சிறகுகள் முகநூல் விவாதத்தில் கடவுளின் பாலினம் குறித்த கேள்விகள், சில உறுதியான முடிவுகள் மற்றும் பலதரப்பட்ட கருத்துக்கள் பகிரப்பட்டதால் எனது பங்களிப்பையும் புரிதலையும் பதிவு செய்ய விரும்புகிறேன். இறையியல் கற்ற போதகர்கள் மீது ஐயம் நிறைந்த சூழலில், நேர்மையோடு எனது கருத்தை பதிவுசெய்வது எனது கடமையாக உணருகிறேன்.
திருமறை மட்டும் என்ன சொல்லுகிறது அதை மட்டும் கேட்க விழைகிறோம் என பேசுவோர் தங்களைத் தாங்களே சற்று பரிசோதித்துக்கொள்ளுவது நல்லது. நாமோ நமது கலாச்சாரமோ அவ்விதம் திருமறை சார்ந்து ஒரு முழுமையான வாழ்வு வாழ ஒப்பாது. திருமறையின் சாரம் என நாம் பெற்றுக்கொண்ட பல்வேறு இறையியல்களும் காலம் சார்ந்து தேவை சார்ந்து திருமறையின் ஒரு சில பகுதிகள் சார்ந்து கட்டமைக்கப்பட்டவைகள் என்பதையும் நாம் மறந்துவிட கூடாது.
மோசே, சாலோமோன் மற்றும் தூய பவுல் அடிகளார் யாவரும் பல்வேறு படிநிலைகளில் கற்றவர்களே. அனேக நூல்கள் அவர்களின் சிந்தனைக்கு உரமிட்டு அவர்களது பதிவுகளில் வெளிப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். தமிழகத்தில் பணியாற்றிய மிஷனரிகளில் நமது நினைவில் நீண்டு நிற்போர் பலரும் இலக்கிய பங்களிப்பாற்றியவர்களே. ஆகவே நான் எதையும் வாசிக்கமாட்டேன், என்னைச் சார்ந்து நிகழும் எதையும் நான் கவனிக்கவேண்டிய பொறுப்புடையவன் அல்ல எனும் போங்கு லேவியனு ஆசாரியனும் கொண்ட விரைவு நடைக்கு ஒப்பானது.
பரிசுத்த வேதாகமத்தை வாசிக்கும் திருச்சபையினர் “தேவன்” எனும் சொல் மிகவும் உன்னதமான ஒன்று எனவும், அதை ஒரு விக்கிரமாக பாவிக்கும் அளவுக்கு அதற்கு அதீத முக்கியத்துவம் கொடுப்பதும் நிதர்சனம். இவ்வார்த்தையை கடவுள் என மாற்றியமைத்த திருவிவிலியம் எவ்வகையிலும் திருச்சபையால் கவனிக்கப்படாமல், கிறிஸ்தவர்களின் ஆழ்மனம் துலக்கப்படாமல், பழமைவாதத்தை பிடித்துக்கொள்ளும் போங்கு காணப்படுகிறது. அதுவே உண்மையான பக்தி எனவும் போதிக்கப்படுகிறது. தேவன் எனும் சொல் எவ்விதம் உருபெற்றது என்பதை நாம் அறிய கடமைப்பட்டுள்ளோம்
முதலாவதாக தேவன் எனும் சொல் “ன்” விகுதியில் முடிவதால் அது ஆண்பாலைக் குறிக்கிறது. கடவுள் பாலினத்திற்கு அப்பாற்பட்டவர் எனும் கருத்திற்கு இது எதிராகிறது. இரண்டாவதாக தேவன் எனும் சொல்லிற்கு தேவி எனும் பெண்பால் சொல் புழக்கத்திலிருக்கும் பட்சத்தில் இவ்வார்த்தை இன்னும் ஆபத்தான ஒன்றாக காணப்படுகிறது. ஆகவே அனைத்தையும் கடந்து உள்ளவர் எனும் கருத்தாக்கம் கொண்ட கட+வுள் எனும் வார்த்தை பயன்படுத்தப்படலாயிற்று.
கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு எனும் நூல் 1966 ஆம் ஆண்டு, சீகன்பால்கு அவர்களின் வேத திருப்புதல் வெளியிட்டு 250 வருடம் நிறைவடைவதையொட்டி இலைங்கையைச் சார்ந்த பேராயர் குலேந்திரன் என்பவர்களால் எழுதி CLS அச்சகத்தத்தாரால் வெளியிடப்பட்டது. அதில் அவர் ” நமது வேதம் எழுதப்பட்ட மூல பாஷைகளில் கடவுளைக் குறிக்க உபயோக்கிப்பட்டுள்ள பதங்கள் தமிழில் வேதம் திருப்பப்படத் தொடங்கிய காலந்தொட்டு, 250 வருடங்களாய் அபிப்பிராய பேதம் இருந்து வருகிறது” (58). இது நமக்காக பாடுபட்டு மொழிபெயர்த்த நமது மொழியச்சாராத பல்வேறு நாட்டைச்சார்ந்த மிஷனரிகள் கடந்து வந்த பாதை என்பதை நாம் மறந்துவிட கூடாது. ஏன் இத்தனை அபிப்பிராய பேதம்? மேலும் “யெகோவா” எனும் வார்த்தை அதோனாய் என உச்சரிக்கபட்டதேயன்றி கி.பி 1518க்கு முன் எவராலும் பயன்படுத்தப்படவில்லை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.(58)
இவ்விதம் பல்வேறு படிகளில் தாம் நாம் “கடவுள்” எனும் பதத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.
இயேசு சங்க குருமார் கிபி 16ஆம் நூற்றாண்டில் தம்பிரான் எனும் பதத்தையும், 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சீகன்பால்கு அவர்கள் வந்தபோது கத்தோலிக்கத் திருச்சபையினர் “சருவேசுவரன்” என்ற சொல்லை உபயோகிக்க தொடங்கியிருந்தனர். சீகன்பால்கு தமது முதல் பதிப்பில் இவற்றுக்குப் பதிலாக “பராபரன்” எனு பதத்தை பயன் படுத்தினார். மேலும் இந்திய தமிழ் திருப்புதலுக்குக்கும் யாழ்பாண தமிழ் திருப்புதலுக்கும் பல்வேறு பேதங்கள் எழுந்தன் என்பதை நாம் காண்கிறோம். “தேவன்” எனும் கடவுளைக் குறிக்கும் பதம் யாழ்பாண மொழிபெயர்ப்பில் தான் முதன் முதலில் “புகுத்தப்பட்டது” என பதிவு செய்கிறார். இத்திருப்புதல் செய்த கனம் பெர்சிவல் அவர்களுக்கு ஆறுமுக நாவலர் உறுதுணையாயிருந்தார் என்பது இங்கே அடிக்கோடிடவேண்டிய உண்மை.
” திருநாவுக்கரசு நாயனார் தேவாரங்களில் உதாரணங்களைக் காணலாம். ‘தேவாதி தேவன் சிவன் என் சிந்தை சேர்ந்திருந்தான்’, மாணிக்கவாசகர் “தேவதேவன்” எனும் பதத்தை “திருவாசகத்தில்” உபயோகிக்கிறார்”. (132,133). ஆகவே இச்சொல் வன்மமாய் ஆறுமுக நாவலரால் புகுத்தப்பட்ட ஒரு சொல் எனும் குற்றச்சாட்டு இருந்தாலும் குலேந்திரன் அவற்றை மென்மையாக மறுக்கிறார். “தியோஸ்” எனும் கிரேக்க பதமும் “தேவா” எனும் சமஸ்கிருத பதமும் இதே மூலத்திலிருந்து பிறந்தவை; ஒரே கருத்துடையவை.(134)
“1927 ஆம் வருடம் பிப்பிரவரி மாதம் 9 ஆம் தேதி லண்டனில் நடந்த கூட்டத்தில் புதிய திருப்புதலில் “தேவன்” எனும் பதத்தை விட்டு “கடவுள்” எனும் பதம் உபயோகிக்கப்படுகிறதேன் என்பதைச் சென்னைச் சங்கத்தாரின் கடிதம் சுட்டிக்காட்டியது:-
- லுத்தரன் சபையார் “தேவன்” எனும் பதத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை; “பராபரன்” என்னும் பதத்தையே அவர்கள் உபயோகித்து வந்தனர். “கடவுள்” எனும் பதத்தை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
- “தேவன்” எனும் சொல் சரியான மொழிபெயர்பல்ல. அது “தியோஸ்” என்கிற கிரேக்க மூலபதத்தை தமிழில் எழுதுவதாகும்.
- “கடவுள்” என்பதன் கருத்து “நல்லவர்”; இது சுத்த தமிழ்ச் சொல். “தேவன்” என்னும் பதம் எல்லா இந்திய மொழிகளுக்கும் பொதுவாயிருக்க, “கடவுள் என்பது தமிழில் மாத்திரம் உள்ளது. (200,201)
கிட்டத்தட்ட 9 மொழிபெயர்புகள், 4 நூற்றாண்டுகள், பல்வேறு நட்டினரின் பொருளுதவி, அரிய உழைப்பு, நாம் நமக்கான தனித்துவ அடையாளம் பெறும்படி போராடியிருக்கின்றனர் என்பதை நாம் நினைவில் கொள்வது நல்லது. எனக்கு இது பிடிக்கும் ஆகவே வேறொன்றையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் எனும் சிறுபிள்ளையின் அடம்பிடிக்கும் முறைகள் நம்மை படைத்தவருடைய விரிவான பார்வக்கு எதிரானது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
திருக்குறள் ஏன் மொழிபெயர்க்கப்படவில்லை என்பதை கேட்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. அது நமது மொழி. பல்வேறு மொழிகளில் அது மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. நமக்கு அது “உரை” செய்து கொடுக்கப்பட்டலொழிய புரியாதபடி நமது தற்கால மொழி மாறிவிட்டது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகின்ற எல்லாவற்றையும் உபயோகின்ற காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் கருத்தியலின்படி நமது தேசத்திற்கு, நமது சமூகத்திற்கு அவை பயனளிக்குமா? எனும் கேள்விக்கு பதில் பெற்ற பின்னரே அவைகளை நாம் பயன்படுத்துகிறோம். மேற்கத்திய பெண்ணியவாதிகளை பின்பற்றி திருச்சபை இன்று செல்கிறதா என்பதே பிராதானமான கேள்வி மற்றும் பூடகமாக மறைந்திருக்கும் குற்றச்சாட்டு. ஆம் அவ்வித ஒரு கருத்தை நான் மறுக்கப்போவது இல்லை ஆனால் திருச்சபை, தன்னில் சரிபாதியான பெண்களை அடையாளம் காண மறுக்கின்ற நிலை மிகவும் அபாயகரமானது. இயேசுவின் ஊழியங்களில் குறிப்பிடப்படும் பெண்களின் எண்ணிகை, பவுல் தனது ஊழியத்தில் குறிப்பிடும் பெண்களின் எண்ணிக்கையோடு இன்றைய திருச்சபையின் பெண்களின் பங்களிப்பைப் எண்ணிப்பார்பது நலம். குருத்துவமா? கூடாது! சபை கமிற்றியா ஏழுபேரில் ஒருவர் என வகுத்துக்கொண்டோம். 7 பெண்கள் மட்டுமே கமிற்றியை நிர்வகிக்கிற ஒரு தமிழ்நாட்டு திருச்சபையைச் சொல்லலாமே? மனமுவந்து நாம் எந்த மாற்றத்திற்கு வித்திட மாட்டோம் ஆனால் திருமறையை நமது வசதிக்காக பழமைவாதத்திற்காக உயர்த்திப்பிடிப்பது எத்துணை கீழ்மை.
முதலாவதாக தந்தை தாய் எனும் சொற்கள் உறவு சார்ந்தவை என நாம் புரிந்துகொள்ளவேண்டும். திருநங்கை எனும் வார்த்தை பாலினம் சார்ந்தது. ஆண்/பெண்/ மூன்றாம்பலினர் (திருநங்கை) என்றே வரிசப்படுத்தியிருக்கவேண்டும். இதற்குப் பதிலாக தாய் தந்தை மற்றும் குழந்தை எனவும் வரிசைப்படுதியிருக்கலாம். ஏனென்றால் நாம் நமது குழந்தைகளைவிட இன்று கடவுளையே அதிகம் பாதுகாக்க விழைகிறோம். கடவுள் இவைகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதை புரியாமல்.
இன்று ஏன் நமது புரிதலில் மாற்றங்கள் கோரப்படுகிறது என்பதை சற்றேனும் சிந்தித்து பார்த்திருக்கிறோமா? நம்மை சுற்றிலும் உள்ளவர்களுக்கு நாம் நற்செய்தி அளிப்பதே நமது தலையாய கடமை. அதை அவரவர் புரியும் மொழிகளில் வழங்குவதே சிறந்தது எனும் கருத்து நிலைபெற்றிருக்கும்போது மொழியின் நுட்பங்களை உள்ளிளுத்து நமது இறையியலை விரிவாக்கிக்கொள்ளுவதே நமது கடமை. இல்லையேல் இத்துணை வசதிகள் இருந்தும் நமது தாலந்துகளை புதைத்துவைத்தவர்களாகிவிடுவோம்.
திருமறை சார்ந்தே இவைகளுக்கு நம் விடை தேடலாம். ஆதி 1: 26 & 27ல் பின்பு தேவன் நமது (பன்மை) சாயலாகவும் நமது(பன்மை) ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக (பன்மை)…… தேவன் தம்முடைய (ஒருமை?) சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார், அவனை தேவ சாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவனை சிருஷ்டித்தார். இவ்வசனங்களுக்கு பின்பே இரண்டாம் அதிகாரத்தில் தனித்தனியாக ஆதமையும் ஏவாளையும் படைத்த நிகழ்வு வருகிறது. இதுமட்டும் தேவன் எனும் வருகின்ற வசன நடை, இரண்டாம் அதிகாரத்திலிருந்து தேவனாகிய கர்த்தர் என மாறுவதை நம்மில் பெரும்பாலும் எவரும் கண்டுகொள்வதில்லை.
“மனிதர் தனித்து வாழ்கையில் நிறைவை கண்டுகொள்ள முடியவில்லை. எனவே அவருக்குத் துணையாக மனைவி படைக்கப்பட்டார் (தொ. நூ 2: 18, 21 – 22) “கடவுள் நமக்குத் துணை” என்பதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிரேயச் சொல்தான் இங்கு “தகுந்த துணை” என்பதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று அறிக.” (திருமறைக்குத் திரும்புவோம் பக்கம் 134). இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியும் நம்மை வேறுபடுத்த துடிக்கும் இயல்பு நம்மில் ஒட்டிக்கொண்டுள்ளது.
ஓசியா 11: 3&4 3நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள். மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன்.ஓசியா 13: 8 குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல் பட்சித்துப்போடுவேன்; காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும். உபாகமம் 32: 11 & 12 கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறதுபோல,கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை. 32: 18 உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய். ஏசாயா 66:13 ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். ஏசாயா 49: 15 ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. ஏசாயா 42:14 நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.சங்கீதம் 131: 2 தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. மத்தேயு 23: 37 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. லூக்கா 15: 8 – 10 அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ? கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா? அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
சிங்கம் கரடி கழுகு ஆட்டுகுட்டி மேய்பன் என பல உருவகங்கள் இருந்தாலும் இவைகள் நமது நெருங்கிய புரிதலுக்கே என்பதை மறந்து “அப்பா பிதாவே” என்று மட்டும் சட்டம் போடுவதை “குயவன்” விரும்புவாரா? நம்மை அவர் வனயவேண்டுமா அல்லது நாம் அவரை வனைந்துவிடுகிறோமா?
சற்று யோசித்துப்பாருங்கள் நாம் பாடிய பாடல்களை
“தாயின் மிக்க பாசமும்”
“பெற்ற தாயும் என் தந்தையும் ஆனவரே
மற்றும் எல்லாம் எனக்கு நீரே”
“ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார்”
மொழி கலாச்சாரத்தை உள்ளிழுக்கும் சரடு. அதை அறுத்துவிடுவது தற்கொலைக்கு சமம். பல்வேறு ஊழியர்கள் கோடிகளில் புரண்டு நம்மை வழிதப்பி திரியச்செய்யும்போது, கருத்துடன் 4 வருடங்கள் கற்று, கனவுகளுடன் திருச்சபையில் மாற்றம் வேண்டும் என களமிறங்கிய அனேக போதகர்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாமல், ஆவியும் இல்லை அனலும் இல்லை என்று ஒதுக்கப்படுகிற சூழ்நிலையில் நாம் என்ன செய்ய போகிறோம்? ஒன்று செய்யலாம் நமது குழந்தைகளையே நாம் இறையியல் கல்விக்கு அனுப்பலாம். அவர்கள் ஒரு புது யுகத்தை படைக்கலாம். ஆனால் அது நமக்கு உவப்பானது அல்ல. நாம் காணிக்கை கொடுத்து திருமறை மட்டும் வாசித்து “அப்படியே நடக்கிறவர்கள்”.
ஒருவேளை கடவுளின் சாயல் மூன்றாம் பாலினரும் இணைந்தால் மட்டுமே முழுமைபெறும் என்றால்… அச்சாயலையும் இழுத்துக்கொள்ள ஒரு போதகராக நான் தயங்கமாட்டேன். ஏனெனில் அது வெளிநாட்டு இலவச இறக்குமதியல்ல…
கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக.என் ஓய்வு நாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வு நாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நிய புத்திரர் அனைவரையும்,நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.இஸ்ரவேலில் தள்ளுண்டவர்களைச் சேர்க்கிற கர்த்தராகிய ஆண்டவர்: அவனிடத்தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன் என்கிறார். (ஏசாயா 56: 3 – 8)
அருட்பணி. காட்சன் சமுவேல்
ரசாயனி மெதடிஸ்ட் கிறிஸ்து சபை, மும்பை
8888032486
9923921198
malargodson@wordpress.com