Archive for ஜூன் 12th, 2009

கைம்பெண்ணின் காணிக்கை

ஜூன் 12, 2009

திருச்சபை மீண்டும் மீண்டுமாக வலியுறுத்தும் ஒரு காரியம் “காணிக்கை”. காணிக்கையை கொண்டு கோயில் கட்டுவதும், பல நற்காரியங்களில் ஈடுபடுவதும் நெடுங்காலமாகவே நடைபெற்றுவரும் மரபு. திருவிவிலிய ஆதாரங்களை எல்லாம் கூட்டி கழித்து எப்படியெல்லம் கணிக்கை சேகரிக்கலாம் என திட்டமிடுவது இன்றைய சந்தை பொருளாதாரத்தின் விளைவாகவே என எண்ணத் தோன்றுகின்றது.

நான் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள எனது தலைமுறைக் கோயிலில் 13 வகையான காணிக்கை கவர்கள் ஒரு வருடத்திற்கு கொடுக்கப்படும். பலவிதமான காணிக்கை உபதேசங்கள் வழங்கப்படும். காணிக்கை கொடுக்காதவர்களுக்கு ஐயோ! என “திருவிவிலிய ஆதாரங்களும்” முன்வைக்கப்படும்.

காணிக்கைகளை சேர்த்து சேர்த்து அதைக் கொண்டு என்ன செய்யவேண்டும் எனத்தெரியாமல், பழைய கோவில்களை இடித்து தரைமட்டமாக்கி விடுகிறார்கள். புதிய கோயில்களை கட்டிஎழுப்புவதிலேயே போதகர்களின் “திறமையும்” செயற்குழு அங்கத்தினர்களின் “வீரியமும்” வெளிப்படுத்தப்படுகின்றன.

போதகர்கள் காணிக்கைகளை சேகரிப்பதிலே மிகவும் திறமையானவர்கள். அரிசிக் காணிக்கை, பை காணிக்கை, நெல் காணிக்கை, முதற் பலன், கவர் காணிக்கை, பொன் காணிக்கை, ஸ்தொத்திர காணிக்கை, சங்க காணிக்கை, உண்டியல் காணிக்கை, சுய வெறுப்புக் காணிக்கை, பொருத்தனை காணிக்கை, போன்றவைகளுடன் விசேஷித்தக் காரியங்களுக்காக பிரிவும், வரியும் இட்டு திருச்சபையை “வளர்க்கின்றனர்”. மனோகரச் சந்தை, ஆசீர்வாதத் தட்டு, ஏலம், பாட்டம், விற்பனை நாள், அறுப்பின் பண்டிகை, பஜனை என வருமானம் பெருகிக்கொண்டே போகிறது.

கோவில் விரிவாக்கத்தைப் போலவே முக்கியமானது கொவில் “கோபுரமாக்கல்”. விரிவாக்கத்தின் பணியின் மூன்றில் ஒரு பங்கு பணம் கோபுரத்தை உயர்த்துவதிலேயே செலவழிக்கப்படுகின்றது. குடிசையில் வாழும் மக்கள் இன்னமும் வந்துபோய்க்கொண்டிருக்கும் கோவிலில், கோபுரத்தை உயர்திக் கட்டுவதனால் நாம் பகிர்ந்து கொள்ளும் இறைச் செய்தி என்ன?

சுமார் 20  முப்பது வருடங்களுக்கு முன்பு “கருப்பட்டி காணிக்கை” குமரி மாவட்டத்திலே மிகவும் பிரபலமாக இருந்திருக்கிறது. ஒருவேளை திருநெல்வேலியிலும் அவ்விதமாக இருந்திருக்கலாம்,  ஆனால் தற்போது அந்த காணிக்கை திருச்சபைக்கு  வராததைக் குறித்த கவலை திருச்சபைக்கு சற்றேனும் இல்லை. ஏனென்றால் அவர்கள் மாற்று வழிகளில் காணிக்கையின் வரவை உறுதிசெய்துவிட்டனர். மேலும், திருச்சபைக்கு சமூகத்தின் மேலுள்ள அக்கரை அப்படி. ஓரு சமூகம் தனது  தொழிலை இழந்து அடையாளம் மறைந்து போவதைக்குறித்த எந்த பிரக்ஞயும், அக்கறையும் அதற்கு கிடையது. பணம் வந்தால் போதும்.

திருச்சபையைத் தாண்டி நாம் நட்சத்திர ஊழியக்காரர்களைப் பார்த்தோமானால், அவர்களும், காசு மேல காசு வந்து கொட்டுவதற்கான ஜெபங்களையே ஏறெடுக்கின்றனர். பலவிதமான பிரார்த்தனை திட்டங்களை வகுத்து மக்களுக்கு சாத்தனிடமிருந்து வரும் தீமைகளுக்கு விலக்கிக் காக்கின்றனர். மக்கள் சுபிட்சமாக இருப்பதைக் காண மிகவும் திருப்தியாக உள்ளது! மாதம் மும்மாரி  அருள்மாரி பொழிகிறது! நோய் பிணி கவலையற்ற ஒரு உன்னதமான இடத்திற்கு இந்த உலகத்தையே அழைத்துச்சென்று விட்டவர்களுக்கு நாம் இன்னமும் நேபலுக்காக பரிந்துரைக்காதது தவறில்லையா?. கஷ்டப்படுகிறவர்கள் அனைவருமே பாவிகள், விசுவாசத்தில் குன்றிப்போனவர்கள். அவர்களைக்குறித்து கவலைப்படுவது நமக்கான காரியம் அல்ல.

இப்படித்தான் ஒரு ஏழை கைம்பெண், கோவிலிலில்  மீண்டும் மீண்டுமாக சொல்லப்பட்ட காணிக்கையின் மகத்துவத்தை எண்ணி, தனது கரத்திலிருந்த  இரண்டு காசுகளைப் போட்டள். இயேசு இவளைப் பார்க்காது இருந்திருந்தால், திருச்சபை இறுதி வரை செல்வந்தர்களிடமே யாசகம் பெற்றுக்கொண்டிருக்கும். ஏசு இவளைப் பர்த்ததினால் திருச்சபை அதையும் ஒரு மூலதனமாக கருதி, ஏழைகளும் அதிகமாகக் கொடுக்கலாம், நீங்கள் அனைத்தையும் கொடுத்துவிட்டல் “இழப்பதற்கு ஏதுமில்லை” என உணார்ச்சிகளைத் தூண்டி விட்டது.

திருவிவிலியத்திலிருந்து மறுபடியுமாக நாம் இப்பகுதியை வாசித்தால் என்ன?

லூக்க 21: 1 – 4
இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளை காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார். 2 வறுமையில் வாடிய ஒரு கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.  3 அவர், இந்த ஏழை கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்கு சொல்லுகிறேன். 4 ஏனென்றால் அவர்கள் அனைவரும் தங்கள் செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர். இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே போட்டுவிட்டார்” என்றார்.

இயேசு குனிந்திருந்தது ஒரு முக்கியமான குறியீடு. அவர் ஆழ்ந்த யோசனையில் இருந்திருக்க வேண்டும் அல்லது மிகவும் கவலையில் மூழ்கியிருக்கவேண்டும். என்னக் கவலை? என்ன ஆழ்ந்த யோசனை? ஆலயத்திற்குள்ளாக தவறுதலாக ஏதும் நடை பெறுகிறதா? அப்படியென்றால் சவுக்கை உண்டு பண்ணி அடிக்கலாமே? இந்தப்பகுதியில் அவர்  அவ்வாறு ஏதும் செய்யவில்லையே? என்ன நடக்கிறது?

லூக்கா 20: 45 – 47 வசனங்களில், “மறை நூல் அறிஞர்களுக்கு” அவர் எச்சரிக்கை விடுக்கிறார். அதைத் தொடர்ந்த பெருமூச்சின், வேதனையின், கசப்பின் விளைவாகவே அவர் தனது தலையைக் குனித்திருக்கவேண்டும். தனது பிதாவின் பெயரைச் சொல்லி கபட நாடகம் ஆடும் வேடதாரிகளை அவர் தோலுரிக்கும் சம்பவத்திற்கான நேரம் வந்தபோது இயேசு நிமிர்ந்து பார்க்கிறார்.

இயேசுவின் பேச்சை அவரது சீடர்கள் அனேகந்தரம் புரிந்து கொண்டது இல்லை. அப்படியே நமது போதகர்களும். அவர் தன்னைச் சுற்றி அடர்ந்திருக்கும்  சூழ்நிலையை மையப்படுத்தியே பேசியிருக்கிறார். இப்போதும் அவர் இந்தக் கைம்பெண்ணை முன்னிறுத்துவதற்கான காரணம், 47ம் வசனத்தில் அவர் மறை நூல் அறிஞர்களைச் சாடுவதில் இருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.

“கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொள்ளுகிறார்கள், நீண்ட நேரம் இறைவனிடம் வேண்டுவதுபோல நடிக்கிறார்கள். கடுந்தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகவிருப்பவர்கள் அவர்களே” என்றார் என்பதாகக் காண்கிறோம்.

இயேசுவின் ஒப்பீடு அவளை பாராடுவதற்காக சொல்லப்பட்டது அல்ல, மாறாக ஏழை கைம்பெண்களை  ஆலயத்திற்கு காணிக்கை கொடுக்கச்சொல்லி நிர்பந்தித்து அவர்கள் வாழ்வையே நாசம் செய்யும் காட்சியினை உருவகித்துப் புலம்பின பகுதியாக காணப்படுகிறது.  அவர் ஆவியிலே கலங்கி சொன்ன “இரத்தத் துளிகள்” இவை.

மேற்கொண்டு நாம் 21ம் அதிகாரம் 5ம் வசனத்திலிருந்து வாசித்தோமானால்
“கோவிலைப்பற்றி சிலர் பேசிக்கொண்டிருந்தனர். கவின் மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களலும் கோவில் அழகுபடுத்தப்பட்டிருக்கிறது என சிலர் பேசிக்கொண்டிருந்தனர். 6 இயேசு, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லம் இடிக்கப்படும்” என்றார்.

திருச்சபை செய்யும் தவறுகளுக்கு அது கொடுக்கவேண்டிய விலை அதிகம். அறிந்து தவறு செய்வோர் அதிக ஆக்கினைக்கு ஆளாவர் அல்லவா? நமக்கு “நற்செய்தியை” கொண்டுவந்த மேற்கில் இன்று கோவில்களுக்கு ஏற்பட்ட நிலைகளைக் கண்டுமா நாம் இன்னும் மனம் வருந்தாமல் இருக்கிறோம்? கோவிலின் உயரம், அகலம், கவின் மிகு தோற்றம் எல்லாவற்றையும் விட “நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா” (1 கொரிந்தியர் 3: 16) என்பது நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டவில்லை?

கைம்பெண்ணின் வாழ்வைப்பற்றி சிந்திக்காத திருச்சபை மிகப்பெரிய வரலாற்றுத் தவறை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. இயேசு தனது சாட்டையை சுழற்றுமுன்பதாக நாம் நம்மையே சுய பரிசோதனை செய்து கொள்வோம்.
(இக்கட்டுரை அட்டிசன் ஜி ரைட் அவர்கள் 1982ல் வெளியிட்ட “கைம்பெண்ணின் காணிக்கை – புகழ்ச்சியா புலம்பலா?” என்ற கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.)

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்புக்கு palmyra_project@yahoo.com

                              revgodsonsamuel.wordpress.com

phone 09870765181