போ அல்லது (பணம்) அனுப்பு – பாகம் 1


கடவுள் பாதி சாத்தான் மீதி கலந்து செய்த கலவையாக இன்றைய மிஷனெறி ஸ்தாபனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. ஒரு போதகராக மிகுந்த கவலையோடு இவைகளை நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். திருச்சபைகள் யாவும் இன்றைக்கு ஒரு போலி மிஷனெறி பாரம் கொண்டு கூன் விழுந்த முதுகோடு அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு திருச்சபை மிஷெனெறியை பணம் கொடுத்து தாங்கவில்லை என்று சொன்னால் அது ஒரு சிறந்த சபையல்ல என்ற எண்ணம் நச்சு விதையாக ஊன்றப்பட்டுள்ளது. போதகராக செய்ய இனி ஏதுமில்லை என்ற அளவிற்கு தடைகள் ஏற்பட்ட பிறகு சுதந்திர இந்தியாவில் எண்ணத்தை பகிர்ந்து கொள்ள கூடவா தடை வந்துவிடப்போகிறது எனும் அற்ப தைரியத்தில் இதை எழுதுகிறேன்.

மும்பை இந்தியாவின் வணிக தலைநகரம். இங்கு கிறிஸ்தவர்களின் சதவிகிதம் குறைவுதானென்றாலும் நெருக்கடி நிறைந்த நகரத்தில் கிறிஸ்தவர்களின் எண்ணிகை அதிகமே. இறையியல் இயக்கங்களின் காலடி படாத கன்னி மண்ணான மும்பையில் இல்லாத திருச்சபைகள் இல்லை, முன்னேற்ற பணியாளர் இல்லாத மிஷனெறி ஸ்தாபனங்கள் இல்லை. வசூல் ராஜா என மார்தட்டி வசூலிக்கும் அளவிற்கு அனேக மும்பை கிறிஸ்தவர்கள் ஆன்மீக வாழ்வில் பலவீனமாக இருக்கிறார்கள். ஒருவேளை இது உங்கள் பகுதிக்கும் பொருந்தலாம்.

ஒருமுறை நான் அழைப்பின் பேரில் ஒரு மிஷனெறி ஸ்தாபனத்தின் விழாவிற்கு சென்றிருந்தேன். கூட்டம் சிறப்புற இனிதே ஜெபத்துடன்  முடிவடையும் தருணத்தில் (அப்போது தான் அனைவரும் வந்து சேர்ந்திருப்பார்கள்) ஜெபமே முக்கியம் என கருதும் அக்கூட்டாத்தார் கூடுகையின் முக்கியமல்லாத ஒரு பகுதியை பேசி முடிக்கும்படி தலைப்பட்டார்கள். நாங்கள் முதன் முதலாக மும்பை வந்தபோது எங்களுக்கு 1000 ரூபாய் தேவைப்பட்டது, ஜெபித்தோம் கர்த்தர் கொடுத்தார் ( பணம் கொடுத்தவர்கள் அனைவரும் அங்கே தான் இருக்கிறார்கள்) ஒரு கட்டத்தில் 100000 ரூபாய் தேவைப்பட்டது அப்போதும் கர்த்தரிடம் கேட்டோம், அவர் கொடுத்தார், இன்னும் ஒருகோடி தேவைப்பட்ட நேரத்தில் ஊக்கமாய் ஜெபித்தோம் , கர்த்தர் கொடுத்தார். இப்போதும் 32 கோடி தேவைப்படுகிறது கர்த்தர் கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது என அவர் கூறவும் ஆட்டுமந்தைகள் அனைத்தும் சேர்ந்து கசாப்புகடைக்காரனுக்கு முன்பதாக ஒலியெழுப்புவத்போல ஆ…மே…ன் என்றது.

 

மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான நான் இதை சபையில் பகிந்துகொண்டபொழுது அது ஆஸ்திரேலிய பழங்குடியினரின் ஆயுதமாக என்னை நோக்கியே பாய்ந்து வந்து என்னை வீழ்த்தியது. பரவாயில்லை ஒரு பழங்குடி சமூகத்தில் நான் சேர்த்தி என்பதில் எப்பொதும் எனக்கு உவகை தான். ஆனாலும் அவர்களைப்போலவே வளர்ச்சியுற்றோர் செய்யும் அராஜகங்களை எதிர்க்க இயலாமல் கண்ணீருடன் நிற்க மட்டுமே என்னால் முடிகிறது.

மிஷனெறி ஸ்தாபனங்கள் அனைத்தும் “ஊழியம்” செய்பவை அல்லவா? நாங்கள் கொடுக்கும் 100 ரூபாய்க்காக மட்டும்தானே அவர்கள் எங்கள் விடுதேடி வந்து ஜெபித்து காடுகளிலும் மலைகளிலும் ஊழியம் செய்கிறார்கள். அற்பணிப்போடு ஊழியம் செய்யும் இவர்களை கேள்வி கேட்க உனக்கென்ன அருகதை இருக்கிறது என்பவர்கள் அனைவருக்கும் நான் கேட்கும் ஒரே கேள்வி, ஊழியம் செய்யவேண்டும் என்பது ஆண்டவர் நமக்கிட்ட கட்டளையா, அல்லது பணம் கொடுத்து ஊழியத்தை தாங்கவேண்டும் என்பது அவர் நமக்கிட்ட கட்டளையா?

போ அல்லது அனுப்பு என்பது ஒரு தந்திரமான யுக்தி என்றே நான் கருதுகிறேன். போ என்பது ஆண்டவர் இட்ட கட்டளை, “அல்லது அனுப்பு” என்பது யார் இட்ட கட்டளை என்பதை நான் அறியேன், குமாரனும் அறியார், கண்டிப்பாக என் பரம பிதா அறிந்திருக்க வாய்ப்பே இல்லை. இது உண்மையா என எங்கனம் அறிந்து கொள்ளுவது?. வேறு வழியில்லை இப்போதைக்கு திருமறைக்குத் திரும்புவோம்.

ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,  நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (மத்தேயு 28 : 19)

இது இயேசு பரமேறுவதற்கு முன்பு கொடுத்த கட்டளையானபடியினால் (கடைசி ஆசை) அதை நிறைவேற்ற அனைவரும் போட்டிபோடுவதை நாம் நமது கலாச்சாரத்திலிருந்தே புரிந்து கொள்ள முடியும். வயோதிப காலத்தில் பெற்றொரைத் தவிக்கவிட்டுவிட்டு பிள்ளைகள் கொள்ளி வைக்க வருகின்ற காட்சியே தான். எனினும் இது அவரது இறுதி கட்டளையா என்கிற சந்தேகம் எனக்கு உண்டு. மத்தேயுவின் கூற்றுபடியே இது கடைசி கட்டளை. ஆனால் ஆண்டவரது வாழ்வில் அவர் இதை தொடர்ந்து  கற்பித்திருக்கிறார் என்பதை நாம் மறந்து விடலாகாது.

மாற்கு, லூக்கா மற்றும் யோவான் ஆகியோர் இதை இயேசுவின் கட்டளையாக எவ்விதம் முன்வைக்கின்றனர் என்பதை நாம் பொருட்படுத்தவே தயங்குகிறோம். மெலும் அவரது பணி காலத்தில் அவர் தமது சீடர்களை ஊழியத்திற்கு அனுப்பிய விதத்திலும் நமது எண்ணம் நிலைகொள்ளாதபடி மத்தேயு 28: 19 ஐ கொண்டு ஒரு சித்து விளையாட்டே நம் கண்முன் நடைபெறுகிறது. காதுள்ளவன் கேட்கக்கடவன், கண் உள்ளவன் வாசிக்கக்கடவன், அறிவுள்ளவன் சிந்திக்ககடவன்.

தொடரும்

அருட்திரு. காட்சன் சாமுவேல்
+919673220300

+918108752325

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: