வேட்கை துவங்குகிறது
ஹைதராபாத் எனக்கு நண்பர்கள் நிறைந்த இடம். என்னோடு இறையியல் கற்றவர்கள் அனேகர் அதை சுற்றி இருக்கின்றனர். மேலும் அது ஒரு இறையியல் மையம். ஆந்திரா கிறிஸ்தவ இறையியல் கல்லூரி அங்கே தான் இருக்கிறது. கிறிஸ்தவ இறையியல் வட்டாரத்தில் மிகவும் பிரபலமான சில்குரி வசந்த் ராவோ எனது நண்பர் மற்றும் முன்னாள் கல்லூரியின் முதல்வர். அவர் தான் என்னை தற்போதைய முதல்வருக்கு அறிமுகம் செய்திருந்தார். அனைவருமாக என்னிடம் கண்டிப்பாக கூறியிருந்தது என்னவென்றால், ஹதராபாத் வரும்போது எங்களுடன் தான் தங்கவேண்டும். எனது போதாத நேரம், மொத்த கல்லூரி ஆசிரியர்களும் நான் சென்ற நேரத்தில் ஜெர்மனி சென்றிருந்தார்கள். ஆனால் தற்பொதைய கல்லூரி முதல்வர் தாத்தாபுடி அவர்கள் என்னோடு வாட்சாப்பில் தொடர்பிலிருந்தார்கள். நான் யாரை தொடர்புகொள்ள வேண்டும் என்பது முதல் எங்கே தங்கவேண்டும் என்ற அனைத்தையும் பொறுப்பெடுத்துக்கொண்டார்கள். ஜெர்மனியிலிருந்து அவர்கள் எடுத்த முயற்சி அவர்களை நன்றியுடன் நினைவுகூறச் செய்கிறது.
நான் அங்கே சென்ற பொழுது மாலை 5 மணிக்கு இன்னும் ஒரு சில நிமிடங்களே இருந்தன. அங்குள்ள பொறுப்பு முதல்வரை நான் சந்திக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தேன். அவரது எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தது. நல்லவேளையாக அவர் அங்கே தனது அலுவலகத்தில் இருந்தார் ஆகவே அவரை கண்டுபிடிப்பது அத்துணை சிரமமாக இருக்கவில்லை. என்னை அன்போடு வரவேற்று எனக்கான ஒழுங்குகள் அமையுமட்டும் என்னோடு இருந்தார். அவரது காலில் ஒரு புண் இருந்ததால் அவரால் ஜெர்மனி செல்ல முடியவில்லை என்பதை அறிந்துகொண்டேன்.
டீ வந்தது. அப்போது தான் கவனித்தேன் நான் ஆந்திரா கிறிஸ்தவ இறையியல் கல்லூரிக்கு வழங்கிய படங்கள் இரண்டும் முதல்வர் அலுவலகத்தில் முகவும் அழகாக ஃபிரேம் செய்யப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தன. என்னால் என் கண்களையே நம்ப நம்பமுடியவில்லை. மிக முக்கியமான ஓவியர்களின் படங்கள் அக்கல்லூரியின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்க, செயல்பாட்டிலிருக்கும் ஒரு இடத்தில் எனது படங்களை வைத்திருப்பது மிகப்பெரிய அங்கீகாரம் என நினைத்தேன். அங்கே நின்று தானே ஒரு புகைப்படமும் எடுத்க்டுக்கொண்டோம். பிலேமோன் எழுதிய கடிதத்தையும் இக்கல்லூரிக்கு நான் பனை ஓலையில் எழுதி வழங்கியிருக்கிறேன்.
எனக்கான அறைக்கு அவர்கள் அந்த பலவீனமான காலோடு நடந்து வந்தார்கள். அனைத்தும் ஒழுங்காக இருக்கிறதா என சரிபார்த்த பின்பே அங்கிருந்து கிளம்பினார்கள். அப்போது வானம் தன்னை உடைத்து ஊற்றியது. சுமார் 5.15 முதல் துவங்கிய மழை 7.15 வரை நின்று பெய்தது. நான் சற்றும் எதிர்பாராவண்ணம் மின்சாரம் போய்விட்டது. வெளியே போகமுடியாது, துணி துவைத்து காய போடலாம் என்று நினைத்தேன் அதுவும் நடக்காது என புரிந்துவிட்டது. என்ன செய்யலாம் என நினைத்தபோது நண்பர்கள் ஒவ்வொருவராக அழைத்தனர்.
வரமுடியாது என்றவர்கள், யாரை தொடர்புகொள்ள வேன்டும் என எண்களைக் கொடுத்தார்கள். இறையியல் பேராசிரியரும் எனது நண்பருமான பிரபாகர், என்னோடு பேசினார். நான் நாளை காலைதான் வந்து சேருவேன், போய்விடாதீர்கள் என்றார். ஏற்கனவே நான் ஒருநாளை சேமித்திருந்தபடியால், சரியென்றேன். நண்பர் சாம்சன் ராஜு என்னை அழைத்து உதவிகள் வேண்டுமா? எல்லூரு எப்போது வருவீர்கள் என விசாரித்தார்கள். பொதஃகர் விக்டர் அவர்களும் மறுநாள் நான் செல்லவேண்டிய பாதைகளை எனக்குச் சொல்லி தெளிவுபடுத்தினார்கள்.
அந்த நாள் நான் செல்லவேண்டிய இடங்களை எனது மனக்கண்ணில் நிறுத்தி சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள கிடைத்த நேரமாகவே எடுத்துக்கொண்டேன். ஆம் இதற்குப் பின்பு இப்படி ஒரு ஓய்வு எனக்குக் கிடைக்காது என எனது மனம் நன்கு அறிந்து வைத்திருந்தது போலும். தனித்த அந்த அறையிலே நண்பர்களோடு நான் பேச எனக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாக நினைத்து அந்த நாளை நான் செலவு செய்தேன்.
அப்போது எனது அக்கா மும்பையிலிருந்து என்னை அழைத்தார்கள். என்னை சந்திக்க காசாவை சார்ந்த பிரேம் என்பவர் வருவதாக கூறிய அவர்கள், அவரது எண்ணை எனக்கு அனுப்பினார்கள். பிரேம் அவர்களோடு நான் தொடர்பு கொண்டபோது காலை 10 மணிக்கு வருவதாக ஒப்புக்கொண்டார்கள். முகநூலைப் பார்த்தபோது கொட்டும் மழையில் ஹதராபாத் வந்தடைந்தது “பனைமர வேட்கைப் பயணம்’ என பதிவிட்டிருந்தார் சிறகுகள் ஆசிரியர் நண்பர் ஜெபக்குமார். என்னுடன் மேலும் ஒரு நண்பர் சென்னையிலிருந்து இணைந்து கொள்ளுவார் எனவும் அழைத்து பேசினார்.
இந்த நாள் எனது வாழ்வின் முக்கிய நாள் என நினைத்துக்கொண்டேன். தேங்கிப்போய்விடுவது பிறரால் நம்மோடு இணைத்துக்கொள்ள இயலாதபடி துண்டித்துக்கொள்ளும் செயல் என அறிந்துகொண்டேன். நாம் நம்மை அற்பணிக்கும் தோரும் ஒரு பெரும் நதியின் ஓட்டத்தில் நம்மை இணைத்துகொள்ளுகிறோம். அவ்விதமாக நமது சூழலை செழுமைப்படுத்துகிறோம் என எண்ணிக்கொண்டேன். எனக்காக தங்கள் நேரத்தை ஒதுக்கி எனது பணியினை முக்கியமான என்ற ஒன்று என என்னையே நம்பவைத்த ஒவ்வொருவருக்காகவும் அன்று நான் ஒரு நீண்ட நன்றி மன்றாட்டை ஏறெடுத்தேன்.
ஹைதராபாத் என்பது எனது பனைமர வேட்கைபயணத்தின் ஒரு தங்குமிடமல்ல. அதுவே எனது பனைமர வேட்கை பயணத்தின் முக்கிய ஆரம்பம். கிழக்கு கடற்கரை சாலையையே நான் பனைமரச் சாலை என எனது மனதில் கொண்டிருந்தேன். அதற்கான ஆரம்பப் படியில் கால்வைத்திருக்கிறேன் என எண்ணிக்கொண்டேன். நாளை நமதே, நாளை விடியும், நாளை ஒரு புதிய உதயம், நாளை முதல் எல்லாம் மாறும் என எண்ணுந்தோரும் மனம் களிப்புற்றது.
நிறைவான ஒருநாள் எனது வாழ்வில் அமைந்தது என எண்ணியபடி கண்ணயர்ந்தேன்.
அருட்பணி காட்சன் சாமுவேல்
ரசாயனி, மும்பை
8888032486
You must be logged in to post a comment.