நோவா எனும் இயற்கையியலாளர்


ஜாஸ்மினுடைய அப்பா ஒரு மாடு வைத்திருக்கிறார்கள், எந்த நிகழ்வு ஆனாலும் அந்த மாடுதான் அவரது நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் இடத்தில் இருந்தது. ஒரு சில வேளைகளில் எனக்கு  அது ஒருவித எரிச்சல் அளித்தாலும்,  அவரது ஜீவ காருண்யம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஜாஸ்மின் தனது விட்டில் உள்ள ஆடு மாடுகளுக்கு பிரசவம் மற்றும் மருத்துவம் பார்ப்பதும் தொழுவை சுத்தம் செய்வதும் எனக்கு ஆச்சரியமான தகவல்கள். மிகுந்த ஈடுபாட்டுடன் அவள் அவற்றை செய்திருக்கிறாள் என்பதை நான் ரசித்து கேட்டிருக்கிறேன்.

 

மிருகங்களை பராமரிப்பது அப்படி ஒன்றும் சுலபமான வேலை அல்ல. என்ன தான் நமக்கு அவற்றின் மீது பாசம் இருந்தாலும், அவற்றிற்கான நேரம் என்பது கொடுக்கப்பட்டே ஆகவேண்டும். நேரம் மாத்திரம் அல்ல அவைகளின் உணவும் தேவையான நேரத்தில் மருத்துவமும் அவற்றை முழுவதும் அறிந்தவராலே ஈடுபாட்டுடன் செய்ய முடியும். எனக்கு நோவாவும் பேழையும் ஞாபகத்துக்கு வந்து போயின. என்னே ஒரு அற்பணிப்பு அந்த மனிதருக்கு இருந்திருக்க வேண்டும்?

 

ஆதியாகமம் முதல் 11 அதிகாரங்கள் புராணீகமானவைகள் என்ற கருத்து இறையியலாளர் மத்தியில் உண்டு. ஆகவே நானும் இவற்றை முக்கியத்துவப்படுத்தாமல் கடந்துபோன நாட்கள் உண்டு. ஆயினும் புராண இறையியல் என்பது தன்னுள்ளே ஒரு மேலான இறையியலை நிறுத்தி அதை வாசிப்பவருக்கு எளிமைப்படுத்தி சொல்லும் விதமாகையால் அதை ஆழ்ந்து படிக்க விரும்பினேன்.

 

கிட்டத்தட்ட முன்னூருக்கும் அதிகமான வெள்ளப்பெருக்கு கதைகள் உலகெங்கும் பழங்குடிகளால் சொல்லப்பட்டு வருகின்றன என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து. அவ்விதமாகவே நோவாவின் கதையும் “சுடப்பட்ட” கதை என்பதை வலியுறுத்தும் விதமாக பல முன்னுதாரண இலக்கியங்கள் சுட்டப்படுகின்றன.

 

நோவா குறித்த எனது புதிய புரிதலுக்கான காரணம் நான் வாசித்த “தெ நியூ நோவா” என்கிற ஜெரால்ட் டெயூரெல்லின் புத்தகமே. ஜெரால்ட் டெயூரெல் மிருகங்களின் மீது மிகுந்த விருப்பம் உடையவர். சிறு வயதில் இருந்தே அவர் தனது கவனத்தை பிராணிகள் மீது திருப்பியிருந்தார். தனது வீட்டில் ஆமை, பாம்பு, தேள் போன்ற பிராணிகளை பிடித்துவந்து பத்திரமாக அடைத்து தனது உடன்பிரந்தவர்களை அதிகமாகவே சோதித்ததை “மை ஃபாமிலி அன்ட் அதர் அனிமல்ஸ்” என்ற தனது புத்தகத்திலே விரிவாகவும் நகைச்சுவையாகவும் எழுதுகிறார்.

 

” தெ நியூ நோவா” ஒரு மிருக காட்சி சாலைக்கு தெவையான மிருகங்களை ஜெரால்ட் ட்யூரெல் பிடிக்கச் செல்லும் காட்சிகளை விவரிக்கிறது. முதல் சில பக்கங்களிலேயே அவர் பிடித்த மிருகங்களுடன் அவர் மாரடிக்கும் காட்சி மிருகங்களை பிடிப்பதை விட அவைகளை பராமரிப்பதன் சிரமத்தையும், அதன் பின் காணப்படும் அற்பணிப்பும் நமக்கு தெளிவுபெறும் விதமாக அவர் விளக்கியிருப்பார்.

 

இஸ்ரவேலர்கள் பாபிலோனில் கைதிகளாக இருக்கும்போது எழுதப்பட்ட அல்லது வாய்மொழி கூற்றுகளாக சொல்லப்பட்டவையே முதல் 5 புத்தகங்களான “தோரா” எனப்படுபவை. அடிமைகளாக இருந்த காலத்தில் அந்த தேசத்தில் இருத்த கதைகள் பலவற்றை தங்கள் நம்பிக்கை சார்ந்து யூதர்கள் மாற்றி அமைத்தார்கள். குறிப்பாக கி மு 7ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட “கில்கமிஷ் காவியம்” இதேபொன்ற சாயலையுடைய வெள்ளப்பெருக்கை பதிவுசெய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

மனிதர்களின் அக்கிரமம், கடவுளின் தண்டனை, நோவாவின் அற்பணிப்பு, கடவுளின் உடன்படிக்கை என்பதாக நோவாவின் கதையை நாம் பகுத்துக் கொள்ளலாம். எனினும் இவை அனைத்தும் அற்புதங்கள் எனும் வடிவிலேயே அடிப்படைவாத கிறிஸ்தவ சமூகம் காண முற்படுகிறது. இறைவனின் அற்புத சக்தியை எள்ளளவும் நாம் குறத்து மதிப்பிட இயலாது என்றாலும், நோவாவை அவர் அழைத்த காரனம் மனிதர் மேல் கடவுள் சுமத்திய பொறுப்பு நம் நினைவில் நிற்கவேண்டும் என்பதே!

 

மனிதர்களின் அக்கிரமம் என்பது, சுயம் சார்ந்த ஒரு வாழ்க்கை முறையாக மாறிப்போனது என்பதாகவே நாம் கண்டுகொள்ள முடிகிறது. மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்குமான உறவு சுட்டிக்காட்டபடாத வரையில், மனிதர்கள் உலகம் தங்கள் நலனுக்காகவே உருவாக்கப்பட்டது என்றும், அதை எவ்வளவு தூரம் அனுபவிக்க முடியும் என்பதையுமே கருத்தில் கொண்டிருந்தனர் என்பதையும் காண முடிகிறது. பூமியின் மீதிருந்த மனிதர்களின் உறவு இயற்கையை பேணாமல் சீர்கெட்டு இருந்ததனால் கடவுள் உலகத்தை காக்கும் பொருட்டு அதை அழிக்க துணிந்தார் என நாம் கொள்ளலாம். அழிவும் பிறப்பும் சங்கமிக்கும் ஒரு அற்புதமான தருணம் இது.

 

கடவுளின் தண்டனை என்பது மனிதர்கள் சீர்படுவதற்கே எனும் கருத்தாக்கத்தை இங்கே பதிவு செய்வதை காண்கிறோம். குறிப்பாக கைதிகளாய் இருத்த யூத மக்கள் சீர்படவேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தவேண்டியும் இந்த கதை கூறப்பட்டிருக்கும்.

 

நோவாவின் 600 வயது, அவர் ஒரு முதிர்ச்சி பெற்ற மனிதராக நமக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. அவரது முதிர்ச்சி மற்றெல்லா தீய பழக்கவழக்கங்களிலிருந்தும் தம்மை அவர் விலக்கி, பிறர் தன்னை பின்பற்றும்படியான சிறந்த வாழ்வை அவர் கடைபிடித்திருக்கிறார் என பதிவாகியிருக்கிறது. எனினும் அன்றய கால சூழ்நிலையில் மக்கள் தமது விருப்பப்படி, வாழ்ந்தபடியால், நோவா காட்டிய முன்னுதாரணம் எடுபடவில்லை.

 

கடவுள் தாம் நேசித்த உலகத்தை காப்பற்றியே தீரவேண்டிய கட்டாயத்தில், நோவாவிடம் ஒரு பேழையை உண்டுபண்ண கூறுகிறார். 300 முழம் நிளம், 70 முழம் அகலம், 40 முழம் உயரம் என்பதும் கொப்பேர் மரத்தில் அதை உண்டுபண்ணு என்பது ஒரு பேழையை உண்டுபண்ணுவதற்கு போதுமான தகவல் அல்ல. ஆயினும் அனத்து ஜீவ இராசிகளையும் காப்பற்ற வேண்டி மிக பிரம்மாண்டமான ஒரு புகலிடத்தை உண்டுபண்ண கடவுள் நோவாவிற்கு கொடுத்த கரிசனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

 

நோவாவின் அற்பணிப்பு நாம் ஊன்றி கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு ஜோடியாக பறவைகளையும் மிருகங்களையும் சேகரிப்பது அத்தனை சுலபமான காரியம் இல்லை.  அவை தானாக பேழை நோக்கி வந்தது என்பது  அல்ல கடவுளின் செயல், மாறாக நோவாவிற்கு அவர் கொடுத்த நேரம் மற்றும் ஞானம் அதை அவன் எவ்விதமாக பயன்படுத்தினான் என்பதையே கடவுளின் செயலாக நாம் கருதவேண்டும். தனது படைப்பை ஒருவன் புரிந்துகொள்ளும்போது அவன் “கடவுளோடு நடக்கிறவன்” ஆகிறான்.

 

கடவுளின் உடன்படிக்கை நம்மை நாமே மறு பரிசீலனை செய்ய அழைக்கிறது. ஊலகத்தை இனி அவர் அழிப்பதில்லை என உடன்படிக்கை செய்கிறார். மனிதர்களோ தங்களால் ஆனமட்டும் அதை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் – சில நேரங்களில் அறிந்தும் பல வேளைகளில் அறியாமலும்.

 

இன்றைக்கும் நமக்கு நோவாக்கள் தேவை. உயிரினங்களை பேழையிலோ, மிருக காட்சி சாலையிலோ அடைப்பதற்கு அல்ல மாறாக பல்லுயிர்கள் தங்கள் தங்கள் வாழ்விடங்களில் பத்திரமாக தங்கவும், அவைகளை பேணுவதற்கும், அவைகளால் நமது சந்ததிகள் காப்பற்றப்படுவதற்கும் வேண்டிய இயற்கையியலாளர்கள் எனும் நோவாக்களே தேவை! இவ்விதமான நோவாக்களின் வேலையில் நாமும் பங்கெடுக்கவில்லையென்றால்,  பேழை புறப்பட்டுவிடும் நாமோ வெள்ளத்தில் மாண்டுபோவோம்.

தொடர்பிற்கு

அருட்திரு காட்சன் சாமுவேல்

Advertisements

குறிச்சொற்கள்: , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: