திருமறைப்பகுதி: எரேமியா 4:11 – 12 , 22 – 28, 1 திமோத்தேயு 1 :12 – 17, லூக்கா 15:1 – 10
காற்றை நாம் பல வழிகளில் புரிந்துகொண்டாலும் அவற்றின் இயல்பு என்பது நமது அறிதலைத் தாண்டியது என்பதே இயேசுவின் வார்த்தை வெளிப்படுத்துகிறது. “காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.” (யோவான் 3:8) மெல்லிய புல்லாங்குழலாகட்டும், ஒரு படையையே ஆயத்தப்படுத்தும் எக்காளமாகட்டும் காற்றைக்கொண்டே அவை செயல்படுகின்றன. எரியும் திரியாகட்டும் பற்றியெறிகின்ற காடாகட்டும் காற்றின் மையமே அதைக் கட்டுப்படுத்தியும் விரிவுபடுத்தியும் செல்வதை நாம் கண்டுகொள்ளுகிறோம். நீர்குமிழி போன்ற வாழ்விலே நாம் கண்டுணரத்தக்க காற்றின் இயல்பு நமது வாழ்வில் இழுத்துவிடும் மூச்சைப்போன்று பின்னிப்பிணைந்தே இருக்கின்றது.
புயல் குறித்து நமது அனுபவங்கள் யாவும் பத்திரிகைகளிலிருந்தே நாம் பெற்றுக்கொண்ட படியினால் நமது நேரடி அனுபவங்கள் மிகவும் குறுகியது. எனினும் தானே புயலினால் புதுவையின் மொத்த கட்டமைப்புகள் சீரழிந்தன, இயல்பு நிலை திரும்புவதற்கு பல வருடங்கள் அகும், நூற்றுக்கணக்கனோர் பலியாயினர், போன்ற தலைப்புகளின் மூலம் காற்றின் வலிமையை நாம் நடுக்கத்துடனே அறிந்து கொள்ளுகிறோம்.
இன்னுமொரு நிகழ்வை இதற்கு ஒப்பாக கூறப்படுகிறதையும் இதனுடன் இணைத்துப் பார்க்கலாம். இலங்கைத் தமிழர்களின் அனைத்து கட்டமைப்புகளும் தகர்க்கப்பட்டுள்ளன, இலங்கையின் தமிழர் வாழும் பகுதிகள் வெறிச்சோடின, இலங்கையில் இரத்த ஆறு ஓடுகிறது.
இயற்கையால் ஏற்படும் அழிவைவிட செயற்கையாக மனிதன் ஏற்படுத்தும் நிகழ்வுகளால், ஏற்படுத்தும் அநீதியினால் நடைபெறும் அழிவுகள் மிகவும் அதிகமானவைகள். எரேமியா இதையே தீர்க்க தரிசனமாக கூறுகிறார். தேசம் அழிவை நோக்கி இருக்கிறது என்று தனது அனைத்து ஆற்றலையும் செலவழித்து கூறுகிறார். நாங்கள் யார்? 120 வருடமாக சொன்ன நோவா பேச்சையே கேட்காதவர்கள் அல்லவா? எரேமியா சொன்னவுடன் கேட்கவேண்டுமா என்ன என நினைத்திருக்கலாம்.
அழிவு எனும் எச்சரிக்கையை மக்கள் எப்படி எடுத்துக்கொள்ளுகிறார்கள் என்பதை ஒரு சில வாழ்க்கை அனுபவங்களோடு உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். சுனாமி ஏற்பட்ட போது பாதிக்கப்பட்டோருக்காக பணியாற்றியவர்களில் நானும் ஒருவன். அப்போது அறிஞர் ஒருவரால் கூறப்பட்ட வாசகம் இது “கடல் பொங்கி வரும் யாரும் கடலுக்கருகில் செல்லவேண்டாம் என்று கூறியிருந்தால் இன்னும் அதிகமானோர் மரணமடைத்திருப்பர்” இந்திய பொது மனம் எச்சரிக்கைகளை எளிதில் ஏற்றுக்கொள்ளுவதில்லை. அது ஒரு வேடிக்கை மனநிலைக் கொண்டது. எதையும் மிக எளிமையாக்கி தனக்கு வசதியாக புரிந்துகொள்ளும் தன்மையுள்ளது.
இதெல்லாம் ஏற்ற உதாரணங்கள் என மனக்கணக்கு போடுபவர்கள் ஒரு உண்மைக்கணக்கே போடுவதற்கு வாய்ப்புத் தருகிறேன். டாஸ்மாக் மது விற்பனை 2003 ஆண்டு சுமார் 3500 கோடியிலிருந்து 2013 அம் ஆண்டில் 25000 கோடி ஆக உயர்ந்திருக்கிறது. இருந்தும் இந்த செங்குத்தான ஏற்றம் எப்படி சாத்தியமாகிறது. எச்சரிக்கைகளுக்கு மக்கள் மத்தியில் பெருவாரியான மதிப்பில்லை என்பதே தெளிவான பதில். ஜூலை 3, 2013 டைம்ஸ் ஆஃப் இந்தியவில் காணப்பட்ட ஒரு தலைப்பு “குஜராத்தில் மது வேண்டும் அனுமதி பெற இணயதளத்தில் தொடர்பு கொள்ளுங்கள்” (“Now apply for liquor permits online in Gujarat”). எல்லா மது பாட்டில்களிலும் எழுதியிருக்கும் வாசகம் “குடி குடியைக் கெடுக்கும்”.
பலவகையான மனநிலைகள் இதனுள் பொதிந்திருக்கின்றன குற்றாலத்தில் வளையத்தைத் தாண்டி குளிக்கக்கூடாது எனும் அபாய எச்சரிக்கையை துச்சமாக நினைக்கும் அசட்டுத் தைரியம் கொண்ட இளைஞனின் மனநிலையிலிருந்து ஆறிலும் சாவு நூறிலும் சாவு என வாழ்வைக் குறித்து யோசிக்காதபடி சாவிற்கான பெட்டி முதற்கொண்டு அனைத்தையும் தயாரிக்கும் பணியை தத்துவார்த்தமாக பேசித்திரியும் கூட்டம். தங்களைச் சுற்றி ஏற்படும் மாய வலையிலிருந்து தப்பிக்க இயலா வண்ணம் கண்கள் மூடப்பட்டு சிறிது சிறிதாக அழிவின் முடிவிற்குப் வழிநடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மக்கள். என பல் வகைகளில் இவர்களை நாம் வேறு படுத்தலாம்.
பல வேளைகளில் வாழ்வளிக்கும் இறை வார்த்தைக்கு நாம் கீழ்ப்படியாமல் போய்விடுவதே நமக்கு வாடிக்கையாகிப்போனது. நாம் அனைவரும் ஒருவித மாய வலையால் கட்டப்பட்டிருக்கிறோம். முதலில் வலை எவ்விதமானது என அறியாவிட்டால் நம்மால் அதிலிருந்து விடுபட இயலாது. இயேசுவே அனைத்தையும் சொல்லிவிட்டு “கேட்கிறதற்கு காதுள்ளவன் கேட்கக் கடவன்” என்றே மக்களை மிகவும் தெளிவாக புரிந்து தனது கருத்தை முன்வைத்திருக்கிறார். பல நேரங்களில் இவ்விதமாக குரல் எழுப்புவோர் அனைவரும் பெருந்திரளாக கூச்சலிடும் கும்பலுக்குள் ஒடுங்கிப்போய்விடுகின்ற சூழ்நிலையே காணப்படுகிறது. எதற்காக பெரும்பாலோர் கேளாத ஒன்றைக் கூறவேண்டும்? அதனால் விளையும் பயன் தான் என்ன?
திமோத்தேயு நிரூபம் பல ஆய்வாளர்களால் பகுக்கப்பட்டு தூய பவுல் அடிகளாரின் உடன் பணியாற்றிய ஒரு ஊழியரின் படைப்பு என்பதே இன்றைய புரிதல். அதன் மொழியும் அதன் உட்கூறுகளும் அவ்விதம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க துணை நிற்கின்றன. எனினும் பவுலோடு பணியாற்றிய திமோத்தேயுவுக்கு அவர் வழங்கும் அரிவுரைகள் யாவும் இன்றைய தினத்தில் அருட்பணியாளர்களுக்கும் பொருந்திடும் என்பதில் ஐயமில்லை. பக்திமிக்க யூத கிறிஸ்தவ தாய்க்கும் கிரேக்க தகப்பனுக்கும் ஏற்பட்ட கலப்பு மணத்தால் அவர் பிறந்தவர் என்பதை நமக்கு அப்போஸ்தலர் 16: 1 தெளிவுபடுத்துகிறது. திருச்சபையில் ஏற்பட்டுள்ள தவறான போதனைகளைக் களையுமாறு பவுல் வேண்டுவதுபோல இவ்வாசிரியர் குறிப்பிட்டுள்ளது அன்றைய கலகட்டத்தில் ஏற்புடைய ஒன்றே. எனினும் இதன் உள்ளடக்கம் சவால் மிக்கதாய் நம்முன் விரிகின்றன.
தூய பவுல் அடிகளாரின் வாழ்வை ஒரு மாதிரியாகக் கொண்டு அளவிடவேண்டிய விசுவாசத்தின் அழைப்பு இங்கே கோரப்படுகிறது. அவ்விதமான அழைப்பு ஒரு உறுதியான விசுவாச வாழ்வில் நம்மை வழி நடத்தும் எனும் கருத்தே மேலோங்கி எழுவதை நாம் கண்டுகொள்ளுகிறோம். தனது வாழ்வின் துவக்கத்தில் அவர் தான் பிறந்த சமயமாகிய யூத சமயத்தை கற்றுத் தேர்ந்து பிற்பாடு அவற்றின் மேல் பக்தி வைரக்கியம் கொண்டு கலகக்காரர்கள் என எண்ணப்பட்ட கிறிஸ்தவர்களை ஒடுக்கினார். தனது சமயமும் தனது சமய நூலும் அதற்குத் துணைபோனதாகவே எண்ணியிருந்தார். ஆனால் ஒருநாள் ஆண்டவர் அவர் வாழ்விலே இடைபட்டார். வல்லமை நிறைந்த கடவுள் பவுலோடு பேசும் வார்த்தைகள் அழுத்தம் நிறைந்தவை எனினும் நமக்கு அன்நிகழ்ச்சியின் நாடகத்தன்மையே விஸ்வரூபம் எடுத்து ஆண்டவரின் சொற்கள் புரியும்படியாக விளங்கிகொள்ள இயலாதபடி செய்துவிடுகின்றன.
“நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே” என்பது பவுலை மிகவும் அசைத்தது. கடவுள் துன்புறுவாரா? அது எப்படி ஆகும் என அவர் எண்ணுகிறார். கடவுளின் பிள்ளைகளுக்கு விரோதமாக செய்யப்படும் தீங்குகளே கடவுளுக்கு நாம் செய்யும் தீங்கு எனும் புரிதல் பெற்றவராக மனம் மாறுகிறார். எனினும் அறியாமல் தான் பாவம் செய்திருந்ததால் இரக்கம் பெற்றேன் என 13ஆம் வசனத்தில் அவர் கூறுவதைப் பார்க்கும்போது கமாலியேலின் பாதப்படியில் படித்த மாபெரும் கல்விமானுக்குள் இவ்வடக்கம் இயேசுவால் அன்றி எங்ஙனம் உருப்பெற்றிருக்க இயலும்?
இவ்விதமான ஒரு புரிதல் நமக்குள் எழுகிறதா? கடவுளின் வார்த்தைகள் எழுதப்பட்டவை என எண்ணி தன்னால் ஆண்டவரின் அன்பை அறிய முடியாத பவுல் அதன் பின் நியாயப்பிரமாணங்கள் யாவும் பாவிகளுக்குரியது என இவ்வதிகாரத்தின் முதற்பகுதியில் கூறி நிற்பது எதைக் காட்டுகிறது? பலவீனமானவர்களை நமது பலத்தால் நாம் துன்புறுத்தும்போது கடவுள் துன்பம் கொள்கிறார். அவர் தனது இரக்கத்துடனும் காயங்களுடனும் மட்டுமே நம்முடன் இடைபடுகிராறன்றி தனது பலத்தினால் அல்ல. எனவே இக்கடிதம் தனது பெற்றோரின் கலப்பு மணத்தால் தன் வாழ்வு அலைக்கழிக்கப்பட்டுக்கொண்டிருந்த ஊழியக்காரராகிய திமோத்தேயுவுக்கு மட்டுமல்ல ஆண்டவரின் இரக்கத்தை வேண்டும் அனைவருக்கும் உரியதாகிறது.
99 ஆடுகள் என்பது 1 ஆட்டிற்கு முன் மிகப்பெருந்தொகை. எனினும் ஆண்டவரின் உவமை அவ்வெண்ணிக்கையை பெரிதாக எண்ணாமல் தொலைந்துபோன ஒன்றைத்தேடுவது எனும் உயர் தள நோக்கத்தைச் சொல்லுகிறது. சிறுபான்மையினரை முக்கியத்துவப்படுத்தவேண்டும் என்கிற ஒரு பேருண்மையை சுட்டி நிற்கும் ஆவணமாக இந்த உவமை எழுச்சியுற்று நிற்கிறது. எனினும் ஒரு சில கேள்விகள் எழாமல் இல்லை. ஆடு எப்படி காணாமல் போனது? வழி தவறியிருக்க வாய்ப்பில்லை என்பதை மெய்ப்பர்கள் அனைவரும் அறிவர். “மாடு தன் எஜமானையும் கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும் இஸ்ரவேலோ அறிவில்லாமலும் என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்றார்” (ஏசாயா 1: 3) ஆட்டைத் திருடுபவர்களால் ஆடு காணாமல் போயிருக்கலாம், ஒருவேளை வழியில் கண்ட பசுமையினால் மெய் மறந்து ஆடு பின் தங்கியிருக்கலாம் – காபி பிறந்த கதையை நாம் அறிவோமே. ஆடு கண்டுபிடித்தளித்த பரிசல்லவா அது. முரட்டு ஆடுகளின் வலிமையால் இந்த ஆடு படுகுழிக்குள்ளோ முட்புதருக்குள்ளோ தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால் முயற்சி என்பது கருணை மிக்க ஒன்றாக உருவெடுப்பதைக் காண முடிகிறது.
99 ஆடுகள் வனந்திரத்திலே நிற்க, ஒரே ஒரு ஆட்டைத் தேடுகின்ற சாகசம், அன்பு, கடமையுணர்ச்சி, தீராத வேட்கையுடன் தேடுதல் போன்றவைகள் மிக உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவைகள். ஒன்றைப் பிரிந்து தனித்து நிற்கும் 99 ஆடுகள் எவ்வகையிலும் மேன்மையானவைகள் அல்ல என்றே இயேசு கற்பிக்கின்றார். தொலைந்து போனதைத் தேடுவதே நல் ஆயனின் கடமையே அன்றி தொலைவிலோ அருகிலோ இருப்பதை திருடி வருவது அல்ல என்பதும் இதனுள் உறைந்து நிற்கும் புரிதலே.
வெள்ளிகாசு என்பது ஒருவரின் ஒருநாள் கூலி. அதை இழப்பது தாங்கிகொள்ள முடியாத ஒரு சுமையாக அதை சேகரித்த பெண்மணி கண்டுகொள்ளுகிறாள். வியர்வை சிந்தி சம்பாதித்தப் பணம். அதை இழந்தாலும் 9 வெள்ளிகாசுகள் இருக்கின்றனவே என எண்ணாமல் தான் பொறுப்புடன் சேகரித்து வைத்திருந்த அந்த நாணயத்தை தேட ஆரம்பிக்கிறாள். வீட்டில் ஒளியேற்றப்படுகிறது, அதுவரை முக்கியத்துவப்படுத்தாத ஓரங்கள் மற்றும் இண்டு இடுக்குகள் யாவும் சுத்தம் செய்யப்பெறுகின்றன. நாணயம் தான் தொலைந்து போனதற்காக வருத்தப்பட இயலாது ஆனால் அதை இழந்தவர் அதன் மதிப்பை உணர்ந்தவராவார். அம்மதிப்பிற்காக தனது வாழ்வில் ஏற்படும் இன்னல்களையோ சிரமங்களையோ தனது உடல்மேல் ஏறும் புழுதியோ ஒரு பொருட்டல்லவென்று தனது தேடலை கைவிடாது தொடருகிறாள். இறுதியில் அதைப் பெற்ற உடன் மகிழ்வோடு இச்செய்தியை அயலகத்தாருக்கு சொல்லுகிறாள். அனைவரும் மகிழ்வடைகின்றனர்.
இயேசு பாவிகளோடு உணவருந்துவதைக் கண்ட பரிசேயரும் வேதபாரகரும் அவர் செயலைக்கண்டு முறுமுறுத்தபோது அவர் மேற்கூறிய உவமைகளைக் கூறினார் எனக் கண்டுகொள்ளுகிறோம். பாவியிலும் பிரதான பாவியாக பவுல் தன்னைத் தாழ்த்துகிறதையும் அதைவிட அதிகமாய் இயேசு துன்பபடுகிறவராக காட்சியளிப்பதையும் கண்டுகொண்டோம். எரேமியாவின் வாக்கைப் புறக்கணித்த மக்களால் ஆண்டவர் அடைந்த துன்பத்தை எவ்விதம் நாம் அளவிட முடியும்? ஒருவரை ஒருவர் ஒடுக்குகின்ற சூழல் மலிந்திருந்தது கண்டு வியாகுலப்படுவதையும் இறைவாக்கினர் மூலம் எடுத்துரைப்பதையும் புரிந்து கொள்ளுவது எங்ஙனம்? எச்சரிப்புகள் இருந்து தொலைந்துபோய்விடுகின்ற சூழலில் தேடி வரும் இறைவனைக் காண்கையில் நம்மால் ஏற்பட்ட வடுக்களை அவரில் காண்போமென்றால் அது எவ்விதம் நமது விசுவாசத்தை பெலப்படுத்தும்?
இன்றைய தினத்தில் கூடங்குளம் தமிழகத்தின் விடிவெள்ளியாக இந்தியாவின் முன்னேற்றத்தின் அடையாளமாக முன்னெடுக்கப்படுவதைக் காண்கிறோம். அதற்கு அருகிலே இடிந்தகரை எனும் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த கத்தோலிக்க தேவாலயத்தில் குருவானவரும் மக்களும் இணைந்து போராட்டம் நடத்துகின்றனர். எங்களுக்கு உண்மை தெரிய வேண்டும். எங்கள் பாதுகாப்புக் குறித்த அச்சம் நிலவுகின்றது. தெளிவுகளைத் தாருங்கள் எனக் கேட்போரை அரசு சிறையில் அடைக்கிறது. அமைதியாய் போராடும் அவர்கள் மீது தேச துரோக சட்டம் பாய்கிறது. எனினும் அவர்கள் காணாமல் போன ஆடுகளாக மற்ற 99 ஆடுகளையும் விட்டுப் பிரிந்து நிற்கிறவர்களாகவே காணப்படுகிறார்கள். ஆம் மிகவும் முக்கியமான ஆடு அது. ஆண்டவருக்காய் தனித்து நிற்கும் ஆடு. அவரது அன்புக்குரிய ஆடு. மற்ற ஆடுகளால் தனித்த ஆட்டுடன் தங்களை இணைத்துக் கொள்ள இயலவில்லை. அதற்கு காரணம் ஒன்று உண்டு. இந்திய அரசின் புலனாய்வுத்துறை கிறிஸ்தவ திருச்சபைகளின் மற்றும் ஸ்தாபனங்களின் கணக்குகளையும் வழக்குகளையும் குடைய ஆரம்பித்தது. ஆனைவரும் லஞ்சத்தை மஞ்சமாக கோண்டு உறங்கிக்கொண்டிருந்தவர்கள். சுகமான இவ்வுறக்கத்தை அவர்கள் விரும்பினார்கள். ஒவ்வொருவராய் நீதியின் போராட்டத்திற்கு நல்கிய ஆதரவை விட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார்கள்.
நாம் பாரம்பரியத்தை மட்டுமே கைகொள்ளுகிறவர்கள் என எண்ணுகின்ற கத்தோலிக்கத் திருச்சபை இன்று பல படிகளில் நமது ஆன்மீகத்தை விஞ்சி சென்றுகொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் இளைஞர்களுடன் போப் ஃபிரான்சிஸ் (உலக இளைஞர் நாள் 2013) பேசிய வார்த்தை வாத்திகனிலிருந்து எழத ஒரு வீரிய வார்த்தை. “நமக்கு இன்று புனிதர்கள் வேண்டும் – அங்கி இடாத, முக்காடிடாத, ஜீன்ஸ் மற்றும் டென்னிஸ் காலணிகள் அணிந்தபடி. இருபத்தோராம் நூற்றாண்டின் புதுமைகளுக்கு ஈடுகொடுக்கும் புதிய பார்வை கொண்ட புனிதர்கள் வேண்டும்”
“என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன்.முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன்.” 1 தீமோத்தேயு 1: 12 & 13 இவ்வசனங்கள் நாம் மனம் மாறுதலடைய வேண்டியவைகளாய் இறை அடியவரின் வாழ்வின் அனுபவத்தை ஒட்டியே நிற்கின்றன.
நாம் வாசிக்கும் திருமறைக்கும் அதன் ஆக்கியோனாய் செயலாற்றுகின்ற தூய ஆவியருக்கும் நாம் உண்மையுள்ளவர்களாக காணப்படுகிறோமா? நமது வார்த்தைகளால் காயமடைவோர், பெலனடையவும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றதா? இவையே நாம் தெரிவு செய்யவேண்டிய பாதையாகவும் கண்டடையும் தரிசனமாகவும் காணப்படுகிறது.
அருட்பணி. காட்சன் சாமுவேல்
+91 8238 503 714
palmyra_project@yahoo.com
malargodson@gmail.com
15.09.2013 ஞாயிறன்று, மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை அகமதாபாத் (குஜராத்) வழங்கிய செய்தியின் எழுத்து வடிவம்.