Archive for நவம்பர், 2013

உயர்ந்த சகேயு

நவம்பர் 6, 2013

உயர்ந்த சகேயு

சகேயு கதை சிறு வயதில் நாம் கேட்டிருப்பதால் சிறுபிள்ளைத்தனமாகவே பல வேளைகளில் நம் அதை புரிந்தும்கொள்ளுகிறோம். என்றாலும் அதனை முன்னிறுத்தும் நோக்கம் பிற எந்த நற்செய்தியாளர்களுக்கும் இல்லாது போனதால் அபூர்வமாக பதிவு செய்யப்பட்ட இச்சம்பவம் நமது ஆழ்ந்த கவனத்தை கோருகிறது. பெரியவர்களுக்கான செய்தி அப்படி என்னதான் இதனுள் இருக்கிறது என்பதை நாம் காண அழைக்கப்படுகிறோம்.

சகேயுவின் குள்ள தோற்றத்தை ஆசிரியர் லூக்கா குறிப்பிடும்போது அது மிகவும் முக்கியமான தகவலாக சொல்லப்படுகிறது. இத்தகவலே அநநிகழ்வின் ஒட்டத்தை நமக்கு தெளிவுபடுத்துகிறது. இயேசுவைக் காணவேண்டும் என விரும்பும் ஒருவன் கண்டிப்பாக அவர் யார் என அறிந்திருப்பான். அவரது அரும் செயல்கள் மத்திரமல்ல அவரது கருணையின் சொற்கள் அவனது காதுகளை எட்டியிருக்கும். அப்படி அவன் கேட்பதற்கு சாத்தியமுள்ள வசனங்கள் அல்லது, அவனது வாழ்வை மாற்ற அவனைத் தூண்டிய வசனங்கள் என நாம் ஒரு பெரிய பட்டியலையே தயாரிக்கலாம்.

“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.” (மத்தேயு 6:33) என நாளைய தினத்தின் கவலையினாலே மனிதன் பல தலைமுறைகளுக்கு சேர்த்து வைக்கும் அவலத்தை இயேசு கண்டித்திருப்பதை அவன் கேள்விப்பட்டிருக்கலாம்.

நித்திய ஜீவனை சுதந்தரிக்கவேண்டும் என விருப்பத்தோடு வந்த ஒரு வாலிபனிடம் இயேசு உன்னிடத்தில் இன்னும் ஒரு குறை உண்டு, உன்னிடத்தில் உள்ளவைகள் யாவற்றைய்ம் விற்று தரித்திரருக்குக் கொடு எனக் கூறவே அவன் அதிக ஐசுவரியம் உள்ளவனானபடியால் மிகவும் துக்கமடைந்தான். அப்பொழுது இயேசு “ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்.” (லூக்கா 18:25) ஒருவேளை இந்த வசனம் அவனைத் திடுக்கிட வைத்திருக்கலாம்

மதியற்ற ஐசுவரியவான் தனது களஞ்சியத்தை இடித்துக் கட்டுவதை குறித்து இயேசு கூறியபின்பு, கடவுளின் கருணையால் மட்டுமே நாம் வாழ்கிறோம் என்பதை அவர் தெளிவு படுத்திவிட்டு, செல்வத்தின் மீது நாம் கொள்ளும் விருப்பத்தால் எவ்விதம் கடவுள் மீது குவிக்கப்படவேண்டிய நமது இருதய சிந்தனைகள் இடம் மாறுகின்றன என்பதை “உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.” லூக்கா 12:34 என்ற உண்மையினை அவன் ஆழ்ந்து தியானித்திருக்கவேண்டும்.

அவர் எழுபத்திரண்டு சீடர்களை அனுப்பும்போது கூறியதையும் அவன் கேட்டிருக்க வாய்ப்பு உண்டு “பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோகவேண்டாம்; ….” லூக்கா 10:4

தனது வாழ்வு பொருள் தேடும் ஒன்றாக இருந்ததினால் இயேசுவின் பொருளாதாரம் சார்ந்த பார்வை அவனை ஆச்சரியப்பட வைத்திருக்கும். இப்பேற்பட்ட ஒரு நபர் இருக்கக்கூடுமோ என அவன் எண்ணி அவரை பார்க்க விரும்பியிருக்கலாம்.

அவனது எண்ணம் இப்படி இருக்கையிலே அவனைக் குறித்த எண்ணம் ஊருக்குள் வேறு விதமாக உலாவிக்கொண்டிருந்தது. அவன் ஒரு பாவியான மனிதன். உரோமர்களுக்காக பணி செய்பவன். அடியாட்களைக் கொண்டு மிரட்டி எந்த சூழலிலும் தயங்காமல் வரி வசூலிப்பவன். (திருமணத்திற்கு என்று சென்றுவிட்டு திரும்பும் வழியில் ஆட்டோவில் பயணம் செய்யும்போது எனது கரத்தில் இருந்த பிரேஸ்லெட், கழுத்தில் இருந்த செயின் இவைகளைப்பார்த்து ஆட்டோ டிரைவர் பயந்து என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள் எனக் கெஞ்சியதை நினைவு கூர்கிறேன்.)

தனக்கு கட்டளையிட்டிருக்கிறவைகளுக்கு அதிகமாகவும் வரி வசூலிக்கும் (லூக்கா 3: 12,13) பணத்தாசைப் பிடித்தவன். ஊரைக் கொள்ளையிட்டு உலையிலே போடுகிறவன் என அவனைக்குறித்த செய்தி ஊருக்குள் பரவியிருந்தது. எச்சில் கையால் காகத்தை விரட்டாதவன் போன்ற பலவிதமான புரிதல்கள் அவனைக்குறித்து மக்கள் மத்திதியில் இருந்தன. இவைகளில் பெரும்பலான கூற்றுகள் உண்மையே. அவன் தனது ஊராரால் அன்னியப்படுத்தப்பட்டவனாக வாழ்த்து வந்தான்.

இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டாயிற்று, அவர் தனது ஊருக்கு வருகிறார் என்பது உறுதியாகிவிட்டது, தனது உயரம் ஒரு தடை மாத்திரமல்ல தனக்கும் தனது மக்களுக்குமான உறவு சரியாய் இல்லாதபடியினால், அவன் வேறு உபாயம் தேடியபோது அவனுக்கு முன்னிருந்த மிக சரியான தீர்வு காட்டத்தி மரத்தில் ஏறுவது. அம்மரத்தில் ஏறுவது எளிது. அதன் உயரம் கிளைகள் யாவும் ஒரு சாதாரண புதர் செடியைவிட சற்றே கூடுதல். அதிலிருந்து இயேசுவைப் பார்ப்பதே ஒரே வழி என எண்ணியபடி அதை தெரிவு செய்கிறான்.

இயேசு அவ்விடத்தில் வந்தவுடன் அவனைப்பார்ப்பதும் அவனது பெயரை சொல்லுவதும் அற்புதமாக நமக்கு விளக்கப்பட்டிருந்தாலும் இயேசு சகேயுவை அடையாளம் கண்டுகொள்ளும் அளவிற்கு அவன் மிக முக்கியமான அரசியல் செல்வாக்குடையவனாக இருந்தான். இயேசுவும் இப்பகுதிகளில் மீண்டும் மீண்டும் பிரயாணம் செய்தபடியால் சகேயுவைக் குறித்து அறிந்துகொள்ளுவதில் அவருக்கு எந்த சிரமமும் இருக்கவில்லை. ஆகவே “இயேசு அவனை அண்ணந்து பார்த்து….” என்றவுடன் நாம் எதோ அவன் பனைமர உயரத்தில் எங்கோ ஒளிந்துகொண்டிருந்தான் எனக் கருதுவதோ, இயேசு தனது ஞானதிருஷ்டியால் அவனது பெயரை அறிந்திருந்தார் எனக் கொள்ளுவதோ சரியல்ல. ஒருவரைக் குறித்து ஒருவர் அறிந்திருந்தனர் ஆனால் இது மட்டும் சந்திக்கவில்லை என்றே எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஆகவேதான் மக்கள் யாவரும், “இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார்”  என முறுமுறுக்க இயேசுவோ அவனோடு உணவருந்தும்படிச் செல்கிறார். மக்கள் அனைவரும் அறிந்த ஒரு உண்மை இயேசுவிற்கு ஞான திருஷ்டியால்தான் தெரியவேண்டுமா என்ன?

வரி வசூலிப்பவன் ஒருவன் தனது பணிகளை விட இயேசுவைக் காணவேண்டும் என அவன் எடுத்த முயற்சியைக் காணும்போது தானே இயேசு அவனது உள்ளக்கிடக்கையை அறிந்துகொள்ளுகிறார். இயேசுவோடு அவன் உரையாடும்படியாக முயற்சிப்பதை அவர் புரிந்துகொள்ளுகிறார். அவனது வீட்டில் தங்குவதால் அவனோடு பேசலாம், அனைத்தும் கொண்டுள்ள அவன் வாழ்வில் இன்னும் ஒரு குறை இருப்பதால் தனது பிரவேசத்தால் அதையும் களையலாம் என்ற எண்ணத்தால் அவன் வீட்டில் தங்குவதற்கு முயற்சியை தனது பங்கிற்கு முன்மொழிகிறார். சகேயு அந்த வாய்ப்பை நழுவ விடவில்லை. அவன் மகிழ்ச்சியோடு இயேசுவை அவனது இல்லத்திற்கு அழைத்துச் செல்லுகிறான்.

ஏனெனில் அதுவே அவனது எண்ணமாயிருந்தது. இயேசுவோடு உரையாடவேண்டும், அவரது சொற்களை தனதாக்கிகொள்ளவேண்டும், தன்னில் அவர் ஒரு மாறுதலை செய்ய தான் உடன்படவேண்டும் என்ற ஏக்கத்துடனேயே அவவரி வசூலிப்பவன் ஒருவன் தனது பணிகளை விட இயேசுவைக் காணவேண்டும் என அவன் எடுத்த முயற்சியைக் காணும்போது தானே இயேசு அவனது உள்ளக்கிடக்கையை அறிந்துகொள்ளுகிறார். இயேசுவோடு அவன் உரையாடும்படியாக முயற்சிப்பதை அவன் புரிந்துகொள்ளுகிறார். அவனது வீட்டில் தங்குவதால் அவனோடு பேசலாம், அனைத்தும் கொண்டுள்ள அவன் வாழ்வில் இன்னும் ஒரு குறை இருப்பதால் தனது பிரவேசத்தால் அதையும் களையலாம் என்ற எண்ணத்தால் அவன் வீட்டில் தங்குவதற்கு முயற்சியை தனது பங்கிற்கு முன்மொழிகிறார்.

சகேயு அந்த வாய்ப்பை நழுவ விடவில்லை. அவன் மகிழ்ச்சியோடு இயேசுவை அவனது இல்லத்திற்கு அழைத்துச் செல்லுகிறான். ஏனெனில் அதுவே அவனது எண்ணமாயிருந்தது. இயேசுவோடு உரையாடவேண்டும், அவரது சொற்களை தனதாக்கிகொள்ளவேண்டும், தன்னில் அவர் ஒரு மாறுதலை செய்ய தான் உடன்படவேண்டும் என்ற ஏக்கத்துடனேயே அவன் அவரை பார்க்க விரும்பினான் என்பதை தெளிவுற புரிந்துகொள்ளுகிறோம்.

சகேயு திடீரென இரண்டு காரியங்களை பிரகடனமாகச் செய்கிறான். இயேசு அவனிடம் எதையும் கேட்குமுன்னாலே அவன் இதைச் செய்வது மிகுந்த ஆச்சரியமளிப்பதாக உள்ளது. முதலாவதாக….என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன் என்கிறான். இக்கூற்று எவ்வகையிலும் கட்டுப்பாடுகள் அற்றது. தனது ஆஸ்தியில் பாதியை எவ்வகையிலும் தனக்கு உறவு இல்லாதவர்களுக்கு கொடுக்க அவன் ஆயத்தமானது மிகப்பெரிய ஆச்சரியம். தனது சொத்தின் சரி பாதியை கொடுத்துவிட்டு அதற்காக எந்த எதிர்பார்ப்புமின்றி அவன் நிற்பது அவனது உயரத்தை உயர்த்திக் காட்டுகிறது.

நான் யாரிடமாவது அனியாயமாய் வாங்கினதுண்டானால் நாலத்தனையாய் திருப்பிச் செலுத்துகிறேன் என்பது மீதமிருக்கும் அவனது சொத்தையும் அவன் இழந்துவிடுவதற்கு ஆயத்தமாக இருக்கிறான் என்பதை காட்டுகிறது. ஆம் தனது சொத்தையே அவன் பலரையும் ஏமாற்றி வஞ்சித்து தானே சேர்த்திருக்கிறான். ஊரே அவனை வெறுக்கிறதே. இச்சூழலில் அவன் தனது மக்களோடு முறிந்துபோன உறவுகள் பெலப்படுவதே பெரிது என்றும், தனது பெருமை தான் வஞ்சகமாக குவித்துள்ள சொத்தில் இல்லை மாறாக, அது தன்னை கடவுளிடம் நெருங்க விடாமல் செய்யும் அபாயம் இருப்பதை உணர்ந்து கொள்ளுகிறான்.

எத்துணை விளக்கியும் சீடர்கள் புரிந்துகொள்ளத் தவறிய உண்மையினை சகேயு கண்டுகொண்டது இயேசுவை பின்வரும் வாக்கியங்களை பேசத் தூண்டியது. இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது. இவனும் ஆபிரகாமுக்கு குமாரனாயிருக்கிறானே. இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார்.

இங்கே இரட்சிப்பு வேறு ஒரு வாசலை நமக்கு திறந்து காண்பிக்கின்றது. இயேசுவின் சொற்களால் தன்னை சுத்தீகரித்துக்கொண்ட ஒரு மனிதன், தான் இயேசுவுக்கு முன்பே தனது சிலுவையை எடுத்துக்கொள்ள ஆயத்தமாகிவிட்டான். அனைத்து மேன்மைகளையும் இழந்து மனுஷ சாயலானவரை அவன் கண்டுகொண்ட தருணம் அது. அவனது சொத்துக்கள் அதற்குப் பின்பு அவனுக்கு சுமைகளே, அவற்றை சுமந்து திரிவது அவனுக்கு அவனே செய்துகொள்ளும் தீங்கு என்பதை அவன் புரிந்துகொள்ளுகிறான். ஆகவே மகிழ்ச்சியோடு அவைகளை அவன் உதறுகிறான்.

இப்படி அவன் உதறும்போது இன்னொரு மாற்றம் எரிகோவில் நடைபெறுகிறது. எரிகோவில் வாழும் ஏழைகள் இவனது உதவியால் தங்களது ஏழ்மையிலிருந்து மாறுகின்றனர். யார் யாருக்கு இவன் அனியாயம் செய்தனோ அவர்களிடத்தில் அவன் மனப்பூர்வமாய் மன்னிப்பு கோருகிறான். அந்த மன்னிப்பு கோருதலை அவன் ஒரு செயலாக வெளிப்படுத்தும்போது, பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வருவதற்கு அவன் தன்னையே விற்று ஆவன செய்கிறான்.

இன்றையதினம் இரட்சிக்கப்பட்டவர்களில் எத்தைனை பேர் தங்கள் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கின்றனர்? தங்கள் சொந்த சகோதர சகோதிரிகளிடமிருந்தே வஞ்சித்து பெற்ற சொத்துக்களால் பகட்டாக திரியும்போது கைவிடப்பட்டோராய் ஏழ்மையில் வாடும் தங்கள் சகோதரர்கள் குறித்த அக்கரையில்லாதவர்கள் எப்படி இரட்சிப்பு அடைந்தோம் என மார்தட்ட இயலும்?

இவனும் ஆபிரகாமுக்கு குமாரனாயிருக்கிறானே என்ற கூற்று, தனது மகனையே பலியிட்டாலும் கடவுள் தனது உடன்படிக்கையை நிறைவேற்றுவார் என்ற விசுவாசம் கொண்ட ஆபிரகாமின் தன்மை சகேயுவில் வெளிப்பட்டதை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

இழந்துபோனது சகேயு மட்டும் அல்ல, சகேயு போன்றவர்களால் தங்கள் வாழ்வை இழந்தவர்களையும் அச்சொல் சுட்டி நிற்பதை விவரிக்கவும் வேண்டுமா? ஆம் மனம் திரும்புதல் நமது வாழ்வில் மட்டுமல்ல நம்மால் பாதிப்படைந்தோரின் வாழ்விலும் குறிப்பிடத்தகுந்த மாறுதல் ஏற்பட நம்மைத் தூண்டவேண்டும். இல்லாவிடில் அது இரட்சிப்பு இல்லை.

அருள்பணி. காட்சன் சாமுவேல்

தொடர்புகொள்ள

+918238503714

palmyra_project@yahoo.com

malargodson@gmail.com

03.11.2013 ஞாயிறன்று, மெதடிஸ்ட் தமிழ் திருச்சபை அகமதாபாத் (குஜராத்) வழங்கிய செய்தியின் எழுத்து வடிவம்.

கடுகளவு விசுவாசம்

நவம்பர் 6, 2013

கடுகளவு விசுவாசம் என்பது இயேசுவால் எடுத்தாளப்பட்ட ஒரு சொல் பிரயோகம். நல்ல ஒரு குரு தனது சீடர்களுக்கு குறைந்த வார்த்தைகளில் பேருண்மைகளை வழங்கிச் செல்வது உலக மரபு. இயேசுவின் சீடர்கள் அவரிடம் வந்து எங்கள் விசுவாசத்தை பெருகும்படிச் செய்யும் என வேண்டும்போது, அதன் பின்னணியத்தை உள்வாங்குவது மிகவும் அவசியம்.

 

யூத மரபினரான இயேசுவின் சீடர்கள் அனைவருமே யூதர்கள் தாம். விசுவாசிகளின் தந்தை எனப்படுவோரை தங்களது தந்தை ஆபிரகாம் என அழைக்கும் அவர்தம் குழந்தைகள், எங்கள் விசுவாசம் பெருகும்படிச் செய்யும் என வேண்டுவது சற்று வேடிக்கை தான். விசுவாசத்தை தனது வாழ்வில் அப்பியாசித்த தங்கள் குருவுடன் இருக்கும்போது, விசுவாசத்தைக் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட வார்தைகளிலிருந்தும் கற்றுக்கொள்ளத் தவறிய உண்மை புலப்படுகிறது.

 

விதை, வித்து, மணி போன்ற வார்த்தைகள் திருமறையில் ஆழ்ந்த அர்த்தங்களுடன் பிரயோகிக்கப்பட்டிருப்பதை நாம் கண்டுகொள்ளலாம். மனிதர்களை ஸ்திரீயின் வித்து என கூறுவதை நாம் அறிவோம்.  மரித்து உயித்தெழுவதற்கு ஒப்பாக கோதுமை மணி சுட்டி நிற்கிறதை அறிகிறோம்

 

(யோவான் 12:24 ) நற்செய்தியைப் பரப்புவது விதைப்பதற்கு உவமையாக கூறப்பட்டுள்ளது லூக்கா (8:1 – 56). விதைகள் தாவரங்கள் ஆகியவை ஒட்டுமொத்தமாக பசியாற்றுகின்றவையாகவும் ஆசீர்வாதமாகவும் குறிப்பிடுகின்றதைக் காண்கிறோம். (ஆதியாகமம் 1:29) இயேசு  கடுகு விதை பரலோக ராஜ்ஜியத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.

 

அளவு கடந்த சான்றுகள் திருமறையில் விரவி கிடக்கும்போது நமது சிந்தனையை ஒருமுகப்படுத்தி இவ்விடத்தில் இயேசு கடுகு விதை மூலம் எதை முன்னிறுத்துகிறார் என அறிந்துகொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.

 

முளைத்தல்: கடுகு விதை முழுமையைக் குறிக்கும் ஒன்றாக சுட்டி நிற்பதைக் காண்கிறோம். கடுகு தன்னளவில் ஒரு சமையல் பயன்பாட்டு பொருளாக இருக்கிறது. ஆனால் அதை விதை எனக்கொள்வோமென்றால் அது உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு காடாக நாம் உருவகப்படுத்த இயலும். அது முளைத்தெழும். தன்னையே உடைத்து வெளிவரும் தன்மைக் கொண்டது. தன் மீது படியும் சேறுகளையும் சகதிகளையும் உதறி, தன் மீது போடப்பட்ட மண்ணையும் ஒதுக்கி பிளந்து வெளிப்படும் வல்லமையுள்ளது.

 

ஒரு சிறிய விதைக்குள் இருக்கும் வீரியமே விசுவாசம் என்னப்படுகிறது. எவ்வித போர் பயிற்சியும் அற்ற தாவீது மிகப்பெரும் பலம் வாய்ந்த கோலியாத்தை எதிர்கொள்ளும் துணிவு கொண்டது இவ்வித விசுவாசத்தால் தான். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது அன்றோ தமிழர் பழமொழி?. ஆக கடுகளவு விசுவாசம் எனும்போது, அளவில் அல்ல வீரியத்திலேயே நமது செயலாற்றுதல் இருக்கவேண்டும் என இயேசு கூறுவதாக நாம் காண்கிறோம்.

 

வளர்தல்: ஒரு விதை முளைப்பதோடு அதன் கடமை தீர்ந்து விடுவதில்லை. விதைக்கிறவன் உவமை எவ்வித நெருக்கங்களும் பாடுகளும் முளைத்த விதைக்கு ஏற்படுத்தும் என்பதற்கு சான்றாக அமைகிறது. அனைத்து சவால்களையுமே சந்திப்பது ஒரு முளைத்த விதைக்கு முன் நிற்கின்றன. எவ்விதம் இவைகளை சமாளிப்பது? தனது முழு பலத்தாலும் எதிர்கொள்ளுவதே சிறந்த வழி.

 

இவ்விதமான ஒரு காட்சியை நீங்கள் வாழ்வில் கண்டிருக்கலாம். குப்பைகளை, சாணங்களை, மலினங்களை உண்டு வளரும் தாவரங்கள் மிகவும் சுகந்தமான வாசனைகளை வீசும் பூக்களாகவும் பயன் மிக்க உணவு பொருள்களையும் நமக்கு கொடுக்கிறதல்லவா? அவ்விதமான ஒரு விசுவாசம். நம்மைப் பகைக்கிறவர்களுக்கும் துன்பப்படுத்துடுகிறவர்களுக்கும் விரோதமாக ஜெபம்பண்ணவும் நன்மை செய்யவும் தூண்டுகின்ற ஒரு விசுவாசத்தையே இயேசு சுட்டிக்காட்டுகிறார். இதை தொடர் வளர்ச்சி எனும் நிலையாக நாம் கொள்ளலாம்.

 

பகிர்தல்: தான் வளர்வதோடு மட்டும் நின்றுவிடாதபடி, தனது வளர்ச்சியில் அனைவருக்கும் பங்களிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என இயேசு உறுதிபட கூறுகிறார். வளர்ந்து விட்டோம் எனும் கூச்சல் இன்று பல இடங்களில் கேட்கிறது. பல தன்மைகளில் அது வெளிப்படுகிறது. இந்தியா ஒளிர்கிறது எனும் கருத்தாக்கம் எவ்விதத்திலும் ஒளிரும் இந்தியாவை முன்னிறுத்தாமல் ஒரு சிலரை மட்டும் முன்நிறுத்தும் அவலத்தை கொண்டுள்ளது.

 

மாறாக வளர்ந்துவிட்ட ஒருவர் எவ்விதம் தன்னை முன்னிறுத்தவேண்டும் என்பதையும் கடுகு விதை உவமை தன்னகத்தே கொண்டுள்ளதை நாம் காண்கிறோம். அது வளர்ந்து கிளை பரப்பி ஆகாயத்துப் பறவைகளும் வந்தமர்ந்து கூடு கட்டுவதற்கு ஏற்ற விதமாக தன்னை மிக பிரம்மாண்டமாக ஆக்கிகொண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. ஆம் பூமிக்கும் வானத்துக்கும் மத்தியில் தன்னை ஒரு இருப்பாக அமர்த்தி அதில் அனேகர் வந்து பயன்பெறும் ஒன்றாக மாற்றுகின்ற ஒரு தன்மையை வெளிப்படுத்துகிறது. அதுவே இயேசு அதை பரலோக ரஜ்ஜியத்திற்கு ஒப்புமை கூற காரணமாயிற்று.

 

(லூக்கா 4: 30 – 32) என்ன ஒரு அரும் செய்தி இது? விண்ணையும் மண்ணையும் இணைக்கும் பரலோக ராஜ்ஜியம். உமது ராஜ்ஜியம் வருவதாக (லூக்கா 11: 2, ) பூமியிலே சமாதானமும் மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக (லூக்கா 2:13,14) எனும் தூதர்களின் வாழ்த்துக்கள் யாவும் இங்கே ஒருங்கே அமைவதாக கடுகு விதை காட்சியளிக்கின்றது.

 

இதைத் தொடர்ந்து வருகின்ற உவமையும் கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டியதே. அடிமை ஒருவன் வயல் வெளியிலிருந்து களைப்புடன் வீடு திரும்புகிறான். தனது எஜாமனன் இருப்பதைக் கண்டு அவனுக்கான உணவை பறிமாறுகிறன். பின்பு அவர் உண்டு பசியாறிய பின்பு அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு தனக்கான உணவை உட்கொள்ளுகிறான். இயேசு இதைச் சொல்லிவிட்டு, நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர் செய்ய வேண்டியதைச் செய்தோம் என சொல்லும்படி நமக்கு கற்பிக்கிறார்.

 

விசுவாசம் குறித்த கேள்வியின் நோக்கம் இப்போது நமக்கு பிடிகிடைக்கிறது. விசுவாசத்தினால் எல்லாம் ஆகும் என்பது இன்று ஒருவர் தன்னை உயர்த்திக் காண்பிக்கும் படியும் மேன்மை பாராட்டும் ஒன்றாகவும் மாறிப்போனது. அவர் ஒரு சிறந்த விசுவாசி என அனேகர் புகழப்படுவதை நாம் கேட்கிறோம். இயேசு இதை முன்னமே அறிந்திருந்தார் அல்லது தமது சீடர்கள் இவ்விதமான ஒரு சிறந்த ஒரு ஒளிவட்டமாக தங்கள் விசுவாசத்தை காண்பிக்க விழைகிறார்கள் என்பதை உணர்ந்து இவ்விதம் கூறுகிறார்.

 

விசுவாசம் என்பது சேமிப்பு போன்றது அல்ல என்பதை இயேசு அறிவுறுத்துகிறார்.

விசுவாசம் என்பது ஓயாத செயல்பாடு என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார்.

விசுவாசம் என்பது அனைவரையும் அணைத்துக்கொள்ளும் விரிந்த தளம் என்பதை காட்சிப்படுத்துகிறார்.

 

நமது விசுவாசம் எத்தகையது.?

 

அருள்பணி. காட்சன் சாமுவேல்

 

தொடர்புகொள்ள

+918238503714

palmyra_project@yahoo.com

malargodson@gmail.com

(மெதடிஸ்ட் திருச்சபை மணிநகர் (குஜராத்) 06.10.2013 அன்று மாலை 6 மணிக்கு, தூய நற்கருணை ஆராதனையில் வழங்கிய ஆங்கில செய்தியின் தமிழ் வடிவம்.)


%d bloggers like this: