பனைமரச் சாலை (6)


புதிய தலைமுறை

நன்றி

நன்றி கூறும் பதின்வயதினர் கூட்டம்

மிகவும் அமைதியாகவும் எதிர்பார்ப்புடனும் இருபாலினரும் ஒன்றாய் இருந்த அந்த விரிந்த அறைக்குள் நான் நுழைந்தேன். எனக்கு உதவி செய்ய ஆறு தன்னார்வலர்கள் சுற்றி நின்றனர். அமர்ந்திருந்த ஒவ்வொருவருக்கும், ஒரு செவ்வக காண்ணடித் துண்டு, ஒரு சிறிய பென் கட்டர் இவைகளை தன்னார்வலர்கள் பகிர்ந்தளித்தார்கள். எடுத்துச்சென்ற ஓலையை நான் கொடுத்தேன். அவர்களே அதை ஆளுக்கு இரண்டாக எடுத்துக்கொண்டார்கள். ஐந்து நிமிடத்திற்கு மேல் பேசாதீர்கள் என நிர்வாகத்தினர் என்னிடம் கேட்டுக்கொண்டனர், நானும் அதை உணர்ந்திருந்தேன். அனைவருக்கும் கருவிகள் மற்றும் ஓலைகள் கிடைத்துவிட்டதா என சரிபார்த்த பின்பு நான் பேசத்துவங்கினேன்.
மும்பை உறவுகளைப் பேணும் ஒரு நகரம். வாழ்வு அவசர கதியாகிப்போன ஒரு இடத்தில், உறவுகளைப் பெணுவதற்காக ரக்-ஷா பந்தன் எனும் “ராக்கி” கட்டும் நிகழ்ச்சி வாழ்வின் அங்கமாக இருக்கிறது. அது போலவே நண்பர்கள் தினமும் கை பட்டைகள் பகிர்ந்து அனுசரிக்கப்படுகிறது. இவ்விதமான ஒரு கை பட்டையை செய்ய நான் உங்களுக்கு கற்றுக்கொடுக்கப்போகிறேன்.
இதற்கான மூலப்பொருள் பனை மரத்தில் உள்ள ஓலை மாத்திரமே. பனை மரத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ஆனால் அது எந்த மரம் என உங்களுக்கு சற்று சந்தேகம் இருக்கும் அதை நிவிர்த்தி செய்வதற்காக ஒரு எடுத்துக்காட்டு கூறுகிறேன். நீங்கள் அனைவரும் வெயில் காலத்திலே “ஐஸ் ஆப்பிள்” சாப்பிட்டிருப்பீர்கள், ஜெல்லி போன்று காணப்படுகின்ற அந்த உணவு வேனிற்காலத்துக்கு மிகவும் ஏற்ற உணவு. அது பனை மரத்தின் இளம் காயாகிய நுங்கிலிருந்து உங்களுக்கு கிடைக்கிறது என்றேன். ஆம் தெரியும் என்பது போலவும் கண்கள் விரியவும் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

பனை மரங்கள் மும்பையைச் சுற்றி திரளாக காணப்படுகிற மரம். பெரும்பாலான இரயில் நிலையங்களின் அருகிலும், ஒருசில கடற்கரைப் பகுதிகளிலும் நீங்கள் பார்க்கலாம். அந்தேரி பகுதியில் 1880களில் வெள்ளையர்கள் நரி வேட்டைக்குச் சென்றபோது என ஒரு ஓவியர் வரைந்த படத்தைப் பார்க்க நெரிட்டது. வெள்ளையர்கள் குதிரைகளில் அமர்ந்துகொண்டு தங்கள் கரங்களில் துப்பாக்கி ஏந்தியவண்ணம் வேட்டை நாய்களோடு நரியை வேட்டையாட செல்லுகின்ற காட்சியை ஓவியர் வரைந்திருப்பார். அந்த ஓவியம் முழுக்க பனைமரக்காட்டில் இவ்வேட்டை நடைபெறுவதாக சித்தரிக்கப்பட்டிருக்கும். நமது வளர்ச்சியின் கூறாக இன்று அந்த மரங்கள் மாயமாகிவிட்டன, ஆனால் ஒரே ஒரு மரம் இவைகளுக்கு சான்றாக அந்தேரி இரயில் நிலையத்தின் அருகில் இன்றும் ஓங்கி நின்றுகொண்டிருக்கிறது.

பயிற்சி

ஓலை பயிற்சிப் பட்டறை

ஏன் நாம் ஓலையில் இதைச் செய்ய வேண்டும்? ஏனென்றால் இது நமது பண்பாட்டின் அடையாளம். நமது முன்னோர்கள் கல்வி கற்கவும், காவியங்கள், கலைகள் மற்றும் அவர்கள் கண்டடைந்த ஞானத்தை அடுத்த சந்ததியினருக்கு பகிர்ந்தளிக்கவும், ஓலை பயன் பட்டது. இன்று நாம் மொபைலை தூக்கிக்கொண்டு செல்லும்போது உலகமே நம் கையில் என குதூகலிக்கிறோமே அதுபோலவே அன்றைய கற்றோர் உலகில் ஓலை சுவடி எடுத்துச் செல்லுவது அத்துணை எளிதான ஒன்று.

மேலும் பனை மரம் உச்சிமுதல் அதன் வேர் வரை பயன் தருகின்ற ஒரு மரம். தாலவிலாசம் எனும் நூலில் குடந்தை அருணாச்சலம் என்பவர் பனை மரத்தின் 801 பயன்பாடுகளை குறிப்பிடுகிறார். ஆசியா ஆப்பிரிக்கா கண்டங்களில் பல்வேறு மக்களுடைய வாழ்வின் அடிநாதமாக இது இருந்துவருகிறது. எல்லா சமயத்தினரும் பனைமரத்தினை மையமாக கொண்ட திருவிழாக்கள், வழிபாடுகள், உணவு தயாரித்தல் பேன்ற பழக்கவழக்கங்களை கைகொண்டு வருகின்றனர்.

இன்று பனைமரங்கள் அழிகின்ற தருவாயில் உள்ளன; இது சார்ந்து வாழும் ஒரு பெருங்கூட்டம், இதன் பயன்பாடு தற்கால நவீன சமூகத்திற்கு ஒவ்வாததோ என ஐயம் கொண்டு தொழிலை விட்டுவிடுகின்ற சூழ்நிலைக் காணப்படுகிறது. இச்சூழ்நிலை மாறவேண்டுமென்றல், இளைஞர்கள் உங்கள் வாழ்வின் முக்கிய தருணங்களில் ஓலையின் பயன்பாட்டை சேர்த்துக்கொள்ள வேண்டும், அனைத்து புதுமைகளும் இளைஞர்களாலேயே அறிமுகப்படுத்தப்படுகிறதானபடியால், உங்களுக்கு இதை கற்றுக்கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்விதமாக சுருக்கமாக எனது கருத்தை முன்வைத்துவிட்டு, உடனடியாக ஓலைகளை தண்ணீரில் நனைத்துக்கொண்டுவரச் சொன்னேன். தண்ணீர் ஓலைகளை மென்மையாக்கும், உடைந்து போவதை தடுக்கும், ஆகவே பயிற்சிக்கு முன்பு இவ்விதம் கூறுவது வழக்கம். மேலும் நனைத்தே கொடுப்பது அவர்களை ஒரே இடத்தில் உட்கார வைத்துவிடும், இப்பருவத்தினர் சற்று எழும்பி சிறு நடை போட்டு, சிறு கதை பேசி இருப்பதையே விரும்புவர்.

அனைவரும் வந்த பின்பு ஓலைகளை 22 மி மீ அகலத்திற்கும் 21 செ மீ நீளத்திற்கும் வெட்டிக்கொள்ள பயிற்சியளித்தேன். அது முடிந்த பிற்பாடு, கீழ்பகுதியில் ஒரு முக்கோண வடிவில் துளை ஒன்று செய்ய மாதிரியைக் காண்பித்தேன். அத்துளையினுள் செல்லும்படியன ஒரு “தலை” பகுதியும் செய்ய கற்றுக்கொடுத்தேன். அனைத்தையும் மிகவும் கருத்தூன்றி கேட்டு கவனம் குவித்து மிக அழகாக செய்தார்கள். ஓலைப் பயிற்சியில் நான் கண்டுகொண்ட ஒரு உண்மை இதுதன். கவனம் தானாக குவிக்கப்படுகிறது. எளிமையாக கற்றுக்கொள்ள முடிகிறது. முடியும் தருவாயில் மன நிறைவும் மன மகிழ்ச்சியும் கிடைக்கிரது. ஓவியத்திர்கு இணையாக இதை முன்னெடுக்கவேண்டும் எனும் ஆர்வம் எனக்கு இருந்தாலும், அதற்கான நேரம் கனித்து வருகின்ற தருணமாகவே நான் பார்க்கிறேன்.

குழந்தைகளுக்கு கல்விக்கூடங்களில் வண்ண பென்சில்கள், கிரையான்ஸ், ஸ்கெட்ச் பென் போன்றவைகளை விற்கும் அனேக நிறுவனங்கள் உண்டு. கோள்ளை இளபம் சம்பாதிக்கும் இவர்களை ஊக்குவிக்கும் நாம் பனைஓலைகளையும் அவ்வைதம் பரவ்லாக்கினால் என்ன என்பதே எனது கேள்வி. இன்று செயல்முறை பயிற்சிகளுக்காக சிறுவர்களுக்கு பல்வேறு பொருட்களை வாங்கும்படியாக ஆசிரியர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஒருவேளை பள்ளிக்கூடங்களில், ஓலை சார்ந்து பின்னுதல், முடைதல், வெட்டி ஒட்டுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுமானால் அது அனேக தோழிலாளர்களுக்கு தோழில் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்விதமான பயிற்சி பெறும் மாணவர்கள், புதிய தலைமுறைக்கான பொருட்களை கண்டுபிடிப்பார்கள் எனவும் அதுவே மேலும் பல மக்களுக்கு வேலை வாய்ப்பினை பெருக்கும் எனவும் நான் நம்புகிறேன்.
இப்போது அதை நுழைப்பதற்கன ஒரு எளிய அறிமுக உரையையும் கூறினேன். தவறான முறையில் நுழைத்தால், அது உடைந்துவிடும், உழைக்காது. என்றாலும் உடைந்துவிட்டலும் கவலை இல்லை, அதை ஒரு புக் மார்காக புத்தகத்தினுள் வைத்தும் நீங்கள் பயன்படுத்தலாம் என்றேன்.

ஓலை பயிற்சிப் பட்டறை

ஒய் எம் சி ஏ நில்ஷி வளாகத்தில் நடைபெற்ற ஓலை பயிற்சிப் பட்டறை

ஓவ்வொருவரும் தலா இரண்டு கைபட்டைகளைச் செய்தனர். அவைகளில் ஒன்றை நினைவு பொருளாக அவர்கள் விட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமத்தித்துவிட்டு, இன்னொன்றை ஒன்றுகூட்டி தோரணம் அமைத்தோம். அத்தோரணத்தை அவர்கள் கூடியிருந்த அந்த அறையிலேயே தொங்கவிட்டோம். ஓரு பொருளிலேயே இத்துணை உபயோகங்களா என அவர்கள் வியந்தனர். ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிப்பது தானே இன்றைய இளைஞர்களின் விருப்பம்? நிகழ்ச்சி முடியும் தருவாயில் ஒரு மாணவி எழுந்து நன்றி கூறுவது எப்படி என தன் சக மாணவர்களுக்கு 10 வினாடிகளுக்குள் குறிப்புணர்த்தினாள்.

நான் என்ன என புரிந்து சுதாரிப்பதற்குள் அவள்…

T…… என சொல்ல…… மாணவர்கள் கரங்களை தட்டினர்
H……. என சொல்ல…. மீண்டும் கரங்களை ஒன்றுபோல தட்டினர்
A……. சத்தம் வலுவாகியது
N……. கரங்களைத் தட்டுவது ஒத்திசைவாயின
K……. எனக்கு சற்று புரிய ஆரம்பித்தது
Y……. நான் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்தேன்
O…… அவர்கள் உச்சபட்ச சத்தம் எழுப்பி பிறர் கவனத்தையும் ஈர்த்தனர்
U….. கரங்களின் ஓசை கேட்டு, நான் நிறைவுற்றது என எண்ணிய வேளையில்….
THANKYOU என ஒருமித்த குரலெழுப்பினர்…… நான் நெகிழ்ந்துபோய் நின்றேன். நன்றி கூறுவதற்கு தான் எத்துணை அழகான வழிகளை இளைஞர்கள் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களது ஒத்துளைப்பிற்கு நான் நன்றியைக் கூறி, ஒருமுறைக்கூட இதை உங்களால் செய்ய முடியுமா என கோரிக்கை வைத்தேன். மகிழ்ச்சியோடு மீண்டும் சொன்னார்கள். புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்
ரசாயனி, மும்பை
8888032486
malargodson@gmail.com

Advertisements

ஒரு பதில் to “பனைமரச் சாலை (6)”

  1. Rev. John Jebaseelan Says:

    இது போல பல நகரவாழ் இளைஞர்களுக்கு இயற்கை வாழ்வைப் பற்றி இப்படிப்பட்ட பட்டறைகள் மூலமாக கற்றுக்கொடுக்க வாழ்த்துக்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: