கால்களைப் பிடித்த இயேசுவின் கரங்கள்


கால்கள் எப்பொழுதுமே முதன்மை கவனம் பெறுவது இல்லை. அவைகளால் நாம் சிந்திக்க மறுப்பதினாலும், அவைகள் உழைப்போடு தொடர்புடையன என்பதாலும் ஓய்வை விரும்பும் மனம் கால்களை மறந்துவிடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. கால்களை அவதானிப்பதற்கு தகுந்த நேரம் வரவேண்டும் என்பதை “கலைமானும் வேடனும்” கதை மூலமாக நமக்கு சிறு பிராயத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், மிகப்பெரிய சத்தியங்களை மட்டுமே நீதிக்கதைகள் மூலமாக தேடுகின்ற நமது சிறு புத்தி கால்களை விட்டு விட்டு கதையின் நீதி நோக்கி அவசரமாக தாவுகிறது.

கால்களை மாத்திரம் மையப்படுத்தி, நமது சிந்தனைகளை நடை பயில அனுமதித்தோமென்றால் நாம் செல்லும் இடத்திற்கு அது நம்மை வழுவாதவாறு வழிநடத்தும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கையே! இந்த பயணமானது புனிதமானதும் கூட என்பதையே “பெரிய வியாழன்” என அழைக்கப்பெறும் “வியாகுல வியாழனின்” விரைந்த செய்தியாகும். சடங்குகளைக் கடந்து நாம் நடக்கும் தோறும் புதிய பல சிந்தனைகளில் உலாவி ஆழ்ந்த அர்த்தங்களைக் கண்டடையமுடியும்.

இரண்டு முக்கிய சடங்குகள் ஏற்பட்ட ஒரு புனிதமான நாளாக பெரிய வியாழன் காணப்படுகிறது. இரண்டுமே கால்களின் ஒத்திசைவைப் போல நமது ஆன்மீக வழித்துணைக்கு இன்றியமையாதவை. ஒன்று நம்மை நாம் தாழ்த்துவது மற்றொன்று நம்மை நாமே பகிர்ந்தளிப்பது.

கால்களைக் குறித்து பேசும் போது ஒருபோதும் கரங்களை நாம் மறந்துவிடலாகாது. கால்களுக்கு ஒத்தே அவை பணி செய்கின்றன. பல வேளைகளில் கால்கள் ஓய்வெடுக்கும்பொழுது கரங்கள் பணிவிடி செய்கின்றன. இங்கு சீடர்களின் கால்களுக்கு இயேசுவின் கரங்கள் பணிவிடைசெய்வதே அதி முக்கிய நிகழ்வாகும்.

கால்களின் முக்கியத்துவம், கரங்கள் அதன்மீது ஸ்பரிசிக்கும் நேரமே அன்றி பிரிதொன்றில்லை. கிறிஸ்துவின் கரங்கள் சீடர்களின் கால்களைப் பிடித்தது அவைகளைக் கழுவுவதற்கு தான் என்றாலும், அவர் கால்களைப் பிடித்தார் என்பதே நம்மை இன்றும் அவர்பால் இழுக்கும் விசையாகும். கால்களைக் கழுவுவது வெறும் சடங்கு என்றாகிவிட்ட சூழ்நிலையில் இயேசு கால்களைப் பிடிப்பது முக்கியமான ஒரு திருப்பமாக எனக்குப் படுகிறது.

நீண்ட பயணத்தில் கால்நடையாக வந்தவர்களுக்கு கண்டிப்பாக களைப்பு ஏற்படுவது உறுதி. கரங்களில் ஏதேனும் சுமந்து வரவில்லையெனில் பயணம் முழுவதும் கரங்கள் ஓய்வையே அனுபவித்திருக்கும். எனில் கரங்கள் கால்களுக்கு பணிவிடை செய்யவேண்டிய அவசியமும் அவசரமும் பயணம் முடித்தபின் ஏற்படுவதைக் கண்டுகொள்ள முடிகிறது.

யூதர்களின் வாழ்வில் கடும் பயணம் செய்து வரும் ஒருவரை கால்களைக் கழுவி வரவேற்பதே முறையானது. இளைப்படைந்த கால்களை மதித்து அன்புடன் கரங்கள் செய்யும் சேவை மிக்க கடமையுணர்வை காண்பிப்பது. விருந்தோம்பலின் ஆரம்ப படிநிலையாகக் காணப்படும் இவற்றிற்கு இயேசு இட்ட பாதை சீடர்களை மாத்திரமல்ல நம்மனைவரையும் எதிர்நோக்கியிருக்கும் வழிப்போக்கனைப் போல் தேடலுடன் பயணிக்கின்றன. எனினும் இன்று ஆளரவமற்ற ஒரு ஒற்றையடிப் பாதையாகவே இன்று கால்களைக் கரங்கள் பற்றுவது காட்சியளிக்கின்றது.

இயேசு கால்களைப் பிடித்தார் எனும் வார்த்தை திரு விவிலியத்தில் கூறப்படாததால் அவர் கால்களைப் பிடிக்கவில்லை என்றும் அவர் கரங்கள் சேவை செய்ய மறுத்தன என்றும் நாம் வாதிட முடியாது. அவர் கரங்களின் தழும்புகளைப் போன்றே நமது களைப்பை மாற்றும் திறன் அவர் கரங்களுக்கு உண்டு.

ஒருவேளை நாமும் கால்களைப் பிடிக்க ஆயத்தமானால் அது ஒருவரை ஒருவர் தாங்கும், வழித்துணையாயிருக்கும் என்பதையே இயேசு குறிப்பிடுகிறார். ஆம் இரண்டு சாக்கிரமந்துகளும் நமது ஆன்மீக பயணத்தில் இன்றியமையாதவை.

அருட்திரு காட்சன் சாமுவேல்

தொடர்பு கொள்ள palmyra_project@yahoo.com

09702567603

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: