Archive for ஓகஸ்ட், 2009

சொற்பமாக சிந்திப்போம்

ஓகஸ்ட் 25, 2009

 நீங்கள் உலகத்திற்கு உப்பாய் இருக்கிறீர்கள் – கடலிலேயே இருந்துவிடாதீர்கள்

நீங்கள் உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறீர்கள் – ஒலிபெருக்கியாய் அல்ல! 

சத்துருக்களை ஸ்னேகியுங்கள் – எதிரியின் எதிரியை அல்ல!

கர்த்தர் உனக்காக யாவற்றையும் செய்து முடிப்பார், உங்கள் கடமையை அல்ல!

 காட்டு புஷ்பங்களை கவனிக்க சென்றோம்! அந்தோ காட்டையே காணவில்லை

எழுந்து கட்டுவோம் வாருங்கள் –  உடைந்த உள்ளங்களை!

 பட்டயத்தை உறையிலே போடு, அல்லது பேரீச்சம் பழத்திற்குப் போடு.

தசமபாகம்- எண்ணிப்பார்பதற்கு உரியது அல்ல கணக்கு ஒப்புவிப்பதற்கு உரியது!

 திரு முழுக்கு. தண்ணீரை உணர்வது அன்று, தன்னையே உணர்வது!

கிறிஸ்த்துவே சபைக்கு மூலைக்கல்! ஆகவே தான் குழி தோண்டி புதைத்துவிட்டோம்.

 மெழுகுவர்த்தி

 எழும்பி பிரகாசி!

உருகினாலும்…

இறுதிவரைக்கும்….

 

உக்கிராணத்துவம்

ஜீவ அப்பம் வேண்டம்

 அன்றன்றுள்ள அப்பமும் வேண்டாம்

 களஞ்சியம் மட்டும் போதும்

 உபவாசம்

பசித்திருப்பதல்ல

 நீதி செய்ய

பசிதாகத்துடனிருப்பது!

தொடர்பிற்கு

palmyra_project@yahoo.com

revgodsonsamuel@gmail.com

mobile: 09702567603

கலப்பை

ஓகஸ்ட் 12, 2009

மனித வாழ்வில் கலப்பை கலந்துகொள்ளாமல் இருந்திருந்தால் மிருக வாழ்வே மிஞ்சியிருக்கும்! பசியாற்ற எல்லாம் இருப்பினும் ருசியேற்றவெண்டி காட்டையும் கடலையும் வலைவீசிப்பிடித்து சமைக்கும் மானுடம், கலப்பையை மட்டும் கண்டுபிடித்திருக்காவிட்டால் பிற உயிரினங்களை வாழவிட்டிருக்குமா? பகிர்ந்து வாழத்தெரியாதவர்கள் பிற மானுடத்தை வகிர்ந்து தான் வாழ்ந்திருப்பார்களோ என்கிற எண்ணம் நம்மை பதற வைக்கவில்லையா?

பிற உயிரினங்களின் பழக்கவழக்கத்தைப் பார்த்து வாழக் கற்றுக்கொண்டிருந்தவர்களின் மத்தியில் சுயமாய் சிந்திக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாக கலப்பையை கண்டுபிடித்தவ(ளே)னே, முதல் ஞானியும் விஞ்ஞானியும் ஆவா(ள்)ன்! சமூகப் பொறுப்பும், அக்கறையும் கொண்ட ஒருவரின் இத்தகைய கண்டுபிடிப்பு, பசிப்பிணியாற்றிய தொண்டு எந்த மறையும் ஈடுசெய்ய முடியாதது.

கலப்பையின் தெய்வீகம் ஏட்டுச்சுரைக்காயாகிவரும் நம் சம காலத்தில் அதை சுமந்து செல்லும் கிழவனின் முதுகு கேழ்விக்குறியாக காட்சியளிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! இரண்டு அல்லது மூன்று தலைமுறைக் கண்டவர்கள் மட்டுமே சுமக்கும் இப்பொருள், இன்றல்லது நாளை இடம்பெயரக் காத்திருக்க, இயந்திரத்தின் பயங்கரமும், இயற்கையின் வலிய விதியும், அரசியல் சாக்கடையும், சமய சமாதானங்களும் இவர்தம் வாழ்வையே உழுதுபோடும்பொழுது, நாம் வேடிக்கை பார்ப்பது “உண்ட சோற்றுக்கு இரண்டகம் செய்வதல்லவா?”.

கலப்பை உழுதிட்ட நிலம்போல் காட்சியளிக்கும் இவர்தம் வாழ்வில், சிலுவையை சுமக்கச்சொல்ல நமக்கென்ன அருகதைஇருக்கின்றது? நாமெல்லோரும் தொழுதுண்டு பின்செல்லவேண்டும் என வள்ளுவன் எழுதிவைத்தும், நாம் “சொல்பேச்சுக் கேளாமை” எனும் அதிகாரத்தை எழுதத்தூண்டுகிறோமா?

கலப்பையின் பிறப்பு நாம் உற்றுனோக்கத்தக்க பல காலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மனுக்குலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கலப்பை ஒரு அத்தியாவசிய ஊன்றுகோலாய் இருப்பினும், அதன் வடிவமும் வேகமும் மற்றும் இன்னபிற மாற்றங்களும் நத்தையின் வேகத்தையே ஒத்திருந்தன. இதை முன்னிறுத்தும் விதமாக கலப்பையின் பிறப்பை அறிஞர்கள் மூன்று முக்கிய காலகட்டங்களாக பிரிக்கின்றனர்.

1  சேகரிக்கும் பொருளாதாரத்தின் இறுதி நிலை
2  விவசாயத்தின் துவக்கநிலை அல்லது கால்நடையாக்கல்
3  கிராம விவசாய யுகம்

சுமார் 3000 வருடங்களாக கலப்பை தன் கலைச்சேவை மற்றும் களைப்பு மாற்றும் சேவையும் செய்துவருவதாக அறிஞர் கூறும் கூற்று நம் பழந்தமிழ் இலக்கியங்களுடனும் இணங்கிப்போவதாய் அமைந்துள்ளது.

மண்ணில் விழுந்த விதை முளைத்து, துளிர்விட்டு, வளர்ந்து, மொட்டுவிட்டு, மலர்ந்து, பூவாகி, காய்த்து, கனிந்து மீண்டும் மண்ணில்…. என நடப்பதை எவ்வளவு கூர்மையாக, அதே நேரம், நாள் வருடம் என காத்திருந்து பெற முடிந்ததோ; அது போலவே கலப்பை பிறப்பதற்கும் காலங்கள் பலவாயின என்பது அடிப்படையாயினும் நம்மில் ஒருசாரார் இதை ஏற்க மறுக்கிறோம்.

காயீன் தன் நிலத்தின் பலனை ஏதேன் தோட்டதின் வேளியே  உள்ள சந்தையில் ஆபேல் என்ற ஒரே சகோதர வாடிக்கையாளருக்காக (பண்டமாற்றுமுறையில்) விற்பதற்காக காத்திருப்பது சற்று அதிகப்படியாக நமக்குத் தெரியவில்லை?

எவ்விதமான விதை? எந்த நிலம்? ஏற்ற காலம் ஏது? எவ்வளவு காலம்? அறுவடை செய்வது எப்படி? சேகரிப்பதற்கான களஞ்சியம் எங்கே? என ஏகப்பட்ட மர்மங்கள் உள்ள ஒரு காரித்தை செய்வதற்குரிய ஞானத்தைக் கடவுள் அருளினாலும், அதற்கேற்றவிதமாய் சற்று காலத்தையும் வசூலித்துக்கொண்டார் என்பதை எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்போகிறோம்?

கலப்பை தன் பயணத்தை மிகவும் மெதுவாக துவக்கியிருந்தாலும், பல கலச்சாரங்களையும், நாடுகளையும், சமயங்களையும் நூற்றாண்டுகளையும் உழுது செல்லும்பொழுது, காட்சி மாறும் நேரத்தில் காணாமற் போகின்ற ஆபத்து நம் கண்ணெதிரே இருந்தும் அது மறைவாய் இருப்பதன் காரணம் என்ன?

கலப்பை தன்னகத்தே கொண்டுள்ள உவமை, உவமேயம் மற்றும் உருவகம் அளப்பரியது! அது ஒட்டுமொத்த்த மனித குலத்திற்கும் பொதுவானது. கலப்பையின் உருவ ஒற்றுமை எந்நாடாயினும் சற்றேரக்குறைய ஒன்றுபோல் இருப்பதே இதற்குச் சான்று. பொதுமையைக் கொண்டுள்ள தனித்தன்மைகளை நாம் அலட்சியம் செய்வது வாடிக்கையாகிப்போனது, கற்றுக்கொடுப்பவர்களின் கவனமின்மையா? அல்லது கற்றுக்கொள்ளும் நமது ஆர்வமின்மையா? எதுவாயிருப்பினும் கலப்பையை ஓட்டிச்செல்லும் எருதைப்போல நாம் அதன் முக்கியத்துவத்தை அசைபோடமுடியுமானால், நல்ல நிலத்தை ஒத்தவிதமாக நம்மனதை பண்படுத்தமுடியும் என்பது உறுதி!

சிலந்தி தன் வலையைப் பின்னுவதுபோல் மகா பொறுமையாக கலைநயத்தோடு செய்யவேண்டிய வேலை இது. வரிவரியாக   ஒரு உறைந்த நிலத்தில் உழுவது உழவனின் தூரப்பார்வையால் மட்டுமல்ல கலப்பையின் கடின உழைப்பால் கூடத்தான்.

கலப்பையின் கூரிய நுனி இவ்வுலகத்தின் பசிப்பிணியாற்றும்பொழுது, பிற கூர்மையுடையவைகள் இரத்தப் பசியாற்றுவதை என்னவென்று சொல்ல? என்னைப் பொருத்தவரை பேனா முனையைவிட வலுவானது கலப்பையின் முனைதான், ஏனென்றால் கலப்பை மண்ணில் எழுதுவதை நிறுத்திவிட்டால் நம் தலைஎழுத்தை யாராலும் மாற்றி எழுத இயலாது.

எபிரேய மொழியில் “அபெத்” என்பது கலப்பை மற்றும் வேலையைக் குறிக்கும் – என்னே ஒரு ஒற்றுமை? வேலை செய்யாதவன் சாப்பிடலாகாது என்பதாக திரு விவிலியம் கூறியும், மகா கவி பாரதி அதை தன் பங்கிற்கு “நிந்தனை” என வழிமொழிந்தும் கூட, நாம் உண்டுகளித்திருப்பது எத்தனை அருவருப்பு வாழ்க்கை?

சூரியன் உதிக்குமுன்னே தனது பயணத்தை துவக்கி, இறுகிப்போன நிலங்களை தனது கூர்மையான மழுவால் நகிழ்த்து, கதிரவனே நில் என்று சொல்லி, அதைத் தன் தலையின் மேலிருந்து இறக்கிவைக்குமட்டும், உழவன் தன் உடலில் சேறும் புழுதியும் வாறியிறைக்கும் காட்சி நம் மனதை பண்படுத்தாததற்குக் காரணம் கலப்பையோ உழவனோ அல்ல! மாறாக பணத்தோடு கடையேறினால் கிடைக்கும் ஐ ஆர் 8ம், சம்பா பசுமதி பொன்னி போன்ற நளின அரிசிகளும்தான். போதாததற்கு இரண்டு ரூபாய் அரிசி வேறு அரசாங்கம் வாரியிறைக்கின்றது.

கலப்பையை எண்ணும்தோறும் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தத்தையும் தொட்டுணர்ந்த ஒரு பரவச உணர்வு ஏற்படுகின்றது. இரண்டு எருதுகள் கர்ம சிரத்தையாக நடக்க, பறவைகள் தங்கள் பங்கிற்கு தத்தித்தாவியபடி சில பூச்சிகளை கபளீகரம் செய்ய, கலப்பையால் பெயர்க்கப்பட்டு பிடுங்கிவிழும் மண்ணில் காற்றும் வெயிலும் இதமளிக்கும் தண்ணீரும் ஊடுருவ, அங்கு வாழும் மண்புழுவும் தன் நன்றிக்கடன் செய்யவென்று ஒரு காவியத்தோற்றமே காணப்படுகின்றது!

நிலத்தின் தன்மைக்கேற்பவும் கலாச்சாரத்தின் வெளிப்படுதலாகவும் நிலம் பல்வேறு விதங்களில் உழப்படுகின்றது. குதிரை கழுதை எருது மாடு கிடாரி மட்டுமா? நாய் கூட கலப்பையை உழுவதற்காக இழுத்துச்செல்வது நம்மில் பலர் அறிந்து கொள்ளாத உண்மை! உழும் மிருகங்களின் எண்ணிக்கைக் கூட வேறுபட்டு இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.

இயேசுக்கிறிஸ்துவின் விவசாயம் சம்பந்தமான உவமைகள் மற்றும் மேற்கோள்கள் அவரை ஒரு விவசாயியாகவே காட்டுகின்றது!  தனது பட்டறையில் செதுக்கிய கலப்பையைக்கொண்டு அவரும் உழுதிருக்க வேண்டும்! “நுகத்தில் இருவித மிருகங்களை வைத்துப் பூட்டுவது” சிறுபான்மையினரை வைத்துச் சொல்லப்பட்ட ஒன்றா என்கிற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு.

 “கலப்பையில் கைவைத்த பின்பு பின்னிட்டுப் பாராதே” எனும் கூற்று அவரை ஒரு முழு விவசாயியின் வடிவமாக நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. கலப்பையில் கைவைத்துவிட்டு கவனமின்மையாய் இருந்தால், மழுவை இழுத்திச் செல்லும் மிருகத்தின் காலை அது பதம் பார்த்துவிடும் என்ற நுண்ணிய விவசாய அறிவுரையோடு தான் சிலுவையில் ஏற்கும் வியாகுலமான காட்சியை அவர் முன்மொழிவதாகவே எனக்குப் படுகின்றது.

சிலுவை இரத்தப்பலியை நிறுத்தியப் பின்னரும் நாம் உயிர்த்தெழுந்த ஆண்டவரை வரவேற்க ஆடு கோழி மாடு பன்றி என உயிர் கொல்லத் துணிந்ததன் மர்மம் என்ன? தீர்க்கன் பட்டயங்களெல்லாம் எப்படி உழவுசார்ந்த கருவிகளாக மாறும் என் கனவு கண்டாரோ அதை நிறைவேற்ற வேண்டி இயேசு சிலுவையில் மரித்தும் நாம் மனம் திரும்பாமல் இருப்பதென்ன?

சிலுவை தன் உருவகத்தைப் பெற்றுக்கொண்டது தனிப்பட்ட இயேசுவின் சாவினால் என்று ஏற்றுக்கொள்ளாமல், ஒட்டுமொத்த துன்பம் சகிப்போரின் பொருட்டே கிறிஸ்து அதை மகிமைக்குரியதாக மாற்றினார் என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை! அப்படியிருக்க சிலுவை ஒரு கலப்பையைப்போல் இயேசுவை உழுதிட்டப்பொழுதும், எப்படி நாம் அதைக் கண்டுகொள்ளத் தவறினோம்?

தினமும் கலப்பையைத் தன் தோளில் சுமந்து பரிகாசத்திற்கு ஏதுவாய் அரைகுறை ஆடையோடு வயக்காடு செல்லும் உழவனின் வேதனையில் நாம் காணாத கடவுளை, எப்படி சிலுவை சுமப்போராக கற்பனை செய்திட இயலும்? வேதனைகளை தூர நிறுத்திவைத்து, சுகமான பிரார்த்தனைகளை நமது சுய லாபத்திற்காக வேண்டுவது எப்பேற்பட்ட சுயநலம்? தினம் தினம் விவசாயியின் மரணத்தை வானொலி, தொலைக்காட்சி மற்றும் தினசரிகள் கதறியழைத்துச் சொல்லியும், நாம் குற்ற உணர்ச்சியின்றி இறைவேண்டல் செய்யும்போது செவிசாய்க்கப்போகும் கடவுள் யார்?

 “எனக்காக அழாதீர்கள்! உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” என்று இயேசு சொன்னது ஒரு விவசாயியின் கூக்குரலாகவே எனக்குப் படுகின்றது! விவசாயியின் சாவு! நிலங்களில் ஏற்பட்டுள்ள நச்சுத்தன்மை விளைநிலங்கள் குடியிருப்புகளாகிவிடும் அவலமும் அபாயமும் என நம் எதிற்காலம் கேள்விக்குறியகிப்போனதன் விழைவான உண்மையை அவர் எடுத்துக்கூறுவதை தாமதிக்காமல் புரிந்து கொள்வது நமக்கு அதிக நன்மை பயக்கும்.

 வாழ்கையின் அத்தனை கோணங்களிலிருந்தும் கொடூரங்கள் எல்லவற்றையும் எதிற்கொண்டு, வனாந்திரத்திற்கு கலப்பையோடே செல்லும் விவசாயியின் வேண்டுதல் ” இந்தப் பாத்திரம் என்னோடேக் கூட இருக்கக்கூடுமானால் இருக்கும்படிச் செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தப்படியல்ல உம்முடைய சித்தப்படியே ஆகக்கடவது!”

நாம் என்ன செய்யப்போகிறோம்? சற்று நேரமாவது விழித்திருக்கக் கூடாதா?

 (8.4.2005 அன்று எழுதியது. திருத்துவதற்காக ஜெயமோகன் அண்ணனிடம் கொண்டு சென்றேன். பாராட்டினார்கள்)

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு

palmyra_project@yahoo.com

revgodsonsamuel@gmail.com

பத்தில் ஒரு பங்கு – பாகம் 4

ஓகஸ்ட் 5, 2009

பவுல் அப்போஸ்தலன் எப்படி தசமபாகத்தை புரிந்துகொண்டார் என்பதற்கான விளக்கம் நேரடியாக நமக்கு திரு விவிலியத்தில் கிடைக்கப்பெறவில்லை எனினும், நற்செய்தியாளர்கள் மிகுந்த விருப்பத்துடன் அவரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

“நீங்கள் ஒவ்வொருவரும் வாரத்தின் முதல் நாளில் அவரவர் வருவாய்க்கு ஏற்றவாறு ஒரு தொகையைச் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள் (1 கொரிந்தியர் 16 : 2) எனும் வசனத்தை குறிப்பிடுகிறவர்கள் அதனைத்தொடர்ந்து வரும் வாக்கியத்தை அப்படியே இருட்டடிப்பு செய்வது அந்த கடவுளுக்கே பொறுக்காது.

“தகுதியுள்ளவர்கள் என நீங்கள்  கருதுவோரிடம் நான் வரும்போது அறிமுக கடிதங்களைக் கொடுத்து உங்கள் கொடையை எருசலேமுக்கு அனுப்பி வைப்பேன்” (1 கொரிந்தியர் 16: 3)

இந்த கூற்று கொரிந்து பட்டணத்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு பவுல் நிரூபமாக எழுதியது. எந்த வசனத்தையும் நாம் நமக்கென்று வாசிப்ப்த்து பொருள் கொள்ளுவதற்கு முன்பதாக அது யாருக்கு எந்த நேரத்தில் எந்த தேவையை முன்னிட்டு எழுதப்பட்டது என புரிந்து கொள்ளுவது அவசியமாகிறது.

கொரிந்து பட்டணம் ஒரு துறைமுக நகரம். அங்கே அதிகமும் பணம் செழித்தபடியால் பவுல் அங்கே வாழ்ந்த கிறிஸ்தவர்களிடம் இதைக் கூறுகிறார். பவுலுடைய நோக்கம் வெறும் பணம் கொடுக்கச் சொல்லுவது அல்ல மாறாக அவர்கள் மத்தியில் இருந்த தவறான பழக்க வழக்கங்களை நீக்குவதும் அவர்களை மேன்மையுள்ளவர்கள் ஆகும்படி ஒரு கலாச்சார பகிர்தலை கொரிந்தியர்களுக்கும் (கிரேக்கர்களுக்கும்) எருசலேமில் வாழும் யூதர்களுக்கும் இடையில் நிகழ்த்துகிறார்.

முதலாம் வசனம் கூறும் “இறைமக்கள்” எனும் வார்த்தை பல இடங்களில் பவுல் உபயோகிப்பதை நாம் காணமுடியும். (உரோமையர் 1: 7, 2 கொரிந்தியர் 1: 1, பிலிப்பியர் 1: 1) இறைமக்கள் என்று பவுல் கூறும்பொழுது அவர் திருச்சபை அங்கத்தினர்களான மக்களையே குறிப்பிடுகின்றார்.

அப்படியானால் அவர் எருசலேமிலுள்ள யூதர்கள்(இறைமக்கள்) மேல் கரிசனை கொள்ள காரணம் என்ன? நமக்கு தெளிவான தகவல்கள் இல்லையென்றாலும் முக்கியமான ஒரு தகவல் திருத்தூதர் பணிகள் 11: 27- 30 வரைக் காணக் கிடைக்கிறது.

இவ்விதமாக வறுமையில் உழலும் கிரிஸ்தவர்கள் மேல் பாரம் கொண்டு பவுல் கொரிந்து திருச்சபைக்கும் கலாத்திய திருச்சபைக்கும் பணம் வேண்டி நிரூபம் அனுப்புகிறார்.

வாரத்தின் முதல் நாள் என பவுல் கூறுவதே பவுல் ஓய்வுநாளை முக்கியத்துவப்படுத்தாமல் ஒரு புது நாளை ஆராதனைக்கென்று அறிமுகம் செய்வதைக் காண்கிறோம். கிரிஸ்தவர்களின் கூடுகையை யூதர்களின் மரபை பின்பற்றாதிருக்க பவுல் இவ்விதமாக ஒரு முயற்சியை மெற்கொள்ளுகிறார்.

பவுல் பலவிதங்களில் தனது எதிர்ப்பை யூதர்கள் மேலாக காண்பித்திருந்தாலும், முக்கியமாக அவர்களது பழக்கவழக்கங்களை கேள்வி எழுப்பியபடியே அவர் தனது தரப்பை முன்னெடுத்துச் சென்றார் என்பதை நாம் கண்டுகொள்ள முடியும். தவறிப்பொய் கூட அவர் “பத்திலொருபங்கை” முன்னிறுத்த விழயவில்லை. பகிர்ந்து வழ்வதை அவர் போற்றியிருக்கிறார் என்பதைய் மட்டுமே நாம் காண முடியும்.

தொடரும்

அருட்திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு

palmyra_project@yahoo.com

revgodsonsamuel@gmail.com

mobile: 09870765181

நோவா எனும் இயற்கையியலாளர்

ஓகஸ்ட் 2, 2009

ஜாஸ்மினுடைய அப்பா ஒரு மாடு வைத்திருக்கிறார்கள், எந்த நிகழ்வு ஆனாலும் அந்த மாடுதான் அவரது நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் இடத்தில் இருந்தது. ஒரு சில வேளைகளில் எனக்கு  அது ஒருவித எரிச்சல் அளித்தாலும்,  அவரது ஜீவ காருண்யம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜாஸ்மின் தனது விட்டில் உள்ள ஆடு மாடுகளுக்கு பிரசவம் மற்றும் மருத்துவம் பார்ப்பதும் தொழுவை சுத்தம் செய்வதும் எனக்கு ஆச்சரியமான தகவல்கள். மிகுந்த ஈடுபாட்டுடன் அவள் அவற்றை செய்திருக்கிறாள் என்பதை நான் ரசித்து கேட்டிருக்கிறேன்.

 

மிருகங்களை பராமரிப்பது அப்படி ஒன்றும் சுலபமான வேலை அல்ல. என்ன தான் நமக்கு அவற்றின் மீது பாசம் இருந்தாலும், அவற்றிற்கான நேரம் என்பது கொடுக்கப்பட்டே ஆகவேண்டும். நேரம் மாத்திரம் அல்ல அவைகளின் உணவும் தேவையான நேரத்தில் மருத்துவமும் அவற்றை முழுவதும் அறிந்தவராலே ஈடுபாட்டுடன் செய்ய முடியும். எனக்கு நோவாவும் பேழையும் ஞாபகத்துக்கு வந்து போயின. என்னே ஒரு அற்பணிப்பு அந்த மனிதருக்கு இருந்திருக்க வேண்டும்?

 

ஆதியாகமம் முதல் 11 அதிகாரங்கள் புராணீகமானவைகள் என்ற கருத்து இறையியலாளர் மத்தியில் உண்டு. ஆகவே நானும் இவற்றை முக்கியத்துவப்படுத்தாமல் கடந்துபோன நாட்கள் உண்டு. ஆயினும் புராண இறையியல் என்பது தன்னுள்ளே ஒரு மேலான இறையியலை நிறுத்தி அதை வாசிப்பவருக்கு எளிமைப்படுத்தி சொல்லும் விதமாகையால் அதை ஆழ்ந்து படிக்க விரும்பினேன்.

 

கிட்டத்தட்ட முன்னூருக்கும் அதிகமான வெள்ளப்பெருக்கு கதைகள் உலகெங்கும் பழங்குடிகளால் சொல்லப்பட்டு வருகின்றன என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. அவ்விதமாகவே நோவாவின் கதையும் “சுடப்பட்ட” கதை என்பதை வலியுறுத்தும் விதமாக பல முன்னுதாரண இலக்கியங்கள் சுட்டப்படுகின்றன.

 

நோவா குறித்த எனது புதிய புரிதலுக்கான காரணம் நான் வாசித்த “தெ நியூ நோவா” என்கிற ஜெரால்ட் டெயூரெல்லின் புத்தகமே. ஜெரால்ட் டெயூரெல் மிருகங்களின் மீது மிகுந்த விருப்பம் உடையவர். சிறு வயதில் இருந்தே அவர் தனது கவனத்தை பிராணிகள் மீது திருப்பியிருந்தார். தனது வீட்டில் ஆமை, பாம்பு, தேள் போன்ற பிராணிகளை பிடித்துவந்து பத்திரமாக அடைத்து தனது உடன்பிரந்தவர்களை அதிகமாகவே சோதித்ததை “மை ஃபாமிலி அன்ட் அதர் அனிமல்ஸ்” என்ற தனது புத்தகத்திலே விரிவாகவும் நகைச்சுவையாகவும் எழுதுகிறார்.

 

” தெ நியூ நோவா” ஒரு மிருக காட்சி சாலைக்கு தெவையான மிருகங்களை ஜெரால்ட் ட்யூரெல் பிடிக்கச் செல்லும் காட்சிகளை விவரிக்கிறது. முதல் சில பக்கங்களிலேயே அவர் பிடித்த மிருகங்களுடன் அவர் மாரடிக்கும் காட்சி மிருகங்களை பிடிப்பதை விட அவைகளை பராமரிப்பதன் சிரமத்தையும், அதன் பின் காணப்படும் அற்பணிப்பும் நமக்கு தெளிவுபெறும் விதமாக அவர் விளக்கியிருப்பார்.

 

இஸ்ரவேலர்கள் பாபிலோனில் கைதிகளாக இருக்கும்போது எழுதப்பட்ட அல்லது வாய்மொழி கூற்றுகளாக சொல்லப்பட்டவையே முதல் 5 புத்தகங்களான “தோரா” எனப்படுபவை. அடிமைகளாக இருந்த காலத்தில் அந்த தேசத்தில் இருத்த கதைகள் பலவற்றை தங்கள் நம்பிக்கை சார்ந்து யூதர்கள் மாற்றி அமைத்தார்கள். குறிப்பாக கி மு 7ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “கில்கமிஷ் காவியம்” இதேபொன்ற சாயலையுடைய வெள்ளப்பெருக்கை பதிவுசெய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மனிதர்களின் அக்கிரமம், கடவுளின் தண்டனை, நோவாவின் அற்பணிப்பு, கடவுளின் உடன்படிக்கை என்பதாக நோவாவின் கதையை நாம் பகுத்துக் கொள்ளலாம். எனினும் இவை அனைத்தும் அற்புதங்கள் எனும் வடிவிலேயே அடிப்படைவாத கிறிஸ்தவ சமூகம் காண முற்படுகிறது. இறைவனின் அற்புத சக்தியை எள்ளளவும் நாம் குறத்து மதிப்பிட இயலாது என்றாலும், நோவாவை அவர் அழைத்த காரனம் மனிதர் மேல் கடவுள் சுமத்திய பொறுப்பு நம் நினைவில் நிற்கவேண்டும் என்பதே!

 

மனிதர்களின் அக்கிரமம் என்பது, சுயம் சார்ந்த ஒரு வாழ்க்கை முறையாக மாறிப்போனது என்பதாகவே நாம் கண்டுகொள்ள முடிகிறது. மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்குமான உறவு சுட்டிக்காட்டபடாத வரையில், மனிதர்கள் உலகம் தங்கள் நலனுக்காகவே உருவாக்கப்பட்டது என்றும், அதை எவ்வளவு தூரம் அனுபவிக்க முடியும் என்பதையுமே கருத்தில் கொண்டிருந்தனர் என்பதையும் காண முடிகிறது. பூமியின் மீதிருந்த மனிதர்களின் உறவு இயற்கையை பேணாமல் சீர்கெட்டு இருந்ததனால் கடவுள் உலகத்தை காக்கும் பொருட்டு அதை அழிக்க துணிந்தார் என நாம் கொள்ளலாம். அழிவும் பிறப்பும் சங்கமிக்கும் ஒரு அற்புதமான தருணம் இது.

 

கடவுளின் தண்டனை என்பது மனிதர்கள் சீர்படுவதற்கே எனும் கருத்தாக்கத்தை இங்கே பதிவு செய்வதை காண்கிறோம். குறிப்பாக கைதிகளாய் இருத்த யூத மக்கள் சீர்படவேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தவேண்டியும் இந்த கதை கூறப்பட்டிருக்கும்.

 

நோவாவின் 600 வயது, அவர் ஒரு முதிர்ச்சி பெற்ற மனிதராக நமக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. அவரது முதிர்ச்சி மற்றெல்லா தீய பழக்கவழக்கங்களிலிருந்தும் தம்மை அவர் விலக்கி, பிறர் தன்னை பின்பற்றும்படியான சிறந்த வாழ்வை அவர் கடைபிடித்திருக்கிறார் என பதிவாகியிருக்கிறது. எனினும் அன்றய கால சூழ்நிலையில் மக்கள் தமது விருப்பப்படி, வாழ்ந்தபடியால், நோவா காட்டிய முன்னுதாரணம் எடுபடவில்லை.

 

கடவுள் தாம் நேசித்த உலகத்தை காப்பற்றியே தீரவேண்டிய கட்டாயத்தில், நோவாவிடம் ஒரு பேழையை உண்டுபண்ண கூறுகிறார். 300 முழம் நிளம், 70 முழம் அகலம், 40 முழம் உயரம் என்பதும் கொப்பேர் மரத்தில் அதை உண்டுபண்ணு என்பது ஒரு பேழையை உண்டுபண்ணுவதற்கு போதுமான தகவல் அல்ல. ஆயினும் அனத்து ஜீவ இராசிகளையும் காப்பற்ற வேண்டி மிக பிரம்மாண்டமான ஒரு புகலிடத்தை உண்டுபண்ண கடவுள் நோவாவிற்கு கொடுத்த கரிசனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

 

நோவாவின் அற்பணிப்பு நாம் ஊன்றி கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு ஜோடியாக பறவைகளையும் மிருகங்களையும் சேகரிப்பது அத்தனை சுலபமான காரியம் இல்லை.  அவை தானாக பேழை நோக்கி வந்தது என்பது  அல்ல கடவுளின் செயல், மாறாக நோவாவிற்கு அவர் கொடுத்த நேரம் மற்றும் ஞானம் அதை அவன் எவ்விதமாக பயன்படுத்தினான் என்பதையே கடவுளின் செயலாக நாம் கருதவேண்டும். தனது படைப்பை ஒருவன் புரிந்துகொள்ளும்போது அவன் “கடவுளோடு நடக்கிறவன்” ஆகிறான்.

 

கடவுளின் உடன்படிக்கை நம்மை நாமே மறு பரிசீலனை செய்ய அழைக்கிறது. ஊலகத்தை இனி அவர் அழிப்பதில்லை என உடன்படிக்கை செய்கிறார். மனிதர்களோ தங்களால் ஆனமட்டும் அதை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் – சில நேரங்களில் அறிந்தும் பல வேளைகளில் அறியாமலும்.

 

இன்றைக்கும் நமக்கு நோவாக்கள் தேவை. உயிரினங்களை பேழையிலோ, மிருக காட்சி சாலையிலோ அடைப்பதற்கு அல்ல மாறாக பல்லுயிர்கள் தங்கள் தங்கள் வாழ்விடங்களில் பத்திரமாக தங்கவும், அவைகளை பேணுவதற்கும், அவைகளால் நமது சந்ததிகள் காப்பற்றப்படுவதற்கும் வேண்டிய இயற்கையியலாளர்கள் எனும் நோவாக்களே தேவை! இவ்விதமான நோவாக்களின் வேலையில் நாமும் பங்கெடுக்கவில்லையென்றால்,  பேழை புறப்பட்டுவிடும் நாமோ வெள்ளத்தில் மாண்டுபோவோம்.

தொடர்பிற்கு

அருட்திரு காட்சன் சாமுவேல்


%d bloggers like this: