வருகை


கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு பாலனாம் இயேசுவின் வருகையை எதிர்நோக்கியிருக்கும் திருச்சபையினரை வாழ்த்துகிறேன்!

நாம் பண்டிகைக்காலத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில் திருச்சபையின் கால அட்டவணையைக் குறித்த ஒரு அறிமுகம் உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று கருதுவதால் உங்களோடு அதைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று ஆசிக்கின்றேன்.

மாதங்களைக் கணக்கிடும் நமக்கு டிசம்பர் மாதம் வருடத்தின் இறுதியில் வருவதாயிருந்தாலும் கிறிஸ்தவ காலண்டரின்படி இதுவே நமக்கு துவக்கமாகும். “வருகை”  என்று பொருள்படும் “அட்வெந்து” காலத்தை திருச்சபை சுமார் 4ஆம் நூற்றாண்டுமுதல் அனுசரித்து வருவதை பதிவுகளில் காணமுடிகிறது.

இயேசு பாலனாக அவதரித்துவிட்டார் என உறுதிபட நம்பும் நமக்கு அவரின் வருகை “இரண்டாம் வருகையாக” காணப்படுகிறது. இந்நாட்களில் அவரின் வருகைக்காக நம்மை ஆயத்தப் படுத்துவதும், வருகையை எதிர்பார்த்திருப்பதும் பிறரை இதற்கென ஆயத்தப்படுத்துவதும் நமது தலையாயக் கடமை.

வருகையை எதிர்நேக்கி பலர் “காத்திருக்கும்” இந்நாட்களில், காத்திருத்தல் எனும் வார்த்தை நம்மைச் சோர்வுறச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை. காத்திருப்பதை விட எதிர்நோக்கி இருப்பது மிகவும் நன்மை பயப்பதல்லவா? வருகையை எதிர்நோக்கியிருக்கும் திருச்சபையினருக்கு இந்த நாள் கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறது எனும் நற்செய்தி அறிவிக்கும் நாள் என உங்களுக்கு நான் உறுதிபட கூறுகிறேன்.

பல வேளைகளில் கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது என நாட்களைக் குறித்து பல அடையாளங்களை காட்டி மக்களை திசை திருப்பும்போது இயேசுவின் வாய்மொழிக்கூற்றையே நான் சார்ந்திருக்க விளைகிறேன். “இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளனுக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். எனெனில் நீங்கள் நினையாத நெரத்தில் மானிட மகன் வருவார்” (மத்தேயு 24: 43 & 44)

ஒருமுறை நான் நீர்நிலைகளில் உள்ள  தாவரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தபொழுது மீன்கொத்தியை ஒத்த ஒரு பறவை கரும்புள்ளிகளுடன் குளத்தின் மேலே பறந்துகொண்டிருந்தது. அது காற்றில் தன் சிறகை அசைத்து நின்ற இடத்திலேயே தன்னை நிறுத்தியிருந்தது ஆச்சரியமாக எனக்குத் தோன்றியது. திடீரென ஒரு கர்ணம் அடித்து நேர்கோட்டில் மேலிருந்து கீழாக தனது அலகை அம்பாக்கி சீறியது. தனது இரையைக் கவ்வியபடி அருகிலிருத்த மரத்திற்கு சென்று அமர்ந்தது.

தனது நிழலை வைத்து மீன்களிடம் மாயம் ஏதும் செய்கிறதா இந்த பறவை? மீனை தண்ணீரில் சந்திப்பதற்கு ஆயத்தப்படும் பறவையைப் போல ஏமாறக் காத்திருக்கிறதா மீன்கள்? தண்ணீரில் வாழும் மீன்கள் காற்றிலிருந்து வெளிப்படும் பறவையிடம் ஏமாறும் கணம் ஏது?

கிறிஸ்துவின் அன்பில் வாழும் நாமும் ஒருவேளை அவரின் அன்பிற்கு அப்பாற்பட்ட ஆளுமைகளால் ஏமாற்றப்படுவோமா? பல நூற்றாண்டுகளாக கிறிஸ்துவின் வருகையை குறிப்பிட்டு பலர் நம்மை ஏமாற்றியபடி இருப்பதனால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தூய பவுல் அடிகளார் “மாரனாத்தா” எனும் அரமேய பதத்தை 1 கொரிந்தியர் 16: 22ல் குறிப்பிடுகிறார். யூதனான பவுல் எபிரேய மொழியில் தனது பிரதியை எழுதாவிட்டாலும் தான் எழுதிய கிரேக்க மொழியில் கூட இந்த பதத்தை பதிவு செய்யாதது சற்று ஆச்சரியமாய் இருக்கிறது. கல்விமானாய் காணப்பட்ட பவுல் “மாரனாத்தா” எனும் வரிவடிவமற்ற அரமேய வார்த்தையை குறிப்புணர்த்தும்பொருட்டு இங்கே உபயோகிக்கிறார்.   “ஆண்டவரே வருக” எனும் வார்த்தைக்கு இணையாக “ஆண்டவர் நம்முடன் இருக்கிறார்” என்றும் இருபொருள் பெறும் இந்த வார்த்தை ஆழ்ந்த அர்த்தம் நிறைந்தது.

நிகழ் காலத்தையும் எதிர் காலத்தையும் நிறைக்கும் ஒரு வார்த்தை இந்த இடத்தில் நிரப்பப்பட்டது ஒரு ஆழ்ந்த புரிதலின் வெளிப்பாடாகவே என நாம் கருத இடமுள்ளது. அந்த புரிதல் நோக்கி நாம் பயணம் செய்தால்…

திருவெளிப்பாடுகள் 22: 20ல் “ஆம், விரைவாக வருகிறேன்” என்கிறார். ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும். விரைவாக வரும் இயேசுவை எதிர்நோக்கியிருக்கும் ஒரு உறுதியை நாம் இப்பகுதியில் கண்டுகொள்ளலாம்.

யாக்கோபு எழுதிய திருமுகம் 5: 8ல் நீங்களும் பொறுமையோடிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில் ஆண்டவரின் வருகை நெருங்கி வந்துவிட்டது. என நாம் வாசிக்கிறோம். இதைத் தொடர்ந்து வரும் வசனம் இன்னுமாக அவரது வருகையை அருகில் காண்பிக்கின்றது. சகோதர சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகதவாறு ஒருவார் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார்.

பொறுமை, தளராமனம், மற்றவருக்கு எதிராய் முறையிடாத தன்மை போன்ற உயர்ந்த விழுமியங்களை இப்பகுதியில் நாம் இறைவனின் வருகையை ஒட்டியவாறு காண முடிகிறது.

வருகை என்பது தூரமான எதிர்காலத்திற்கான ஒன்றல்ல, மாறாக அது  நமது செயல்களின் தீர்ப்பை வழங்க நமது அருகிலேயே காத்திருக்கும் மனுக்குமாரனை தரிசிக்கும் உன்னதமான ஒரு தருணம் எனும் உண்மையை இப்பகுதி நமக்கு நன்கு விளக்குகிறது.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இறைவாக்கினராம் ஏசாயா, இறைவனின் நீதியை நமக்கு தெளிவுறக் காண்பிக்கிறார். எதிர்நோக்கியிருக்கும் அந்த வருகையை “நேர்மை அவருக்கு அரைக்கச்சை, உண்மை அவருக்கு இடைக்கச்சை” என ஏசாயா கண்டுகொள்ளுகிறார். அவரது வருகை நீதி செய்வதாக இருக்கும் என்பதை அறியும் ஒவ்வொரு கணமும் நாம் அனைவரும் நீதிசெய்ய கடமைப்பட்டவர்கள் ஆகிறோம்.

அடையாளங்களைத் தேடுவதை விட ஆயத்தப்படுதல் மிகவும் இன்றியமையாதது. வருகையோடு தொடர்புடைய திருவிவிலியம் காண்பிக்கும் இரண்டு நபர்களை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்த விளைகின்றேன்.

யோவான்:  இயேசுவின் சமகாலத்தவன். வருகையை முன்னறிவிப்பவனாக காணப்படுகிறான், எனினும் வருகையின் காலத்தில் வாழ்ந்தவன்.  “ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்” எனும் இறை வாக்கினரின் கூற்றிற்குப் பாத்திரமாய் விளங்கியவர்.

மரியாள்:  இயேசுவின் தாயார். வருகையை எதிர்நோக்கியிருப்பவர். பொறுமையோடும் நம்பிக்கையோடும் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கியிருந்தவர். பெண்களுள் ஆசி பெற்றவராக காணப்பட்ட மரியாள் வருகையின் காரணியானது எத்துணை பாக்கியமானது?

மேற்கூரிய இருவரின் வாழ்வையும் நாம் ஆழ்ந்து படித்தால் ஆண்டவரின் வருகை நமக்கு மிகவும் அருகிலிருக்கும். அவ்வாறே நாம் அதற்கு எவ்விதம் ஆயத்தமாகவேண்டும் என்பதை புரிந்துகொள்ளவும் வாய்ப்பாக அமையும்.

குழந்தையாய் அவதரித்த மனுக்குமாரன் நம்மை அரவணைத்து நீதியுடன் நம்மை தமது வருகையில் சேர்த்துக்கொள்ள பாத்திரவான்களாய் இருப்போம். கர்த்தரின் அன்பு என்றென்றும் நம்முடன் தங்கியிருப்பதாக.

(6.12.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று மீரரோடு மெதடிஸ்ட் திருச்சபையில் பகிர்ந்துகொண்ட செய்தியின் எழுத்து வடிவம்)

அருட்திரு காட்சன் சாமுவேல்.

தொடர்புகொள்ள palmyra_project@yahoo.com

malargodson@gmail.com

Mobile 09702567603

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: