(திருமறைப் பகுதிகள்: சங்கீதம் 81: 1, 10 – 16, எரேமியா 2: 4 – 13, எபிரேயர் 13: 1 – 8, 15 & 16, லூக்கா 14: 1, 7 – 14)
கர்த்தரின் பந்தியில் கலந்துகொள்ள வந்திருக்கும் அருமை திருச்சபையோரே! தன்னையே பகிர்ந்த இயேசுவின் திருப்பெயரால் உங்களை நான் வாழ்த்துகிறேன்.
பெற்றோர் வணக்கம் நமது மரபு. பெரியோருக்கு உகந்த மரியாதை வழங்குவது சிறுவயதிலிருந்தே நமக்கு கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே தான் வயோதிபர்களைக் கண்டால் பேருந்தில் எழுந்து நின்று இடம் கொடுக்கிறோம். சிறப்பு வரிசைகளை அமைத்திருக்கிறோம். பலவித சலுகைகளுக்கு ஏற்புடையவர்களாக அவர்கள் நம் முன் காட்சியளிக்கிறார்கள். “உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக” என்கிற கட்டளை நம்மில் ஒலித்துக்கொண்டிருப்பதால் இவைகளை நாம் கருத்தாய் செய்கிறோம். நல்லதுதான். எனினும் முறைமுறையாக வாசித்த சங்கீதமும், வாசிக்க கேட்ட எரேமியாவின் உரையும் நம்மை ஒரு புதிய பாதையைத் தெரிந்துகொள்ள அழைப்பு விடுக்கின்றது. இப்பாதையை நாம் தொடர்கையில் அவை நாம் வாசித்து அறிந்த எபிரேயரோடும் லூக்காவோடும் இயைந்து செல்லுவது நமக்கு ஒரு பொதுவான புரிதலையும் வழங்க இருக்கிறது. திறந்த இருதயத்தோடு இருந்து இறைசெய்தியால் ஒன்றிணைந்தால் ஆண்டவரின் ஆசி நம்மோடு தங்கியிருக்கும்.
சங்கீதம் 81 ஐ எழுதிய ஆசாப் இதை கித்தீத் எனும் வாத்தியத்தோடு வாசிக்கவேண்டும் என்கிற குறிப்பை இராகத்தலைவனுக்கு இணைத்திருக்கிறார். எனினும் சங்கீதத்தை நாம் கூர்ந்து வாசிக்கும்போது தம்புரு வீணை சுரமண்டலம் மற்றும் எக்காளத்தையும் பயன்படுத்தி கடவுளுக்கு துதி பலியைச் செலுத்துவது எனும் கருத்தை அவர் உள்பொதிந்து வைத்திருக்கிறார். வெறும் சொல் அலங்காரமாக அல்ல “இது இஸ்ரவேலுக்குப் பிரமாணமும், யாக்கோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது” (4) என அறுவடைப் பண்டிகை எனப்படும் கூடாரப் பண்டிகை கொண்டாடும் ஆராதனையில் பாடும்படியாக எழுதுகிறார்.
ஒருமித்து பாடும் இப்பாடலின் பிற்பகுதி ஒரு சுய பரிசோதனை போல், பாவ அறிக்கை போல் அமைந்துள்ளது இதன் சிறப்பு. இப்பாடல் முடியும் தருவாயில் ஆண்டவரின் கருணையுள்ளம் தனது பிள்ளைகளை அரவணைக்கும் தன்மையது எனும் உறுதிப்பாட்டுடன் முடிகிறது. இப்பாடலில் தொக்கி நிற்கும் சோகம் என்னவென்றால், தம் மக்கள் தமக்கு பணியாதபடி வேற்று தெய்வங்களுக்கு பணிந்து நடந்து கடவுளை புறக்கணித்த சோகத்தை ஏந்தியபடி இக்கவி செல்லுகிறது. ஒரு சிறந்த நாளின்போது இவ்விதமான பாடல்களின் முக்கியத்துவம் என்ன? மகிழ்வின் நேரத்தில் ஏன் பழைய வாழ்வைக் கிளறி பார்க்கவேண்டும் போன்ற கேள்விகள் நம் மனதில் எழுகிறதல்லவா?
எளிய ஒற்றை வரியில் இவைகளுக்கு பதில் கூறிவிட இயலாது எனினும் நாம் இவ்விதமாக புரிந்துகொள்ளலாம். கடவுளுக்கு முன் நமது வாழ்வு திறந்தே இருக்கிறது. அவர் முக்காலமும் அறிந்தவர். அவர் திருமுன் வருகையில் நமது வாழ்வில் ஏற்பட்ட சருக்கல்களை நினைவு கூர்வதும் அவர் உதவியால் நாம் தொடர்ந்து நமது பயணத்தை உறுதியுடன் தொடரும் விரும்புகிறோம் எனும் அற்பணமுமே. இவ்வித சூழலில் இன்றைய செய்தியின் பின்புலம் அமைந்துள்ளதால் நாமும் கருத்தாய் இவைகளைக் கேட்டு நமது வாழ்வை சீர் செய்வது அவசியம். எங்கே தவறினோம் என்பதை அறியவில்லையென்று சொன்னால் நாம் பாதையை தெரிந்தெடுப்பதும் இயலாத காரியம் இல்லையா?
எரேமியா தீர்க்கதரிசி தனது ஊழியத்தின் ஆரம்பத்தில் வெளியிடுகின்ற அறைகூவல் மிகவும் கவனிக்கதக்கது. மிகவும் இக்கட்டான சூழலில் ஆண்டவர் வழிநடத்திய அவர்தம் மக்கள் அவரைத் தேடாமல் போனதன் விசித்திரத்தை அவர் கேள்விக்குட்படுத்துகிறார். அதற்காக அவர் கூர்மைப்படுத்திச் சொல்லும் வார்த்தைகள் (5-7) தனியாக தியானிக்க வெண்டிய அளவு செறிவுள்ளவைகள். பொருள் கொள்ள துவங்கினோமென்றால், எகிப்திலே நீ அடிமையாயிருந்தாய், அங்கிருந்து உன்னை நான் ஓங்கிய புயத்தினாலும் பலத்த கரத்தினாலும் விடுவித்தேன். நீ கடந்து வந்த வழியை திரும்பிப் பார்த்தால் அது மனிதர் வாழ தகுதியற்ற இடம். வழி நடப்பதற்கும் ஏற்ற இடம் அன்று. மரணத்துக்கேதுவான அனைத்து இடர்களும் நிறைந்து காணப்பட்ட இடத்தை நீ கடப்பதற்கு எடுத்துக்கொண்ட 40 வருடங்களும் நான் உன்னோடிருந்து உனக்கு உணவும், பாதுகாப்பும் அளித்தேன். வாக்களித்த பாலும் தேனும் ஓடுகின்ற கானானை நீ அடைந்தபோதோ என்னை மறந்து நான் கொடுத்த அவ்விடத்தை உங்கள் தீய வழிகளால் அருவருப்பாக்கினீர்கள் என ஆண்டவர் தனது வேதனையை தீர்க்கரின் மூலம் வெளிப்படுத்துகிறதைக் காண்கிறோம். புனிதத்தை முறைதவறி பேணுகின்றபோதே நாம் அதன் புனித்தத்தன்மையை இழந்துவிடுகிறோம் எனும் கூற்றை எரேமியா எதிரொலிக்கிறார்.
மக்களின் இத்துணை அநியாயங்களும் அவர்களால் மாத்திரம் நிகழவில்லை என்பதையும் அவர் பதிவுசெய்வது நமக்கு புதிய வாசல்களை திறக்கின்றது. ஆம் மக்கள் வழி தவறி செல்வதற்கு காரணமான குற்றவாளிகளை அவர் நம்முன் நிறுத்துகிறார். மக்களால் அவர்களை பிறித்தறிய இயலவில்லை என்று சொன்னால் அதனால் நஷ்டம் அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களை தன் சொந்த மக்களாக பாவித்து வழிநடத்திய கடவுளுக்கும் அல்லவா? இவ்விதமான ஏக்கத்தோடு எரேமியா “கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்கு துரோகம் பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக் கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள்” என சொல்லுவதைக் காண்கிறோம். இதன் பொருள் என்ன? ஆசாரியர்களும் வேதத்தைப் போதிக்கிறவர்களும் இஸ்ரவேலின் ஆன்மீகத்தில் ஏற்படுத்தவேண்டிய தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டனர், அவ்வாறே நீதி மற்றும் நேர்மை வழியில் மக்களை வழிநடத்தவேண்டிய மேய்ப்பர்களான தலைவர்கள், பாதை மாறி விட்டனர். மேலும், மக்களின் அற வாழ்விற்கு அழியா நெருப்பை வழங்கும் கடமை கொண்ட தீர்க்கதரிசனஞ் சொல்லுவோர், கடமை தவறியதையும் சுட்டிக்கட்டுகிறார்.
ஆகவே கடவுள் தமது வழக்கை தொடரத் துணிகிறார். அந்த வழக்கு நம்மோடு மட்டும் முடிவதில்லை அது நமது பிள்ளைகளையும் அவர்கள் சந்ததியினரையும் கேள்விக்குட்படுத்தும் வழக்கு. பிதாக்களின் குற்றங்களை பிள்ளைகள் சுமப்பது ஏற்றதல்ல. நமது ஆசிகளை நமது பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லலாம், நமது சாபங்களை நாம் ஒருபோதும் அங்ஙனம் விட்டுச் செல்லலாகாது. அது முறையாகாது. எனில் நாம் ஒன்றை புரிந்துகொள்ளுகிறோம். நமது பெற்றோர் ஆசிகளையும் சாபங்களையும் நமக்கு அறிந்தோ அறியாமலோ விட்டுச் செல்லுகிறார்கள். ஆசிகளை நாம் பெற்றுக்கொள்ளலாம் அது நமது உரிமை. ஆனால் செய்யாத குற்றத்திற்கு எப்படி தண்டனை பெறுவது? எவ்விதம் விடுதலை பெறுவது? பிராயசித்தமாக நம்மால் ஏதேனும் செய்ய முடியுமா? எவ்வாறு அதற்காக நாம் துணிவது சாத்தியம்?
ஜீவ தண்ணீராகிய கடவுளை கொள்ளுகின்ற உறுதியான உள்ளம் நம்மிடம் உண்டா? அல்லது இஸ்ரவேலைப்போன்றே நாமும் உடைப்பெடுத்த தொட்டிகளையே வைத்திருக்கிறோமா? எவ்விதம் இக்கேள்விகளுக்கான பதிலை உறுதி செய்வது?
எபிரேயர் நிரூபத்தின் ஆசிரியர் தனது செய்தியை கோர்த்து முடிக்கின்ற வார்த்தைகளைக் காணும்போது புதிய இஸ்ரவேலராகிய ஆதி திருச்சபையினர் தவறிவிடக்கூடாத காரியங்களைப் பட்டியலிடுகிறதை காண்கிறோம். எளிதனவைகளும் கடினமானவைகளும் இவைகளில் உண்டு. எனில் எதற்காக ஆக்கியோன் இவைகளை தன் கடிதத்தில் வரைகிறார்? நேர்மையோடு பதில் கூறவேண்டுமென்று சொன்னால் ஆதி திருச்சபையிலும் நமது முன்னோர்கள் “கடவுளுக்கு உகந்த வாழ்வு” வாழாதபடிக்கு நெறி தவறியாதினாலே தானே? எனில் இத்தீங்குகள் நம்மையும் சுற்றிப்பிடிக்க நமது கலைக் கவ்வியபடி இருக்கும் மலைப்பாம்பை ஒத்தவை. எவ்வாறு இவைகளினின்று நாம் வெளியேற இயலும்? படிப்படியான விடுதைலை எனக்கொள்வோமென்றால் அந்தப் படிகளை எங்கிருந்து கட்ட ஆரம்பிப்போம். திருச்சபையிலிருந்தா? அல்லது சமூகத்திலிருந்தா? எனது தனிப்பட்ட வாழ்விலிருந்து எனும் நேர்மையான பதில் வருமென்றால், அதை எங்கோ கடைபிடிப்பதை விட்டு திருச்சபையில் கடைபிடிக்க முன்வருவோமா? நமது முன்னோர் செய்தவைகள் தவறென்றுணர்ந்து அவைகளினின்று விடுபட முன்வருவோமா?
இயேசு ஒரு ஓய்வுநாளில் உணவு உண்ணுவதற்காக பரிசேயருடைய தலைவர் வீட்டிற்குச் செல்லுகிறார். உணவருந்த வந்தவர்கள் அனைவரும் அவரை கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கின்றனர் என லூக்கா அக்காட்சியை விவரிக்கிறார். கிட்டத்தட்ட ஒரு விருந்தை ஒத்த காட்சியாக இதை அவை காட்சிப்படுத்துகிறார். இயேசுவோடு இன்னும் அனேகர் அதில் கலந்துகொண்டிருக்கின்றனர். பரிசேயருடைய தலைவர் ஆனபடியால் அனேக பரிசேயர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்றனர் என்பதை நாம் யூகிக்கலாம். இவர்களோடு பொதுமக்களும், நியாய சாஸ்திரிகளும் இருப்பதை கண்டுகொள்ளுகிறோம். இவ்விருந்தின் மத்தியில் நீர்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷனும் இருக்கிறான். இயேசு தன்னைச் சுற்றியிருந்த பரிசேயரிடமும், நியாய சாஸ்திரிகளிடமும் ஒரு கேள்வியை வைக்கிறார். “ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா”?
கடந்த வாரத்திலும் நாம் ஒரு ஓய்வுநாள் சொஸ்தமாக்கும் நிகழ்ச்சியைப் பார்த்தோம். கூனியான ஒரு பெண்மணியை அவர் நிமிர்த்துவதற்குள் அவளைச் சூழ்ந்திருந்தோர் அனைவருமே அத்தகைய நிலையில் இருந்தனர் என்பதை வெளிச்சம்போட்டுக்காட்டும் ஒரு நிகழ்ச்சி. இயேசு ஜெப ஆலய தலைவன் ஆற்றிய எதிர்வினையை இன்னும் நினைவில் வைத்துக்கொண்டு இக்கேள்வியைப் படைப்பதுபோல் தோன்றுகின்றது. நலம்பெறுவதற்கான ஆற்றல் ஓய்வுநாளில் செலவிடப்படுவதை அவர்களும் எதிர்க்கிறார்களா என இயேசு அறிய எத்தனிக்கிறார். ஆனால் அனைவரும் வாய்மூடி அமைதலாயிருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் தங்கள் தலைவரும், அனைவரால் போற்றப்படுகின்றவரும், விருந்தை ஆயத்தம் பண்ணின பரிசேயருடைய தலைவனுக்கு மரியாதை செலுத்தும்படி வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம் என எண்ணினார்களோ என்னவோ.
இயேசு வியாதியுற்ற மனிதரை தம் அருகில் அழைத்து அவரை நலம்பெறச் செய்கிறார். இயேசு எவ்விதமான ஆற்றலை செலவளித்தார் என்பதை நேரடியாக இங்கே வெளிப்படுத்தவில்லை, எனினும் மறைமுகமாக இயேசுவின் கூற்றின்னூடாக “நலம் பெறும் நிகழ்வு எப்படி நடந்திருக்கும் என நம்மை யூகிக்க வைக்கிறார். “உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ” (5) என்கிறார். அவர்களால் இதற்குப் பதில் கூற இயலாதபடி ஆயிற்று எனக் காண்கிறோம்.
இப்பின்னணியமே அவரது பின்வரும் உரையாடலுக்கான அடித்தளமாக அமைந்திருக்கிறது. பெரியோரை போற்றும் தன்மையுடையவர்களாக தங்களால் மதிக்கப்பெறும் ஒருவர் முன்நிலையில் அவர்களது குணநலங்கள் எப்படி இருக்கின்றன என்று இயேசு கவனித்துக்கொண்டிருக்கிறார். ஒவ்வொருவரும் மிகப்பெரிய ஆற்றலை செலவளித்து தாங்கள் யார் என்பதை நீரூபிப்பதற்காக அவர்கள் முனைவதை இயேசு கவலையுடன் கவனிக்கிறார். முதன்மையான இடத்திற்கான ஒரு கீழ்மையான முறைமைகளை அவர்கள் கையாளுவதை கவனித்த இயேசு பரலோக இராஜ்ஜியத்தில் எவன் பெரியவனாயிருப்பான் எனும் உண்மையை அவர்களுக்கும் கூற முற்படுகிறார்.
கலியாண வீட்டிற்குச் செல்லும்போது விருந்து பறிமாறும் இடத்தில் முதன்மையான இடத்தை தெரிந்துகொள்ளுவதைப் பார்க்கிலும் கடைசி இடத்தை தெரிந்து கொள்ளுவதே சிறந்தது எனவும், அவ்வாறு நாம் செய்யத் துணியும்போது அங்கே நம்மை அழைத்தவர் வந்து நம்மை முதன்மையான இடத்திற்கு அழைத்துச் செல்லுவதே சிறப்பாக இருக்கும் என்று அவர் சொல்லுவதை நாம் எப்படி பொருள் கொள்ளுவோம்?
நாமே உயர்ந்தவர் என காண்பிப்பது எவ்வகையிலும் இயேசுவின் பார்வையில் சரியானது அல்ல. நாமும் பல வேளைகளில் இதை உணர்ந்தவர்கள் போல் நம்மைத் தாழ்த்துகிறதுபோல் நடிக்கிறோம். எனினும் பல வேளைகளில் நமது உண்மை உரு வெளிப்படும்போது இவ்வளவு தூரம் நாம் புரிதலற்றவர்களாக இருந்திருக்கிறோமா? நாமும் நம்மை அறியாமலே முதன்மை இடத்தை தேடி அலைகிறவர்களாக இருக்கிறோமே என அறிகிற ஒரு சூழல் வந்தால் அச்சூழலில் இயேசுவின் வாக்கிற்கிணங்க பிறருக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளுவோமா? அல்லது இது காலம் காலமாக நடைபெற்றூவரும் பழக்கவழக்கம். இப்போதைக்கு மாற்ற முடியாது என முதன்மை இடத்தை இறுகப்பற்ற முயலுகிறோமா?
மணவாளன் இயேசு மணவாட்டியாகிய திருசபையின் ஒவ்வொரு அங்கத்தினரையும் தனது திருமணத்திற்கு அழைக்கிறார். அங்கே பகிரப்படுவதோ அவருடைய குருதியும் உடலும். தன்னையே கொடுத்தவரிடம் சேரும்போது நம்மிடம் பணிவும் தாழ்மையும் இருப்பதல்லவா அவரது விண்ணப்பம். அவரது உடல் “இழந்தவர்களை தேடவும் இரட்சிக்கவும்” அல்லவா உடைக்கப்பட்டது. நம்மை முதன்மையாக்கும்போது அவர் காணாமல் போன ஆட்டைத் தேடி அலைகிறார் எனும் உண்மை எப்படி நமக்கு உறைக்காமல் போனது? அவ்வுடைவிலே நாமும் ஐக்கியம் ஆகாதபடி நமது மேன்மை நமக்கு நமது பெற்றோர் விட்டுச்சென்ற பாரம்பரியம் இருக்குமென்றால், அவைகளை நாமும் இதுகாறும் கைக்கொள்ளுகிறோமென்றால் எத்துணை தீயது அது.
ஆம் எனக்கு அன்பான திருச்சபையினரே! திருச்சபை பலவேளைகளில் தனது முன்னோர்களின் பாரம்பரியங்களுடனே தனது மணவாளனைக் காணச் செல்லுகிறது. முன்னோர் மீது கொண்ட பக்தி நமது ஆன்மீகத்தை நசுக்குவதை சற்றும் உணராத ஒரு சந்திப்பு அது. இவ்வகை சந்திப்பு நமக்கு பிரியமாயிருந்தாலும் அருள் நாதர் இயேசுவை அது துக்கப்படுத்தும் என்பதில் சற்றும் ஐயமில்லை.
ஒரு எடுத்துக்காட்டாக இன்றைய நற்கருணை வழிபாட்டையே எடுத்துக்கொள்வோம். இங்கே இதுநாள் வரை ஆண்களே கர்த்தரின் பந்தியில் முதலாவதாக கலந்துகொள்ளுவது வழக்கமாக இருக்கிறது. இதைக் குறித்த குற்ற உணர்வு நம்மிடம் இருப்பதுமில்லை. இதிலென்ன தவறு என நாம் எண்ணிக்கொண்டிருக்கலாம். “பெண்கள் முதலில்” எனும் சொல்லாட்சி சமூக தளங்களில் முன்நிறுத்தப்படுகின்ற இன்நாட்களில் நாம் இன்னும் அவர்களை இரண்டாந்தர குடிமக்களாகவே நடத்த முடிவு செய்திருக்கிறோமா? பேருந்தில் இணைந்து பயணம் செய்கிறோம், ஆலயத்திற்கு இணைந்து வருகிறோம் கர்த்தருடைய பந்தியில் குடும்பமாக இணைந்து பகிராதபடி இருப்பதில் உள்ள சிக்கல் தான் என்ன?
ஒருவேளை நாம் நமது குடும்பத்தோடு இணைந்து வருவோமென்றால் தேவன் இணைத்ததை நான் பிரிக்காமல் இருக்க முயற்சி செய்தேன் என்கிற நிறைவு எனக்கு ஏற்படும். வாழ்விலும் தாழ்விலும் சுகத்திலும் துக்கத்திலும், ஆலயத்திலும் நற்கருணையிலும் சேர்ந்திருக்கும் பாக்கியம் அனைவருக்கும் ஆசியாக கிடைக்கும்.
நாம் நம்மைவிட்டு கடந்துபோன முன்னோர்களுக்கு செய்யும் உதவி அவர்கள் விட்டுச்சென்ற இடிபாடுகள் மேல் அவர்களின் உன்னதமான நோக்கங்கள் நிறைவேற கட்டிஎழுப்புவதேயன்றி அவைகளையே வாழ்விடமாக கொள்ளுவது அன்று. எளியோருக்கு செய்யும் விருந்தை அவர்களால் நமக்கு திருப்பிச் செய்ய இயலாது என்பதை அறிவுறுத்திய ஆண்டவர் முன்னால் நாம் நிற்கும்பொழுது நமக்கு திருப்பிச் செய்ய இயலாத இடத்தில் நமது முன்னோர்களும் இருக்கிறார்கள். பதில் செய்ய இயலாதோருக்கு நீ செய்யும் உதவியே மிகப்பெரிய உதவி என்பதாய் இயேசு கூறி முடிக்கிறார். அத்தோடு “நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்கு பதில் செய்யப்படும்” என்றார்.
கர்த்தரின் பந்தியில் குடும்பமாக வாருங்கள். கர்த்தர் உங்களுக்கு அளித்த பிள்ளைகள் எனும் ஆசியோடு.
அருட்திரு. காட்சன் சாமுவேல்
(01.09.2013 ஞாயிறன்று, மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை, அகமதாபாத் நற்கருணை வழிபாட்டில் வழங்கிய செய்தியின் எழுத்துவடிவம்)
மறுமொழியொன்றை இடுங்கள்