பனைமரச் சாலை (5)


பயணங்கள் தொடரும்Nilshi

 

நில்ஷி ஒய் எம் சி ஏ வளாகம் முகாம்களுக்காக பிரத்தியேகமாக கட்டப்பட்டது. மும்பை வாசிகளின் நெருக்கடியில் இருந்து விடுபட்டு முகாம் அமைப்பதற்கு ஏற்ப சுமார் 15 வருடங்களுக்கு முன் அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்ட ஒரு சிறந்த மையம். ஆந்திரா ஏரிக்கு அருகில் அமைக்கப்பட்ட இவ்விடம் மிகவும் அமைதியான இடத்தில் அமைந்திருக்கிறது. லோனவாலாவை விட்டு 50 கி.மீ தூரத்துக்கு அப்பால் காலத்தால் உறைந்துபோன கிராமங்களைத் தாண்டி இருக்கிறது.  சுமார் 150 பேர் ஒருசேர தங்கும்படியாக பல்வேறு தங்குமிடமும் கூடாரங்களும் அமைத்திருக்கிறார்கள். நிலத்தை மிக குறைந்த அளவே மாற்றியமைத்து சூழலியலுக்கு சற்றும் பங்கம் விளைவிக்காதபடி இடத்தை தெரிவுசெய்து வடிவமைத்த தலைமை பொறியாளர் கிறிஸ்டோபர் சார்லஸ் பிகினர் பூனேயில் தங்கும் அமெரிக்கர். இத்த கட்டிடத்திற்கு தேசிய விருதும் பல்வேறு முக்கிய விருதுகளும் கிடைத்துள்ளன.

 

சுற்றியுள்ள கிராமங்களுடன் ஒப்பிடுகையில் மரங்கள் மிகவும் செறிவாக வளர்ந்துள்ள பகுதி இது. இதற்கு காரணம் வருடாந்திர முகாம்கள் இங்கு அமைக்கப்படுவது என எண்ணுகிறேன். மும்பை பகுதியில் மண்ணில் கால் பதியாத குழந்தைகளை சேர்த்து வருடந்தோரும் விடுமுறை நாட்களில் ஒரு வார காலத்திற்கு முகாம்கள் நடைபெறும். இந்த முகாம்களில்,  தனித்தன்மைகளை வளர்த்துக்கொள்ளுவது மற்றும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுவது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். மலையேற்றம், பறவைகளை பார்ப்பது, மரம் நடுவது, துடுப்பு படகுகளை இயக்குவது, பாறை ஏற்றம், ஆற்றைக் கடப்பது போன்றவைகள் கற்றுக்கொடுக்கப்படும்.

நான் சென்ற நேரம் ஒரு பதின்வயது பையன் எனக்கு ஒரு ஸ்பூன் தாருங்கள் என கெஞ்சி கேட்டுக்கொண்டிருந்தான். கேம்ப் சைட்ல எல்லாம் பழகிக்கொள்ள வேண்டும் என மிகவும் மென்மையாக நிர்வாகத்தினர் அறிவுரை  கூறினர். நகர வாழ்வு உணவுக்கும் கரத்திற்கும் உள்ள தொலைவையே அதிகரிக்கிறது என்பதை காணமுடிந்தது. இவ்வித பயிற்சிகளுக்கு அனைத்து சமயத்தைச் சார்ந்த குழந்தைகளும் வருகின்றனர். உணவு, உறைவிடம் மற்றும் பயணம் உட்பட மிக குறைந்த அளவே கட்டணம் வசூலிக்கின்றனர். எப்படியாகிலும் நற்பண்புகள், விளையாட்டின் முக்கியத்துவம், சூழலியல் சார்ந்த விழிப்புணர்வு போன்றவற்றை  மையப்படுத்திய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

கிறிஸ்தவ  நிறுவனங்களிலேயே மிகவும் திறந்த மனதுடன் அனைத்து சமூகத்தினருக்காகவும் தன்னை விரிவுபடுத்திக்கொண்டது ஒய் எம் சி ஏ மட்டுமே. 1844ல் லண்டனில் மிக எளிமையாக கிறிஸ்தவர்களுக்கென்று  ஆரம்பிக்கப்பட்ட இன்நிறுவனம்,  இன்று சில நாடுகளில் கிறிஸ்தவர் அல்லாதவர் கூட இதன் நிர்வாகிகளாக இருக்குமளவிற்கு தன்னை விரிவாக்கிக்கொண்டுள்ளது. கிறிஸ்தவ கட்டமைப்பில் அனைவருக்கும் இடமுண்டு எனும் உயரிய கோட்பாட்டை கடைபிடித்து வருவதோடல்லாமல் விளையாட்டின் மூலமாகவும் தனது பணியைச் செய்து வருகிறது. உடல் உள்ளம் ஆன்மா இவை ஒன்றாய் நன்றாய் இருக்கவேண்டும் என்பதையே அவர்களது சின்னமாகிய முக்கோணம் அறிவுறுத்துகிறது.

காலை எழுந்தவுடனே பறவைகளின் ஒலி கேட்கத்துவங்கியது. 10க்கும் அதிகமான பறவைகளை சர்வசாதாரணமாக பார்க்க முடிந்தது. குறிப்பாக மணிப்புறா, வாலாட்டி குருவி, தவிட்டுக்குருவி, சிறிய குருவிகள் பலவற்றையும் காணமுடிந்தது. காகங்களை அதிகமாக காண  இயலவில்லை. மரங்கள் செறிவாக அடர்த்தியாக இருப்பதாலும் வருகிறவர்களிடம் பறவைகளை தொந்தரவு செய்யக் கூடாது என அறிவுறுத்துவதாலும் மேலும் வாகனங்களுக்கு வளாகத்தின் உள் அனுமதி மறுக்கப்படுவதாலும் அனேக பறவைகள் சுதந்திரமாக பாடித் திரிகின்றன.

எனக்கான நிகழ்ச்சிகள் மாலையிலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மும்பையிலிருந்து வரும் ஒரு புதிய டீமிற்காக காத்திருந்த நேரத்தில் இடத்தைச் சுற்றிப்பார்த்தேன். மிகவும் சுத்தமாக பேணப்பட்டுவரும் ஒரு வளாகம். சுற்றிலும் உள்ள கிராமத்தினர் அனைவருக்கும் ஒய் எம் சி யே குறித்து நன்றாகவே தெரிகிறது. மிகவும் பின் தங்கிய இப்பகுதிகளில் ஒய் எம் சி யே மூலமாக வேலைவாய்ப்பு இம்மக்களுக்கு கிடைக்கிறது ஆகையால் நன்மதிப்பு கொண்டுள்ளனர்.

மதியம் சுமார் 2 மணிக்கு இரண்டு பேருந்துகளும் ஒரு சிற்றுந்தும் இணைந்து வந்தது. 100 பதின் வயது பெண்களும் ஆண்களுமாக வந்திருந்தனர். அனைவரும் நகரத்தில் ஊறி திளைத்தவர்கள். உற்சாகத்தோடும் வியப்போடும் அவர்கள் அந்த புதிய இடத்தை பார்த்து இரசித்துக்கொண்டே தங்கள் பைகளை எடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தனர். நான் இதுவரை அணுகியிராத ஒரு கூட்டம், என்னால் இவர்களுக்கு எப்படி பனை மரம் சார்ந்து ஒரு பயிற்சியை அளிக்கமுடியும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்கள் புரிந்துகொள்ளும்படி எப்படி நிகழ்ச்சியை ஒழுங்கு செய்வது என நினைத்தேன். கண்டிப்பாக ஒருவரும் இயற்கையை விட்டு முழுவதுமாக தங்களை துண்டித்து விடுவதில்லை ஆகையால், ஏதேனும் ஒரு வழியிலே அவர்களைப் புரியவைக்க முடியும் எனும் நம்பிக்கை வந்தது.

எனது நிகழ்ச்சி இரவு உணவுக்குப்பின் என நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் கூறினார்கள். இரவில் 30 பேர் கொண்ட இரண்டு வகுப்புகளும், காலையில் 20 பேர் கொண்ட இரண்டு வகுப்புகளும் என முடிவு செய்யப்பட்டது.  நான் பனையோலைகளை எடுத்துச் சென்றிருந்தேன். அவர்கள் தேவையான உபகரணங்களைக் கொண்டு வந்திருந்தார்கள். எல்லாவற்றையும்  சரிபார்த்த பின்பு  நிகழ்ச்சிக்கு  ஆயத்தமானோம். மிக துல்லியமாக 8.30 மணிக்கு அனைவரும் ஒன்றுகூடி வந்திருந்தனர். எப்படி துவங்கலாம் என யோசித்தபடி உள்ளே நுழைந்தேன்.

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: