மணவிலக்கு பெற்றோரின் மணவாளன்


மணவிலக்கு குறித்து மாற்கு 10: 2 – 12 கூறுகின்றவை ஒரு தேர்ந்த அவதானிப்பு மட்டுமல்ல, நிகழ்வின்  அமைப்பு சிறிது கூட சிதையாமல் நமக்கு கிடைத்திருக்கும் ஒரு பகுதியாகவே நான் கருதுகிறேன். இதே நிகழ்வை மத்தேயு 19: 1 – 12 வரையிலும் நாம் காணலாம். ஒருவேளை லூக்கா மணவிலக்கைக் குறித்து பதிவு செய்யாவிடினும் அதோடு தொடர்புடைய பகுதியாகிய சிறு பிள்ளைகளை ஆசீர்வதிக்கும் பகுதியை (மத்தேயு 19: 13 – 15, மாற்கு 10: 13 – 16, லூக்கா 18: 15 – 17) குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

இயேசு மணவிலக்கைக் குறித்து கூறிய இடத்தில் சிலர் சிறு பிள்ளைகளை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள் என காண்கிறோம். சிலர் என்பது ஆண்களா பெண்களா என எண்ண தலைப்படும் பொழுது பெண்களாகவே இருக்க அதிக வாய்ப்புள்ளது. ஒரு வேளை ஆண்கள் சிறு பிள்ளைகளைக் கொண்டு வந்திருந்தால் சீஷர்கள் அவர்களை அதட்டியிருக்க முடியாது. சிறுவர்கள் எப்போதுமே தாயின் அரவணைப்பிலேயே இருப்பதால் பெண்களே இச்சிறு பிள்ளைகளை ஆண்டவரிடம் கொண்டு வந்திருக்க வாய்ப்புள்ளதை கண்டு கொள்கிறோம்.

இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிக்கும் நோக்கோடேயே அவரிடம் மணவிலக்கை குறித்த கேள்வி எழுப்பப்படுவதை இப்பகுதி உறுதி செய்யும் அதே வேளையில் அதற்கான பதிலை அவர் மூன்று விதமாக அளிப்பதாக நான் புரிந்து கொள்ளுகிறேன்.

முதலாவதாக, திருமறையில் குறிப்பிட்டிருப்பவை அனைத்தும் கால இட சூழலை முன்வைத்தே பார்க்கவேண்டும் என இயேசு உறுதிபட கூறுவதை இங்கே மீண்டும் காணலாம். கொடுக்கப்பட்ட கட்டளை கடவுளிடமிருந்து வந்ததல்ல என்பதை இரு தரப்பும் ஒத்துக்கொள்ளும் அதே வேளையில், மோசே கொடுக்கும் கட்டளை காலாவதியாகிவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பில் தங்களை பரிசேயர் இணைத்துக் கொள்ளுவதை இயேசு அருவருப்போடு பார்க்கிறார்.

ஆகவே தான் காலத்தால் அவர்களை பின் தள்ளி “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே அப்படிச் எழுதி வைத்தார்” என சினத்துடன் கட்டளையின் காலகட்டத்திற்கு அவர்களை  தள்ளியதோடல்லாமல் கட்டளைகள் பிறப்பதற்கான கடின உள்ளங்கள் நிறைந்த வேதனையின் காலகட்டத்தை நினைப்பூட்டுகிறார். இன்னும் நீங்கள் அக்கொடிய காலகட்டத்தை விட்டு வெளியில் வர மனதில்லாமல் இருக்கிறீர்களே என அங்கலாய்க்கிறார். கட்டளை பிறந்த காலத்திற்கும் சூழலுக்கும் உள்ள தூரம் குறையாமல் இருப்பது ஆபத்தானது எனும் கருத்தை இங்கே நிறுவுகிறார்.

திருமணம் என்பது இருவர் ஒருடலாக மாறும் உன்னத தருணம் என்பதை விளக்க வேண்டி, திருமறையின் ஆழ்ந்த உண்மைகளை விவரிக்கிறார். “படைப்பின் தொடக்கத்திலேயே அவர்களை ஆணும் பெண்ணுமாக படைத்தார் இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்,” எனும்போது வாழ்வியல் நெறியை முன்வைப்பவராக மட்டுமல்லாது ஒரு சமூகம் தனது மைய இழையை ஒருபோதும் தவற விட்டுவிடலாகாது என்பதையும் குறிப்புணர்த்துகிறார். மணவிலக்கால் விழையும் ஆபத்துக்களையும்  சமூக அவலங்களையும் அவர் கண்ணுற்றதால் வேதனையோடே இவற்றை அவர் பகிர்ந்து கொண்டார்.

இறுதியாக தனது சமூக சூழலின்படி மண விலக்கு என்பது ஒரு பெண்ணை விபசாரத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை தெளிவாக புரிந்திருந்த ஆண்டவர் அதனால் ஏற்படும் சமூக  சமநிலயின்மையை தனது சீடர்களுக்கு சுட்டிக்காட்டுகிறார். ஆகவே தான் அவர் தள்ளுதல் சீட்டைக் கொடுத்து தனது மனைவியைத் தள்ளி விட்டு புதிய மனைவியை சேர்த்துக்கொள்ளும் “நேர்மையாளர்களை” விபசாரம் செய்பவராயிருப்பார் என்று குற்றம் சாட்டுகிறார். தள்ளுதல் சீட்டை பெற்று தனது கணவனிடமிருந்து தப்பிக்கொள்ளுதல் என்ற இக்கால சூழல் அல்லாமல் “அவளது அருவருக்கத்தக்க செயலை கண்டு” என குறிப்பிடுவது பரத்தமையையே அவள் மேல் சுமத்துவதற்கு ஒப்பாகிவிடுகிறது.

இம்மூன்று பார்வைகளும் முறையே கால , ஆன்மீக மற்றும் சமூக நிலை சார்ந்து வெளிப்பட்ட பதில்களாக தெரிந்தாலும் கால விளக்கத்தை தர்க்க ரீதியாக ஒரு உண்மையை நிறுவும்படியும், ஆன்மீக விளக்கத்தை அனைவருக்கும்  பொதுவாகவும் சமூக விளக்கத்தை அவர் சீடர்களுக்கும் போதிப்பதை காணமுடிகிறது. ஒரு சமூக அளவுகோலை தனது சீடர்களுக்கு என்று அவர் மீண்டும் மீண்டும் கொடுத்து தனது ஆன்மீக உரைகளை அவர்கள் புரிந்து கொள்ள வழிவகை செய்வதை இதன் மூலம்  நாம் காண முடிகிறது. எப்படி?

ஒருவேளை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்துள்ளோர் அவரிடம் வருவதை மெய்சிலிர்க்க பார்த்த சீடர்கள் அபலைகள் அவரிடம் வருவதை தவிர்க்கப்பார்த்தனர்.  கடைநிலையில் பெண்கள் இருந்தாலும்  இயேசுவிடம் தங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிக்கும்படி கொண்டுவந்தவர்கள் அதனினும் கீழான சூழலில் வாழும் விதவைகளும் கைவிடப்பட்டவர்களும் என்பதே என் எண்ணம். வாழ்வில் அனைத்தையும் இழந்த பின்னர் தங்களை உணர்ந்து ஏற்கும் ஒரு ஆன்மாவை அவரது சொற்கள் மூலம் அவர்கள் கண்டுகொண்ட தருணம் அது. ஆனால் இயேசு அவர்களை முன்னரே அறிவார்.

ஆகவே தான் அவர் தள்ளுதல் சீட்டைவிட இணைந்து வாழ்தலே இவர்களுக்கு ஏற்றது என உறுதியாக முழங்கினார். வார்த்தைகளால் அல்ல தமது செயலால். ஆம் அவர்களை தம்மிடம் அழைத்து, அரவணைத்து தமது கரங்களை அவர்கள் மேல் வைத்து அவர்களை ஆசீர்வதித்தார். ஒரு தகப்பனாக தன்னை அவர்களோடு இணைத்துக்கொண்டார்.

அருட்திரு. காட்சன் சாமுவேல்
+919673220300

Advertisements

குறிச்சொற்கள்:

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: