பனைமரச் சாலை (14)


Sparshaசிறுவர்கள் என்னிடம் வர தடை செய்யாதிருங்கள்

வாழ்வின் மிக அபாயகரமான தருணத்தைக் கடந்தால் ஒரு குதூகலம் வருமே அப்படி ஒரு மகிழ்ச்சி என்னுள் கடந்து சென்றது. செத்து பிழைத்திருக்கிறேன் என்றால் எனிமேல் தான் செய்ய வேண்டியவைகள் அனேகம் இருக்கின்றன என அர்த்தம். ஆகவே முன் வைத்த காலை அப்படியே வைத்துவிட்டு ஆக்சிலேட்டரை அழுத்தி தொடர்ந்து வேகமாகவே சென்றேன்.

செல்லும் வழியில் ஒரு பெரிய அலங்கார வளைவு தென்பட்டது. அதிலே கர்னாடகா உங்களை வரவேற்கிறது என எழுதப்பட்டிருந்தது. கர்நாடகா என்பது நான் கடந்து செல்லும் பாதை மட்டுமே. சுமார் 100கி மீ க்குள் அந்த இணைப்பு பாதை இருக்கலாம். ஆனாலும் மகாராஷ்டிரா, கர்னாடகா, தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என 5 மாநிலங்களையும் ஒரு யூனியன் பிரதேசத்தையும் ஒருசேரக் கடக்கிறேன் என்பதே ஊக்கமூட்டும் ஒன்றாக அமைந்தது.

ஒருவழியாக ஹும்னாபாத் வந்தடைந்தேன். கிட்டத்தட்ட மணி ஒன்பதரை ஆகியிருந்தது. ஆட்டோ ஓட்டுனர்களிடம் கேட்டபோது அவர்கள் ஆலயம் இருக்கும் இடத்திற்கு போக வழி காட்டினார்கள். நான் சென்று சேர்ந்த இடம் ஒரு மெதடிஸ்ட் ஆலயம். ஆனால் அந்த ஆலயம் பூட்டியிருந்தது. அருகிலே ஒருவரையும் கேட்க வழியில்லை.

அப்போது இரண்டு குடிமகன்கள் தள்ளாடியபடி  மிக தீவிரமாக பேசிக்கொண்டிருந்ததைக் கண்டேன். குடிகாரர்கள் எதையும் “தெளிவாக” செய்பவர்கள் என தெரியுமாதலால் அவர்களிடம், ஃபாதர் எங்கே இருக்கிறார் என தெரியுமா என்று கேட்டேன். அவர்கள் ஒருவருக்கொருவர் பேசி முடித்துவிட்டு, ஒருவர் எனக்கு வழி காட்டுவதாக கூறினார்.

அவரை எனது வண்டியில் ஏற்றிக்கொண்டு அவர் காட்டிய இடத்தை நோக்கிச் சென்றேன். என்னை ஒரு வாளாகத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த இடத்தின் அமைப்பு ஒரு கத்தோலிக்க திருச்சபையின் இடமாக இருக்கும் என நான் ஊகித்தேன். உடனே, கடவுளே இது கன்னியாஸ்திரீகள் தங்கும் மடமாக மட்டும் இருந்துவிடக்கூடாது என மன்றாடினேன்.

அப்படி இருந்துவிட்டால், அப்புறம் அங்கே தங்க இடம் கிடைக்காதே. மேலும்கூட வந்த நண்பரை உடனடியாக அனுப்பவேண்டும் ஆகையால், வேகமாக உள்ளே சென்றேன். இரண்டு வாலிபர்கள் அங்கே இருந்தார்கள். அவர்களிடம் ஃபாதர் எங்கே என நான் கேட்கவும், ஒரு இளம் ஃபாதர் உள்ளாலிருந்து வரவும் சரியாக இருந்தது.

நான் என்னைப்பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்துவிட்டு, இங்கே தங்குவதற்கு வாய்ப்பு உள்ளதா எனக் கேட்டேன்.  ஆம் ஒழுங்கு செய்கிறேன் என்றபடி ஃபாதர் என்னையும் அவரையும் மாறி மாறி பார்த்தார். கூட வந்திருக்கும் நபர் யார் என மூக்கைச் சுளித்தபடி கேட்டார். நான், இதோ அவரை விட்டுவிட்டு வருகிறேன் என்றேன்.

ஃபாதர் என்னிடம், ஒரு மரணம் நிகழ்ந்துவிட்டது, பேராயரும் அடக்க ஆராதனைக்கு வருகிறார், ஆகவே நான் வெளியே போய்விட்டாலும் உங்களுக்கான ஒழுங்குகள் இங்கு செய்யப்பட்டிருக்கும் என்றார். எனது பைகளை வைத்துவிட்டு என்னை அழைத்துக்கொண்டு வந்தவரை, மறுபடியும் விடுவதற்காக கிளம்பினேன். வாகனத்தை விட்டு இறங்கியவர் ஒரு குவாட்டருக்கு காசு தாங்க என்றார். எனக்கு அதைக்கேட்டவுடன் சுர்ரென்று கோபம் வந்தது. நீங்கள் அதிகமாக குடித்திருக்கிறீர்கள் ஆகவே வீட்டிற்குச் செல்லுங்கள் என்றேன். வீடு எங்கே இருக்கிறது என சொன்னால் நானே கொண்டு விடுகிறேன் என்றும் கூறினேன். அவர் அதற்கு மசிவதாக இல்லை. எனக்கு குடிகாரர்களை நன்கு தெரியும். குடி அடிமைகளான அனேகரை நான் சிறு வயதிலிருந்து அறிவேன். ஏதேனும் சொல்லி மேலும் மேலும் குடிப்பதற்கு பணம் பறிப்பதை குறியாக கொண்டிருப்பவர்கள்.

அவர் என்னை போகவிடாமல் வழி மறித்து பிரச்சனை செய்ய ஆரம்பித்தார். ஒரு வேளை அவர் காட்டித்தந்த அந்த இடத்திற்கு போகவேண்டும் என்று சொன்னால் ஆட்டோவிற்கு கூட 30 ரூபாய்க்கு அதிகமாக வாங்க மாட்டான். இவரோ ஒரேயடியாக நுறு ரூபாய்க்கு அடிபோடுவதை என்னால் எற்க முடியவில்லை. சரி என்னோடு சாப்பிட வாருங்கள் என்றேன். அவருடைய ஒரே குறிகோள் பணமாக இருந்தது.

அப்போது நான் சொன்னேன், அருகிலே எங்கே போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது என எனக்குத் தெரியும், வருகிற வழியில் பார்த்தேன். வண்டியில் ஏறுங்கள் உங்களை அங்கேயே விடுகிறேன், நீங்கள் பொது இடத்தில் பிரச்சனை செய்கிறீர்கள் என்றால் அவர்கள் உங்களை கவனித்துக்கொள்வார்கள், எறுங்கள் என்றேன். அவர் சற்று பம்மிவிட்டு, என்னை வசை பாட ஆரம்பித்தார். நமுட்டு சிரிப்புடன் கிளம்பினேன்.

அன்று இரவு நான் சாப்பிட்ட பிரியாணி 1/2 பிளேட் 40 ருபாய். மிகவும் சுவையான ஒரு உணவு அது.  அங்கிருந்து மீண்டும் தங்குமிடத்திற்குச் சென்றேன், அங்கே அந்த வாலிபர்கள் எனக்காக காத்திருந்தனர்.  அவர்கள் எனக்காக ஆயத்தம் செய்திருந்த அந்த அறை மிகவும் அழகானது. எனக்கான டவல் முதற்கொண்டு அனைத்தும் அங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எளிமையான இருவர் தங்கும் அறை. குளித்துவிட்டு நன்றாக தூங்கினேன்.

காலையில் 6.30க்கு எழும்பினேன். கடவுள் எனக்கு செய்த அனைத்து உதவிகளையும் எண்ணி அவருக்கு நன்றி கூறினேன். எவ்வளவு ஆபத்து எவ்வளவு இக்கட்டுகள் இடர்கள் நான் இந்த காலையை பார்ப்பதே ஒரு அதிசயம் என்பதாக எண்ணினேன். இதற்குள் ஒரு வாலிபன் வந்து ஃபாதர் உணவிற்கு 7.30க்கு வரும்படி கூப்பிட்டார் என்றான். அனைத்து பொருட்களும் இறைந்து கிடந்ததல், அவற்றை ஒழுங்கு படுத்தி காலைக் கடன்களை முடித்துவிட்டு செல்ல மிகச்சரியாக இருந்தது. மிகவும் அமைதியாக அந்த காலை உணவை ஆசீர்வதித்து உண்டோம். உணவிற்கு நடுவில் பேசவில்லை.

உணவிற்குப் பின் ஃபாதருடைய அறைக்குப் போனோம். என்னுடைய பயணத்தைக் குறித்து விரிவாக கூறினேன். மேலும் ஓலையில் செய்யப்பட்ட போப் ஃபிரன்சிஸ் அவர்களின் படத்தையும், ஒரு சில புக் மார்க்குகளையும் ஒரு ரிஸ்ட் பாண்டையும் அவர்களுக்கு பரிசாக அளித்தேன்.  மகிழ்ச்சியுடன் பெற்றுகொண்டார்கள். பிற்பாடு அவர்களது பணியைக்குறித்து விசாரித்தேன். அப்போது அவர்கள் என்னிடம் ஸ்பரிசியா  எனும் நிறுவனம் குறித்தும், கத்தோலிக்க திருச்சபை குறித்தும்  பின்வருமாறு கூறினார்கள்.

 

குல்பெர்கா கத்தோலிக்க  பேராயம் 2005ல் ஆரம்பிக்கப்பட்டது. வட கர்னாடகாவின் மாவட்டங்களான  குல்பெர்கா, பிஜாப்பூர் மற்றும் பீதர் ஆகிய பகுதியை உள்ளடக்கிய ஒரு திருச்சபை. புதிதாக ஆரம்பிக்கப்பட்டதால் எழும் பல்வேறு சிக்கல்களை பேராயர் ராபர்ட் மிராண்டா திறமையாக கையாள்கிறார். குறிப்பாக வெறும் 7000 அங்கத்தினர்கள் மட்டுமே கொண்ட இந்த திருச்சபை சந்திக்கும் பொருளாதார சிக்கல்கள் அனேகம், அவைகளின் மத்தியிலும் எப்பாடுபட்டாவது நலதிட்ட பணிகள் மேற்கொள்ளுவதில் உறுதியாக இருக்கிறார்.

 

இப்பகுதியில் எச் ஐ வி பாதிக்கப்பட்ட அனேகம் குழந்தைகள் இருக்கிறார்கள், அவர்களைப் பேனும் ஒரு அமைப்பை துவங்கியிருக்கிறோம். சமீபத்தில் நாங்கள் எடுத்த கணக்கெடுப்பின்படி  1500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை எப்படி பராமரிப்பது என்பதற்கான திட்ட வரைவு செய்துகொண்டிருக்கிறோம் என்றார். ஆச்சரியமாக இருந்தது. இந்திய கத்தோலிக்க திருச்சபை எப்போதுமே என்னை வியப்பில் ஆழ்த்துபவை. இன்றய நவீன குஷ்டரோகிகள் எச் ஐ வி யால் பாதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு சீர்திருத்த திருச்சபை இன்னும் எதையும் பொருட்படுத்தும்படி செய்ய் ஆரம்பிக்கவில்லை. எட்டி நின்றே பனியாற்றுகிறார்கள். இந்த அன்பின் தொடுகை உண்மையிலேயே என்னை அசைத்தது.

சரி எப்படி இவ்வளவு சிறுவர்கள் இப்பகுதியிலே இருக்கிறார்கள் என்று கேட்டேன்.

இந்தப் பகுதியில் நீங்கள் கடந்து வந்த பகுதிகளில் அனேக லாரிகளாக உங்களைக் கடந்து சென்றிருக்கும். லாரிகள் ஓட்டி வருபவர்கள் தங்குவதற்கு தாபா எனும் அமைப்பு உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த இடங்களில் உணவோடு பெண்களையும் சப்ளை செய்யும் வசதி இங்கு உண்டு. பெரும்பாலும் சுற்றுப்புறத்தில் வாழும் ஏழை  பெண்கள் இதில் ஈடுபடுகிறார்கள் என்றார்.

மேலும் அவர், இவர்களுக்கான மருந்து மாத்திரைகள் கொடுத்து இவர்களை தேற்றி விடலாம். ஆனால் சமூகம் இவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்பதுவே பெரும் கொடுமை. ஒரு சில இடங்களில், பெற்ற தாயும் தந்தையுமே இவர்களை மனவேதனைக்குள்ளாக்கும்  நிகழ்ச்சிகள் மனதை பதற வைக்கின்றன என்றார். இத்தனைக்கும் இக்குழந்தைகளுக்கு இன்நோயை கொடுத்ததே பெற்றொர் தான்.

கண்டிப்பாக இங்கு நான் மீண்டும் வருவேன், உங்களுக்காக நான் எப்படியும் எனது தாலந்துகளை செலவிடுவேன் என வாக்கு கூறி கனத்த மனதுடன் விடை பெற்றேன்.

அருட்பணி காட்சன் சாமுவேல்

ரசாயனி, மும்பை

8888032486

malargodson@gmail.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: