மத்தேயு ஒரு திட்டமிட்ட வரைவையே நம்முன் வைத்திருக்கிறார். ஊழியத்தைக் குறித்த பார்வையை அவர் படைத்திருக்கும் விதமும் அதையே சுட்டுகிறது. ஊழியம் செய்வோர் என தங்களை அறிவித்துக் கொள்வோர் அனைவரும் ஆண்டவரின்அன்புக்கு பாத்திரராகமாட்டார் என்பதை அன்றைய சூழலை வைத்து இயேசு குறிப்பிடுவதை மத்தேயு உரக்கவே அடிக்கோடிடுகிறார். “வேதபாரகரும் பரிசேயரும் மோசேயுனுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்” (மத் 23: 2) என துவங்கும் அதிகாரம் வெளிவேடமிடுவோரை துகிலுரித்துக்காட்டும் திருமைறைப் பகுதி என்பதையும் அதை இன்றைய சூழலில் வைத்து பொருள் கொள்ள விசுவாசிகள் அழைக்கப்படுகிறார்கள் என்பதையும் மறந்துவிடலாகாது.
இக்கூற்றுகளினூடே அவர் வெளிப்படுத்தும் ஒரு பேருண்மையே நமக்கு எச்சரிக்கை மணியை உரத்துக் கூறுகிறது “ஒருவனை உங்கள் மார்க்கத்தானாகும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றி வருகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானான போது, அவனை உங்களிலும் இரட்டிபாய் நகரத்தின் மகனாக்குகிறீர்கள்”. இதுவே இயேசு கண்ட உண்மையாகும். அதை அவர் வெளிப்படையாக கூறியது அவரை சிலுவையை சுமக்கச் செய்தது, இதையே நாம் சொல்ல மறுத்து நமக்கான சிலுவையை எடுக்கத் தவறிவிடுகிறோம்.
மத்தேயு 16ம் ஆதிகாரத்தில் அவர் இதை தமது சீஷர்களுக்கு வெளிப்படுத்துகிறார். ஒருவன் என்னை பின்பற்றிவர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னை பின்பற்றக்கடவன். …. மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? இவை யாவையும் அவர் தமது சீஷர்களை நேக்கி கூறியது என்பதாய் மத்தேயு குறிப்பிடுவதே நம்மை உரசிப்பார்க்கும் உரை கல்லாக காணப்படுகிறது. முழுமையான அற்பணிப்பு அற்ற எந்த காணிக்கையும் பணமும் உலகத்தை ஆதாயப்படுத்த உதவினாலும் நமது ஆத்துமாவிற்கு அது பெரிய நஷ்டமே என இயேசு கூறுகிறார்.
தமது பாடுகளுக்கு முன்பதாக அதை தமது சீடர்களிடம் அவர் பகிர்ந்துகொள்ளும்போது பேதுரு அவரைக் தனியே அழைத்துச் சென்று கடிந்துகொள்ளுகிறான். இயேசுவோ அவனைப் பார்த்து பகிரங்கமாக “அப்பாலே போ சாத்தானே” என கூறுகிறார்.மேலும் அவர் “நீ எனக்கு இடறலாயிருக்கிறாய், தேவனுக்கு ஏற்றவைகளை சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளை சிந்திக்கிறாய்” என கூறுவதை காணும் போது, நமக்கு ஒரு எச்சரிப்பின் சத்தம் கேட்கவில்லையா. சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து மன்றாடுவது சுகம் அனுபவிக்க அல்ல மாறாக சிலுவை சுமக்கும் மன திடத்தைப் பெறவே என்பது நமக்கு புரியாமல் போய்விட்டது. சாத்தான் என்பது சோதனைக்காரன் தானே. மனிதன் கடவுளின் சித்தத்தை மாற்றும்போது அவன் சாத்தானாக மாறுவதை இயேசு சுட்டிக்காட்டுவதை விட்டுவிட்டோமென்றால் இழப்பு யாருக்கு?
இறுதி கட்டளைப் போலவே இறுதி உவமையும் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லையா. இயேசு குறிப்பிடும் தாலந்து உவமை யாருக்காக கூறப்பட்டது என்பதை வெளிப்படுத்தாததால் அதை அனைவருக்கும் பொதுவான ஒன்றாக அணுகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதிகமும் குறைவுமாக கொடுக்கப்பட்டவர்கள் யாவரும் அதை பெருக்கவே முயற்சி செய்வதையும் செய்யத்தவறிய ஒரு தாலந்து பெற்றவன் புறம்பான இருளிலே போடப்படுவான் என்பதும் எத்துணை ஆழ்ந்த அவதானிப்பைக் கோருகின்ற ஒன்று? நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பங்கு ஒரு தாலந்து தான் என வைத்துக்கொண்டாலும் ஆண்டவரது பார்வையில் 5 தாலந்து பெற்றவனும் “கொஞ்சத்தில்” தான் உண்மையாயிருந்தான் என்பதாக கூறப்பட்டுள்ளதே ஒழியே எவருக்கும் அவர் அதிகமாக கொடுக்கவில்லை என்பது தெளிவாகிறதல்லவா?
தாலந்துகளின் உவமை மூலம் மத்தேயு நம்மை ஊழியம் செய்வதில் இணைத்துக்கொள்ள அழைப்பு விடுக்கிறார். அதை புதைத்து வைக்காமல் அனைவரும் தத்தமது பங்களிப்பை கொடுப்பது இன்றியமையாதது என்பதை இயேசு அறிவுறுத்துவதை மத்தேயு எடுத்தாள்கிறார். உலகமெங்கும் போவதற்கு அழைப்பு பொதுவானது. அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் எந்த ஒரு உபாயமும் தண்டனைக்குரியது என்பதே மத்தேயு இறுதியாக குறிப்பிடுகிறார்.
பேராசிரியர் மாமன் வர்கி அவர்களை நான் சந்தித்த பொழுது அவர் இதையே “ ” உலகமெங்கு போய்” என்றவுடன் உலகத்தின் ஏதாவது ஒரு பகுதியை தெரிந்துகொள்ளுவதைவிட நாம் வாழுமிடமே உலகத்தின் ஒரு பகுதி தான் என்பதை உணர்ந்துகொண்டோமென்றால் அதுவே சிறந்த ஊழியத்தின் துவக்கமாயிருக்கும்.”
ஆம்! நாமெல்லாரும் பூமிக்கு உப்பாயிருக்கிறோம். உப்பு அளவோடிருப்பதே அதன் சிறப்பு. நாம் உப்பளமாக மாறத் துவங்கிவிட்டால் பூமி பயனற்றதாய் மாறிவிடும்.
தொடரும்
அருட்திரு. காட்சன் சாமுவேல்
+919673220300
+918108752325