கலப்பை


மனித வாழ்வில் கலப்பை கலந்துகொள்ளாமல் இருந்திருந்தால் மிருக வாழ்வே மிஞ்சியிருக்கும்! பசியாற்ற எல்லாம் இருப்பினும் ருசியேற்றவெண்டி காட்டையும் கடலையும் வலைவீசிப்பிடித்து சமைக்கும் மானுடம், கலப்பையை மட்டும் கண்டுபிடித்திருக்காவிட்டால் பிற உயிரினங்களை வாழவிட்டிருக்குமா? பகிர்ந்து வாழத்தெரியாதவர்கள் பிற மானுடத்தை வகிர்ந்து தான் வாழ்ந்திருப்பார்களோ என்கிற எண்ணம் நம்மை பதற வைக்கவில்லையா?

பிற உயிரினங்களின் பழக்கவழக்கத்தைப் பார்த்து வாழக் கற்றுக்கொண்டிருந்தவர்களின் மத்தியில் சுயமாய் சிந்திக்க முடியும் என்பதை உணர்த்தும் விதமாக கலப்பையை கண்டுபிடித்தவ(ளே)னே, முதல் ஞானியும் விஞ்ஞானியும் ஆவா(ள்)ன்! சமூகப் பொறுப்பும், அக்கறையும் கொண்ட ஒருவரின் இத்தகைய கண்டுபிடிப்பு, பசிப்பிணியாற்றிய தொண்டு எந்த மறையும் ஈடுசெய்ய முடியாதது.

கலப்பையின் தெய்வீகம் ஏட்டுச்சுரைக்காயாகிவரும் நம் சம காலத்தில் அதை சுமந்து செல்லும் கிழவனின் முதுகு கேழ்விக்குறியாக காட்சியளிப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை! இரண்டு அல்லது மூன்று தலைமுறைக் கண்டவர்கள் மட்டுமே சுமக்கும் இப்பொருள், இன்றல்லது நாளை இடம்பெயரக் காத்திருக்க, இயந்திரத்தின் பயங்கரமும், இயற்கையின் வலிய விதியும், அரசியல் சாக்கடையும், சமய சமாதானங்களும் இவர்தம் வாழ்வையே உழுதுபோடும்பொழுது, நாம் வேடிக்கை பார்ப்பது “உண்ட சோற்றுக்கு இரண்டகம் செய்வதல்லவா?”.

கலப்பை உழுதிட்ட நிலம்போல் காட்சியளிக்கும் இவர்தம் வாழ்வில், சிலுவையை சுமக்கச்சொல்ல நமக்கென்ன அருகதைஇருக்கின்றது? நாமெல்லோரும் தொழுதுண்டு பின்செல்லவேண்டும் என வள்ளுவன் எழுதிவைத்தும், நாம் “சொல்பேச்சுக் கேளாமை” எனும் அதிகாரத்தை எழுதத்தூண்டுகிறோமா?

கலப்பையின் பிறப்பு நாம் உற்றுனோக்கத்தக்க பல காலங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. மனுக்குலம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள கலப்பை ஒரு அத்தியாவசிய ஊன்றுகோலாய் இருப்பினும், அதன் வடிவமும் வேகமும் மற்றும் இன்னபிற மாற்றங்களும் நத்தையின் வேகத்தையே ஒத்திருந்தன. இதை முன்னிறுத்தும் விதமாக கலப்பையின் பிறப்பை அறிஞர்கள் மூன்று முக்கிய காலகட்டங்களாக பிரிக்கின்றனர்.

1  சேகரிக்கும் பொருளாதாரத்தின் இறுதி நிலை
2  விவசாயத்தின் துவக்கநிலை அல்லது கால்நடையாக்கல்
3  கிராம விவசாய யுகம்

சுமார் 3000 வருடங்களாக கலப்பை தன் கலைச்சேவை மற்றும் களைப்பு மாற்றும் சேவையும் செய்துவருவதாக அறிஞர் கூறும் கூற்று நம் பழந்தமிழ் இலக்கியங்களுடனும் இணங்கிப்போவதாய் அமைந்துள்ளது.

மண்ணில் விழுந்த விதை முளைத்து, துளிர்விட்டு, வளர்ந்து, மொட்டுவிட்டு, மலர்ந்து, பூவாகி, காய்த்து, கனிந்து மீண்டும் மண்ணில்…. என நடப்பதை எவ்வளவு கூர்மையாக, அதே நேரம், நாள் வருடம் என காத்திருந்து பெற முடிந்ததோ; அது போலவே கலப்பை பிறப்பதற்கும் காலங்கள் பலவாயின என்பது அடிப்படையாயினும் நம்மில் ஒருசாரார் இதை ஏற்க மறுக்கிறோம்.

காயீன் தன் நிலத்தின் பலனை ஏதேன் தோட்டதின் வேளியே  உள்ள சந்தையில் ஆபேல் என்ற ஒரே சகோதர வாடிக்கையாளருக்காக (பண்டமாற்றுமுறையில்) விற்பதற்காக காத்திருப்பது சற்று அதிகப்படியாக நமக்குத் தெரியவில்லை?

எவ்விதமான விதை? எந்த நிலம்? ஏற்ற காலம் ஏது? எவ்வளவு காலம்? அறுவடை செய்வது எப்படி? சேகரிப்பதற்கான களஞ்சியம் எங்கே? என ஏகப்பட்ட மர்மங்கள் உள்ள ஒரு காரித்தை செய்வதற்குரிய ஞானத்தைக் கடவுள் அருளினாலும், அதற்கேற்றவிதமாய் சற்று காலத்தையும் வசூலித்துக்கொண்டார் என்பதை எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்போகிறோம்?

கலப்பை தன் பயணத்தை மிகவும் மெதுவாக துவக்கியிருந்தாலும், பல கலச்சாரங்களையும், நாடுகளையும், சமயங்களையும் நூற்றாண்டுகளையும் உழுது செல்லும்பொழுது, காட்சி மாறும் நேரத்தில் காணாமற் போகின்ற ஆபத்து நம் கண்ணெதிரே இருந்தும் அது மறைவாய் இருப்பதன் காரணம் என்ன?

கலப்பை தன்னகத்தே கொண்டுள்ள உவமை, உவமேயம் மற்றும் உருவகம் அளப்பரியது! அது ஒட்டுமொத்த்த மனித குலத்திற்கும் பொதுவானது. கலப்பையின் உருவ ஒற்றுமை எந்நாடாயினும் சற்றேரக்குறைய ஒன்றுபோல் இருப்பதே இதற்குச் சான்று. பொதுமையைக் கொண்டுள்ள தனித்தன்மைகளை நாம் அலட்சியம் செய்வது வாடிக்கையாகிப்போனது, கற்றுக்கொடுப்பவர்களின் கவனமின்மையா? அல்லது கற்றுக்கொள்ளும் நமது ஆர்வமின்மையா? எதுவாயிருப்பினும் கலப்பையை ஓட்டிச்செல்லும் எருதைப்போல நாம் அதன் முக்கியத்துவத்தை அசைபோடமுடியுமானால், நல்ல நிலத்தை ஒத்தவிதமாக நம்மனதை பண்படுத்தமுடியும் என்பது உறுதி!

சிலந்தி தன் வலையைப் பின்னுவதுபோல் மகா பொறுமையாக கலைநயத்தோடு செய்யவேண்டிய வேலை இது. வரிவரியாக   ஒரு உறைந்த நிலத்தில் உழுவது உழவனின் தூரப்பார்வையால் மட்டுமல்ல கலப்பையின் கடின உழைப்பால் கூடத்தான்.

கலப்பையின் கூரிய நுனி இவ்வுலகத்தின் பசிப்பிணியாற்றும்பொழுது, பிற கூர்மையுடையவைகள் இரத்தப் பசியாற்றுவதை என்னவென்று சொல்ல? என்னைப் பொருத்தவரை பேனா முனையைவிட வலுவானது கலப்பையின் முனைதான், ஏனென்றால் கலப்பை மண்ணில் எழுதுவதை நிறுத்திவிட்டால் நம் தலைஎழுத்தை யாராலும் மாற்றி எழுத இயலாது.

எபிரேய மொழியில் “அபெத்” என்பது கலப்பை மற்றும் வேலையைக் குறிக்கும் – என்னே ஒரு ஒற்றுமை? வேலை செய்யாதவன் சாப்பிடலாகாது என்பதாக திரு விவிலியம் கூறியும், மகா கவி பாரதி அதை தன் பங்கிற்கு “நிந்தனை” என வழிமொழிந்தும் கூட, நாம் உண்டுகளித்திருப்பது எத்தனை அருவருப்பு வாழ்க்கை?

சூரியன் உதிக்குமுன்னே தனது பயணத்தை துவக்கி, இறுகிப்போன நிலங்களை தனது கூர்மையான மழுவால் நகிழ்த்து, கதிரவனே நில் என்று சொல்லி, அதைத் தன் தலையின் மேலிருந்து இறக்கிவைக்குமட்டும், உழவன் தன் உடலில் சேறும் புழுதியும் வாறியிறைக்கும் காட்சி நம் மனதை பண்படுத்தாததற்குக் காரணம் கலப்பையோ உழவனோ அல்ல! மாறாக பணத்தோடு கடையேறினால் கிடைக்கும் ஐ ஆர் 8ம், சம்பா பசுமதி பொன்னி போன்ற நளின அரிசிகளும்தான். போதாததற்கு இரண்டு ரூபாய் அரிசி வேறு அரசாங்கம் வாரியிறைக்கின்றது.

கலப்பையை எண்ணும்தோறும் இந்தப் பிரபஞ்சத்தின் மொத்தத்தையும் தொட்டுணர்ந்த ஒரு பரவச உணர்வு ஏற்படுகின்றது. இரண்டு எருதுகள் கர்ம சிரத்தையாக நடக்க, பறவைகள் தங்கள் பங்கிற்கு தத்தித்தாவியபடி சில பூச்சிகளை கபளீகரம் செய்ய, கலப்பையால் பெயர்க்கப்பட்டு பிடுங்கிவிழும் மண்ணில் காற்றும் வெயிலும் இதமளிக்கும் தண்ணீரும் ஊடுருவ, அங்கு வாழும் மண்புழுவும் தன் நன்றிக்கடன் செய்யவென்று ஒரு காவியத்தோற்றமே காணப்படுகின்றது!

நிலத்தின் தன்மைக்கேற்பவும் கலாச்சாரத்தின் வெளிப்படுதலாகவும் நிலம் பல்வேறு விதங்களில் உழப்படுகின்றது. குதிரை கழுதை எருது மாடு கிடாரி மட்டுமா? நாய் கூட கலப்பையை உழுவதற்காக இழுத்துச்செல்வது நம்மில் பலர் அறிந்து கொள்ளாத உண்மை! உழும் மிருகங்களின் எண்ணிக்கைக் கூட வேறுபட்டு இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன.

இயேசுக்கிறிஸ்துவின் விவசாயம் சம்பந்தமான உவமைகள் மற்றும் மேற்கோள்கள் அவரை ஒரு விவசாயியாகவே காட்டுகின்றது!  தனது பட்டறையில் செதுக்கிய கலப்பையைக்கொண்டு அவரும் உழுதிருக்க வேண்டும்! “நுகத்தில் இருவித மிருகங்களை வைத்துப் பூட்டுவது” சிறுபான்மையினரை வைத்துச் சொல்லப்பட்ட ஒன்றா என்கிற சந்தேகம் எனக்கு எழுவதுண்டு.

 “கலப்பையில் கைவைத்த பின்பு பின்னிட்டுப் பாராதே” எனும் கூற்று அவரை ஒரு முழு விவசாயியின் வடிவமாக நமக்குத் தெளிவுபடுத்துகின்றது. கலப்பையில் கைவைத்துவிட்டு கவனமின்மையாய் இருந்தால், மழுவை இழுத்திச் செல்லும் மிருகத்தின் காலை அது பதம் பார்த்துவிடும் என்ற நுண்ணிய விவசாய அறிவுரையோடு தான் சிலுவையில் ஏற்கும் வியாகுலமான காட்சியை அவர் முன்மொழிவதாகவே எனக்குப் படுகின்றது.

சிலுவை இரத்தப்பலியை நிறுத்தியப் பின்னரும் நாம் உயிர்த்தெழுந்த ஆண்டவரை வரவேற்க ஆடு கோழி மாடு பன்றி என உயிர் கொல்லத் துணிந்ததன் மர்மம் என்ன? தீர்க்கன் பட்டயங்களெல்லாம் எப்படி உழவுசார்ந்த கருவிகளாக மாறும் என் கனவு கண்டாரோ அதை நிறைவேற்ற வேண்டி இயேசு சிலுவையில் மரித்தும் நாம் மனம் திரும்பாமல் இருப்பதென்ன?

சிலுவை தன் உருவகத்தைப் பெற்றுக்கொண்டது தனிப்பட்ட இயேசுவின் சாவினால் என்று ஏற்றுக்கொள்ளாமல், ஒட்டுமொத்த துன்பம் சகிப்போரின் பொருட்டே கிறிஸ்து அதை மகிமைக்குரியதாக மாற்றினார் என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை! அப்படியிருக்க சிலுவை ஒரு கலப்பையைப்போல் இயேசுவை உழுதிட்டப்பொழுதும், எப்படி நாம் அதைக் கண்டுகொள்ளத் தவறினோம்?

தினமும் கலப்பையைத் தன் தோளில் சுமந்து பரிகாசத்திற்கு ஏதுவாய் அரைகுறை ஆடையோடு வயக்காடு செல்லும் உழவனின் வேதனையில் நாம் காணாத கடவுளை, எப்படி சிலுவை சுமப்போராக கற்பனை செய்திட இயலும்? வேதனைகளை தூர நிறுத்திவைத்து, சுகமான பிரார்த்தனைகளை நமது சுய லாபத்திற்காக வேண்டுவது எப்பேற்பட்ட சுயநலம்? தினம் தினம் விவசாயியின் மரணத்தை வானொலி, தொலைக்காட்சி மற்றும் தினசரிகள் கதறியழைத்துச் சொல்லியும், நாம் குற்ற உணர்ச்சியின்றி இறைவேண்டல் செய்யும்போது செவிசாய்க்கப்போகும் கடவுள் யார்?

 “எனக்காக அழாதீர்கள்! உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்” என்று இயேசு சொன்னது ஒரு விவசாயியின் கூக்குரலாகவே எனக்குப் படுகின்றது! விவசாயியின் சாவு! நிலங்களில் ஏற்பட்டுள்ள நச்சுத்தன்மை விளைநிலங்கள் குடியிருப்புகளாகிவிடும் அவலமும் அபாயமும் என நம் எதிற்காலம் கேள்விக்குறியகிப்போனதன் விழைவான உண்மையை அவர் எடுத்துக்கூறுவதை தாமதிக்காமல் புரிந்து கொள்வது நமக்கு அதிக நன்மை பயக்கும்.

 வாழ்கையின் அத்தனை கோணங்களிலிருந்தும் கொடூரங்கள் எல்லவற்றையும் எதிற்கொண்டு, வனாந்திரத்திற்கு கலப்பையோடே செல்லும் விவசாயியின் வேண்டுதல் ” இந்தப் பாத்திரம் என்னோடேக் கூட இருக்கக்கூடுமானால் இருக்கும்படிச் செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தப்படியல்ல உம்முடைய சித்தப்படியே ஆகக்கடவது!”

நாம் என்ன செய்யப்போகிறோம்? சற்று நேரமாவது விழித்திருக்கக் கூடாதா?

 (8.4.2005 அன்று எழுதியது. திருத்துவதற்காக ஜெயமோகன் அண்ணனிடம் கொண்டு சென்றேன். பாராட்டினார்கள்)

அருட் திரு காட்சன் சாமுவேல்

தொடர்பிற்கு

palmyra_project@yahoo.com

revgodsonsamuel@gmail.com

Advertisements

குறிச்சொற்கள்: , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: