பனைமரச் சாலை (7)


புதிய தலைமுறையுடன்

ஓலை பயிற்சி

புதிய தலைமுறையுடன் ஓலை பயிற்சி

தொடர்ந்து இரவு இன்னுமொரு அமர்வு செய்தோம். மறுநாள் காலையில் மேலும்  இன்னுமிரண்டு அமர்வுகள் சிறப்பாக நடைபெற்றன. ஒவ்வொரு அமர்விலும் ஒவ்வொரு புதுமை தோன்றிக்கொண்டு இருந்ததே ஒருஆச்சரியம் தான். நுணுக்கமான வேறுபாடுகள் ஆனால் பதின்வயதினர் தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்தனர். ஒரு சிலர் தங்கள் பெயர்களை வெட்டியும் பூக்களை வரைந்தும் அழகு பர்த்தனர். ஒரு பையன் YMCA CAMP LAKESIDE என அவ்விடத்தின் பெயரையே பதிவுசெய்தான். தங்களின் அன்புக்குரியவர்களுக்கு இவைகளை பரிசளிக்கப்போகிறோம் என ஒருசிலர்  சொன்னார்கள்.

 

வேறு சிலர் தங்கள் கரங்களில் ஒருசில ஓலைகளை எடுத்துக்கொண்டு போகலாமா என கேட்டார்கள். மகிழ்ச்சியாக இருந்தது, என்றாலும் அளவோடு எடுத்துச் சென்றிருந்தததால் தராளமாக எடுத்துக் கொடுக்க இயலவில்லை. இவ்வித விருப்பும் கொண்டவர்களுக்கு, ஓலைகளை சுத்தம் செய்து குறிப்பிட்ட அளவில் வெட்டி விற்பதும் ஒரு நல்ல வருமானமுள்ள தொழிலாக இருக்கும் ஆனால், அதற்கு முன்பதாக, இது ஒரு கலை கருவியாக பயன்படும் என்கிற உண்மை பரவலாக்கப்பாட்டலே அது சாத்தியம். அவ்விதம் பரவலாக்கப்படுவதற்கான வாய்ப்புகளை ஆராய்வது நல்லது.

 

ஒரு மாணவன் தான் செய்திருந்த கை பட்டையை எனக்கு காண்பித்தான். நான் சொன்ன அளவுகளை அப்படியே பின்பற்றாமல், ஆனால் அதன் அடிப்படையில் செய்திருந்தான். ஏற்கனவே அந்த வடிவமைப்பை நான் எண்ணியிருந்தாலும், அதை அறிமுகப்படுத்துவதில் எனக்கிருந்த தயக்கம் அப்பொழுதே நீங்கியது. வடிவமைப்பில் மாறுதலை விரும்பும் சமூகத்தில், அதை உடனடியாக செய்ய வேண்டும் என உறுதி பூண்டேன். அந்த இடத்தில் தானே அந்த மாணவன் செய்த அந்த மாறுதலை அனைவருக்கும் முன்பதாக பாராட்டி, வடிவமைப்பின் எல்லையில்லா சாத்தியக்கூறுகளை பகிர்ந்துகொண்டேன்.

இதயங்கள்

சின்னஞ் சிறு இதயங்கள்

இறுதி வகுப்பினருக்கு பயிற்சியளிக்கையில் ஓலைகள் இன்னமும் மீந்து இருப்பதாக தோன்றியது. ஆகவே அவைகளையும் பயன்படுத்தி இதய வடிவில் தோரணம் அமைப்பது எப்படி என கற்றுக்கொடுத்தேன். மிகவும் ஆர்வத்தோடே செய்தார்கள். ஒரு மாணவி என்னிடம் வந்து, எங்கள் ஆசிரியை உங்களைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள். அவர்கள் அனேக காரியங்களை கற்று எங்களுக்கும் கற்பிப்பதிலே ஆர்வம் காட்டுபவர்கள் என்றாள். எனது தொடர்பு எண் நிர்வாகத்திடம் உண்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்றேன்.

ஓலையை வெட்டி இவ்விதம் செய்யவேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது என ஒரு மாணவி கேட்டாள். அவளுக்கு விரிவாக பதில் சொல்ல நேரம் இல்லாததால் ” ஓலையிலே பின்னுதல் முடைதல் என இரு வகைமைகள் ஏற்கனவே இருக்கின்றன, நான் தற்கால பயன்பாட்டிற்கு ஏற்ற ஒரு முறையை வெட்டி ஒட்டி செய்ய முடியுமா என முயற்சிக்கிறேன் என்றேன்”. ஆனால் ஆழ்ந்து நோக்கும்போது பல்வேறு படிநிலைகளைக் கடந்தே நான் இந்த இடத்தை அடைந்திருக்கிறேன் என்பதை உணர்ந்துகொண்டேன்.

முடைதல் எனும் பயன்பாடு காலத்தால் முந்தையது. ஓலைப் பாய் ஓலைக் கடவம் போன்றவை முடைதல் எனும் வகைப்பாட்டிற்குள் வரும். காலம் காலமாக மக்கள் இந்த முறையையே பயன்படுத்தி வந்தனர். பிற்பாடு  பைகள் மற்றும் தொப்பிகள் செய்வதற்கு பின்னுதல் எனும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஓலைகளை சிறிய துண்டுகளாக வார்ந்து, அவைகளை சடையாக்கி, பின்னர் தையல் மெஷினில் வைத்து தைத்து வேண்டிய பொருளைச் செய்வார்கள். இவைகள் இரண்டிலும் ஓலை மிக அதிகமாக பயன்படுத்தப்படுவதை நான் கண்டுகொண்டேன். அவைகளின் அமைப்பே திரளாய் ஓலைகள் கிடைக்கின்ற இடத்திலிருந்து தயாரிக்கப்படுகின்ற பொருட்களை ஒத்திருக்கிறதாக எனக்கு காட்சியளிக்கும்.

 

நான் மேற்கொண்ட இவ்வித முயற்சிகளில் ஓலைகள் மிக அதிகமாக விரயமாக்கப்படுவதாக உணர்ந்தேன். இதை எவ்விதம் பயனுள்ள வகையில் அதிக சேதாரமில்லாமல் பயன்பாட்டுக்கு  கொண்டுவரமுடியும்  என யோசித்தபோது எனக்கு விடையாக வெட்டி ஒட்டுதல் கிடைத்தது.

 

ஒரு பெரிய காகிதப்பரப்பில் ஒரு சில ஓலைத்துண்டுகளை நேர்த்தியாய் வெட்டி கச்சிதமன இடங்களில் ஒட்டிவிட்டால் ஒரு படம் கிடைத்துவிடும். ஒரு ஓலை இலக்கே போதுமானது. ஆனால் அதன் விற்பனை விலை பன்மடங்காக உயர வாய்ப்புள்ளது. சுமார் ஒரு ஓலையில் செய்யும் கடக பெட்டிக்கு 100 ரூபாய் கிடைக்குமென்றால், ஒட்டி வெட்டுவதன் மூலம் அதே அளவுள்ள ஓலையில் 1000 ரூபாய்க்கும் அதிகமான பொருட்களைச் செய்ய இயலும்.

இவ்விதமான முயற்சி, ஓலைகளின் பயன்பாட்டை முழுமை அடையசெய்வது. மீந்திருக்கும் சிறு துண்டுகளையும் கலைநோக்கோடு அணுகினால் பயன்படுத்தலாம். பனைஓலைகள் கிடைக்கிறதே என்பதற்காக அதை விரையம் செய்யாமல், அதை பயனுள்ள வகைகளில் மாற்றி, அதன் அளவுகளைக் கருத்தில் கொண்டு சேதாரம் இல்லாமல்  படங்களைச் செய்ய முற்பட்டால், அது அன்னிய செலாவணியையும் ஈட்டித்தரும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

நிகழ்ச்சியின் முடிவிலோ அல்லது துவக்கத்திலோ மாணவர்களிடம் நான் கொண்டு சென்றிருந்த பனை ஓலை ஓவியங்கள் அடங்கிய புத்தகத்தைக் காண்பித்தேன். அகன்று விரிந்த கண்களோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆயினும் மெர்லின் மன்ரோ போன்ற இளைஞர்களை கவரும் ஒரு சில படங்கள் தான் என்னிடம் இருந்தன. அப்படங்கள் அதிக ஆரவாரத்தைப் பெற்றன.

இறுதியாக வந்த மாணவர் குழுவிலே ஒருவருடைய முகத்தையே நாம் பிரதியெடுக்க  முடியும் என ஒரு செய்முறை விளக்கத்தைக் காண்பித்தேன். அப்போது நான் விளையாட்டாக செய்தது எனக்கு வினையாகிப்போனது. எனக்கு உனக்கு என அனைவரும் போட்டிபோட ஆரம்பித்துவிட்டனர். என்னிடத்தில் நான் எப்போதும் பயன்படுத்தும் பிரத்தியேக கருவியும் இல்லை. ஆனாலும் 7 மாணவர்களுக்கு மேல் அன்று செய்து கொடுத்தேன். வேகம் மற்றும் துல்லியம் அதிகமாவதையும் இந்த நிகழ்ச்சியின் நெருக்கடியில் உணர்ந்துகொண்டேன்.

விடைபெறும்போது

சகோதரியின் குடும்பத்தினருடன்

ஆனால் இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதற்கு காரணமானவர்கள் எனது வாழ்வில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர்கள். சுமார் 18 வருடங்களாக என்னை ஊக்குவித்துக்கொண்டிருக்கும் எனது சகோதரி மற்றும் அவரது கணவனார் ஆகியோரை குறித்து பதிவு செய்வது எனது கடமை. எனது சகோதரி தான் இயற்கை சார்ந்த விழிப்புணர்வை எனக்கு ஊட்டியவர்கள். அதை பனைமரத்தோடு தொடற்புறச் செய்தவர்களும் அவர்களே. நான் செய்வனவற்றை கூர்ந்து கவனித்து தடர் ஆலோசனை வழங்கி வந்ததினால், வெளியுலக ஏளனங்களையும் கடந்து என்னால் இத்துணை காலம் தாக்குப்பிடிக்க முடிந்தது.

எனது அத்தானுக்கு நான் செய்யும் ஓலை பொருட்களின் மேல் கொள்ளைப் பிரியம் உண்டு. எப்படியாகிலும் இதற்கான நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யவேண்டும் என ஆவலாக இருந்தார்கள். நேரம் வாய்க்கவில்லை. இம்முறை அவர்கள் தான் நில்ஷி ஒய் எம் சி ஏ வளாகத்திற்குப் பொறுப்பு. என்னிடம் முன்கூட்டியே சொல்லியிருந்தார்கள். அனைத்தும் சிறப்புற முடிந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி.

மதிய உணவிற்குப்பின் எனது பயணத்திற்காக ஆயத்தமானேன். மூன்று மணிக்கு புறப்பட்டால் சரியாயிருக்கும் என்பது எண்ணம். எங்கே தங்குவது எவ்வளவு தூரம் போவது என்ற எண்ணம் தெளிவாக இல்லை. பூனே  சுமார் 50 கிலோ மீட்டருக்குள் தான் இருக்கும். குறைந்த பட்சம் நூறு கிலோமீட்டராவது கடந்தேயாகவெண்டும். பூனேயைக் கடந்துவிட்டால் ஐதராபாத் வரை ஒருவரையும் தெரியாது. ஆகவே கிடைக்கும் இடத்தில் தங்கிக்கொள்ளலாம் என முடிவு செய்து ஆயத்தமானேன்.

விடைபெறும்போது

விடைபெறும்போது

சகோதரி குடும்பத்தார் அனைவருமாக வந்து என்னை வழியனுப்பினார்கள். புதிய பாதையை தெரிவு செய்து எனது பயணம் தொடர்ந்தது.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

 

Advertisements

ஒரு பதில் to “பனைமரச் சாலை (7)”

  1. vizhiyan Says:

    அட்டகாசம் அட்டாகாசம்

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: