மீண்டும் சந்திப்போம்!


நானும் எனது மாமவின் பையன் ஜானியும் (வெகு சீக்கிரத்திலேயே திருமணமாக உள்ளது) நல்ல தோழர்கள். அப்படியே தற்பொழுது நியூசிலாந்திலே வாழ்ந்துகொண்டிருக்கும் (மணப்பெண்கள் உங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம்) எனது நண்பன் வின்ஸ்டனும் உயிருக்குயிரானவர்கள். எங்கள் மூவருக்கும் பொதுவான விருப்பம் பயணம் செல்வது (ஊர் சுற்றுவது).

எங்கள் பயணத்திற்கு இலக்கு கிடையாது.  நினைத்த மாத்திரத்தில் நாங்கள் மூவரும் கிளம்பிவிடுவோம். இந்த விஷயத்தில் மாற்றுக் கருத்து என்பதே இல்லை. வின்ஸ்டனின் யமாஹா, ஜானி கொண்டு வரும் ஏதாவது டூவீலர். கடற்கரை சாலை மிகவும் நன்றாக அமைக்கப்பட்டிருப்பதால் “பெயிண்டே இருப்பம்”.

குமரி மாவட்டம் மிக அழகிய மற்றும் விதம் விதமான கடற்கரைகளைக் கொண்டது. ஓரு இடத்தில் பாறைகள் அதிகம் இருக்கும் (அப்படிச்சொல்வதைவிட பாரதிரஜாவிற்குப் பிடித்த இடமாகிய) முட்டம்,  வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கிய குளச்சல் துறைமுகம், புதிய சுற்றுலாத்தலமாக உருவெடுத்துள்ள சொத்தவிளை (பேருக்கேற்றபடி அதை இப்போது சொத்தையாக்கிவிட்டனர்) முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பொழிமுகம் கொண்ட பட்டணம் கால்வாய் மற்றும் மணக்குடி, தென்னந்தோப்புகள் நிரம்பிய  ஆலன்கோட்டை, பறவைகள் சரணாலயம் என நான் கருதும் ராஜாக்கமங்கலம், மணலைக் குவித்து தள்ளும் மணவாளக்குறிச்சி, படகுகள் குழுமியிருக்கும் சின்னமுட்டம், வெட்டுக்கல் கிடைக்கும் அகஸ்தீஸ்வரம், ஆழி சூழ்ந்து மீண்ட கோதேஸ்வரம், பனங்காடுகள் நிறைந்த  சங்குமுகம்…

சொல்லப் போனால் அனைத்து கடற்கரை ஊர்களின் பெயர்களையும் குறிப்பிடும் படியாய் விதம் விதமாக அவை அமைந்திருக்கின்றன. ஓவ்வொரு இடத்திலும்  நின்று அனுபவிக்க வாழ்வே போதாது எனும் அளவிற்கு.  ஓரு மாவட்டத்திற்குள்ளே இவ்வளவு வித்தியாசமான கடற்கரைகளை வேறு எங்கும் நாம் எளிதில் கண்டுகொள்ள முடியாது என்பதே என் எண்ணம்.

எங்கள் பயணம் எந்த இடத்தில் நிற்கும் என்பது எங்களுக்கே தெரியாது. பல நேரங்களில் பெட்ரொலும், ஓருசில நேரங்களில் எங்கள் வாகனமும் எங்கள் பயணத்தை தீர்மானிக்கும். வின்ஸ்டனின் புராதன யமாஹா தனது ஒளி கொடுக்கும் தன்மையை இழந்து விட்டிருந்ததால், எங்கள் பொருளாதாரம் கருதி நாங்கள் இரவிற்கு முன்பதாகவே வீடு திரும்பிவிடுவது உண்டு. “பின்ன? மாமூல் உருவ விடுவோமாக்கும்?”

லைசன்ஸ், ஆர் சி புக், இன்சூரன்ஸ் பொன்ற தேவையற்ற சுமைகளை நாங்கள் எடுத்துச்செல்லுவதில்லை ஏனென்றால் அவைகள் எங்களிடத்தில் கிடையது.  கழன்றுபோன நம்பர் பிளேட்டை பத்திரமாகவே வீட்டில் வைத்திருந்தோம். சில நேரங்களில் அறுந்து போன பிரேக் ஒயரோடு பத்திரமாக வீடு வந்து சேர்ந்திருக்கிறோம். “அவன் பெரிய டிஸ்ப்லிக்ஸ்பிஸ்ஸாக்கும்” (இது எங்களுக்கு மட்டுமே உரிய பாஷை)

வின்ஸ்டனுடைய கண்களைப் பார்த்து அவனுக்கு “கிங் கோப்ரா” என அவன் படித்தக் கல்லூரியில் பெயர் வைத்திருந்தனர். இருட்டிலும் மிக அருமையாக ஹட் லைட் இல்லாமல் ஓட்டுவான், என்ன ஆங்காங்கே நிற்கும் போலீஸ் வாகனங்கள் தான் எங்களுக்கு ஒரு சின்ன உதறல். ஓரு வழியாக போலீஸ் இல்லாத சந்துகள், ஊர்கள் வழியாக செல்லுவது எப்படி என்ற ஒரு மகத்தான “என்சைக்ளோபீடியாவை” நாங்கள் எங்கள் இருவர் மனதிலும் உருவாக்கி விட்டிருந்தோம்.

ஜானியைப் பொருத்தவரையில் பரவாயில்லை, அரசு ஊழியன். கொஞ்சம் பிரச்சனை என்பது தெரிந்து விட்டால், தனது கார்டை எடுத்துவிடுவான், “சார் போயிட்டு வாங்க” என மரியாதையாக அனுப்பிவிடுவார்கள். ஜானியின் வேகம் சும்மா  கண்ணைக் கட்டிக்கொள்வது போல இருக்கும். பயமே கிடையாதா என்று தோன்றும்படியாக வளைவில் வண்டியை சாய்த்து திருப்புபவன். இன்றுவரை வீழ்ச்சியை அறியாதவன் (“வாயத் தெறந்திட்டியா? சரியாப்போச்சு!” எனக் கூறப்போகிறான்)

எங்களது பயணம் அர்த்தமற்றதாயும் இலக்குகளாற்றதாயும் இருந்திருந்தாலும் இப்போது யோசித்துப் பார்த்தால் மிகவும் அர்த்தம் பொதிந்தவைகளாக காணப்படுகின்றன. கடற்கரையில் நாங்கள்  செல்லும்போதெல்லாம் நாங்கள் கல்களை நனைக்க முற்பட்டது இல்லை. ஆனால் கண்டிப்பாக மணலில் அமர்ந்துவிடுவோம். நீண்ட நேரம்  எங்களுக்கான கதைகளை பெசிக்கொள்ளுவோம், ஓடுவோம், அமைதியாக இருப்போம். மொத்தத்தில் ஒன்றாக இருப்போம்.

கடற்கரையில் உள்ள காற்று தான் எங்களது சுவாசம். அதை அனுபவிக்க வந்தவர்களாகவே காற்றைக் குடித்துக்கோண்டே இருப்போம். காற்று கடல் அலையை, கேசத்தைப் போல் சுருட்டிவிட்டபடி  இருக்கும். காற்றும் அலையும் காதல் கொண்ட நாய்களைப் போல் குதித்தும் விலகியும் குலாவிக் கோண்டிருக்கும். சூரியனை காற்று ஊதித் தள்ளி  தூரத்தில் நிறுத்தியிருக்கும் அல்லது கீழ விழப்பண்ணியிருக்கும். காற்றும்  அலைகடலும் தூதுவிட்டு எங்களை தன்பக்கமாக வர அழைக்கும். காற்று எங்களைத் தூக்கிக் கோண்டு போக பிரயத்தனப்படும். கடலோ தன் மென்மையான அலைநுரைக் கைகளால் கம்பளம் விரித்து வரவேற்கும்.

சில நேரங்களில் போர்முழக்கத்தைப் போன்று எழும் சத்தம், காற்று கடலைப் புரட்டிப் போடும்போது எழுவது உண்டு. பொட்டித் தெரிக்கும் நீர்க் குமிழிகள் பலமிழந்து காற்றோடு கைதியாக கரைக்கு வந்துவிடுவதுமுண்டு. காற்றை நீர் குமிழ்களால் சிறைபிடிக்க முடியுமா என்ன?

கரையைச் சார்ந்தவர்கள் என்பதால்தானோ என்னவோ கடலை விட கடற்கரை மணல் தான் எங்களுக்குப் பிடித்தமான இடம். கால் புதைய நடப்பது, மணல் ஒட்டிக்கொள்ளும்படி இருப்பது, அப்படியே படுத்துக்கொள்ள என்று எங்களுக்கு மட்டுமான பிரேதசமாகவே கடற்கரை காணப்பட்டது. ஆளரவமற்ற கடற்கரைகளை அல்லது சந்தடியற்ற இடங்களையே நங்கள் பெரும்பாலும் தேர்வு செய்தோம்.

நாங்கள் தொட்ட மணல் துகள்கள் எல்லம் தலைமுறை கடந்து வந்த பூமியின் சாட்சிகளாய் குவிந்திருந்தன. காலக் கடிகாரத்தில் பயணித்து களைத்து இளைத்து இத்துப்போயிருந்தன அவை. கரங்களில் அள்ளி எடுத்தால் நைசாக நழுவிவிடுவதிலே குறியாக இருந்திருக்கின்றன. மீதியானவை உண்மை நண்பர்களைப்போல் ஒட்டிக்கொண்டன. உதறிவிட மனமற்று கைகளைப் பார்த்தால் ரேகைகள் அவைகளின் நடுவே சாலைகளாக புகுந்து பிரிந்து விட்டிருந்தன.

மணல் எங்களொடு ஒட்டிக் கொள்ளுவதை மிகவும் விரும்பினோம். வீடு வரும்போது அதுவும் ஒரு நண்பனைப்போல் எங்களுடனே வந்தது. சட்டை மற்றும் பாண்ட் பாக்கெட்டில் உரிமையுடன் அவை நுழைந்திருந்தன. அந்தரங்கத்துடன் உறவாடும் ஒரு நண்பனைப்போல் அவை மாறிவிட்டிருந்தன. பிரிவு எப்போது ஏற்படுகிறது என்பதே தெரியாத அளவிற்கு அவை எங்களின் அன்றாட அலுவல்களில் காணாமல் சிதறிப்போயின.

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு

Advertisements

குறிச்சொற்கள்: , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: