பனைமரச் சாலை (13)


ஓமர்கா

ஓமர்கா இருசக்கர வாகன பழுதுபார்க்கும் இடம்

ஆபத்தில் அரணானவர்

 

அந்த தங்கும் விடுதியை விட்டு வெளியே வந்த நான், அங்கிருந்த ஒரு கடையில் தண்ணீர் வாங்கிக் குடித்து என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். தண்ணிர் கொடுத்தவரிடம்  தேவாலயங்கள் அருகில் உள்ளனவா என கேட்டேன், அதற்கு அவர் இல்லை, நீங்கள் ஹும்னாபாத் செல்லவேண்டும் என்றார்கள். எனது பயணம் இவ்விதம் நீழும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. எத்தனை கி. மீ தூரம் எனக் கேட்டேன், 70 என்றார். எனக்கு தூக்கிவாரிப்போட்டது. ஏற்கெனவே 350கி மீ க்கும் மேலாக பயணித்திருக்கிறேன், இனிமேலுமா? என்ற கேள்வியோடு வண்டியை திருப்பினேன்.

ஓமர்கா பகுதி முடிவடையும் தருணத்தில் இருசக்கர வாகனம் சரி செய்யும் ஒரு இடத்தை பார்த்தேன். அங்கே ஒரு புல்லட் நின்றது.  அனேகர் என்னிடம் எனது வாகனம் நம்பிக்கைகுறியது அல்ல என சொல்லியிருந்தார்கள். அகமதாபாத்திலிருந்து திருச்சபி அங்கத்க்டினரும் எனது நண்பருமான, “நீங்கள் செல்லும் பயணம் குறித்து எனக்கு எந்த தடையும் இல்லை பாஸ்டர்,  ஆனால் வேறு வாகனத்தை எடுத்துச் செல்லுங்கள், அதுவே உங்களுக்கு பாதுகாப்பானது” என்றிருந்தார்கள்.

அவர் சொல்லுவதற்கும் ஒரு காரணம் உண்டு. அகமதபாத் பகுதியில் எனது வாகனம் அனேக வேளைகளில் பழுதுபட்டதை அவர் அறிவார். அது போலவே மீராரோடு திருச்சபையின் அங்கத்தினரும் எனது நண்பருமான பாண்டியன் இந்த வண்டியில் மட்டும் செல்லாதீர்கள் என என்னை உருட்டியும் மிரட்டியும் கெஞ்சியும், நயமாக சொல்லியும் பார்த்தார். திருவள்ளுவர் எழுத மறந்த சொல்பேச்சுக் கேளாமை எனும் அதிகாரத்தை வாழ்வில் கடைபிடித்து வரும் நான் இவைகள் எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் கிளம்பிவிட்டேன். அதற்கு ஒரு வலுவான காரணம் உண்டு.

எனது வாகனம் என்னோடு இருப்பதுவே சிறந்தது என கருதினேன். ஆகவே தான் எனது மெக்கானிக் அஜித் பாயிடம் மீண்டும் மீண்டும் கேட்டேன் வண்டியை நம்பி நான் எடுத்துச்செல்லலாமா?. அவர் ஒரு சில பொருட்களை வாங்கிக்கொள்ள சொல்லியிருந்தார். கிளட்ச் வயரும், பிரேக் வயரும் ஸ்பேர் வாங்கிக்கொண்டேன்.  இறுதியாக ஒரு நண்பர் கூறியதால் இன்னும் இரண்டு டியூப் வாங்கிக்கொள்ளலாமா?  என கேட்டேன்..அதற்கு அவர், அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை, 60கிமீ வேகத்துக்கு மேல் செல்லாதீர்கள். ஆயில் போதுமான அளவு இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள் எனக் கூறியிருந்தார். நீங்கள் சொந்த ஊர் செல்வது வரை எதுவும் தவாறகிவிடாது என்றவர், 3000 கிமீ தூரத்து  ஏன் இவ்வளவு அலட்டிக்கொள்ளக்கொள்ளுகிறீர்கள் என்பதுபோல் பார்த்தார்.

என்ன இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம். செல்லும் வழியில் ஏதேனும் ஆகிவிட்டால்? அப்படி ஏதேனும் ஆகிவிட்டால் எனது வாகனத்தை சரி பார்க்க ஒரு முழு நாளை நான் அதிகப்படியாக வைத்திருந்தேன். ஹைதராபாத் வரை சென்றுவிட்டால் கண்டிப்பாக நல்ல மெக்கானிக் கிடைப்பார்கள் என்பது என் நம்பிக்கை. ஆகவே அந்த இரு சக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் இடத்தின் அருகில் வந்தபோது, நிறுத்தி அங்கிருந்த மெக்கானிக்கிடம் காட்டினேன். ஆயில் சரியாக இருக்கிறது என்றார்.

இதற்குள் என்னை சுற்றிலும் ஒரு வாலிபர் குழாம் சூழ்ந்துகொண்டது. எனது பயணம் பற்றி விசாரித்தார்கள். அவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்பதை அறிந்துகொண்டேன். அவர்களிடம் எனது பயணத்தைக்குறித்து மிக சொற்பமாய் விளக்கிவிட்டு அனைவரது கரத்திலும் ஆளுக்கொரு கை பட்டைகளை அணிவித்தேன். ஹோசன்னா என்று, பாம் சண்டே என்றும் எழுதப்பட்டவைகள் அவர்களை உறுத்தவில்லை. மிக மகிழ்ச்சியாக என்னோடு இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள்.

அப்போது தான் எனது சந்தேகத்தை அந்த மெக்கானிக்கிடம் கூறினேன். அவர் எனது வாகனத்தை சற்றுநேரம் ஓடவிட்டுவிட்டு இவ்விதமாக சொன்னார். “நீங்கள் கன்னியகுமரி சென்று மீண்டும் மும்பை வரலாம்” வண்டிக்கு பிரச்சனை ஒன்றும் இல்லை. இந்த வார்த்தைகள் எனது காதில் பதனீர் போல இனித்தன, கருப்பட்டி போல் இனிக்க இனிக்க கரைந்தது, பனம்பழம் போல் சாறாய் வடிந்தது.  வேதனை வலிகள் தூரம் யாவும் மறந்து மீண்டும் வாகனத்தை எடுத்தேன். உற்சாகமாய் சென்று சேரவேண்டிய இடம் ஹும்னாபாத் என சொல்லிக்கொண்டேன்.

பயணங்கள் நமக்குத்தரும் நட்புகள் நமக்கு பெரிய திறப்பை அளிக்கிறார்கள். பயணிக்கிறவர்களை நமது தேசம் மிகவும் அன்பாக ஏற்றுக்கொள்ளுகிறது. அவர்களை அன்போடு ஆசீர்வதிக்கிறார்கள் என்பதை நான் ஒவ்வொரு மனிதரைக் கண்டபோதும் உணர்ந்துகொண்டேன். அனைவருக்குள்ளும் பயணம் விரும்பும் ஒரு பயணி உறைந்திருக்கிறான். பயணம் சென்றவன் அவைகள் தனது வாழ்வின் மிகச்சிறந்த தருணமாக அவைகளையே கருதுவான். பயணங்கள் பல்வேறுவிதமான மனிதர்களை நிலப்பரப்பை வாழ்கைமுறையை அறிமுகம் செய்கிறது. அவைகளை ஒருபோதும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

சாலைகள் மிகவும் மோசமாகவே இருந்தது ஆனால் நான் செல்ல வேண்டிய இடம் வரும் மட்டும் நான் ஓய்வெடுக்க முடியாதாகையால் நான் வலிகளை பொருட்படுத்தாது ஓட்டிக்கொண்டு சென்றேன். சுமார் 40கிமீ தொலைவு சென்றபோது ஒரு ஆர் டி ஓ செக்போஸ்ட் கண்ணில் பட்டது. மிகவும் நேர்த்தியாகவும் பிரம்மாண்டமகவும் கட்டப்பட்ட ஒரு செக்பொஸ்ட். அங்கே தங்கிவிடமுடியுமா என பார்த்தால் அங்கும் தங்க இடமில்லை. மிகவும் சோர்பாக இருந்தது. தண்ணீர் வாங்கி குடித்துக்கொண்டு சற்று நேரம் அமர்ந்திருந்தேன்.

அப்போது அங்கிருந்த ஒரு லாரி ஓட்டுனர் என்னிடம் பேச்சுக்கொடுத்தார். அவர் சென்னை செல்வதாகவும், வேண்டுமானால் எனது வாகனத்தை அவரது வாகனத்தில் ஏற்றிக்கொள்ளலாமென்றும் கூறினார். இத்தனை தூரம் நீங்கள் தனியாக செல்வது ஆபத்து என கடிந்து கொண்டார். அவரது அன்பு புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் நான் அவருக்கு எனது பயனத்க்டின் நோக்கத்தை சொன்னபோது புரிந்துகொண்டார். சாலைகளைக் குறித்து நான் அலுத்துக்கொண்டபோது, கவலைப்படாதீர்கள் இனிமேல் நீங்கள் செல்லும் பாதை மிக நேர்த்தியாக இருக்கும் என்றார். ஆம் அவ்விதமாகவே அமைந்தது எனது நல்லூழ்.

வலி, களைப்பு, பசி இவற்றோடு தூக்கமும் என்னை தழுவ துடித்துக்கொண்டிருந்த நேரம், மீண்டும் 30 கி மீ தானே என எனக்கு நானே சமாதானம் கூறி அடுத்த பயணத்தை துவக்கினேன். சாலை புதிதாகவும் நேர்த்தியாகவும் இருந்தது. சாலையில் அதிக வாகன நெரிசலும் இருக்கவில்லை. ஆனால் எனது வாழ்வின் மிகவும் படபடப்பான ஒரு மரண தருவாயிலிருந்து அன்று நான் தப்பினேன்.

 

சாலை நேர்த்தியாக இருந்ததாலும், இருவழி சாலை ஆனபடியாலும், சீக்கிரமாக ஏதேனும் ஒரு இடத்தைக் கண்டடைந்து அன்று தங்கவேண்டும் என நான் நினைத்ததாலும்,  வேகமாக எனது வண்டியை ஓட்டினேன். திடீரென எனக்கு முன்பதாக வேறொரு வாகனம் வேகமாக வருவதைக் கண்டேன். நான் செல்லும் பாதை ஒருவழிப்பாதை. வேறு வாகனங்கள் வரக்கூடாது, வருவதற்கும் வாய்ப்புகள் குறைவு. ஆகவே சற்று அசிரத்தையாகவே ஓட்டினேன். எனக்கு முன்னால் வரும் வாகனம் மாற்று தடத்தில் செல்லுகிறது என்றே முதலில் எண்ணினேன். இரண்டு வாகனங்களும் வேகமாக பயணித்ததால் ஒரு சில வினாடிகளிலேயே  அந்த வாகனம் என்னை நோக்கி வருவதை நெஞ்சம் அதிர உணர்ந்து கொண்டேன். சரி, மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டிருப்பர்களோ என எண்ணியபடி இடதுபுறமாக வண்டியை திருப்பினேன். என்னைப்போல அவரும் நினைத்திருப்பாரா என்ன என தெரியவில்லை அவரும் வண்டியைத் திருப்பினார்.

இப்போது எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இருவரும் அவரவர் கட்டுபாடுகளை இழக்கும் தருணம் என்பது நன்றாக தெரிந்தது. பனைமர வேட்கைப் பயணத்திற்கு மாநிலம் கடந்த ஒரு எதிர்ப்பு இருக்குமோ என்றுகூட சந்தேகப்பட்டேன்.

ஆனால் புரிந்துவிட்டது, அவர் தவறான பாதையில் தான் வருகிறார், வேறு வாகனங்கள் வராததால்  வேகமாக வந்திருக்கிறார். நான் இடப்பக்கமாக திரும்பிச்செல்லுவேன் என எதிர்பார்த்திருக்கிறார். அவ்விதம்  நான் இடப்பக்கம் செல்லாததால் அவர் தனது வண்டியை இடப்பக்கமாக திருப்பியிருக்கிறார். இவைகளை நான் புரிந்து எனது வண்டியை திருப்பவும் அவர் திருப்பவும் ஒன்றுபோல் இருந்திருக்கிறது. இனிமேல் இடிக்காமல் இருக்கவேண்டுமென்றால் நான் மீண்டும் வலப்புறம் வண்டியை திருப்பவேண்டும். மிகவும் பிரயத்தனப்பட்டு நான் வண்டியைத் திருப்பினாலும் மோதுவதை தவிற வேறு வழியில்லை. வண்டியில் லாறி மோதி நான் தூக்கியேறியப்படும் காட்சி என் கண்களுக்கு முன்னால் வந்து மறைந்தது.

ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார் (திருப்பாடல்கள் 121 : 7) என்பனவற்றில் ஒரு வார்த்தையைக் கூடச் சொல்லி மன்றாட நேரம் இல்லை. ஆனால் அந்த எண்ணங்கள் கடவுளின் காதுகளை எட்டியிருந்தது, அவர் தமது தூதர்களுக்கு என்னை காக்கும்படி கட்டளை இட்டிருந்தார். லாரி இன்னும் அபாயகரமாக இடப்பக்கத்தில் சாலையைத்தாண்டி செல்வதுபோல் என்னை விட்டு விலகி சென்றது, ஆகவே எனக்கு அந்த இரவில் மயிரிழையில் தப்பிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சேதம் ஏதும் இன்றி கடவுள் என்னை காப்பாற்றினார்.

 

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: