திருமறைப்பகுதி: எரேமியா 18: 1 – 11, பிலேமோன் 1 – 21 , லுக்கா 14 : 25 – 33,
குயவன் எனும் ஒரு உருவகத்தை எரேமியா கையாள்வது நமது மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்று. “குயவனே குயவனே படைப்பின் காரணனே” எனும் பாடல் நாம் உருகி பாடுகின்ற ஒன்று. குயவர்கள் இன்று நம்மை விட்டு வெகுதூரத்தில் சென்றுவிட்டதைப் போல், படைப்பின் காரணரும் சென்றுவிட்டதை தான் இன்றைய திருமறைப் பகுதி நமக்கு உணர்த்துகிறாதா அல்லது எரேமியா தனது காட்சியை இஸ்ரவேலரை ஆண்டவர் வனைகின்ற வண்ணம் தனது மக்களை வனைகின்றவர் எனக் கொள்ளலாமா?
மெதடிஸ்ட் திருச்சபை இந்நாளிலே ஒரு குயவனை நாம் ஆலயத்திற்கு அழைத்து, அவன் எவ்விதம் பணி செய்கிறான் என்பதை கண்டுணர அழைப்பு விடுக்கின்றது. ஒரு வகையிலே நாம் அவ்விதமான ஒரு சூழலிலே நமது தொழுகையை அமைத்துக்கொள்ளாதபடியினால் சொற்களினூடக என் அனுபவத்தை காட்சிபடுத்த இருக்கிறேன். எரேமியா கண்டது ஒரு குயவனின் வீட்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வு. அவர் அதை சுருக்கி நமக்கு கொடுத்திருக்கிறார் அதை விரிவு படுத்தும் தோறும் அது நமக்கு பயனுள்ளதாய் அமையும் என நான் நம்புகிறேன்.
நாகர்கோவிலிலிருந்து மார்த்தாண்டம் செல்லும் வழியில் சுங்கான்கடை என்ற இடத்தில் ஒரு பானைத்தொழிற்சாலை இருப்பது எப்போதும் என்னை பார்க்கத்தூண்டும். ஒருநாள் அந்த இடத்தை சென்று பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் சென்றேன். ஃபாதர் தொம்பர் எனும் ஏசு சபை (ஜெசுயிட்) பாதிரியார் இதை ஆரம்பித்ததாக ஜெயமோகன் மூலம் பின்பு அறிந்துகொண்டேன். ஒரு தொழிற்சாலைக்குரிய வேகம் அங்கே காணப்பட்டது எனினும் குடும்பமாக சிறு பிள்ளைகள் உட்பட அனைவருமாக உழைத்துக்கொண்டிருந்தனர். காய்ந்த களி மண் ஒருபுறம் குவிக்கப்பட்டிருந்தது. மண்ணைக் குழைப்பதற்காக ஒருசிலர் மிதித்துக்கொண்டிருந்தனர். குழைத்தமண் சக்கரத்தில் இடப்பட்டு குயவனால் பானையாக உருப்பெற்றது. அதன் வடிவம் மற்றும் நேர்த்தியை மெருகூட்டும்படியாக குயவர் பெண்கள் பானைகளை மடியில் வைத்து செம்மண் நீரினால் நிறமேற்றி, தங்கள் குழந்தைகளுக்கு எண்ணை தடவி விடுவதுபோல் நெளிவுகளை தட்டி சரிசெய்துகொண்டிருந்தனர். குழந்தைகள் பானைகளை எடுத்து நிழலில் காயவைத்துக்கொண்டிருந்தனர்.
எரேமியா ஏன் குயவன் செய்யும் பானையை முக்கியப்படுத்துகிறார்? குயவனுக்கும் களிமண்ணிற்கும் உள்ள தொடர்பை எப்படி அவர் ஆன்மீகமாக காண்கிறார் என்பது மிகவும் முக்கியமான கேள்வி.
வாழ்வில் கடவுள் அனுதினமும் நம்மோடு எளிய விதத்தில் உரையாடிக்கொண்டே இருக்கிறார். அவைகளைப் புரிந்துகொள்ளும் நிலையில் நாம் இல்லை என்பதே கடவுளை வருத்தும் விஷயமாகிப்போனது. எளிமையில் இறைவன் பேசுவதை அறியாதவர்களே ஜெபம் எனக் கூறிக்கொண்டு செயலாற்றுதல் ஏதும் இன்றி ஆண்டவர் பேசுவதை அறிய எத்தனிக்கிறார்கள். அதுவும் தாங்களே பேசிக்கொண்டிருந்துவிட்டு ஆண்டவரை பேச இயலாதபடி செய்துவிடுகிறார்கள். எரேமியா கடவுளின் செயலை குயவனின் வீட்டில் மண்பாண்டம் செய்யும் தருணத்தில் கண்டுகொள்ளுகிறார். இவ்வித தருணங்கள் நம் வாழ்வில் பலமுறை வந்துசென்றும் கடவுளின் வார்த்தையை தவறவிட்ட துரதிருஷ்டசாலிகள் நாம்.
இறைவாக்கினர், கர்த்தருடைய வார்த்தையை இனம்கண்டுகொள்ளுவது எளிதான ஒன்றல்ல என்பதே எரேமியா வாயிலாக நாம் கண்டுகொள்ளுகிறோம். பல வேளைகளில் எரேமியாவின் கூற்று மக்கள் விரோதமாக எழும்புவதைப்போல் தோன்றினாலும், கடவுளின் கருணையின் பார்வை அதனுள் ஒளிந்திருப்பதைக் கண்டுகொள்ள தவறிவிடுகிறோம். கடவுள் நீதியாய் நியாயந்தீர்க்கும் கடவுள் ஆகவே அநீதியான நம்மை அவர் அழித்திடுவார் எனும் எண்ணமே நம்முள் ஓங்கியிருப்பதால் நம்மால் அவரை முழுதும் புரிந்துகொள்ள முடியமல் போய்விடுகிறது.
இவ்விடத்திலேயே நமது கற்பனையையும் நமது ஊன்றிக் கவனிக்கும் திறனையும் நாம் பயன்படுத்தவேண்டும். களிமண் சுடப்படும் வரையில், மறுபடியும் மறுபடியும் பலவித கலவைகளினாலே உருப்பெறும் சாத்தியமுள்ள ஒன்று. உருவாக்கும் குயவன் எப்போதும் களிமண்ணை வீசியெறிவதில்லை மாறாக அவர் அதன் வடிவம் முழுமை பெறும்பொருட்டு அதை இன்னும் மென்மையாக்குகிறார். மென்மையாக்கும்படியாக அதை இன்னும் பிசைகிறார், துவைக்கிறார், அடிக்கிறார், மிதிக்கிறார். இறுதியில் களிமண் ஒரு அழகையும் பயனையும் நிறைக்கும் ஒன்றாக உருவெடுக்கின்றது. இத்துடன் அதை பின் தொடர்ந்துவரும் சோதனை நின்றபாடில்லை. அதை தீச்சூளையிலே வைக்கிறார்கள். தீயினால் சூழப்பட்டு அது இன்னும் வெம்மையிலே அது வெந்துகொண்டிருக்கிறது. தனது கரிய நிறம் மாறி அது சென்னிறமாக மாறுகிறது. உச்சகட்ட ஒரு மாறுதல். அம்மாறுதலுக்குப் பின்பு அதன் அழிவு அத்துணை எளிதானதில்லை. ஆம் இன்றுமட்டும் அகழ்வாய்வுகளில் நம் பெற்ற உடைந்த பானை ஓடுகளே நமது வரலாற்றை வீரியத்துடன் முன்வைத்திருக்கின்றன. ஆதிச்சநல்லூர் ஒரு சிறந்த உதாரணம்.
குயவன் வனைந்து கொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதை திருத்தமாய்ச் செய்யும்படிக்கு , தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறே பாண்டமாய் வனைந்தான் (எரேமியா 18: 4) இக்காட்சி நமக்கு ஒருசில காரியங்களை அறிவுறுத்துகிறது. கடவுளின் விருப்பத்திற்கு மாறாக நாம் உருப்பெற முயலும் தோறும் அவர் நம்மோடு உரையாடிக்கொண்டிருக்கிறார். மனுக்குலம் அவர் விரும்பும் வடிவம் பெறும் மட்டும் அவர் தனது திரிகை முன்னின்று எழும்புவதில்லை எனும் உறுதிப்பாட்டுடன் இருக்கிறார். அதற்காக நமது நெகிழும் குழையும் வளையும் உருப்பெறும் தன்மையை வேண்டி நிற்கிறார்.
“நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்” (மத் 7:1), என்பது நாம் ஒருவரையும் தீர்ப்பிடக்கூடாது என்பதாக நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். பல நேரங்களில் இவ்வார்த்தைகளின் பின் நாமும் ஒளிந்துகொள்ளத்தக்க வசதி இருப்பதினால் தானே. ஆனால் தொடர்ந்து அருள் நாதரின் வார்த்தைகளைக் கவனிப்போமானால் அவர் சொல்ல வருவது தெளிவு பெறும். “ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்” (7.2) என இயேசுவின் மலைப் பொழிவு “தீர்ப்பின்” சமநிலையை எடுத்துக்கூறுகிறது. நமக்கு வேண்டும்போது நியாயத்தை வளைப்பதும் எதிராளிக்கு விரோதமாக சட்டம் பாய்வதும் ஏற்புடையது அல்ல என்பதே இயேசுவின் நடுநிலைப் பார்வையாக நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். எச்சூழலிலும் நேர்மையே நமது மதிப்பீட்டின் அளவுகோலாக இருக்கவேண்டுமே ஒழிய நமது எளிய ஆதாயங்களுக்காக, எளிய புரிதலுக்காக நாம் மாபெரும் உண்மைகளை பலியாக்கிவிடக்கூடது என்பதையே இயேசு உரத்துக் கூறுகிறார்.
தீர்ப்பிடுதல் ஒரு நீதிபதிக்கு உரிய வார்த்தை. அவ்வார்த்தை சார்பு அற்றது. எது சரி எது தவறு என குறிப்பிடும் ஒன்றையே தீர்ப்பிடுதல் எனும் வார்த்தை சுட்டி நிற்கின்றது. எப்பக்கம் நாம் சார்பெடுக்கவேண்டும் எனும் ஒரு தெளிவையே தீர்ப்பு நமக்கு வழங்குகிறது. தீர்ப்பை கவனிக்காதபடி நாமே முடிவு செய்வதோ, நமக்கு வேண்டிய வித்தத்தில் தீர்ப்பு அமையவேண்டும் என்பதோ கடவுளுக்கு எதிரான செயலே. “கட்டுவேன் நாட்டுவேன் என்றும்…”(9) கூறும்போது வசனம் நம்மை மேம்படுத்தவும் ஆசி வழங்கவும் முன்நிற்பது போல, “…இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருப்படுத்தி….” எனும் வசனம் திரும்ப இயலா கோணலான வழிகளைத் தெரிந்துகொண்டு நடப்போரை அழித்தே சீர் செய்யவேண்டும் எனும் நெருக்கடிக்குள் படைத்தவரை உந்துகிற கட்டமாக காண்கிறோம். எனினும் வசனங்கள் 8, 10 கடவுளது தீர்ப்பிடுதல் சூழலுக்கு ஏற்ப மாறுபடும் என்பதையும் இறைவாக்கினர் பதிவு செய்ய மறக்கவில்லை.
ஒருபோதும் குயவன் தான் வனைகின்ற மண்ணோடு கோபம் கொண்டுவிட இயலாது எனும் அடிப்படை உண்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குயவன் அறிவான், தான் உருவாக்கும் பானை அதன் வடிவத்தை எட்டவில்லையென்று சொன்னால் அதனால் எவ்வித பயனும் விளையாது. ஆகவே பயனற்ற ஒன்றை உருவாக்குவதைவிட பயனுள்ள வடிவை களிமண் அடையும்படி அம்மண்ணை மீண்டும் பானையாக உருவாக்கும் சுழற்0சியில் ஈடுபடுத்துகிறார். இது எவ்வகையிலும் அம்மண்ணை அழித்துவிடுவதற்கான செயல் அன்று மாறாக அம்மண் பயனுறும் வகையில் உருபெறவேண்டும் என்ற கரிசனையால் மட்டுமே.
மெதடிஸ்ட் திருச்சபை தனது ஆரம்ப காலங்களில் இவ்விதமான ஒழுங்கைப் பேணி வந்தது. கூடுகையில் வருவோரது வாழ்வில் காணப்படும் தவறுகளை மாற்றும்படியான வாய்ப்பை அளித்தது. தவறு செய்வோர் திருந்தும் வாய்பை அளித்தே அவர்கள் கிருபையில் வளரும்படியாக அது ஊக்குவித்தது. சுயபரிசோதனைக்கான ஒரு அம்சமாக அது அனேகருக்கு தோன்றியதால் திருச்சபை மெய்யறிவில் வளர்ந்தது. “தீர்க்க தரிசனம் இல்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்” என்பதை புரிந்தோராய் அன்பினால் ஒருவரை ஒருவர் தாங்கி வளர்ந்த திருச்சபை இது.
கடவுள் தீர்ப்பிடுகிறார். நாமும் அவரோடு சேர்ந்து முழுமை நோக்கை அடையும்படியாக தீர்ப்பிடுவது சிறந்தது. எனினும் மனிதர்களாகிய நாம் குறையுள்ளவர்களானபடியாலும் தவறிளைக்கக்கூடியவர்களானபடியாலும் நமது தீர்ப்பை நாம் தாழ்மையோடு முன்வைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆனால் கடவுளின் தீர்ப்பு அவ்விதமாக அமையாது. அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளும் திறந்தமனதுடன் இருக்கிறார் என்பதே நாம் மகிழும்படியான நற்செய்தி.
பிலேமோனுடைய அடிமையாக இருந்த ஒநேசிமு அவரிடம் திருடியதால் சிறையில் இருக்கிறார். தனது முதிர்வயதில் பவுலும் தனது ஊழியத்தின் நிமித்தமாக சிறைசெல்லுகின்ற தருணத்தில் ஒநேசிமுவிடம் கேட்டறிந்து அவன் தனது வாழ்வில் திருந்தி வாழ சந்தர்ப்பம் கிடைக்குமா என ஏங்குவதை அறிந்துகொள்ளுகிறார். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டோருக்கு அடிமைத்தன வாழ்விலிருந்து விடுதலை கிடைக்கும் என்பதை உணர்ந்த பவுல், அதற்காகவே இக்கடிதத்தை சிறையிலிருந்து எழுதுகிறார். பயனற்ற களிமண்ணை பயனுள்ள பாத்திரமாக அமைக்கும் இறைவாக்கினரின் உண்மைச் சொற்களில் இருந்து இதை உணர்ந்தவராக பவுல் பிலேமோனுக்கு எழுதுகின்ற கடிதத்தில் ஒருசில காரியங்களை முன்வைக்கிறார்.
ஒநேசிமு என்பதற்கு பயனுள்ள என்பதே அர்த்தம். தனது கிரேக்க ஞானத்தால் அதையே அவர் வார்த்தை விளையாட்டாக பயன்படுத்தி “முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன்”. எனக்கூறி அவனது வாழ்வில் ஒரு புது வடிவம் அவன் எடுப்பதற்காக முயலுகிறார். அடிமையானவனை அடிமையாக மறுபடியும் பிலேமோனிடம் அனுப்பாதபடி அவனை சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்படி தனது கடிதத்தில் மன்றாடுகிறார். மேலும் பவுல் பிலேமோனிடம் வைத்திருந்த நம்பிக்கை அவரது வாழ்வின் நற்சான்று ஆகியவை ஒநேசுமுவின் வாழ்வு மறு வடிவம் பெற காரணமாயிருத்ததைக் கண்டுகொள்ளுகிறோம்.
இப்பின்னணியங்களைக் கொண்டே நாம் இயேசுவின் கூற்றை விளங்கிக்கொள்ள இருக்கிறோம். பயனற்றோர் பயன்பெற வேண்டுமாயின் அவர்கள் மறு ஆக்கம் செய்யப்படவேண்டும். தங்கள் வாழ்வின் மேன்மை என கருதுவனவற்றை அவர்கள் ஒதுக்கிவைத்து விலை செலுத்தவேண்டும் என இயேசு குறிப்பிடுகிறதைக் காண்கிறோம். மூன்று முக்கிய காரியங்களை தனது சீடராக விரும்புவோர் விலையாக செலுத்தவேண்டும் என ஆண்டவர் குறிப்பிடுகிறார். மிகவும் தாழ்மையுடனும் மன்றட்டுடனும் இப்பகுதிகளை நாம் நெருங்குவோமென்றால் கடவுளின் வார்த்தை நம்மை இன்று அவரது சீடர்களாக்கும்.
லூக்கா இயேசுவை பின்தொடரும் ஒரு பெருங் கூட்டத்தை காட்சிப்படுத்துகிறார். அதைத்தொடர்ந்து இயேசு இக்கூட்டத்தைக் கண்டு பிரமிக்காமல் தனக்கான ஒரு சிறு கூட்டமே ஏற்புடையது எனும் கருத்தை முன்மொழிவதை பதிவு செய்கிறார். மனத்திண்மையும் தனது பணியில் எவ்விதமும் சமரசமும் செய்துகொள்ளாத இயேசுவின் வாழ்வே இங்கே முன்மாதிரியாக இருக்கிறது. தனது தாயை விட்டு, தனது சகோதரர்களை விட்டு, தான் பிறந்த வளர்ந்த ஊர்களை விட்டு, அவர் தாம் தேவனுடைய குமாரன் என்னப்படுவதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தம்மைத் தாம் வெறுத்து அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலானர், என அவர் பலவற்றை விட்டு விட்டே தனது பணியைத் தொடருகிறார். இதையே தன்னைப் பின்பற்றி வரவிருக்கும் தமது சீடர்களுக்கு அறிவுரையாக வைக்கிறார். இது கடினமானபடியால் சீடர்களால் அவரின் சிலுவை மட்டும் கூட நிலைநிற்க முடியாது போனது.
இன்று எங்கெங்கு காணினும் சீடத்துவ முகாம்கள் நடைபெறுகிறதைக் கண்டு நாம் பெருமையும் பிரமிப்பும் அடைவோம் எனினும் இயேசுவை பின்தொடர்வதற்கும் அவரின் சீடராவதற்கும் உள்ள வேற்றுமைகள் அளவிட முடியாதவைகள். எவரும் அவரை பின் தொடரலாம், தன்னையே வெறுக்காதவன் அவரின் சீடனாக இயலாது எனும் உண்மையை பெருங்கூட்டமாக நின்று அவரை பின்தொடர எத்தனிக்கும் நம்மைப் பார்த்து அவர் எச்சரிக்கையாக கூறுகிறார்.
யாதொருவன் என்னிடத்தில் வந்து தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் தன் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான்.(26) எவ்விதமான கூற்று இது? நல்ல ஒரு குடும்ப வாழ்வை அவர் நமக்கு ஆசீர்வதித்துக் கொடுத்துவிட்டு இவ்விதமாக கூறுவது எவ்விதத்தில் நியாயம் என எண்ணுகிறோமா? உனக்கடுத்தவனை சினேகித்து உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சினேகியுங்கள், உங்களை சபிக்கிறவர்களை ஆசிர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும், உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். (மத் 5: 43, 44)
தன் சிலுவையை சுமந்து கொண்டு எனக்குப் பின் செல்லாதவன் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான்.(27) ரோமரின் ஆட்சிக்கு கீழாக வாழுகின்ற இஸ்ரவேலருக்கு சிலுவை என்றால் என்னவென்பது தெரியும். அது தண்டனை பெறும் ஒரு கருவி மட்டுமல்ல அவமானமும் நிந்தையும் ஒருங்கிணைந்து பெறும் தண்டனை. அதனை எடுக்கவேண்டும் என இயேசு சொல்லும்போது தாமே, அவர் தனது வாழ்வின் முடிவை ஒத்தே தனது சீடர்களின் வாழ்வும் அமையும் என்பதாக சொல்லிச் செல்லுகிறார். ஒருவகையில் அனைவரும் புரிந்துகொள்ள இயலாத கூற்று. அனைவரும் செல்ல இயலாத கடினப்பாடுகள் நிறைந்த ஒரு பயணம் என்பதாக அவர் கூறுவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்கு சீஷனாயிருக்க மாட்டான் (33) இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனை சினேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைப் பண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியம் செய்ய உங்களால் கூடாது. (மத்தேயு 6:24)
களிமண் தன்னிலே பயன் அற்றதாய் இருப்பதும் அதை வடிவமைப்பவனது செயல், கவனம், திறமை, அனுபவம், கரிசனை, தூரக்காட்சி யாவும் களிமண்ணை பயனுறும் ஒன்றாய் மாற்றுகின்றது என்பதே சாரம். அதற்காக மிதிபடுவதும் சூளையிலே வெந்து தணிவதும் மண்ணின் நெகிழ்வு தன்மையால் மட்டுமே தீர்மானிக்கப்படும். அவ்வித அர்ப்பணிப்பு இன்றி பின்தொடருவோருக்கு நோய்கள் குணமாகலாம், பசி தீரலாம் எனினும் சீடர் எனும் பதவி எட்டாத் தூரமே.
இயேசுவை பின்தொடருகின்ற அனைவரிடமும் அவர் கூறுவது இரண்டு உவமைகளுடன் எடுத்தாளப்பட்டுள்ளது. வீட்டைக்கட்டுகிறவன் தன்னிடம் அதற்குரிய பணம் இருக்கிறதா என எண்ணிக்கொள்ளுவது போல, போர் செல்லுமுன் மன்னன் தனது வீரர்களால் எதிரிகளை மேற்கொள்ள இயலுமா என சிந்தித்து பார்ப்பதுபோல என கூறுவது ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த வார்த்தைகள். திரும்ப இயலா ஒரு உலகுக்குள் நுழையும் முன்பு அதற்கான அர்ப்பணத்தை வினவும் ஒரு முக்கிய கேள்வி. நீங்களும் நானும் இக்கேள்வியை ஒதுக்கிவிடலாம். ஆனால் இக்கேள்வி என்றேனும் நம்முன் வந்து நம்மை நோக்கி நிற்கும். அதற்கு பதில் சொல்ல இயலாவிட்டால் நாமும் பின்செல்லும் திரளாவோமே அன்றி அவரது சீடர் எனும் உன்னத நிலையை அடையவில்லை என்பதே அப்பொருள்.
ஏனோ இயேசுவின் மிக பிரபலமான இறுதி கட்டளை என் மனதில் வந்து போகிறது. “அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.” (மத்தேயு 28:18 – 20)
அப்படியாயின் இன்றைய நமது மிஷனெறி தாகம் நம்மை சீடர்களாக்க அர்ப்பணிக்குமா அல்லது சகல ஜாதிகளையும் சீஷர்களாக்க துரிதப்படுத்துமா? சீஷர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை சீஷர்களாக மறுக்கும் நமக்கு பொருந்துமா? நம்மை வனைவோரிடமே மன்றாடுவோம்.
அருட்திரு. காட்சன் சாமுவேல்
+91 8238 503 712
palmyra_project@yahoo.com
malargodson@gmail.com
08.09.2013 ஞாயிறன்று, மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை அகமதாபாத் (குஜராத்) வழங்கிய செய்தியின் எழுத்து வடிவம்.
குறிச்சொற்கள்: எரேமியா; பிலேமோன்; லூக்கா; பானை; குயவன்; களிமண்; இயேசு; சீடர்கள்; சீடத்துவம்
மறுமொழியொன்றை இடுங்கள்