளம் பங்காளர்கள் கண்டிப்பாக பார்க்கவேண்டிய படம். இவ்விதமான ஒரு சிந்தனையுடன் கிறிஸ்தவ விசுவாசிகள் சினிமாவிற்குள் களாமிரங்கியிருந்தால், என்னை மன்னித்துவிடுங்கள், இயேசு “நான் உங்களை அறியேன்” என்று சொல்லுவாரே தவிர “இவர்களை மன்னியும்” என்று கூறும் சாத்தியக்கூறுகள் கூட இல்லை.

ஒரு விசுவாசி திரைப்படம் எடுக்கலாமா, திரைத்துரையில் பணிபுரியலாமா என்று என்னைக் கேட்டால் “கண்டிப்பாக” என்று கூறுவேன். தமிழக பண்பாட்டின் ஒரு முக்கிய குறியீடாக அது மாறிவிட்டிருக்கும் சமயமிது. நாம் எதையுமே வென்றுவிடலாம் என்கிற தன்னம்பிக்கை கிறிஸ்தவ விசுவாசிக்குத் தேவை. ஆனால் சற்று நிதானம் கூட தேவை. நான் ஒழுக்கமாக இருக்கிறேன் என்று கூறுபவர்கள் பிறமதத்தினரை ஒழுக்கக் குறைவுள்ளவர்கள் என்று தீர்ப்பதுபோல் தென்படுகிறதே? நான் தேன்காய் உடைப்பதில்லை தசம்பாகம் மட்டும் தவறாமல் கொடுப்பேன் என்பதில் என்ன வித்தியாசம் இருக்க முடியும்? எனது படத்திற்கான பூஜையில் நான் ஜெபிப்பேன் அவர்கள் அவரவர் இஷ்ட தெய்வத்தை வணங்கட்டும் என்று சொல்லுவது யாராவது ஒரு கடவுள் எனது தொழிலைக் காப்பற்றினால் போதும் என்பது போல் அல்லவா தோன்றுகிறது?

சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை நாம் இயக்குனருக்கு சொல்லவா வேண்டும்?. “அப்பா அம்மா இல்லாட்டி என்னப்பா! ஆண்டவர் இயேசு இருக்கிறார்” எனும் வசனம் “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்கிற அளவில் பஞ்ச் டயலாக் ஒன்றும் இல்லை. எல்லாரும் தான் சொல்லுகிறார்கள், “அப்பனே முருகா காப்பாத்துப்பா”, “கூத்தாண்டவர் ஆசி உனக்கு என்றும் உண்டு”, “எல்லாப் புகழும் இறைவனுக்கே” இதைப் போன்ற வசனங்களால் என்ன கருத்தை நாம் நிறுவுகிறோம்? அவன் அதை அப்படிச் சொல்லுகிறான் அதனால் நான் அதை இப்படி சொல்லுகிறேன் என்பது எத்தனை அசட்டுத்தனம். பிஷப் சாமுவேல் அமிர்தம் தனது “ஆட்டோ இவாஞ்சலிஸம் மற்றும் எலெக்ட்ரானிக் இவாஞ்சலிஸம்”  போன்ற கட்டுரைகளில் “அதற்குப் பதிலாக இது” என நாம் செய்யும் சிறுபிள்ளைத்தனமான காரியங்களை சாடுகிறார்.

“நீங்கள் பூமிக்கு உப்பாய் இருக்கிறீர்கள்” என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் பொருந்தும். அவன் சார்ந்தத் துறைகளில் அவன் பிறரது வாழ்வை சுவை படுத்த வேண்டும். அவரை நோக்கி “கர்த்தாவே கர்த்தாவே” என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவருக்கு பயந்து நடந்தால் போதும்.

“இன்டு த வைல்ட்” என்கிற திரைப்படத்தைப் பார்த்தபோது அது ஒரு சிறந்த கிறிஸ்தவப்படமாக என் கண்களுக்கு தெரிந்தது. சமூகம் கொண்டுள்ள முரண்பாடுகளைக் கண்டு வெறுத்த ஒரு மாணவன் தன் பெரும்பாலான சேமிப்பை தொண்டு நிறுவனத்துக்கு கொடுத்துவிட்டு கானகம் செல்கிறான். போகும் வழியிலோ காட்டில் தங்கியிருக்கும்போதோ அவன் தவறான செயல்களில் ஈடுபடவில்லை (ஒழுக்கமானவர்களுக்கு அவன் ‘பியர்’ குடிப்பது தவறு என்றும் அவன் நரகத்துக்குதான் போவான் என்றும் காரணம் கண்டுபிடிக்க படத்தில் வசதிகள் உள்ளன). வழியில் சந்தித்த அனைவரும் அவனை நேசிக்கின்றனர் – பதிலுக்கு அவன் அவர்களுக்கு உண்மையுடன் உதவியாய் இருக்கிறான். அவ்வப்போது தனது சகோதரிக்கு கடிதம் எழுதி தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்ளுகிறான். புத்தகமும் இயற்கையும் அவனை உற்சாகப்படுத்தியவண்ணம் இருந்தன.  ஒரு நாள் காட்டினுள்ளாக ஒரு பஸ்ஸைக் கண்டு அதற்கு “மேஜிக் பஸ்” என பெயரிட்டு அதனுள் தங்கிக்கொள்ளுகிறான்.

4 வருடங்களுக்குப் பின்பு அவன் வாசிக்கும் புஸ்தகத்தில் குடும்பமாக வாழ்வதை பற்றிய பிம்பம் வரும்போது அவன் திரும்பி ஊர் வர கிளம்புகிறான். பெருக்கெடுத்து ஓடும் ஆறு அவனை தடுக்கிறது. வேறு வழியில்லாமல் அந்த பஸ்ஸிலேயே தங்குகிறான். குளிர் காலம் அவனை சோதிக்கிறது. அவன் வேட்டையாடின உணவை அவனால் பாதுகாக்க இயலாததால் தாவரங்களை உண்டு வாழ்வைக் கழிக்கும்போது தவறி விஷ தாவரத்தை உண்டுவிடுகிறான். மரணம் என்பது நிச்சயம் என அறிந்த பின்பும் தனது வாழ்வியல் தத்துவத்தை “பகிர்வது தான் உண்மையான மகிழ்ச்சி” என்று எழுதி வைக்கிறான்.

ஸீன் பென் என்கிற இயக்குனர் திரைக்கதை எழுதி வடித்த இந்தக் கதை ஒரு உண்மைச்சம்பவத்தை மையமாக்கி எடுத்தது. உண்மையான வாழ்வின் ஒரு துளியை அனுபவித்த ஒருவன் சொல்லுவது நமக்கு வேத புத்தகத்தில் எளிதாக, தெளிவாகக் கிடைக்கிறது. அவற்றை அப்படியே சொல்லுவதற்கு ஒரு காட்சி ஊடகம் தேவையா? அதுதான் வானொலி, தொலைக்காட்சி மற்றும் மேடைகளில் முழங்குகிறார்களே.

திரைத்துறையில் இருப்பவர்களை நான் மனமார வாழ்த்துகிறேன். கண்டிப்பாக நீங்கள் சாதிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று. ஆனால் கிறிஸ்தவ அடையாளத்தோடு இருக்கவேண்டும் என நீங்கள் கருதினால்,  “நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருங்கள் – ஒலிபெருக்கியாய் அல்ல” .

வேத புத்தகத்தை கையில் எடுக்கும் ஒவ்வொருவரும் அதை விளக்க முற்படுவது தன்னுடைய சொந்த பண்பாட்டு சூழலில் தான் என்பதை நாம் நன்கு அறிவோம். எனினும் கொஞ்சமேனும் அதன் உண்மையான வரலாற்று, சமூக கலாச்சார பின்னணியமும் அதற்கும் நமக்கும் உள்ள இடைவெளிகளியும் நிரப்ப முற்படுவோமானால் வேதம் நம்மோடு “பேச முற்படுவதை” நம்மால் “கேட்க” முடியும். உமது வேதம்  என் கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமும் என்று சொன்ன சங்கீதக்காரன் இருட்டிலே வேதபுத்தகத்தை எடுத்துக்கொண்டு முகம்குப்புற விழுந்திருக்கமாட்டான்.

மோசேயை நாம் உதரணமாக எடுத்துக்கோள்ளுவோம், அவன் எகிப்திலே உள்ள பார்வோனுடைய அரண்மனையில் தங்குகிறான். ஒன்று இரண்டு நாட்களல்ல இஸ்ரவேலர் அடிமைத்தனத்தில் கட்டுண்டு கண்ணீரோடு கிடக்கும்போது,  எந்தக் கவலையுமற்ற சுகமான வாழ்வு 40 வருடம் அவனுக்கு கிடைத்தது. ஒரு நல்ல ஆட்சி நடத்தும் திறமை சார்ந்த கல்வி அவனுக்குக் கிடைத்திருந்தாலும் அவன் புரிந்து கொண்டது/ உள்வாங்கிக் கொண்டதும் அடிமைப்படுத்தும் முறையாகிய அடிதடிதான். ஆகவே தான் கடவுள் மறுபடியுமாக அவனை 40 வருடம் தன்னுடைய மந்தையை மேய்க்கும் பணிக்காக அவனை மீதியான் தேசத்துக்கு அழைத்துக்கொண்டார். அதற்கு அடுத்த 40 வருடங்கள் அவன் பட்ட கஷ்டங்கள் போல வேதபுத்தகத்தில் எந்த முதியவரும் அடைந்ததாக நாம் காண இயலாது. ஆனால் அது தான் வாழ்க்கை என நாம் புரிந்துகொள்ளுகிறோம்.

மோசே வாழ்ந்த இரண்டு இடங்களுமே கர்த்தரை தொழுதுகொள்ள ஏற்ற இடமல்ல. வழிபாட்டு முறை நடத்தப்படவேண்டிய தேசத்துக்கு மோசேயால் செல்ல முடியவில்லை? ஆனால் கர்த்தரை முகமுகமாக தரிசித்த பாக்கியம் அவன் தவிர வேறு எவருக்கும் வாய்க்கவில்லை.  நாம் இருக்கும் இடம் அல்ல முக்கியம் – கர்த்தர் நம்மேல் வைத்த கிருபையே பெரிது என்பதை உணர்வதே முக்கியம்.

கடவுள் நீடிய பொறுமை உள்ளவர், அவர் நமது வாழ்விலே நம்மை பல இடங்களில் அமர்த்துகிறார், நாம் பக்குவம் அடைந்து அந்த இடங்களில் அமர்ந்து கொள்ளுகிறோமா? அல்லது அலைபாய்ந்து அவர் நாமத்தை வீணிலே வணங்குகிறோமா என்பது ஒரு பெரிய கேள்வி.

பன்னாட்டு தமிழ் கிறிஸ்தவ இலக்கிய மன்றத்திலே, இயக்குனர் பிரபு சாலமன் அவர்களின் பேச்சை கவனித்த போது, எங்களை அனேகர் கண்டுகொள்ளாமல் இருந்த போது மோகன் (எத்தனை மோகன் ஒரு கட்டுரைக்குள்ளாக) சி லாசரஸ் அவர்கள் தன் நிலையிலிருந்து கீழிறங்கி (கிட்டத்தட்ட பரலோகத்தில் இருந்து)வந்து சந்தித்தார். அப்படியிருக்க நான் என்ன செய்ய வேண்டும்? நானும் கீழிறங்கிவந்து (ஏனென்றால் நான் உங்களைப்போன்ற சதாரண விசுவாசி அல்ல சினிமா பெற்றெடுத்த ஸுப்பர் ஸ்டார் விசுவாசி) அவரோடு சேர்ந்து திரைக்கலைஞர்களுக்காக ஜெபிக்கிறொம். என்ன விதமான விசுவாசம் இது? எந்த ஆலயமும் இவர்களுக்கு தங்கள் கதவுகளை மூடியதாக தெரியவில்லையே? இவர்கள் தான் மன மேட்டிமையுடன் போகாமல் இருந்திருக்கிறார்கள்.

வியாபரிகளுக்கென்று “சிறப்பு ஜெபம்” செய்யும்போது சினிமா எனும் வியாபாரம் சகோதரர் மோகன் சி லாசரசுக்குத் தெரியாதா என்ன? முதலீடு செய்துவிட்டார். சினிமா உலகம் எப்பொதுமே விளம்பரத்தை விரும்பும் இடம் “போஸ்டர் அடித்து ஒட்டுகிறவர்கள் அல்லவா? ” மோகன் சி லாசரஸ் அவர்களின் தொடர்பு இருந்தால் அவரது “ரசிகர் மன்றமே” தனது படத்தை 100 நாட்கள் ஓட்டிவிடுவார்கள் என்ற விளம்பர + வியாபாரக் கணக்கை போட்டுவிட்டர்.

நான் எல்லாவற்றையும் மிகைப்படுத்தியதாக உங்களுக்குத் தோன்றலாம். அது அப்படித்தானிருக்கும். கண்களை மூடி, பல ஸ்தொத்திரங்கள் சொல்லி, ஒரு பரவசமான பாடலைப் பாடி, தாங்க் யூ ஜீஸஸ் என பீட்டர் விட்டு, உருக்கமாக நடித்து, கண்ணீர்விட்டு, க்ளைமாக்ஸ் வரை கொண்டு செல்ல தெரிந்த ஒரு ஊழியக்காரன் எங்கே கடுமையாக சாடுகிற நான் எங்கே?

மிக்க மனத்தாழ்மையுடன் கூறுகிறேன்…தயவுசெய்து உங்கள் விசுவாசத்தை உங்களுக்கு இறைவன் கொடுத்தப் பணியிலே வைத்துக்கோள்ளுங்கள். மக்கள் திருமறையை வாசிக்க பழகி விட்டார்கள். சினிமாவில் இருந்து கொண்டு அதை வாசித்து காட்டுவது பெருமை என்று எண்ணாதீர்கள் அது அந்த பிரம்மாண்டமான ஊடகத்திற்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய இழுக்கு. உங்களை அந்த இடத்திலே கொண்டு சேர்த்த கர்த்தர் துக்கப்படும் காரியம். உங்கள் தொழிலை அற்பணிப்புடன் செய்யுங்கள். குறைந்தது ஒரு 50 வருடம் கழித்து வரலாறு சொல்ல வேண்டும் “இயக்குனர் பிரபு சாலமன் தனது திரை(ப்படத்தால்)க்கதையால் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிக்காட்டினார்” 

வேதபுத்தகத்தை வெறுமனே வாசிக்காமல் மறு வாசிப்பிற்கு உட்படுத்துங்கள் – அதையே நீங்கள் இருக்கும் காட்சி ஊடகத்தில் வெளிப்படுத்துங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

மிக்க பிரியமுடன்

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

Mobile: 9870765181

Advertisements

குறிச்சொற்கள்: ,

ஒரு பதில் to “சினிமா கிறிஸ்தவம்”

  1. tamilalagan » நம்பிகையற்றிருப்பதே, நமது எல்லைகளை உருவாக்குகிறது! Says:

    […] ? , ? , [ ] , , , ! , ! ? , […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: