கடவுளின் இருள்


ஒரு முறை அறிவர் அருட்திரு ஞானா ராபின்சன் அவர்களது இல்லத்தில் நடைபெறும் திருமறை தியான வகுப்பில், அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பினார்கள். இருளை நாம் எதனுடன் தொடர்புபடுத்த முடியும்?  நான் கடவுளுடன் என்றேன். சுற்றியிருந்தவர்கள் அனைவரும் வயதிலும் அனுபவத்திலும் என்னை விட மிகவும் மூத்தவர்கள். ஆன்மீகத்தில் விளைந்தவர்கள். “தேவன் ஒளியாய் இருக்கிறார்” என உறுதியாகத் தெரிந்தவர்கள். என்னை சற்று மறை கழண்டவன் என்பது போல் கூட ஒரு சிலர் பார்த்தனர். எனினும் ஞானா அங்கிள் புரிந்து கொண்டார்கள். பலவித விளக்கங்களை அந்த நாள் நாங்கள் தியானித்தோம். பிற்பாடு அதன் ஆழத்தை நான் தேடிச் செல்லவில்லை.

இன்று நான் மதிக்கும் ஆழ்ந்த மறை பற்றுதல் கொண்டவரும், தீவிர நம்பிக்கையாளருமான  திரு கிறிஸ்டோபர் அவர்களுடன் எதிர்பாராத விதமாக சந்தித்து பேசிக்கொண்டிருந்த போது “கடவுள் இருளாயிருக்கிறார்” என்ற பிரயோகம் சகோதரரிடம் ஒரு ஆழ்ந்த கேள்வியை எழுப்பிற்று.

மிக நிச்சயமாக நம்மால் அறுதியிட்டு கூறத்தக்க வேத பகுதிகள் நம்மிடம் இல்லாததாலும், நமது புரிதலின் வெளியை விட்டு நகர்த்தும் எந்த ஒரு சிந்தனையும் நம்மை அச்சமுறச் செய்வதாலும், தேவன் “இருளாய் இருப்பது” ஏற்றுக்கொள்ளத்தக்க ஒன்று அல்ல என்பதாகவே நாம் முடிவு செய்வோம்.

சிறு பிராயத்திலிருந்தே நமது பழக்க வழக்கங்களை நாம் கூர்ந்து அவதானித்தால், இத்தகைய சிந்தனைகள் கலாச்சாரம் வேர்பற்றி, பண்பாடின் மலராக நமது கரத்தில் “மணம்” வீசிக்கொண்டிருக்கின்றன என்பதே என் எண்ணம்.

சிறு பிள்ளைகள் பெறும் தண்டனைகளில் ஒன்று அவர்களை இருளில் நிறுத்துவது. போலீஸ்காரன் வாரான் பூச்சாண்டி வாரான் என்று சொல்லுவதுபோலவே இதுவும். போலீஸ்காரன் வந்தாலும் வராத பூச்சண்ண்டியைப் பயமுறுத்தவேண்டி அழைத்தாலும் சிறுவர்களுக்கு ஏதும் நிகழாது. எனினும் “அச்சத்தை” அவர்களிடம் கொடுத்தாயிற்று. ஆனால் இந்த “அச்சம்” ஆதி முதலாய் இருந்தது இல்லை.

சிறுகுழந்தை வயிற்றில் உருகொள்ளும் நாள் முதல் அது பிறக்கும் வரை அதன் சுக வாழ்வு  இருட்டரையில் மிகவும் பத்திரமாகவே இருக்கிறது. தாய் அளிக்கும் அந்த இருட்டே ஒரு சிறந்த கவசம்.

குழந்தை பிறந்து சில நிமிடங்களில் பால் குடிக்கும் பொழுதும், பின்வரும் நாட்களிலும் அது தனது தாயை கண்களால் அறிந்து கொள்வதில்லை மாறாக அது தாயை மணம் மூலமே அறிந்துகொள்ளுகிறது. “அறிதல்” என்றவுடன் திருமறை கூறும் படைப்பின் பக்கங்களில் என் சிந்தனை நகர்கிறது. ஆதாம் ஏவாளை “அறிந்தது” கடவுளோடு வாழும் தன்மையை இழந்த பின்புதான் என்பது நாம் கவனிக்கத்தக்கது. கூடவே” அவர்கள் கண்கள் திறக்கப்பட்டன” என்பதும் “பார்க்கும் தன்மை” அத்துணை ஒரு உயர்ந்த விழுமியமாக இப்பகுதியில் கருதப்படவில்லை. மாறாக தவரிழைத்ததன் பலனாக, அதன் தண்டனையாக கண்கள் திறந்தன என புரிந்து கோள்ள முடிகிறது.

கண்கள் மூடியிருப்பது தவறல்லவா? திறந்திருப்பது தானே அதன் படைப்பின் இரகசியம்? எனில் கண்கள் எதற்காக? பார்பதற்காகத்தானே? ஆதாம் ஏவாள் “கண்கள் திறக்கப்படுவதற்குன்” முன்பு வரை பார்வையற்றவர்களாக இருந்தனரா என்றால் இல்லை என்பது தானே பதில்? தெய்வீகத் தன்மையோடு ஒரு குழந்தை பார்ப்பதை நம்மால் காணக் கூடாது என்பதை நாம் எப்பொழுது உணரப் போகிறோம்? நமது கண்கள் திறக்கப்படும் நேரங்கள் நாம் கடவுளை விட்டு தூரமாக சென்றுவிடுவதன் மர்மம் புரிகிறதல்லவா? நமது சாதி, மதங்களின் வியாக்கியானம், கலாச்சாரம் போன்றவைகள் நம்மை அறுவை சிகிழ்சை செய்து கண்களைத் திறக்கின்றன. நாம் காணுவது கண்கள் கூச்சமடையும் ஒரு உலகம். அது கடவுள் படைத்த உலகத்தை பார்க்க இயலாதபடி பலவீனமாக்கிவிடுகிறது.

சில வார்த்தை பிரயோகங்களை நாம் அவதானித்தால் இருளுக்கும் ஒளிக்கும் நாம் வைத்துக்கொண்டுள்ள அளவு கோல்கள் தெரியவரும். இவை திருமறைச் சார்ந்தவைகள் அல்ல என்றாலும் இவையே நம்மை திருமறையின் கண்ணாடிகளாக நாம் அணிந்து கொள்ளுவது என்றால் மிகை ஆகாது.

பல வேளைகளில் நமது சொற்கள் நம்மிடம் ஒட்டிக்கொண்டுள்ள விதம் அவை நம்து எண்ணத்தை பிரதிபலிப்பதால் தான். “உங்களுக்குத் தெரியுமா?” என்ற கேள்வி பார்வை சம்பத்தப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. “உண்மையை” நாம் “கண்”டடைகிறோம்! நல்லது செய்பவர்கள் வாழ்வில் “ஒளி”யேற்றுபவர்கள் ஆகிறார்கள். “குருட்டு நம்பிக்கை” “கண்மூடித்”தனமான வேகம், இருட்டைக் கொண்டு ஓட்டையை அடைக்கமுடியுமா? போன்ற ஒரு சில வாக்கியங்கள், உதாரணங்களாக இருளையும் ஒளியையும் நாம் எவ்விதம் கூறு போட்டு வைத்திருக்கிறோம் என்பதை விளக்க போதுமானது.

கடவுள் அளவிட முடியாதவர். எந்த அளவுகோலும் ஏற்றி நாம் அவரை குறைத்து விட இயலாது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது பார்வைகள் அவரை அளந்துவிட்வோ விவரித்துவிடவோ இயலாது. அவ்வாறே நமது வார்த்தைகளும். “வானாதி வானங்களும் அடக்கிக்கொள்ள இயலாதவரை” அற்பர்கள் நாம் எவ்விதம் அடக்கி அறிந்துகொள்ள இயலும்? அடக்கி அறிந்துகொள்ளுவதன் சிறுமதியினை தாண்டி சிந்திப்பது அல்லவோ தேடல்? பரம் பொருளைத் தேடுவது “வெளிச்சத்தில் என்றால்” இருளில் தொலைத்ததை எவ்வறு கண்டடைய இயலும்.

ஒத்துக் கொள்ளுகிறேன்.

தேவன் ஒளியாயிருக்கிறார், ஒளியானது இருளைப் பற்றிக்கொள்ளுவது இல்லை, நானே மெய்யான ஒளி… போன்ற வார்த்தைப் பிரயோகங்களை நாம் சற்று மிகைப் படுத்திவிட்டோமோ என்று தோன்றுகின்றது.

இருளின் மீது எனது பற்றுதலுக்கான வசனம் தொடக்க நூல் 1: 2ல் காணப்படுகிறது. “….ஆழத்தின் மீது இருள் இருந்தத்து,  நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக்கொண்டிருந்தது.  என துவங்கும் படைபின் நாள் வசனம் 5ல் “… மாலையும் காலையும் நிறைவுற்று முதலாம் நாள் முடிந்தது” என மலையே நாளின் துவக்கம் என உறுதிபடுத்தப்படுவதை காண்கிறோம். துவக்கம் மாலையிலிருந்து காலையாகிறது. இருளிலிருந்து ஒளி பிறக்கின்றது. எந்த சிறு விளக்கானாலும் அதன் நிழலை அதால் மாற்ற இயலாது என்பதை நாம் திட்டமாக அறிந்திருக்கிறோமில்லையா?

ஆதியில் இருள் கடவுளோடு இருந்திருக்கும் பட்சத்தில்  கடவுள் தாமே இருளாய் அமைந்து தன்னிலிருந்து பிறப்பிக்கும் அனைத்தையும் தனது சாயலுடனே படைக்கிறார்.

கடவுள் சர்வ வியாபி, இருளும் அவ்விதமாகவே வியாபித்து இருக்கிறது. ஒளி ஏற்றினால் இருள் இல்லாமல் ஆவது இல்லை. ஆனால் இருளை ஏற்ற இயலாது. உருவாக்கவும் இயலாது. அது சுயம்பு. தானே உருவான ஒன்று கடவுளின் ஆதி பண்பு. அது தன்னை பிறர் அண்டவிடாதபடியும் பிறறை தழுவியபடியும் நிழல்போல் காணப்படுகிறது. அதன் பார்வையிலிருந்து நாம் நம்மை விலக்கிக் கொள்ள இயலாது. இருட்டின் கண்கள் அவை.

அவர் என்னை துரத்தியடித்து, ஒளியினுள் அன்று, இருளினுள் நடக்கச் செய்தார் என புலம்பல் 3: 2ல் வாசிக்கிறோம். தொடர்ந்து 6ஆம் வசனத்தில் “இருள் சூழ்ந்த இடத்தில் அவர் என்னை வாழச் செய்தார்” எனவும் நாம் காண்கிறோம். தேவனின் சிட்சிப்பா இது? அவர் நல்லவர் என தாசன் கண்டுகொள்ளும் வழியாக அல்லவா இவைத் தோன்றுகின்றன? இருள் பாவமானது என்றால் ஆண்டவர் இவ்விடத்தில் நேர்மையாளரை அனுமதிப்பது எப்படி?

இருளில் மறைத்துவைத்த கருவூலங்களையும் மறைவிடங்களில் ஒளித்துவைத்த புதையல்களையும் உனக்கு நான் தருவேன் என ஏசாயா45: 3ல் கடவுள் நமக்கு வாக்களிக்கிறார். தொடர்ந்து நாம் வாசிக்கும்பொழுது 15ல் மீட்பரான் இஸ்ரயேலின் கடவுளே, உண்மையிலேயே நீர் “தம்மை மறைத்துக் கொள்ளும் இறைவன்” என நமது கடவுளின் தன்மையை விவரிப்பதைக் காணலாம்.

விக்கிரகங்கள் சூழ்ந்த ஒரு தேசத்தில், பகல் வேளையில் அனைவரின் பார்வைக்கும் கடவுளாக காட்சிதரும் சிலைகளை நம்புகிறவர்களைவிட உருவமற்று, வியாபித்து, தோற்றமும் முடிவும் இல்லாமல், ஆக்கவும் அழிக்கவும் இயலாத ஒன்றாக இறைவன் தன்னை வெளிப்படுத்தும் தருணம் நாம் அவரோடு ஐக்கியமாகும் தருணமே என கடவுள் நம்மை அழைப்பது நமக்கு தென்படுகிறதா?.

ஒரு நிமிடம் நாம் நமது கண்களை மூடி தலைகளைத் தாழ்த்தி வேண்டுதல் செய்யத் துணிவோமானால் நாம் புரிந்துகொள்வோம்…

இறைவனோடு உறவாட நமது கண்கள் தேவை இல்லை நமது ஆன்மாவே போதும்

நீதியுள்ள ஆன்மா அவரை கண்டடையும் என்பதையே “தூய்மையுள்ள உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்” என மத்தேயு 5: 8 தெளிவுபடுத்துகிறது.

எவ்விதம் கடவுளைக்  காண நாம் அழைக்கப்படுகிறோம்?

(“கடவுளின் இருள்” எனற  எனது வலைப்பூவின் 50ஆம் பதிவை
 தனது 75ஆம் பிறந்த நாளைக் கர்த்தரின் கிருபையாலும், இரக்கத்தாலும், ஆசியாலும் நிறைவுசெய்த அறிவர். அருட் திரு.  ஞானா ராபின்சன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்)

அருட் திரு காட்சன் சாமுவேல்

Contact: palmyra_project

09702567603

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: