ஒருமித்து நிமிர்தல்


(திருமறைப் பகுதி எரேமியா 1:4-10, எபிரேயர்  12:18-29 & லூக்கா   13:10-17)

 

திருமணமான புதிதில் நானும் ஜாஸ்மினும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளத்தக்கதாக எங்கள் குடும்பத்தாரைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் தன்னுடைய அன்னாள் பாட்டியைக் குறித்து பகிர்ந்துகொண்டார். ஜாஸ்மின் சிறு வயதாக இருக்கும்போது தனது சகோதரர்களுடன் ஆலயத்திற்குச் சென்று வரும்போது எல்லாம்  தனது பாட்டி எவ்விதமாக அவர்களுக்கு வேண்டிய உணவு வகைகளை ஆயத்தம் செய்து வைத்திருப்பர்கள் எனக் கூறி, அந்தப் பாட்டியால் நிமிரமுடியாதபடி கூன் விழுந்திருந்ததையும் குறிப்பிட்டார்கள். சிறு பிள்ளைகளான ஜாஸ்மினும் அவர் சகோதரர்களும் சேர்ந்து தங்கள் பாட்டியை நிமிர்ந்து நிற்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதையும், அவ்விதம் அவர்கள் செய்த காரியத்தால் பாட்டிக்கு ஏற்பட்ட மூச்சுதிணறலையும் சொன்னார்கள். நாமும் பலவேளைகளில் குனித்து அமர்ந்து வேலைசெய்துவிட்டு எழும்ப எத்தனிக்கும்பொழுது இவ்விதமான நிலைய ஒருசில கணங்களேனும் சந்தித்திருப்போம். அப்படியாயின் வாழ்வின் பெரும்பகுதியில் கூன் விழுந்தோராய் வாழ்வைக் கழித்தவர்கள் நிமிர்வடைவது எளிதான காரியம் இல்லை.

 

எனது அப்பாவின் அம்மா திருமதி மேழ்சி பரமாயி செல்லையா ஒரு வேதாகம ஸ்திரீயாக (Bible Woman)  பணியாற்றியவர்கள். பாட்டியைத் தெரியாதவர்கள் ஊரில் கிடையாது. பாட்டியின் ஒரு கால் ஊனமாயிருக்கும். அதோடே அவர்கள் ஆலயத்திற்கு முதல் மணி அடிக்கும்போதே சென்றுசேர்வார்கள். ஒருநாளும் தாமதித்தது கிடையாது. அவர்கள் தங்கள் பலவீனத்தின் மத்தியிலும் தனது பணியின் நிமித்தமாக அனேகருக்கு எழுத கற்றுக்கொடுக்கவும், சிறு உதவிகளைச் செய்பவர்களுமாக வலம் வந்து தனது 98ஆம் வயதில் கர்தரிடம் நித்திரையடைந்தார்கள். அவர்களை ஊரில் பொதுவாக மேழ்சி பாட்டி என்று அழைத்தாலும் ‘நொண்டி வாத்திச்சி’ – அதாவது ஊனமுற்ற ஆசிரியர் என்றே அழைத்துவந்தனர். பாட்டியை யாரேனும் அப்படி அழைத்தார்களென்றால் அவர்கள் கண்டிப்பாக என்னைவிட வயதில் இருமடங்கு மூத்தவர்களாகவே இருந்தனர். அவர்கள் அப்படி கூறும்தோறும் எனது உள்ளத்தில் ஒரு கூர்மையான முள்ளால் தைத்தது போலிருக்கும். பாட்டியின் ஊனம் பிறவியிலே வந்தது என்பதே எனது அறிதல்.

 

இருவரது வாழ்விலும் மாற்றுத் திறனாளிகள் எனும் அடையாளம் ஒன்றிணைப்பது போல அவர்களது வாழ்வில் ஏற்பட்ட காயங்கள் நெடியதும் காலத்தால் மறைக்கவியலாத கொடிய வடுவை ஏற்படுத்தக்கூடியதுமே. தங்களது வாழ்வில் ஏளனங்களையும், அவமனங்களையும் சுமந்த போதிலும் தங்கள் வாழ்வின் முன் நின்ற சவால்களை அவர்கள் ஏற்ற விதம் பாராட்டிற்குறியது.

 

இது ஒருவகையில் உடல் ஊனமென்றால் நமது முன்னோர்களின் வாழ்வை நம் கூர்ந்து அவதானிக்கும்பொழுது பலவிதமான அடிமைத்தனங்களில் அவர்கள் சிக்கி வாழ்ந்ததைக் கண்டுகொள்ள முடியும். ஒரு காலத்தில் ஆங்கிலேயரிடமும், நம்மை நசுக்கிய ஜாதி சார்புடையவர்களிடமுமிருந்து விடுதலை பெற்ற நாம் இன்று எவ்விதமான அடிமைத்தளைகளில் சிக்கியிருக்கின்றோம் என எண்ணிப்பார்ப்பது தலையாய கடமையாகிறது. கூடவே பிறரை அடிமைப்படுத்தும் நமது செயல்கள் என்ன என்பதையும் கண்டுகொள்ள தவறிவிடக்கூடாது.

 

முன்னோர்களை விஞ்சி நிற்கும் ஒரு அழைப்பு நமக்கு கொடுக்கப்பட்டால் அவ்வழைப்பினை நாம் ஏற்றுக்கொள்வோமா? அவ்விதமான அழைப்பை நாம் புரிந்துகொள்ளும் சூழலில் இருக்கிறோமா? நமது வளர்ச்சி ஒருவேளை நமக்கும் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் உண்மையான நிமிர்வை நோக்கி உந்தி தள்ளுகிறாதா? போன்ற கேள்விகளை நாம் உள்ளிருத்தி இன்றைய திருமறைப் பகுதிக்குள் கடந்து செல்வோமாயின் ஆண்டவரின் அருள் வார்த்தைகள் நம்மிடம் செயலாற்றும். (எரேமியா 1)

 

நாம் வாசிக்க கேட்ட திருமறைப்பகுதியும் ஒரு மாற்று திறனாளியை முன்வைக்கிறது. தனது வாழ்வில் பதினெட்டு வருடங்களாக திறமைகளை ஒளித்துவைக்கும் நிலையும், நிமிர்த்து நிற்க வாய்ப்பு அற்றும் அவர் இருந்திருக்கும்போது இயேசுவின் பார்வை அவர்மேல் விழுந்ததே ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான விதை என நாம் கண்டுகொள்ளுகிறோம். இக்கனிவின் பார்வை இயேசுவுக்கு மட்டும் உரியதா? அல்லது அவரின் சீடர்களாகிய நமக்கும் உரியதா? அவரின் அழைப்பை பெற்று அவருக்காக நம்மை அற்பணித்தபின் நமது செயல்கள் எவ்விதம் இருக்கவேண்டும்? இக்கேள்விகள் நம்மை உந்துமாயின் நம்மால் இயேசுவின் அடியொற்றி செயலாற்ற முடியும் என்பதில் ஐயமில்லை.

 

இயேசுவின் பார்வை அவர்மேல் விழுந்தவுடன் ஏற்பட்ட மாற்றங்களை நாம் இதுகாறும் அறிந்திருந்தும் நாம் கவனிக்கத் தவறிய ஒருசில காரியங்களை உற்று நோக்கினால் நம்மால் சூழலின் தாக்கத்தை நன்குணர இயலும்.  இயேசு ஒரு ஓய்வுநாளிலே ஜெப ஆலயத்தில் நின்று செய்தியளித்துக்கொண்டிருக்கிறார். அப்பொழுத்துதான் அவர் கூன் விழுந்த ஒரு பெண்மணி நிமிரக்கூடாதபடி இருப்பதைக் கண்டுகொள்ளுகிறார். இத்தருணம் மிகவும் முக்கியமானது. இறைவார்த்தை உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழும்போது மட்டுமே பிரச்சனைகளையும் அதன் புரையோடிய வேர்களையும் கண்டுகொள்ள இயலும் எனும் உண்மை இங்கே தொக்கி நிற்கிறது . இயேசு தனது செய்தியை முடித்து ஆற அமர அவளிடம் வந்தார் எனக் கொள்வதைவிட தனது செய்தியை நிறுத்தி அவளை தம்மிடம் அழைத்து குணமாக்கினார் என்பதே சாலப் பொருந்தும். அப்பெண்மணி நலம் பெறுதல் மிகவும் அவசரமானது என்பதை இயேசு உணர்ந்ததாலேயே அப்படிச் செய்தார்.

 

ஜெப ஆலயத்தலைவன் மிகவும் ஆத்திரம் கொள்ளுமளவு ஏதும் நிகழவில்லையே என நாம் எண்ணுவோமாயின், நாம் ஜெப ஆலாய்த்தலைவனின் நியாயத்தை உணராதவர்களாகிவிடுவோம். அவனது சொற்களிலிருந்து நாம் பெறும் வார்த்தைகள் அனைத்தும் ஆழ்ந்த கவனத்துக்குட்படுத்த வேண்டியவை. “வேலை செய்கிறதற்கு ஆறு நாள் உண்டே, அந்த நாட்களில் நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச்செய்யலாகாது” எனக் கூறும் வார்த்தை நமக்கு பின்னணியத்தை இன்னும் தெளிவுபடுத்துகிறது.

 

ஜெப ஆலயத்தலைவன் “ஓய்வுநாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைப்பாயாக” எனும் கட்டளையை உணர்ந்தவனாக செயலாற்றுகிறான் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளும் நாம், இப்பெண்மணியின் வாழ்வில் அவளைப் பிடித்திருந்த ஆவி அவ்விதம் ஓய்வுநாளில் மட்டும் விடுப்பு எதுத்துச் செல்லும் தன்மையுடையதல்ல என்பதைக் கண்டுகொள்ளுகிறோம். பதினெட்டு வருடங்களாக அவளை நிமிரச் செய்யாதபடி அவளைக் கூனி குறுகச் செய்யும் ஆவி அது. நிமிரவே இயலாது என முடிவு செய்திட்ட தருணத்தில் இயேசுவால் அவள் பெற்ற நன்மையைக் கண்டு நாமும் அவளோடு சேர்ந்து ஆண்டவரை உயர்த்தும் ஒரு உன்னத தருணம் இது.

 

எனினும் ஜெப ஆலயத் தலைவன் கோபமூண்டவனாகவே காட்சியளிக்கிறான். அவனால் இந்நிகழ்வினை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. ஜெப ஆலயத்தில் நலம் பெறும் நிகழ்வுகள் நடைபெற அனுமதிக்கப்பட்டிருக்கிறது எனினும் அது ஓய்வுநாளில் நடைபெறலாகாது என்பது புலனாகிறது. ஜெப ஆலயத்தலைவன் தனது இந்நிலைப்பாட்டை எங்கிருந்து பெற்றுக்கொள்ளுகிறார்?

 

தனது மரபிலிருந்தா? தான் வாசிக்கும் ஐந்தாகமம் எனும் தோராவிலிருந்தா? இல்லை தனது வாசிப்பின் மேலெழும் புரிதலில் இருந்தா? இல்லை இவ்விதமாக வாசிக்க பழகிய மரபிலிருந்தா? இயேசு தனது வாழ்வில் எதிர்கொண்ட பெரும்பாலான கேள்விகளுக்கு மறுபடியாக கூறும் பதிலுக்கு திருமறையையே சார்ந்திருந்தாலும், இவ்விடத்தில் அவர் திருமறை வசனங்களை சற்று ஒதுக்கி வைத்து ஒரு மனிதாபிமான கேள்வி எழுப்புகிறார். அக்கேள்வி, மானுடம் அனைத்திற்கும் பொதுவான ஒன்றே என கொள்ளுமளவிற்கு அது ஒரு பெரும் வீச்சுடன் எழுந்து செயலாற்றுவதை நாம் காண்கிறோம். இக்கட்டில் இருப்போருக்கு செய்யும் அவசர உதவியா அல்லது கண்மூடி நாம் வாளவிருக்கும் போலி ஆன்மீக நெறிகளா? எது முக்கியமானது எனும் கேள்வியை அவர் முன்வைக்கிறார்.

 

நாமும் இன்றுமட்டும் அறியாமையினால் செய்த காரியங்கள் அனேகம் உண்டு. இன்றுவரை ஆலயத்தில் சக்கர நாற்காலி வருவதற்கான சாய்வுகளை அமைப்பதைக் குறித்து நாம் சிந்தித்ததில்லை. மாற்று திறன் பெற்றோருக்கான தனி ஆராதனைகளை ஒழுங்கு செய்ய நாம் எப்போதும் ஆயத்தமாயிருப்போம் ஆயினும் நமது வழிபாட்டின் மத்தியில் அவர்களும் நம்மைப்போலவே இயல்பாக கலந்துகொள்ளும் பிரம்மாண்டமான வாய்ப்பைக் குறித்து சிந்தித்த திருச்சபைகளைக் கண்பது அரிதே.

 

இம்மட்டும் சிந்திக்காத ஒன்றை இனிமேல் சிந்திப்பது சாத்தியமில்லை என்றெண்ணுகிறோமா? அல்லது இவ்வளவு காலம் நாம் சிந்தித்து வந்த வழிகளே நேர் என்று எண்ணுகிறோமா? ஜெப ஆலயத் தலைவன் தனது கருத்தை அவ்விதமாகவே முன்வைக்கிறான். தனது பணி ஜெப ஆலயத்தில் ஒரு குறுகிய வட்டத்திற்குள் செயல்படுத்தப்படும் ஒன்று என்ற முடிவிற்கு வந்தவனாக அவன் நம் முன் காட்சியளிக்கின்றான். அலய பணிவிடைகளே அவனுக்கு உகந்தது என்றும் ஜெப ஆலயத்திற்கு வருவோரின் நலனில் தான் அக்கறை காட்டத் தேவையில்லை என்ற முன்முடிவுடன் செயலாற்றுகிறான். இயேசு அவனது தவறான கொள்கையை தனது செயலால் குறிப்புணர்த்தும்பொழுது அவன் வெகுண்டெழுவது இவ்வாறே.

 

மேலும் இப்பெண்மணி தற்செயலாக வந்திருப்பதைப் போன்று தோன்றவில்லை. அனுதினமும் வந்து செல்லுகின்றவள் என்றே எண்ணத்தோன்றுகின்றது. சீலோவாம் குளத்திலே 38 வருடம் ஒருவன் காத்திருந்ததுபோல் தனது வாழ்வில் மாற்றம் வரும் எனும் நம்பிக்கையில் அவள் ஜெப ஆலயத்திற்கு வந்ததாகவே கருத இடமுள்ளது. எனினும் இத்துணை வருடங்கள் வந்தும் அவளை கவனிக்க தவறிய ஜெப ஆலய தலைவனும் இயேசுவும் இப்போது எதிர் எதிர் நிலையில் நிற்பதைக் காணும்போது நமக்கு சற்று தெளிவு பிறக்கிறது. இயேசு கண்ட ஒரு உண்மையை ஜெப ஆலய தலைவன் எப்போதோ கண்டிருக்கும் வாய்ப்புகளே அதிகம். இயேசு செய்த குணமாக்கும் பணியை ஜெப ஆலயத் தலைவன் வேலை செய்கிற மற்ற ஆறு நாளில் கூடச் செய்திருக்கலாம். இறுதியாக இயேசு செயலாற்றிய விதத்தைப் பார்க்கும்பொழுது அப்பெண்மணியின்மேல் கருணைக்கொண்டு அவள் மேல் கைகளை வைக்கும் நிலை இருந்ததோ என்னவோ அவள் குணமானதை நினைத்து மகிழும் நிலைகூட ஜெப ஆலயத்தலைவனுக்கு இல்லை என்பதைக் காணும்பொழுது நாம் சற்று அயர்ந்தே தான் போகிறோம்.

 

திருமறையை வார்த்தைக்கு வார்த்தை கடைபிடித்தே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் நாம், இயேசு தனது செய்தியை இடையில் நிறுத்தி இப்பெண்மணிக்கு உதவிபுரிந்திருந்தால் அது கண்டிக்கப்படவேண்டிய ஒன்று என கருத்துகிறோமா? இயேசு என்பதால் நாம் அவ்விதம் ஏதும் செய்யாமல் இருக்கிறோமா? அல்லது இயேசு செய்த பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக நாம் இந்த நலம் பெறும் பணியினை புரிந்துகொள்ளுகிறோமா? அவளது உடலில் ஏற்பட்ட குறைபாட்டை நாம் உற்றுநோக்கையில் அவளது நலம் பெறும் நிகழ்வை எப்படி புரிந்துகொள்ளுகிறோம்.

 

எனது உறவினர் ஒருவர் மருத்துவரக இருப்பதால் இப்பகுதியைக் குறிப்பிட்டு இப்பெண்மணியின் குணமாக்குதலை ஒரு மருத்துவராக நின்று இயேசு செய்திருந்தால் எப்படியிருக்கும் எனக் கேட்டேன். அதற்கு அவர், “ஜெப ஆலயமே ஒரு அவசர அறுவை சிகிட்சைப் பிரிவைப்போலிருக்குமென்று கூறினார்” இயேசுவுக்கு உதவி செய்வோர் போவதும் வருவதுமாக இருக்கும். முதுகு தண்டுவடம் பாதிப்படைந்திருப்பதால் கத்தியின்றி இரத்தமின்றி இச்சிகிட்சை நடைபெற்றிருக்க இயலாது. ஆகவே ஜெப ஆலயத்தின் ஒழுங்குகள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜெப ஆலய தலைவன் கருத இடமுள்ளது. இங்கே நான் குறிப்பிடுவது ஒரு அலோபதி மருத்துவருடைய தண்டுவட சிகிட்சையையே.

 

இயேசு அவளை குணப்படுத்திய விதத்தை இன்றைய அலோபதி முறைமையின்படி நாம் உற்று நோக்கினால் அதன் சாராம்சத்தை புரிந்துகொள்ளுவது கடினம். எனில் எங்ஙனம் இப்பகுதியை உடைத்து இதனுள் தொக்கி நிற்கும் ஆழ்ந்த இறையியல் கருத்துக்களை வெளிக்கொணர்வது. ஒருவேளை எண்ணை தடவி சரி செய்கின்ற எங்களூர் வற்ம ஆசானாக இயேசுவை கற்பனைச் செய்தோமென்றல் அலோபதிபோல் சிக்கல் நிறைந்த ஒரு சிகிட்சையாக இருந்திருக்காது. எனினும் கவனம் சிதறுதல், செய்தி பாதியில் நின்றதுபோல் ஒரு சில தடங்கல்கள் ஜெப ஆலயத்தில்  ஏற்பட்டிருக்கும்.

 

கடவுளை வழிபடுவதற்கும் அவரை நிமிர்ந்து நின்று புகழுவதற்கும் அவளுக்கிருந்த தடையை அவள் உட்பட ஒருவரும் புரிந்துகொள்ளா சூழ்நிலையில், அவள் நிலையை புரிந்துகொண்ட ஆண்டவர், அவள் நலம் பெறும் இடம், அவள் அனுதினமும் வருகின்ற ஆலயமாக இருக்கவேண்டும் என விரும்பினார். ஜெப ஆலயத்தில் அதுவும் ஓய்வுநாளில்  அவள் நலம் பெறும் நிகழ்வை அவர் ஒரு கருத்தியலாக பேராற்றலுடன் முன்மொழிவதைக் காண்கிறோம்.   அவளை ஆண்டவர் விடுதலையாக்கிய தருணத்தில் தானே அவள் தன் ஆண்டவரை புகழுகின்ற காட்சியே இத்திருமறைப் பகுதியின் உச்சம் என நான் கொள்ளுகிறேன்.

 

இத்திருமறை வாசிப்பின் வழியாக நான் பின்வருவனவனவற்றையே உணர்வதுகொள்ளுகிறேன்.

18 வருடங்களாக சிறிது சிறிதாக அவள் தன்னை குறுகச் செய்கின்ற சூழலில் வாழ்ந்திருக்கிறாள்.

18 வருடங்களாக அவள் வாழ்வு நேர்செய்யப்படாமலே கழிந்திருக்கிறது.

18 வருடங்களாக அவளுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது.

18 வருடங்களாக அவள் சென்ற ஜெப ஆலயம், தொழுகைக்கு வருவோர் அல்லது அதன் தலைவர்கள் அவள் நலம் பெறும் முயற்சியில் ஈடுபடவில்லை.

18 வருடங்களாக அவளது வாழ்வில் ஜெப ஆலயம் செயலற்று இருந்திருக்கிறது. அப்படியாயின் ஜெப ஆலயம் பணி என்ன? தொடர் சங்கிலிகளாக நடைபெறும் சடங்குகளா அல்லது அச்சங்கிலியை உடைத்தெறியும் மானிட மகனின் கருணைப்பார்வையா? ஆம்  ஆன்மீகத்தின் புதிய பரிணாமத்தை இயேசு இங்கே முன்மொழிவதைக் காண்கிறோம்.

 

ஆ…. இவ்விடமே நம்மை திகைக்க வைக்கின்றது! “கூனல்” ஒரு தனிப்பட்ட பெண்மணியிடம் மட்டுமல்ல ஒரு சமூகத்திடமும், அதன் சமயத்திடமும் அதன் சமயத்தலைவர்களிடமும் ஒருங்கே அமைத்திருப்பதை இயேசு சுட்டிக் காட்டுகிறார். உடல் ரீதியாக பெறுகின்ற நிமிர்வைப்போன்று சமூக நிமிர்வு எளிதானதில்லை என்பதையே தேவாலயத் தலைவனின் எதிர்ப்புணர்வு நமக்கு காண்பிக்கின்றது. எனினும் மக்கள் மகிழ்வுடன் இயேசுவின் இம்முயற்சியை வரவேற்கின்றதைப் பார்க்கும்போது இத்தகைய முயற்சியின் முக்கியத்துவம் நமக்கு புலனாகின்றது.

 

எபிரேயர் 12ஆம் அதிகாரம் இருவிதமான மலைகளை சுட்டி நிற்கிறது. சீனாய் மலையை அது மவுனமாக குறிப்பிடும்பொழுது அம்மலையின் அருகில் ஒருவரும் வரக்கூடாதபடி இருந்ததை சுட்டி, சீயோன் மலையின் அருகில் வரும்படியான வளமான வாய்ப்பை அது முன்னிறுத்துகிறது. “…ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப் பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள்” (எபிரேயர் 12: 24) செவிகொடுக்காமல் போனால் என்ன நிகழும் என்பதை, தொடர்ந்து வரும் வசனங்கள் மூலம் நாம் கண்டுகொள்ளுகிறோம்.

 

நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற கட்டளைகளின் ஊனத்தையும், அதன் அங்ககீனக்தையும் இயேசு ஒருவராலே கண்டுகொள்ள முடியும். எவ்வித கருவிகளாலும் கண்டுபிடிக்க இயலாத தாயின் கருவில் உருவாகுமுன்னே நம்மை அறியும் விண்ணக மருத்துவராகிய கடவுள் திருச்சபையும் தனது பாரம்பரிய பிணைகளில் நின்று விடுதலை பெற வேண்டும் என்றே ஆவலுடன் நம் முன் நிற்கிறார். நாம் சிறு பிள்ளையென்றோ பேச அறியோம் என்றோ ஒதுங்குவதை அவர் அறவே வெறுக்கிறார். நிலத்தில் எவற்கும் அஞ்சா வார்த்தைகள் நம்மிடமிருந்து புறப்பட, செயலாற்ற அவர் நமக்கு துணை நிற்கிறார். நாமும் எரேமியா போன்றே நாடுகளுக்கு நற்செய்தி வழங்கும் தீர்க்கராய் எழும்பும் ஆவலுடன் அவர் நம்மைப் பார்த்து நிற்கிறார்(எரேமியா 1).

 

குனிந்திருப்போர் எழுந்து நின்று ஆண்டவரை துதிக்கும் ஒரு அரிய தருணத்தின் மீட்புக்காக அவர் ஆணி பாய்ந்த, குற்றுயிரான கரங்களை நீட்டி நிற்கிறார். மருந்தினை இட்டு இச்சிரியரில் ஒருவருக்கு நாம் செய்பவற்றையே அவருக்கு செய்பவையாக கருதி நிற்கிறார். நாமும் நலம் பெற வேண்டி நமது வளைந்த முதுகுடன் அவர் பாதத்தை சரணடைகிறோமா அல்லது ஜெப ஆலய தலைவன் போல் நிமிர்ந்த முதுகுடன் அவருக்கு நேர் நின்று  நமது செயல்களால், அவரையே கேள்விக்குட்படுத்துகிறோமா?

 

“ஆதலால், அசைவில்லாத இராஜ்ஜியத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளுவோம்” (எபிரேயர் 12: 28) எனும் மீட்பின்  வாசகம் நம் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும்.

 

அருட்திரு. காட்சன் சாமுவேல்

 

(25.08.2013 ஞாயிறன்று, மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை, அகமதாபாத்-ல் வழங்கிய செய்தியின் எழுத்து வடிவம்.)

Advertisements

குறிச்சொற்கள்:

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: