Archive for ஏப்ரல், 2011

தேடுங்கள்….

ஏப்ரல் 23, 2011

மகதலேனா மரியாள் உயிர்த்தெழுந்த இயேசுவை முதன் முதலாகப் பார்த்தாக நான்காம் நற்செய்தி நூலாகிய யோவான் நற்செய்தி நூல் கூறுகிறது (20:1 – 18). ஊயிர்த்தெழுதல் கிறிஸ்தவத்தின் மைய நம்பிக்கையாக இருப்பதால் மகதலேனா மரியாளுக்கு இயேசு அளித்த முதல் தரிசனம் முக்கியத்துவம் பெறுகின்றது!

கை கழுவிய பிலாத்துவிடம்(மத் 27: 24) சென்று தன்னை அவர் “குற்றமற்றவர்” என்று பிரகடனம் செய்திருக்கலாம்! தன் சரீரமாகிய ஆலயத்தை மூன்று நாளைக்குளே கட்டுவேன் என்று கட்டுவேன் என்று சொன்ன அவரிடம் “தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்று நாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னலே ஆகும்” என புரியாதபடிச்  சொன்ன பிரதான ஆசாரியருக்கு அதன் அர்த்தத்தை புரிய வைத்திருக்கலாம்! தனது தாயாகிய மரியாளிடம் வந்து “அம்மா கலங்காதே என ஆறுதலின் வார்த்தையைக் கூறியிருக்கலாம்! இன்னும் பல காரியங்களை நாம் சிந்திக்கலாம் எனினும் மகதலேனா மரியாளுக்கு அவர் ஏன் காட்சியளித்தார் என எண்ண முற்பட்டோமென்றால்….

மகதலேனா மரியாள் இயேசுவின் அடக்கம் முதல் கல்லரை வருமட்டும் என்ன செய்து கொண்டிருந்திருப்பாள்?

அழுதுகொண்டிருப்பாள்:

இயேசு தனது நண்பனாம் இலாசருவின் கல்லரைக்கு வந்தபொழுது கண்ணிர்விட்டு அழுவதைக்  காண்கின்றோம் (யோவான் 11: 35) பிரிவு அனைவருக்கும் பொதுவானது என்றாலும் பிரியும் உறவின் நெருக்கத்தைப் பொறுத்ததே அதன் சோகமும் வருத்தமும். தான் நேசித்தப் போதகரின் பிரிவு அவளை வெகுவாக பாதித்தபடியினாலும் தன்னால் அவ்விழப்பை தாங்க முடியாததினாலும் அவள் அழுதுகொண்டிருக்க நியாயமுண்டு!

ஆனால் ஆண்டவர் கூறிய ஆறுதலின் வார்த்தை அவளுக்கு சமீபமாக இருப்பதை நாம் கண்டு கொள்ளுகிறோம்! “துயரப்படுகிறவர்கள் பாகியவான்கள் அவர்கள் ஆறுதல் அடைவார்கள்” (மத் 5: 4) நீங்கள் அழுது புலம்புவீர்கள் , உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்!

மற்றும் அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு (பிரசங்கி 3: 4), என்கிர வார்த்தை ஞானியின் ஞான மொழி அல்லவா? சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள், அழுகிறவர்களுடனே அழுங்கள் (ரோமர் 12: 15) என்பது உண்மையன்ரி வேறென்ன?

உண்மைதானில்லையா? அழுகை முடிவல்ல, அது சந்தோஷத்தின் மறுபுறம் மட்டுமே!

ஆயத்தம் செய்துகொண்டிருப்பாள்:

இயேசுவின் மரணம் முன்குறிக்கப்பட்டதாக இயேசுவே தனது சீடர்களிடம் பகிர்ந்து கொள்ளுவதை யோவான் 13- 17ஆம் அதிகாரம் வரை நாம் வாசிக்கும்பொழுது  கண்டுகொள்ளுகிறோம். அடக்கம் செய்வதற்கு தேவையான அனைத்தும் சரிவர செய்திருந்தும், கந்தவர்க்கங்களுடன் சென்ற பெண்கள் யாவரும் தங்கள் துக்கங்களை மீறி அவற்றை செய்திருக்கின்றதைக் காணும்பொழுது அவர்களது ஆன்ம வல்லமை நமக்குப் புலப்படுகின்றது!

ஆம் ஆயத்தம் செய்வதும்! ஆயத்தமாய் இருப்பதும் மிகவும் முக்கியமான ஒன்றாகவே இயேசு கற்பிக்கின்றார்! அவர் வரும் நாளை காண்பிப்பவர்கள் அவை சரிவர புரிந்துகொள்ளாதோரே என மகதலேனா மரியாள் நமக்கு உணர்த்துகிறார்!

அந்தப்படியே நீங்கள் நினையாத நெரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள்! (லூக்கா 12: 40) மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசை வரைக்கும் பிரகாசிக்கிறது போல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார் (லூக்கா 17: 24) என்பவை நம்மை ஆயத்தமாய் இருக்க அறிவுறுத்துகிறதில்லயா?

மணவாளனுக்கு எதிர்கொண்டுவர புறப்படும்பொழுது தங்கள் தீவட்டிகளில் எண்ணையுடன் இருந்தவர்களே மணவாளனுடன் வீட்டுக்குள் பிரவேசித்தார்கள் (மத்தேயு 25:1 – 13)  மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்!

இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்! ( ஈ யோவான் 2: 28)

ஆகவே,  ஆயத்தமற்றிருப்போமென்றால் அவரைக்காண செல்லுவதெப்படி?

அவரைக்காண சென்றாள்!

தெடுவதற்கான நேரம் இல்லை அது! அவள் அதிக இருட்டோடே செல்கிறாள் என்று நாம் வாசிக்கிறோம்! தனது வாழ்வில் அவள் எடுத்த மிகவும் துணிச்சலான முடிவு அது! அவரது கல்லரை நோக்கிய பயணம் இலகுவானதல்ல! ஒருவேளை அது அவளுக்கு மரணத்தை அளித்திருக்கக் கூடும், அவளது நடத்தையில் சந்தேகம் எழுப்பியிருக்கக் கூடிய நேரம் அது, அவள் கைது செய்யப்படும் சாத்தியக்கூறுகள் உடைய பொருட்களுடன் சென்றிருக்கிறாள்.

அவளது உடலுக்கோ உடைமைக்கோ பாதுகாப்பளிக்கும் பெலத்துடன் அவள் செல்லவில்லை! ஆனால் செல்லுவதே தனது கடமை என அவள் தனிஒருவளாக நடக்கிறாள்! தன் சோகத்துடன் தன் சுமைகளையும் எடுத்து ஓட்டமும் நடையுமாக நகரத்தின் அருகிலுள்ள கல்லறைக்கு அருகில் வருகிறாள். அவரைக் காணும் ஆவலுடன், மரணமடைந்த சரீரமேயானாலும் அது தனக்கு பிரியமானது என்ற வாஞ்சையுடன் அவள் வருகிறாள்!

தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள் என்ற சொல் மெய்யன வார்த்தையில்லையா?

அழுது கொண்டிருப்பதோ, ஆயத்தம்செய்துகொண்டிருப்பதோ,  பொதுவாகவே அவரைப் பின்பற்றியவர்களுக்குப் பொருத்தமாய் இருந்திருக்கும்! ஆனால் அவரைக் காணச் செல்லும் அவளது பாங்கு நம்மை அதிர வைக்கின்றது!

மற்றுள்ளவர்களைவிட அவர் தனக்கென்று அனைத்தையும் பணையம் வைப்பவர்களுக்கு மிகவும் சமீபமாய் இருக்கிறார்! “ஏனென்றால் அவர் நமக்கு விட்டுச் சென்றது இடுக்கமான வாசல்”

தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான் (மத்தேயு 10: 39)

அருட் திரு. காட்சன் சாமுவேல்

palmyra_project@yahoo.com

malargodson@gmail.com

(24.04.2011 காலை 5.30 மணி ஈஸ்டர் ஆராதனைக்காக தயாரிக்கப்பட்ட செய்தி)


%d bloggers like this: