எனது வாழ்வில் நான் கண்ட மிகப் பெரிய மனிதர்களுள் ஒருவரும், என் போன்ற எளிய இறையில் மாணவர்களின் சிறந்த, மாதிரியான தலைமைத்துவ பண்புடையவருமான அறிவர் அருட் திரு ஞானா ராபின்சன் அவர்களின் 75ஆம் பிறந்தநாளில் இந்த பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
மகிழ்ச்சி மற்றும் நன்றிகூறும் ஒரு தருணம் எனவும் கிருபையாய் பெற்ற 75 வருடத்தை கொண்டாடுதல் எனவும் அவரது அழைப்பிதழில் பெற்றுள்ள வாசகங்கள் ஆழ்ந்த அர்த்தம் நிரம்பியவை
இன்று நிகழும் விழாவானது குமரி மண்ணின் போதகர்கள் மாத்திரமல்ல உலகம் முழுவதிலுமுள்ள இரண்டு தலை முறை இறையியலாளர்கள் தவிர்க்கமுடியாத ஒரு முக்கிய ஆளுமையின் சகாப்தத்தை அறைகூவும் ஒரு பொன்னாள் ஆகும். அன்னாரது வாழ்கை வரலாற்றை எழுதுவதை விட நான் கண்ட “அங்கிள்” ஐ எழுதுவது தான் இங்கே பொருந்தும்.
பெங்களூர் ஐக்கிய இறையியல் கல்லூரியில் ஒரு வருட வளர்ச்சிக் கல்விக்க்காக மாணவர் கிறிஸ்தவ இயக்கத்தால் அழைக்கப்பட்டிருந்தேன். நான் முதன் முதலாக அங்கிளை சந்தித்தது எனது நேர்முக தேர்வில் தான். எனது அப்பா அருட் திரு செ சாமுவேல் என்று நான் சொன்னவுடன் அவர் மிகவும் மகிழ்ந்துபோனார். நாங்கள் ஒருமித்து படித்தோம் என்பதை அவ்விடத்திலேயே கூறினார்.
எனது தகப்பனார் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தது போலவே என்மீதும் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். எனது ஒரு வருட டிப்ளமோ வகுப்பு முடிவடையும் தருணம் “அப்பா என்ன சொல்றாங்க?” என்று கேட்டார். நான் பி. டி படிக்க சொல்றாங்க ஆனா எனக்கு இஷ்டமில்லை என்று சொன்னேன். “அப்போ ஒரு அப்பிளிக்கேஷன் போடு” என்று கூறிவிட்டார்கள். ஒரு வேளை அவர்கள் அன்று என்னிடம் அந்த கேள்வியைக் கேட்டிருக்காவிட்டால் எனது வாழ்வு கண்டிப்பாக திசை திரும்பியிருக்கும். இதே விதமான ஒரு சம்பாஷனை எனக்கும் பேராயர் சாமுவேல் அமிர்தம் அவர்களுக்கும் நடந்தது. அவர் என்னிடம், இறையியல் கல்வி முடித்துவிட்டு என்னை வந்து பார் என்றது எத்துணை தீர்க்க தரிசனம் கொண்டவர்கள் இவர்கள் என தெரியப்படுத்துகிறது.
“நியாயம் தண்ணீரைப் போலவும் நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டுவரக் கடவது” எனும் தீர்க்கன் ஆமோசின் வரிகளைப் ஒற்றி அவர்கள் எங்களுக்கு பாடம் நடத்தினார்கள். எளிமையாக, புரிந்து கொள்ளத்தக்கதாக, அவர்கள் எங்களுக்கு பயிற்சியளித்தது என்றும் நினைவுகூறத்தக்க இனிமையான அனுபவமே.
ஒருமுறை ஆனுவல் ஃபீஸ் கட்ட வேண்டிய தருணம். எனக்கு வீட்டிலிருந்து பணம் வருவதற்கு தாமதமாகிவிட்டது. வீட்டிலிருந்து பணம் வருவதே ஒருவகையில் கேள்விக்குறிதான், ஏனென்றால் அம்மாவும் அப்பாவும் அந்நேரத்தில் ஓய்வுபெற்றுவிட்டிருந்தனர். பணம் கட்டாவிட்டால் பரீட்சை எழுத இயலாது எனும் சூழ்நிலை. ப்ரின்சிபலாக அங்கிள் இருந்த நேரம்.
எப்படியும் ஒரு கடிதம் வாங்கிவிட்டால் பிற்பாடு எப்படியாவது பணத்தை கட்டிவிடலாம் என்று போய் நின்றேன். தனது அலுவலகத்திற்கு வரச் சொன்னார்கள். கிட்டத்தட்ட அரைமணிநேரமாக எதுவுமே பேசாமல் பல ஃபைல்களைப் புரட்டிக் கொண்டிருந்தார்கள். நிமிர்ந்த போது அவர்கள் கையில் ஒரு காசோலை இருந்தது. எனக்கு தேவையான பணம் அதில் இருந்தது. என்னால் நம்ப முடியவில்லை. அறைக்கு வந்தும் அழுதுகொண்டே இருந்தேன்.
இறையியல் கல்வியானது மிகவும் செலவு பிடிக்கும் ஒன்று. மேடைப் பிரசங்கியார்களுக்கு செலவு செய்யும் பணத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட இறையியல் கல்லூரிகள் சந்திக்கும் தேவைகளை பூர்த்தி செய்ய கிறிஸ்தவ விசுவாசிகள் விரும்புவது இல்லை. இவ்விதமான தருணத்தில், வேறு ஒருவராக இருந்திருந்தால், புண்பட்டு நின்றிருக்கும் நம்மிடமே ஏன் இன்னும் பணம் கட்டவில்லை? என்கிற கேள்வியே கேட்கப்பட்டிருக்கும். தனது மிகப்பெரிய பாரத்தினூடாக என் போன்ற பல மாணவர்களை அவர் சத்தமில்லாமல் கை தூக்கி விட்டுருக்கிறார் என்பதை பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.
எனது இறுதி ஆய்வுக்கட்டுறையை அங்கிளே நெறியாளராக இருந்து அமைத்து தந்தது எனக்கு பெருமைக்குரிய காரியமே. அவர்களது ஆலோசனை பலவிதங்களில் எனக்கு பயனுள்ளவையாக அமைந்தது.
ஒரு முறை, மாணவர்களும் ஆசிரியர்களும் உடற்பயிற்சி இல்லாமல் இருக்கின்றனர் என்ற கருத்து வலுப்பெற்று, காலை தியானத்தின் முன்பு சிறு உடற்பயிற்சி செய்ய வேண்டும் என முடிவானது. நாள்பட நாள்பட கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது எனினும் அங்கிள் இறுதி வரை தவறவே இல்லை. இன்றும் அவரது உறுதியான உடலின் காரணம் அவரது உடற்பயிற்ச்சியே! எனது சிறு தொந்தியைப் பார்த்து ஒரு நாள் சிரித்தபடியே ஒரு பொய் குத்து விட்டார்கள். அவர்களின் அணுகுமுறையே அப்படித்தான் அன்புடன் நமக்கு சொல்ல வேண்டியதை சொல்லிவிடுவார்கள்.
நான் தொடர்ந்து வாசிக்கும் ஜாமக்காரன் பத்திரிகையில், தமிழ்நாடு இறையியல் கல்லூரியைப் பற்றி விமரிசித்து எழுதியிருந்த கட்டுரையை ஞானா அங்கிள் கையாண்ட விதம் அவருக்கே உரிய பக்குவத்தை வெளிப்படுத்துகிறது. வேறு யாராவது அதை அத்துணை ஞானத்தோடு கையாண்டிருப்பார்களா என்பது ஐயமே! தான் சொல்ல வேண்டிய கருத்தை மிகவும் ஆணித்தரமாகவும், வேத ஆதாரத்துடனும் நிறுவுவதற்கு அவருக்கு நிகர் அவரே தான்.
எந்த விதமான பாசாங்கும் அற்றவர், எவரையும் நீதியின் பொருட்டு எதிர்த்து நிற்க வல்லவர். அவரது தீர்க்கர் மன்றத்தில் நான் கலந்து கொண்ட நிகழ்வுகளில் நேரடியாக அனுபவித்தவைகள் இவை.
மத மாற்றம் குறித்த சிந்தனைகள் எனது தந்தைக்கும் அங்கிளுக்கும் இரு திசைகளில் இருந்தாலும், அதை பக்குவமாக எனது அப்பாவிடம் பகிர்ந்தளித்த விதம் என்னை நெகிழவேச் செய்தது.
ஒருவேளை அங்கிள் குமரிப் பேராயத்தில் பேராயராகப் பொறுப்பெடுத்திருந்தால் நான் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன். கர்த்தர் தொடர்ந்து அனேகருக்கு நன்மையளிக்க வேண்டி, நீண்ட ஆயுளால் அங்கிளை முடிசூட்ட வேண்டுகிறேன்.
(இன்றும் நட்புடன் உறவாடும் ஒரு தன்மையுடியவராகவே அவர் காணப்படுகிறார். இதுவரை அவரை சந்திக்காதவர்கள் அவரை சந்திக்கும் ஒரு அரிய தருணமாக இதை எடுத்துக்கொண்டு இன்று நடைபெறும் விழாவில் அவரை வாழ்த்தி வரும்படி உங்களை அன்புடன் வேண்டிக்கொள்ளுகிறேன்.)
75ஆம் பிறந்த நாள் விழா நாள் 27.03.2010 காலை 10 மணி இடம்: லூசி டல்ஃபர் ஆடிட்டோரியம், அமைதி அறக்கட்டளை, கன்னியாகுமரி 04652- 221459 மற்றும் 98427 11864 அன்புடன் அருட் திரு காட்சன் சாமுவேல் தொடர்பு கொள்ள 09702567603