Archive for மே, 2016

பனைமரச் சாலை (3)

மே 15, 2016

20160515_081156[1]

முதல் பதனீர் கலயம் இறக்கப்படுகிறது

சுவையறிதல்

தற்பொழுது அணுஷக்தி நகர் போதகராக இருக்கும் ஏமில் அவர்கள் என்னைக் காணும்படியாக வந்திருந்தார். அந்த நாள் நானும் அவரும் மற்றும் திருச்சபையின் ஒரு அங்கத்தினருமாக பனங்காட்டுக்குள் நுழைய முற்பட்டோம். ரசாயனி முழுவதும் பாம்புகள் சர்வ சாதாரணமாக நடமாடும். வருடத்துக்கு ஒருமுறை காய்ந்த புற்களை தீ வைத்து கொழுத்திவிடுவார்கள். நாங்கள் சென்ற நேரம் மழைக்காலம் முடியும் தருவாயயிருந்தது. பச்சை விரவிக்கிடக்கும் புற்களும் செடிகொடிகளும் நிறைந்த பாதையில் பனைமரத்தைக் குறிவைத்து நடந்தோம்.
பாதை குறுகலாகவும், புதர்செறிந்தும் காணப்பட்டது. பறவைகளின் சிறகடிப்பும் சத்தங்களும், உர்வனவற்றின் சலசலப்புகளும் நிறைந்த அந்த இடத்தில் வந்தபோது பனைமர கூட்டத்தையும் ஒரு பழைய ஆளில்லாத வீட்டையும் ஒருசேர பார்த்தோம். இந்த பனை மரத்தின் அடியில் பனம் பழங்கள் கிடைக்குமா என பார்த்தபோது, அங்கே நாங்கள் கண்ட காட்சி மிகவும் அதிசயமாயிருந்தது.

சிதறிக்கிடந்த பனம்பழங்கள் யாவும் பழயவைகளாயிருந்தன. மழையில் நனைத்திருந்ததால் நைந்துபோன நார்களோடு திசைக்கொன்றாய் கிடந்தன. அவைகளைக் கையில் எடுத்து பார்த்தபொழுது பெரும்பாலானவைகள் முளைத்திருந்ததைக் கண்டோம். அது ஒரு அதிசய காட்சியாகவே எனக்குப் பட்டது. பனம்பழத்தை சேகரித்து மண்மேடெடுத்து அவைகளில் பாவி முளைக்கவைத்தலே முளைக்கும் என புரிதல் கோண்டிருந்த எனக்கு, துடிப்புடன் தன் தளிர் விரல் நீட்டி நம்மை நோக்கி எம்பும் சிறு குழந்தை போல அது காணப்பட்டது.
அன்று மட்டும் 50க்கும் அதிகமான முளைத்த பனக்கொட்டைகளைச் சேகரித்தோம். பலவற்றை அன்றே ரசாயனி திருச்சபை வளாகத்திலும் கல்லரைத்தோட்டத்திலும் நட்டோம். பிற்பாடு குழந்தைகளையும் ஜாஸ்மினையும் அழைத்துக்கொண்டு அவ்விடத்திற்கு சென்று பலமுறை விதை சேகரித்து வாய்ப்பு கிடைக்கு இடங்களில் நட துவங்கினோம். இதற்குள் அந்த ஆளில்லாத வீட்டிற்குள் சில நடமாட்டம் தெரிந்தது. பிற்பாடு அவர்கள் உத்தர பிரதேசத்திலிருந்து வந்த பனைத்தொழிலாளர்கள் என்றும், மாதம் பதினைந்தயிரம் அவர்கள் சேட் அவர்களுக்குக் கொடுத்க்டு அவர்களை வைத்திருக்கிறார் என்பதையும் அறிந்துகொண்டேன். ஒரு பனைத் தொழிலாளி குறைந்த பட்சம் 10 முதல் 15 மரங்கள் ஏறி 50 லிட்டர் முதல் 80 லிட்டர் வரை இறக்குகிறார் என்பதை அறிந்துகொண்டேன்.

இவர்கள் உடைகள் மிகவும் எளிமையானவைகள். சிறிய கால் சட்டைகளோ அல்லது லுங்கியோ மாணித்து மேற்பகுதியில் கையில்லாத பனியன் அணித்துருக்கிறார்கள். இவர்கள் பயன்படுத்தும் அரிவாள்களும் குமரி, நெல்லை பகுதிகளைப்போன்று பெரிதாக இராது.மெல்லிய விரல் அளவே பருமனுள்ள அரிவாள்களையே பாளை சீவவும் மற்றும் இன்ன பிற காரணங்களுக்காகவும் வைத்திருக்கிறார்கள். இடுப்பிலே ஒரு பெல்ட் உண்டு அல்லது இரு கயிறு கட்டியிருக்கிறார்கள். இக்கயிற்றில் ஒரு இரும்பு கம்பியில் செய்த கொக்கியை மாட்டிக்கொள்லுகிறார்கள். கலயத்தை ஆற்ற இறக்க பயன்படுமாயிருக்கும். வேறொன்றும் அவர்களிடம் தளவாடங்களக இல்லை.

இவர்களிடம் ஓலை கேட்டுப் பெற்றுக்கொள்ளுவது எளிதான காரியம் இல்லை. கள் வடிக்கும் மரத்திலிருந்து அவர்கள் ஒருபோதும் ஓலை வெட்டுவது கிடையாது. என்றாலும் புதிய மரத்தில் கள்வடிக்கத் துவங்கும்போது கீழ்பகுதி மரத்தை சுத்தம் செய்யும்போது பெறுகிற ஓலைகளி நாம் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம். தனியாக வேண்டுமனால் அதற்காக வேறு மரத்தையே அவர்கள் தெரிவு செய்கிறார்கள்.
தேடுதலின் நிறைவாக 5 இடங்களில் கள் இறக்கும் 13 பனைத்தொழிலாலர்களைக் கண்டேன். இவர்களில் ஒருவர் பழங்குடியினத்திஅச் சார்ந்தவர், 7 பேர் உ. பி, பீகார் ஆகிய பகுதிகளில் இருந்து மாத சம்பளத்திற்காக வந்தவர்கள். இவர்கள் சுமார் 8 மாதங்கள் இங்கே தங்கி, பணிசெய்து மழைக்காலத்தில் தங்க தங்க ஊர்களுக்குச் சென்றுவிடுவார்கள். மீதமுள்ல 5 நபர்களும் 2 குடும்பத்தைச் சார்ந்தவர்கள். மண்ணின் மைந்தர்கள். களிறக்குவதை தங்கள் தொழிலாக கொண்டவர்கள். இவர்களுள் ஒரு குடும்பத்தைச் சார்ந்த பனைத்தொழிலாளிகள் கள் இறக்குவதை தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தாலும் அவர் அவைகளைச் சுவைப்பதில்லை. கடவுளுக்காக மாலைப் போட்டிருக்கிறதாக கூறினார்.

பல்வேறு முயற்சிகௌக்குப் பின்பு, ஒரே ஒருவர் தான் பதனீர் இரக்க தனது விருப்பத்தைக் சொன்னார். உடனே நான் கார்கரில் வசிக்கும் சகோதரர் ராபி அவர்களைத் தொடர்புகொண்டேன். அவர்கள் அச்சமயம் தனது சொந்த ஊரான குளச்சலௌக்கு சென்றிருந்ட்தார்கள். அவர்கள் நீற்று சுண்ணாம்பு வாங்கி வருவதாக உறுதியளித்தார்கள். நவி மும்பை கிறிஸ்தவ ஐக்கியம் நடத்திய ஒரு கூடுகையில் அவர் அதை என்னிடம் கொடுத்தார். நான் அதைக் கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்தேன்.

சுமார் ஒரு வார காலம் எங்களால் ஒருங்கிணைக்க முடியாத முயற்சி நேற்று ஒருவாராக நிறைவடைந்தது. ஒரு கலயத்தை அவர் கட்டி இறக்க, நான் அதைக் கழுவி உடனடியாக சுண்ணாம்பிட்டு மரத்தில் கட்டினோம். காலை நான் சென்றிருந்தபோது பதனீர் கிடைத்தது. ஆனால் புதிய கலயத்தில் வைக்கவேண்டும் எனும் உண்மையினை புரிந்துகொண்டோம். மேலும் சுண்ணம்பின் அளவும் அதிகரிக்கப்படவேண்டும் எனவும் அறிந்துகொண்டோம்.

பெற்றுக்கொண்ட அரைலிட்டர் பதநீரை ஆலயத்தில் காணிக்கையாக வைத்தேன். கர்த்தர் செய்த்த எல்லா உபகாரங்களுக்காகவும் அவருக்கு துதி.

அருட்பணி காட்சன் சாமுவேல்
ரசாயனி, மும்பை
8888032486
malargodson@gmail.com

பனைமரச் சாலை (2)

மே 14, 2016

எனது குழந்தைகளுக்கு பனைமரங்களின் தொகுப்பை காண்பித்தபோது (ரசாயனி)

எனது குழந்தைகளுக்கு பனைமரங்களின் தொகுப்பை காண்பித்தபோது (ரசாயனி)

பனை சுவை தேடி

மோசே இரண்டு முக்கிய குறியீடுகளை இவ்விதமாக கடவுளிடமிருந்து பெறுகிறான். பாலும் தேனும் ஓடுகின்ற கானான் என்பதே அது. ஒரு வகையில் அவர்களது மேய்ச்சல் தொழிலை மீட்டெடுக்கும் ஒரு இடம் மற்றொன்று தங்கள் நிலத்தின் கனிகளை புசிக்கும் நிறைவு. இவைகள் அவர்கள் ஒன்றுபட காரணமாயின. அவர்கள் ஒன்றாயிருப்பதையே ஆண்டவர் விரும்பினார். அவர்களின் விடுதலை அவர் அவர்களுக்கு அளித்த கொடை.

இஸ்ரவேலர் உண்ட உணவுகள் எனும் பட்டியலில் மீன் மட்டுமே அசைவ உணவாக (எண்ணாகமம் 15: 4 – 6) குறிப்பிடப்படுவதை நாம் காண்கிறோம். மீன் உணவு ஏற்படுத்தும் வாசனையினால் அடிமைகளுக்காக ஒதுக்கப்பட்ட உணவாக அது இருந்திருக்கலாம். ஒரு நாடோடி மேய்ச்சல் குழுவாயிருந்தாலும் அவர்கள் அடிமைபட்ட பின்பு அவர்களது உணவு பட்டியலில் ஆடோ மாடோ குறிப்பிடாதது சற்று ஆச்சரியமே. ஒரு வகையில், சந்தன மரம் வளர்க்கலாம் ஆனால் வெட்டக்கூடாது என நமக்கிருக்கும் சட்டம் போல.

ஆனால் அடிமைகளுக்கு அது சற்று கடினமானதாக இருந்திருக்கும். மேய்ச்சல் தொழில் அறிந்திருந்தபடியால் அவர்கள் தங்கள் எஜமானர்களுக்காய் மேய்ச்சல் தொழிலைச் செய்திருக்கவும் கூடும். ஆனால் கொழுத்த கன்றோ அல்லது ஒருவயதான இளம் ஆடோ அவர்களின் கனவிலே, மூதாதயர்களின் வாய்மொழி வழக்கில் மட்டுமே தங்கியிருந்திருக்கும். அச்சுவையை மோசே அவர்களுக்கு எடுத்துக் கூறுகிறார். அச்சுவை நரம்புகளை அவர் மீட்டி எடுப்பது கடவுளின் விடுதலை வேட்கைக்கு அடித்தளம் அமைக்கிறது.

அவ்வகையில் நாம் பார்க்கும் போது பேரீட்சை மரம் எகிப்தில் மிகுதியாக காணப்படும் ஒரு மரம். அம்மரத்தின் கனிகள் மிகவும் உயர்வாய் கருதப்பட்டன. இருப்பினும் மேற்கூறிய திருமறைப்பகுதியில் பேரீச்சையின் பெயர் குறிப்பிடப்படாததற்கு காரணம் அவையும் அடிமைகளுக்கு விலக்கப்பட்ட ஒன்றாய் இருந்திருக்கும். அடிமைகளாய் அவர்கள் அக்கனியை தங்கள் எஜமானர்களுக்காய் பறித்திருக்கலாம் ஆனால் அதை சுவைக்க அவர்களுக்கு தடை இருந்திருக்கும் அல்லது அதை வாங்கி சுவைக்க அவர்களிடம் போதிய பணம் இருந்திருக்காது. “போஜனபதார்த்தங்களை அவர்கள் கையிலே வங்கிப் புசித்து, தண்ணீரையும் அவர்கள் கையிலே பணத்திற்கு வாங்கிக் குடியுங்கள்” (உபாகமம் 2: 6) என அவர்கள் எகிப்தை விட்டு சேயீர் வனாந்தரத்துக்கு வந்தபின்பு சொல்லப்படுவதைக் காண்கிறோம்.

இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, “இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை லமாயிருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றனர் (விடுதலைப் பயணம் 16: 3). மீனையே அவர்கள் இறைச்சி என பொருள் கொண்டிருக்கலாம். அல்லது அடிமைகளுக்கு வழங்கப்பட்ட அளவு சாப்பாட்டின் அங்கமாக இறைச்சி இருந்திருக்கலாம். எப்படியாயினும் அது அவர்கள் மூதாதையர்கள் உண்ட உணவின் சுவைக்கு ஒப்பாயிராது என்பதே புரிதல்.

ஆகவே அவர்கள் பயணத்தின் இரு தங்குமிடங்கள் அவைகளில் அவர்கள் காணும் பேரீச்சை மரங்களும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. ஏலிம் எனும் வார்த்தை உறுதியான மரங்கள் என பொருள் படுகிறது. மேலும் ஏலிம் எனும் இடத்தினைச் சுட்டும் (வி.ப 15: 27) அங்கே பேரீச்சை மரங்கள் மிகுந்திருந்ததை குறிப்பிடுகிறதைக் காணலாம். ஏலாத் எனும் வார்த்தை தோப்பை குறிப்பதாகவும், பேரீச்சை மரங்கள் அதிகமாக நிற்பதால் அவ்விடம் பேரீச்சையின் தோப்பு என பொருள் கொள்ளும்படியாக அர்த்தம் பெறுகிறது.

இன்று எனது ஊர்மக்களை நான் சந்திக்கும்போது இதற்கு ஒப்பான ஒரு நிகழ்வுகளையே அவர்கள் கூறக் கேட்கிறேன். பதனீர் இப்போது கிடைப்பதில்லை, நுங்கு விலை அதிகம், கருப்பட்டி வங்க கிடைப்பதில்லை, கிடைத்தாலும் நல்ல சரக்கா என தெரிவதில்லை என் தங்கள் முன்னோர்களின் சுவை பட்டியலை தற்போதைய எந்த உணவும் ஈடு செய்ய இயலாத காரியமாக ஒப்பிடுவதை பார்க்கிறேன்.
எப்படி இவர்களுக்கு ஒரு விடுதலை பயணத்தை அறிமுகம் செய்ய இயலும்? ஒரு கருத்துபறிமாற்றம் ஒரு சிலரின் சுவை நரம்புகளைத் தீண்டினால், அதனூடக விடுதலை பெறும் மானுட கூட்டம் ஒன்று இருக்கிறதை நான் கண்டுகொண்டேன். ஆகவே, ஒரு புதிய பழக்கவழக்கத்தை அறிமுகம் செய்யலாம் என நான் தீர்மானித்தேன்.

ரசாயனியில் என்னை போதகராக பணியமர்த்தியபோது அனேகர் என்னை ஏளனமாக பார்த்தனர். மும்பை எனும் பெருநகரத்தை விட்டு மூன்றுமணி நேரம் தொலைவில் இருப்பதால் பெரும்பாலும் இங்கே வருபவர்கள் புது வரவுகளாகவோ அல்லது தண்டனை பெற்றோ வருவாதகவே புரிதல். ஆனால் என்னைப் பொருத்தவரைக்கும் “பனக்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” எனும் நிலை. கடந்த ஒரு வருடத்தை இத்துணை நிறைவுடன் கடந்த போதகர்கள் குறைவு என்பதை நான் தைரியமாகவே சொல்லமுடியும்.

பனைமரங்கள் காணப்படுகின்ற எந்த இடமும் எனக்கு நிறைவளிப்பவை தான். பனை அருகில் இல்லாத வேளையில் பனைஓலையைக் கொண்டாவது எனது நேரத்தை என்னால் பயனுள்ள வகையில் கழிக்க இயலும். ரசயனியில் திரும்பிய பக்கமெல்லாம் பனைமரங்கள். ஆனால் ஒன்றிரண்டாய் காணப்படுகின்ற இவை அனைத்துமே நகரமயமாக்கலின் எஞ்சிய துளிகள் என்பதை ரசாயனியின் உட்புறம் நோக்கி நான் பயணிக்க துவங்கியபின் கண்டுகொண்டேன். நகர்மயமாக்கலுக்கோ அல்லது தொழில்மயமாக்குதலுக்கோ உட்படாத பகுதிகளிலெல்லாம் பனைமரங்கள் திரளாய் நிற்பதே அதற்குச் சான்று. மூவாயிரத்திற்கும் அதிகமான பனைமரங்கள் இங்கே உண்டு. அதில் பயன்பாட்டிற்கு உள்ளவை 10 சதவிகிதமே.

பத்து பனைமரங்கள் இருந்தால் அதன் அருகில் கண்டிப்பாக ஒரு பனையேறி இருப்பார்/ இருந்திருப்பார் என்பது என் அனுபவத்தின் வாயிலாக நான் கண்டு கொண்ட உண்மை. ஆனால் நான் வந்ததுமுதல் பனை ஏறுபவர்களை என்னால் கண்டடையை இயலவில்லை. மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பனை ஏறுபவர்களை தேடி தேடி சலித்துப்போனேன். எனது நாவின் சுவை மொட்டுக்கள் பதனீரை சுவைக்குமா?

அருட்பணி காட்சன் சாமுவேல்
ரசாயனி, மும்பை
8888032486
8238503714 (Watsapp)
malargodson@gmail.com

பனைமரச் சாலை

மே 13, 2016

img_08101.jpg

பயணம் குறித்த எனது திட்டம் மிகவும் இரகசியமாக வைக்கவே ஆசைப்பட்டேன். யாருக்கும் தெரியாமல் ஒரு பயணம் என்பது ஒரு போதகருக்கு ஒவ்வாது என கண்டுகொண்ட பின்பு ஒருவாறு ஜாஸ்மினிடம் கூறினேன். அவள் பயந்துபோனதோடல்லாமல் என்னை பயமுறுத்தும் ஒவ்வொரு காரியங்களாக சொல்ல ஆரம்பித்தாள். அதுவே எனக்கு சிறந்த ஒரு பயணத்தை அமைக்க வசதியாக அமைந்தது. அவளது பயத்தை குறைக்கும் வண்ணமாக திட்டமிட ஆரம்பித்தேன், அனைத்தும் ஒழுங்காக அமையும் என வாக்கு கொடுத்தேன். பயமுறுத்துவதோடு இல்லாமல் அப்படியே எனது குடும்பத்தாரிடம் சொல்லியும்விட்டாள். அவ்விதமாகவே எனது பயணம் ஒரு இரகசிய பயணத்திலிருந்து ஒரு அறிவிக்கப்பட்ட பயணமாக மாறியது.

ஆகவே அனைவரையும் சமாதானப்படுத்தும் காரணங்களை விளக்கவேண்டி வந்தது. திருச்சபையாருக்கும் சொல்லவேண்டி வந்தது. அப்படியே நண்பர்களிடமும் கசிந்தது. ஒரு கட்டத்தில்  துணிந்துவிட்டேன், முன் வைத்தக் காலை பின்வைக்கலாகாது என்று. ஆனால் கடந்த ஒரு மாதமாக இதை ஒருங்கிணைப்பதிலேயே செலவிடவேண்டிவரும் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. எனினும் ஊக்கமளித்த நண்பர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

பல்வேறு காரியங்களை ஒன்றிணைக்கும் திட்டமாக இப்பயணத்தை நான் செய்வது என எனக்கு நானே உறுதி செய்துகொண்டேன்.

  1. மும்பை முதல் நகர்கோவில் என இருக்கக்கூடிய வழித்தடத்தை எக்காரணத்தைக்கொண்டும் தெரிவு செய்யக்கூடாது. புதிய ஒரு சாலையை தெரிவு செய்யவேண்டும் அதுவும் பனை மரங்கள் நிறைந்த பாதையையே தெரிவு செய்யவேண்டும்.
  2. எனது பயணத்தை நான் கண்டிப்பாக ஆவணப்படுத்தவேண்டும். அது ஒரு தரமான புகைப்படமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக எழுத்தில் வடிவம் பெறவேண்டும்.
  3. தெரிவு செய்யும் பாதையில் உள்ள நண்பர்கள் அனைவரையும் சந்திக்கவேண்டும் மேலும் புதிய நண்பர்களைக் கண்டடைய வேண்டும்.
  4. வரலாறு மற்றும் சமயம் சார்ந்த முக்கியமான பகுதிகள் இருப்பின் அவைகளையும் கண்டு குறித்துக்கொள்ளுவது.
  5. திருமறையைக் கையில் வைத்துக்கொள்ளுவது… எனது பயணத்தைச் செறிவு செய்யும் துணை அதுவே.
  6. பனைமரம் சார்ந்து காணப்படும் பல்வேறுவகையான தொழில் நுட்ப வேறுபாடுகளை ஆவணப்படுத்துதல். மேலும் பனை மரங்கள் செறிவுற்ற பகுதிகளை அடையாளம் காண்பது
  7. பனைமரம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்வது.

இஸ்ரவேலர்களின் வாழ்வில் பயணம் ஒரு சிறப்பு நிலை பெறுவதனால் அவர்கள் அதை எழுத்தில் வடிக்க முயன்றனர். அதுவே விடுதலைப் பயணம் எனும் பெரு நூலாய் திருவிவிலியத்தில் இடம் பெற்றிருக்கிறது. பயணம் மாத்திரம் அல்ல அப்பயணத்திற்கான ஆயத்தமும் தொடர்ந்த கடவுளின் வழிநடத்துதலும் விடுதலைப் பயணத்தின் தனிச்சிறப்புகள். கூடவே மக்களுக்கும் கடவுளுக்குமான உறவு ஒரு ஒழுங்கமைவுக்குள் வருவதையும் இங்கே நாம் காண முடியும். பல்வேறு நிலைகளில் அவர்களது வாழ்வு மற்றும் இறையில் இப்பயணத்தில் திரண்டு வந்தாலும் முக்கிய படிநிலைகளாக 2 இடங்களின் பெயர்களை நான் குறித்துக்கொண்டேன்.  ஏலாத் மற்றும் ஏலிம். இரண்டுமே பனை குடும்பத்தைச் சார்ந்த பேரீச்சை மரங்கள் வாழும் பகுதிகள்.

ஆகவே அவர்களது விடுதலைப் பயணத்தின் முதல் இரண்டு தங்குமிடங்கள் பலைவனச் சோலையாக காணப்பட்ட இடங்களே. இவ்விடங்களில் அவர்கள் வந்து அமர்ந்திருக்கும்போது அவர்களது எண்ணங்கள் எப்படி இருந்திருக்கும்? அவர்களை கடவுள் வழி நடத்தியது எப்படி என அவர்கள் உணர்ந்திருப்பார்கள்? கடவுள் மீதான பற்றுமை உறுதிப்பட்டதா? ஆம்! ஆனால் அது உடனடியாக அவர்களது பட்டறிவிற்கு எட்டவில்லை. எளிய காரிங்களையே முன்னிறுத்தி அவர்கள் மோசேயோடு வாதிடுவதை நாம் காணலாம்.

“மேலும் அவர்களிடையே இருந்த பல இன மக்கள் உணவில் பெரு விருப்புக் கொண்டனர்; இஸ்ரயேல் மக்களும் மீண்டும் அழுது கூறியது: “நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்? நாம் எகிப்தில் செலவின்றி உண்ட மீன், வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றின் நினைவு வருகிறது.  ஆனால் இப்பொழுதோ நம் வலிமை குன்றிப் போயிற்று; மன்னாவைத் தவிர வேறெதுவும் நம் கண்களில் படுவதில்லையே!” (எண்ணிக்கை 11: 4-6 )

பயணிகளுக்கு உவந்து உணவளிக்கும் நாடு நாம் வாழும் நிலப்பகுதி. பல்வேறு மக்கள் காலம் காலமாக புனித பயணம் மேற்கொள்ளுவதும், அவர்களுக்கு உணவளிப்பது விருந்தோம்பலைக் காட்டிலும் மேன்மையான ஒன்றாக கருதப்படுகிறது. ஆலயங்களில் வழங்கப்படும் உணவுகளை அன்னதானம் என குறிப்பிடுகின்றனர். இற்செறிபில் வாழும் அன்னையர் அவ்விதம் பயணிகளுக்கு உணவளித்து “அன்னமிட்ட கை” என பேறு பெற்றனர்.

பயணம் செல்வோருக்கான பசியும் தாகமும் சற்று அதிகமே. பசியை இரண்டாம் பட்சமாக்கியே இங்கே பயணிகள் தங்கள் பாதைகளைத் தெரிவு செய்கின்றனர். ஆனால் அவர்களது பாதை அவர்களது பசிதாகத்தை போக்கவல்லது. கல்லும் முள்ளும் களைப்புற  செய்யா ஒரு உற்சாகம் அவர்களிடம் உண்டு. அதையே நான் தேடுகிறேன்.

இப்பயணம் மாறா காதலுடன் பனை மரங்களினூடாக நான் செய்யவிருக்கும் பயணம். ஆகவே பனை மரத்தினைப் பற்றிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பனைத்தொழிலாளியும் குடும்பமும் என் பயணத்தின் இலக்காகின்றனர். அவர்களே நான் வசிக்க இருக்கும் வாழும் கடிதங்கள். தெக்காண பகுதியில் ஒரு பனைமரச் சாலை இருந்திருக்குமென்றால், பட்டுச் சாலையை விட இது முக்கியத்துவம் பெற்றதாய் இருந்திருக்க வேண்டும். உணவும் உறைவிடமும் வழங்கிய மரமல்லவா பனை?

காலத்தால் மறக்கப்பட்ட பயனுள்ள ஒரு மரத்தின் நிழலில் பயணம் செய்வது குறித்த எண்ணமே என்னை பரவசத்தில் ஆழ்த்துகிறது. கனவுகள் மெய்பட வேண்டும், இறையாசியுடன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com


%d bloggers like this: