Archive for ஒக்ரோபர், 2009

திருநங்கை – திருச்சபை

ஒக்ரோபர் 23, 2009

வேத பகுதி
திருத்தூதர் பணிகள் 8: 26 – 40

தனது 10ஆம் ஆண்டுவிழாவை கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி கொண்டாடிய மீரா ரோடு திருச்சபையை வாழ்த்துகிறேன். பதினோராவது ஆண்டு மிகவும் பயன் நிறைந்ததாக மாறும் பொருட்டு நாம் செய்யவேண்டிய கடமையை இன்றைய தினத்திலே தூய ஆவியானவர் நமக்கு வெளிப்படுத்த இருக்கிறார்.

நாம் வாசிக்க கேட்ட பகுதியானது நமக்கு நன்கு அறிமுகமானது என்றாலும், அதில் வரும் நபர் குறித்த புரிதல் ‘பரிசுத்த வேதாகமம்’ வாசிப்பவர்களுக்கும் ‘திருவிவிலியம் வாசிப்பவர்களுக்கும் மாறுபடும் என்பதில் சந்தேகமில்லை.

அப்போஸ்தலர் நடபடிகள் 8: 27 ….அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து…” என்கிற வேத பகுதியில் காணப்படும் “ஒருவன்” எனும் வார்த்தை அவரது பாலினத்தை ஆண்பாலாக வர்ணித்தபடி கடந்து செல்லுகிறது. மூல வார்த்தையாகிய கிரேக்க வார்த்தையை நான் ஒப்புநோக்கவில்லை என்றாலும் திருவிவிலியம் காட்டும் அவர்தம் பாலினம் சற்று நம்மை கூர்ந்து அவதானிக்க அழைக்கிறது!

திருவிவிலியத்தை நாம் உற்று நோக்கினால்….

திருத்தூதர் பணிகள் 8.27….. அப்போது எத்தியோப்பிய அரசு அலுவலர் ஒருவர் எருசலேம் சென்று கடவுளை வணங்கிவிட்டு திரும்பிசென்றுகொண்டிருந்தார். “அவர் ஒரு அலி”. எத்தியோப்பிய அரசியான கந்தகியின் நிதியமைச்சர்.

“அவர் ஒரு அலி” என்ற வார்த்தை நம்மில் பலருக்கு அதிர்ச்சியை அளித்தாலும், அதன் உண்மை நம்மை அறைந்து எழுப்புவதாக இருக்கிறது. அந்த வார்த்தையின் தேவை இன்றைக்கு நமக்கு புரிந்துகொள்ளுவதற்கு கடினமாக தென்பட்டாலும், கடவுளின் அரசு செயல்பட  அந்த பகுதி ஒரு முக்கிய உந்து சக்தியாக காணப்படுகிறது.

பல்வேறு விதங்களில் அவமான பெயர்களை சுமந்து வாழும் திருநங்கைகளைக் குறித்து வேதம் என்ன சொல்லுகிறது என்பது நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. இன்றுவரை நம் திருச்சபைகளில் திருநங்கைகள் அங்கத்தினர் ஆகாததற்கு காரணம் என்ன என்று நாம் அவசரமாக ஆராயவேண்டும். வேத ஆதாரப்படி திருநங்கைகள் என அழைக்கப்படும் அண்ணகர்கள் ஆலயத்தின் உள்ளே வரலாகாது எனும் வரையறை குருமரபினரான ஆரோனின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படுவதைக் காண்கிறோம்.
லேவியர் 21: 20 “கூனன், குள்ளன், கண்ணில் பூ விழுந்தவன், சொறி சிறங்கு உடையவன், அண்ணகன் எவனும் வேண்டாம்” என கொடூரமாக இவர்களை ஆலயத்துக்கு புறம்பாக நிறுத்துவதை மட்டுமே நாம் கடைபிடிப்போமானால் தவறிளைத்தவர்கள் ஆகிவிடுவோம்.

பல வித சட்டதிட்டங்களை வழங்கிய மோசே இஸ்ரவேலர் கானான் தேசத்திற்கு நுழைவதற்குமுன்பாக கடவுளின் வாக்கிற்கிணங்க ஒரு சட்ட வரையறை செய்கிறார். அதை குரு முறைமை கடைபிடிக்கும் ஆரோன் குடும்பத்தாருக்கு பகிர்ந்து கொள்ளுகிறார். புதிய தேசத்தில் கடவுளை வழிபடும் இறைமக்களாம் இஸ்ரவேலர் எவ்விதமாக தங்களை தூய்மையாக வைத்திருக்கவேண்டும் எனவும், தூய்மையல்லாத எவரும் தொழுகைக்கு வருவதனால் தூய்மையான இறைவனுக்கு செலுத்தவேண்டிய கனத்தை தவற விட்டுவிடலாகாது என்ற புரிதலுடன் மட்டுமே நாம் மோசேயிடம் கடவுள் கூறியவற்றை உற்றுநோக்க வேண்டும்.

மாத்திரமல்ல இணைச்சட்டம் கூறுவது என்னவென்றால் 23: 1ல் “விதையடிக்கப்பட்டவனும் ஆண்குறி அறுக்கப்பட்டவனும் ஆண்டவரின் திருப்பேரவைக்குள் நுழையலாகாது”

மேற்கொண்ட வாக்கியங்களை ‘சரிவர’ புரிந்துகொண்டவர்களாக திருச்சபையானது அனேக வேளைகளில் பலதரப்பட்ட மக்களை திருச்சபைக்கு புறம்பாகவே நிறுத்தியிருக்கிறது. இது சரிதானா என நோக்கும்போது கண்டிப்பாக சரியான ஒன்று அல்ல என்பது திருவிவிலியத்தில்தானே வெளிப்படுகிறது!

தூய ஆவியரின் நடத்துதல் பிலிப்புவோடு இருந்ததனால் அவர் இறைச் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து நிதி அமைச்சரின் தேரோடு இணைந்துகொண்டார் என்பதை கண்டுகொள்ளுகிறோம். பாலை நிலத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டவர் “அவர் ஒரு அலி” என்ற உண்மை தெரிந்த பின்பும் அவரோடு உரையாடுவது கிறிஸ்துவின் அரசுக்கு திருநங்கைகள் மிகவும் முக்கியமானவர்கள் என்பது வெளிப்படுகிறதில்லையா? 

தீர்க்கன் ஏசாயாவின் புத்தகம் 56ஆம் அதிகாரத்தை நாம் வாசிக்கும்பொழுது…

3 ஆண்டவரோடு தம்மை இணைத்துக்கொண்ட பிற இனத்தவர், ‘தம் மக்களிடமிருந்து ஆண்டவர் என்னைப் பிரித்துவிடுவது உறுதி’ என்று சொல்லாதிருக்கட்டும்; அவ்வாறே அண்ணகனும், ‘நான் வெறும் பட்ட மரம்’ என்று கூறாதிருக்கட்டும்.

4 ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஓய்வுநாளைக் கடைபிடித்து, நான் விரும்புகின்றவற்றையே தேர்ந்துகொண்டு, என் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் அண்ணகர்களுக்கு,

5 என் இல்லத்தில், என் சுற்றுச்சுவர்களுக்குள் நினைவுச்சின்னம் ஒன்றினை எழுப்புவேன்; புதல்வர் புதல்வியரை விட சிறந்ததொரு பெயரை வழங்குவேன்; ஒருபோதும் அழியாத என்றுமுள  பெயரை அவர்களுக்குச் சூட்டுவேன்.

6 ஆண்டவருக்குத் திருப்பணி செய்வதற்கும், அவரது பெயர்மீது அன்பு கூர்வதற்கும், அவர்தம் ஊழியராய் இருப்பதற்கும், தங்களை ஆண்டவரோடு இணைத்துக்கொண்டு ஓய்வுநாளைத் தீட்டுப்படுத்தாது கடைபிடித்து, தம் உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளும் பிற இன மக்களைக்குறித்து ஆண்டவர் கூறுவது:

7 அவர்களை நான் என் திருமலைக்கு அழைத்து வருவேன்; இறைவேண்டல் செய்யப்படும் என் இல்லத்தில் அவர்களை மகிழச்செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும்  மற்றப்பலிகளும் என் பீடத்தின்மேல்  ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என அழைக்கப்படும்.

எவ்வளவு தெளிவாகவும் பொதுவாகவும் ஆண்டவரின் அழைப்பு முன்வைக்கப்படுகிறது. இயேசு கோவிலை தூய்மைப்படுத்தும் நிகழ்விலே (மத் 21: 12- 17; மாற் 11: 15 – 19; யோவான் 2: 13- 22) லூக்க 19: 45ல் இவ்விதமாக மறுபடியும் குறிப்பிடுகிறார்…. ” ‘என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என அழைக்கபடும்’ என்று மறை நூலில் எழுதியுள்ளது” என்று அவர்களுக்குக் கற்பித்தார்.

இயேசுவானவர் இதே பகுதியை எடுத்தாளும் சூழல் நமக்கு நினைவிருந்தாலும் ஒருபோதும் நாம் அதை திருநங்கைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக சொன்னார் என்பதைக் கண்டுகொள்ள தவறிவிடுகிறோம். அவ்விதமாக நாம் தவறிவிடும்பொழுது திருநங்கைகளுக்கான உரிமையை நிலைநாட்டிய இயேசுவைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம்.

தொடர்ந்து இயேசுவின் நெடிய ஆன்மீகப் பயணத்தில் இருந்து நாம் விலகி சென்றுவிடுகிறோம்! திருச்சபை குறிப்பிட்ட நபர்களுக்குத்தான் எனும் எண்ணத்துடனே தொழுகைக்கு வருகிறோம். பிற மக்களை வாசலின் புறம்பாக நிறுத்திவிடுகிறோம்.

எருசலேமில் தனது வழிபாடு மறுக்கப்பட்டாலும் கடவுள் பால் மிகுந்த பற்றுடன் தீர்க்கனின் ஓலைச்சுருளை வாசித்தபடி செல்லும் திருநங்கையை கர்த்தர் கண்டு பிலிப்புவை அவரிடத்தில் அனுப்புகிறார். தனது பணியை செவ்வனே செய்யும் பிலிப்புவிற்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது!

“நான் திருமுழுக்கு பெற ஏதாவது தடை உண்டா என்று கேட்டார்” தி. ப. 8: 36 அதற்கு பிலிப்பு கூறிய பதிலாக சில முக்கியமல்லாத கையெழுத்துப் படிகளில் மட்டுமே காணப்படும் பதில் என்னவென்றால், ” நீர் முழு உள்ளத்தோடு நம்பினால் தடை இல்லை”. எனில் முழு உள்ளத்தோடு நம்பி இறைவனிடம் வருபவர்களுக்கு தடை செய்ய நாம் யார்?

இயேசு கூறுகிறார் ” … அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மண உறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர், வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர், மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக்  கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார்.  மத் 19: 12

திருச்சபை திருநங்கைகளுக்கு தனது கதவை திறக்க இப்பொழுது மறுக்கலாம் எனினும் அவ்வாறே அவர்களை தூரமாக்கி வைத்து நமது “மீட்பின் அனுபவத்தை” நாமே பெருமையாக கருதுவோமானால், அதை மறு பரிசீலனைக்கு உட்படுத்தவேண்டிய அவசியத்தை துய ஆவியர் நமக்கு இன்று உணர்த்துகிறார்.

மூன்றாம் பாலினரை பிலிப்பு சந்திப்பது கூட பாலை நிலத்தில்தான் இல்லையா? பிரிதலும் பிரிதல் நிமித்தமும், பாலை நிலத்தின் உரிப்பொருளாக காணப்படுவதுபோலவே திருச்சபை இவர்களை இனங்காணுவதை என்னவென்று சொல்ல?

மனந்தளராது பாலை நிலத்தில் நாம் நம் திருப்பணி செய்ய அழைக்கப்படுகிறோம்! அனைவருமாக!

(மீரா ரோடு, தமிழ் மெதடிஸ்ட் திருச்சபை, 11. 10. 2009 அன்று காலை ஆராதனையில் நான் பகிர்ந்துகொண்ட செய்தியின் எழுத்து வடிவம்)

தொடர்புக்கு

palmyra_project@yahoo.com

09702567603


%d bloggers like this: