பனைமரச் சாலை


img_08101.jpg

பயணம் குறித்த எனது திட்டம் மிகவும் இரகசியமாக வைக்கவே ஆசைப்பட்டேன். யாருக்கும் தெரியாமல் ஒரு பயணம் என்பது ஒரு போதகருக்கு ஒவ்வாது என கண்டுகொண்ட பின்பு ஒருவாறு ஜாஸ்மினிடம் கூறினேன். அவள் பயந்துபோனதோடல்லாமல் என்னை பயமுறுத்தும் ஒவ்வொரு காரியங்களாக சொல்ல ஆரம்பித்தாள். அதுவே எனக்கு சிறந்த ஒரு பயணத்தை அமைக்க வசதியாக அமைந்தது. அவளது பயத்தை குறைக்கும் வண்ணமாக திட்டமிட ஆரம்பித்தேன், அனைத்தும் ஒழுங்காக அமையும் என வாக்கு கொடுத்தேன். பயமுறுத்துவதோடு இல்லாமல் அப்படியே எனது குடும்பத்தாரிடம் சொல்லியும்விட்டாள். அவ்விதமாகவே எனது பயணம் ஒரு இரகசிய பயணத்திலிருந்து ஒரு அறிவிக்கப்பட்ட பயணமாக மாறியது.

ஆகவே அனைவரையும் சமாதானப்படுத்தும் காரணங்களை விளக்கவேண்டி வந்தது. திருச்சபையாருக்கும் சொல்லவேண்டி வந்தது. அப்படியே நண்பர்களிடமும் கசிந்தது. ஒரு கட்டத்தில்  துணிந்துவிட்டேன், முன் வைத்தக் காலை பின்வைக்கலாகாது என்று. ஆனால் கடந்த ஒரு மாதமாக இதை ஒருங்கிணைப்பதிலேயே செலவிடவேண்டிவரும் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. எனினும் ஊக்கமளித்த நண்பர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

பல்வேறு காரியங்களை ஒன்றிணைக்கும் திட்டமாக இப்பயணத்தை நான் செய்வது என எனக்கு நானே உறுதி செய்துகொண்டேன்.

  1. மும்பை முதல் நகர்கோவில் என இருக்கக்கூடிய வழித்தடத்தை எக்காரணத்தைக்கொண்டும் தெரிவு செய்யக்கூடாது. புதிய ஒரு சாலையை தெரிவு செய்யவேண்டும் அதுவும் பனை மரங்கள் நிறைந்த பாதையையே தெரிவு செய்யவேண்டும்.
  2. எனது பயணத்தை நான் கண்டிப்பாக ஆவணப்படுத்தவேண்டும். அது ஒரு தரமான புகைப்படமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் கண்டிப்பாக எழுத்தில் வடிவம் பெறவேண்டும்.
  3. தெரிவு செய்யும் பாதையில் உள்ள நண்பர்கள் அனைவரையும் சந்திக்கவேண்டும் மேலும் புதிய நண்பர்களைக் கண்டடைய வேண்டும்.
  4. வரலாறு மற்றும் சமயம் சார்ந்த முக்கியமான பகுதிகள் இருப்பின் அவைகளையும் கண்டு குறித்துக்கொள்ளுவது.
  5. திருமறையைக் கையில் வைத்துக்கொள்ளுவது… எனது பயணத்தைச் செறிவு செய்யும் துணை அதுவே.
  6. பனைமரம் சார்ந்து காணப்படும் பல்வேறுவகையான தொழில் நுட்ப வேறுபாடுகளை ஆவணப்படுத்துதல். மேலும் பனை மரங்கள் செறிவுற்ற பகுதிகளை அடையாளம் காண்பது
  7. பனைமரம் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்வது.

இஸ்ரவேலர்களின் வாழ்வில் பயணம் ஒரு சிறப்பு நிலை பெறுவதனால் அவர்கள் அதை எழுத்தில் வடிக்க முயன்றனர். அதுவே விடுதலைப் பயணம் எனும் பெரு நூலாய் திருவிவிலியத்தில் இடம் பெற்றிருக்கிறது. பயணம் மாத்திரம் அல்ல அப்பயணத்திற்கான ஆயத்தமும் தொடர்ந்த கடவுளின் வழிநடத்துதலும் விடுதலைப் பயணத்தின் தனிச்சிறப்புகள். கூடவே மக்களுக்கும் கடவுளுக்குமான உறவு ஒரு ஒழுங்கமைவுக்குள் வருவதையும் இங்கே நாம் காண முடியும். பல்வேறு நிலைகளில் அவர்களது வாழ்வு மற்றும் இறையில் இப்பயணத்தில் திரண்டு வந்தாலும் முக்கிய படிநிலைகளாக 2 இடங்களின் பெயர்களை நான் குறித்துக்கொண்டேன்.  ஏலாத் மற்றும் ஏலிம். இரண்டுமே பனை குடும்பத்தைச் சார்ந்த பேரீச்சை மரங்கள் வாழும் பகுதிகள்.

ஆகவே அவர்களது விடுதலைப் பயணத்தின் முதல் இரண்டு தங்குமிடங்கள் பலைவனச் சோலையாக காணப்பட்ட இடங்களே. இவ்விடங்களில் அவர்கள் வந்து அமர்ந்திருக்கும்போது அவர்களது எண்ணங்கள் எப்படி இருந்திருக்கும்? அவர்களை கடவுள் வழி நடத்தியது எப்படி என அவர்கள் உணர்ந்திருப்பார்கள்? கடவுள் மீதான பற்றுமை உறுதிப்பட்டதா? ஆம்! ஆனால் அது உடனடியாக அவர்களது பட்டறிவிற்கு எட்டவில்லை. எளிய காரிங்களையே முன்னிறுத்தி அவர்கள் மோசேயோடு வாதிடுவதை நாம் காணலாம்.

“மேலும் அவர்களிடையே இருந்த பல இன மக்கள் உணவில் பெரு விருப்புக் கொண்டனர்; இஸ்ரயேல் மக்களும் மீண்டும் அழுது கூறியது: “நமக்கு உண்ண இறைச்சி யார் தருவார்? நாம் எகிப்தில் செலவின்றி உண்ட மீன், வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றின் நினைவு வருகிறது.  ஆனால் இப்பொழுதோ நம் வலிமை குன்றிப் போயிற்று; மன்னாவைத் தவிர வேறெதுவும் நம் கண்களில் படுவதில்லையே!” (எண்ணிக்கை 11: 4-6 )

பயணிகளுக்கு உவந்து உணவளிக்கும் நாடு நாம் வாழும் நிலப்பகுதி. பல்வேறு மக்கள் காலம் காலமாக புனித பயணம் மேற்கொள்ளுவதும், அவர்களுக்கு உணவளிப்பது விருந்தோம்பலைக் காட்டிலும் மேன்மையான ஒன்றாக கருதப்படுகிறது. ஆலயங்களில் வழங்கப்படும் உணவுகளை அன்னதானம் என குறிப்பிடுகின்றனர். இற்செறிபில் வாழும் அன்னையர் அவ்விதம் பயணிகளுக்கு உணவளித்து “அன்னமிட்ட கை” என பேறு பெற்றனர்.

பயணம் செல்வோருக்கான பசியும் தாகமும் சற்று அதிகமே. பசியை இரண்டாம் பட்சமாக்கியே இங்கே பயணிகள் தங்கள் பாதைகளைத் தெரிவு செய்கின்றனர். ஆனால் அவர்களது பாதை அவர்களது பசிதாகத்தை போக்கவல்லது. கல்லும் முள்ளும் களைப்புற  செய்யா ஒரு உற்சாகம் அவர்களிடம் உண்டு. அதையே நான் தேடுகிறேன்.

இப்பயணம் மாறா காதலுடன் பனை மரங்களினூடாக நான் செய்யவிருக்கும் பயணம். ஆகவே பனை மரத்தினைப் பற்றிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு பனைத்தொழிலாளியும் குடும்பமும் என் பயணத்தின் இலக்காகின்றனர். அவர்களே நான் வசிக்க இருக்கும் வாழும் கடிதங்கள். தெக்காண பகுதியில் ஒரு பனைமரச் சாலை இருந்திருக்குமென்றால், பட்டுச் சாலையை விட இது முக்கியத்துவம் பெற்றதாய் இருந்திருக்க வேண்டும். உணவும் உறைவிடமும் வழங்கிய மரமல்லவா பனை?

காலத்தால் மறக்கப்பட்ட பயனுள்ள ஒரு மரத்தின் நிழலில் பயணம் செய்வது குறித்த எண்ணமே என்னை பரவசத்தில் ஆழ்த்துகிறது. கனவுகள் மெய்பட வேண்டும், இறையாசியுடன்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச் சாலை”

  1. Rev. John Jebaseelan Says:

    உங்கள் பதிவுகளை மீண்டும் வாசிக்கும் முயற்சியை துவங்கியிருக்கிரேன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: