கிறிஸ்தவர்களுக்கான புஸ்தகங்களுக்கோ கிறிஸ்தவ மாதாந்திர பத்திரிகைகளுக்கோ குறைவு இல்லாமல் புற்றீசல்கள் போல பல பத்திரிகைகளும் புத்தகங்களும் வந்தவண்ணமிருக்கின்றன. எனினும் கிறிஸ்தவ சிறுவர் இலக்கியம் இன்னும் வளராத நிலையிலேயே உள்ளது. இதற்கு முழு முதற் காரணம் கிறிஸ்தவ பெற்றோரே. பைபிள் தவிர வேரொன்றும் வாசிக்கக் கூடாது எனும் வைராக்கிய தீர்மானத்தில் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பவர்கள், பிள்ளைகள் 10ஆவது படிப்பதிலிருந்தே எந்த கிறிஸ்தவ நிறுவனத்தில் எஞ்சினீரிங், மெடிசின் படிக்க வைக்கலாம் என முடிவு செய்து ஜெபித்து பிள்ளைகளை படிப்பிற்காக மட்டும் என அற்பணித்து விடுவார்கள்.
இந்த பிள்ளைகள் பாட புத்தகத்தை மாங்கு மாங்கு என படித்து, போதகர் முதல் ஊரில் வந்துபோகும் அத்தனை “வல்லமையான” பிரசங்கியார்களையும் கண்டு அல்லது கடித தொடர்பு கொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றபின், நிறைய காணிக்கைகளை இட்டு மிஷனறிகளையும் போதகர்களையும் “தாங்கி” வருகிறார்கள். இவ்விதமாகவே கிறிஸ்தவ ஆன்மீகமானது இன்றைய தினத்திலே சீரும் சிறப்புமாக வளர்ந்து வருகிறது.
இந்த சிறுவர்கள் தான் வளர்ந்த பின்பு, “ஹோலி ஸ்பிரிட் என்னோட பேசி, நீ தான் இந்த ப்ராஜெக்ட்ல செலட் ஆவேண்ணு” அது அப்படியே நடந்ததுல எங்கம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். கர்த்தர் இந்த சாட்சியை ஆசீர்வதிப்பாராக என ” கர்த்தரின் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஹோலி ஸ்பிரிட் கவுண்சலிங் செய்துகொண்டிருப்பது போல வாய் கூசாமல் (பொய்) “சாட்சி” கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய தினத்தில் சிறுவர்களுக்கான தரமான கிறிஸ்தவ பத்திரிகைகள் வராததற்குக் காரணம் அற்புத, அதிசய, அநியாய அக்கிரம, ஊழியம் செய்யும் அனைவரும் சுதாரித்துவிட்டார்கள் என்று அர்த்தம். சிறுவர்களுக்கான பத்திரிகையின் அற்பணிப்பும், அதன் தேவையும் அதிகமிருந்தாலும், காசு பார்க்கும் பிற தளங்களில் தங்கள் “ஆவிக்குரிய” திறமையை செலவழிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதில் “அதிசயம்” ஒன்றும் இல்லை. எந்த தொலைக்காட்சி, சாத்தான் என கண்டடையப்பட்டதோ அவைகளோடேயே கைகோர்த்துக் கொண்டு நடக்கும் அவலம் இவர்கள் வாழ்வில் காணப்படுவது வேடிக்கை.
கிறிஸ்தவ கல்வி வளர்ச்சித் துறை என காணப்படும் அனைத்தும், வருடத்திற்கு ஒரு பரீட்சை வைப்பதற்கு ஏற்ற “பாடதிட்டங்களைக்” கொடுத்து பயமுறுத்தும் நிலையிலேயே உள்ளது. கூடவே “அச்சகத்தாரும்” பிழைக்கவேண்டுமல்லவா? நாம் சரியாக நமது கலாச்சார பங்களிப்பை சிறுவர்களுக்கு அளிக்காதவரை இன்றய கிறிஸ்தவ சிறுவனுக்கு காவியுடையணிந்த சாது சுந்தர் சிங் ஒரு இந்து சாமியாராகவே தென்படுவார். அப்படியே தாடி வைத்து அங்கியிட்ட ஒசாமா கிறிஸ்துவாகவே காணப்படும் அபாயம் சூழ்ந்துள்ளது மறுக்க முடியாதது.
தராமான பல நல்ல விஷயங்களை நாம் சிறு பிள்ளைகளுக்கு கொடுக்க முயன்றாலும் அதை வண்ணமயமாக கொடுப்பது இன்றைய தேவை. அதற்கு அற்பணிப்புள்ள ஓவியர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். இந்திய முறையிலான ஓவியங்களின் பங்களிப்பு நம்மை சிறுவர் இலக்கியத்தின் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுவது மாத்திரமல்ல நமது கருத்துக்களை பதிவு செய்யும் ஆற்றலையும் அவை தரப்படுத்தும்.
நமது திறமைகளை ஒன்றிணைத்து வெளிப்படுத்தாவிட்டால், நமது சிறுவர்களுக்கு நாம் கண்டிப்பாக கூறவேண்டிய பலவற்றை மறைத்துவிடுவோம். அது அவர்களை பலவீனமான சமய சார்புடையவர்களாக மாற்றிவிடும் அபாயமுண்டு.
நல்ல தரமான கிறிஸ்தவ சிறுவர் புத்தகம் நியாயமான விலையில் கிடைக்கிறதா என கிறிஸ்தவ புஸ்தகங்கள் விற்கும் கடைகளில் கேட்டுப்பாருங்கள். விலையுயர்ந்த கிறிஸ்தவ சிறுவர் புஸ்தகம் விதவிதமாக உங்களுக்கு கிடைக்கும் ஆனால் அவை இந்திய மண்ணில் உருவானவையாக இருக்காது. 10 பக்கம் உள்ள ஒரு புஸ்தகம், கொட்டை எழுத்துக்களுடன் வண்ண புகைப்படங்களுடன் குறைந்தது 50 ரூபாய் விலையில் சகாயமாக தருவதாக கடைக்காரர் சொல்வார்.
ஒரு தொடர் நிகழ்வாக, சிறு பிராயம் முதல் இம்மட்டும் நாம் வாசிக்கும் கன்னித்தீவுபோல் நாம் குறிப்பிடத்தகுந்த கிறிஸ்தவ தொடர் வெளிவரும் எந்த பத்திரிகையும் இல்லை. நாம் தான் அச்சாபீஸ் கண்டுபிடிதோம், அச்சிட்டோம் என பெருமை வேறு நமக்கு. ஒரு சிறுவர் பத்திரிகையை ஆரம்பிப்பது மிகவும் முக்கியம். அதுவும் தொடர்ச்சியாக வெளிவரவேண்டியதன் அவசியம் இன்றைய தேவையாக இருக்கிறது.
ஒருவேளை இவ்விதமான பத்திரிகைகள் ஆரம்பிக்கப்பட்டால் அவைகளைத் தொடர்ந்து பல திறமையானவர்கள் எழுந்து வரக் கூடும் எனும் எண்ணம் என்னுள் எழுந்ததால், இதை வாசிக்கும் வாசகர்களுக்கு ஒரு சில வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
1. நல்ல பத்திரிகைகளை கதைகளை சிறுவர்களுக்கு வாங்கிக் கொடுங்கள். அவை கிறிஸ்தவம் சாராத வெறும் நீதிக் கதைகளாக இருந்தாலும் பரவாயில்லை.
2. உங்கள் பிள்ளைகளுக்கு தினமும் கதையும் பாடலும் சொல்லிக்கொடுங்கள். ஜெப நேரத்தில் இதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். சிறுவர்கள் ஆவலுடன் அந்நேரத்தை விரும்புவார்கள்.
3. மாதத்திற்கு ஒரு முறை புத்தகக் கடைகளுக்கு உங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்லுங்கள். குறைந்த விலையிலாவது ஒரு சிறுவர் புத்தகத்தை வாங்கிக்கொடுங்கள்.
4. சிறுவர்களுக்கான பரிசுகள் என்றாலே அதை புத்தகங்கள் என உருவகித்துக்கொள்ளுங்கள்.
5. தெரிந்த எழுத்தாளர்களை வருடத்திற்கு ஒருமுறையாவது நம் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
கர்த்தர் நம்மனைவரோடும் இருப்பாராக.
Rev. Godson Samuel
contact: palmyra_project@yahoo.com malargodson@gmail.com
9702567603