[தயைகூர்ந்து இணைச்சட்டம் 26 ஐ படியுங்கள் ]
எனது தந்தை தனது செய்தியில் மல்கியா 3.10 ஐ குறிப்பிட்டிருப்பதை என் சிறு வயதில் கேட்டிருக்கிறேன். என்னை மிகவும் பாதித்த ஒரு பகுதி அது. கடவுளுக்குரியதை நாம் கொடுத்துவிட்டால் அவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்ற ஒரு எளிய புரிதலே என் தந்தையின் மூலமாக எனக்கு கிடைத்தது. தற்பொழுது நானே ஒரு போதகராக இருக்கும் சமயத்தில், தசமபாகம் நிகழ்த்தும் அற்புதத்தை என்னால் நன்கு உணர முடிகிறது.
‘தசமபாகம்’ எனும் சொல் மக்களை ஒரு மந்திரச்சொல் போல கட்டுப்படுத்துகிறது. எவருமே எதிர் கேள்வி எழுப்புவதில்லை, தர இயலாவிட்டாலும், மனமற்றாலும் கூட. உண்மையில் ‘தசமபாகம்’ என்பது ஒரு எளிய கணக்கு. இத்தனைக் குடும்பத்திலிருந்து தசமபாகம் வந்தால் இவ்வளவு பணம் சேரும். ஆகவே அனைவருமே வரவை உறுதி செய்யும் ஊற்றை தடை செய்யும் எண்ணத்துடன் இருப்பதில்லை.
மலாக்கி 3. 10
‘என் இல்லத்தில் உணவு இருக்கும் பொருட்டுப் பத்திலொரு பங்கு முழுவதையும் கொண்டு வந்து அங்கே களஞ்சியத்தில் சேருங்கள், அதன் பிறகு நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, உங்கள் மேல் ததும்பி வழியுமாறு ஆசி வழங்குகிறேனா இல்லையா எனப் பாருங்கள்,’ என்கிறார் படைகளின் ஆண்டவர்.
எனது எளிய புரிதலின்படி கடவுள் தங்கும் இடம் என்பதையே இல்லம் என இவ்வாக்கியம் குறிப்பிடுகிறது. கடவுளின் இல்லத்தில் ஏன் உணவு நிரம்ப வேண்டும் என்ற கேள்வியிலிருந்து துவங்கி இவ்வாக்கியத்தை நாம் தொடர்வோமென்று சொன்னால் நம்மால் ஒரு உண்மையை கண்டடைய இயலும்.
|
|||
தங்களது அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு மீண்டுமாக எருசலேம் நகரில் வந்த மக்கள் ஆண்டவர் அளித்த இல்லத்தில் அவரது விருப்பத்திற்கு மாறாக நடப்பதையே இப்பகுதி விளக்குகிறது. ஒரு வகையில் இது குருக்களுக்கு இடப்பட்ட கட்டளையாயிருந்தாலும் [மலாக்கி 2. 1], மக்கள் தவறிளைத்திருந்தாலும் இதன் பின்னணியில் தொக்கி நிற்கும் கேள்விகள் ஏராளம் உண்டு. அவ்விதமாகவே பதில்களும்.
1. தசமபாகம் 3 வருடத்திற்கு ஒரு முறை என்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது
‘பத்திலொரு பகுதி செலுத்தும் ஆண்டாகிய மூன்றாம் ஆண்டில், அவ்வாண்டின் விளைச்சலில் பத்திலொரு பாகத்தை, லேவியருக்கும், அன்னியருக்கும், அனாதைக்கும் கைம்பெண்ணுக்கும் கொடு. அதனால் அவர்கள் உன் வாயில்களுக்குள்ளே உண்டு நிறைவு அடைவர்’
கூடவே அது மூன்றாம் ஆண்டின் விளைச்சல் என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. இதை நாம் சுருக்கி மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்றோ, ஒரு மாதத்திற்கு ஒரு முறை என்றோ புரிந்து கொள்ளுவது தவறாகிவிடும்.
2. பத்திலொரு பங்கையும் குருவிடம் கொடுப்பதே மரபாக இருந்திருக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடியும். எனில் இவை யாவற்றையும் தூய்மையான பலி பீடத்தில் வைத்து பிற்பாடு கருவூலத்தில் சேர்ப்பதே குரு மரபினரின் பணியாக அமைந்திருக்கிறது.
3. கருவூலத்தில் சேர்க்கப்பட்டவைகள் யாவும் எளியவரைச் சென்றடைய வேண்டும் என்பதே இறைவனின் கட்டளையாக காணப்படுகிறது. ஏன் இவ்விதமாக என நாம் கேள்வி எழுப்ப தலைப்படும்பொழுது,
‘7 அப்போது நாங்கள் எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கிக் குரல் எழுப்பினோம். ஆண்டவர் எங்கள் குரலைக் கேட்டார். எங்களுடைய துன்பத்தையும் வருத்தத்தையும் அவதியையும் கண்டார்.8 தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களாலும், அருஞ்செயல்களாலும் ஆண்டவர் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்.9 அவர் எங்களை இந்த இடத்திற்குக் கூட்டிவந்தார். பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டை எங்களுக்குத் தந்தார்.10 எனவே ஆண்டவரே, இதோ, நீர் எனக்குக் கொடுத்த நிலத்தின் முதற்பலனைக் கொண்டு வந்துள்ளேன் என்று சொல்லி, அதை உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் வைத்து, அவரைப் பணிந்து தொழுவாய்.11 பின்னர், நீயும் லேவியரும், உன்னோடு உள்ள அன்னியரும், கடவுளாகிய ஆண்டவர் உனக்கும் உன் வீட்டாருக்கும் செய்த அனைத்து நன்மைகளை முன்னிட்டு அக்களியுங்கள்.’
எனும்போது விளைச்சல் சார்ந்த ஒரு கொண்டாட்டமாகவே பத்திலொரு பங்கு தேவை நிறைந்தவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது என்பதும், கடவுள் தங்கள் வாழ்விலே நன்மை செய்தபடியால் தாங்களும் அவரைப்போல் நன்மைசெய்பவராக காணப்படவேண்டும் என்பதே அவருடைய விருப்பம் என்பதும் புலனாகின்றது.
மலாக்கி எனும் பெயரே தூதன் அல்லது அனுப்பப்பட்டவன் என அர்த்தம் பெறுகிறது. வேத விற்பன்னர்கள் மலாக்கி குரு மரபைச் சார்ந்த ஒருவராக இருக்கலாம் என கருதுகின்றனர். தனக்காடுத்தவர்கள் தவறிளைப்பதை அருகிலிருந்து அவதானித்த ஒருவர், தனது கரத்தில் கிடைக்கப்பெற்ற இணைச் சட்டத்திற்கு புறம்பாய் குருமரபினர் வழி தவறி செல்வதை கண்டுணர்ந்து மனம் பதைத்து எழுதியன போலவே உள்ளன.
இப்படி இருக்கும் பட்சத்தில், இன்று நமது திருச்சபைகளில் வாங்கப்படும் பத்திலொரு பங்கு போதகருக்கும் [திருப்பணிவிடை செய்பவருக்கும் – கோயில் பிள்ளை அல்லது கோயில் குட்டி எனப்படுபவருக்கும்] அன்னியருக்கும் [இந்துக்கள், இசுலாமியர் ஆலயத்திற்கு வராதவர்கள்] அனாதைகளுக்கும் [அகதிகள் மற்றும் கைதிகள்] விதவைகள் [ ஒருவேளை பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருபவருக்கும் கூட] சரிவிகிதமாக பங்கிடப்படவேண்டியிருக்கும்.
’13 அதன்பின், நீ உன் கடவுளாகிய ஆண்டவர் முன்னிலையில் அறிவிக்க வேண்டியது: நீர் எனக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி, தூய பகுதியை என் வீட்டிலிருந்து எடுத்து அவற்றை லேவியருக்கும், அன்னியருக்கும், அனாதைக்கும், கைம்பெண்ணுக்கும் கொடுத்துள்ளேன். உம் கட்டளைகளை நான் மீறவில்லை, அவைகளை நான் மறக்கவுமில்லை.
14 எனது துயர நாளில் அதிலிருந்து உண்டதுமில்லை: தீட்டான போது அதிலிருந்து எடுக்கவுமில்லை: இழவுக்காக அதிலிருந்து கொடுக்கவும் இல்லை. என் கடவுளாகிய ஆண்டவர் குரலுக்குக் கீழ்ப்படிந்து, நீர் எனக்குக் கட்டளையிட்டபடி அனைத்தையும் செய்துள்ளேன்.
15 நீர் உமது தூய உறைவிடமாகிய விண்ணிலிருந்து கண்ணோக்கி, நீர் எங்கள் மூதாதையருக்கு ஆணையிட்டுக் கூறியபடி உம் மக்களாகிய எங்களுக்கும் எங்களுக்குக் கொடுத்துள்ள பாலும் தேனும் வழிந்தோடும் நாட்டுக்கும் ஆசிவழங்குவீராக’
அழிந்து போகும் எண்ணிறைந்த ஆத்துமாக்கள் நிறைந்த இந்த உலகத்தில் அருகிலிருக்கும் இந்த எளிய உயிர்களை கவனிக்க ‘தசமபாகம்’ செலுத்தும் மக்களுக்கும் நேரமில்லை அதை அறிவுறுத்தும் போதகர்களுக்கும் அக்கரையில்லை.
அருட் திரு காட்சன் சாமுவேல்
தொடர்பு கொள்ள
09702567603