கடுகளவு விசுவாசம்


கடுகளவு விசுவாசம் என்பது இயேசுவால் எடுத்தாளப்பட்ட ஒரு சொல் பிரயோகம். நல்ல ஒரு குரு தனது சீடர்களுக்கு குறைந்த வார்த்தைகளில் பேருண்மைகளை வழங்கிச் செல்வது உலக மரபு. இயேசுவின் சீடர்கள் அவரிடம் வந்து எங்கள் விசுவாசத்தை பெருகும்படிச் செய்யும் என வேண்டும்போது, அதன் பின்னணியத்தை உள்வாங்குவது மிகவும் அவசியம்.

 

யூத மரபினரான இயேசுவின் சீடர்கள் அனைவருமே யூதர்கள் தாம். விசுவாசிகளின் தந்தை எனப்படுவோரை தங்களது தந்தை ஆபிரகாம் என அழைக்கும் அவர்தம் குழந்தைகள், எங்கள் விசுவாசம் பெருகும்படிச் செய்யும் என வேண்டுவது சற்று வேடிக்கை தான். விசுவாசத்தை தனது வாழ்வில் அப்பியாசித்த தங்கள் குருவுடன் இருக்கும்போது, விசுவாசத்தைக் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட வார்தைகளிலிருந்தும் கற்றுக்கொள்ளத் தவறிய உண்மை புலப்படுகிறது.

 

விதை, வித்து, மணி போன்ற வார்த்தைகள் திருமறையில் ஆழ்ந்த அர்த்தங்களுடன் பிரயோகிக்கப்பட்டிருப்பதை நாம் கண்டுகொள்ளலாம். மனிதர்களை ஸ்திரீயின் வித்து என கூறுவதை நாம் அறிவோம்.  மரித்து உயித்தெழுவதற்கு ஒப்பாக கோதுமை மணி சுட்டி நிற்கிறதை அறிகிறோம்

 

(யோவான் 12:24 ) நற்செய்தியைப் பரப்புவது விதைப்பதற்கு உவமையாக கூறப்பட்டுள்ளது லூக்கா (8:1 – 56). விதைகள் தாவரங்கள் ஆகியவை ஒட்டுமொத்தமாக பசியாற்றுகின்றவையாகவும் ஆசீர்வாதமாகவும் குறிப்பிடுகின்றதைக் காண்கிறோம். (ஆதியாகமம் 1:29) இயேசு  கடுகு விதை பரலோக ராஜ்ஜியத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம்.

 

அளவு கடந்த சான்றுகள் திருமறையில் விரவி கிடக்கும்போது நமது சிந்தனையை ஒருமுகப்படுத்தி இவ்விடத்தில் இயேசு கடுகு விதை மூலம் எதை முன்னிறுத்துகிறார் என அறிந்துகொள்ள நாம் அழைக்கப்படுகிறோம்.

 

முளைத்தல்: கடுகு விதை முழுமையைக் குறிக்கும் ஒன்றாக சுட்டி நிற்பதைக் காண்கிறோம். கடுகு தன்னளவில் ஒரு சமையல் பயன்பாட்டு பொருளாக இருக்கிறது. ஆனால் அதை விதை எனக்கொள்வோமென்றால் அது உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு காடாக நாம் உருவகப்படுத்த இயலும். அது முளைத்தெழும். தன்னையே உடைத்து வெளிவரும் தன்மைக் கொண்டது. தன் மீது படியும் சேறுகளையும் சகதிகளையும் உதறி, தன் மீது போடப்பட்ட மண்ணையும் ஒதுக்கி பிளந்து வெளிப்படும் வல்லமையுள்ளது.

 

ஒரு சிறிய விதைக்குள் இருக்கும் வீரியமே விசுவாசம் என்னப்படுகிறது. எவ்வித போர் பயிற்சியும் அற்ற தாவீது மிகப்பெரும் பலம் வாய்ந்த கோலியாத்தை எதிர்கொள்ளும் துணிவு கொண்டது இவ்வித விசுவாசத்தால் தான். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது அன்றோ தமிழர் பழமொழி?. ஆக கடுகளவு விசுவாசம் எனும்போது, அளவில் அல்ல வீரியத்திலேயே நமது செயலாற்றுதல் இருக்கவேண்டும் என இயேசு கூறுவதாக நாம் காண்கிறோம்.

 

வளர்தல்: ஒரு விதை முளைப்பதோடு அதன் கடமை தீர்ந்து விடுவதில்லை. விதைக்கிறவன் உவமை எவ்வித நெருக்கங்களும் பாடுகளும் முளைத்த விதைக்கு ஏற்படுத்தும் என்பதற்கு சான்றாக அமைகிறது. அனைத்து சவால்களையுமே சந்திப்பது ஒரு முளைத்த விதைக்கு முன் நிற்கின்றன. எவ்விதம் இவைகளை சமாளிப்பது? தனது முழு பலத்தாலும் எதிர்கொள்ளுவதே சிறந்த வழி.

 

இவ்விதமான ஒரு காட்சியை நீங்கள் வாழ்வில் கண்டிருக்கலாம். குப்பைகளை, சாணங்களை, மலினங்களை உண்டு வளரும் தாவரங்கள் மிகவும் சுகந்தமான வாசனைகளை வீசும் பூக்களாகவும் பயன் மிக்க உணவு பொருள்களையும் நமக்கு கொடுக்கிறதல்லவா? அவ்விதமான ஒரு விசுவாசம். நம்மைப் பகைக்கிறவர்களுக்கும் துன்பப்படுத்துடுகிறவர்களுக்கும் விரோதமாக ஜெபம்பண்ணவும் நன்மை செய்யவும் தூண்டுகின்ற ஒரு விசுவாசத்தையே இயேசு சுட்டிக்காட்டுகிறார். இதை தொடர் வளர்ச்சி எனும் நிலையாக நாம் கொள்ளலாம்.

 

பகிர்தல்: தான் வளர்வதோடு மட்டும் நின்றுவிடாதபடி, தனது வளர்ச்சியில் அனைவருக்கும் பங்களிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என இயேசு உறுதிபட கூறுகிறார். வளர்ந்து விட்டோம் எனும் கூச்சல் இன்று பல இடங்களில் கேட்கிறது. பல தன்மைகளில் அது வெளிப்படுகிறது. இந்தியா ஒளிர்கிறது எனும் கருத்தாக்கம் எவ்விதத்திலும் ஒளிரும் இந்தியாவை முன்னிறுத்தாமல் ஒரு சிலரை மட்டும் முன்நிறுத்தும் அவலத்தை கொண்டுள்ளது.

 

மாறாக வளர்ந்துவிட்ட ஒருவர் எவ்விதம் தன்னை முன்னிறுத்தவேண்டும் என்பதையும் கடுகு விதை உவமை தன்னகத்தே கொண்டுள்ளதை நாம் காண்கிறோம். அது வளர்ந்து கிளை பரப்பி ஆகாயத்துப் பறவைகளும் வந்தமர்ந்து கூடு கட்டுவதற்கு ஏற்ற விதமாக தன்னை மிக பிரம்மாண்டமாக ஆக்கிகொண்டுள்ளதை வெளிப்படுத்துகிறது. ஆம் பூமிக்கும் வானத்துக்கும் மத்தியில் தன்னை ஒரு இருப்பாக அமர்த்தி அதில் அனேகர் வந்து பயன்பெறும் ஒன்றாக மாற்றுகின்ற ஒரு தன்மையை வெளிப்படுத்துகிறது. அதுவே இயேசு அதை பரலோக ரஜ்ஜியத்திற்கு ஒப்புமை கூற காரணமாயிற்று.

 

(லூக்கா 4: 30 – 32) என்ன ஒரு அரும் செய்தி இது? விண்ணையும் மண்ணையும் இணைக்கும் பரலோக ராஜ்ஜியம். உமது ராஜ்ஜியம் வருவதாக (லூக்கா 11: 2, ) பூமியிலே சமாதானமும் மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக (லூக்கா 2:13,14) எனும் தூதர்களின் வாழ்த்துக்கள் யாவும் இங்கே ஒருங்கே அமைவதாக கடுகு விதை காட்சியளிக்கின்றது.

 

இதைத் தொடர்ந்து வருகின்ற உவமையும் கூர்ந்து அவதானிக்கப்பட வேண்டியதே. அடிமை ஒருவன் வயல் வெளியிலிருந்து களைப்புடன் வீடு திரும்புகிறான். தனது எஜாமனன் இருப்பதைக் கண்டு அவனுக்கான உணவை பறிமாறுகிறன். பின்பு அவர் உண்டு பசியாறிய பின்பு அனைத்தையும் சுத்தம் செய்துவிட்டு தனக்கான உணவை உட்கொள்ளுகிறான். இயேசு இதைச் சொல்லிவிட்டு, நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர் செய்ய வேண்டியதைச் செய்தோம் என சொல்லும்படி நமக்கு கற்பிக்கிறார்.

 

விசுவாசம் குறித்த கேள்வியின் நோக்கம் இப்போது நமக்கு பிடிகிடைக்கிறது. விசுவாசத்தினால் எல்லாம் ஆகும் என்பது இன்று ஒருவர் தன்னை உயர்த்திக் காண்பிக்கும் படியும் மேன்மை பாராட்டும் ஒன்றாகவும் மாறிப்போனது. அவர் ஒரு சிறந்த விசுவாசி என அனேகர் புகழப்படுவதை நாம் கேட்கிறோம். இயேசு இதை முன்னமே அறிந்திருந்தார் அல்லது தமது சீடர்கள் இவ்விதமான ஒரு சிறந்த ஒரு ஒளிவட்டமாக தங்கள் விசுவாசத்தை காண்பிக்க விழைகிறார்கள் என்பதை உணர்ந்து இவ்விதம் கூறுகிறார்.

 

விசுவாசம் என்பது சேமிப்பு போன்றது அல்ல என்பதை இயேசு அறிவுறுத்துகிறார்.

விசுவாசம் என்பது ஓயாத செயல்பாடு என்பதை அவர் தெளிவுபடுத்துகிறார்.

விசுவாசம் என்பது அனைவரையும் அணைத்துக்கொள்ளும் விரிந்த தளம் என்பதை காட்சிப்படுத்துகிறார்.

 

நமது விசுவாசம் எத்தகையது.?

 

அருள்பணி. காட்சன் சாமுவேல்

 

தொடர்புகொள்ள

+918238503714

palmyra_project@yahoo.com

malargodson@gmail.com

(மெதடிஸ்ட் திருச்சபை மணிநகர் (குஜராத்) 06.10.2013 அன்று மாலை 6 மணிக்கு, தூய நற்கருணை ஆராதனையில் வழங்கிய ஆங்கில செய்தியின் தமிழ் வடிவம்.)

Advertisements

குறிச்சொற்கள்: , , , , , , , , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: