Archive for நவம்பர், 2015

தாயும் குஞ்சுகளும்

நவம்பர் 20, 2015

மனித வாழ்வில் இழப்புகள் இன்றியமையாதது…எனினும் வாழ்வில் இழப்புகளை எதிர்கொள்வது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. இஸ்ரவேலர் தமது வாழ்வில் பலவித இழப்புகளை அனுபவித்தவர்கள். அடிமைத்தனம் எனும் கீழ்மட்ட நிலையிலும் வாழ்ந்தவர்கள். கடவுள் அவர்களை உயர்த்தினார் என்பது அவர்கள் வாழ்வில் கற்றுணர்ந்த பாடம். அதனை அவர்கள் ஒருசில குறியீடுகள் வழியாக பொருத்திப் பார்க்க தலைப்பட்டனர். அந்த நம்பிக்கையை திருமறையில் விரவி வைத்திருக்கின்றனர்.

 

தாயும் குஞ்சுகளும் எனும் ஒப்புமை கடவுளும் அவர் மக்களும் என இஸ்ரவேலருக்கு பொருள் பட்டதாக நாம் திருமறையில் வாசிக்கிறோம். காட்டில் ஒருமுறை தீ பற்றியெறிந்தபோது தாய் பறவை ஒன்று தனது குஞ்சுகளை காக்கும்படியாய்த் தனது உயிரை பணயம் வைத்ததாக செல்லும் ஒரு கதையை நான் சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன்.  தனது உயிரை மாய்த்து குஞ்சுகளை வாழ்விக்கும் மாயம் தான் என்ன? அவ்விதம் செய்யும் ஒரு தன்னிகரற்ற தியாக வாழ்வினை எவ்விதம் அந்த குஞ்சுகள் தங்கள் வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும்?

 

குஞ்சுகள் பிறக்கும்போதே பசியுடன் பிறக்கின்றன. அன்னையால் அமுதூட்டப்பட்டு, அன்னையின் பராமரிப்பில் வளர்கின்றன. அமுது வாழ்வின் அங்கம் எனும்போது அதை சேர்க்கும் முயற்சி இன்றியமையாதது எனும் பாடத்தைக் கற்றுக்கொள்ளுகின்றன. அவ்விதமான ஒரு இடைவிடா முயற்சியே ஒரு குடும்பத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதையும் அவை அறிந்துகொள்ளுகின்றன. கடவுளின் அரும் பராமரிப்பில் தாம் நாம் இருக்கிறோம் என்பதை பல திருமறைப்பகுதிகள் இவ்வண்ணம் வெளிப்படுத்துகின்றன.

 

ஆகாயத்துப் பறவைகளை கவனித்துப்பாருங்கள் (மத் 6: 26),அவர் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரம் கொடுக்கிறார் (சங்கீதம் 147: 30) பசியோடிருந்த எலியாவை காகங்களை கொண்டு போஷித்தார், தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார். 26. ஆகாசத்திலே கீழ்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து, 27. மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலத்தனையாயும் வருஷிக்கப்பண்ணி, 28. அவைகளை அவர்கள் பாளயத்தின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கப்பண்ணினார். 29. அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார்.(சங்கீதம் 78) இவையனைத்தும் கடவுள் தனது பிள்ளைகளை திருப்தியாக்கும் விதமாக செயல்படுவதை திருமறை விளக்குகின்றது.

 

 

“என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.. உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சங்கீதம் 83: 3, 4)”  ஒவ்வொருவிதமான பறவைகளும் தனித்தன்மைக் கொண்டவை, அழகு

நிறை ந்தவை, வீரம் கொண்டவை, தூது செல்பவை, பேசுகின்றவை, இரவில் துடிப்புடன் இருப்பவை, என வரிசைப்படுத்தும்போது பாடுகின்ற பறவியினங்களையும் நாம் ஒரு வகைமையாக கொள்ளலாம்.

தகைவிலான் குருவிகள்  தொடர்ந்து ஒலிஎழுப்பக்கூடிய வகையைச் சார்ந்தது. ஆலயத்தில் அவைகள் எழுப்பும் சத்தத்தை சங்கீதக்காரன் கேட்கிறான். அவைகள் ஆன்டவரை துதித்துகொண்டிருக்கின்றன எனும் எண்ணமாக அதை பதிவிடுகிறார். ஆலயத்தின் பாதுகாவல் மற்றும் தாய் பறவை அளிக்கும் பாதுகாவல் மிக்க அமைதியான கூடுகள் என அர்த்தங்கள்  உறுதியுடன் தொனிப்பதை உணர்வுபூர்வமாக நம்மால் அறியமுடிகிறது.

 

கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.(மத்தேயு 23: 37). தாய்க் கோழி தனது குஞ்சுகளை ஆபத்திலிருந்து காக்கும்படியாய்  தனது குஞ்சுகள் அருகில் வந்து நிற்கும்படியாய் அழைப்பு விடுக்கிறது. குஞ்சுகள் எதிர்கொள்ளும் ஆபத்திலிருந்து காக்கும்படியாய், தனது இறக்கைகளை விரித்தபடி அருகிருக்கிறது. ஆபத்து கிட்டி வரும்போது தனது இறக்கைகளை அது விரித்து தனக்குள் தன் குஞ்சுகளை ஒன்றிணைத்துக்கொள்ளுகின்றது. ஆபத்து குறித்த உணர்வை ஊட்டி பாதுகாவல் அரணை அவைகளுக்கு அளிக்கின்றது.

 

“கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறது போல, கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை (உபா 31:11,12) ஆண்டவரின் வழி நடத்துலலில் நாம் எப்போதும் பயிற்சிபெறுகிறவர்களாக இருக்கிறோம். நாம் ஒருபோதும் கைவிட பாட்டவர்களல்ல மாறாக நமது இறக்கைகளை விரிக்க அவர் அளிக்கும் பயிற்சிகளே அவை. கழுகு தனது குஞ்சியை பயிற்றுவிக்கும்பொழுது, குஞ்சி அதுவரை வாழ்ந்த தனது வசிப்பிடமான தனது வீட்டிலிருந்து தூக்கிஎறியப்படுகிறது. தூக்கி வீசப்படுதல், ஒரு பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் தருணம். இதுமட்டும் பயன்படுத்தாத்த இளம் குருத்து சிறகுகளை பறக்க வைக்கும் முயற்சி. உயரமான கூட்டிலிருந்து விழுந்தால் உயிர் மிஞ்சாது. மிகவும் பிரயத்தனப்பட்டே சிறகுகளை அடித்து பழகவேண்டும். ஆகவே அது வரைக்கும் தனது வீட்டில் சுகமாய் வாழ்ந்த கழுகு குஞ்சுக்கு வீசப்படுதல் ஒரு பெரியஒரு அதிர்ச்சியே. பயத்துடன் அது தனது சிறகுகளை விரிக்க முயலுகிறது. ஆனால் அது  வீழும் தோறும் தாய் அதை தனது செட்டைகளை விரித்து தாங்கி தொய்வுறாமல் பயிற்சியளிக்கின்றது.

 

 

உணவு உறைவிடம் பாதுகாவல் வாழ்வியல் பயிற்சி போன்றவை கடவுளின் வாயிலாக வருபவை. அவை தாய்மையின் வடிவில் வந்து எட்டியதை நாம் திருமறை வழியாக கண்டோம். ஆகவே அது மேலும் ஒரு குறியீடு வழியாக நம்மை முன்னடத்துகின்றது. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் (ஏசாயா 40: 31)

அருட்பணி. காட்சன் சாமுவேல்

20.11.2015

 

(காலம் சென்ற (17.11.2015) திருமதி ஷாந்தி செல்லப்பன் அவர்களின் துக்க நிவிர்த்தி கூட்டத்தில் பகிரும்படியாய் தயாரிக்கப்பட்ட வரைவு.)

 

 

 

 


%d bloggers like this: