தாலாட்டு பாட வா…


கிறிஸ்தவத்திற்கும் தாலாட்டுக்கும் அதிக தொடர்பு உண்டு. பெரும்பாலான கிறிஸ்மஸ் பாடல்கள் தாலாட்டை முன்னிறுத்தியபடியே இருக்கும். இயேசு பாலனாக பிறந்தபடியால் தாலாட்டின் மெட்டுக்களில் இவ்விதம் பல பாடல்கள் அமைந்துள்ளன.

ஆரனை தூங்கவைப்பதற்காக நான் செல்போனில் இடும் பாட்டும் கிறிஸ்மஸ் பாடல் தான் ஆனால் அது தாலாட்டு அல்ல. தெ ரெபெல் ஜீஸஸ் என்கிற ஜாக்சன் பிரவுனின் பாடலை எனக்கு எனது நண்பரான டாக்டர் விட்னி ஹோவர்த் அறிமுகம் செய்திருந்தார்கள். எனக்கு அது  பிடித்துபோகவே அதை நான் மறுபடியும் மறுபடியுமாக கேட்பதற்காக அவனுக்கும் அதையே போட்டு தூங்க வைக்கிறேன். (கொடுமைடா சாமி!) என்னவிதமான அழுகையுடனிருந்தாலும் இந்தப்பாடலைக் கேட்டவுடன் அழுகை நின்றுவிடும். கண்ணை விரித்து யார் பாடுவது என தேட ஆரம்பித்துவிடுவான்.

ஜாஸ்மின் நன்றாக பாடுவாள் ஆகையினாலே அவள் பாடும்போது இன்னுமாக பயல் சொக்கிவிடுவான். ஜாஸ்மின் தற்பொழுது பாடுவது எனது அம்மா கற்றுக்கொடுத்த பாடல், எங்கள் குடும்ப தாலாட்டுப் பாடல். எங்கள் வீட்டில் பிறந்த எல்லா சிறுபிள்ளைகளுக்கும் இதைத்தான் பாடுவது எங்கள் வழக்கம். யார் உருவாக்கியது என்று தெரியாவிட்டாலும் நல்ல கிறிஸ்தவ பாடலானபடியால் பரம்பரையாக பாடுவதாக நான் நினைத்துக்கொள்ளுவேன்.கிறிஸ்தவ பாமாலைத்தொகுப்பில் இந்தப் பாடல் உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன் இதுவரைப் பார்த்தது இல்லை (என்ன ஒரு அவமானம்) உறுதி செய்ததும் இல்லை (என்ன ஒரு சோம்பேறித்தனம்?)

நீ சாய்ந்து தூங்கு பிள்ளையே
கண்மூடு கண்ணே நீ
அஞ்சாதே மோசம் இல்லையே
கர்த்தாவின் கண்மணி

பிதா தாமே உன் பக்கத்தில்
துணையாய் நிற்கிறார்
அவரே உன்னைக் காக்கையில்
பொல்லாங்கும் செய்வதார்

குமாரன் கெட்டுப்போனதை
இரட்சிக்கவே வந்தார்
உனக்கு சமாதானத்தை
அளிக்க மரித்தார்

பல நாட்களாக ஜாஸ்மின் இதைப் பாடிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் மாறுதலுக்காக நான் ஒரு தாலாட்டு பாடலைப் பாடினேன். “ஏன் பிள்ளைக்கு இத்தன நாளும் நீங்க இதப் பாடேல?” என கோபித்துக்கொண்டாள். இதையும் எங்கள் வீட்டில் மற்ற பிள்ளைகளுக்காக நாங்கள் பாடியதே!

சின்னப் பாலன் ஆரன்
துங்குகிறான் (2)
சின்னப் பாலன் ஆரன்
துங்குகிறான் நன்றாய்
தேவன் அவனை காக்கிறார் சுகமாய்
தூதரை அனுப்பி அவனை பத்திரமாய்.

கூடவே ஜாஸ்மினுக்கு பெரிய சந்தேகம் “ஆரோன் சின்ன பிள்ளயா இருக்கியது பைபிள்ல இல்லேல்லியா பின்ன எப்படி?” நான் சொன்னேன் அது  வந்து… எந்த சின்ன பிள்ளையா இருந்தாலும் நாம் அதை பாடலாம்… அவங்கவங்க பேர மாத்திரம் மாத்தணும். ஆனாலும் ஒரு சந்தேகம் வந்துவிட்டதால் அம்மாவிற்கு போண் செய்தேன். அவர்கள் கொடுத்த ஒரிஜினல் பாடல்.

சின்னப் பாலன் மோசே
துங்குகிறான் (2)
சின்னப் பாலன் மோசே
துங்குகிறான் நன்றாய்
தேவன் அவனை காக்கிறார் சுகமாய்
ராணியை அனுப்பி அவனை பத்திரமாய்.

சரிதான், மோசேயின் வாழ்வில் ஏற்பட்ட ஒரு திடீர் திருப்புமுனை நிகழ்வை மையமாக வைத்து பாடப்பட்ட பாடல் எவ்வளவு குழந்தைகளை நிம்மதியாக உறங்கவைத்துள்ளது?

அம்மா அப்படியே இன்னுமொரு பாடலை எனக்கு நினைப்பூட்டினார்கள். ராஜாவாகவும் முத்து மணி மாணிக்கம் என கொஞ்சி உறங்கவைக்கும் ஒரு அருமையானப் பாடல். “கர்த்தர் செட்டைக்குள்” ஒரு அருமையான கிறிஸ்தவ டச் கொடுக்கிறது. அவரவர் விருப்பமான கடவுள் பெயர்களை நிரப்பினால் மதங்களைக் கடந்து பல குழந்தைகளை இந்த தாலாட்டு உறங்கவைக்கும். எனினும் ‘கர்த்தர் செட்டைக்குள்’ சிறு பிள்ளைகள் தூங்குவதில் தவறொன்றும் இல்லை

கண்ணே தூங்கிடு
கண்ணே தூங்கிடு
செல்ல ராஜாவே
நீ தூங்கிடு

விண்மண் ரெண்டிலும்
வேந்தன் உனக்கு
வேறே பாடில்லை
நீ தூங்கிடு

மரகத மணி
வைரப்பொன்மணி
கர்த்தர் செட்டைக்குள்
நீ தூங்கிடு

இதைப் பற்றி ஜாஸ்மினிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவளது பாட்டி பாடும் ஒரு தாலாட்டுப்பாடலை பாடினாள். நகைச்சுவை ததும்பும் இந்தப் பாடலே நமது மண்ணிலிருந்து ஆரன் பெற்ற ஒரு வெகுமதியாகக் கருதுகிறேன். கிராமத்து சூழலை விளக்கும் வார்த்தைகள், உறவை கூறும் வரிகள்.

கொஞ்சுவதற்கேற்ற உரையாடல் நிறைந்த இச்சிறு பாடல் போல இன்னும் சில பாடல்கள் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். இதைப்பாடும்போது ஜாஸ்மினின் நடிப்பு அருமை. நானே பிள்ளையாகப் பிறந்துவிடலாமா என்கிற ஆசை எழுப்பும் பாடல் வரிகள்…

பல வரிகளை மறந்துவிட்டபடியால் ஜாஸ்மினின் அம்மாவை தொடர்புகொண்டு வரிகளை நிரப்பினோம். ஆரன் கொடுத்துவைத்த பயல் தான் இல்லயா?

கண்ணே ஆரீரரோ என்
கண்ணே உறங்குறங்கு

கோழி குஞ்சு பொரி- நீ
முத்தமெல்லாம் கொண்டுதிரி
காக்கே கறுகறுப்பா
காட்டானே சூடடிக்கும்

மாமேன் அடிச்சாரோ பிள்ளைக்கு
மருதோணி கம்பொடச்சி
பேரேன் அடிச்சாரோ
பேரேந்தி கம்புவெட்டி

யாரும் அடிக்கவில்லை
பசிச்சழுதேன் நானம்மா

பிள்ள பசிச்சி அழுதியானா
பிள்ளைக்கு ஆமணக்கு தண்டொடொச்சி
அதுநெறைய தேனடச்சி
பிள்ள பசிச்சி அழும் வேளையிலே
நான் தருவேன் கண்ணே நீ
உறங்குறங்கு

உறங்குறங்கு என்னரசே
புழுபோலே நீ உறங்கு

‘அம்மானை’ பாடிய ஊரில் தான் இருக்கிறாயா இல்லை வேறெங்கும் இருக்கிறாயா என்று கேட்காதீர்கள், ஆரன் தூங்குகிறான்.

அருட்திரு காட்சன் சாமுவேல்

தொடர்பு கொள்ள palmyra_project@yahoo.com

                                           malargodson@gmail.com

09702567603

Advertisements

குறிச்சொற்கள்: , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: