பத்தில் ஒரு பங்கு – பாகம் 3


 பத்தில் ஒரு பங்கைக் குறித்து விளம்புபவர்களுக்கெல்லாம் திருவிவிலியம் பல நிகழ்வுகளை தெளிவுறக் காட்டும், எனினும் சரியான புரிதல் இல்லாமையாலும் முன் கருத்தோடு விவிலியத்தை அணுக நேரிடுவதாலும் அவை திருச்சபையினரிடம் திரித்து கூறப்படுகின்றன. இவ்வாறாக நாம் காணத்தக்க  திரிபு விளக்கம் பெற்றவருள் ஒருவர் மூதாதையரில் இளையவரான  யாக்கோபு.

இந்திய மனது ஏற்கத்தக்க எந்த நற்குணங்களும் இல்லாதவன், ‘எத்தன்’ எனும் பேருக்கு ஏற்றவிதமாக, தனது தந்தையை, மாமனை மற்றும் தமையனை ஏமாற்றியவன். அவன் கடவுளையே ஏமாற்றத் துணிந்தவன்  எனும் நிகழ்வு ஒன்று தான் இந்திய கதை தெனாலிராமனோடு ஒத்துப்போகிறது. யாக்கோபா? கடவுளையா? ஏமாற்றினானா? இருக்காது! என மார் தட்டி பேசும் திருச்சபையினரே! அவன் அப்படித்தான்…..அப்படியே பலநேரங்களில் அவனை முன்னிறுத்தும் நாமும்……

வெகு அபூர்வமாகவே அவனில் இருந்து நாம் நற்குணங்களை எடுத்துக்க்கொள்ளும் நிகழ்வுகள் காணப்பெறுகின்றன. குறிப்பாக அவன் கடவுளுக்கென்று தூண்களை நாட்டி எண்ணை வார்த்த நேரங்கள், தனது சகோதரனுக்கு அவன் அனுப்பும் மந்தையில் ஒரு பங்கு, தீனாவிற்காக அவன் மகன்கள் பழிவங்கியபோது அவர்களை கடிந்து கொண்டது… எனினும் எல்லா இடங்களிலும் அவனது உயிர் பயம் மற்றும் சுய விருப்பங்களே மேலோங்கி இருக்கின்றன என்பதையும் நாம் காணுகிறோம்.

ஈசாக்குடைய வாழ்விலே பத்தில் ஒரு பங்கு வெளிப்படுகின்றதை நாம் திருவிவிலியத்தில் காணயியலாது. மூதாதையரில் (முற்பிதாக்களில்) ஒருவர் செய்யத்தவறியதை ஏன் மற்ற இருவர் செய்யவேண்டும்? எனும் கேள்வி எழுவது இயல்பே! அதற்கு விடையாக ஆபிரகாமின் வாழ்விலே பத்தில் ஒரு பங்கு சூழ்நிலை சார்ந்தது மட்டுமே என்பதைக் கண்டுகொண்டோம், யாக்கோபோ தனது  சுய விருப்பம் நிறைவேறவேண்டி ஏறெடுக்கும் ஒரு வேண்டுதலின் பொருத்தனையாக பத்தில் ஒரு பங்கு வெளிப்படுகின்றது.

தொடக்க நூல் 28ஆம் அத்தியாயம் யாக்கோபு பெற்ற ஒரு ஆச்சரிய கனவை விவரிக்கின்றது. தனது முதாதையருக்கு வாக்களித்த கடவுள், யாக்கோபுக்கும் கனவில் தோன்றி ஆசி பொழிகிறார். அந்த ஆசி பின்வருமாறு…

13…. “உன் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கின் கடவுளாகிய ஆண்டவர் நானே.  நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உன் வழி மரபிற்கும் தந்தருள்வேன். 14 உன் வழிமரபோ நிலத்தின் மணலுக்கு ஒப்பாகும். நீ மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு திசைகளில் பரவிச் செல்வாய்.  ஊன்னிலும் உன் வழி மரபிலும்  மண்ணுலகின் எல்லா இனங்களும் ஆசி பெறுவன. 15  நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும்  உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன். ஏனெனில் நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டேன்” என்றார்.

மேற்கூறிய வாக்கியங்களை நாம் வாசிக்கும் போது, நமது கடவுள் எவ்வித தாராளச் சிந்தை உள்ளவர், நம்மைத் தேடிவரும் அன்பு கொண்டவர், மூதாதையருக்கு அளித்த தமது வாக்கை உறுதிப்படுத்துகிறவர்,  என்று புரிந்துகொள்ள முடியும். எந்தவித கட்டுப்பாடுகளும் யாக்கோபுக்கு இல்லை ஆசிகள் மட்டுமே கடவுள் அவனிடம் கூறுகிறார். எதற்காக? தன்னை நம்பிய ஆபிராமின் வழிமரபினரான யாக்கோபும் தன் மேல் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்பதே அல்லாமல் கடவுள் அவனிடம் வேறெந்த கருமத்தை (பணியினை) எதிர்பார்த்திருக்க இயலும்? 

நேரடியாக (அல்லது கனவில்) வெளிப்பாடு பெற்றிருந்தாலும், இதைவிட முக்கிய இரண்டு நிகழ்வுகள் (ஆசிகள்) அவனுக்கு அருளப்பட்டுள்ளன. ஒன்று பரம்பரையாக அவனுக்கு  கிடைக்கப்பெற்றது அதாவது அவனது பாட்டனர் ஆபிரகாம் மூலமாக. நாம் ஒத்து பர்ப்பதற்கு நேராக இதோ அந்த விவிலியப் பகுதி

 தொடக்க நூல் 12 : 1 – 3
ஆண்டவர் ஆபிராமை நோக்கி, “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடத்திலிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்கு செல். 2 உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச்செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். 3 உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னை சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்” என்றார்.

இது முதன் முதலாக ஆபிராமுக்கு கிடைக்கப்பெற்ற ஒரு ஆசி, மறுபடியுமாக இன்னுமொரு ஆசி  அவர் 13ஆம் அத்தியாயத்தில் பெறும் பொழுது அது ஆபிராமின் வழிமரபினருக்கு (அதாவது யாக்கோபிற்கும்) பொருந்துவதாக அமைகிறது!

14….” நீ இருக்கும் இடத்திலிருந்து உன் கண்களை உயர்த்தி வடக்கே, தெற்கே, கிழக்கே, மேற்கே பார். 15 ஏனெனில் நீ காணும் இந்த நாடு முழுவதையும் உனக்கும் உன் வழிமரபினருக்கும் என்றென்றும்  கொடுக்கப்போகிறேன். 16 உன் வழி மரபினரை பூவுலகின் மண்ணைப் போலப் பெருகச் செய்வேன். ஆகவே பூவுலகின் மணலை ஒருவன் எண்ண முடியுமானால், உன் வழி மரபினரையும் எண்ணலாம். 17 நீ எழுந்து, இந்நாட்டின் நெடுகிலும், குறுக்கிலும் நடந்து பார். ஏனெனில் இதை நான் உனக்குக் கொடுக்கப் போகிறேன்” என்றார்.

“அதற்கு ஆபிராம் என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்ளுவேன்?”  என்று ஆபிராம் வினவியபோது கடவுள் அவனிடம் சில பொருட்களைக் கொண்டு வரச் சொல்லுகிறார். (தொடக்க நூல் 15: 8)

“மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள  செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டு வா” (தொடக்க நூல் 15: 9)

என்கிறார்… மிகப்பெரிய செல்வந்தனான ஆபிராமிடம் கடவுள் கேட்டது ஒரு எளிய காணிக்கை தான். அதுவும் அவன் ஒரு அடையாளத்தை எதிர்னோக்கியிருக்கும்போதே அல்லாமல் செய்து தர வேண்டி அவன் கடவுளிடம் எந்த ஒரு மன்றாட்டையும் வைக்கவில்லை. கடவுளோ ஆசி வழங்குபவராகவே இருக்கிறார்.

மறுபடியுமாக ஒரு ஆசியை யாக்கோபு பெறுவதை நாம் அனைவரும் நினைவு கூறலாம். தனது தமையனிடமிருந்து தலைமகனுரிமையை அபகரித்ததுமல்லாமல் தனது தாயின் சொற்படி கேட்டு அவன் தனது தந்தையாம் ஈசாக்கை ஏமாற்றி பெற்ற ஆசியே அது.

தொடக்க நூல் 27 : 27 “….. இதோ என் மகனிடமிருந்து எழும்பும் நறுமணம்! ஆண்டவரின் ஆசி பெற்ற விளைநிலத்தின் வாசனையாம்! 28 வானின் பனித்துளியும் மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திரட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக! 29 நாடுகள் உனக்கு பணி புரிந்திடுக! மக்கள் உனக்கு பணிந்திடுக! உன்றன் சகோதரர்க்குத் தலைவன் நீ ஆகிடுவாய்! உன் அன்னையின் மைந்தர் உன்னடி பணிந்திடுவர்! உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக! உன்னை வாழ்த்துவோர் வழமுடன் வாழ்க!”

தாத்தாவின் சொத்து எப்படி பேரனுக்குரியதோ அது போலவே தாத்தாவின் ஆசியும் பேரனுக்கு பொருந்துமல்லவா? எனில் ஆசி பெற்ற பரம்பரையில் வந்தும், தனது தந்தையிடமே தனது  சொந்தத் தமையனுக்கான ஆசியை அபகரித்தும்  நிற்காத “ஆசி வெறி”   கடவுள் தனக்கு காட்சியளித்து நம்பிக்கை அளித்தபோதும் அவனுள் வெதும்பிக்கோன்டிருந்தது.

இந்த இடமே நாம் சிந்திக்க வேண்டிய இடமாக நான் கருதுகிறேன். யாக்கோபிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் “தசமபாக” சிந்தனை  எத்துணை சிறுமையானது? ஒரு பெரிய நாட்டையே உனக்கு நான் தருகிறேன், நீ என்னடாவென்றால், துணி தருவாயா, சாப்பாடு போடுவாயா, நான் செய்யும் எல்லா அக்கிரமங்களுக்கும் (ஹும்…வேறென்னச் சொல்ல?)  துணை நின்று  (தமையனை ஏமாற்றுவேன், தந்தையை ஏமற்றுவேன், மாமனாரை ஏமாற்றுவேன்…) என்னைக் காப்பாற்றினால், அப்போது தான் நீர் எனக்கு கடவுளே! அதுவரைக்கும் எனக்கும் உனக்கும் ஒட்டு உறவு கிடையாது. கூடவே கடவுளுக்கு போனசாக பத்தில் ஒரு பங்கைக் கொடுப்பதாக வாக்களிக்கின்றான். (கல் தூண் நாட்டி எண்ணை வார்த்தது ஒரு ‘பெரிய அடவு’….)

எங்கும் நான் தேடிப்பார்த்தபோது தனது பொருத்தனையை யாக்கோபு நிறைவேற்றினதைக் காண இயலவில்லை. எத்தனில்லையா? கடைசி வரை அவன் அதைக் கொடுக்கவில்லை! ஏமாற்றிவிட்டன்! (கடவுள் அதை எதிர்பார்க்கவில்லை என்பது வேறு விஷயம்)  “ஆமாம் பார்ட்டி எஸ்கேப்….”

தொடரும்

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு palmyra_project@yahoo.com

                                revgodsonsamuel@gmail.com

phone 09870765181

Advertisements

குறிச்சொற்கள்: , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: