பனைமரச் சாலை (2)


எனது குழந்தைகளுக்கு பனைமரங்களின் தொகுப்பை காண்பித்தபோது (ரசாயனி)

எனது குழந்தைகளுக்கு பனைமரங்களின் தொகுப்பை காண்பித்தபோது (ரசாயனி)

பனை சுவை தேடி

மோசே இரண்டு முக்கிய குறியீடுகளை இவ்விதமாக கடவுளிடமிருந்து பெறுகிறான். பாலும் தேனும் ஓடுகின்ற கானான் என்பதே அது. ஒரு வகையில் அவர்களது மேய்ச்சல் தொழிலை மீட்டெடுக்கும் ஒரு இடம் மற்றொன்று தங்கள் நிலத்தின் கனிகளை புசிக்கும் நிறைவு. இவைகள் அவர்கள் ஒன்றுபட காரணமாயின. அவர்கள் ஒன்றாயிருப்பதையே ஆண்டவர் விரும்பினார். அவர்களின் விடுதலை அவர் அவர்களுக்கு அளித்த கொடை.

இஸ்ரவேலர் உண்ட உணவுகள் எனும் பட்டியலில் மீன் மட்டுமே அசைவ உணவாக (எண்ணாகமம் 15: 4 – 6) குறிப்பிடப்படுவதை நாம் காண்கிறோம். மீன் உணவு ஏற்படுத்தும் வாசனையினால் அடிமைகளுக்காக ஒதுக்கப்பட்ட உணவாக அது இருந்திருக்கலாம். ஒரு நாடோடி மேய்ச்சல் குழுவாயிருந்தாலும் அவர்கள் அடிமைபட்ட பின்பு அவர்களது உணவு பட்டியலில் ஆடோ மாடோ குறிப்பிடாதது சற்று ஆச்சரியமே. ஒரு வகையில், சந்தன மரம் வளர்க்கலாம் ஆனால் வெட்டக்கூடாது என நமக்கிருக்கும் சட்டம் போல.

ஆனால் அடிமைகளுக்கு அது சற்று கடினமானதாக இருந்திருக்கும். மேய்ச்சல் தொழில் அறிந்திருந்தபடியால் அவர்கள் தங்கள் எஜமானர்களுக்காய் மேய்ச்சல் தொழிலைச் செய்திருக்கவும் கூடும். ஆனால் கொழுத்த கன்றோ அல்லது ஒருவயதான இளம் ஆடோ அவர்களின் கனவிலே, மூதாதயர்களின் வாய்மொழி வழக்கில் மட்டுமே தங்கியிருந்திருக்கும். அச்சுவையை மோசே அவர்களுக்கு எடுத்துக் கூறுகிறார். அச்சுவை நரம்புகளை அவர் மீட்டி எடுப்பது கடவுளின் விடுதலை வேட்கைக்கு அடித்தளம் அமைக்கிறது.

அவ்வகையில் நாம் பார்க்கும் போது பேரீட்சை மரம் எகிப்தில் மிகுதியாக காணப்படும் ஒரு மரம். அம்மரத்தின் கனிகள் மிகவும் உயர்வாய் கருதப்பட்டன. இருப்பினும் மேற்கூறிய திருமறைப்பகுதியில் பேரீச்சையின் பெயர் குறிப்பிடப்படாததற்கு காரணம் அவையும் அடிமைகளுக்கு விலக்கப்பட்ட ஒன்றாய் இருந்திருக்கும். அடிமைகளாய் அவர்கள் அக்கனியை தங்கள் எஜமானர்களுக்காய் பறித்திருக்கலாம் ஆனால் அதை சுவைக்க அவர்களுக்கு தடை இருந்திருக்கும் அல்லது அதை வாங்கி சுவைக்க அவர்களிடம் போதிய பணம் இருந்திருக்காது. “போஜனபதார்த்தங்களை அவர்கள் கையிலே வங்கிப் புசித்து, தண்ணீரையும் அவர்கள் கையிலே பணத்திற்கு வாங்கிக் குடியுங்கள்” (உபாகமம் 2: 6) என அவர்கள் எகிப்தை விட்டு சேயீர் வனாந்தரத்துக்கு வந்தபின்பு சொல்லப்படுவதைக் காண்கிறோம்.

இஸ்ரயேல் மக்கள் அவர்களை நோக்கி, “இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை லமாயிருந்திருக்கும்! ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டு போகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றனர் (விடுதலைப் பயணம் 16: 3). மீனையே அவர்கள் இறைச்சி என பொருள் கொண்டிருக்கலாம். அல்லது அடிமைகளுக்கு வழங்கப்பட்ட அளவு சாப்பாட்டின் அங்கமாக இறைச்சி இருந்திருக்கலாம். எப்படியாயினும் அது அவர்கள் மூதாதையர்கள் உண்ட உணவின் சுவைக்கு ஒப்பாயிராது என்பதே புரிதல்.

ஆகவே அவர்கள் பயணத்தின் இரு தங்குமிடங்கள் அவைகளில் அவர்கள் காணும் பேரீச்சை மரங்களும் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை அளிக்கிறது. ஏலிம் எனும் வார்த்தை உறுதியான மரங்கள் என பொருள் படுகிறது. மேலும் ஏலிம் எனும் இடத்தினைச் சுட்டும் (வி.ப 15: 27) அங்கே பேரீச்சை மரங்கள் மிகுந்திருந்ததை குறிப்பிடுகிறதைக் காணலாம். ஏலாத் எனும் வார்த்தை தோப்பை குறிப்பதாகவும், பேரீச்சை மரங்கள் அதிகமாக நிற்பதால் அவ்விடம் பேரீச்சையின் தோப்பு என பொருள் கொள்ளும்படியாக அர்த்தம் பெறுகிறது.

இன்று எனது ஊர்மக்களை நான் சந்திக்கும்போது இதற்கு ஒப்பான ஒரு நிகழ்வுகளையே அவர்கள் கூறக் கேட்கிறேன். பதனீர் இப்போது கிடைப்பதில்லை, நுங்கு விலை அதிகம், கருப்பட்டி வங்க கிடைப்பதில்லை, கிடைத்தாலும் நல்ல சரக்கா என தெரிவதில்லை என் தங்கள் முன்னோர்களின் சுவை பட்டியலை தற்போதைய எந்த உணவும் ஈடு செய்ய இயலாத காரியமாக ஒப்பிடுவதை பார்க்கிறேன்.
எப்படி இவர்களுக்கு ஒரு விடுதலை பயணத்தை அறிமுகம் செய்ய இயலும்? ஒரு கருத்துபறிமாற்றம் ஒரு சிலரின் சுவை நரம்புகளைத் தீண்டினால், அதனூடக விடுதலை பெறும் மானுட கூட்டம் ஒன்று இருக்கிறதை நான் கண்டுகொண்டேன். ஆகவே, ஒரு புதிய பழக்கவழக்கத்தை அறிமுகம் செய்யலாம் என நான் தீர்மானித்தேன்.

ரசாயனியில் என்னை போதகராக பணியமர்த்தியபோது அனேகர் என்னை ஏளனமாக பார்த்தனர். மும்பை எனும் பெருநகரத்தை விட்டு மூன்றுமணி நேரம் தொலைவில் இருப்பதால் பெரும்பாலும் இங்கே வருபவர்கள் புது வரவுகளாகவோ அல்லது தண்டனை பெற்றோ வருவாதகவே புரிதல். ஆனால் என்னைப் பொருத்தவரைக்கும் “பனக்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது” எனும் நிலை. கடந்த ஒரு வருடத்தை இத்துணை நிறைவுடன் கடந்த போதகர்கள் குறைவு என்பதை நான் தைரியமாகவே சொல்லமுடியும்.

பனைமரங்கள் காணப்படுகின்ற எந்த இடமும் எனக்கு நிறைவளிப்பவை தான். பனை அருகில் இல்லாத வேளையில் பனைஓலையைக் கொண்டாவது எனது நேரத்தை என்னால் பயனுள்ள வகையில் கழிக்க இயலும். ரசயனியில் திரும்பிய பக்கமெல்லாம் பனைமரங்கள். ஆனால் ஒன்றிரண்டாய் காணப்படுகின்ற இவை அனைத்துமே நகரமயமாக்கலின் எஞ்சிய துளிகள் என்பதை ரசாயனியின் உட்புறம் நோக்கி நான் பயணிக்க துவங்கியபின் கண்டுகொண்டேன். நகர்மயமாக்கலுக்கோ அல்லது தொழில்மயமாக்குதலுக்கோ உட்படாத பகுதிகளிலெல்லாம் பனைமரங்கள் திரளாய் நிற்பதே அதற்குச் சான்று. மூவாயிரத்திற்கும் அதிகமான பனைமரங்கள் இங்கே உண்டு. அதில் பயன்பாட்டிற்கு உள்ளவை 10 சதவிகிதமே.

பத்து பனைமரங்கள் இருந்தால் அதன் அருகில் கண்டிப்பாக ஒரு பனையேறி இருப்பார்/ இருந்திருப்பார் என்பது என் அனுபவத்தின் வாயிலாக நான் கண்டு கொண்ட உண்மை. ஆனால் நான் வந்ததுமுதல் பனை ஏறுபவர்களை என்னால் கண்டடையை இயலவில்லை. மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பனை ஏறுபவர்களை தேடி தேடி சலித்துப்போனேன். எனது நாவின் சுவை மொட்டுக்கள் பதனீரை சுவைக்குமா?

அருட்பணி காட்சன் சாமுவேல்
ரசாயனி, மும்பை
8888032486
8238503714 (Watsapp)
malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: