பத்தில் ஒரு பங்கு – பாகம் 2


தொடக்கநூல் 14ஆம் அத்தியாயம் ஒரு முக்கிய நிகழ்வை பதிவு செய்கிறது. அந்த நிகழ்வை ஒட்டி பெரும்பாலான போதகர்கள் தங்கள் செய்தியை அமைக்காமல் “பத்தில் ஒரு பங்கு” எனும் வார்த்தையை மட்டும் அதில் கண்டு அதை தங்களுக்கேற்றபடி வளைக்க முற்படுகின்றனர்.

“அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்” என்பதும், அவர் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தவர் ‘உன்னதமான கடவுளின் அர்ச்சகராயிருந்தார்’ என்பதுமே இந்தப்பகுதியின் கவற்சிக்கான காரணம். மற்றபடி இந்தப் பகுதி கூற வருவது பத்திலொரு பங்கின் முக்கியத்துவத்தைக் குறித்தோ அல்லது ஆபிராம் செய்ததை நாம் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கிலோ அல்ல.

பத்தில் ஒரு பங்கு  எனும் வார்த்தை திருவிவிலியத்தில் முதன் முறையாகக்  காணப்படும் பகுதியானபடியினாலும், ஒத்துப்பார்பதற்கு எளிமையாக இருக்குமென்பதாலும் தொடக்கநூல் 14ஆம் அத்தியாயம் முழுவதையும் இணைத்துள்ளேன். வாசகர்கள் கவனமாக வாசிக்க வேண்டுகிறேன் (வசனங்களைக் கடந்து போகும் தவறை இப்பொழுதும் செய்துவிடாதீர்கள், இது புரிதலுக்கான அடிப்படை)

1 அம்ராபல் சினயார் அரசனாகவும் அரியோக்கு எல்லாசரின் அரசனாகவும்  கெதர்லகோமர் ஏலாமின் அரசனாகவும் திதால் கோயிமின் அரசனாகவும் இருந்தபொழுது, 2 அவர்கள் சோதோம் அரசன் பெரா, கொமோரா அரசன் பிர்சா, அதிமா அரசன் சினாபு, செபோயிம் அரசன் செமேபர், பேலா அரசன் சோவார் ஆகியோருக்கு எதிராக போர் தொடுத்தனர். 3 அவர்கள் அனைவரும் இப்பொழுது உப்புக்கடலாக இருக்கும் சித்திம் பள்ளத்தாக்கில் ஒன்று திரண்டனர்.

 4 பன்னிரண்டு ஆண்டுகள் அவர்கள் கெதர்லகோமருக்குப் பணிந்திருந்தனர். ஆனால் பதின்மூன்றாம் ஆண்டில் அவனுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். 5 ஆனால் பதினான்காம் ஆண்டில் கெதர்லகோமரும் அவனுடன் இருந்த அரசர்களும் வந்து அஸ்த்ரோத்து கர்னமியிமிலிருந்த இராபாபியரையும், காமிலிருந்த சூசியரையும், சாவே கிரியாத்தயிமிலிருந்த ஏமியரையும் 6 சேயிர் மலைப்பகுதியிலிருந்த ஓரியரையும்,  பாலை நிலத்தின் எல்லையிலிருந்த  ஏல்பாரான் வரை துரத்திச் சென்று முறியடித்தனர்.

7 அவர்கள் திரும்பும் வழியில்  காதேசு என்ற ஏன் மிட்சுபாற்றுக்கு வந்து அமலேக்கியரின் நாடு முழுவதையும் அச்சோன் தாமாரில் வாழ்ந்த எமோரியரையும் அழித்தனர்.  8 அப்பொழுது சோதோம் அரசனும் கொமோரா அரசனும் அதிமா அரசனும் செபோயிம் அரசனும் பேலா அரசன் சோவாரும் சென்று, 9 ஏலாம் அரசன் கெதர்லகோமருடனும் கோயிம் அரசன் திதாலுடனும் சினயார் அரசன் அம்ராபலுடனும் எல்லாசர் அரசன் அரியோக்குடனும் – ஆக, நான்கு அரசர்கள் ஐந்து அரசர்களுக்கு எதிராக சித்திம் பள்ளத்தாக்கில் போர் தொடுத்தனர்.

10 இந்தச் சித்திம் பள்ளத்தாக்கில் கீல் குழிகள் மிகப்பல இருந்தன. சோதோம் அரசனும் கொமோரா அரசனும் தப்பி ஓடியபொழுது அவற்றினுள் விழுந்தனர். மற்றவர்கள் தப்பி பிழைப்பதற்கு மலையை நோக்கி ஓடினர். 11 வெற்றி பெற்றவர்கள் சோதோம், கொமோராவில் இருந்த செல்வங்கள், உணவு பண்டங்கள் அனைத்தையும் கவர்ந்து கொண்டு அங்கிருந்து வெளியேறினர். 12 அவர்கள் சோதோமில் வாழ்ந்த ஆபிராமின் சகோதரன் மகனான லோத்தையும் அவர் செல்வங்களியும் கவர்ந்து கொண்டு சென்றனர்.

13 தப்பி வந்த ஒருவான் எபிரேயரான ஆபிராமிடம் இச்செய்தியை அறிவித்தான். ஆப்பொழுது ஆபிராம் எசுக்கோல், ஆனேர் ஆகியோரின் சகோதரனான மம்ரே என்ற எமோரியனின் கருவாலி மரத்தோப்பில் வாழ்ந்துவந்தார். அவர்கள் அபிராமுடன் உடன்படிக்கை செய்து கொண்டவர்கள். 14 தம் உறவினர் கைதியாக கொண்டு செல்லப்பட்டார் என்பதை கேள்வியுற்றதும் , ஆபிராம் தம் வீட்டில் பிறந்து வளர்ந்து பயிற்சி பெற்ற முன்னூற்றுப் பதினெட்டுப் பேரைத்  திரட்டிக் கொண்டு தாண்வரை அவர்களைத் துரத்திச் சென்றார்.

 15 அவரும் அவர் ஆள்களும் அணி அணியாகப் பிரிந்து இரவில் அவர்களைத்த் தாக்கித்  தோற்கடித்தனர். தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத்துரத்திச் சென்றனர். 16 அவர் எல்லா செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார். தம் உறவினரான லோத்தையும் அவர் செல்வங்களையும் பெண்களையும் ஆள்களையும் மீட்டுக்கொண்டு வந்தார்.

17 ஆபிராம் கெதர்லகோமரையும் அவனுடன் இருந்த அரசர்களையும் முறியடித்துத் திரும்பியபொழுது ‘அரசர் பள்ளத்தாக்கு’ என்ற சாவே பள்ளத்தாக்கில் அவரைச் சந்திக்க சோதோம் அரசன் வந்தான். 18 அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் ‘உன்னத கடவுளின்’ அர்ச்சகராக இருந்தார். 19 அவர் ஆபிராமை வழ்த்தி, “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! 20 உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!”என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.

21 சோதோம் அரசன் ஆபிராமிடம், “ஆள்களை என்னிடம் ஒப்படைத்துவிடும். ஆனால் செல்வங்களை நீரே வைத்துக்கொள்ளும்” என்றான். 22 அதற்கு ஆபிராம் சோதோம் அரசனிடம், “விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுளாகிய ஆண்டவருக்கு ஆணையிட்டுக் கூறுகிறேன்:  23  ‘நான் தான் ஆபிராமைச் செல்வன் ஆக்கினேன்’ என்று நீர் சொல்லாதபடி, உமக்குரிய அனைத்திலிருந்தும் ஒரு நூல் துண்டையோ, காலணி வாரையோ, நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். 24 இளைஞர்கள் உண்டதைத் தவிர எனக்கு எதுவும் வேண்டாம். ஆனால் என்னுடன் வந்த ஆனேர், சுக்கோல், மம்ரே ஆகியோர் அவர்கள் பங்கை எடுத்துக் கொள்ளட்டும்” என்றார்.
மேற்கூறிய வேத பகுதியை சற்று சுருக்கி அதன் சாராம்சத்தைப் பார்ப்போமானால். 

கப்பம் கட்டாததினாலும் தனக்கு விரோதமாக கிளர்ச்சி செய்வதனாலும் கெதர்லகோமர் தன்னோடிருந்த அரசர்களைச் சேர்த்து படையெடுத்து வருகிறான். லோத்து வாழும் சொதோமின் அரசனுடன் சேர்த்து 5 அரசர்கள் எதிர்த்து நின்ற போதும், போரில் தோல்வியத் தழுவுகின்றனர்.  தோல்வியுற்ற அரசைச் சார்ந்த எல்லாவற்றையும், ஆள்கள் உட்பட வெற்றி பெற்றவர்கள் கொள்ளையடித்துச் செல்கின்றனர்.

இந்தச் செய்தி ஆபிராமுக்கு எட்டுகிறது.  தனது சகோதரனும் அவனோடு அவன் சொத்துக்களும் ஆட்களும் கொள்ளை போவதை அவன் கேள்வியுற்ற போது, தன்னோடு இன்னும் மூவரைச் சேர்த்துக்கொண்டு தனது வேலைக்கரரில் அடிமுறை படித்த, ஆயுதம் பழகிய 318 பேரைத் தெரிந்து கொண்டு தாண் எனும் இடம் வரைக்கும் அவர்களைப் பின் தொடர்ந்து போய் தனது சகோதரனின் மகனான லோத்தைக் காப்பாற்றுகிறார்.

இப்பொழுது இரண்டு அரசர்கள் வருகின்றனர், ஒருவர் சோதோமின் அரசர்.  சோதோமின் அரசர் தான் தொல்வியுற்றதை ஒப்புக்கொள்ளும் விதம் அருமையாக இருக்கிறது. எனது குடிமக்களை மட்டும் நீர் எனக்குத்தாரும், நீர் கைப்பற்றின பொருட்கள் உமக்கே உரியது எனக் கூறுகிறான். போர் சமயத்தில் காணக்கிடைக்கும் இந்த நிகழ்வு மிகச்சாதாரணமானது. “விழுந்துபோன எங்களைக் கைதூக்கிவிட வந்த ஆபிராமே உனக்கு எப்படி நன்றி கூறுவது எனத்தெரியவில்லை, இந்த வெற்றி உனக்கே உரியது. எனினும் குடிமக்கள் எனக்கு முக்கியமாகையால், நீ அனைத்து பொருட்களையும் எடுத்துவிட்டு என் மக்களை எனக்குத்தா!” என வினவுகிற ஒரு நிகழ்ச்சியாக நாம் இதைக் கண்டு கொள்ளுகிறோம்.

மற்றொருவர் சாலேமின் அரசர்.  இந்தப் போரில் எந்த விதத்திலும் பங்கு கொள்ளாதவர்.  ‘உன்னதமான கடவுளின் அர்ச்சகர்’. ஆபிராம் கடவுளின் சொல்கேட்டு நடப்பவரானபடியால் அவர் மீது நன் மதிப்பை வைத்திருப்பவர். இந்தப் போரில் கடவுள் ஆபிராமோடு இருந்ததை கண்ணாரக் கண்டதினால், தான் அவருக்கு ஆசி அளிக்கும் பொருட்டு வந்தவர்.  வெறுங் கையோடு வராமல் போரிட்டவர்களின் களைப்பு நீங்க அப்பமும் திராட்சை ரசமும் கொண்டு வந்தவர்.

ஆபிராமின் சுய ஆளுமை வெளிப்படும் இடமாகையால் நாம் இந்தப் பகுதியைக் கூர்ந்து நோக்க அழைக்கப்படுகிறோம்.  தான் உதவி கோராமல் இருந்த போதிலும் தன்னோடு போரிட்ட வாலிபர்களின் களைப்பு நீங்க உணவு கொண்டுவந்தவருக்கு தான் ஏதாவது செய்ய வேண்டிய தார்மீக கட்டாயத்தில் ஆபிராம் ‘எல்லவற்றிலும் பத்தில் ஒரு பங்கை கொடுத்தார்’.

இரண்டாவதாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது, ஆபிராம் ”எல்லவற்றிலும் பத்தில் ஒரு பங்கை கொடுத்தார்’ என்பது எவற்றையெல்லாம் குறிப்பிடுவது என்பதாகும். 16ஆம் வசனம் அதை நமக்கு தெளிவுறக் காட்டுகிறது “அவர் எல்லாச் செல்வங்களையும் மீட்டுக் கொண்டு வந்தார்………. பெண்களையும் ஆள்களையும் மீட்டுக்கொண்டு வந்தார்” என்பதாக அங்கே குறிப்பிடப்படுகிறது. செல்வத்தில் மாத்திரமல்ல பெண்களையும் ஆள்களையும் பகிர்ந்து கொடுப்பது அக்கால வழக்கமே. அடிமை முறை மெலோங்கியிருந்தக் காலத்தில் ஆபிரகாம் அடிமைகளாகவே ‘பதில் ஒரு பங்கு’ பெண்களையும் ஆள்களையும் கொடுத்திருக்கவேண்டும். உன்னதமான கடவுளின் அர்ச்சகர் இதைக்கொண்டு என்ன செய்யப் போகிறார் என்கிற விளக்கம் நமக்கு இல்லாதது ஆச்சரியமானது ஒன்றும் இல்லை. ஏனென்றால் இது ஒரு அன்பின் வெளிப்பாடு. தற்செயலானது. அவ்வளவு தான்! கடவுளின் கட்டளை என நாம் குழப்பிக்கொள்ளக் கூடாது.

மூன்றவதாக ஒரு முக்கிய உண்மை இதனுள்ளே பொதிந்திருக்கிறது.  நாம் சொல்லும் பழமொழியைப்போல ஆபிராம் ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையருக்கு உடைத்திருக்கிறார்’.  ஆம்,  தனது வாலிபர்களை மாத்திரமே அவர் போருக்கு அழைத்துச் சென்றார், தனது பொருட்கள் ஒன்றையும் அவர் கொண்டு செல்லும் நிதானத்தில் இல்லை.  போர் முடிந்து அவர் தனது வீடு வரைக்கூட வரவில்லை ‘அரசர் பள்ளத்தாக்கிலேயே’ அவர் சோதோமின் அரசராலும், மெல்கிசெதேக்கினாலும் சந்திக்கப்படுகிறார்.

இப்பொழுது ஆபிராமிடம் கொள்ளை பொனவற்றை மீட்டதே அல்லாமல் வேறெந்த பொருட்களுமில்லை. பார்க்கப் போனால் லோத்தினுடைய பொருட்களையே அவர் எடுத்து ‘பத்தில் ஒரு பங்கைச்’ செலுத்தியிருக்க வேண்டும். எனில் பத்தில் ஒரு பங்கு என்பது நம்முடையதாக இருக்கக் கூடாது பிறருடையதையே எடுத்துக் கொடுக்கவேண்டும் என்பதாக அர்த்தம் பெறுகிறது.

இறைச் செய்தியாளர்கள் என்று தம்மை விளம்பிக் கொள்பவர்கள் இதை மட்டும் நன்றாகப் புரிந்து கொண்டிருப்பர் போலும், ஆகவே தான் ‘அனைவரிடத்திலும் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்துவிடச் சொல்லிவிட்டு அவர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்’.

தொடரும்……

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு palmyra_project@yahoo.com

                                revgodsonsamuel@gmail.com

phone 9870765181

Advertisements

குறிச்சொற்கள்: , ,

ஒரு பதில் to “பத்தில் ஒரு பங்கு – பாகம் 2”

  1. 2010 in review « நெடும் பனை Says:

    […] The busiest day of the year was September 22nd with 93 views. The most popular post that day was பத்தில் ஒரு பங்கு – பாகம் 2. […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: