பனைமரச் சாலை (11)


நீண்டது பயணம்

காலை உணவு

காலை உணவு, தாபாவில்

காலை எட்டுமணிக்கு முன்பதாகவே ஹடாப்சர் வந்துவிட்டேன். அங்கிருந்து ஷோலாப்பூர் செல்லுகின்ற பாதை மிக மிக அழகாக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட இருவழி சாலை அது.  காலை பதினோரு மணி வரை ஓட்டலாம் என முடிவு செய்தேன். சுமார் 9 மணிக்கு மிகவும் பசிக்கவே ஒரு தாபாவைக்கண்டு வண்டியை நிறுத்தினேன். எனது பயணத்தின் முதல் தாபா இதுதான்.

 

முதல் முதலாக தாபா என ஒன்று இருப்பதே எனக்கு எனது கல்லூரி வாழ்க்கைக்குப் பின்புதான் தெரியும். எனது பெரியம்மா மகன் ஹெரால்ட் அலகாபாத் விவசாய கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நேரமது. ஏதோ ஒரு வேகத்தில் அவர்களோடு ஒட்டிக்கொண்டேன். அங்கே சென்றபோது தான் மண்குவளையில் டீ அருந்துவது, இரவு நேரங்களில் தாபாவில் போய்ச் சாப்பிடுவது என புது அனுபவத்திற்குள் வந்தேன். சப்பாத்தியையும் கோழியையும் தீக்குள் போட்டு சுட்டு எடுக்கிறார்களா என வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்த நாட்கள் அவை.

 

கனல் சிவந்து ஒளிரும் கூனிப்பானைக்குள் அதன் வாய் வழியாக பரத்திய மைதாவை ஒரு வட்ட தலையணை போன்ற ஒன்றின் மேல் வைத்து, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பானையின் வாய் வழியே நுழைத்து அதன் ஓரத்தில் ஓட்டிவிடுவார்கள். பின்னர் நுனி கூர்மையான ஒரு வளைந்த கம்பியின் உதவியைக் கொண்டு அந்த ரொட்டியை எடுப்பார்கள். உணவை இப்படியெல்லாம் தயாரிக்க முடியுமா என ஆச்சரியத்துடன் பார்த்த நாட்கள் அவை.

 

பொதுவாக இந்தியா பாகிஸ்தான் பகுதிகளில் ரோட்டோரம் காணப்படும் பஞ்சாபிய உணவகங்கள் தாபா எனப்படும். நெடுந்தொலைவு பயணம் செய்யும் லாரி ஓட்டுனர்களுக்காக இந்த உணவகங்களை நடத்துகிறார்கள். ஓய்வே இல்லாமல் செயல்படும் உணவகங்கள் இவை.  ஒரு கயிற்றுக் கட்டிலின் மேல் குறுக்காக வைக்கப்பட்ட பலகையில் ஒரு பெரிய தட்டில்  உணவுகளை பறிமாறுவது வழக்கம். அதன் பின்பு பலகையை மாற்றிக்கொண்டு நாம் உறங்கலாம். எவரும் நம்மை தொந்தரவு செய்வது இல்லை. பயணக்களைப்பில் வரும் கனரக வண்டி ஓட்டுனர்களுக்காக அமைக்கப்பட்ட ஒரு சிறந்த அமைப்பு. தாபாவில் தங்குவதற்கு பணம் கொடுக்க வேண்டியது இல்லை.

தாபாவிற்குள் சென்று என்ன இருக்கிறது என கேட்டேன். அவர்கள் நாஷ்டா இல்லை மதிய உணவே ஆயத்தமாக இருக்கிறது என்றார்கள். மதிய உணவோ காலை உணவோ இருக்கும் உணவைத் தாருங்கள் எனக் கேட்டு ரொட்டியும் டால் ஃப்ரை என்ற தாளித்த பருப்பையும் வாங்கி உண்டேன். அத்தோடு வெட்டிய  எலுமிச்சை துண்டுகளும் பெரிய வெங்காயமும் கொடுப்பார்கள். மிக மிக சுவையான உணவை இங்கு அக் காலை வேளையில் உண்டேன். மிகக் குறைந்த விலைக்கு.

நான் காலை உணவு உண்ட தாபா அமைந்திருந்த இடம் பீகுவானுக்கு அருகில் இருந்தது. அங்கிருந்து புறப்படும்போது, சோலாப்பூருக்கு  இன்னும் 150 கி மீ தொலைவுதான், ஆகவே வெகு சீக்கிரமாக மதியத்திற்குள் சென்று சேர்ந்துவிடலாம் என எண்ணிக்கொண்டேன். ஆனால் பதினோரு மணி வாக்கில்  கழுத்து  இணையும் முதுகுப்பகுதியின் இடப்பகுதியில் ஒரு வலி தோன்றியது.

எனக்கு ஏற்கனவே உள்ள வலி தான். ஆனால் ஒரு மணி நேரத்திற்கு  ஒருமுறை தற்காலிகமாக வண்டியை நிறுத்தி சற்று ஒய்வெடுக்க வேண்டும் என்பது எனக்கு மருத்துவர் இட்ட கட்டளை. இன்னொருபுறம் வெயிலின் தாக்கத்தால் ஜாக்கெட்டினுள் வியர்வை முத்துக்கள் பிறந்து புழுக்களாய் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தன. வெயில் கிட்டத்தட்ட 44 டிகிரியை எட்டியது என   பின்னர் அறிந்துகொண்டேன். வெயிலின் கொடுமையும் வலியின் கோரமும் ஒன்றிணைத்துப் போராட வேறு வழியில்லாமல்  சோலாப்பூருக்கு சுமார் 20கி மீ தொலைவு இருக்கும்போது வாகனத்தை ஒரு தாபாவில் நிறுத்தினேன்.

காலையில் நான் சென்றதைவிடவும் இது மிகச்சிறிய தாபா. ஒரு குடும்பத்தினர் வேறு எந்த வேலைக்காரர்களின் உதவியுமின்றி இதை நடத்தினர். உள்ளே போய் கட்டிலின் அருகில் எனது பையை வைத்துவிட்டு ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படுத்துக்கொண்டேன். நல்ல காற்று வீசியது ஆனால் காற்று முழுவதும் அனலாக வீசியது. என்னால் எப்படி இங்கு படுப்பது என தெரியவில்லை.  மண் தரை ஆனபடியால் அங்கே தண்ணீரை ஊற்றி கயிற்றுக் கட்டிலில் படுத்துவிட்டேன்.

இந்த பயணத்தில் நான் இத்துணை தூரம் முன்னேரவும், உறுதியோடு முன்செல்லவும் கடந்த இரண்டு வருடமாக  அகமதாபாத் பகுதியில் வாழ்ந்த அனுபவம் பேருதவியாக இருந்தது. அகமதாபாத் பகுதியில் வாழ்ந்தவர்கள்   வெயில் காலத்தில் ஒரு செங்கல் சூளைக்குள் இருப்பதாகவே உணரமுடியும். வியர்வை வராது ஆனால் காயப்போட்ட கருவாட்டின் நீரை உறிஞ்சி எடுக்கும் அனலும் வெக்கையும் இருக்கும். கிளவுஸ் இன்றி பயணித்த இடங்களில் விரல் நுனிகள் வெக்கையால் பழுத்து கனிந்துவிடுமோ எனும் அளவிற்கு சூடு சாலையிலிருந்து எழும்பிக்கொண்டிருந்தது. கிளவுஸ் போட்டால் அது நச நசவென்று வியர்வையால் வேறுவிதமான அவஸ்தையைக் கொடுத்தது.

 

என்ன ஆச்சரியம் நான்றாக தூங்கிவிட்டேன். எழும்பும்போது மணி 2.15. உடலெங்கும் வியர்வை. குறிப்பாக கையைத் தலைக்கு கொடுத்தபடி படுத்திருந்ததால், கரங்களிலும் கன்னத்திலும் நீர் வடிந்துகொண்டிருந்தது.

 

உடனடியாக உணவுக்குச் சொல்லிவிட்டு காத்திருந்தேன். உணவின் தரம் நன்றாக இல்லை. ஆகவே பேருக்குச் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து சுமார் மூன்று மணிக்கு கிளம்பினேன். சோலாப்பூரில் தங்கக் கூடாது, வேறு ஒட்டலிலோ லாட்ஜிலோ தங்கக்கூடாது, ஏதாவது ஆலயத்தின் வளாகத்தில் தங்கிக்கொள்ளலாம் அல்லது ஏதேனும் கிராமத்தினரின் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொள்ளலாம் என முடிவு செய்தே மீண்டும் பயணத்தை துவங்கினேன்.

 

செல்லும் வழியெங்கும் ஒரு ஆலயமும் கண்ணுக்குப் படவில்லை. வழியில் ஒரு இடத்தில் அருகிலே சர்ச் இருக்கிறதா எனக்கேட்டேன். இல்லை என ஒரு சிலர் பதிலிறுத்தார்கள், பைக்கிலே என்னருகில் உதவிக்காக வந்து விசாரித்த இரண்டு இளைஞர்கள் சர்ச்செல்லாம் இங்கு இல்லை என என்னை முறைத்து விட்டு சென்றார்கள். புனே துவங்கி ஹும்னாபாத் வரை சுமார் 400 கிமீ தூரம் வரைக்கும் கிறிஸ்தவ ஆலயங்கள் பெருமளவில் இல்லை என நினைக்கிறேன். ஒருவேளை சோலாப்பூரில் கிறிஸ்தவ ஆலயம் இருக்கலாம். ஆனால் மெதடிஸ்ட் திருச்சபைகள் இல்லை என்பது உறுதி.

கொலைவெறி வேகத்தோடு முந்தும் KSRTC பேருந்து

கொலைவெறி வேகத்தோடு முந்தும் KSRTC பேருந்து

சோலாப்பூரைக் கடக்கும்போது சற்று நின்று பழச்சாறு அருந்தினேன். அதன்பின்பு நான் எதிர் பார்த்தது போல சாலைகள் அத்துணை நேர்த்தியாக இல்லை. எனது வேகம் மட்டுப்பட்டது. சாலை அமைக்கும் பணிகளும்,  கொலைவெறியோடு முந்தி வருகின்ற வாகனங்களும் என்னை மெதுவாகவே பயணிக்க எச்சரித்தன. பொதுவாக இரண்டு மாநிலங்கள் இணையும் எல்லைகளில் கண்மண் தெரியாத வேகத்தில் பிறரை சாகடிக்கும் எண்ணத்தோடு வண்டிகள் ஓட்டுவதை பார்த்திருக்கிறேன். எடுத்துக்காட்டாக கேரளா பஸ் குமரி மாவட்டத்தில் செல்லுகின்ற தறிகெட்ட வேகத்தைக் குறிப்பிடலாம்.

 

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: