பனைமரச் சாலை (12)


மரண இருளின் பள்ளத்தாக்கு

நளதுர்க் கோட்டையும் போரி ஆறும்

நளதுர்க் கோட்டையும் போரி ஆறும்

சோலாபூர் கடந்ததும் சாலைகள் மொத்தமாகவே மாறிவிட்டன. அதற்கு காரணம் இன்னும் புதிய இருவழிச் சாலைகள் அமைத்து முடிக்கப்படாததே. இரண்டு கி மீ ஒருமுறை அல்லது மிஞ்சிப்போனால் சுமார் 5 கி மீ ஒருமுறை சாலையில் மாற்றுப்பாதையில் செல்லவும் எனும் அறிவிப்பு காணக்கிடைத்தது. பழைய சாலை குண்டும் குழியுமாக கிடந்தது. புதிய சாலையோ பழைய சலையோ கொலை வெறி வேகத்தோடு முந்திச்செல்ல விழைகின்ற வாகனங்கள் என அனைத்து காரணிகளும் சேர்ந்து எனது பயண வேகத்தை நிதானப்படுத்தின. எனக்கு என ஒரு இலக்கு இல்லையென்றாலும், சோலாபூரிலிருந்து 80 கி மீ தொலைவிலிருக்கிற ஓமர்கா எனும் ஊருக்குச் செல்லலாம் என நான் திட்டமிட்டிருந்தேன். இருட்டும் நேரம் ஏதேனும் ஒரு இடத்தில்  தங்கிக்கொள்ளலாம் என  நினைத்துக்கொண்டேன்.

எனது கவனம் முழுக்க சாலையில் குவித்தே ஓட்டினேன். ஆகவே சுற்றுமுறும் அதிகமாக நான் பார்க்கவில்லை. பாதுகாப்பு முக்கியம், சாலை விதிகளை கடைபிடிப்பது அவசியம் போன்ற சுயகட்டுப்பாடுகளை எனக்கு நானே வகுத்துக்கொண்டேன். வேகமாக வந்தால் நான் ஒதுங்கி வழிவிடுவது போன்ற அடிப்படையான காரியங்களை கூர்ந்து பார்த்து செய்துகொண்டிருந்தேன். ஒரு வகையில் இந்த பயணம் நல்லபடியாக முடியவேண்டும் என்கிற உந்துதலினால் பராக்கு பார்க்கும் எண்ணங்களை மூடிவைத்துவிட்டு கருமமே கண்ணாக வாகனத்தை ஓட்டினேன்.

இப்படி நான் சென்றுகொண்டிருக்கும்போது, எனது இடதுபுறத்தில் 200மீ தொலைவில் இருந்த  ஒரு கோட்டையின் முகப்பை நான் கண்டேன். அந்த இடத்தில் பாதை சற்று சரிவானபடியால் என்னால் வாகனத்தை உடனடியாக நிறுத்த முடியாது. ஆகையால் நான் இன்னும் சற்று தொலைவு செல்லலாம் என முடிவெடுத்து சற்று முன்னால் போக, பாதை வளைந்து ஒரு 250 அடி நீளமான சிறிய பாலம் தென்பட்டது. அங்கே இருவர் அந்த் பாலத்தின் அருகில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் நிற்கின்ற இடத்திலிருந்து  கோட்டையின் விலா பகுதியை முழுமையாக பார்க்க முடிந்ததால் அங்கே நிறுத்திவிட்டு அந்த கண்கொள்ளாக் காட்சியை இரசிக்க ஆரம்பித்தேன். எனது வாகனம் நிறுத்தப்பட்டதும், இன்னும் அனேகர் தங்கள் வாகனங்களை அங்கே நிறுத்த ஆரம்பித்தனர்.

மகாராஷ்டிரா பகுதியின் கடைசி எல்லையில் அமைந்திருக்கும் நளதுர்க் எனும் பகுதியில் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த கோட்டை  மன்னன் நாளனால் உருவாக்கப்பட்டது என நம்புகின்றனர். கோட்டையைச் சுற்றிலும் மூன்று பகுகிகளிலும் போரி எனும் ஆறு சுற்றி ஓடிக்கொண்டிருக்கிறது. மிகவும் நேர்த்தியாய் திட்டமிட்டு கட்டப்பட்ட ஒன்று எனவும், போர்களில் வெற்றி பெறும் அனைத்து சாத்தியக்கூறுகளும் கொண்ட தளம் இது. ஆகவே அந்த ஒன்றரை மைல் நீளத்திற்கு பரந்து விரிந்த அந்த கோட்டையை கண்ணிமைகாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அழகிய சிதிலம் அடையாத ஒரு கோட்டை. மத்திய காலகட்டத்து கட்டிடக்கலையை பின்பற்றியிருந்தனர். போரி ஆற்றில் தண்ணீர் இல்லை ஆகையால், அங்கே ஒரு வயதான மனிதர் தனது எருமைகளை மேய்த்துக்கொண்டிருந்தார். வேனிர்காலமானபடியால் அந்த ஆறு நீரின்றி புற்கள் செறிந்து காணப்பட்டது.

வாகனங்களை என்னருகே நிறுத்தியவர்கள் ஒருவரும் கோட்டையைப் பார்கவில்லை ஆனால் நான் நின்றுகொண்டிருந்த பாலத்தின் கீழே இருந்த நதியைப் பார்த்துக்கொண்டிருக்கிறாகள் என்பதை அப்போது தான் கவனித்தேன். நான் வண்டியை நிறுத்தியிருந்த பகுதிக்கு சற்று முன்னால் பாலத்தின் கைப்பிடிச்ச் சுவர் உடைந்திருந்தது. எப்படி இந்க்ட புதிய பாலம் உடைந்திருக்கும் என நான் என்னுகையில், சூழ்நிலை சற்று வித்தியாசமாக இருப்பதை புரிந்துகொண்டேன். ஆகவே, என்ன என பார்க்கும்படியாய் ஆற்றிற்குள் எட்டிப்பார்த்தேன். தண்ணீர் இல்லாத ஆற்றில் என்ன இருந்துவிடப்போகிறது என்ற எண்ணத்தோடு.

ஆற்றிற்குள் நான் கண்ட காட்சி என்னை நிலைகுலையச் செய்துவிட்டது. ஒரு  லாரி ஆற்றிற்குள் விழுந்து அப்பளமாகியிருந்தது. பெரும்பாலும் நான் இவ்விதமான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என்றே நினைப்பேன், ஆனால் அன்று நான் கண்ட காட்சியை வேறெப்படியும் சொல்லமுடியாது. அந்த அளவிற்கு லாரி உடைந்துபோய்க்கிடந்தது. பின்னாலுள்ள இரண்டு சக்கரங்களும் தூக்கி வீசப்பட்டு தனியாக கிடந்தன. லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்திருக்கலாம் என்பது எனது எண்ணம். அந்த பாலம் ஒரு ‘ப்’ வடிவத்தின் அடிப்பகுதிபோல இருந்தது. இருபுறத்திலும் மேட்டிலிருந்து சரிந்து வருகின்ற சாலிகள். வேகத்தை கட்டுப்படுத்தமல் வரும்போது விபத்து நிச்சயம் ஏற்பட சாத்தியமுள்ல பகுதி. அருகில் நின்றவர்களுடன், எப்போது சம்பவித்தது என கேட்டபோது “அபி” என்றார்கள். அப்படியென்றால் மிகவும் சமீபத்தில் தான் நடந்திருக்கவேண்டும்.

விபத்துக்கள் மனதில் சோர்வு ஏற்படுத்தக்கூடியவை. அந்த விபத்தை பார்த்ததிலிருந்து இன்னும் சற்று கவனமாக வண்டியை ஓட்ட ஆரம்பித்தேன். ஆனாலும் என்னால் அந்த விபத்தை என் மனதிலிருந்து அகற்ற முடியவில்லை. நான் இன்னும் 2500 கி மீ பயணம் செய்யவேண்டும். இந்த விபத்து என்னொடு வந்தால் நான் பயந்தே செத்துவிடுவேன் ஆகவே வேறு ஏதாவது வகையில் என்னை இதிலிருந்து வலுக்கட்டாய்மாக திசை திருப்பமுடியுமா என்று எண்ணியபடி வன்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாடலோடு இணைந்த டோலக் சத்தமும், சிறிய சிங்கியின் கிணுகிணுப்பும் கரகோஷமும் என மக்கள் பிரவாகத்தின் மகிழ்ச்சியின் சத்தம் கேட்டது. வண்டியை ஒதுக்கினேன்.

அது ஒரு புதிதாக கட்டப்பட்ட கோயில். தாமரையை உருவகித்து கட்டியிருக்கிறார்கள். அந்த கோயிலைச் சுற்றிலும் 5 அடி இடைவெளி விட்டு, ஒரு நீர் தங்கும் அமைப்பையும் செய்திருக்கிறார்கள். ஆலயத்தின் ஓரங்களில் மிகப்பெரிய தாமரை இதழ்களை சிமென்ட்டில் செய்திருந்தார்கள். சிறப்பு என்னவென்றல், பழைய ஆலயங்களைப்போன்றே சுற்றிலும் சுவர் எழுப்பப்படாமல் வெறும் தூண்களால் ஆனதாக இருந்தது.  இவ்வித அமைப்புகள் எனக்கு எப்போதுமே உவப்பானது. கிறிஸ்தவ ஆலயங்கள் அனைத்துமே சுவர்கள் கட்டப்பட்டு காற்றையும் வெளிச்சத்தையும் கட்டுப்படுத்துகின்றது எனும் வருத்தம் எப்போதும் எனக்கு உண்டு. இவ்விதம் காற்றையும் வெளிச்சத்தையும் கட்டுப்படுத்திய பின்னர், ஃபேன் வாங்கிப் போடுவது, ஏ.சி மாட்டுவது, லைட் போடுவது என அதற்கு தனித்த செலவுகள் வேறு. எல்லாவற்றிற்கும் மேல் இவைகளுக்கான கரண்ட் பில் கட்டும்போது ஏற்படக்கூடிய மனச் சோர்வுகளை சொல்லி மாளாது. கிறிஸ்தவ ஆலயங்கெளுக்கென இந்திய முறையில் வடிவமைப்புகள் செய்யும் பொறியியலாளர்கள் இன்றைய தேவையாக இருக்கிறது.

அந்த ஆலயத்தில் கிராமத்தினர் சுமார் 100பேர் கூடியிருந்தனர். நீள் வட்டமாக சிலர் அமர்ந்திருக்க சிலர் நின்றுகொண்டும் இசைக் கருவிகளை மீட்டிகொண்டும் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். குறிப்பகா அந்த கூட்டு வழிபாட்டின் அங்கமாக அவர்களில் இருவர் தங்கள் கரங்களை பற்றிக்கொண்டு அதனை மைய விசையாக கொண்டு சுற்ற ஆரம்பித்தனர். அவர்களின் வேகம் இசைக்குள்ளும் புகுந்து வெளிப்பட்டது. ஒரு பரவச தருணத்திற்குள் அனைவரும் வந்திருந்தனர். அதன் பின்பே அவர்கள் ஒரு எளிய பூஜை செய்யும்படியாக ஒன்றாக எழுந்து நின்றார்கள். அவர்களின் அந்த வழிபாட்டு முறைமை நன்றாகவே இருந்தது. வெளிச்சம் மங்கிக்கொண்டு வருவதால் நான் அந்த இடத்தைவிட்டு துரிதமாக புறப்பட்டேன். நான் ஒமர்கா என்னும் இடத்தைச் சேர இன்னும் கண்டிப்பாக 50 கிமீ தொலைவு இருக்கும்.

சாலைகளில் எந்த மாற்றமும் இல்லை, எனக்கு தங்குமிடங்களும் ஒன்றும் சரிவர அமையவில்லை. வாகனங்கள் ஒளியை பீச்சத் துவங்கின. ஓமர்கா பகுதியில் ஏதேனு தேவலயங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில் பயணித்துக்கொண்டிருந்தேன். வாகனமும் நானும் ஒன்றாய் மாறிவிட்டோம் செல்லும் சாலையும் மட்டுமே கவனம். வலிகளை மறந்து கவனம் குவித்து ஓட்டினேன். வழியில் ஒருசில இடங்களில் நின்று ஓமர்கா செல்லும் வழியை சரிபார்த்துக்கொண்டேன். ஓமர்கா மகாராஷ்டிராவிலிருந்து  கர்னாடகா செல்லும் வழியின் கடைசி எல்லை. அந்த இடம் சற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்பட்டது.

ஓமர்காவிலே திருச்சபைகளோ ஆலயங்கலோ இல்லை என்பதை ஆட்டோ ஓட்டுனர்களிடம் கேட்டு அறிந்துகொண்டேன்.. தங்குவதற்கு எதேனும் இடம் உண்டா என கேட்டபோது ஒரு கட்டிடத்தைக் காட்டினார்கள். உள்ளே சென்றபொதே இங்கே தங்கமுடியாது என புரிந்துகொண்டேன். நாற்பது வருடத்திற்கு முன்பதாக உள்ள கட்டிடம். ஆறுக்கு எட்டு எனும் அளவிலே அறை. பெருக்கப்படாமலும் சுவர்களோ மூட்டைப் பூச்சியின் கொலைகளமுமாக காணப்பட்டது. பாய்ந்து வெளியெறினேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: